நுண்கதை – 01
௦
அவன் சொற்களை நேசித்தான். கற்றான். போதாமையில் மேலும் மேலும் மேலும் என கற்றான். உலகிலுள்ள எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்ந்தான். புகழும் பெருமிதமும் சூழ்ந்த அதேவேளை வெறுமையும் அவனைச் சூழ்ந்தது. எங்கு சென்றாலும் மக்கள் அவனை விநோதமாகப் பார்த்தனர். சலிப்படைந்தவன் நாளைடைவில் எல்லாவற்றிற்கும் எரிச்சல் அடைந்தான். எங்கெங்கோச் சுற்றியவன் வழி தவிர்த்து அடர் கானகத்துள் நடந்துக் களைத்தான். செவ்வெறும்பூறும் மரத்துள் சாய்ந்தபோது வண்டின் மொழி கேட்டான். காதுகள் விடைத்துத் துள்ளி எழுந்தவன் மூங்கிலின் துளைக்குள் நுழைந்து வெளியேறும் ஓசையில் இலயித்து அங்கேயே நின்றான். வண்டு மறைந்தது. மென்காற்று மூங்கிலடைந்து இசையானது. அன்று முதல் தான்விரும்பிக் கற்ற மொழிகளை மறந்தவன் வண்டையும் காற்றையும் கற்றான். புல்லாங்குழலானான்.
0
நுண்கதை – 02
௦
உனக்கும் எனக்கும் இடையில் என்ன இருக்கிறது என்கிறாய். ம்ம்ம் எதுவுமில்லை என்கிறேன். அருகில் இருக்கும் புதர்மண்டிய மொட்டைத் தென்னைகள் நிரம்பிய தோப்பில் மயில்கள் அகவுகின்றன. எதுவுமில்லை என்றால் எல்லாமும் இருக்கிறதல்லவா என்கிறேன். இருக்கலாம் என்கிறாய். இப்போது நான் என்ன செய்ய என்கிறேன். எதுவும் செய்ய வேண்டாம் என்றவாறு விரல்களைப் பற்றி இதமாய் அழுத்திக்கொடுக்கிறாய். உன் இடது புருவத்திலிருந்து கசிந்தோடும் வியர்வையின் நெளிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இருப்பதும் இல்லாததுமான ஒன்று இருவர் மீதும் அப்பிக்கிடக்கிறது.
0
நுண்கதை – 03
௦
நண்பா, ஒரு கண்ணை மூடிக்கொண்டும் மற்றொரு கண்ணைத் திறந்துக்கொண்டும் உறங்க இயலுமா? என்கிறேன். இரண்டு கண்களையும் திறந்துவைத்துக்கொண்டே உறங்க இயலுமே என்கிறான். இல்லை இல்லை நான் கேட்க வருவது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரண்டில் ஒரு கண்ணை மூடி உறங்கவும் மறு கண்ணைத்திறந்தபடி உறங்காதிருக்கவும் முடியுமா? என்கிறேன். இவ்வாறான வினாக்களை எழுப்பித்தானே உன்னை நீ அறிவாளியாகக் காட்டிக்கொள்கிறாய்! என்கிறான். அனிச்சையாய் அவனை உற்றுப் பார்த்துவிட்டு அமைதியாகிறேன். அவன் தன் கண்களை ஒவ்வொன்றாக மூடிமூடி திறந்தபடி இருக்கிறான்.
0
நுண்கதை – 04
௦
அவையோர் சற்று இலகுவாகி ஒருவருடன் ஒருவர் உரையாடத் துவங்கியபோது ஓளவை அதியனின் கையைப் பற்றினாள்; கிடைத்தற்கு அரியதாய் கிடைக்கப்பெற்ற நெல்லிக்கனி அவன் உள்ளங்கையில் இருந்தது. இதை நீ உண்ண வேண்டாம், என்றாள். அவனது புருவங்கள் சுருங்கிட, ஆம் தோழா, அதோ மலை நாடனென சொல்லும் அவனிடம் ஏதோவோர் கபடம் ஒளிந்துள்ளதாய் தோன்றுகிறது. ஆகவே உண்ணாதே என்றாள். அவன் குரலைத் தாழ்த்தி சபையில் வைத்துப் பெறப்பட்டது, உண்ணாவிடில் என்றிழுக்க, அதனாலென்ன அதியா ‘இந்தக் கிழவிக்கு அளித்திடு’ என்றாள்.
௦
இரண்டு நாட்களின் பின் அந்நெல்லிக்கனி புதைக்கப்பட்ட இடத்தினை சுற்றி வளர்ந்திருந்த மலர்செடிகள் பட்டுப்போயிருந்தன.
0
நுண்கதை – 05
௦
உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நீங்கள் நினைப்பதுபோல் அவனொன்றும் அப்பாவியில்லை என்றவள் அவனது தீச்சொற்கள் தாங்கிவரும் நாவினையும் அதன் பயனாய் வீங்கிக்கிடக்கும் தன் நெஞ்சகத்தையும் இவர்களுக்கு எப்படிச்சொல்லி புரியவைக்க என எண்ணி திகைத்துக்கொண்டிருந்தாள். அவனது நிதானத்தையும் அறிவையும் உணர்ந்தவர்களான அவர்கள் அவளது பேச்சினை துளியும் நம்பாது ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு விருந்துண்டு புறப்பட்டனர். அவள் கண்களில் வழியும் கண்ணீரை இருளின் தனிமை தலையணை வழி குடித்துக்கொண்டிருக்க மறுபொழுதைக் கடக்கும் திராணியைத்தேடி அவளையறியாது அவனது குறட்டைச் சப்தத்தின் மத்தியில் உறங்கியிருந்தாள்.
0
நுண்கதை – 06
௦
நீதி கேட்டு மன்றாடிய கண்ணகியின் சிலம்பற்ற கால்கள் மாளிகையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அவளது கண்முன்னே சரிந்த மன்னனின் உடலும் அதனடுத்து சரிந்த அரசியின் உடலும் மனக்கண்ணுள் உதிரம்தோயக்கிடந்த கணவன் உடலும் மேலும் அவளை மூர்க்கம் கொள்ளச் செய்திருக்க, தன் இடப் புறங்கையால் செவ்வரி படர்ந்து கலங்கிக்கிடந்த கண்களை துடைத்தவள் காற்றில் பறந்திடும் முந்தானையை மறந்திருந்திருந்தாள். கூடத்தில் ஏற்றப்பட்டிருந்த பந்தத்தில் முந்தி பட்டதும் தீப்பற்றியது அறியாது நடந்தவளால் திரைச்சீலைகள் பற்ற பின் ஒன்றொடுவொன்றென மாளிகையும் அடுத்திருந்த வீதிகளும் எரியத்துவங்கின.
0
நுண்கதை – 07
௦
முதல் நாள்
வணக்கம் என்கிறேன் வணக்கம் என்கிறாய்
இரண்டாம் நாள்
வணக்கம் என்கிறேன் வணக்கம் என்கிறாய்
மூன்றாம் நாள்
வணக்கம் என்கிறேன் வணக்கம் என்கிறாய்
நான்காம் நாள்
வணக்கம் என்கிறேன் வணக்கம் என்கிறாய்
மாதமாகிறது
வணக்கம் என்கிறேன் வணக்கம் என்கிறாய்
௦
ஒன்றுயிரண்டுமூன்றுநான்கைந்தாறென
ஆகி ஏழாம் மாதத்தின் கடைசியில் ஓர்நாள்
வணக்கம் சொல்லயிலாது போகிறேன்
அமைதிகாக்கிறாய்.
அட! என்றவாறு மீண்டும் துவங்கி பிறிதொரு நாளில் நானாகவே சொல்லாதிருக்கிறேன்.
அன்றும் நீ அமைதிகாக்கிறாய். அடுத்தடுத்த நாட்களும் அவ்வாறேக் கழிகின்றன.
௦
பிறகொரு இரவில் வாசலோரம் நின்று ‘அதனாலென்ன – அவளுக்கென்ன இடரோ’ என்று முணுமுணுக்கிறேன்.
காலடியில் கிடந்தச் செருப்புகள்
கட்டை விளக்குமாரைத் தூக்கி
என் வாயில் சொருகுகின்றன.
0
நுண்கதை – 08
௦
ஒரு டம்ளரைக் கீழே எறிகிறாய். ஒலி உண்டாகிறது. அதனைச் சப்தம் என்கிறாய். அதனை ஓலம் என்கிறேன். அதற்கு உயிர் இல்லை என்கிறாய். உள்ளதால்தான் சப்தமிடுகிறது என்கிறேன். வாக்குவாதம் முற்றுகிறது. நீர்க்கேட்கிறேன். நிறைந்துள்ளதால் சொம்பிலிருந்து டம்ளருக்கு மாற்றித் தருகிறாய். சொம்பிலிருந்து டம்ளருக்கும் டம்ளரிலிருந்து சொம்பிற்கும் தண்ணீரை மாற்றுகையில் ஒலி வேறுபடுகிறது. நீ அதுபற்றி யோசிக்கத் துவங்குகிறாய். நான் தற்காலிகமாக பெருமூச்சொன்றை விடுவிக்கிறேன்.
0
நுண்கதை – 09
௦
அப்போது அவர்கள் சந்தித்துக்கொண்டனர். என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை. எதையும் காட்டிக்கொள்ளாமல் அவரவர் உடனிருந்தவர்களுடன் தங்கள்வழி திரும்பினர். இரவு. இல்லத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டபோது கண்ணீருடன் முத்தமிட்டுக்கொண்டனர். முத்தச் சப்தத்தில் திடுக்கிட்ட குழந்தைகள் தங்கள் விளையாட்டை நிறுத்தி தாய்தந்தையரை எண்ணி வெட்கச்சிரிப்புடன் அவ்விடம்விட்டு அகன்றனர்.
0
நுண்கதை – 10
௦
நம் உடலில் இருந்து ஒரு மயிர் கழன்று விழுவதைப்போல் அது நிகழ்ந்திருந்து.
அப்போது அவள் சப்பாத்தி தயாரிக்க தண்ணீர்விட்டு மாவைப் பிசைந்துக்கொண்டிருந்தாள்;
அவன் தன் மெல்லிய கரங்களில் தண்ணீர் டம்ளரை ஏந்தி குடித்துக்கொண்டிருந்தான்;
மூத்தவன் ஏதோவோர் தோழரோடு பேசியிருக்க
இளையவள் சோபாவில் குப்புறப்படுத்து கால்களை ஆட்டியவாறு டிவியில் சேனல்களை மாற்றியபடியிருந்தாள்;
அப்போது
‘தட்’ என்ற ஒலியுடன் அந்த உடல் தரையில் சாய்ந்தது.
ஆம்.
நம் உடலில் இருந்து ஒரு மயிர் கழன்று விழுவதைப்போல் அது நிகழ்ந்திருந்தது.
0
நுண்கதை – 11
௦
கதை, கவிதை, காதல், முத்தம், முலை, பூ, தென்றல், தெம்மாங்கு என்றெல்லாம் பேசுவதால் அல்லது எழுதுவதால் ‘ஜாலியானவன்’ அல்லது ‘இவ்வுலக வாழ்வில் அதிக இன்பம் துய்ப்பவன்’ என்கின்றனர்.
உண்மையாகவும் இருக்கலாம்.
நம் ஊரில் –
‘தின்று கொழுத்தவனுக்கு மட்டுமல்ல தின்ன ஒன்றுமில்லாதவனுக்கும் வயிறு உண்டு’.
0
நுண்கதை – 12
௦
ஐவரும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றாள் தாய். அவளோடு அவளின் செல்லப்பிராணிகளான கரடிக்குட்டியும் பச்சைப்பாம்பும் கருந்தேளும் அவ்வாறேப் பகிரப்பட்டன. மாலையில் கள் அருந்தியபின் முதலாமவன் தன் முதுகில் தொற்றிக் கொண்டிருக்கும் கரடிக்குட்டியையும் இரண்டாமவன் தன் தோளில் ஊர்ந்தபடியிருக்கும் கருந்தேளையும் மூன்றாமவன் தன் மூக்கில் நுழைய முயலும் பச்சைப்பாம்பையும் சமாளித்தபடியிருக்க நான்காமவனும் ஐந்தாமவனும் தங்களில் உடலில் இருந்தக் காயங்களைத் தடவியபடி தங்கள் தாயாரை தேனினும் இனிய தீஞ்சொற்களால் அன்பு செய்து கொண்டிருந்தனர்.
0
நுண்கதை – 13
௦
ஆய்வாளர்கள் கருந்துளை ஒன்று பூமியை நெருங்கிக் கொண்டுள்ளது என்றனர். எளியோன் முதல் வலியோன் வரை சவக்களையுடன் அந்த ஒற்றைக் கணத்திற்காக காத்திருந்தனர். சுழன்றடித்தக் காற்றில் மாம்பிஞ்சுகள் உதிர்ந்தன. அணில்கள் ஒன்றையொன்று துரத்திக் காதல் செய்தன. குரல் கேட்டதும் உறங்கியபடியிருந்த நாயின் வால் தரையில் மோதி அடங்கியது.
0
நுண்கதை – 14
௦
வடகிழக்கு பருவ மழையால் காவிரியில் நீர் நிறைந்தோடியது. நீண்ட பாலத்தின் மத்தியில் நின்று துணிக்கடையில் பெற்ற கட்டைப்பையில் தூக்கி வந்திருந்த வெண்மையில் செம்மைக் கலந்த குட்டிப்பூனையை முதலில் எறிந்தான். சுழலில் மறைந்தது. இரண்டாவதாக செம்மைக்கு மாற்றாக கருமை படர்ந்திருந்த குட்டியை எறிந்தான். பெரும் நீர்பரப்பென அறியும் முன்னரே விழுந்து மறைந்தது. மூன்றாவதாகவும் நான்காவதாகவும் சாம்பலும் கருமையும் கலந்தக் குட்டிகளை அடுத்தடுத்து எறிந்தான். அவன் கைகளில் அவை கீறிவிட்டிருந்தன. ஐந்தாவதாக அவன் மனைவியின் கையிலமர்ந்து அதனை வேடிக்கைப் பார்த்தபடியிருந்த தன் பிள்ளையை எறிந்தான். இம்முறை நீர் சற்றே உயர்ந்தடங்கியது. நடப்பது புரிந்து அவன் மனைவி அவனை உலுக்கும்போது அவளையும் தள்ளிவிட்டான். விழுந்தவள் கைகால்களை உதறி நீரோடு புறண்டாள். சுற்றம் விக்கித்திருந்தது. அவனுக்குச் சாகும்வரை தூக்கென மன்றம் நீதியை நாட்டியது.
0
நுண்கதை – 15
௦
புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். மன்னர் வந்தார். நிறைந்திருந்தக் கூட்டம் கைதட்டியது. குறையேதும் இருப்பின் என்றார். எழுந்த மண்ணாங்கட்டி ‘ஒரேயொரு முறை என்னோடு வந்து மூத்திரம் பெய்ய வேண்டும்’ என்றான். எதிர்க்குரல்களை அமர்த்திய மன்னர் நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்தக் கழிவறை சென்றார். இருபதடி இருக்கும்போதே நாசி கூசியது. இன்னும் நெருங்குகையில் அதனைச்சுற்றி தேங்கிக் கிடந்த அற்புதங்கள் குமட்டலைத் தந்தன. அதனுள்ளே அமர்ந்து கக்கா போக அமைக்கப்பட்டிருந்த பளிங்கில் ஒட்டிக் காய்ந்திருந்த பீ கரிய நிறத்தில் மன்னரை வரவேற்றது. உவ்வே உவ்வே என வாந்தி எடுத்த மன்னர் கலங்கிச் சிவந்த கண்களுடன் மண்ணாங்கட்டியை ‘ங்கோத்தா’ என வாய்விட்டு வைது அவ்விடம்விட்டு அகன்றார். அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரின் ஆட்சியில் ‘அவ்வாறு’ நடைபெறாமல் பார்த்துக்கொண்டார். இங்கு, ‘அவ்வாறு என்பதற்கு புத்தகக் காட்சி’ என்று பொருள்.
0
நுண்கதை – 16
௦
மின்னல், வேர், நதி, நரம்பு இவைகளின் வடிவம் பற்றி என்ன நினைக்கிறாய் என்றான். மானுடர்க்கு எப்படி நரம்போ அதுபோல் வானுக்கு மின்னல் பூமிக்கு நதி மரத்திற்கு வேர் என்றாள். ஆமோதித்தவன் எதைப்பார்த்து எது தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்றான். புன்னகைத்தாள். அவனும் அவளும் அதனைப் போன்றவைகளைக் குறிப்பெடுத்து ஆராயத்துவங்கினர்.
0
நுண்கதை – 17
௦
ஒருவரையொருவர் மதுக்கடையில் சந்தித்துக் கொண்டனர். நலம் விசாரித்தனர். ஊறுகாய் வறுவல் கடலைப்பருப்பு சகிதம் குடித்தனர். கடையே அதிரும் வண்ணம் சிரித்து அழுது ஆட்டமாடி எச்சில் ஒழுக விடைபெற்ற ஒருவரை ஏனையோர் சாத்தான் என்றனர்.
0
நுண்கதை – 18
௦
வேதாளம் பலா மரத்தில் ஏறியது. அகன்ற அதன் இலை மீது ஆரஞ்சு வண்ண முசுறுகள் ஓடிக்கொண்டிருந்தன. நான்காவது கிளையின் மேலேறி மூச்சு வாங்கிய வேதாளம் வலது புறம் சிறுகோட்டில் ஊசலாடிய பலாவின் நடுப்பகுதியில் சுண்டிப் பார்த்தது. கணீர் கணீர் என்ற சப்தம் எழ கீழ் நின்ற மாதித்தியன் சிரித்தான். இன்னும் சற்று மேலேறி அதைவிடப் பருத்திருந்த பழத்தைச் சுண்டியதும் பொத்பொத் என்று சப்தம் வந்தது. தன் மீசையை முறுக்கியவாறு தன் ஒற்றைக்கையால் பழத்தின் அடியில் பிடித்து மேலேத்தள்ளி காம்புடைத்தது. பழத்தின் எடையும் கிளையும் வேதாளத்தை தடுமாறச் செய்ய பழம் விழுந்துச் சிதறியது. தற்போது மாதித்தியன் சிரிப்பில் அவ்வனமே அதிர்ந்தது. தன் கையில் பிசுபிசுக்கும் பாலுடன் முகம் தொங்க இறங்கிய வேதாளம் அடுத்த மரத்தை அன்னாந்துப் பார்த்தது. மாதித்தியன் சிதறிய கனியிலிருந்து சுளையொன்றை எடுத்து ருசித்துக்கொண்டிருந்தான்.
0
நுண்கதை – 19
௦
பிதாவே,
பரமண்டலங்களை ஆள்பவரே, மீண்டும் ஒரு முறை உம் மகவை அனுப்பித் தாரும் என்கிறேன். நானே வருகிறேன் என்கிறான். ஆகா! வாரும் வாரும் என்கிறேன். இதோ அவண் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் காத்திருக்கிறேன். மிகுந்த எச்சரிக்கையுடன் எல்லாப் பக்கங்களிலும் தன் விழிகளைச் சுழல விட்டவாறு பச்சோந்தியொன்று அருகே வருகிறது. கல்லொன்றை எடுத்து அதன் தலையில் எறிகிறேன். வெகு வேகமாய் என் தலையில் ஏதோ மோதிட மயங்கிச் சரிகிறேன்.
வந்தியானவள் பொக்கைவாயால் சிரிக்கிறாள்.
0
நுண்கதை – 20
௦
கவிதை கேட்கிறாய். சொல்கிறேன். அதில் நீ இல்லை என்கிறாய். அதனாலென்ன என்கிறேன். நான் மட்டுமேயுள்ள ஒரு கவிதை வேண்டுமென்கிறாய். எனக்கும் ஆசைதான் ஆனால் எதுவும் தோன்றவில்லையே என்கிறேன்.
உண்மைதான்; என்னைப் பார்த்தால் எதுவும் தோன்றாதென்கிறாய். அட! அப்படியில்லை என்கிறேன். வேறெப்படி என்கிறாய். உன்னோடு தர்க்கம் செய்ய நேரமில்லை என்கிறேன். கண்ணீர் வழிய புறப்படுகிறாய். சற்று நேரம் புருவங்களைத் தேய்த்தபடி நீ செல்லும் திசையை வெறித்துப் பார்க்கிறேன். பிறகு, கவிதையும் காதலும் சோற்றுக்காகாதென நகர்கிறேன். மேல் வானத்தில் இருள் சூழ நிலா தெளிகிறது.
0
நுண்கதை – 21
௦
முட்டாள் என்கிறாய்
சரி என்கிறேன்
பைத்தியம் என்கிறாய்
ஆம் என்கிறேன்
கோழை என்கிறாய்
சிரிக்கிறேன்
ஜடம் என்கிறாய்
இருக்கலாம் என்கிறேன்
உனக்கு பதில் ஒரு ஊதாங்குழலை
நேசித்திருக்கலாம் என்கிறாய்
மறுநாள் ஊதாங்குழலுடன் வருகிறேன்.
எல்லாம் முடிந்துவிட்டது.
உனக்கெனவும் எனக்கெனவும் வரம்பெற்று வந்த எவரோ ஒருவர் கிடைத்துவிட்டார்;
நாம் வாழப்பழகிக் கொண்டோம்.
0
நுண்கதை – 22
௦
ஒருமுறை சிங்கம் ஒன்று நாட்டிற்குள் வந்தது. முதலில் சிங்கத்தைக் கண்டு பயந்தவர்கள் பின்னர் அது தன்போக்கில் பித்துகண்டு சுற்றித்திரியும் கபட வேடதாரியிது என்றெண்ணி அவரவர் வேலையைத் தொடர எல்லா இடங்களிலும் இரைகள் சூழ்ந்திருப்பதால் அலட்சியத்துடன் நடந்தபடியிருந்தது சிங்கம். சற்று நேரத்தில் தன்மீது கல்லெறியும் சிறுவர்களில் கொழுகொழுத்த ஒருவன்மீது பாய்ந்து கீழே தள்ளி குரல்வளையை கவ்வியவாறு சாலையின் ஒதுக்குப்புறத்தில் அமர்ந்து ருசிக்கத்துவங்கியது. உண்ணப்படும்போது அக்குழந்தையின் உயிர்த் துடிப்பினை நண்பர்கள் கண்டு நடுங்க மக்கள் இப்போது ஓடிக்கொண்டிருந்தனர். உடலின் கூறுகள் அங்காங்கே தம்மீது ஒட்டிக்கிடக்க சிங்கம் நாவால் தன் உடலை நக்கிச் சுத்தம் செய்துகொண்டிருந்தது.
0
நுண்கதை – 23
௦
இன்று காலை ‘மகள் குசு விட்டாள். ஊரே நாறியது’ என்ற தகவலை முகநூலில் நண்பர் பகிர்ந்திருந்தார். அதற்கு அவரின் நண்பர்களும் நண்பர்களின் நண்பர்களும் நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களும் ‘வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகளெனச் சொல்லி ஊக்கப்படுத்தியும் ஆசிர்வதித்ததும்’ இருந்தனர். நண்பர் மீண்டும் இவ்வாறு பகிர்ந்திருந்தார் ‘நன்றி அன்பர்களே உங்கள் வாழ்த்து நாளை அவள் குசுவை மென்மேலும் மெருகேற்றுமென்று’.
0
நுண்கதை – 24
௦
பாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும் வண்ணக் கலவைகளைக் குறித்து அவள் ஆர்வம் கொண்டிருந்தாள். தேடினாள். கிடைத்த எல்லாவற்றையும் வாசித்தாள். கற்கண்டானின் ‘வட்டிகைச் செய்தி’ நூலில் 87 ஆம் பக்கத்தில் இரண்டே வரிகளில் இருந்த செய்தியைப் படித்தவள் உறைந்து போனாள். அதன் பிறகு தான் சேகரிப்பில் இருந்த அத்தனை படங்களையும் எடுத்து உற்றுப் பார்த்தாள். வண்ணங்கள் சிதையாமல் முழுமையாக காட்சியளித்த எல்லா ஓவியங்களிலும் அவர் சொன்ன அடையாளம் அக்குறிப்பிட்ட இடத்தில் இருந்தது. பிறந்த குழந்தையை தொட்டுப் பார்ப்பதைப்போல புகைப்படங்களை தொட்டுத்தடவினாள். அவள் கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீர் படங்களாயிருந்த பாறை சிற்பங்களின் மீது பட்டுத்தெறித்து வழிந்தோடியது.
0
நுண்கதை – 25
௦
மரணம் ஒரு கொய்யா கனியைப்போல் உயிரோரம் கனிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது; உடல் எல்லாவற்றையும் உணர்ந்து மென்னகை பூக்கிறது. நினைவுகள் பறவையாகி தம் நுனி அலகால் அக்கனியைக் கொத்திட அந்தரத்தில் ஊசலாடிய அக்கனி உதிர்ந்துவிழுகிறது. இயற்கை எல்லாவற்றையும் சுபமாய் முடித்துவைக்கிறது.
0
நுண்கதை – 26
௦
இருள்
ஒப்பனைகளற்றது.
புனிதங்களென்னும் கற்பிதங்களில் இருந்து
தன்னை விடுவித்துக்கொண்டது.
மேலும்
நிரந்தரமானது.
0
நுண்கதை – 27
௦
ஒருமுறை பிரபல தத்துவவியலாளர் திரு. கொத்தவரங்காய் (எ) முகில்விழியன் தனது மாணவர்களுடன் சுற்றுலா சென்றார். பயணக்களைப்பாறி இரவு உணவு முடிந்தவுடன் சற்று ஆசுவாசத்துடன் நட்சத்திரங்களுக்கு கீழே கோரைப்பாயில் அமர்ந்து வேம்பின் காற்றை அனுபவித்தபடி இருந்தபோது வெளிரிய வெண்ணிற லெகின்ஸ்சுடன் கருப்பில் நான்கு இதழ்களைக் கொண்ட மலர்கள் சிதறிகிடக்கும்படியான வெண்மை கலந்த உடையில் அமர்ந்திருந்த சாரல் ‘உங்கள் வாழ்வின் நோக்கம் என்ன?’ என்றாள். அவளைப்போன்றே அந்தக் குழுவும் அவரை எதிர்பார்ப்புடன் பார்க்க, அனைவரையும் பொதுவில் பார்த்தவர் ‘வெறுமனே’ புன்னகைத்தவாறு தன் அருகில் வந்து மடியில் ஏறிய பூனைக்குட்டியின் மீசையை வருடியவாறு அதனை கொஞ்சத்துவங்கினார். இப்போது, ஏனையோரின் பார்வையும் சந்தித்து விலக, சாரல் மேலும் தீர்க்கத்துடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
0
நுண்கதை – 28
௦
நேசிப்பைக் கேட்க்கும் ஒருவர்க்குத்
தயங்காமல் செருப்பை நீட்டலாம்
அல்லது
துளி விசத்தை அருந்தத் தரலாம்.
௦
அதுகண்டு
அவர்கள் பயந்து ஓடலாம்
அல்லது
சிரித்துக் கடக்கலாம்;
மாறாக
செருப்பை முத்தமிட்டுவிட்டால்!
அல்லது
விசத்தை அருந்திவிட்டால்!
௦
இதுபோன்றவர்களிடம்
நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால்
உண்மையாக நேசிப்பவர்கள் எதற்கும் தயங்காதவர்கள்;
சட்டென விட்டுவிட்டு மறைந்தும் போய்விடுவர்.
0
நுண்கதை – 29
௦
ஒரு துக்க நேரத்தில் மரணம் வாயில் வெற்றிலை சீவலுடன் மிக எளிய தோற்றத்தில் படுத்திருந்தது. உனை எப்போதும் ஓலங்களின் மத்தியில்தான் காண இயல்கிறது என்கிறேன். தன் முன்பற்கள் தெரிய சிரித்த மரணம் அப்படியா என்றதுடன் ஓலங்களுக்கு மத்தியில்தான் என்னால் உன்னை காண இயலுகிறது என்கிறது. சற்றேத் தயக்கத்துடன் புரியவில்லையே என்கிறேன். அதாவது ஓலங்களுக்கும் கூக்குரலுக்கும் மத்தியில் மட்டும்தான் நீ எனை காண வருகிறாய் என்றதுடன் சற்று தூரத்தே கை நீட்டி நாளை இதே நேரம் அங்கு வா என்கிறது. செல்கிறேன். ஒரு கொய்யாக்கனியை நீலமும் மஞ்சளும் கலந்த இறகினை உடைய சிறிய பறவைகள் சிரித்தபடி உண்டிருக்க உணவிடலின் இன்பத்தில் சொக்கியபடி அக்கனியின்மீது ஆசுவாசத்துடன் படுத்திருக்கிறது மரணம். ஓலங்களுள் மட்டுமே மரணத்தை தேடிய பேதமையை நொந்தவாறு அங்கிருந்து மௌனமாக நகர்கிறேன்.
௦
புரியவில்லை அப்பா என்கிறாள் பெதும்பை. பாதகமில்லை மகவே என்றவாறு அவள் தலையை தடவிக்கொடுக்கிறாள் தாயாள்.
0
நுண்கதை – 30
௦
அடர்வனம். மானோடுகிறது. இலக்குவன் பகழி நுனியால் கோட்டை எழுப்புகிறான். எல்லையாகிறது. தாண்டுகிறாள். மனிதனைக் கண்டடைகிறாள்.
0
சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.