நீர்வழிப் படூஉம் புணை போல, மனிதர்கள் இடையேயான பேரன்பை வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
காரு மாமாவின் தங்கை மகன் வழியாக கதை சொல்லப்படுகிறது.
காரு மாமாவின் கதை வழியாக, குடி நாவிதர்களின் வாழ்வு வெளிப்படுகிறது. உணவுப் பழக்கம், பண்டிகைகள், சடங்குகள் என பண்பாட்டுக் கூறுகள் சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடையார்பாளையத்தின் சிதிலமடைந்த தெருக்களின் வழியாக ஒரு பெரு வாழ்வு வழிந்தோடுகிறது.
அவர்களின் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. அவர்கள் பல தொழில்கள் தெரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
ஆண்கள் முடி வெட்ட, பெண்கள் பிரசவம் பார்க்கிறார்கள்.
அவர்கள் மிகவும் மரியாதையாக நடத்தப்பட்டது தெரிகிறது.
பண்ணையக்காரர்களுக்கு, வாழ்வின் முக்கியமான தருணங்களில், குடிநாவிதர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பண்டிகைகள், காது குத்துதல், பெண் மற்றும் மாப்பிள்ளை பார்த்தல், திருமணம் நடத்தி வைத்தல், வேட்டைக்குத் துணையாக செல்வது, பெண்கள் பிரசவம் பார்த்தல் என எல்லா நிகழ்வுகளையும் நடத்தி வைத்திருக்கிறார்கள்.
பண்டிகைகள், சடங்குகள் அனைத்தையும் விவரிக்கிறது நாவல். காரு மாமாவின் சாவின் ஊடாக, சாவு வீட்டின் அத்தனை சடங்குகளும் விவரிக்கப்படுகிறது. சிலருக்குச் சாராயம், சிலருக்கு நல்ல சாப்பாடு என சாவு வீட்டிலும் மனிதர்களுக்குத் தேவை இருக்கத்தான் செய்கிறது.
கெடா வெட்டின் போது நடப்பவை அனைத்தும் நம்மையும் உள்ளிழுக்கிறது. உப்புக் கண்டம் போடுவது, கறியைப் பதப்படுத்தி மாட்டி வைப்பது இன்றைய தலைமுறையினருக்குப் புதிய செய்திகள்.
வட்டார வழக்கு அழகாக வெளிப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் புரிதலில் சிரமமில்லை. பெண்கள் உபயோகிக்கும் கெட்ட வார்த்தைகள் சரளமாக எழுதப்பட்டுள்ளது. பெண்களின் உளவியல் மிகத் துல்லியமாக வெளிப்பட்டிருக்கிறது.
எம்ஜிஆர், சிவாஜி என்னும் இரண்டு மாபெரும் நடிகர்களை விரும்பியவர்களாக இருக்கிறார்கள். காரு மாமாவின் தங்கை, கதை சொல்லியின் அம்மா, பாசமலர் படம் பார்த்த பிறகு, தன்னையும் தன் அண்ணனையும், சிவாஜி சாவித்திரி ஆகவே பார்க்கிறார். இதனூடே அக்கால கட்டத்தின் ரசிகர்களின் மனநிலை விவரிக்கப்படுகிறது.
தாயம் விளையாட்டு மிகவும் விரும்பிய ஒன்றாக இருந்திருக்கிறது. மனதுக்குப் பிடித்தவர்களுடன் ஜோடி சேர்ந்து விளையாடுகிறார்கள்.
படிக்கையில் எனது பால்யம் ஞாபகத்துக்கு வந்தது. பெரும்பாலும் அப்பாவின் எழுது பலகையின் பின்புறமே எங்கள் விளையாட்டுக்கு உபயோகப்பட்டது. சாக்பீஸால் கோடு போட்டு விளையாடினோம். இரும்பாலான தாயக்கட்டைகளை உபயோகித்தோம்.
பல சமயங்களில், அச்சடிக்கப்பட்ட பாம்பும் ஏணியும் தாளில், தாயம் உருட்டி விளையாடுவோம்.
ராசம்மா அத்தை அவ்வளவு எளிதாக மன்னிக்கப்படுகிறாள். மீண்டும் ஏற்றுக் கொள்ளப் படுகிறாள். அவளின் துயரங்கள் நம்மை நடுங்கச் செய்கிறது.
காரு மாமாவின் மனப்பிறழ்வுக்குப் பின்னர், முடி வெட்ட அழைத்துச் செல்லப்படுகிறார். அவரின் தலையிலிருந்த பொடுகுகளைப் பார்த்தபின், முடி வெட்ட மறுக்கப்படுகிறது. உடனே, தனது கைகளைக் காட்டி, இந்தக் கைகள் எத்தனை பேருக்கு முடி வெட்டியிருக்கும் என எழுந்து வெளியே வந்து விடுகிறார். மிகச் சிறந்த இடம்.
அதே போல, காரு மாமாவின் இறப்புக்குப் பின், அவர் தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்தக் கொலுசுகளை, பெரியம்மா , அத்தையிடம் கொடுக்குமிடம். கண்களில் நீர் வழிந்தது. தொடர்ந்து படிக்க இயலவில்லை.
காரு மாமாவின் வலிப்பு நோய் ஒரு கதாபாத்திரம் போல கதை நெடுக வருகிறது. யாராவது ஒருவர் அவரது கையில் ஒரு சாவியையோ அல்லது ஏதேனும் ஒரு இரும்பையோ கொடுத்து விடுகிறார்கள்.
டிரான்சிஸ்டர் பேட்டரிகளுக்காக காரு மாமா அலைவது அவஸ்தை என்றால், அந்த காலப் பாடல்கள் இனிமை.
காருமாமாவை விட்டு, இரண்டு குழந்தைகளுக்குப் பின்னர், ராசம்மா அத்தை ஏன் ஓடிப்போனாள் என்பது விவரிக்கப்படவேயில்லை.
காருமாமாவைப் புனிதப்படுத்தவோ, என்னவோ, செட்டியோடு ஓடிப்போன அத்தை என ஒரு பத்து தடவையாவது குறிப்பிடுகிறார்.
பத்திகள் மிகவும் நீளம். சில பத்திகள் முக்கால் பக்கத்திற்கு நீண்டுப் பின் முடிகின்றன.
முக்கியமான முடிவுகளைப் பெண்கள் தாயகரம் வழியாக எடுக்கிறார்கள். கடைசியில் ராசம்மா அத்தைக்கு அவள் கேட்டது விழுந்ததா என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர்.
படித்து முடித்ததும் ஒரு காவிய சோகம் மனதில் கவிழ்கிறது.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
ஆசிரியர்: தேவிபாரதி
பதிப்பகம்: தன்னறம்
—
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.