Hey, i’m a flirt இதை நான் சொன்னபோது,

துளிகூட  நம்பாமல்  அதனால் என்ன? ‘இருந்து கொள்’ என இவ்வளவு தூரம் அவள் திடமாகக் கூறியது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. மேலும் அவளே ‘என்னிடம் உன்னால் ஃப்லர்ட் செய்ய முடியாது’ என்றாள்.

முதன் முதலில் வந்து அனாமிகா என்னிடம் அந்த கேள்வியைக் கேட்டபோது நான் இப்படி வந்து என்னைப்பற்றி சொல்ல வேண்டிய சூழல் வருமென்று யோசிக்கக்கூட இல்லை.

வைஷாலியுடனான காதல் தோல்விக்குப் பிறகு இனி எந்தப் பெண்ணிடமும் Mental bond ஐ உருவாக்கிக் கொள்ளக்கூடாதென என் மனதுக்கு திட்டவட்டமாக ஆணையிட்டிருந்தேன். வைஷாலிக்குப்பிறகும் நான்கைந்து பெண்கள் என் வாழ்வில் வந்தார்கள். ஆனால் யாரும் சொல்லும்படியாக நிலைக்கவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய பழைய சம்பவங்களால் பெரிதாக ஒட்டாத விலகிய தன்மையா இல்லை என்னிடம் அவர்களுக்கான சிறு சிறு உதவி, தேவை முடிந்தவுடன் கிளம்பினார்களா என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்ததில்லை. சில முத்தங்கள், சில அணைப்புகளென அவையாவும் அந்தந்தக் கணங்களோடு துண்டித்துப்போனது. நான் முடிவு செய்து வைத்திருந்ததும் அப்படித்தானே.

எல்லோரையும் போல இவளும் என்னிடம் ஏதோ ஒன்றிற்காகத்தான் பழகுகிறாள் என்று நிச்சயமாக நம்பினேன். சொல்லப்போனால் தான் விரும்பும் ஓர் ஆணிடம் ஒரு பெண்ணுக்கு உச்சபட்சமாக என்ன தேவையோ அது மட்டுமாகக்கூட இருக்கலாமென நினைத்திருந்தேன். நாட்கள் செல்லச்செல்ல இவள் வேறு மாதிரியானவள் என்று புரியத் தொடங்கியிருந்தது. அவளின் விசித்திர குணாதிசியமே அப்படி யோசிக்க விட்டிருந்தது. விரைவில் என் எல்லா துக்கங்களையும், மகிழ்ச்சிகளையும் அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆளாக்கப்பட்டேன். அவளுக்குள் நான் வெகு ஆழமாக பயணிக்கத் தொடங்கி இருந்தது விரைவில் புரிய ஆரம்பித்தது. அது ஒரு மலைக் குகையின் முழு இருளில் ஏதோ ஒரு சந்தில் இருந்து வரும் சன்னமான ஒளிக்கீற்றுப்போல எங்கிருந்து வருகிறதென எனக்குப் புரிந்தபடியே நிகழ்ந்துகொண்டிருந்தது. அவளிடம் இருந்த அந்த மர்மவசீகரமே அதிவேகமாக அவளை நெருங்கவும், நெருங்கவிடாமலும் செய்தது.

இன்று பகலிலேயே அளவுக்கு அதிகமாக குடித்துக்குடித்து கண்கள் சிவந்து போயிருந்தன எனக்கு. அதன் தாக்கம் ஏற ஏற அவள் மீது தாங்க முடியாத அளவுக்கு கோபம் கோபமாக வந்தது. என்னதான் வேண்டும் இவளுக்கு. என்னை என்னதான் செய்வாள் தனியே வைத்துக் கொண்டு. தானாக நகர்ந்தபாடுமில்லாமல், என்னை விட்டபாடுமில்லாமல் இதென்ன சூதாட்ட விளையாட்டு. என்னை எடுத்துக் கொண்டிருந்தால் கூட தந்துவிட்டு கிளம்பி இருக்கலாம். நேரடியாக அப்படியான ஆசையும் எதுவும் இல்லாததுபோல் ஏன் கழுத்தறுத்துக் கொண்டு இருக்கிறாள் என்று ஆத்திரம் தலைக்கேற இன்னொரு பாட்டிலையும் கவிழ்க்கத் தொடங்கியிருந்தேன். என்னையறியாது அசதியில் கண்களை மூடிக் கொண்டேன்.

‘அனாமி’ மீண்டும் மூளையின் நரம்புகளுக்குள் ஊடுருவத் தொடங்கியிருந்தாள். அவள் ஊரின் கிராமத்தன்மைக்குச் சற்றும் பொருந்தாத மாடர்னான தோற்றத்தோடு பாய் பாப் கட்டும், ஜீன்ஸூம், விலையுயர்ந்த ஷூக்களையும் ஷோல்டர் பேக்கையும் மாட்டியபடி ‘ஹாய் ஐ யம் அனாமிகா’ சந்தித்தவுடன் கைக்குலுக்கினாள். ஓர் ஆணிடம் முதிர்வான தன்மையோடு நடந்துகொண்ட விகல்பமற்ற வெகுளியான அந்தத் தொடுதல் அவளை முதலில் சந்திக்கும் போதே பிடிப்பதற்கு காரணமாக இருந்தது. மற்றபடி நான் முதல் பார்வையிலேயே காதலித்தது போன்ற நினைவில்லை. ஆனால் அவளை மிகவும் பிடித்திருந்தது.

எங்களுக்குள் நடந்த ஊசலாட்டங்கள் முடிந்த ஒரு நாளில் அவளேதான் என்னை விரும்புவதாக முதலில் தெரிவித்தாள். அப்படிச் சொல்வதை விட எனக்கு அவளைப் பிடித்திருக்கிறதா என்பதை ஒரு நாசூக்கான கேள்வி வழியே அறிந்து கொண்டாள்.

அதன்பின் அவள் சொன்ன விஷயங்கள் தான் எனக்கு அவள் சாதாரணமானவள் அல்ல என்றும் அதே நேரம் எனக்கு அவள் மீது அதிக போதையும் ஏற்படுத்த தொடங்கி இருந்தன. பேச ஆரம்பித்த இரண்டாம் நாளிலேயே ‘உனக்குத் தெரியாமல் உன்னை எடுத்துக் கொண்டேன் தெரியுமா?’ என்றாள்.

‘அடிப்பாவி, உனக்கு இவ்வளவு அவசரமா?’ என்றேன். புதிர் போடுவது போல எந்த அவசரமும் இல்லையே என்றாள். இப்போது சொன்னாயே எடுத்துக் கொண்டதாக, அதெப்படி எடுத்துக் கொள்ள முடியும்? என நான் கேட்டபோது ‘அதுவா’ என்றபடியே நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.

ஒரு பெண் தன் விருப்பத்தை தெரிவிக்க லவ் யூ எனச்சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன என்னை எடுத்துக் கொள்வது எனும் காதலின் கடைசிக் கட்டத்தில் நின்றபடி தனது காதலை வந்து உறுதி செய்கிறாள். எனக்குள் ஒரு குறுகுறுப்பு கிளம்பி விட்டிருந்தது. நிறைய பெண்களோடு பழகியிருக்கிறேன்தான். ஆனால் இவள் என்னவோ இப்படிச் சொல்கிறாளே என்கிற ஆர்வம் என்னை அவசரமாயெனக் கேட்கத் தூண்டியிருந்தது. கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டுமா என அவள் கேட்ட தொனி என்னிடம் அதைச் சொல்லவேண்டும் எனக் காத்திருந்தது போல்தானிருந்தது.

உன் விருப்பம் என நான் சொன்னவுடன் அதைநான் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றபடியே ஒரு தேர்ந்த கதாசிரியரின் பாணியில் என்னிடம் சொல்லத் தொடங்கினாள்.

நீயும் நானும் ஓர் அடர்ந்த வனத்துக்குள் கைகளைக் கோர்த்தபடி நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அதன் முடிவில் ஒரு பெரிய நீரோடை வழிந்தோடியபடி இருக்கிறது. அவள் இப்படிச் சொல்லும்போதே நான் கபகபவென்று சிரித்தேன். ஏய், இதென்ன சினிமாக்களில் வருவது போல சொல்கிறாய் என்றேன்.

நான் அவள் சொல்லும் கதையை உதாசீனம் செய்கிறேன் எனப் புரிந்து கொண்டதால் அவளுக்கு கோபம் வந்துவிட்டது. உனக்கு சிரிப்பு வருகிறது, நான் சொல்லவில்லையென முரண்டு பிடித்தாள்.

சாரி, சாரி என்றவுடன் குழைந்தவள் அந்த நீரோடையின் மேல் ஒரு சிறிய குன்று இருக்கிறது அங்கே என்னை அழைத்துச் சென்று நீ மட்டும் அதன் மேல் சாய்ந்து கொண்டாய் என்றாள். கதை சொன்னால் ‘ம்’ சொல்லவேண்டும் என்றாள். திடீரென என்ன தோன்றியதோ உனக்கு, எனது கைகளை இறுக்கமாகப்பிடித்தபடி என்னை விட்டுப்போகாதே ‘அனாமி அனாமி’ எனக் கத்தினாய் என்றவுடன் அவள் கதைத்தொடர்பைத் துண்டிக்க கூடாதென்று நினைத்து மனதுக்குள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

ஐந்து நிமிடங்கள் இருக்கும் என் கைகளை விடுவித்து ‘போ போ என் கண் முன்னால் நிற்காதே’ என்று மீண்டும் கத்தினாய் என்றாள். எனக்கு எரிச்சலாக இருந்தது சுத்தப்பித்துக்குளியாட்டம் என்னை சித்தரித்த அவளைக்கண்டு.

இதெல்லாம் கனவில் நடந்ததா என்றேன். இல்லை இல்லை நனவில் தான் என்றவளுக்குக் கதை சொல்லும் ஆர்வம் குறைந்து விடக்கூடாது என்கிற பதட்டம் வந்துவிட்டது போல. சொல்லும் போது குறுக்கே பேசினால் தடைபடும் அமைதியாகக் கேள் என்றாள்.

வேறு வழியின்றி நானும் ஆமோதிக்க,

மாற்றி மாற்றி நீ மீண்டும் மீண்டும் அப்படியே என்னைப்போகச் சொல்வதும் என்னை இருக்கச் சொல்வதுமாக கத்த நான் உன்னை அந்த நீரோடையில் தரதரவென இழுத்து வந்து அமரவைத்து கைகளால் நீரள்ளி மொண்டு உன் தலையில் ஊற்ற ஆரம்பித்தேன் என்றபோது கிண்டலாக ‘ஹாஹ்ஹா எனக்குப் பித்தம் தெளிந்ததா இல்லையா?’ என்றேன். ஆனால் அதன் பிறகு அங்கே நடந்ததை அவள் சொல்லச்சொல்ல என் உடலுக்குள்ளும் ஒரு விதமான பித்தம் ஏறிக்கொண்டிருந்ததை நான் உணர ஆரம்பித்திருந்தேன்.

2

கரூருக்குத் தெற்கே ஒரு மணி நேரத்தில் பஸ்ஸில் பயணம் செய்யும் தொலைவில் இருந்த பிச்சனாம்பட்டி கிராமத்தின் புளியமரத்துச் சாமியாடியிடம் அமர்ந்திருந்தார்கள் அனாமிகாவும் அவளது அம்மா ஈஸ்வரியும்.

அனாமிகாவுக்கு அம்மாவின் செயல்பாடுகள் கடுமையான உளைச்சலாக மாறியிருந்தது சமீப காலங்களாக. ஊருக்கு விடுமுறைக்கு வந்துவிட்டால் போதும் இப்படி எங்காவது குறி சொல்கிறவர்கள், சாமியாடிகள், பூசாரிகள் என்று அழைத்துக் கொண்டு போக ஆரம்பிக்கிறாள். வயது இருபத்தி எட்டைக் கடந்தும் இன்னும் திருமணம் கூடவில்லை என்பது அவளுக்கு மாபெரும் கவலையாக மாறி இருந்தது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என ஒவ்வொருவராக சொன்ன இடங்களுக்கு எல்லாம் போய்க் கொண்டிருந்தாள். என்னம்மா, இந்த இடமே என்னமோ மர்மமா இருக்கே? இங்கே எல்லாம் எதுக்கு வந்துட்டு என்றபோது சும்மாரு நீய்யி, மேக்கால இருக்க புள்ளாண்டாம்புதூர்ல குடுத்தாங்கல்ல நம்ம அத்தை ஓப்பிடியோட கடசிமவ செல்வி அதுக்கு பத்து வருசமா புள்ள இல்லாம இவருகிட்ட ஏழு வாரம் வந்து சாமி பாத்து உடனே நின்னுக்கிச்சு தெரியுமா என்றாள். அனாமிகாவுக்கு கோபம் சுள்ளென்று வந்தது அம்மாவின் அறியாமையை நினைத்து. அவங்க டாக்டர்ட்ட போயிருப்பாங்க, ஏதாச்சும் உளராதம்மா என்றாள். நீ இப்ப பேசாம இருக்கியா இல்லியா? பெத்த வவுறு பத்தறது எனக்குத்தேந்தெரியும் வந்துட்டா எல்லாங் கண்டுக்கிட்டவளாட்டம்! வாயடைத்தாள் அம்மா.

புளியமரத்தின் கீழ் இரண்டுக்கு இரண்டடி அளவில் தென்னங்கீற்று வேயப்பட்டு இருந்தது. ஒரு ‘யு’ வை தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல தடுக்காகப் பின்னப் பட்டிருந்தது. அந்த கீற்றுக்கள் பல வருடங்களாக மாற்றாததால் காய்ந்துபோய் உட்புறத்தில் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் சருகை அவ்வப்போது உதிர்த்தபடி இருந்தன. இத்தனை மழைக்கும் வெயிலுக்கும் சென்னையில் கட்டப்படும் கான்க்ரீட் வீடுகளே பிய்த்துவிடுகிற போது இது தாக்குப்பிடிப்பது ஆச்சரியமாக இருந்தது அனாமிகாவுக்கு. உள்ளே நான்கைந்து பேர் சாமியாடி முன் உட்காரும் அளவிற்கு இடம் இருந்தது. அவர்களுக்கு எதிர்த்தாற்போல் அவர் அமர்ந்து குறிசொல்ல ஏதுவாக ஒரு பலகைக்கட்டை போடப்பட்டிருந்தது.

வரிசையாக மூன்று நாகர் சிலைகள், இரண்டு பெரிய வேல்கள், அதில் மணிகள் எழுப்பும் கிண்கிணி சப்தங்கள், நிறைய விபூதிப் பொட்டலங்கள், சிறிய வட்ட வடிவிலான சில்வர் குப்பிகளில் குங்குமம், அதைவிட கொஞ்சம் பெரிய அளவிலான சில்வர் குப்பிகள், தாயத்துகள், தடுக்குகளில் தொங்கிய மஞ்சள், காவி, பச்சை நிறத்துண்டுகள், வேட்டிகள், ஆங்காங்கே செருகிக் காய்ந்து கிடந்த வேப்பிலைக் கொத்துகள் என்று அவற்றை எல்லாம் பார்க்கையில் தான் ஏதோ ஒரு அமானுஷ்ய உலகத்தில் நுழைந்த உணர்வு வந்திருந்தது அனாமிகாவிற்கு.

ஊரின் நடுவே இருந்த அந்தச் சாமியாடிக்கு பெரிதான காணிக்கையாக எதுவுமில்லை. ‘வெத்தலைச்சாமியாடி’ என்றழைக்கப்பட்ட அவருக்கு பதினோரு ரூபாய் காசும் ஒரு கவுளி வெற்றிலையும் தான் காணிக்கை. அவர் வாயிலிருந்து வரும் குறிச்சொல் அவ்வளவு சக்தி வாய்ந்தது. பிச்சனாம்பட்டி மட்டுமல்லாது அக்கம் பக்கத்து கிராமத்திலிருந்தும் வெளியூர்களில் இருந்தும் தேடி வந்து சாமி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

தென்னந்தடுக்கின் மூலையில் படுத்துக் கிடந்தவர் இவர்கள் அரவம் கேட்டு விழித்துக்கொண்டார். யாரது என்று கேட்டபடியே தனது பச்சைநிற வேட்டியை சரி செய்தபடி எழுந்தவர் வெளியே சென்று வெற்றிலை போட்டிருந்த வாயை தனது ஆட்காட்டி விரலாலும் நடுவிரலாலும் பீடி குடிப்பவரைப்போல வைத்துக்கொண்டு புளிச்சென்று துப்பினார். முகத்தை அலம்பி தனது இடுப்புத் துண்டால் துடைத்துக்கொண்டு பலகையில் வந்தமர்ந்தார்.

‘நாங்கதேன் காளியாபட்டி ராசு சம்சாரமும், புள்ளையுஞ்சாமி. இங்கன நாத்தி வீட்டுக்கு வந்தம். உங்கள ஓரெட்டு பாத்துட்டுப் போலாமுனு வந்தமுங்க.’

‘ஓ ராசு சம்சாரமா? ராசு எப்பிடி இருக்காப்புடி. பாத்து எம்புட்டு நாளாச்சு. சொல்லு தாயி என்ன சோலியா வந்தீக?’

‘என்ன சோலியா வருவம் உங்களப் பாக்க. நீங்களே பாத்துட்டு சொல்லுங்க’ வாகாக அவர் முன் ஒரு காலை மடக்கியபடி மெதுவாக அமர்ந்து கொண்டாள் ஈஸ்வரி.

பலகையில் அமர்ந்திருந்தவர் தனது பரிவாரங்களை எடுப்பது போல அந்த விபூதிப்பொட்டலங்களில் ஒன்றை எடுத்து நெற்றி முழுவதும் இட்டுக் கொண்டார்.

நடுவில் குங்குமத்தை நீளமாக மேல் வாக்கில் பட்டையாகவும் கூராகவும் இழுத்தார். அருகில் இருந்த நாகர் சிலைகளுக்கு, நீர் விட்டு கரைத்து மஞ்சளை அதன் மேனியில் தடவி குங்குமத்தை நாகத்தின் தலையில் தடவினார். வேல்களை ஒரு ஆட்டு ஆட்டியவாறு அதன் அடிப்பகுதியில் விபூதி பட்டையிட்டு கரைத்தவற்றில் இருந்த மீதி மஞ்சள் குங்குமத்தை இட்டார். பெரிய அளவில் காணப்பட்ட குப்பிகளில் ஒன்றை எடுத்து அதனுள் கிடந்த சோழிகளை எடுத்தார். அதனைக் கைகளில் எடுத்து எல்லா விரல்களுக்குள்ளும் வைத்து மூடியபடியே சற்று நேரம் அமர்ந்திருந்தார்.

‘சோழிய விசிந்தோட்டு கொஞ்ச நேரம் தான் சாமி அருளோடு இருக்கும். அதுக்குள்ற என்ன கேக்கணுமோ கேட்ருங்க. சாமி எறங்கிட்டா சட்சட்னு வராது. பொறவு வெகுநேரம் காத்துக் கிடக்கணும்.’ என்றார்.

ஈஸ்வரி கிட்டத்தட்ட எழுந்து விடும் நிலையில் அமர்ந்து கேட்டுடறம் சாமி கேட்டுடறம் வாக்கு சொல்ல அழைச்சிவிடுங்க என்றாள் பணிவாக.

அவர் சோழிகளைக் கைகளுக்குள்  உருட்டியவாறு கண்களைத்திறந்து தீட்சண்யமாக அனாமிகாவைப் பார்த்தவர் மீண்டும் கண்களை மூடி ஜெய் காளி ஒம்பிள்ளைக்கு ஒரு நல்ல வாக்குச்சொல்லம்மா என்றபடியே சோழிகளை அவர் கால்களின் அருகில் அவர்களுக்கு நேரெதிரே விசிறினார்.

கண்களை மூடியவாறே, மணப்பாறை கிட்ட இருக்கிற வீரப்பூர் பெரியக்காண்டி அம்மன் தான் குலதெய்வம்னு காமிக்குது ஆமாவா என்றார் நாக்கை துருத்திக் கடித்தபடியே.

‘ஆமாஞ்சாமி ஆமாஞ்சாமி’ என அம்மனைக்கண்ட பக்தையாக அம்மா கன்னங்களில் போட்டுக்கொண்டாள்.

எப்படியும் இதற்கு ஒரு வழி பிறந்து விடும் என்கிற நம்பிக்கை அவள் கண்களில் வழிந்தது. ஒரு நிமிடம் தாமதித்து கண்களைத் திறந்து சோழிகளைப் பார்த்தவர் முகம் ஒளியற்றதாக மாறியது. முனகியவாறு உடல் முறுக்கியபடியே இருக்க ‘ராவு (ராகு) தோசமிருக்கா?’ என்றார்.

அதெல்லாம் கழிச்சாச்சுங்க சாமி என்றாள் பதட்டமாக அம்மா.

‘ஒண்ணுஞ்சொகப்படலியே தாயி!’

‘என்ன சொல்றீங்க சாமி?’

‘புள்ளைக்கு கல்யாணம் கேட்டு வந்திருக்கீக. தங்கத்துக்கு அந்தப் பாக்கியம் கெடைக்கக்கூடாதுங்குதும்மா?’

‘என்ன சாமி சொல்றீங்க அவளுக்குக் கல்யாணம் ஆகாதா?’

‘ஆனாலும் பொரோசனமில்லீம்மா. அவ செம்மத்துக்குத் தண்ணிய தலைல ஊத்தி அவிச்சிக்கோணுங்குதுடியம்மா.’

எனக்கு ஒண்ணுமே புரிலீங்களே. அடியே காண்டி ஏன் எங்கள இப்பிடிச்சோதிக்கற… அம்மா கத்தி அழுது விடும் நிலைக்கு போய்க் கொண்டிருந்தாள்.

‘எல்லாமே புரிஞ்சிட்டா வாழ்க்க ஏதுடி தங்கா?’

‘இப்ப நாங்க என்னதாஞ்செய்யோணுஞ்சாமி.’

‘கொண்ட கருமத்தை கழிச்சுத்தேன் தீக்கோணுந்தாயி. ஒம்புள்ளக்கே வழி தெரியும் தாயி. அதுக்கு மேல ஒண்ணுஞ் சொல்றதுக்கில்ல.’

இப்ப கல்யாணம் நடக்குமா நடக்காதா?அம்மா கொஞ்சம் கோபமாக கேட்டாள்.

‘எல்லாம் நடக்கும் ஆனா எதுவும் நடக்காது.’ இதைக் கேக்கவா வந்தோம் என்று சாமியாடியிடம் சத்தமாகப் பேசினாள் அம்மா.

’அது அவ விதி தாயி. நாஞ்சொன்னது உண்மைன்னா ஒம்புள்ள நாஞ்சாவறதுக்குள்ள என்னத்தேடி வருவா’ என்று கூறியவாறே உடலை முறுக்கி குறுக்கி நாக்கை வெட்டி இழுத்தபடி உடல் முழுவதையும் ஒரு குலுக்கு குலுக்கி கண்களைத் திறந்தார்.

3

‘ஹலோ பிரத்தீ’ மறுமுனையில் குரல் கேட்டவுடன் உடலின் எல்லா செல்களுக்கும் ஒரு மின்சாரம் பரவுவதைத் தவிர்க்க முடியாமல் தானே இத்தனையையும் வேடிக்கை பார்க்கிறேன். பிரதீப் என்கிற என் பெயரை பிரத்தீ என்று அனாமி செல்லமான ஹஸ்கியான குரலில் அழைக்கும் போது அவள் செய்கிற பைத்தியக்காரத்தனங்களை மறந்து விடுகிறேன்.

’சொல்லு அனாமி’ என்றவுடன்,

’இன்று என் பிரத்தீ என்னை என்ன செய்தான் தெரியுமா?’ என்றாள். ஆனால் அதைக் கேட்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை என்பதை அவளுக்குப் புரியவைக்க முடியவில்லை.

அவள் முதன்முதலில் நீரோடைக்கதை கூறியபோது சொல்ல முடியாத உடல் கிளர்ச்சியும், மனம் ஒரு வித பரவசமாகவும் உணர்ந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நாட்கள் கடக்க கடக்க நாம் இயல்பில் இல்லாத ஒருத்தியிடம் பேசிக்கொண்டிருக்கிறோமோ என யோசித்தேன். என் பிரத்தீ என என்னைப்பற்றி எனக்கே கூறிக்கூறி அவளின் எனக்கும், என்னின் எனக்கும் இடையே ஒரு பொறாமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறாளோ எனத் தோன்றியது.

அதற்குத் தகுந்தாற்போல் நானும் உன் பிரத்தீ என்ன பெரிய இவனா என்று என்னையே அவளிடம் திட்டுமளவிற்கு போய் விட்டிருந்தேன். உன் பிரத்தீயை விட நான் தான் உன்னை மகிழ்வாக வைத்திருப்பேன் என்று சவால் விட்டேன். நானும் முன்பு காதலித்திருந்தாலும் நிஜத்தில் வாழ்ந்து பழகிய எனக்கு அவளின் கற்பனை வாழ்வு ஒரு வித அச்சத்தை உண்டு பண்ண ஆரம்பித்தது. அதுவும் கனவு கூட இல்லை. நனவில் காடு மலை மேடுகளுக்கு என்னை இழுத்துக் கொண்டு திரிந்து வாழ்வதாக சொல்கையில் உண்மையில் இவள் அறிவு வேலை செய்கிறதா என்று கூட நினைக்க ஆரம்பித்தேன். அவளின் கற்பனாவாதங்களை அல்லது நான் எப்படி அவளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவளே நிர்ணயித்து என்னை அவளோடு செயல்பட வைப்பதற்காக இப்படிச்செய்கிறாளா எனக்குழம்பினேன்.

இப்படி என்னிடம் பேசுவது அவளுக்கு இருக்கும் ஒரு வகையான மனநோயின் அறிகுறி என்றெண்ணிக்கொண்டேன். அந்த மனநோய்க்கு என்னையும் அவள் போலவே இழுத்துச் செல்கிறாளா எனச் சந்தேகித்தேன். அவளிடம் இது ஒரு வகையான ஃபேன்டசி மனநிலை என்றேன். இருக்கட்டும் எனக்குப் பிடித்திருக்கிறது என்றாள். இதில் உண்மையான நானின்றி உனக்கு என்ன கிடைக்கும் என்று உடைத்துக் கூட கேட்டுவிட்டேன். நீயில்லை என்று யார் சொன்னது என்றாள். நானில்லாது, என் உடல் இல்லாது என்னை ஒருத்தி ஆள்வது எனக்கு தீராத ஆத்திரத்தை உண்டு செய்தது. ஏனென்றால் என்னை அவள் நிஜத்தில் சந்திக்கப் பெரிதாக அக்கறை எடுக்காததும் ஒரு காரணம்.

எங்களுக்குள் சந்திப்பை ஏற்படுத்தி அதன் மூலம் அவளின் என்னையும், என்னின் என்னையும் ஒன்றாக்கிவிடத்துடித்தேன். அப்படி நடந்தால் உனது இந்த கற்பனை வாழ்வுக்கு விடை கிடைத்து விடும், உனது கற்பனைகள் அனைத்தும் நிஜமாகும் என அவளிடம் பேசிப் பார்த்தேன். நான் இதற்கு விடை தேடிப் பயணிக்கவே இல்லையே என்றபோது இன்னும் கோபம் தான் வந்தது.

எனக்கு அனாமியைப் பிடிக்காமல் இல்லை. அவளின் செல்ல மொழிகளும் அவளும் எனக்கு தேவையானதாகத்தானிருந்தது. பின் ஏன் இப்படி அலைவுறுகிறது இந்த மனம்.

அவளின் இந்தக் கதைகளும், நனவு வாழ்வின் ஒரு பகுதியாக இரண்டாகப் பிளக்கப்பட்ட பலாப்பழத்தின் சுவையைப் போலான எங்களின் நிஜ வாழ்வுக்கும் , அவளின் பேன்டசி மனநிலைக்குமான இடைவெளியே எனக்குப் பயமாக இருந்தது. அந்த புதிர் தன்மையே ஒரு சேர அவளின் வசீகரத்தைக் கூட்டியும், அச்சுறுத்தியும் வந்தது.

அவள் என்னிடம் பேசுவதே அவளின் அன்றாட நனவு மனதின் கற்பனை வாழ்வைப் பிரதாபிக்கத்தானோ. என்னைக் காதலிப்பதற்கில்லையோ என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்குச் சூழல் நகர்ந்து வந்திருந்தது.

’என்ன பிரத்தீ நான் எவ்வளவு ஆசையா வந்து பேசிட்டு இருக்கேன் நீ எதுவுமே கவனிக்கல, ரிப்ளை பண்ணல இன்னிக்கு என் பிரத்தீயோட கழுத்தைக் கட்டிட்டு அவ்வளவு முத்தம் தந்துட்டேன்..’ என்கிற அனாமியின் குரல் மிக நெருக்கமாகவும் அதிக தூரமாகவும் ஒலித்துக் கொண்டே இருந்தது போனில். ’இனிமேல் என்னிடம் இந்தக் குரலோடு வராதே, பேசாதே!’ என்று கத்திவிட்டுப் போனைத்துண்டித்தேன்.

4

ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை.

அம்மா அடுத்த அங்குசத்தை எறிந்து அனாமிகாவை வரவழைத்திருந்தாள். அனாமிகா வீட்டில் கால் வைத்த நொடியில் இருந்து புலம்ப ஆரம்பித்தாள்.

’இருக்கறது ஒத்தப்புள்ளன்னு செல்லங்குடுத்து வளத்தது தப்பாப்போச்சு. மேல மேல படிச்சா இப்படித்தான். வந்த நல்ல வரனையெல்லா நொட்ட சொல்லி தட்டிக் கழிச்சு இப்ப ஒவ்வொருத்தர் ஒவ்வொண்ணு சொல்லிக் குழப்பி விடுறாங்க’, அவளை வரவழைக்க புதிய இடுப்பு வலியோடு படுத்தவாறே புலம்பிக் கொண்டிருந்தாள்.

இப்போதெல்லாம் ராசுவை வதைக்கத் தொடங்கி இருந்தாள். ’உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா பொட்டப்புள்ளய வச்சிருக்கமேன்னு’ கேட்கையில் ராசுவுக்கு கலக்கம் இருந்தாலும் திருமணம் அவளுக்கு நடக்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உள்மனதில் இருந்ததால் பதற்றமின்றி இருக்க பழகிக் கொண்டார். மேலும் தன் மகளின் துணிச்சலான எண்ணங்களுக்கு மறைமுகமாக அவர் துணை நின்றார்.

’நாந்தான் வயித்துல நெருப்பக் கட்டிட்டு அழுவறேன். நம்ம சாதிசெனத்துல இவளோட பொறந்தவளுக எல்லாம் வயித்துல ஒண்ணு இடுப்புல ஒண்ணுனு அலையும் போது எந்நெஞ்சே வெடிக்குது. பாவி மவ படிச்சுக்கிழிச்சு பாழாப்போனா போங்க’, என நாளும் பொழுதும் அவள் உக்கிரம் அதிகமானபடியே இருந்தது. இந்த முறை புத்தூர் ஜோசியரை வீட்டுக்கே வரவழைக்க ஏற்பாடு செய்திருந்தாள்.

அம்மா உடல்நிலை சரி இல்லை என்று சொல்லி தன்னை வரவழைத்தது இதற்குத்தான் என அனாமிக்குப் புரிந்த போது அவளுக்கு அம்மாவின் செயல் எரிச்சலூட்டுவதாக இருந்தது. இனி விடுமுறை நாட்களில் தனக்கு இருக்கும் வேலைப் பட்டியல்களை அவளுக்கு முன்பே நீட்டிவிட வேண்டும் என யோசனை செய்து கொண்டாள்.

புத்தூர் ஜோசியர் வருவதாக போனில் சொன்னவுடன் இரவில் இருந்து புலம்பியபடி இருந்தவள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு பளிச்சென்று விபூதி குங்குமம் வைத்துக் கொண்டு உடலை உறுத்தாத காட்டன் புடவையைக் கட்டிக் கொண்டு ஒரு பழுத்த ஆன்மீகவாதியின் சாயலுடன் தன்னை காண்பித்துக்கொள்ள முயற்சி செய்தாள்.

அவர் புளியமரத்துச் சாமியாடி அளவுக்கு நெற்றியை நிறைத்துக்கொண்டிராமல் சிறிய விபூதிக் கீற்றோடும் அதன் மேலேயே வைத்துக் கொண்ட குங்குமத்தோடும் வந்திருந்தார் ஜோசியர்.

அவர் வந்தவுடன் அம்மாவின் செயல்பாடுகள் பார்ப்பதற்கு அனைத்துமே முடிந்து மாப்பிள்ளை வாசலில் வந்து நின்று தேதி குறித்து இன்னும் பத்து நாட்களுக்குள் திருமணம் முடிந்து விடும் என்பது போல நம்பிக்கை திரண்ட முகத்துடன் காணப்பட்டாள். அவர் அமர்வதற்கு இரட்டைக்கோரைப்பாயை எடுத்து வந்து போட்டவள் அருகில் ஒரு பெரிய சொம்பு நிறைய நீர் வைத்து விட்டு மிகவும் பவ்யமாக வெற்றிலையில் தட்சணை வைத்தாள். பின் அவரெதிரே அமர்ந்து கொண்டு அவர் முகத்தின் ரேகைகளைக் கவனிக்கலானாள்.

புத்தூர் ஜோசியர் அனாமிகாவின் ஜாதகநோட்டில் இருந்த கட்டங்களை வைத்து தனது பேப்பரில் கோச்சாரம், நீசம், சரராசி, லக்னம், ஏழாமிடம், மாங்கல்ய ஸ்தானம், பனிரெண்டாம் இடம், சனி, குரு என முனகியபடியே சில கணக்குகளைப்போட்டார்.

பின் நிதானமாக செருமியபடி நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தார். ’களத்திரத்துக்குக் காரகன் மறஞ்சிருக்கானேம்மா!’ என்றார். ’அண்ணே, பாக்காத எடமில்ல போகாத கோயிலில்ல தயவுசெய்து நல்லா பாருங்க….எம்பொண்ணுக்கு வரன் வருமா வராதா… எந்த தெசைல இருந்து வரும். கல்யாணம் எப்ப நடக்கும். இப்படியே தள்ளிட்டு போறதுக்கு என்ன காரணம். இன்னும் எங்கெல்லாம் போகணும்னாச்சும் சொல்லுங்க’.

’அதானம்மா சொல்றேன்… களத்திரகாரகன் சுக்கிரன் மறஞ்சு இருக்கான். கல்யாணம் கூடற மாதிரி கூடும். ஆனா நின்னுடும். கூடிக்கலைக்கற அமைப்புதான் இருக்கு. கல்யாணம் நடக்கிறது பிரம்மப்பிரயச்சித்தம். களத்திர ஸ்தானமும் அவ்வளவா சுகப்படல. லேசான செவ்வாய் பார்வையும் உண்டு. ராகு தோஷம் வலுவா இருக்கு. மீறி நடந்தாலும் செலாக்கியப்டாது.

நாலுல செவ்வாய் இருக்கிறதால போராட்ட மனசாருக்கும். அது தாய் ஸ்தானம்ங்கறதால் அம்மா சொன்ன பேச்சைக் கேட்காது, அம்மாவுக்கு உடம்பு சுகமில்லாமப் போகும்’, என்றவுடன் பார் எவ்வளவு சரியாக சொல்கிறார் என்பது போல அனாமிகாவைப் பார்த்து முறைத்தாள்.

’பாப்பா ஜாதகம் இந்திராகாந்தி, காமராஜர் மாதிரி தனியா இருந்தாத்தான் ஜொலிக்கும். சில விஷயங்கள் கன்னிப்பொண்ண வச்சிட்டு சொல்லப்டாது’… படபடவென சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

அம்மாவின் முகம் தளர்ந்து சற்று முன் இருந்த பளபளப்பும், ஆர்வமும் மங்கி மெதுமெதுவாக அணையும் தீபச் சுடரைப்போல ஒளி குறைந்தபடி இருந்தது. ஜோசியர் சொல்லிவிட்டு கிளம்பிய பின் அவள் செய்வதறியாது வீட்டுத் திண்ணையில் போய் விரக்தி நிறைந்த முகத்தோடு யோசனையில் அமர்ந்திருந்தாள்.

தற்போதைக்குக் கிடைத்த விடுதலையை எண்ணிக் குதூகலத்தை வெளிக்காட்டாது மறுநாளே அனாமிகா சென்னைக்குப் புறப்பட்டிருந்தாள்.

5.

புகைப்படத்துறையில் முதுகலை முடித்து விட்டு சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த அனாமிகாவுக்குக் காடுகளுக்குள் சென்று விலங்குகளை அவற்றின் வாழ்வியலை, அவை சார்ந்த அரிதான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியிருந்தது. பிஎச்டியின் ஆய்வுக்காக அவற்றை புகைப்படங்கள் எடுக்கும் பிராஜெக்ட்டையே தேர்வு செய்திருந்தாள். அது முடிந்தாலும் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் அப்படிக் காடுகளை சுற்றி வருவதே மிகவும் விருப்பமாயிருந்தது.

காடுகளின் மர்மங்கள். அங்கிருக்கும் விலங்குகள். பறவைகள், அவற்றின் குணாதிசயங்கள் மீது அளவற்ற க்ரேஸ் அவளுக்கு இருந்தது. காடுகளின் அதீத மர்மமே அவளைக் காடுகள் நோக்கி இழுப்பதாக நம்பினாள். எந்த ஒரு விஷயத்தின் மீதான மர்மமே அதன் மீதான ஈர்ப்பைக் குறையாமல் வைத்திருக்கும் அது நோக்கிய இலக்கற்ற தேடுதலைத் தோற்றுவிக்கும் என்பதாக அவளுக்குத் தோன்றியது.

ஐடி கம்பெனியில் வேலைப்பளுவில் இருந்து தப்பித்து நேரம் கிடைக்கையில் ட்ரெக்கிங்க்குச் செல்வது பிரதீப் ஹாபிகளில் ஒன்றாக இருந்தது. அதுவும் சென்னைக்கு அருகே உள்ள நாகமலைக்குப் பயணம் செய்வது பிரதீப்பிற்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அவன் தனது குழுவோடு சென்றபோதுதான் முதல் முறை தன்னந்தனியே தைரியமாக வந்த அனாமிகாவை சந்தித்திருந்தான்.

அனாமி ஊரில் இருந்து வந்த காலையில் பிரதீப் அழைத்திருந்தான். வழக்கத்திற்கு மாறான துள்ளலோடு போனை எடுத்தவள்,

‘ஹாய் டா கன்னுக்குட்டி’ என்றாள்.

’ரெண்டு நாளா பேசவேயில்ல ஒரு மெசேஜ் கூட இல்லை எப்படி அனாமி உன்னால் இப்படி இருக்க முடியுது?’ என்றேன். ’நீதான் பேசாதனு அன்னைக்கு கத்துனியா ம்ம் அதான்’ என்று கொஞ்சலாக இழுத்தவள் ’என் கூடவே இருக்கியே, அப்பறம் என்ன உன் கூட பேசிட்டு தானே இருக்கேன் எப்போதும்’ என்றாள்.

எனக்கு அவள் விசித்திரமான மனநிலை மீது கோபமாக வந்தது. நார்மலாவே இருக்கமாட்டியா? என்ன அவ்வளவு புடிக்கும், லவ் பண்றேன்ற? பிரிஞ்சு இருக்கும் போது கஷ்டமால்லயா? நான் போன்னா போயிருவியா? அடுக்கடுக்காக கேள்விகளை மட்டும் தான் அடுக்க முடிந்தது என்னால். இந்த இரண்டு நாள் பிரிவை அவள் சாதாரணமாக கடந்தது எனக்குள் இருந்த ஈகோவைத் தூண்டியிருந்தது.

இன்னொரு முக்கியமான விஷயம் பிரதீப் என்றாள். எரிச்சலை மறைத்துக் கொண்டு, சொல்! என்றேன்.

இந்த முறை ஊருக்குப் போனபோதும் சென்ற முறை போலவே அம்மா செய்த விஷயங்களைக் கூறியவள்

’தற்காலிகமாக அம்மா எனக்குக் கல்யாணம் பண்ணும் யோசனையை வழியின்றி ஒத்திப்போட்ருவாங்கனு நினைக்கிறேன், ஒரு வழியாக எனக்குத் தலைவலி தீர்ந்தது’ என்றாள்.

எனக்கு இப்போது தான் இத்தனை நாட்களை விட அதிகமாகக் கொப்பளித்த படி இருந்தது மனது.

‘என்னடி சொல்ற? கல்யாணம் வேணாம்னா ஜாலியா உனக்கு. அப்பறம் என்ன எதுக்கு ஊரு முழுக்க இழுத்துட்டு லவ் பண்றேங்கற. அதெல்லாம் உருட்டா.?’

‘ச்சை, உன்னால் எப்படி இப்படி யோசிக்க முடியுது பிரதீப். நான் உன்னை எவ்ளோ அதிகமாக நேசிக்கிறேன் தெரியுமா? எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்டா.’

’உன் லாஜிக் என்னால புரிஞ்சிக்கவே முடியல. புரிஞ்சிக்க நினைச்சா எரிச்சலாருக்கு.’

’ஏன் புரிஞ்சிக்க நினைக்கற. அடுத்த கட்டத்துக்கு போகணும்னு கட்டாயமா என்ன? நல்லாத்தானே போகுது. அப்டியே விடு’ என்றாள்.

’உங்கம்மா இருக்க மனநிலையில் இப்ப உனக்கு கல்யாணம் பண்ணா போதும்னு தான் நினைப்பாங்க ப்ளீஸ்டி நான் வந்து பேசறேன் நம்ம விஷயத்தை’ என்றேன்.

’அதுக்கு நான் ஒத்துக்கணும்ல பிரதீப்’ என்றதைக் கேட்டவுடன் வந்த கோபத்தில் அலுவலகத்தின் அறையில் இருந்த மேஜையில் வேகமாக ஒரு குத்து குத்தினேன்.

என் அனுமதி இல்லாமல் என்னை மட்டும் எடுத்துக் கொள்ள நினைக்கும் அவளை விரைவில் காதலில் இருந்து நகர்ந்து திருமணம் செய்து கொண்டு விடவேண்டும் எனத்தோன்றுவது அவள் மீதுள்ள காதலா, ஈகோ வன்மமாயென எனக்கே குழப்பமானது.

’ஏன் அனுமதிக்கமாட்ட. அப்ப உண்மையா லவ் பண்ணலனு ஒத்துக்கோ?’ வழக்கத்திற்கு மாறாக அதிகமாக கத்த ஆரம்பித்து இருந்தேன்.

அவளோ மிக நிதானமாக, ’நான் உன்னை லவ் பண்றதும் உண்மை. நீ அம்மாட்ட பேசவேண்டாம்ங்கறதும் உண்மை. உன்னை கல்யாணம் பண்ணிக்கறத விட காதலிக்க ரொம்ப பிடிச்சிருக்கு பிரத்தீ. கல்யாணத்தால் என் காடு சார்ந்த பயணங்கள் தடைபடும். அந்த சுதந்திரம் தடைபடும். அது என் வாழ்நாள் கனவு பிரதீப். ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ’ என்றாள்.

’அப்ப நீ காடு மேடு சுத்திட்டு வர்ற வரைக்கும் நான் காத்திருக்கணும்ங்கறியா?’ என்றேன் கடைசிக் கேள்வியாக.

’உன்னை நான் காத்திருக்கச் சொல்லவே இல்லையே. நீ காத்திருந்தாலும் காத்திருக்கலன்னாலும் என் வாழ்க்கை உன்னோடு தான். காடுகளுக்குள் இருந்தும் நான் உன்னிடம் பேசுவேன். சிரிப்பேன். அந்த பயணங்களில் நடக்கும் சுவாரசியங்களைச் சொல்லுவேன். கஷ்டமா இருந்தா அழுவேன். காட்டு மலர்கள், பறவைகள் புடைசூழ மின்மினிகள் உலவும் மினுங்கல் ஒளியின் இரவில் உனது உடலினைக் கொண்டாடி பூஜிப்பேன். மரங்களின் நிழலில், நிலவின் ஒளியில், ஆகாயத்தின் நிழலில், அருவிகளின் குளுமையில், பறவைகளின் ரீங்காரத்தில் நமது உடல்களை அளவில்லா இன்பத்தின் மீதேற்றி கொண்டாடச் செய்வேன். ஒரு முறை அல்ல ஓராயிரம் கூடல்களை அங்கிருந்தபடியே உன்னோடு நிகழ்த்துவேன். Because I love you my boy’ என்றவளிடம், ’சகிக்கல உன் லாஜிக்’ என்றேன். இருப்பினும் அவள் முன்னம் சொன்ன கதைகள் மனதிற்குள் கிளர்ச்சி தந்தது நினைவில் வந்து போயின.

’இன்னும் இரண்டு நாட்களில் பயணத் திட்டம் ரெடி ஆகிடும். அது சம்பந்தமான வேலைகள் நிறைய இருக்கு வச்சிடறேன் பிரத்தீ குட்டி’ கொஞ்சிய படியே போனை வைத்தாள்.

அவள் வைத்தபிறகு அவள் சொன்ன அத்தனை விஷயங்களாலும் மீண்டும் குழம்பிய நான் என்னை அவளுக்குப் பலியாக்குகிறாளோ என்றெல்லாம் யோசிக்கும் அளவுக்கு மனம் உணர்வுகளால் அலைவுற்றபடி இருந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து விலக முடியாத தன்மையில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டாளா அவள். அவள் ஜெயித்து விட்டாளா?. இந்த சூதாட்டத்தில் நான் தோற்றேனா?அவள் இல்லாதபோது இப்படி அவளைப்பற்றி யோசிக்க முடிகிற என்னால் அவள் பேச ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் மறந்து கேட்க ஆரம்பித்ததன் விடை பிடிபடாது தவித்தேன். அவளின் இந்த விளையாட்டை நிறுத்தி எப்படியாவது விலகிவிட வேண்டும் எனும் மனதோடு பேசியபடியே உறங்கியிருந்தேன்.

பயணத்திற்கு கிளம்பும் நாள் காலையில் அவளே அழைத்தாள். சாப்டியா ‘பிரத்தீ’ என்றாள். பிரத்தீ என்று அவள் செல்லமாக ஹஸ்கி வாய்சில் அழைக்கும் போது உண்டாகும் மயக்கத்தை அடக்க முயற்சி செய்தேன். அதற்குப் பதில் அளிக்காது திடீரென,  நான் ஃப்லர்ட் எனக்கூறியதை கேட்டுத்தான் ‘இருந்து கொள்’ என்றாள். உன்னால் என்னை ஃப்லர்ட் செய்ய முடியாது. திருமணம் செய்வதும் கடினம். என்னோடு அண்மித்திருக்கவும் முடியாது. என்னை விடவும் முடியாது! என்றாள். ’நீ ஒரு மாயப் பிசாசு, பைத்தியக்காரி பைத்தியக்காரி’ எனக்கத்தினேன். ’வெரி கரெக்ட் பிரத்தீ மை ஸ்வீட் ராஸ்கல், டவர் கிடைக்கும் இடம் வந்தவுடன் உன்னை அழைக்கிறேன்’ என்றபடியே போனைத் துண்டித்து விட்டுப் போயிருக்கிறாள்.

++

சுபி

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக  கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். முப்பது எழுத்தாளர்கள் எழுதி வெளியிட்ட வெள்ளிக் கிண்ணந்தான் புத்தகத்தில் “வேப்ப மர ஸ்டாப்” என்கிற இவரது முதல் சிறுகதை வந்துள்ளது. அது தவிர “சாத்தானுக்கு நேர்ந்து கொண்டவன்” என்கிற சிறுகதை கலகம் மின்னிதழில் வந்து கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர்,வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌ ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *