கோவிலுக்குள் செல்கையில் விநாயகரை முதலில் தரிசிப்பதுவும் அவர்முன் தோப்புக்கரணம் போடுவதும் தான் முதலானதாக இருந்தது இல்லையென்றால் அம்மாவின் கோபங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவரை கடந்தால் நிறைய தெய்வங்கள், அவர்கள்முன் எதையெதையோ அடைய கைகூப்பி நின்றிருக்கும் நிறையநிறைய பக்தர்கள் அவர்களில் நானும்தான். ஒவ்வொரு முறையும் என் வன்முறை, அகங்காரம், கீழ்மைகள் அனைத்தும் அங்கு தான் சற்று விலகிக் கொள்கின்றன. தலைக்கவசத்தில் மண்டை நசுங்கிக்கொண்டிருக்க மூளை ஒழுகிக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? நான் காந்தியோ புத்தரோ அல்ல எனும் சிந்தனை ஒழுகிய மூளையில் தப்பி மண்டைக்குள் சிக்கிக்கொண்டது! போல. எவற்றையோ கொடுத்து பழகவும் எவற்றையோ பெற்றுக்கொள்ளவும் தான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். பிடித்தும் பிடிக்காமலும் மீண்டும் பிடித்தும் ஒன்றை செய்ய யாராவது என்னைத்தவிர இங்கு தயாராக இருக்கிறார்களா? இந்த எண்ணங்களை இல்லாமலாக்குவதற்கு அப்போது என்னிடம் ஒரு வழியும் இல்லை. இந்த தேநீர் கடையின் கூட்டம் வெறும் காட்டுவாசிகள், நான் கூப்பிட்டால் அண்ணா என்று என்னிடம் வளைந்து நிற்பவர்கள், இவர்கள் குறித்த எந்த சிந்தைனைகளும் அப்போது பெரிதாக என்னிடமில்லை. இவர்களுக்கு எதையோ செய்து அதன்மூலம் நான் எதையோ அடையப்போகிறேன் அவ்வளவுதான். மீதம் சொட்டிய மூளையில் திரும்பி சென்று விடுவதுதான் சரியென்னும் எண்ணம் தோன்ற, அதை வழித்தெறிந்து துடைத்துக்கொண்டு நின்றேன்,  பர்கூரின் கடைசி தேநீர் கடை.

பர்கூரின் கடைசி தேநீர் கடையில் இறங்கிய பாலாஜி  பீடி கட்டு ஒன்றினை வாங்கி கைகளில் புதைத்துக் கொண்டு எனை நோக்கி வந்தார். லுங்கியை அவிழ்த்து தலைக்கு மேலிருந்து உடல்முழுவதுமாக மூடிக்கொண்டு வந்தவர்,  பனியின் வெண்ணிற திரையில் நடக்கும் காட்டுவாசியின் ஓவியம் போலிருந்தார். என் இருசக்கரவாகனம் பனியில் முனகிக்கொண்டிருந்தது. முந்தையநாள் அந்தியூர் சென்று  பழுதுநீக்கப்பட்ட மோட்டர் வயர்களினால் சுற்றப்பட்டு குழந்தை  உறங்கிக்கொண்டிப்பதை போல், பின்புற இருக்கையில் பொருந்தியிருந்தது.

“அண்ணா…..என்னா குளுரணா” என்றபடி அருகில் வந்த பாலாஜி பீடி கட்டில் ஒன்றை உருவி வாயில் இட்டு கொளுத்தி புகையை ஈரல் வரை இழுத்து விட்டார். புகை பனியோடு கலந்து கரைந்து மறைந்தது.

“அண்ணா ஏர்றன் பாத்துக்க புடிச்சிக்கனா ” என்றபடி மோட்டரை மெல்ல எடுத்து குழந்தையைப்போல் மடியில் வைத்து அமர்ந்தார். நேரம் ஆறு இருபதை கடந்து சில வினாடிகள். எதிரே சாலையில் சரக்குலாரி  ஒன்று தியான நிலையில் அனத்தியபடி பனியை விலக்கிக்கொண்டு வந்தது. லாரியின் மங்கிய வெளிச்சம் பெரிய வட்டமான லாந்தர் விளக்கு போல் இருந்தது. பனி தன் மெல்லிய அகங்காரத்தோடு அனைத்தையும் சூழ்ந்து கொண்டிருக்க, வாகனத்தை முறுக்கி மண் திட்டிலிருந்து  சாலைக்கு ஏறினேன் எறுமை கிடா போல் சீறி முனகி ஏறி நின்றது வாகனம்.

“ணா போலாமா நல்லா பிடிச்சிக்க” என்றபடி மெல்ல நகர்ந்தேன். சூழ்ந்த பனியில் வாகனத்தின் வெப்பம் தொடையருகே பரவ இதமளித்தது.

“ணா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி போலாமா எதுவும் பிரச்சன இல்லையே” என்றேன்

“உடுணா போலா நா இருக்கே” என்றார். சரி என்பதை போல் முன்நகர்ந்தேன். மாதங்கள் முன்புதான் சாலை போடப்பட்டிருக்கவேண்டும். சக்கரம் சாலையில் இணங்கியோடியது.  நிமிட முடிவுக்குள் துர்ச்சனாம்பாளையத்தை அடைந்தோம். துர்ச்சனாம்பாளையத்தில் வலதுபுறம் சரிந்த சோளகனை செல்லும் பாதையில் புகுந்தேன். சிலதூர தொலைவில் குறுக்கிடும் கால்வாய். அதைக்கடந்தால் சக்கரங்கள் கொண்டு சென்ற நீரினால் உருவாகியிருந்த ஆழமறியாத சேர். குழைந்த சேற்றில் சக்கரம் புதைந்து எழுந்து உருண்டது. சிறுதொலைவிலேயே பொறிந்துகிடந்த சாலை. சரளைக் கற்கள் சக்கரத்தின் விசையில் பிதுங்கி சிதறி இடம் பெயர்ந்து கொண்டிருந்தன. குளிர் முகத்தில் வீசி எறிந்தது. வறண்ட குளிர் . நாவினால் உதடுகளை ஈரம் செய்து கொண்டேன். காலை நேர வழக்கமான பறவைகளின் மெல்லிய குரலோசைகள் காதுகளை கூர்மை செய்தன. மலை முகடுகளின்  உச்சிகள் மறைய காடு தலைக்கு மேல் நிரம்பியது. இருள் கூடியது. பக்கவாட்டு கண்ணாடியில் பாலாஜியை பார்த்தேன். அவர் முகம் காட்டை நோக்கி எதையோ முனகிக்கொண்டிருந்தது. பொறிந்து கிடந்த சாலை, சரளைக்கற்களின் தோழமையோடு தொடர்ந்து என்னிடம் வாதம் செய்தது என்னால் வெல்ல இயலாத வாதம். வாகனத்தின் குலுங்களில் மோட்டர் ஒவ்வொருமுறையும் என் முதுகினை குத்தி கிழித்துவிடுவதை போலிருந்தது. பாலாஜி முடிந்தவரை மோட்டரை இழுத்து தன் தொடைகளில் பொருத்தி வந்தார். எந்த உரையாடல்களும் இல்லை. சரளை கற்களின் சிதறும் ஒலி மட்டும். வெகுநேரம் பின் காது எரிச்சலடைய தூண்டிவிட்டது.  பொறுமை இழந்தவனாக சிறுபிள்ளை தனங்களோடு பாலாஜியிடம் முறையிட்டேன்.

“என்னணா ரோடு இது எப்புடி இதுல போய் வரிங்க பூனு கலடுது” என்றேன்.

“எல்லா பழவியாச்சுனா” என தோளில் கைவைத்து சிரித்தார். மீண்டும் எரிச்சல்.

“MLA வ பாக்க போனிங்க இதெல்லாம் சொல்லி நல்ல ரோடு போட்டு தர கேக்கலாம் லா” என்றேன்.

அமைதியில் இருந்துகொண்டிருந்தார்.

“ஆத்தர அவசரத்துக்கு ஒரு நல்ல ரோடு கூட இல்லாம எப்டி னா” என சலித்தேன்.

“அண்ணா அப்பிடி மட்டும் சொல்லாதனா ரோடு இல்லனா நாங்க பொழச்சிபோம், அப்புறம் காரு வண்டி வரும் அதுலாம் சரி வராது” என்றபடி மீண்டும் அமைதிகொண்டார். அப்போது என்னுள் தோன்றிய எண்ணம் இவ்வாறாகத்தான் இருந்தது, ” பெரிய ஊர்தலைவரு ரோடு வந்துட்டா ஏதோ ஊரு அழிஞ்சி போயிடும் னு பயபடுறாரு, எல்லாம் காட்டுவாசிபயலுகதானே ஒரு அறிவும் இல்ல எப்ப பாரு மூஞ்சிய சிடுசிடு வச்சிகறது இல்லனா வாய போட்டு கெஞ்சுறது” எண்ணங்களை கோர்த்து கோர்த்து ஒன்று திரட்டி எனக்கும் கீழானவர்கள் என எனக்குள் அவர்களை சிறுமை செய்து மகிழ்ந்தேன்.

இடதுபுறம் ஒரு கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. பச்சைநிற சீலையில் தங்கநிற பூக்கள் நிறைந்திருக்க தனியாக தெரிந்தார் அந்த காட்டுவாசிப்பெண் . அருகில் அவர்களின் குழந்தைகள் கணவர் இன்னும் சில ஆண்கள். எங்கோ விழா முடித்து காடு திரும்பிக்கொண்டிருப்பவர்கள். அவர்களை அடைந்து கடக்கையில் பாலாஜி அவர்களை கன்னடத்தில் ஏதோகூறி சத்தமாக சிரித்தார். அவர்களும் அதையே செய்து சிரித்தார்கள். பேச்சொலிகளும் சிரிப்பொலிகளும் பின்னாலேயே தங்க, சரளைக்கற்கள் மீண்டும் காதருகே வந்தன.

ஒரு தார்ச்சாலை இருந்திருந்தால் எவ்வளவு அருமையானதாகவிருக்கும் இப்பயணம் ஒரு சாகசப்பயணத்தின் ஆதியே சாலைதானே எனும் எண்ணம் தோன்றிக்கொண்டிருக்க,மங்கிய தொலைவில் இருசக்கர வாகனங்களும் அதைச்சுற்றிய சில மனிதர்களும் திசைக்கொருவராக நின்றும் நடந்தும் கொண்டிருந்தார்கள்.  அருகில் செல்ல செல்ல அவர்கள் எங்களை தடுத்து நிறுத்த முயல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வாகன விசையை குறைத்து அவர்களிடம் நின்றேன் . பாலாஜி அவர்களுடன் கன்னட மொழியில் தீவிரமாக எதையெதையோ பேசிக்கொண்டிருந்தார். ஆண எனும் வார்த்தையின் வழி யானை என்பதை புரிந்து கொண்டேன். அண்ணா ஆண இருக்கு ணா ஆண! ஆண! என பயமுறுத்துவதைப் போன்ற முகபாவங்கள் கொண்டு கூறினார். நான் எனக்கொன்றும் அதில் பயமேதுமில்லை என்பதைப் போல் அவரை பார்த்து பின் பார்வையின் கோணத்தை திருப்பிக்கொண்டு காட்டை பார்த்திருந்தேன். காட்டின் கணம் அழுத்தியதை போன்றிருந்தது.

சிவந்த கண்களுடன் ஜோடிப்புறா போன்ற பறைகள் ‘பட்பட்’ வென சிறகுகளையடித்து தலைக்கு மேல் எங்களை கடந்து சென்றது. மனம் வேறு எங்கோ தொலைவில் பாய்ந்தது. யானை! யானை எனும் சொல்லோ பெயரோ அது எவ்வளவு எடைமிக்கதாக உள்ளது. அகத்தில் கூறிக்கொண்டேன். மகுடேஸ்வரர் கோவிலிருந்து எங்கள் தெருவிற்கு மாதம் ஒருமுறை வரும் மீனாட்சியை நினைத்துக்கொண்டு கிளர்ச்சி அடைந்தேன். அவளின் கரிய கிழிந்த டயர் போன்ற சொரசொரப்பான தோல், கம்பி போன்ற ரோமங்கள், வாழைப்பழம் கொடுக்கையில் கைகளை ஈரம் செய்யும் தும்பிக்கை, ஒரு பெரிய பாறை உருளும் நிதானம். மனம் துடித்து நெகிழ்ந்து உடல் கூசியது. கைகளை உரசி முகத்தில் பூசிக்கொண்டேன்.காட்டில் ஒரு யானையை காணப்போகிறோம் எத்தனை நாள் கனவிது, கனவில்லை ஆசையாக இருக்கலாம், இங்கு வரும் முன்புகூட தொலைந்த குட்டி யானையை அதன் தாயோடு சேர்த்து வைத்து அவளிடம் ஆசிர்வாதம் பெற்று கதாநாயகன் போல் திகழ்வதை எண்ணி எண்ணி பார்த்திருந்தேன். இப்போது காணப்போகிறேன். எங்கோ சில அடிகள் தான் இடையில் இந்த இருள் நிறைந்த புதர்ச்செடிகளும் கனமான மரங்களும் மட்டும்தான். என் மலர்ந்த முகத்தோடு, காட்டை அங்கும் இங்கும் கண்கள் கொண்டு ஓடினேன்.

தோளில் கை வைத்த பாலஜி “உடுணா போலா” என்றார். “ணா நின்னு யானைய பாத்துட்டு போகலாம் ணா” என்றேன்.

“அந்த ஆச மட்டும் வைக்காத ணா… அது தான வந்து ஒரு நாள் நிக்கும் வோம் முன்னாடி, அப்ப தான் தெரியு உனக்கு எதெக்கு சொல்றனு….மோட்டரு போனா தானா வேல ஆவு… அத்தெல்லா இங்க தான இருக்க போற பாத்துக்கலா உடுணா” என்றார்.

குழந்தையின் ஏமாற்றங்களோடு விசையை கூட்டி வாகனத்தை மெல்ல இயக்கி முன்நகர்ந்தேன். வளைவோடு கூடிய மேடு ஏறியது சாலை. பனி வேலைகளை முற்றிலும் முடித்துவிட்டு புறப்பட தயாராகிக்கொண்டிருந்தது. மேலே செல்ல செல்ல காடு கால்களுக்கு கிழே ஒழிந்து ஒழிந்து வந்தது. தூரத்தில் ஆங்காங்கே மூங்கில் புதர்கள்  நெற்பயிரின் ஒற்றை தூர் போல் நின்றிருந்தன. கைப்பேசியின் தொடர்புகள் துண்டித்தன. வெறும் காடும் சாலையும் அதன் சரளைக் கற்களும் மாட்டின் சாணமும், ஆங்காங்கே பழைய யானையின் சாணமும் அதில் புதியதாக குருத்துவிட்டிருந்த பெயர் தெரியாத சிறு புற்களும். வலதுபுறம் தலைக்கு மேல் உடன் வந்து கொண்டிருந்த இரு மின்சார கம்பிகள் அச்சூழலுக்கு பொருந்தாமல் இருப்பதை போல் உணர்ந்தேன். காட்டின் ஆழ்ந்த அமைதி ஒருவித பயத்தை உண்டு செய்தது. பாலாஜி இருக்கிறார் என்பது மட்டும் ஆறுதல். பாலாஜியின் இருப்பு எவ்வளவு முக்கியம் அப்போது என எண்ணினேன்.சூரியனின் வருகைக்காக நான் ஏங்கியதை உணர்ந்தேன். என்னால் புரிந்துகொள்ள இயலாத உணர்வுகள். எரிச்சலும் பயமும் கிளர்ச்சியுமென அலைபோல் வந்துவந்து சென்றன. உள்ளே செல்லசெல்ல காடு தன் ஏகாதிபத்தியத்தை கட்டவிழ்த்துவிட, இலைச்சருகுகள் நகரும், விழும் ஓசைகளையும் நான் கவனித்தது குறித்து விந்தையடைந்தேன். எதிரே கண்செல்லும் தொலைவில் மங்கலாக இருவர் வந்துகொண்டிருந்தனர். பாலாஜி உயிர்பெற்று “ணா ஸ்சுலோ ஸ்சுலோ போனா”  என்றபடி கைகள் கொண்டு தோல்பட்டையின் சதைகளை இறுக்கினார். விசையை குறைத்தேன் வாகனம் இழுபட்டு அதிர்ந்தது.

எதிரில் வந்தவர்களையும் பாலாஜி அறிவார். அவருக்கு தெரியாத மனிதர்கள் யாரும் சோளகனையின் காடுகளில் இருக்க வாய்பேயில்லை, பறவைகளும் விலங்குகளும் கூட. வலது புறம் பெரியபள்ளம் மேல்நோக்கினால் மலை முகடு . இடதுபுறம் சாலைக்குவேண்டி செதுக்கப்பட்ட மண்சரிவுகள்.

அவர்களின் பழைய வாகனம் கலண்டு உருண்டு  எங்களிடம் நின்றது. மீண்டும் பாலாஜி அவருக்கே உரித்தான மொழியில் அவர்களிடம் தீவிரமாக உரையாடினார். இருவர் முகத்திலும் தீவிரம் கூடுதல் கொண்டது. மேலே வானம் கார்மேகம் கொண்டு இருண்டு வந்தது. மெல்லிய காற்றில் மரங்களும் புதர்களும் அவர்களுக்குள்ளேயே இரகசியம் பேசிக்கொண்டு எங்களை பார்த்து சிரித்ததைப் போன்றிருந்தது. நான் மீண்டும் சலிப்பையும், கிளர்ச்சியையும், பயத்தையும், உணர்ந்துகொண்டிருந்தேன். அவர்கள் மூவரும் பீடி மூன்றுகளை கொளுத்தி இழுத்தார்கள். புகையின் அளவு பெருகியது. மூன்று வாயின் புகையால் அங்கு சிறுமேகம் உருவாகி உருவாகி மறைந்தது. இடதுபுறம் சாலையின் பக்கவாட்டில் இருந்த பாறை ஒன்றினை பிரக்ஞையற்று பார்த்திருந்தேன், மனம் எதையோ தேடியலைந்து மீண்டது. பீடியின் ஆள்காட்டி விரலின் நீளம் குறைந்து காலின் சுண்டுவிரல் நீளம் வர பேச்சு முடிவுக்கு வந்து, என்னை உசிப்பினார் பாலாஜி. “அண்ணா போலாணா கொஞ்சம் ஸ்சுலோ போணா ஒத்த ஆண ஒன்னு அலையுதாம்”என முகத்தில் இறுகியபடி இருந்தார்.

நான் என்னை தயார் செய்துகொண்டேன். வீரனாக  நினைத்து மார்பு விரித்து அமர்ந்தேன். தலையை இடதுபுறம் வலதுபுறம் வேகமாக சாய்த்து சொடக்கின் ஒலி எழும்ப “பாத்துக்கலாம்ணா பாதி வந்தாச்சு” என அவரிடம் நம்பிக்கை அளித்தேன், என்றபோதிலும்  அறிந்திருந்தேன் இது நடந்தால், ஒரு ஒற்றை யானையை நான் காண நேர்ந்தால் அதனுடன் மல்லுக்கட்ட நேர்ந்தால், கட்டாயம் அது எனக்கு நலமான ஒன்றாக இருக்கலாகது.  வளைந்து வளைந்து ஓடிவிடலாம் அல்லது வலுவான மர உச்சிக்கு செல்லலாம் அல்லது நேருக்கு நேர் சென்று நிற்கலாம் என எதையெதையோ கற்பனையில் ஓடவிட்டபடி முன்நகர்ந்தேன்

“நீ நேரா பாத்து ஓட்டுனா நா சைடுபக்கம் பாக்கறேன் மெதுவா அப்டியே போய்க்க” என்றார் பாலாஜி.

யானையை பார்க்க வேண்டும் ஆனால் அது என்னிடம் முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும் குட்டி நாய் போல், என தோன்றியது. அடர்த்தியான காட்டின் இருளில் கிடந்த பாறைகள் தூங்கிக்கொண்டிருக்கும் யானையாக கூட இருக்கலாம், எப்போது வேண்டுமானலும் பிளிறியபடி எழுந்தோடிவந்து எங்களை தாக்கலாம் எனும் எண்ணம் பீதியை உண்டுசெய்தது. வாகனத்தை இருகப்பிடித்தேன் கைகளினூடாக வாகனத்தின் அதிர்வு உடலில் பரவி அதிர்ந்தபடியிருந்தேன். சில சிறார்கள் பேசி விளையாடி அந்த பாதையில் ஓடியும்,நடந்தும், சிரித்தும் சென்று கொண்டுருந்தார்கள். சட்டென பாலஜியிடம் “ணா யானை இருக்கு இவனுங்க பாட்டுக்கு போறானுங்க” என்றேன். “அதெல்லாம் கிட்ட இருந்தா வாட வந்துரும்ணா உசார் ஆகிடுவானுங்க” என்றார். அவர்களை நினைத்து சற்றே பதற்றம் கொண்டேன்.

மீண்டும் பனி இம்முறை தூரல்களுடன் வீரியத்தோடிருந்தது. உடன் காற்றுமிருக்க பனி காடெங்கும் அலைந்தது. சட்டையின் எடை நீரினால் கூடியிருந்தது. தாடையுடன் பற்கள் ஆட்டம் தொடங்கின. சிறுநீர் முட்டியது. உடலில் ஒருவித ஒவ்வாத வலி உண்டானதை போன்றிருந்தது. என் உடலின் நடுக்கத்தை பாலாஜி தன் காலில் உணர்ந்து “அண்ணா நிறுத்தண்ணா” என்றார். நானும் அதற்காக காத்திருந்தேன் என்பது பின்நாளில் தான் தெரிந்தது. விரைந்து நிறுத்தி இறங்கி உடல் சிலிர்த்தேன்.

பாலாஜி நின்ற வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்தவாறு பீடி ஒன்றினை எடுத்தார். ஏதோவொரு விசை அவரிடம் பீடி வாங்க கூறிஉந்த தயக்கங்களோடு “அண்ணா எனக்கொரு பீடி கொடு ணா” என்றேன். பாலாஜி வெடித்து சிரித்தபடி பீடி ஒன்றினை கட்டில் உறுவி தந்தார், நானும் நடுங்கிய சிரிப்புகளோடு பீடியை பெற்று, பற்றவைத்து ஆழ்ந்து இழுத்தேன். புகை உடலின் அனைத்து நரம்புகளிலும் புகுந்துகொண்டு பாய்ந்தது, மெல்லியதிலும் மெல்லிய கம்பியை சுண்டினால் ஏற்படும் “கிர்” அதிர்வுகள் தலையில் தோன்றின, சோளகனையின் காட்டுவாசிகளுக்கு ஒவ்வொருமுறையும் கோவிலுக்குள் நுழையும்முன் விநாயகரை தரிசிப்பது போன்றதுதான் இது. இந்த காடு  கோவிலாக இருந்ததென்றால் நான் தோப்புக்கரணம் போட்டாகவேண்டியது உறுதி, நான் கோவிலில் தோப்புக்கரணம் போடுவதா, போட்டிருக்கிறேனா? அது என்னை சிறுமையாக உணரவைத்து விடுமே! நான் மனிதன்! உணவுச்சங்கிலியில் முதல் இடத்திலிருக்கும் ஆகச்சிறந்த விலங்கு, இந்த உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இனத்தை சார்ந்தவன், நான் இப்போது சற்று ஓய்வு தேவைப்படும் நிலையில் இருக்கிறேன், பசியும் கூடிக்கொண்டுள்ளது, இல்லையென்றால் இந்த பயம் சலிப்பு எரிச்சல் எல்லாம் ஒன்றுமேயில்லை அவ்வளவுதான், இந்த காட்டு விலங்குகளை கூட காப்பவன் நான் தான் என் இனம் தான் அல்லவா, பின்பு எது எப்படியோ எந்த தெய்வமும் என்னை வாழவிடாமல் செய்யாது எனும் எண்ணம் நம்பிக்கையாக சுரந்தது.

பீடியை இழுத்து தள்ளிய பாலாஜி விருவிருவென இறங்கி “இருணா பேல வருது வந்துர்றன்” என மூங்கில் புதரில் ஓடி மறைந்தார். சாலை, சுற்றிலும் மலைகள் நடுங்கிக்கொண்டிருந்த  விரல்கள் இடுக்கில் பீடியும் அதன் கரிக்கும் புகையும், பீடியை கைமாற்றிவிட்டபின் விரல்கள் கொண்டு விரல்களை கசக்கினேன். இதுநாள்வரையிலும் நான் உணர்ந்திடா ஒன்று நீர் தெளித்து பனி காடெங்கும் அலைய, காற்றுக்கு எடை இருப்பதை உணர்ந்தேன். கண்கள் விழிப்புணர்வில் உச்சத்ததில் இயங்க “பேண்டு கொண்டிருக்கும் பாலாஜியை யானை மிதித்துக் கொன்றுவிடுவதை போல் தோன்றிய எண்ணங்களை துரத்திவிரட்டியடித்தேன்.

எடை கொண்ட காற்று செவிமடல்களை உரசிச்செல்ல அதையடுத்து எங்கோ ஒலித்த யானையின் “பிளிறல்” திடுக்கிட வைத்து மூத்திரப்பையை அதிரச்செய்தது. மார்பின் காம்புகள் கூர்மை கொண்டு சட்டையின் ஈரத்தில் உருண்டு நின்றன. பீடியின் கடைசியை ஆழ்ந்து இழுத்து நெஞ்சையடைக்க இறுமி அதிர்ந்தேன். எங்கோ காட்டின் புதர்மறைவிலிருக்கும் யானையின் உருண்ட விழிகளில் நான் நின்றுகொண்டிருக்கிறேன் எனும் எண்ணம் பீதியை கிளற, பனிக்காடு அனைத்து உணர்வுகளையும் கீழிறக்கிறது, தன்னிரக்கம் காடென விரிந்து அழுத்தியது. முன்னால் வந்துகொண்டிருந்த அந்த காட்டுவாசிப்பெண்ணும், அவள் குழந்தையின் செருப்புகள் இல்லாத கால்களும் நினைவில் உதிர்த்து மறைந்தன.

சிறார்களின் சிரிப்போசைகளோடு பனி காதுகளை அடைத்தது.  மூங்கில் புதரிலிருந்து புற்களை விலக்கியபடி பனியீரம் தெரிக்க வந்த பாலாஜி வேட்டை விலங்கு போல் தோன்றினார். மூங்கில் புதரில் தெரிந்தவர் ஒளியின் வேகத்தில் என்னிடத்தில் இருந்தார். மீண்டும் ஒரு பீடியை பற்றவைத்துக்கொண்டு, “எடுணா நிக்கறது சரியா வராது மேடு ஏறி எறங்குனா ஊரு” என்றபடி பீடியை இழுத்தார். பீடி எரிந்து கண்ணாடியின் துகள் உடையும் ஒலி காதுகளை இதம் செய்தது. வாகனத்தை இயக்கினேன். அடைபட்டு அடைபட்டு அணைந்து உயிர்பெற்று சீறியது. மேட்டுடன் கூடிய சாலை வளைந்து இடதுபுறம் ஏறியது. உடல்நடுக்கம் வாகனத்தின் அதிர்வில் சமநிலை கொள்ள, வாகனத்தை இறுகமுறுக்கினேன், சாலையின் வளைவிலிருந்த சிறுபாறை போன்றிந்த கல்லின் மேல்குத்திய முன்சக்கரம் குதித்து கடந்து நின்று உருள, பாலாஜி “அண்ணா” என்றபடி கைகளை இறுக்கினார்.

அவருக்கு பதில்கூற நேரமில்லாதபடி அடுத்த வளைவு, அங்கு காற்று அதிகபனியை கூட்டிக்கொண்டிருக்க, அதிர்வுகளுடன் முன்நகர்ந்தோம். வளைவில் யானையின் சாணம் மஞ்சள் நிறத்தில் கொட்டப்பட்டிருந்தது. அதில் சூடாக ஆவி மேல்நோக்கி எழுந்துகொண்டிருக்க, யானையின் வாடை அங்கு முழுவதும் நிறைந்திருந்தது.

மீனாட்சியின் அருகாமையை உணர்ந்ததைப்போன்றிருந்த எண்ணங்களை பயம் அறுத்துஎரிய, மரக்கிளையொன்று முறிந்து அல்லது உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டோம். அதைச்சுற்றி கசங்கிய இலைகள் சிதறி கிடந்தன, இடதுபுறம் சாலையை ஒட்டிய வட்டக்கரிய பாறை ஒன்று, என் உடல் அதிர்வின் அசைவால் அசையாதிருந்த வட்டக்கரிய பாறையும் அசைவதை போலிருக்க, நான் என் வாழ்க்கையில் அடைந்த உச்சபயங்களில் அதுவும் ஒன்று என்றானதை பின்நாளில் நினைவுபடுத்தி சிரித்தேன்.

சக்தி

சொந்த ஊர் கொடுமுடி. டிப்ளோமா படித்துவிட்டு பெருந்துறை சிப்காட் பணிபுரிகிறார்.தொடர்ந்து தான் வளர்ந்த பார்த்த வட்டார மனிதர்களின் கதைகளை பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *