மாலை மசங்கிய நேரமாகியும் பள்ளி விட்டு வீடு வந்து சேர்ந்திராத தனது சின்ன மகனை எண்ணியவாறு சரசு வாசலில் கிடந்த வேப்பம்பூக்களை  கூட்டியவாறு இருந்தாள்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவளது  சின்ன மகன் ரகு அதீத சுறுசுறுப்பாக இருப்பவன். வெட்டிக்கொண்டு வரச்சொன்னால் வெட்டியதைக் கத்தையாக்கிக் கட்டிக்கொண்டு வரக்கூடியவன். படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி அனைத்திலும் முதன்மை மாணாக்கன். இப்படிப் பன்முகப் புலமை பெற்று இருப்பதால் அவனைச் சுற்றி வயது வித்தியாசம் பாராமல் எல்லா தரப்பினரும்  இருப்பர். இவற்றையெல்லாம் நன்றாக அறிந்திருந்த சரசுவுக்கு இந்த சகவாசத்தால் எங்கே தனது மகனின் படிப்பு கெட்டு வாழ்க்கை பாழாகிவிடுமோ என்ற அச்சப்பிசாசு அடிக்கடி அவளது மனக்கூண்டைப் பிறாண்டிக்கொண்டே இருக்கும்.

மணி வேற அஞ்சாகப்போகுது  எங்க இந்த நாயக்காணம்!  எங்க சுத்திட்டு இருக்கானோ! என கால்டெசிபலில் முனகியவாறு கூட்டியெடுத்த வேப்பம்பூக்களை குப்பைத்தொட்டியில் கொட்டச்சென்றாள்.

‘ம்மோவ் என்ன இன்னைக்கு இப்டி நீட்டி நெளிச்சிட்டு கெடக்க அண்ண வந்தான்னா சத்தம் போடுவான் பாத்துக்க’.என்றபடி அம்மாவிடம் தான் தாமதமாக வந்ததை மறைக்க அதிகாரத்தோரணையில் பேசியபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

‘வாடாங்கொப்பம்  மவனே. இத்தனை நேரம் எங்கடா ஊரைச் சுத்திட்டு திரிஞ்ச பள்ளிக்கூடம் உட்டதும் ஊடுவந்து சேருடான்னு எத்தன தரஞ் சொல்லி தலையால தண்ணி குடிச்சிருப்பேன்.  கேக்கமாட்டியா கண்ட காலிப்பயலுகளோடு சேர்ந்து ரோடளந்திட்டு வந்திட்டு என்ன மொண்டியதிகாரம் பண்றயா வெளக்குமாறு பிஞ்சிரும் பாத்துக்க. பொறவென்ன உன் நொண்ண வந்தா தலைய சீவிப்புடுவானோ ம்ம்ஹும்ம்… நானு மடவாச்சி கூட்டத்துக்காரிடா வாயக் குடுத்தா வாங்கமுடியாதும்பாங்க’ என ஆங்காரித்தவள்…சற்றே நிதானித்து ஒரு பெருமூச்செறிந்தாள் பின்பு தாயுக்குரிய அக்கறையாய், ‘அடேய் .. சின்னவா ! இப்படித்தான் உங்கொப்பனும் எம்பேச்சை கேக்காமப்போயி இன்னைக்கு நான் முண்டச்சியா நிக்கிறேன். உனக்காகவும் உங்கொண்ணனுக்காகவும்தா நா உயிரோட இருக்கேன்.. நாஞ்செத்துட்டா உங்களுக்கு சந்தோசமா’ என்றவாறு  முந்தானையால் வாயைப்பொத்தி விம்மி விம்மி அழத்துவங்கினாள்.

‘யம்மா… இப்பென்ன ஆகிப்போச்சுன்னு இப்படி மூக்கால அழுது வைக்கிற …நம்ம பாலண்ண பிரெண்டோட பையன் செத்துப்போய்ட்டானாம். அதுக்கு போஸ்டர் அடிச்சிருக்காங்களாம் அத ஒட்டிக்கொடுறான்னு கேட்டாரு..சும்மா ஒட்ட முடியாது போஸ்டருக்கு 6 ரூபா கேட்டேன் அதுக்கு அவரு ரொம்ப ஓரியாடாதடா ஐம்பது போஸ்டருதான் 5 ரூபா வாங்கிட்டு முடிச்சுடுன்னு சொன்னாரு. நானும் சரிண்டு வண்டேன். நைட்டுக்கு போவணும்மா’ என்றபடி சரசுவின் ஆங்காரத்துக்கும் அன்புக்கும் மத்தியில் நின்றபடி தயையாகக் கூறினான். சரசு அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள்போல் இருந்துவிட்டாள்.

ரகு அருகிருக்கும் அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்றாலும் போஸ்டர் ஒட்டுவதில் அவனுக்கு இணையாக சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை. சிங்கிள் டெமி போஸ்டராகட்டும் ஒன்றோடு ஒன்றை இணைத்து ஒட்டும் டபுள் டெமி போஸ்டராகட்டும் அனாயசமாக ஒட்டுவான். துளி பிசிறு தட்டாமல் வேலையைக் கனகச்சிதமாக முடித்துக்கொடுப்பான். சிறு வயதில் தனது தகப்பன் மாரிப்பனுடன் விளையாட்டாய்ச் சென்றபொழுது கற்றுக்கொண்டது, அவசரகதியில் ஒரு நாள் இரவு பாலத்தின் மேலேறி போஸ்டர் ஒட்டும்பொழுது தவறி விழுந்து இறந்துபோன தகப்பனைவிட கூடவந்தது. இப்பவும் புதிதாக யாரேனும் போஸ்டர் ஒட்டவேண்டுமென்றால் நம்ம செத்துப்போன மாரிப்பம் பைய்யனப் பாருங்க கனஜோரா முடிச்சுத் தருவான் என ரெகமெண்ட் செய்யுமளவு வளர்ந்திருந்தான். இதெல்லாம் சரசுவுக்கு சுத்தமாகப் பிடிக்காது. எத்தனையோ முறை சொல்லியும் கேட்காமல் இன்றைக்கும் ஒரு வேலைக்கு தலையாட்டி வந்திருப்பதால் கடுங்கோவம் கொண்டிருந்தாள்.

‘பொம்பளதான இவ நம்மள என்ன பண்ணிருவாங்கற எகத்தாளம்தாண்டா உனக்கெல்லாம். பெத்த தாயாச்சே அவ நம்ம நல்லதுக்குத்தான் சொல்லுவா அவபேச்ச கேக்கலாங்கற ரொணம் ஏதாச்சும் இருக்கா…ம்ம்ம்..என்னமோ எக்கேடோ கெட்டுப்போங்க’ என்றவாறு வீட்டுக்குள் சென்றாள்.

சிறிது நேரத்திற்குப்பின் வீட்டுக்கு வந்த குரு

‘என்னம்மா எல்லாம் ரெடியா’ எனக் கேட்டான்

‘எல்லாம் ரெடியாத்தாண்டாப்பா இருக்கு இல்லைன்னா நீ சும்மா விட்ருவியா என்ன?’ என சாடைப்பேச்சாய் ரகுவின் காதில் படும்படி சரசு பேசினாள்.

‘ஏம்மா என்னாச்சுமா இப்ப இப்படிச் சலிச்சுட்டு பேசுற?’

‘டேய் ரகு!… அம்மாவை ஏதும் பேசினியா இல்ல வேண்டாத வேல ஏதும் பண்ணிட்டு வண்டயா’ என குரு  குரல் கொடுத்தான்.

‘நான் எதும் பண்ணல’ என பவ்யமாய் பதில்சொன்ன ரகுவின் குரல் மங்கும் முன்னமே ‘ம்மோவ் … அவங்கெடக்கறான் எதார்ந்தாலும் வியாபாரத்தை முடிச்சிட்டு வந்து பாத்துக்கலாம் நீ கெளம்புமா’ எனச் சொல்லிவிட்டு தான்  சைக்கிளில் எடுத்து வந்திருந்த இரண்டு குடம் தண்ணீரை வண்டியில் வைத்தான்.

குருவுக்கு ரகுவைப் போல படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லாததால் படிப்பைப்  பாதியில் நிறுத்திவிட்டு ஒரு துரித உணவகத்தில் வேலை செய்து வந்தான். சில வருட அனுபவங்களுக்குப் பின் இப்பொழுது சில வருடங்களாய் தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து பேல்பூரி பானிபூரி,காளான்,காளிப்ளவர் சில்லி முதலியவற்றை உடனடி தயாரிப்பு செய்து வியாபாரம் பண்ணி  வருகிறான். அயிட்டங்களுக்கான முன் தயாரிப்புகளை சரசுதான் செய்து வருகிறாள்.

சரசுவின் கைப்பக்குவத்தை உயிரோடு இருக்கும் வரை மெச்சிக்கொண்டே இருப்பான் மாரிப்பன். போதிய வருமானமின்றி சிரமமுரும் தருணங்களில் செட்டியார் தோட்டத்தில் மழைக்காலத்தில் விளைந்திருக்கும் காட்டுக் கீரைகளை பறித்து வந்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கினாலென்றாள் அந்த வீதியே மணமணத்துக்கிடக்கும். வரும்புடி ஒசத்தியான நேரங்களில் மணி மட்டன் ஸ்டாலில் மாரிப்பன் வெட்டிக்கொண்டுவரும் வெள்ளாட்டுக் கறியில் கொஞ்சம் தேங்காய் நறுக்கி போட்டு கொதிக்க வைத்தாளென்றால் வாசத்திற்கு பக்கத்து வீட்டாரும் கொழம்பைக் கடன் கேட்பர். அவ்வேளைகளில் மாரிப்பன் கறிக்கொழம்பை போதையுடன் ஒரு புடிபுடித்துவிட்டு உனக்கு சரசுன்னு பேரு வச்சதுக்கு பதிலா எங்கக்காகாரி அன்னபூரணின்னு வச்சிருக்கணும்டி என்று சரசுவின் கைக்கு முத்தம் குடுத்துவிட்டு “அறம் செய்ய விரும்பு எங்கக்கா புள்ள கரும்பு” என்றபடி உறங்கிப்போவார். சரசுவின் தாய்மாமன்தான் மாரிப்பன் சரசுவின் அட்சய பாத்திரம் என்றைக்கும் ருசியான உணவுகளைக் கொணர்ந்ததாகவே இருந்திருந்தது. தனது கணவன் மற்றும் பிள்ளைகள் என்றில்லாமல் வீடுதேடி வரும் எவருக்கும் பசியாற ருசியோடு பரிமாறும் ஏழை அன்னபூரணியாகவே திகழ்ந்தாள்.

பெரியவன் அதிகாலையில் மார்கெட்டுக்குச் சென்று வாங்கி வரும் காய்கறி மற்றும் இதர இடுபொருட்களை கொண்டு மதியம் மூன்று மணிக்குள்ளாகவே பதார்த்தங்களாகத் தயார் செய்துவிடவேண்டும். அப்பொழுதுதான் மாலை ஐந்து மணிக்கு வியாபாரத்தைத் துவங்க ஏதுவாக இருக்கும்.பெரும்பாலும் அந்நேரங்களில்தான் பணிமுடிந்து வருபவர்கள் முன்பசிக்கு ஏதாவது ஒரு ஐட்டத்தை சாப்பிட்டுச் செல்வர்.

சின்னவனை பள்ளிக்கு அனுப்பிய பின்னர் அம்மாவும் மகனும் பதார்த்தங்களைத் தயார் செய்ய உக்காந்துவிடுவர். கொஞ்சம் ருசி குறைந்துவிட்டால் போதும் அச்செய்தி காட்டுத்தீ போலப்  பரவி வாடிக்கையாளரின் வரவு குறைந்துவிடும் என்பதால் மிக கவனத்துடன் தொழில் செய்ய வேண்டி இருந்தது. இதில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக விடுப்பு விட்டுவிட்டால் அருகிருக்கும் கடைக்காரர்கள் இவர்கள் ஊரைக் காலிசெய்து சென்றுவிட்டதாய்ப் பொய்யை பரப்பி தங்களது உயர்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வண்ணம்  வியாபாரப்போட்டி நடந்துகொண்டிருந்தது.

வெவ்வேறு ஐட்டங்களை சாப்பிட்டு முடித்தவர்கள் செரிமானத்திற்காக இறுதியில் பானி நீரை வாங்கிக் குடிப்பர்.பானிபூரியின் மேல் விரலால் அழுத்தினால் துளையாகிவிடும் பின்னர் அதனை ஒரு ஸ்பூன்போல உபயோகித்து பானி நீரை மொண்டு குடிப்பர். மற்ற தள்ளுவண்டிக்காரர்களோ அந்த நீரில் கொத்தமல்லி,புதினா,எலுமிச்சை சாறு,காரத்திற்கென பச்சைமிளகா சேர்த்து அரைத்து அதில் போதிய அளவு நீரை சேர்த்திருப்பர். ஆனால் சரசுவோ அதே பொருள்களோடு உடனடி செரிமாணத்திற்கென கொஞ்சம் இஞ்சியும் பூண்டையும் தட்டிப்போட்டு சேர்த்திருப்பாள். இதைப்போலவேதான் சின்னச்சின்ன விஷயத்திலும் அவள் காட்டும் அக்கறை பிரம்மிப்பூட்டும். அதில் தனது மகன்களை நல்லபடியாகக் கரைசேர்த்துவிடவேண்டும் என்ற உத்வேகம் நிறைந்திருக்கும்.

வண்டி என் 21  ஜெ.முருகன் எனப்பெயர் பதியப்பட்ட தள்ளுவண்டியை அதன்மேல் வைக்கப்பட்ட பொருள்கள் கவிழாதவண்ணம் மெல்ல உருட்டத் துவங்கினான் குரு. போறபோக்கில் ” டேய் ரகு நாங்க போனபெறவு இதான் சாக்குன்னு எங்கனாச்சும் கிளம்பிராதடா ஒக்காந்து படிச்சு உருப்படுற வழியப்பாரு’ என சரசுவின் முன்னர் தனது தம்பியை செல்லமாக மிரட்டியபடி நகர்ந்தான். அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாய் கதவோரம் நின்றிருந்த ரகு தலையாட்டிவைத்தான். ஆனால் அவன் மனதிற்குள் பாலண்ணனின் ஆள் போஸ்டரை எப்பொழுது கொண்டு வருவான் என்ற எண்ணமே ஊடாடியது.

அவர்கள் இருவரின் தலை மறையத் துவங்கியதும் விடுக்கென வீட்டுக்குள் சென்று அவர்களுக் தெரியாமல் எடுத்துவைத்திருந்த மைதா மாவை அலுமினிய பக்கெட்டில் கொட்டி நீரூற்றிக் கரைத்து பசையாக்கினான். பெரும்பாலும் போஸ்டர் ஒட்ட தருபவர்கள் பசையைத் தரமாட்டார்கள். புதிதாக வந்து தருபவர்கள் எவரேனும் போஸ்டருடன் ரெடிமேடு பசையைத் தருவார்கள் அது இவனுக்கு செட் ஆகாது. இவன் பசை தயாரிக்க உபயோகிக்கும் மைதா புரோட்டா சப்பாத்திக்கு பயன்படுத்தும் உயர்வகையைச் சார்ந்தது. காளான் ப்ரைக்கும்,காலிப்ளவர் சில்லிக்கும், பானிபூரிக்கும்  சேர்த்துக்கொள்ள குரு  இவ்வகை மைதாவை ஸ்பெஷலாக மார்க்கெட் சென்று வாங்கி வருவான்.

மணி சரியாக இரவு  எட்டை  நெருங்கியிருந்தது..

ரகு…. டே ரகூ…..

அழைப்புச் சத்தம் கேட்டு அண்ணா வர்றங்கணா என்றபடி வெளியே வந்தான். அவன் எதிர்பார்த்திருந்த பாலண்ணனேதான். கையில் போஸ்டர் கட்டுடன் வண்டியின் பின் அமர்ந்திருந்த ஒருவனை அதெடுத்து அவங்கையில கொட்றா என்று பணித்தபடி டே ரகு 50 போஸ்டர் சிங்கிள் டெமிடா இந்தா 200வச்சுக்க காலம்பற மீதியை வாங்கிக்க என்றதும், அதை வாங்க மறுத்த ரகு..

‘ண்ணா..முழுசா தந்தா ஒட்டலாம்னா இல்லாட்டி வேற ஆளப்பாருங்க’ என்றான். ‘பெத்த தாயிகிட்ட ஏத்துவாங்கிட்டு பண்ணறேன்.. அதிலயும் கொசுறு வச்சா..’எனப் பொருமினான்.

‘உங்கொப்பனவிட பதினாறடி மிஞ்சுறடா…சரி இந்தா புடி 50ஐ பொலம்பாம ஒட்டியுற்றுடா’ எனக் கட்டளையிட்டுக் கடந்தார்.

மணி இப்பொழுது ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

ரகு மனதிற்குள் கணக்கு ஒன்றைப் போடத் துவங்கினான்.அம்மாவும் அண்ணனும் வேலை முடித்துவர எப்படியும் மணி 12 ஆகிவிடும். அந்த மூன்று மணிநேர இடைவெளியில் போஸ்டர்களை ஒட்டிவிட்டு வந்து நல்ல பிள்ளையாகிவிடலாம் அத்தோடு இதுவே இறுதியாக இருக்கட்டும் இனி போஸ்டர் ஒட்டப்போவதில்லை என உறுதிபூண்டான். வீட்டினைப் பூட்டி சாவியை சிமெண்ட் சீட்டின் சந்தில் வைத்துவிட்டு, எளிதில் உருவியெடுக்கும்படி போஸ்டர்களை அடுக்கி கேரியரில் வைத்துவிட்டு, பசை பக்கெட்டை கேண்டில்பாரில் மாட்டிக்கொண்டு சைக்கிள் ஸ்டாண்டை வலதுகாலால் உதைத்துத் தள்ளினான்.

வழக்கம்போல வசந்தாமில் சுவரையொட்டியிருக்கும் குதிரை வண்டி ஸ்டாண்டுக்கு அருகில்தான் குரு வண்டியை நிறுத்தி வியாபாரத்தைத் துவக்குவான். சில நாட்களாய் போலீஸ் கெடுபிடியின் காரணமாய் நிலையான ஒரு இடம் அமையாமல் வியாபாரம் மந்த கதியில்தான் நடந்துகொண்டு இருந்தது. தினமும் வண்டிவாடகை 100, சிலிண்டருக்கு 100, டெய்லி கலெக்சனுக்கு 250, இடுபொருள்களுக்கு  ஆயிரமென சுமார் 2000 ரூபாய்க்குமேல் வருமானம் வந்தால்தான் கட்டுப்படியாகும். இல்லையெனில் மாத இறுதியில் கையைக் கடிக்கும். அதோடு வீட்டு வாடகை அதற்கும் கரண்ட் பில் என ஒரு அன்றாடங்காய்ச்சியின் வாழ்க்கை நிலைதான் இவர்களுக்கு. என்னதான் சரசுவின் மனசுக்கு ஒப்பவில்லை என்றாலும் ரகு போஸ்டர் ஒட்டி சேர்த்த பணத்தில் அவனது படிப்புச் செலவு நகர்வதால் கொஞ்சம் நிம்மதிதான். இருந்தாலும் படிக்கிற பைய்யன் சாமத்தில் போஸ்டர் ஒட்டிவிட்டு வீடு வருவது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. தனக்கும் அண்ணனுக்கும்  துணையாய் இங்கே வண்டியில் நின்றாலே போதும் எனத்தான் நினைப்பாள். இதையெல்லாம் தாண்டி  காத்துக் கருப்பு அடித்துவிட்டாலோ  இல்லை தாண்டுக்குணமோ நேர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணமே  பெத்தவளின்  மனதிற்குள் பக் என்று இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளுக்கு இனம் புரியாத பயம் ஒன்று தொற்றிக் கொள்ளும் அதை வெளிக்காட்டாமல் சமாளித்துவிடுவாள். ஆனால் இன்று அப்படி இல்லாமல் மனம் ஒரு நிலைக்குள் சிக்காமல் தூண்டில் மீனாய்த் துள்ளியது. வாடிக்கையாளர்களின் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதிலும், அவர்களுக்கு மீதப்பணம் தருவதிலும் தடுமாறினாள்.

குரு அதைக் கண்டுகொண்டவனாய்

‘தேம்மா!…என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்டி பண்ணுற கண்டகிரகத்தையும் நெனச்சிட்டு வேலைசெய்யாத…’.

‘நீ சுளுவா சொல்லிட்டடா பெரீவா எனக்குத்தான் கெடந்து அடிச்சுக்குது சாயந்தரம் அவனை செமயா திட்டிப்புட்டேன். மூஞ்சி சுண்டிப்போச்சு அவனோட நல்லதுக்குத்தான் திட்டுனேன்.. ப்ச் ….என்ன பண்ண நல்லா ஒரைக்கட்டும்னு கெளம்பரப்ப சொல்லிக்காமக் கொள்ளிக்காமக் கூட வண்டேன்.ம்ம்ம்…அந்த சமயபுரத்தாதாங் காப்பாத்தோனும்’ என்ற சரசுவின் நெஞ்சாங்க்கூடு ஏறி இறங்கியது.

‘சரிசரி அவனொன்னும் கோச்சுக்க மாட்டான்!.. நீ வேலையைப்பாருமா’ என்றபடி வாணலியில் இட்டிருந்த காளான் சில்லியைத் துளாவிக் கொடுத்தான்.

ரகு எப்பொழுது வேலையைத் துவங்கினாலும் தன் அப்பாவை வணங்கிக் கொண்டுதான் ஆரம்பிப்பான். இன்றும் அதே சாங்கியத்துடன் துவங்கினான். சிங்காநல்லூர் பேருந்து முனையத்தின் பின்புறம் முதல் போஸ்டரை ஒட்டிவிட்டு கிருஷ்ணா கார்டன் வழி சென்று அண்ணா நகர் காலனி தொட்டு ஒண்டிப்புதூர் வரைக்கும் செல்வதாக முடிவு செய்திருந்தான்.

முதல் போஸ்டரை ஒட்டியதும் விரலிடுக்குகளில் பசவாய் ஒட்டிப் பிதுங்கியிருந்த பசையை துண்டு  பேப்பரால் வழித்தெடுத்து அதை பக்கெட்டில் போட்டுவிட்டு கிளம்பலானான். எவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக வேலையை முடிக்க மனதிற்குள் எத்தனித்தவாறு சைக்கிளில் பறந்தான். எப்படியும் ஐம்பது போஸ்டர்களை ஒட்ட இரண்டு மூன்று மணிநேரம் ஆகிவிடும். சில இடங்களில் எளிதாய் ஒட்டிவிடலாம். புதர் மண்டிய இடத்தை ஒட்டிய சுவர்கள் பழையதைக் கிழித்துவிட்டு அதன்மேல் ஒட்ட என நேரவிரயத்தை தவிர்க்க இயலாது. இதில் தெரு நாய்களின் தொந்தரவு வேறு. தன்னுடைய ஏரியாவின் எல்லா இண்டு இடுக்குகளையும் தெரிந்தவன் என்பதால் பதட்டமின்றி பயணப்பட்டு வேலையை முடித்தபடி இருந்தான். இறுதியாக அவன் நினைத்தபடி காலனி ரோட்டைத் தொட்டிருந்தான். அது திருச்சி  சாலை சேரும் முன்னர்   இடதுபுறம் திரும்பினால் சுங்கம் மைதானம் வந்துவிடும். அங்கே ஒரு போஸ்டரை ஒட்டிவிட்டு கிளம்புகையில் மீதமிருக்கும் போஸ்டர்களை எண்ணிப்பார்க்க மனம் தூண்டியது. ரகு போட்டிருந்த கணக்குப்படி எல்லாம் சரியாக ஒட்டிமுடித்து இன்னும் ஓரிரு போஸ்டர்கள் இருந்தன.

மனநிறைவு கொண்டவனாய் அவற்றை மடித்து கைகளில் பிடித்துக்கொண்டு சைக்கிளின் பெடலை டக்கடித்து டக்கடித்து ஓட்டியவாறு இருக்கிற போஸ்டரையும் ஒட்டிமுடிச்சிட்டு நேரா வசந்தா மில் சென்று அம்மா முன்னால நின்றோனும் .. அதோட ‘அம்மா! .. இனிமேட்டு இந்த வேலையை செய்யமாட்டமா… ஒம்மேல சத்தியம்னு’ சொல்லி அம்மாவை நிம்மதிப்படுத்தனும் என நினைத்தவாறு திருச்சி சாலையைக் கடக்க முயன்றான்.

காலனி ரோட்டைப்போல சுங்கம் ரோடும் திருச்சி ரோட்டில்தான் இணையும். கொஞ்சம் வளைவாகச் சென்று இணையுமாதலால் திருச்சி சாலையிலிருந்து மேற்கு நோக்கி வரும் வாகனங்களை காண்பது சிரமமான ஒன்று. நின்று நிதானமாய்க் கடக்கவேண்டும்.

தனது அம்மாவை நினைத்தவாறு திருச்சி சாலையைக் கடக்க முயன்ற ரகுவின் கண்களில் தட்டுப்படாமல் மைதாமாவு மூட்டைகளை ஏற்றியபடி மேற்கு நோக்கி வந்த மஸ்டா டெம்போ இவனை நெருங்கி விட்டிருந்தது… கண்ணிமைக்கும் நேரத்தில் அம்மா என்ற அலறல் சத்தத்துடன் டெம்போவால் ரகு தூக்கி வீசப்பட்டான். அவனது சைக்கிள் உருக்குலைந்து கிடந்த நிலையில் இடக்கையில்  கண்ணீர் அஞ்சலி போஸ்டரோடும், பசை அப்பிய வலக்கையை சாலையில் பதிந்தவாறும் குப்புறக்கிடந்தான் ரகு போஸ்டர் ஒட்டும் தோரணையிலேயே.

மகிவனி( சு.மகேந்திரவர்மன்)

எனது பெயர் சு.மகேந்திரவர்மன். மகிவனி என்ற பெயரில் படைப்புகளை எழுதிவருகிறேன். கனத்தைத் திறக்கும் கருவி என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன்.கோவையில்  தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *