தங்கம்

,

இன்னைக்கு ஒரு பவுன்னு

லட்சத்தி பதினெட்டாயிரமாம் என

முணு,முணுத்து கொண்டே

சோற்றை

வேண்டா வெறுப்பாய் கொட்டினாள்

மனைவி.

அக்கம் ,பக்கம் பாரு

எல்லாம்

நகையா சேர்க்கிதுங்க

ஒரு பொம்பள புள்ளைய  பெத்து வச்சுக்கிட்டு

நகைய சேர்க்க வக்கு இல்ல என்றாள்.

இங்க பாருடி

வேலாவேளைக்கு சோறு,

உடுத்த நல்ல துணிமணி,

பாப்பாவுக்கு கான்வென்ட் ஸ்கூலு ,

மாசத்துக்கு ஒரு சினிமா,

வருசத்துக்கு ஒரு டூர்ன்னு

உன்னையும்,பாப்பாவையும்

நல்லா தானே பார்த்துக்கிறேன்

கல்யாணத்தின் போது கூட

அதை செய் ,

இதை செய்ன்னு

உங்க குடும்பத்தாரை கேட்டேனா ?

கல்யாணம் செலவை கூட

நான் தானே செஞ்சேன்

சம்பாதிக்குறதை அப்படியே

உன்கிட்ட கொடுத்திட்டு

நீ சொல்ற படி தானே செய்றேன்

அப்படி இருந்தும்

ஏண்டி குறைசொல்லிக்கிட்டே திரியுறே என்றேன் ?

ஒண்ணும் இல்லாத ராசாவுக்கு

குத்தம் குறை சொன்னா

மூக்கு மேல ஏறுதோ?

பொண்டாட்டி கேட்குறதை

செய்ய முடியாதவனெல்லாம்

ஏண்டா

கல்யாணம் பண்ணுறீங்க ?

கொடுக்கு வார்த்தையை உதறி விட்டு

அடுக்களை பக்கம் சென்று விட்டாள்.

அவள் தட்டையில் உதறி கொட்டிய சோறு

குழம்பு ஊற்றப்படாமல் இருந்தபோதும்

ஆறி இருந்தது .

அப்போது என் மனமோ வாடி இருந்தது

தங்கம் விலை கூட ,கூட

கணவன் மனைவிக்குள் சண்டையும்

கூடி கொண்டே செல்கிறது.

சமாதானமும் மௌனமாய்

சேதாரம் ஆன பின்

புயலுக்கு பின் கரைசேர்ந்து விடுகிறது.

ஏனோ

வடுக்கள் மட்டும் இன்னும் ஆறாமல்

இரணமாய் உறக்கத்தை தொலைத்து விட்டு சென்றிருக்கிறது !

00

லி.நௌஷாத் அலி 

என்கிற நான் முதுநிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன் .கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவன், வந்தாரை வாழ வைக்கும் வந்தவாசியில் வளர்ந்தவன்.

இதுவரை கவிதை -கதை என என்னுடைய படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பல தினசரி நாளிதழிலும், வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது .

கவிதை -கதை என இதுவரை  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன்…

என்னுடைய படைப்புகளை  மணிமேலை பிரசுரம் 11 புத்தகங்களையும் , காகிதம் பதிப்பகம் மூன்று புத்தகங்களையும், ஓவியா பதிப்பகம் ஒரு புத்தகத்தையும் – PGK  ஆர்ட்ஸ் ஒரு புத்தகத்தையும் , நண்பர்கள் பதிப்பகம் நான்கு புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளது. .மதி பதிப்பகம் வெளியிட்ட ஐம்பது படைப்பாளிகளின் இரண்டு கவிதை தொகுப்பு நூல்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *