பிரியா பாஸ்கரன்

மாத்தாயிபுரம், மேற்குத் தொடர்ச்சி மலையின் காலடியில், கருவேலங்காடுகள் சூழ்ந்திருந்த ஓர் ஒற்றைக் குடியிருப்பு. இந்தப் பகுதியின் நிலவியலானது, வறட்சியுடன் போராடி வாழும் எளிய மக்களின் உறுதியைப் போலவே, கடினமான களிமண், புதர்களால் ஆனது. இந்தக் குடியிருப்பு, பல தலைமுறைகளாக இந்த மண்ணுடன் பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டிருந்தது.

வெயில் காலம் வரும்போது, கருவேலங்காட்டு காற்றில் சுழன்றடிக்கும் உஷ்ணம், நிலத்தின் மீது அவர்களுக்கிருந்த பிணைப்பை இன்னும் ஆழமாக உணர்த்தும். அங்கு அமைந்திருந்த ஒற்றை ஊருணிதான் அந்தக் கிராமச் சமூகத்தின் ஜீவ நாடியாக இருந்தது. அது வெறும் நீர்த் தேக்கம் அல்ல. அது முன்னோர்களின் வியர்வை கலந்த புனித நீர்நிலை. ஒவ்வொரு திருவிழா வழிபாட்டிலும், இந்தத் தண்ணீரே முதன்மையான தேவையாகும். கிராம மக்கள் அனைவரும் இங்கேயே குளித்து, குடிநீரை எடுத்து, தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர்.

அங்கே வசிப்பவர்களில், செவத்தாள் ஆத்தா தான் ஊரிலேயே மிக மூத்த கிழவி. அவள் உடலின் வளைவுகள் காலத்தின் கணக்கைப் போலக் கூனிக் கிடக்கலாம், ஆனால் அவள் நிமிர்ந்து பேசும்போது, அவளது முதுகெலும்பு கர்வத்தின் அச்சாணியாக நேராக நிற்கும். அவளது கைகள், களிமண் மீது பதிந்த ஆதி வேர்களைப் போல, ஊரின் வரலாற்றையும், மண்ணின் ஈரப்பதத்தையும் அறிந்தவை. அவளது தலைமுடி முற்றிலும் வெள்ளிபோல் வெளுத்திருந்தாலும், அவளது கண்கள் எரிந்து தணியாத நெருப்பைப் போல உறுதியுடன் இருக்கும். அவளது பேச்சில் கடந்த காலத்தின் ஞானமும், எதிர்காலத்தின் எச்சரிக்கையும் ஒலிக்கும்.

அவளது பேச்சைக் கேட்கும்போது, காலமே அவளுடன் சேர்ந்து பேசுவது போலிருக்கும்.

சின்ன வயதில், இதே ஊருணியில் நீரைத் தூய்மைப்படுத்த மறுத்த ஓர் உள்ளூர் அதிகாரியை எதிர்த்து, மௌனமாய் உண்ணாவிரதம் இருந்து நீதியை நிலைநாட்டியவள் அவள். அன்று அவள் கற்ற பாடம், ‘ஊமை சண்டைக்கு ஓசை சண்டை ஈடாகாது’ என்பதே.

அவளது பேரன் முருகன், அருகிலுள்ள நகரக் கல்லூரியில் படிக்கும் இளைஞன். அவன் படிப்பது மட்டுமல்லாமல், சமூக நீதிக்காகப் போராடிய பெருந்தலைவர்களின் சிந்தனைகளையும், குறிப்பாக அம்பேத்கரின் ‘சுயமரியாதை, கல்வி எனும் ஆயுதம்’ குறித்த கருத்துக்களையும் ஆழமாக வாசிப்பவன். இந்தக் கிராம மக்களின் உரிமைகளும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும் அவனுக்குள் வெறும் கோபமாக மட்டும் இல்லாமல், ‘மானிட உரிமைகளுக்கான தீவிரமான ஆவேசமாக’ கனன்று கொண்டிருந்தது.

அந்த வருடம் மழை எதிர்பார்த்ததை விடக் குறைவு. ஊருணியில் இருந்த நீர், அரைவாசிக்கும் குறைவாகக் குறைந்துவிட்டது. கடுமையான கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, கிராமத்தின் மொத்த நம்பிக்கையும் வற்றத் தொடங்கியது.

இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொள்ள முடிவெடுத்த பெரிய பண்ணையார், நகரத்து வங்கியில் இருக்கும் தன் வட்டிப் பணத்தை எண்ணும் அதே கவனத்துடன், தன் ஆட்களை அனுப்பினார். தும்பைப்பூ நிறத்தில் சலவைச் சட்டை அணிந்திருந்த பண்ணையார், கழுத்தில் கிடந்த மூன்று அடுக்குத் தங்கச் சங்கிலிகளும், விரலில் மின்னிய வைர மோதிரங்களும் பளபளக்க, அவர் எந்தக் காலத்திலும் நிலத்தில் கால் வைக்காதவர் போல் ஒரு மிதப்பான தோற்றத்தைக் கொண்டிருந்தார்.

அவர் கட்டளையிட்டபடி, ஊருணியைச் சுற்றிலும் கூரிய முள்வேலிகளைப் போடச் செய்தனர். ஊருணி முக்கால்வாசி வற்றி, அடிப்பாகத்தில் சேறு மட்டும் கிடந்த நேரத்தைப் பார்த்து, அந்த மனுசன் வேலியைப் போட்டார். இதில் பண்ணையாருக்கு இருந்த சூது தெளிவாக தெரிந்தது. நிலத்தின் வறண்ட சேற்றின் மீது ஒரு பலகையை நட்டு, அதில், ‘இது என் பட்டா நிலத்தில் உள்ளது. இனி எவனும் எட்டிப் பார்க்கக்கூடாது’ என்று அறிவித்திருந்தார்.

ஊருணி அடைக்கப்பட்டதை அறிந்த சனம் கொதித்தெழுந்து நின்றது. முருகன் தன் கோபத்தை அடக்க முடியாமல் முன்னால் வந்தான். அவன் சத்தம் போட்டுப் பேசினான். “நாம வெறுசட்ட கத்தி என்ன பிரயோசனம்? அவன சண்டக்கி இழுக்காம இந்த வேலைய நிறுத்த முடியாது. எல்லாரும் வாங்க, வேலியை உடைக்கலாம். இப்பவே நம்ம சண்டைய ஆரம்பிக்கணும்.”

கூட்டம் முழுவதும் ஆவேசத்துடன் முருகனைப் பின் தொடரத் தயாராக இருந்தபோது, செவத்தாள் ஆத்தா மெதுவாகத் தன் கையை வீசிக் கூட்டத்தை நிறுத்தினாள். அவளது அமைதியான குரல், இடிபோல உறுதியுடன் ஒலித்தது. “ஏன்லே முருகா, நீ படிச்சவன். ஒதறிட்டு போற கோவத்த விட, ஒண்டிப்போட்டு நிக்கிற மரியாதைதான் சண்டையில பெரிய ஆயுதம். நீ எங்கள எங்கன கூட்டிட்டுப் போறே? அடிதடி சண்டையா?”

முருகன் குழப்பத்துடன் ஆத்தாவைப் பார்த்தான். “மரியாதையா? தண்ணி இல்லாம சாகப் போறோம் ஆத்தா. இங்கன என்ன மரியாதை கேக்குது? இந்த நேரம் கோபப்படாம, வேற எப்போ கோபப்படுறது?”

ஆத்தா தன் உதட்டை இறுக்கமாக ஒரு கோடா ஆக்கிட்டு சொன்னாள், “சத்தம் போட்டுப் புலம்பாதே முருகா. மனுசன் சத்தம் போட்டா, அங்கன சனத்தோட ஒசரம் குறைஞ்சி போயிடும். பண்ணையாரு வெச்சது வேலி இல்ல, வெத்து வேசம். அதை நீ கோவத்தால உடைக்கக் கூடாது, ஒன் அறிவால தாண்டனும். நீ அவங்க முன்னாடி ஒசரமா நிக்கணும், அதுதான் இங்கன முக்கியம்.”

முருகன் தலைகுனிந்து நின்றான். “அப்போ என்ன செய்யிறது ஆத்தா? நீ தான் சொல்லணும். அவங்க முள்ளு வேலி போட்டதுக்கு, பதிலுக்கு நம்ம முள்ளை எங்கே குத்தணும்னு நீ தான் சொல்லணும்.”

வெள்ளைச்சாமி என்ற கிராமத்து பெரியவர் ஒருவர், விரக்தியுடன் கத்தினார்: “ஆத்தா, மரியாதை பேச நமக்கு நேரம் இல்ல. தண்ணி இல்லேன்னா சனமெல்லாம் நாலைஞ்சு நாள்ள செத்துரும். நீ பெரிய மனுஷி, நீ பண்ணையார் கிட்ட கெஞ்சியாவது கேளு ஆத்தா.”

செவத்தாள் ஆத்தாவின் கண்கள் தீர்க்கமாக மின்னின. அவள் மெல்ல சிரித்தாள். “யார்கிட்டயும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்ல. இந்தக் கிராமத்தோட வரலாறு, அவங்க போட்ட முள்ளு வேலியை விட கூர்மையானது, வெள்ளச்சாமி. ஊருணி எப்பயுமே இந்த ஊரு சனத்துக்குத்தான் சொந்தம். அதுக்குப் பேர் ஊருணின்னு சும்மா வெக்கல.”

கருப்பாயி என்ற பெண்மணி, ஆத்தாவை அணுகி, “அப்போ நமக்குனு சட்டம் இருக்கா ஆத்தா? அந்தப் பண்ணையாரு, ‘இது என் பட்டா நிலம்’னு எழுதி வெச்சிருக்காரே?” என்று கேட்டாள்.

ஆத்தா தன் குடிசையின் உள்ளே சென்று, துணி முடிச்சுக்குள் பாதுகாக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடியை வெளியே எடுத்தாள். சுவடி காலத்தால் மஞ்சளித்திருந்தது. “அந்த மனுசன் சட்டம் பேசினா, நம்ம தாத்தன் எழுதிய சட்டத்தை எடுத்துக் காட்டணும். என் பாட்டன் காலத்துல இந்தக் கிராமம், அவங்க முன்னோர்கிட்ட இருந்து இந்த நிலத்தை ‘ஒத்திப் பத்திரம்’ போட்டு வாங்குச்சு. இந்தக் குளத்தை வெட்டினது நம்ம சனம். அதுக்கான கையெழுத்து, இந்த ஓலச் சுவடியில இருக்கு.”

முருகன் ஆச்சரியத்துடன் அந்தச் சுவடியைப் பார்த்தான். “ஒத்திப் பத்திரமா? அப்போ இந்தக் குளம் நமக்குச் சொந்தம்னு நிரூபிக்க, இந்த ஒரு சுவடி போதுமா?”

ஆத்தா தலையசைத்தாள். “சட்டம் என்பது வெறும் வார்த்தை இல்ல முருகா, அது நீதியோட அடித்தளம். பண்ணையார் பணம் கொடுத்து நிலத்த வாங்கலாம். ஆனா, இந்தச் சுவடி, உழைப்பும், உயிரும், தலைமுறை வழிபாடும் கலந்து இந்த ஊருணிக்கு இருக்குற உரிமையைச் சொல்லும். இது நம்ம சனத்தோட மானத்தக் காக்கிற ஆயுதம்.”

பிறகு, அவள் தனது திட்டத்தைத் தெளிவுபடுத்தினாள்: “சத்தம் போடாத. ஒத்த வார்த்தை பேசாத. நாளைக்குக் காலையில எல்லாரும் சுத்தமா குளிச்சு, புது வேட்டி புடவையோட, மௌனமா ஊருணி வேலி கிட்ட போயி, ஒண்ணா நிப்போம். இந்தச் சுவடி அங்கன ஒசரமா நிற்கும். நம்ம மானத்த அவர் முன்னாடி நிரூபிக்கணும். அது போதும். சண்டைக்கு வந்தா, மானத்த இழந்திடுவோம். மரியாதையோட நின்னாதான், உரிமை நிலைக்கும்.”

அந்த வார்த்தைகள், கிராம மக்கள் மத்தியில் நம்பிக்கையின் ஆழமான விதையைப் போல வேரூன்றியது. அவர்களின் கசப்பான கோபம், இப்போது உறுதியான கௌரவமாகவும், தார்மீக வலிமையாகவும் மாறியது.

வேலிக்கு முன்னால் நின்ற பண்ணையாரின் ஆட்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. சத்தம் கேட்டுக் கோபத்துடன் பண்ணையார், தன் சிவப்பு காரிலிருந்து இறங்கி, தனது இரண்டு காவலாளிகளை இழுத்துக்கொண்டு ஓடி வந்தார்.

பண்ணையார் நடந்து வரவில்லை, ஒரு பெரிய கோபுரத்தின் அடிப்பகுதி தரையில் உருண்டு வருவது போலத் தெரிந்தது. அவர் மூச்சு வாங்கியபடியே, சத்தம் போட்டுப் பேசினார். “என்ன செவத்தா, என்ன வேடிக்கை காட்டுறீங்க? இது என் இடம், போங்க! இந்த ஊருணி என் நிலத்துல இருக்கு!” என்று உரத்த குரலில் கத்தினார்.

செவத்தாள் ஆத்தா நிதானமாகப் பண்ணையாரின் கண்களைப் பார்த்தார். மெதுவாக, அந்தப் பழைய ஓலைச் சுவடியை உயர்த்திக் காட்டினார். ஆத்தா பேசிய சத்தத்தை விட, அந்த ஊர் மக்களின் ஒன்றுபட்ட மௌனம் பண்ணயாரை பயமுறுத்தியது. அவருடைய பெருமைச் சிரிப்பு காற்றில் கரைந்தது. தோற்றுப் போனவர்போல தலையைக் குனிந்தார்.

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, “வேலிய எடுங்கடா! எல்லாரும் போங்கடா!” என்று தன் அடியாட்களிடம் கத்தினார்.

சத்தம் போடாமல், சண்டை இல்லாமல், ஊருணி வேலி உடைந்து கீழே விழுந்தது. செவத்தாள் ஆத்தாவும், ஊர் மக்களும் ஒத்த மனதுடன் பால்குடத்தைத் தூக்கி, வற்றிப்போன ஊருணிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

ஆனால், வேலி நீக்கப்பட்ட சில நாட்களில் ஒரு விசித்திரம் நடந்தது. மழை பெய்யாவிட்டாலும், ஊருணியில் இருந்த எஞ்சிய ஈரப்பதம் மிக வேகமாக வறண்டு, தரை பிளக்கத் தொடங்கியது.

முருகன் இதை உன்னிப்பாகக் கவனித்தான். ஊருணியின் நடுவே ஏற்பட்ட சில விரிசல்கள், நீர் இயற்கையாக ஆவியாவதை விட, கீழே ஏதோ ஒரு விசை இழுப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அன்று இரவு, ஊருணியின் தரைப்பகுதியில் காது வைத்துக் கேட்டான். பூமிக்கு அடியில் ஒரு மெல்லிய உறுமல் சத்தம். சீரான இரைச்சல்.

அவன் ஊருணிக்குத் தெற்கே பண்ணையார் தோட்டத்திற்குள் நடந்தான். அங்கே புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தகரக் கொட்டகையின் பின்னால், ராட்சத குழாய்கள் நிலத்திற்குள் பாய்ந்திருந்தன. பண்ணையார் போட்ட முள்வேலி ஒரு திசைதிருப்பல் மட்டுமே. சனம் வேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது, அவர் அடியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ஊருணியின் ஊற்றுக் கண்ணையே உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலை, பண்ணையார் வீட்டிற்கு முன் மக்கள் கூடினர். இம்முறை ஆத்தாவின் கையில் ஓலைச் சுவடியும், முருகனின் கையில் அவனது மடிக்கணினியும் இருந்தன.

முருகன் வரைபடங்களைக் காட்டி நிதானமாகப் பேசினான். “பண்ணையாரே, நீங்க எங்க கவனத்தை வேலியில் திருப்பிட்டு, அடியில் திருடிட்டிருக்கீங்க. இது நீர்த்திருட்டு. நான் இதோட ஜி.பி.எஸ் ஆதாரங்களையும், மோட்டார் ஓடுற வீடியோவையும் இப்போவே மாவட்ட ஆட்சியருக்கும், நிலத்தடி நீர் வாரியத்துக்கும் ஆன்லைன்ல புகாரா அனுப்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல அதிகாரிகள் இங்க வருவாங்க.”

பண்ணையாரின் முகம் வெளுத்தது. சட்டம் பேசத் தெரிந்த அவருக்கு, நவீன கல்வியின் வேகம் புரியவில்லை. அவருடைய அதிகாரத் தோரணை ஒரு நொடியில் சரிந்தது. “தம்பி… அதிகாரிகள வரச்சொல்லாத, நானே மோட்டாரை நிறுத்திடுறேன்,” என்று கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆழ்துளைக் கிணறு மூடப்பட்டது. ஊருணியின் ஊற்றுக் கண் மீண்டும் உயிர் பெற்றது.

அன்று மாலை ஆத்தா சொன்னாள், “வேலியைக் கையால பிடிச்சு ஆட்டுறவன் சத்தம் போடுவான் முருகா; ஆனா அந்த வேலியையே நட்டவன் அமைதியா இருப்பான். நாம வேலியையும் பாக்கணும், வேரோடப் போற தண்ணியையும் பாக்கணும். மானத்தை உயரமாப் பிடிக்கணும்னா, கையில ஞானம் இருக்கணும்லே முருகா. சத்தம் போடுறவங்க காலிப் பானை மாதிரிதான்.”

அறிவு எனும் வேர் ஆழமாக இருந்தால் மட்டுமே, நீதியின் மரம் நிலைத்து நிற்கும் என்பதை மாத்தாயிபுரம் அன்று உணர்ந்தது.

00

பிரியா பாஸ்கரன்

வணக்கம். எனது பெயர் “பத்மப்ரியா பாஸ்கரன்”. காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்தேன். கடந்த இருபத்தி ஐந்து வருடத்திற்கும் மேலாக மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணியிலிருக்கிறேன். கணவர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என அமெரிக்காவில் வசிக்கின்றேன்.

கடந்த ஆறு வருடங்களாகக் கவிதைகள் (மரபுக் கவிதை, புதுக் கவிதை, நவீனம், ஐக்கூ, சென்றியூ), சிறுகதைகள், கட்டுரைகள், நூல் அறிமுகம், ஆகியவற்றைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதிக்கொண்டு வருகிறேன். பல் வேறு இலக்கிய தளங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், சங்க இலக்கியம் மீதுள்ள ஆர்வத்தினால் குறுந்தொகை போன்ற இலக்கியங்களைக் கதை வடிவில் குழுவாக இணைந்து நிகழ்ச்சிகளை அளித்துள்ளேன். மிச்சிகன் தமிழ்ப் பள்ளியில் தன்னார்வ யோக இணை ஆசிரியராகப் பெற்றோர்களுக்கு யோகம் கூட்டுப் பயிற்சி அளித்துள்ளேன். தமிழ்ப் பள்ளியில் தமிழ்க் கற்றுத் தரும் ஆசிரியர் பணியிலும் ஈடுபடுகிறேன். சரகப் பாதுகாப்பு அதிகாரியாகவும், தற்காப்பு பயிற்சியில் தேர்வு பெற்றவராகவும் இருக்கிறேன்.

பிரியாவின் கிறுக்கல்கள் என்ற வலைப்பூவில் எனது எண்ணங்களைக் கவிதைகளாகப் பதிக்கிறேன். எனது படைப்புகள் இனிய உதயம், கணையாழி, குமுதம், ராணிமுத்து, சொல்வனம், நக்கீரன், பேசும் புதியச்சக்தி, கொலுசு, படைப்பு கல்வெட்டு, படைப்பு தகவு, கதம்பம், தமிழ்ச்சாரல், வளரி, வல்லினச் சிறகுகள், தமிழ் டாக்ஸ், கொக்கரக்கோ, தாரகை, ஆக்கம், ஆனந்தசந்திரிகை, புக் டே இணையதளம், காணிநிலம், புன்னகை  போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. 

மரபுக் கவிதைகளின் மேலுள்ள ஈடுபாட்டால் வெண்பா பயிற்சிப் பட்டறை நடத்துகிறேன். எனது  கவிதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை தமிழில் நான்கு கவிதைத் தொகுப்புகள், “நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு” மற்றும் “யாம நுகர் யட்சி” தொகுப்புகள் வெளி வந்துள்ளன.  “சிறு வீ ஞாழல்” என்ற குறுந்தொகைப் பாடல்கள் கதை வடிவிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, “The Horizon Of Proximity” என்ற தொகுப்பும், “Ubiquity” என்ற ஆங்கில கவிதைத் தொகுப்பும் வெளி வந்துள்ளன.

இவை பொள்ளாச்சி இலக்கிய வட்டம், டிஸ்கவரி புக் பேலஸ், அம்போருகா பதிப்பகத்தின் மூலம் வெளி வந்துள்ளன.

வட அமெரிக்க, இந்திய கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து “பால்யத்தின் சாவி” என்ற தொகுப்பு நூல் வட அமெரிக்கத் தமிழ் ஆர்வலர்கள் மூலம் மிச்சிகன் மாகாணத்திலும், மகாகவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகள் குறித்தான கட்டுரை ஆய்வு நூல் “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” என்ற தொகுப்பு நூல் ஒரு துளிக்கவிதை பதிப்பகத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் FeTNA நிகழ்விலும் வெளியிடப்பட்டுள்ளன.

சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தமிழ் களத்தின் தங்கமங்கை விருதும், திருப்பூர் சக்தி இலக்கிய விருதும் பெற்றுள்ளேன்.

“காற்றின் மீதொரு நடனம்” மற்றும் “நினைவில் துடிக்கும் இதயம்” கவிதைத் தொகுப்புகளுக்கு, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தஞ்சை பிரகாஷ் நினைவு விருதும், வல்லினச் சிறகுகளின் மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை 80 விருதும், “காற்றின் மீதொரு நடனம்” தொகுப்பிற்கு இலங்கை மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டு காலண்டிதழின் பிரமிள் விருதும் பெற்றிருக்கிறேன். “சலனமின்றி மிதக்கும் இறகு” நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் தேசிய விநாயகம் விருது கதை பித்தன் வெளிநாடு வாழ்படைப்பாளருக்கான சிறப்பு விருதும் பெற்றுள்ளேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *