காலம்: கி.பி 1950

இடம்: தஞ்சை மற்றும் அது சார்ந்த பகுதி     

     பண்ணையார் செல்லையா வீட்டிலிருந்து வலசைக்குப் போவதா இல்லை, கிடைவயலுக்குப் போவதா என்று எண்ணிக்கொண்டு புலம்பியபடி கண்ணீரை வடித்துக்கொண்டே நடந்தான் கார்மேகம். பழி வாங்க வேண்டும் என்ற ‌எண்ணம்தான் உள்ளிருந்து அனலாகப் பொங்கி கண்ணீராக வடிந்து கார்மேகத்தின் முகத்தை நனைத்தது. இயலாமைக்குக் கண்ணீரைத் தவிர‌வேறென்ன மருந்து. மழை வெயில் எதுவாக இருந்தாலும் எப்போதும் பூத்திருக்கும் ஆவரம் பூப்போல எல்லோரிடமும் தெத்துப் பல்லைக் காட்டி வஞ்சகம் இல்லாமல் பேசி சிரிப்பவன் கார்மேகம்.

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகக் கிடை அடைய வைத்த கிடைக்கூலியைத் தரமாட்டேனென்று  பண்ணையார்ச் செல்லையா சொன்னதும், பாய்ந்து சென்று பண்ணையார் கொதவாலையைக் கடித்து மென்று துப்பிடவேண்டும் என்று கார்மேகத்திற்கு நெஞ்சம் துடித்தது. இருந்தாலும் கணிவான குரலில் இரண்டு மூன்று முறை கேட்டும் கூட செல்லையா செவி சாய்ப்பதாக இல்லை. “என்னுட்டுக் கொல்லையில் ஆடு மேச்சுக் கெடை கெட்டிட்டு என்னுக்கிட்டையே கூலி கேக்குறீகளாடா” என்று சொல்லி கூடவே நாலைந்து கெட்ட வார்த்தையும் சேர்த்துப் பேசி “ஓடுடா கீதாரிப்பயலே என்று அடிப்பதுபோல ஆந்தி விரட்டிவிட்டார்” பண்ணையார்.

திட்டைக்குப் புதியதாக வந்து பண்ணையாருக்குக் கிடை போட ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஊர் மக்கள் பண்ணையார் பற்றி எடுத்துச்சொல்லியும் சேதுதான் எதையும் கண்டுகொள்ளாமல் “கெட்டவன் எல்லாத்துக்குமா கெட்டவனா இருப்பான்” என்று மறுத்துவிட்டு கிடை கேட்ட பண்ணையாருக்குக் கிடை அமர்த்தினான். ஒரு நாளைக்கு இரண்டரை மரக்கா நெல் என்று சொற்பமாகவே கிடைக்கூலியைப் பேசி கிடை கட்டினான் சேது. சேதுவும் கார்மேகமும் கீதாரி நெடுராமனிடம் இருந்து பிரிந்து வந்து தனிக்கிடை போட ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கார்மேகம், கீதாரி நெடுராமனின் மகன், சேதுவோ கீதாரியின் அண்ணன் வெள்ளயப்பனின் மகன்.

கார்மேகம் வலசைக்குத்தான் போயிருக்க வேண்டும், கால்கள் வலசைக்குச் செல்லாமால் இடறின. காட்டில் இரை தேடிப்போன பறவையின் நினைவுகள்தானே குஞ்சிகளுக்கு இருக்கும். அப்படியாக கார்மேகம் தானியங்களோடு வருவானென்று கார்மேகத்தின் இளம்பிள்ளைகள், கூடவே மனைவி  இடைச்சி, அதோடு சேதுவின் மனைவி பாம்பூராவும் சேதுவின்‌பிள்ளைகள் மூவரும் வலசையில் இந்நேரம் பசி மயக்கத்தில் இருப்பார்கள். பாம்பூராவும் இடைச்சியையும் ஏதேதோ பழைய கதைகளைச் சொல்லி பிள்ளைகளை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


“வெறுங்கை மொழம்போடுமா… எந்த மூஞ்சை வச்சிட்டு புள்ளைகளைப் பாக்கப்போவேன்… புள்ளக எல்லாம் கொலைப்பசில கெடக்கும். பாவிப்பய ஒரு மாசமா இப்படி ஒத்தப்படி நெல்லு கொடுக்கமா அலைய விடுறானே… நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டடா… ஒங்கொலம் விருத்திக்கு வராதுடா… எங்க வயித்துல அடிக்கிற…” என்று வாய்க்கு வந்தபடி திட்டி முனகிக்கொண்டே நடந்து வந்தான் கார்மேகம்.

திட்டைக்கு வந்து ஒரு மாத காலமே ஆகியது. வந்தது முதல் பண்ணையாருக்கே கிடை போட்டுக்கொண்டிருந்தார்கள். இதற்கு முன் வாங்கிய  கிடைக்கூலியெல்லாம் பண்ணையாருக்கு அடைந்த இந்த ஒரு‌மாத காலத்திற்குள்ளே தீர்ந்து போய்விட்டது. வழிநெடுக பண்ணையாரை… வசைபாடிக்கொண்டே எல்லா தெய்வங்களிடமும் முறையிட்டுக்கொண்டே நடந்தான் கார்மேகம்… “வேகாத வெய்யக்காட்டில அலைஞ்சு இந்த ஆட்டைமேச்சுக் கொண்டாந்து வயல்ல அடையை வச்சு வாங்குற ரெண்ரை மரக்கா நெல்லுலையா நான் பணக்காரனா ஆயிடப்போறே… ஏதோ நாலு நாளு புள்ளை குட்டிக வயிறார ரெண்டு நெல்லுக்கஞ்சி குடிக்கும்…மிஞ்சுனா ஊருக்கு தூக்கிட்டுப் போவேன்… மானத்தில எரிஞ்சு போறவனே நீந்தேன் எம்பாடக் கேக்கனும்” என்று வழிநெடுக புலம்பிக் கொண்டே கிடை வயலுக்கு வந்து சேர்ந்தான் கார்மேகம்.

சேது ஆடுகளை மடக்கி வயலில் அமர்த்திக்கொண்டே கார்மேகம் வருவதைக் கவனித்தான்.


“என்னடா நீ கேட்டதுக்காவது கெடைக்கூலியை கொடுத்தாரா பண்ணைக்காரு…” சேது கேட்டதும் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது கார்மேகத்திற்கு.

’’என்னடா… இந்தாளு இப்படி பண்றான்…நேத்து நான் போய் கேட்டதுக்குத்தேன் அந்தாளு கொடுக்கமாட்டாருண்டுதான் ஒன்னப்போய்க் கேக்கச் சொன்னேன்….’ ’நீ கேட்டதுக்கும் மசியலையா அந்தாளு.? நம்மளும் நாலைஞ்சு புள்ளை குட்டிகளை வச்சிருக்கோமேனு கொஞ்சம் கூட அந்தாளுக்கு மனசு எளகலையா?’’

“அந்தாளுலாம் நல்லாவே இருக்கமாட்டான் டா… நம்ம வவுத்த அடிக்கிற அந்த ஆளு கடைசி காலத்துல ஒரு வாய் சோத்துக்கு கையேந்தி கெடப்பான்டா…இனிமேட்டு அவுக காட்டுலையும் இந்த ஊர்லையும் ஆடு மேச்சலுக்கு வரக்கூடாதானு ரொம்ப கண்டிச்சு கணக்கா சொல்லிட்டன்டா அந்தாளு…வலசையில புள்ளைக எல்லாம் என்னென்டு கெடக்கோ வெறுங்கையோடு போயி புள்ளைக மொவத்தப் பாக்கவே நெஞ்சு அருக்குதுடா”  என்றான் கார்மேகம்.

“வேறகாடு போறதா, இல்லையாங்கிறத அப்பறம் பேசுவோம்… இப்ப போயி புள்ளைகளுக்கு ஏதாவது வாங்கியாரேன்” என்றுவிட்டு கிடையில் கார்மேகத்தை வைத்துவிட்டுச்  சேது கிடை வயலை விட்டுக் கிளம்பினான்.

“அண்ணே.. அண்ணே… கீதாரி வந்திருக்கேன்….”  என்று சேது சொன்னதுமே வீட்டை விட்டு வெளியே வந்தார் இளவரசு.

”என்னையா கீதாரி… காலையில இப்படி வேர்க்க விறுவிறுக்க வந்து நிக்குற…? என்னையா வேணும் என்றார் இளவரசு. ’அண்ணே… ஒரு ரெண்டு மரக்கா நெல்லுக்கொடுத்தா புண்ணியமாப்போகும்… எப்படியாவது கெடை அடைய வச்சு கழிச்சிடுறேன்… கொஞ்சம் பெரிய மனசு செஞ்சு கொடுங்களேன்…புள்ளைய எல்லாம் பட்டினியா கெடுக்குக..’. என்றான் சேது.

”நேத்தே ஒங்கிட்டச் சொன்னல்லயா… கூட நாலு மரக்கா நெல்லு வாங்கிட்டுப்போனு…நீ கேக்கலை…இப்ப வெறும் நெல்லை வாங்கிட்டுப்போயி எப்பயா அவுச்சு காயவைச்சு அரிசியாக்கி திம்ப… கூட ஒரு படி அரிசி வாங்கிட்டு போ” என்றார் இளவரசு.

”அண்ணே.. எப்படியாவது கெடை வைச்சு இந்தக் கடனை கழிச்சிடுறண்ணே” என்றான் சேது.


”கெடை கெடக்கு… கெடை… அவனைப் பத்தி தெரிஞ்சுதான் நீ மொதநாள் கெடை கட்டுனப்பவே சொன்னேன்… நீ கேக்கலை…. இப்ப வந்து என்ன செய்றது… அவனுகள ஊருக்குள்ற கேக்க ஆள் இல்லாமத்தான் இப்படி வாலாட்டிட்டு திரியிறானுவ… இப்படித்தாயா… போன மண்டு கெடை வச்ச ஒரு கீதாரிவுட்டு ஆடு நெல்லுக்கருத மேஞ்சுட்டுனு அஞ்சு கெடாக்குட்டிடைய தெண்டமா வாங்கிட்டு கீதாரியை சங்கடப்படுத்தி அனுப்புனாவோ… இப்ப அஞ்சு குட்டியும் கிடாயா நிக்கது… சண்டைக்கு பழக்குறேனு ஊருக்குள்ற கூத்தடிக்கிறானுவ…அவனுகள்ட்ட வம்பு வளக்க வேணாம்…இந்தா ஒனக்கு எப்ப அரிசி நெல்லு பருப்பு வேணுமானலும் இங்க வந்து வாங்கிக்கயா…கெடை மெதுவா கெட்டிக்கொடு” என்று நெல்லைக் கொடுத்து அனுப்பினார் இளவரசு. ’நம்ம கொல்லை சும்மாவே கெடக்கு… நீ வந்து கெடை கட்டுயா… நான் கூலிதாரேன்’ என்றார் இளவரசு.

“நமக்கே பசி வவுத்த இந்தக் கிள்ளு கிள்ளுதே… புள்ளைகளுக்கு… நினைக்கும்போதே ஈரக்குலை நடுங்கியது சேதுவிற்கு. எட்டி நடையை வைத்து வலசைக்கு வந்து சேர்ந்தான்.

சேது வலசை வந்ததுமே நெல்லைக் கொடுத்துவிட்டு வலசைக்கு வெளியே அமர்ந்தான். இடைச்சியையும் பாம்பூராவும் அழைத்து… ’இனிமேல் பண்ணையாரை பகைச்சுக்கிட்டு இங்க இருக்க முடியாது, நம்ம ரெண்டு மூனு நாளுக்குள்ள வேறகாடு போகனும்… இல்லையினா இது வரைக்கும் அடைஞ்ச கெடைக்கூலியை மறந்துட்டு பண்ணையார்கிட்ட எதையும் கேட்காம இகனுக்குள்ளயே வேற யாருக்காவது கெடை வைக்கனும் இல்லையினா மறுபடியும் எங்க சித்தப்பாருகிட்டையே போயி அவரு மோதாவுல அங்க கெடை வைக்கனும்’ என்றான்.


”இப்புடி ஒரு படி கூலிகூட வாங்காமப் போனா ஒங்க சித்தப்பாரு மூஞ்சில முழிக்கமுடியாதுங்க..”. என்றாள் பாம்பூரா.‌

”நீ சொல்றதும் சரித்தேன்… எந்த மூஞ்சியை வச்சிட்டுப்போயி எங்க சித்தப்பாரு மூஞ்சில முழிக்கிறதுனு நெனைச்சாக்க நெஞ்சே படபடனு அடிக்குது” என்றான் சேது. இடைச்சி எதையும் கண்டுகொள்ளாமல் விதியை நினைத்து நொந்து கொண்டிருந்தாள். சேது குழப்பத்துடனே கிடை வயலுக்கு வந்தான்.

இருவருக்கும் சேர்த்தே நூறு ஆடுகள் தான் இருக்கும். கார்மேகத்திற்கு எப்படியாவது பண்ணையார் செல்லையாவை பழி வாங்கிட வேண்டும் என்ற எண்ணம் பொங்கிக் கொண்டே இருந்தது. சேது கிடை வயலுக்கு திரும்ப வந்தது முதல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போதும் கூட பண்ணையாரை எப்படியாவது பழி வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.

சேதுவும் கார்மேகமும் சொல்வதுபோல எப்படியும் பண்ணையாரை பழி வாங்க வேண்டும் என்று கடுகடுத்தான். ஆனால் மனதின் ஒர் ஓரம் எள்ளளவு பயம் முண்டிக்கொண்டு வந்தது. ’ஏலே கார்மேகு… நமக்கு ஊர்விட்டு ஊரு போறது பெரிசாடா… இந்த ஊர் இல்லையினா அடுத்த ஊரு… நம்ம என்ன இங்கேயவா இருக்கப் போறோம்… இவனுகள பகைச்சுக்கிட்டு இந்தக்காட்டுல கெடை போட்டு நம்மளால பொழைக்க முடியுமா… பேசாம சித்தப்பாரு பேச்சைக் கேட்டு எப்பெயும்போல ஒரத்தநாட்டுப் பக்கமே பொயிருக்கலாம்டா… புதுசா காடு பாத்து போவோம்னு வந்தது தப்பா போச்சுடா…’


”இப்பவும் ஒன்னுமில்லை… இனி இந்தக்காட்டுல கெடை வச்சு இவனுக்கிட்ட பொழைக்க முடியாதுடா” என்றான் சேது. ஆனால் கார்மேகம் எதையும் பொருட்படுத்தாமல் பண்ணையாரை ஒரு வழி செஞ்சே ஆக வேண்டும் என்று வேகமாகப் பேசினான்… ’ஏலே சத்தமா பேசாதடா.. பேப்பயலே…ஒன்னைப்போய எஞ்சித்தப்பே பேப்பயனு சொல்றாரு… நீ என்னடான்னா இப்படி கோபப்படுற?’ என்றான் சேது… கார்மேகம் இப்படி கோபப்பட்டு  ஒருமுறைகூட சேது பார்த்தில்லை… ’சரி நம்ம என்ன செஞ்சாலும் நம்ம பொண்டு புள்ளைகளை இங்க வச்சிட்டுச் செய்ய முடியாது… மொதல்ல ஆட்டை ஓட்டிட்டுப் சித்தப்பேன் இருக்கிற  நொடுவாக்கோட்டை சேருவோம்… அப்பறம் பாத்துக்குவோம் என்ன செய்யலாம்னு’ என்று கார்மேகத்தை அமைதிப்படுத்தினான் சேது…

இரண்டு நாள் கழிந்தது. இடைச்சியும் பாம்பூராவும் எவ்வளவு கெஞ்சிக்கேட்டும்கூட சேதுவும் கார்மேகமும் ஆடுகளை ஓட்டிச்செல்வதென்று முடிவெடுத்தனர். மூட்டை முடிச்சுகளை கெட்டித் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, புள்ளையும், மனைவியையும் கால்நடையாக அழைத்துக்கொண்டு, ஆடுகளைப் பயணமாக தஞ்சை தாண்டி சூரக்கோட்டை வழியாக ஒரத்தநாட்டருகே உள்ள நெடுவாக்கோட்டைக்கு ஓர் இரவும் பகலுமாக ஆங்காங்கே தங்கி ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்.

திடுமுடுவென கிடை வயலை நோக்கி ஒரு துண்டு ஆடுகள் வருவதைக் கண்ட கீதாரி நெடுராமன் திகைத்தார். என்ன இந்தப் பயலுவ எதுமே சொல்லாமக் கொள்ளாம ஆட்ட பத்திட்டு வாரனுக… என்று நினைத்துக் கொண்டார்.  ஆடுகள் கிடை வயலுக்கு வந்து பயணம் வந்த அசதியில் உடனே அப்படியே அடைந்து படுத்துவிட்டன. சேது நடந்ததை  கீதாரி நெடுராமனிடம் சொன்னான். ’நான் ஒங்களை இங்கதானடா தனிக்கெடை வைக்கச் சொன்னே…வெங்காயங்களா….பழகாத காட்டுக்குப் போகாதிகடானு அப்பவே சொன்னேன்ல கேட்டீகளடா…? ஒங்களுக்கும் குடும்பம் குட்டினு ஆகிடுச்சுனு ஆடு பிரிச்சுக் கொடுத்து தனியா கெடை வையுங்கடானு அனுப்புனா கெடைக்கூலி வாங்காம ஏமாந்து வந்து நிக்கிறக ஏண்டா…” என்று அதட்டினார் நெடுராமன். 

“ஊரை விட்டு வந்தா கோபத்தை மூட்டை கெட்டி வச்சுட்டு வந்தாதாண்டா இந்தக்காட்டுல கெடை வைச்சு பொழைக்கமுடியும். நானெல்லாம் இந்தக்காட்டுல பெரிசு சிறிசுனு யார் பேசினாலும் காதுல வாங்காம இருந்ததாலதே இத்தனை காலம் பொழப்பு ஓடிருக்கு. நல்ல மனுசலக்கண்டா ஒட்டிக்கனும், கெட்ட பயலுகளைக்கண்டா கிட்டக்கூட போவக்கூடாது… பண்ணையாரே நாலு வார்த்தை கூட பேசுனாலும் நமக்கு கெடைக்கூலி தானடா முக்கியம்… அதை எப்படி அந்தாளுகிட்ட இருந்து சன்னமா வாங்குறதுனா தெரியாம இப்படி ஆட்ட ஓட்டி வந்தா என்னடா சேதி. என்னைவிட்டு பிரிஞ்சு போயி முழுசா மூனு மாசம் ஆகல… அதுக்குள்ள இப்படி வந்து நிக்கிறக… போய் கெடை காருங்க” பொறகு பேசுவோமென்று  சொல்லிவிட்டு வலசைக்கு சென்றார் நெடுராமக்கீதாரி.

மறுநாள் ஆட்டை மேய்ச்சு கிடை வயலுக்கு கொண்டு வந்து விட்ட சேதுவும் கார்மேகமும் பண்ணையாரைப் பற்றி ஏதோ பேசியது கீதாரிக்கு காதில் அறை குறையாக விழுந்தது. கீதாரியைக் கண்ட இருவரும் அமைதியானார்கள். முதல் பாராவைக் கிடை காக்கச் சொல்லி சேதுவையும், கார்மேகத்தையும்  ஆளுக்கொரு மூலையில் கிடை காக்க வைத்துவிட்டு கீதாரியும் கீதாரிக்கு ஆடு மேய்க்கும் சிறுவனும் உறங்கினார்கள்.

கார்மேகமும், சேதுவும் கீதாரி கண்ணயர்ந்து உறங்கிய நேரம் பார்த்து இரவோடு இரவாக கீதாரிக்குத் தெரியாமல் திட்டைக்கு கிளம்பினார்கள். கிளம்பும்போதே வலசையில் இருந்து நெடுராமக்கீதாரிக்கு தெரியாமல் இரண்டு மரக்கா அரிசயை எடுத்து பையில் போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். ஆடுகளோடு போனால் எப்படியும் நடந்து செல்ல ஓர் இரவும் பகலுமாவது ஆகும்…ஆனால் ஆடுகள் இல்லாமல் செல்வதால் ஓர் இரவு போதுமாக இருந்தது.

ஆடு களைந்துசென்று  கத்திக்கொண்டே வெள்ளாமையில் விழும் சத்தும் கேட்டு பதறி எழுந்தார் கீதாரி. ஆடுகள் அப்போதுதான் ஓடிச்சென்று அருகில் உள்ள உழுந்து வயலில் விழுந்தன. கீதாரி முழிப்புடன் இருந்ததால் ஓடிச்சென்று ஆடுகளை மறித்து விரட்டி கிடை வயலில் அடைய வைத்தார். பத்தாடுகள் ஓடி விழுந்ததும் மற்ற அடைந்து கிடந்த மற்ற ஆடுகள் கத்திக்கொண்டு ஓடியதால் கீதாரி எழுந்துவிட்டார். அதனால் பெரிய அளவில் பயிர் சேதாரம் ஆகவில்லை.  இல்லையென்றால் மறுநாள் காலை வயக்காரர் கூட்டும் பஞ்சாயத்தில் கீதாரி கூனிக் குறுகி நிற்க வேண்டும். அதை நினைக்கையிலே கீதாரிக்கு கோபம் பொங்கி வந்தது. தூக்கமும் போனது.

எங்க போயிருப்பானுக ரெண்டு பயலுகளும், கெடைக்கூலி வாங்காம வந்துட்டாங்கேனு பேசுனதுக்கு கோவுச்சிக்கிட்டு எங்குட்டும் போயிட்டாங்களா…. ஒன்னும் புரியலையே… நேத்து வந்ததுல இருந்து ரெண்டு பயலுவளும் குசுகசுனு பேசிக்கிட்டே கெடந்தாங்களே… நெஞ்சம் படபடத்தது கீதாரிக்கு. என்ன இந்தப் பயலுக ஊர்விட்டு ஊர் வந்து இப்படி திரியிறானுவ…நம்ம இருக்கையிலே இப்படி திரியிராங்களே…நம்ம இல்லையினா இவனுக என்னலாம் செய்வானுக… பண்ணையாரைத் தேடி ஏதும் போயிருப்பானுகளோ… பண்ணையார் கெடைக்கூலி கொடுக்கலையினு அங்க இருந்து எதையும் களவாண்டுட்டு வரப் போயிருப்பானுகளோ…. பண்ணையார்விட்டு  ஆளுக இங்க தேடி வந்ததா இந்தச் சின்னஞ் சிறுசுகளை வச்சிக்கிட்டு எங்க போறது… இல்லை அவனுகதா கையும் களவுமா மாட்டிக்கிட்டா….நம்ம என்ன செய்ய முடியும்…நம்ம சொந்த ஊராயிது… நமக்கு நாலு சாதி சனம் இருக்க… நமக்கு இதெல்லாம் தேவையா… என்று கீதாரிக்கு மனம் வாட்டியெடுத்தது.

வரட்டும் இவனுகளை என்ன செய்றேன் பாரு என்று முணங்கிக்கொண்டு கிடை காத்தார் கீதாரி. நடுச்சாமம் வரை திட்டைக்கு வெளியவே இருந்து காத்துக் கொண்டிருந்த இருவரும் திட்டத்தைத் தெளிவாக்கினார்கள்.  பையில் வைத்திருந்த அரிசியை இளவரசு வீட்டுக் கொட்டத்தில் வைத்துவிட்டு,உள்ளங்கால்கள் இரண்டிலும் தேக்கு இலைகளை கொத்தாக அடுக்கி பனை நாரை வைத்து கட்டிக்கொண்டு  பண்ணையார் தோட்டத்திற்குள் நுழைந்தார்கள்.

அதிகாலை எழுந்து பண்ணையார்  தோட்டத்திற்கு கூலி வேலைக்கு வந்த கந்தனின் அலறல் சத்தம் கேட்டு பண்ணையார் மனைவி முதலில் ஓடி வந்தாள்… கொட்டம் எங்கும் குருதி ஓடி செந்நிற ஆறு ஓடிக் காய்ந்தது போலக் கிடந்தது… நொடிப்பொழுதில் அக்கம் பக்கத்தினர் கூடிட ஆளாளுக்கு ஒன்றாக பேசத்தொடங்கினார்கள். பண்ணையாரின் இரு மனைவிகளும் ஒப்பாரி வைத்து அழுதார்கள்… அழுகுரல் சத்தம் கேட்டு ஓடி வந்து பண்ணையாருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது…

சேது உள்ளே  இறங்கியதும் கிடாயை சாய்த்துப்போட்டு சங்கைப் புடித்து நெறித்து சத்தம் எழாமல் பார்த்துக்கொண்டான். கார்மேகம் கையில் வைத்திருந்த பண்ணை அருவாளை வைத்து இரத்தம் சீறிட, கால்கள் எல்லாம் நாப்புறமும் உதைய கொஞ்சம் கூட கருணை இல்லாமல் கிடாய்களின் விதரை அறுத்து எடுத்து துண்டில் கட்டிக்கொண்டான். ஒன்றையும் விடவில்லை எல்லாவற்றையும் அறுத்தெடுத்தான். அறுத்ததை எடுத்துக்கொண்டு இருவரும் விடியும் முன்னே திட்டையைவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.


பொழுது விடியும் முன்பே, திட்டையை விட்டு கிளம்பியவர்கள் பொழுது விடிவதற்குள் தஞ்சையைத் தாண்டி விட்டார்கள். சேதுவிற்கு பசி பொறுக்கவில்லை. கார்மேகம் சுருட்டு பத்த வைக்க வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து… ஆற்றங்கரையில் சுள்ளி பொறுக்கி தீ மூட்டினான். சேது மரக் கிளை குச்சிகளை எடுத்து துண்டில் இருந்த கிடாய்களின் விதரை அதில் குத்தி தீயில் வாட்டினான். இருவருக்கும் பசியாறினாலும் எதையும் மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சுட்டுத் தின்றார்கள்.

கிடாய்கள் அனைத்தும் இரத்த வெள்ளத்தில் வயிறு ஊதி மாண்டு கிடந்தன. ஒரே மாதிரியாக எல்லாக் கிடாய்களுக்கும் விதைக்கொட்டை அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தன. பண்ணையார் வீட்டில் சேதி கேட்டு வெளியில் வந்த இளவரசு தன் வீட்டு வாசலில் இருந்த பையைப் பார்த்தார். இரண்டு மரைக்கால் அரிசி இருந்தது. யார் வைத்திருப்பார்கள் என்று தெரியாமல் வீட்டிற்குள் எடுத்து வைத்துவிட்டு பண்ணையார் வீட்டிற்கு வந்து பார்த்தார். நடந்த சம்பவத்தையும் தன் வீட்டு வாசலில் அரிசி இருந்ததையும் வைத்து இங்கே வந்து போனது சேதுவும் கார்மேகமும்  என்பதை மட்டும் சரியாக கவனித்தார் இளவரசு. கிடாய்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த இளவரசுக்கு என்ன சொல்வதென்று தெரியாமலே குழம்பி நின்றார். ஒரு மாத காலம் கிடைக்கூலி தராமல் ஏமாற்றப்பட்ட கீதாரிளுக்கிறங்கிப் பேசுவதா…. இல்லை எந்தப் பாவமும் அறியாத கிடாய்கள் விதர் அறுபட்டு கிடப்பதை நினைத்து வருந்துவதா கீதாரிகளை ஏமாற்றி அதோடு  இதுவரை ஊர் மக்கள் எல்லாரையும் ஏமாற்றி உண்டு கொழுத்த பண்ணையாருக்கு சரியான தண்டனை கிடைத்தது என்று மகிழ்வதா என்று சிந்தித்தாலும் ஆண்டவன் மேல் பழியைப்போட்டுவிட்டு எதையும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு விலகினார் இளவரசு.


இரண்டு நாள் ஆகியும் கிடை வராததால் என்னாச்சோ என்று மனக்குழப்பத்தில் இருந்த கீதாரி… ஆடுகளை அன்றிரவே ஓட்டிக்கொண்டு வேற ஊருக்கு கிளம்பி சென்று பாதுகாப்பாக வைத்துவிட்டு இருவரையும் தேடிப்போகலாம் என்று முடிவெடுத்தார். இரவு ஆடுகளை ஓட்டிக்கொண்டு பயணத்திற்கு புறப்படும் அந்திம வேளையில் இருவரும் வேட்டியில் இரத்தக்கரையோடு வந்த நின்றார்கள்.

பார்த்த கீதாரிக்கு தூக்கி வாரிப்போட்டது. என்னவென்று விசாரிப்பதற்குள் ஆட்டை ஓட்டிக்கொண்டு வேறொரு ஊர் போக வேண்டும் என்று ஆடுகளை ஓட்டிக்கொண்டு கந்தர்வகோட்டை வீரடிப்பட்டிக்கு வந்து சேர்ந்தார்கள். சேதுவும் காரமேகமும் சொல்ல வந்த எதையும் கேட்காமல் ஆடுகளை நொடுவாக்கோட்டை விட்டு வேறு ஊருக்கு ஓட்டுவதிலே முனைப்பைக் காட்டினார் கீதாரி

அன்றிரவு இருவரையும் கிடை வயலில் வைத்து நடந்ததை கேட்டார் கீதாரி. இருவரும் நடந்ததைச் சொல்… கீதாரி பாய்ந்து சென்று இருவரையும் பளேர்…பளேர் என்று அறைந்தார்..

’ஏண்டா முட்டா வெண்ணெய்களா… நம்ம வளக்குற இந்தஆடுகளை நம்மலே அறுக்கலாமாட… காலங்காலமா கொலதெய்வக் கோயிலுக்கு மட்டுந்தான்டா கெடா வெட்டுற பழக்கம் இருக்கும்…. இப்படி பாவத்தை எவனாவது இல்லை எந்த எடப்பயலாவது செய்வானாடா….. நீங்க எடைப்பயலுக்குத்தேன் பொறந்தீகளா… இல்லை களவாணிப் பயலுக்களுக்கு பொறந்தீகளாடா…. கிடாயோட வெதரு த இனவிருத்தி செய்யுற தெய்வம்டா….என்ன தப்பு நடந்தாலும், நம்மள ‌யாரு ஏமாத்துனாலும் அந்தா மானத்தில எரிஞ்சு போறானே அவன்ட்டதானடா நம்ம சொல்லனும்…. இல்லை நம்ம கொலைதெய்வத்திட்டலடா மண்டிபோடனும்….. இப்படி செஞ்சிட்டு வந்து நிக்கிறீகளேடா’ என்று வாய்க்கு வந்தபடி பேசினார் கீதாரி…


’ரெண்டு பேரும் ஆடு மேய்க்க வரக்கூடாது ஒரு ஆடும் ஒங்களுக்கு தரமாட்டேன்டா… இனி இந்த எடைப்பய பாக்குற ஆடு மேக்கிற வேலையும் ஒங்களுக்கு இல்லை…. தெறமை இருந்தா நீங்களா சம்பாரிச்சு ஆடு வாங்கி வச்சு வளங்க…இல்லை கெட்டழிஞ்சு போங்க ஆனா நான் ஒழைச்சு உருவாக்குன ஆட்டுல இருந்து ஒரு ஆடும் ஒங்களுக்கு இல்லைடா…. எம்மூஞ்சிலே ரெண்டு பேரும் முழிக்கக்கூடாது…. நான் செத்தாக்கூட கொள்ளி போடக்கூடாது என்று இருவரையும் கிடையை விட்டே ஒதுக்கி வைக்கிறேன்’ என்று தீர்ப்பிட்டார் கீதாரி.

சில மாதங்கள் ஆனது பண்ணையாரால் யார் இப்படி செய்திருப்பார்கள் ஒன்று துப்புத் துலங்கவே முடியவில்லை. சேது மற்றும் கார்மேகத்தின் தோற்றத்தை வைத்து கோழை என்றும் அப்பாவிகள் என்றும் இவர்களை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணியதால் அவர்கள் மேல் ஐயம் வந்ததாலும் அவர்கள் செய்ய வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டார். போதாதுக்கு யாரின் கால்தடம் கூட கொட்டத்தில் இல்லை என்பதே எல்லோரையும் வியக்க வைத்தது.

000

வெற்றிச்செல்வன்

வெற்றிச்செல்வன் இராசேந்திரனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உடைகுளம் என்னும் சிற்றூர். தந்தை இராசேந்திரன், தாய் பூமயில், மனைவி பவித்ரா ஆவர். வெற்றிச்செல்வனின் இயற்பெயர் விஜயகாந்த்.

வெற்றிச்செல்வன் என்று தன் பெயரைப் புனைந்துள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் திட்டப் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை மனிதச் சிறகுகள், கீதாரியின் உப்புக்கண்டம் என்ற இரு கவிதைத் தொகுப்புகளையும், குளம்படி என்ற புதினத்தையும் எழுதியுள்ளார். இதோடு தமிழ்நாட்டிலிருந்து மேய்ச்சல் நிலத்தை மைய்ப்படுத்தி வெளியாகும் “கிடை” காலாண்டு இதழின் ஐந்து ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *