முன்னொரு காலத்தில் சிநோயுமா என்ற சின்னஞ் சிறிய மலையடிவாரக்கிராமத்தில் மினோகிச்சி என்ற இளைஞனும் வயதான அவனது தந்தையும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் வேட்டையாடுவதில் சிறந்தவர்கள்.
ஒரு பனிக்கால நாள் அன்று மினோகிச்சியும் அவன் தந்தையும் வேட்டையாட மலையடிவாரத்திற்கு சென்றனர். வெகு நேரம் சுற்றியும் எந்த மிருகங்களும் அவர்களது கண்ணில் படவில்லை.
திடீரென்று இருட்டி விட்டது. மலையிலிருந்து வீசிய பனிக் காற்றால் அவ்விருவருக்கும் குளிர் தாங்கமுடியாமல் நடுங்கினர். அப்பொழுது அங்கே இடிந்த குடிசை ஒன்று இருந்ததை அவர்கள் கண்டனர். இருவரும் உடனே அந்தக் குடிசைக்குள் சென்றனர்.
பிறகு, அக்குடிசையில் அவர்கள் தீமூட்டி சூடேற்றிக் கொண்டனர். இருவருக்கும் களைப்பாக இருந்தது. சிறிது நேரத்தில் தகப்பனார் தூங்கி விட்டார். ஆனால் மினோகிச்சி நிம்மதியின்றி இருந்தான். சற்று நேரத்தில் அவனும் களைப்புடன் படுத்தான்.
நடு இரவில் அரைகுறையாக தூங்கிக் கொண்டிருந்த மினோகிச்சி குடிசைக் கதவு தானாக திறப்பதை உணர்ந்தான். அங்கே ஒரு அழகான தேவதை தோன்றினாள். யார் அது? என்று கேட்பதற்கு அவன் எழுந்தான். பாறை ஒன்று தன்னை அழுத்தியிருப்பது போல களைப்போடு இருந்ததால் அவனால் எழுந்திருக்கவோ, பேசவோ முடியவில்லை.
அந்த பெண், மினோகிச்சியை திரும்பிக் கூட பார்க்காமல், படுத்திருந்த அவன் தந்தை அருகே சென்று குனிந்து பார்த்தாள். அவள் விட்ட மூச்சு அந்த அறை முழுவதும் குளிர்ந்த வெண் பனிக்காற்றாக பரவியது.
மினோகிச்சி, மீண்டும் ‘யார் அது?’ என்று கேட்க எழுந்தான். அப்போதும் அவனால் பேச முடியவில்லை. அந்த சமயத்தில் அந்த தேவதை அவனைத் திரும்பிப் பார்த்தாள். அப்போது அவள் முகம் வெள்ளைவெளேரென் றும், உதடுகள் செர்ரிப்பழம் போலவும், கருமையான கூந்தல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருந்தாள்.
அவள் அவன் அருகே சென்று மெல்லிய குரலில் சொன்னாள்:
“நீ இங்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்”. அவள் சொன்னதை அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.
“இந்த இடம் வெள்ளை இராச்சியத்தின் பனிக் கடவுளுக்கு சொந்தமானது. இந்த பனிக்காற்று உன் தந்தையின் உயிரை எடுத்துச் சென்றுவிட்டது. ஆனால் உன் உயிரை நான் காப்பாற்றுகிறேன். ஏன் என்றால் நீ இளைஞனாகவும், தைரியமுள்ளவனாகவும் இருக்கிறாய். ஆனால் இன்று இரவு இங்கு நடந்த சம்பவத்தை நீ யாரிட மும் ஒருபோதும் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் நீ உடனே இறந்து விடுவாய்.”
அவன் தூக்கத்திலிருந்து மீண்டும் எழுந்திருப்பதற்குள் தேவதை சொல்லிவிட்டு மாயமாக மறைந்து விட்டாள். அவள் நின்ற இடத்தில் இப்போது வெறும் பனித்துகள்கள் மட்டுமே சிதறிக் கிடந்தன.
உடனே மினோகிச்சி, தந்தை அருகே சென்று “அப்பா! அப்பா!” என்று கூப்பிட்டான். அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. பிறகு அவரை அவன் தொட்டு எழுப்பினான். ஆனால் ஒரு பலனுமில்லை. அப்போதுதான் தெரிந்தது, அவர் இறந்துபோய் விட்டார் என்று.
மறுநாள் காலை மினோகிச்சி கீழே உள்ள கிராமத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் தன் தந்தை இறந்ததைச் சொன்னான். அவர்கள் எல்லாம் வந்து இறுதிச் சடங்கை செய்தார்கள்.
இப்பொழுது மினோகிச்சிக்கு உலகில் யாரும் துணை இல்லாமல் போய்விட்டான். அவன் மிக மனவருத்துடன் தன் குடிசைக்கு வந்தடைந்தான்.
ஒரு ஆண்டு கழிந்து போயிற்று. மறுபடியும் பனிக்காலம் வந்தது. ஒரு நாள் நடுஇரவில் பனிக்காற்றுப் பலமாக வீசியது. அதைக் கேட்டுக் கொண்டே மினோகிச்சி படுத்திருந்தான். அப்பொழுது டான்! டான்! என்ற கதவு தட்டும் -சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என அவன் நினைத்தப்படியே கதவைத் திறந்தான். அப்போது அங்கே வாசலில் ஒரு அழகியபெண் நின்றிருந்தாள். அந்தப் பெண் மினோகிச்சியை பரிதாபமாகப் பார்த்தாள். “நான் என் கிராமத்திற்கு போகும் வழியில் புயல் காற்று பலமாக வீசியதால் வழி தவறி இங்கே வந்து விட்டேன்” என்றாள் அவள். அதனால் இன்று தங்குவதற்கு இரவு இங்கு அனுமதிக்க வேண்டும் என்று அவள் அவனிடம் கேட்டாள் “என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் இங்கே. தங்க முடியாது. ஏன் என்றால் நான் ஒருவன் மட்டும் தான் இங்கே இருக்கிறேன்”என்றபடியே அவளை அவன் உற்றுப் பார்த்தான்.
அவள் களைப்பாகவும் கவலையோடும் இருப்பதை உணர்ந்த அவன் அவளைத் திருப்பி அனுப்ப மனம் இல்லாமல் அவளை உள்ளே வரும்படி சொன்னான்.
அவன் சமைத்து வைத்திருந்த கஞ்சியை அவளுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டான். பிறகு அவளும் ஒரு அனாதை என்று அவனுக்கு தெரிய வந்தது. அவளுக்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான். அவளை தன்னோடேயே இருக்கும்படி கூறினான்’ மினோகிச்சி.
சில நாட்கள் போனபிறகு, இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அவள் ஒரு நல்ல குணமுள்ள மனைவியாக அவனுக்கு தேவையான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தாள். அதன் பின் அவர்களுக்கு நான்கு அழகான குழந்தைகள் பிறந்தன.
மினோகிச்சி மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவோடும் வாழ்ந்து வரலானான்.
அவர்கள் அற்புதமான சூரிய வெளிச்சத்தில் வெளியே வரமாட்டார்கள். எப்போதும் அழகிய மாலைப் பொழுதிலும் நிலாவேளைகளிலும்தான் அவளும் குழந்தைகளும் தோட்டத்தில் வந்து பாட்டுபாடி விளையாடிப் பொழுதைக் கழிப்பார்கள்.
சில வருஷங்களின் பிறகு ஒரு குளிர் காலம் அன்று, மினோகிச்சி குளிருக்கு தீமூட்டி அதன் அருகே ஒருநாற்காலி மேல் சாய்ந்த படியே இருந்தான். அப்போது பலமான புயல் காற்று வீசிக்கொண்டு இருந்தது.
அதைப் பார்த்து மினோகிச்சிக்கு தன் தந்தை இறந்த பழைய நினைவுகள் ஞாபகத்தில் வந்தன.
“எனக்கு அன்று நடந்தது நன்றாக நினைவிருக்கிறது. ஆம்! இன்று இரவு போல் அன்றும் பனிக்காலம். புயல் காற்று அப்போது பலமாக வீசியது” எனத்தொடங்கி அந்த தேவதையின் கதையை தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அவள், அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனிக்காமல் மேலும் தொடர்ந்து அந்த கதையைச் சொல்லி முடித்தான்.
பிறகு உற்சாகத்தோடு,
“எவ்வளவு அற்புதம். நீயும் அந்த தேவதையைப் போலவே, இருக்கிறாய். அது மட்டும் அல்ல உன்னை நான் முதல் முதலில் பார்த்ததைப் போலவே இப்போதும் இருக்கிறாய். நான் சிறுவனாக இருக்கும் போது பனித் தேவதை மலையில் திரியும் கதையைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்று உண்மையாகவே அத்தேவதையைப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! நீயும் அவளைப்போலவே இருக்கிறாய்,” என்று அவன் கூறிமுடித்தான்.
“ஓ! என்ன காரியம் செய்து விட்டீர்கள்” என்று அவள் கூறியபடியே அவனது கால்களை பிடித்துக்கொண்டு தலைதலையாய் அடித்துக் கொண்டாள்.
“நான் உங்களுக்கு அன்று என்ன சொல்லியிருந்தேன் என்பதை மறந்துவிட்டீர்களே, அன்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றல்லவா நான் சொன்னேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி விட்டீர்களே. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். சாகும் வரை உங்களுடனே இருப்பேன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னால் இனி இங்கே இருக்க முடியாது. நம் குழந்தைகளுக்காக உங்களின் உயிரைக் காப்பாற்றுகிறேன். அதைவிட வேறுவழியில்லை. நான் மறுபடியும் எங்கள் பனிக்கடவுளின் வெள்ளை ராஜ்யத்திற்கே போக வேண்டும்” என்றாள் அவள்.
அவன் திகைத்துப் போயிருந்தான்.
‘‘ஆம்! நான் தான் அந்தப் பனித் தேவதை. மலைகளிலே திரிபவள். அன்று புயல் வீசும் இரவில் உங்களை காப்பாற்றியவள் நான்தான்.”
அப்போதுதான் அவன், தனது முட்டாள்த் தனத்தை எண்ணி மனம் நொந்தான். ஆனால் இனி என்ன செய்வது? அவளின் அற்புத குணங்களையும், தியாக உள்ளத்தையும் எண்ணி அவன் மனம் வருந்தினான்.
அவள் மெல்லிய குரலில் அழுதுக் கொண்டே கீழே மயங்கி விழுந்தாள். பிறகு அவனது கண்முன்னாலேயே பனிக் கட்டிகளாக உருமாறி அங்கே சிதறிப்போய் கரைந்து போனாள் அந்த அற்புதமான பனித்தேவதை.
+++
நன்றி :- ரத்ன பாலா -1990 மார்ச் – எஸ்.லீலாவதி