“நல்லாயிருக்கியிலா! பாத்துப் பேசணும்னே நெனச்சுக்கிட்டே இருந்தேன் தலைவரே! அப்புறம் தொழில் போயிக்கிட்டிருக்கா. பப்ஸ் சாப்பிடறியளா? இப்பத்தான் மலையாளத்தான் பேக்கரிக்குச் சூடா நூறு பப்ஸ் போட்டுட்டு வர்றேன். ரெண்டா மூனா தலைவரே? டீ சேத்தி வாங்கிக்கிட்டு வரவா?”
“இல்ல. கோயலுக்குப் போகோணும். போயி ஒரு தேங்க ஒடச்சிட்டு வரோணும். பப்ஸ்களை உள்ளாரத் திணிச்சுட்டம்னா வயிறு டிம்னு ஆயிடும். நானே பீரு குடிக்கறவன். எதோ ஒரு நெமே மசமசப்பா இருக்கும். அதைம் உன்ன மாதிரி ஆளுங்ககிட்ட பேசிட்டிருந்தா கொறைஞ்சு போயி இன்னொரு தேங்கா ’ஒடைக்க’ வேணும். அதான் ஒன்னை ஒடச்ச ஒடனே நேரா வண்டி எடுத்துட்டு நிமிசம் நிக்காம ஊட்டுக்கு ஓடீர்றது’.
“தலைவரே…தேங்காங்றீங்க, கோயல்ங்றீங்க. பீருங்றீங்ளே. இந்த மரமண்டைக்கி ஒன்னு புரியலைல்லா!”
“உனக்கு ஒரு எழவும் தெரியாது. சரி நீயும் வா.’
“ஐயோ தலைவரே அதை உட்டுப் பல வருசம் ஆச்சு. பொண்டாட்டி கொன்னு புடுவா.’
“எம் பொண்டாட்டி கொல்றதில்லையே!’
“நீங்க கொடுத்து வச்சிவீக தலைவரே.’
“சரி. நீ உடனே போகணுமா? இல்ல லேட்டா போனாப் போதுமா?”
“ரெண்டு வசூல் மட்டும்தான் தலைவரே! மெதுவாப் போனா போதும்”.
“அப்புறம் உன்னோட மேரேஜ்.. லவ்மேரேஜ்னு சொன்னாங்ளே. எப்படி நீயா போயி வலை விரிச்சியா? இல்ல விரிச்ச வலையில் நீ போயி விழுந்துட்டியா? உன்னோட வயசு என்ன?”
“இப்ப முப்பத்தி நாலு தலைவரே. மேரேஜ் பண்றப்ப இருபத்தி நாலு. பத்து வருசம் ஓடிப்போச்சு. வீட்டுல ரெண்டு பொண் கொழந்தைக.’
”சரி. சந்தனத்தை நெத்தியில ஒரு எடம் பாக்கி உடாம பூசி இருக்கியே. ஊரை ஏமாத்தவா?”
“போங்க தலைவரே. சரி நானு ஒன்னு கேட்டுக்கிடட்டுமா? டெய்லி எதாச்சிம் புத்தகமும் கையுமாவே இருக்கீகளே பாக்குறப்பெல்லாம். இதுக்கெல்லாம் விலை நூறு, நூத்தம்பதுன்னு போட்டிருக்கே. எப்டி சமாளிக்கறீங்க?”
“நீயும் படிக்கிறயா? எடுத்துட்டுப் போ. இது வந்து இந்த மாத உயிர்மை.. இது தமிழ்வெளி, இது மணல்வீடு”.
”எனக்கு படிப்பறிவு இல்ல தலைவரே! நீங்க கதை எழுதுவீங்கன்னு உங்க ஊர் தாண்டி முருகம்பாளைத்துல இருந்து ஒரு பையன் வருவானே சுந்தரமூர்த்தியின்னு அவன் சொன்னான். அந்தப் பையனும் கதை எழுதுவான் தலைவரே!’
“அட எனக்குத் தெரியாம யார்ரா அந்த ஊர்ல கதை எழுதுற பையன்? என் மாப்ளதான் எழுதுறான்.”
“அந்த ஊர்ல கோயிலுக்குப் பக்கத்துலயே வீடு.’
“சரி. அதை உடு. உனக்குத்தான் படிக்கவே தெரியாதே. எப்டி? நீ இங்க இருக்கே. அவன் எப்டி உனக்கு பழக்கம்?”
“தறி ஓட்டீட்டு இருந்தப்ப ப்ரெண்டு தலைவரே. முந்தா நேத்து வீட்டுக்கு வந்திருந்தான். ஒரு கதை படிச்சுக் காட்டினான். எனக்கெல்லாம் கண்ணீரே வந்துடுச்சு.”
“கண்ணீர் வர்ற மாதிரி எழுதீட்டானா?”
“ஆமா தலைவரே. சுனாமி வந்து ஊரை அடிச்சிச்சில்ல. அதை வெச்சு எழுதியிருக்கான். சுனாமில் கதாநாயனோட காதலி செத்துடறா தலைவரே! அவன் படிக்கப் படிக்க அழுதுட்டேன். அப்பிடி உருக்கமா எழுதியிருக்கான். உங்களுக்குப் பழக்கம் இருக்கும்னு நெனச்சனே.’
“சரி பப்ஸ் ரவி அதை விடு, உன்னைப் பத்தி ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன். நீ எப்டிக் காதலிச்சேன்னு சொல்லேன்.”
“என்னோட காதல் என்ன காதல் தலைவரே? முந்தா நேத்திக்கி என் வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சின்னப் பொண்ணு ஏழாப்புதான் படிக்குது. பத்தாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு லெட்டர் குடுத்துடுச்சு. அந்தப் பொண்ணோட அப்பா தன்னோட பொண்ணுகிட்ட இருந்த பையனோட லெட்டரைத் தூக்கீட்டு பையன்கிட்ட சண்டைக்குப் போயிட்டாரு! போலீஸ் ஸ்டேசன்ல கொண்டி குடுத்து உன்னை உள்ளார உக்கோரவைக்கறேன்னு சொல்ல ஏக ரகளை தலைவரே! அந்தப்பயலும் அவனோட வீட்டுக்கு உள்ளார ஓடி லெட்டர்களை எடுத்தாந்து, நானும் குடுக்கறேன்னு நின்னானாம். பார்த்தா அதுல ‘படுத்தா உறக்கமில்லே. பாய் விரிச்சா தூக்கமில்லே’ன்னு அந்தப்புள்ளை எழுதியிருந்துச்சாம்”.
“பயங்கரமான காதலா இருக்கேடா?”
“ஆமாத்தலைவரே. வெளையாட்டுப் புள்ளைங்க சமாச்சாரம் பாத்தீங்களா எப்படின்னு.’
“சரி உன்னுதச் சொல்லு. அட என்ன நீ இன்னமும் வெட்கப் படறே? சரி அந்தப் பொண்ணை எங்கெ மொத மொதலாப் பார்த்தே?”
“தலைவரே நானோ வெளியூரு. நான் இங்க விஜயமங்கலம் வந்தப்ப இருந்து பார்த்தா பதனஞ்சு வருசம் ஆயிப்போச்சு. வந்ததும் மேக்கூர்லதான் தறி ஓட்டக் கத்துக்கிட்டு ஓட்டீட்டு இருந்தேன். அப்படியே கூடத் தறி ஓட்டறவங்க ரெண்டு பேரு பழக்கமாயி தங்கிட்டோம். ஒரு ரூம்ல வாடகைக் காசைப் பிரிச்சுப் பிரிச்சுக் குடுத்துட்டு இருந்தோம். என்னோட ரூம்ல இருந்த ஒருத்தனோட நண்பன்தான் என்னோட மச்சினன். நண்பன்தான் மச்சினங்கூட அறிமுகப்படுத்தி உட்டான். அவனும் மேக்கூர்தான். ஒரு வீதி உட்டு அடுத்த வீதி அவுங்குளுது. மச்சினன் கொஞ்சம் சரக்கு அடிப்பாப்ல. நானும் அடிப்பேன். ரெண்டு பேரும் ரூமுக்கே வாங்கீட்டுவந்து சாப்புடுவோம். அவன் வீட்டுக்கெல்லாம் போயிட்டு வருவேன்”.
“அதெப்படி அவன் ஊட்டுக்குள்ளார முட்டுனே?”
“தென்ன தலைவரே கேள்வி கேட்கறீங்க. ப்ரண்டுன்னா வா போலாம்னு கூப்புட்டு போவாப்லைல்ல. இப்ப நீங்க கூட்டிட்டுப் போவமாட்டீயளா? அது மாதிரிதான்”.
“அப்ப நண்பனோட தங்கச்சிய நீ எப்படிக் காதலிக்கலாம். உன்னை நம்பித்தான அவனோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான்.”
“ஐய்யோ ஆமாம் தலைவரே. சொல்றதை முழுசாக் கேளுங்க. அப்புறம் அவனைக் கேட்டுட்டுப் போறப்ப சில நேரம் இருக்கமாட்டான். என் பொண்டாட்டிதான் இருப்பா. காபி குடுப்பா. ‘சரி வந்ததா சொல்லிடுங்க’ன்னு சொல்லிட்டு வந்துடுவேன். அப்புறம் சபரிமலைக்கு ஒருக்கா மாலை போட்டேன் தலைவரே. சரி சுத்தபத்தமா இருக்கோணும்ல. அதுக்காக என் பொண்டாட்டி வீட்டுக்குப் பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்கவும் மலைக்குப் போயிட்டு வர்றவரைக்கும் அங்கத் தங்கிக்கிடலாம்னு வந்துட்டேன்.”
“நேரம் பாரு, அவுத்திக்கே வீடும் கெடைச்சிருக்குது.’
”காலையில நேரமே குளிச்சுட்டு ஈஸ்வரன் கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்டுட்டு வருவேன். என் பொண்டாட்டியும் அதே நேரத்துல கோயலுக்கு வர ஆரம்பிச்சுட்டா, அவளாகவேதான் ஈஸ்வரன் கோயில்ல வெச்சு என்னை கட்டிக்கிடறீங்களா?ன்னு கேட்டா. என்ன சொல்றதுன்னே தெரியல எனக்கு.
ஐயோ, உன் அண்ணன் என்னோட நண்பன்மா. எப்பிடி உங்க குடும்பத்துக்குத் துரோகம் பண்ண முடியும்’ அப்படினுட்டு வந்துட்டேன். நான் வேலைக்குப் போற வர்ற நேரமெல்லாம் என்னையவே பார்த்துட்டு நிப்பா. கோவிலுக்கு கிளம்புறதுக்குள்ளார அவிங்க வீட்டுல விசயம் தெரிஞ்சு என் பொண்டாட்டிய அடிச்சுப் போட்டாங்க. இருந்தும் நான் மலைக்குப் போற அன்னிக்கு நூறு ரூவா கொண்டுவந்து குடுத்தா’.
“அட! பப்ஸ் ரவி, அவுளுக்கு நூறு ரூவா ஏது?”
“தலைவரே! அவ வீட்டுலயே தையல் மெசின் வெச்சுட்டு ஜாக்கிட்டு தைப்பா. அந்தக் காசைக் குடுத்தா.’ அப்புறம் கோவிலுக்குப் போயிட்டு வந்தாச்சு. நானும் அந்த வீட்டைக் காலி பண்ணீட்டு நண்பர்கள் வீட்டுக்கே வந்துட்டேன்.
“சரி எங்காச்சிம் ஜோடியா போனீங்ளா?”
“ஒரே ஒரு வாட்டி ஊத்துக்குளி கைத்தமலை போயிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கிட்டோம்.
“பஸ்சுல போனீங்களா?”
“டிவிஎஸ் வெச்சிருந்தேன் தலைவரே. இந்தா கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இருக்கில்ல. அங்கதான் வந்து நிக்கச் சொல்லிக் கூட்டிட்டுப் போயிட்டு அதே எடத்துல கொண்டுவந்து இறக்கி உட்டேன். கதை இப்பிடிப் போயிட்டு இருந்துச்சா அதுக்கும் தீவினை வந்துடுச்சு. எங்க குடோன்ல வேலை டல்லுன்னா கொஞ்சம் எட்டி இருக்கிற இன்னொரு குடோன்லயும் போயி ஓட்டுவேன். அங்க அவிங்க அம்மா தார் போடும். ஒரு நாள் மதியத்துக்கும் மேல அம்மா வராம புள்ளையே வந்துடுச்சு. எங்கம்மாக்கு தலை வலின்னு வந்தேன்னு சொல்லுச்சு. சாயந்திரமா அதும் போயிடுச்சு. நைட்டு ஒரு ஏழு மணி இருக்கும் என்னோட நண்பன் ஓடியாந்து இந்த மாதிரி விஜயமங்கலம் பஸ்ஸ்டாப்புக்கு உன்னை வரச் சொல்லுது. அவசரமாமான்னு சொல்ல.. போயிப் பார்த்தா.. எம் பொண்டாட்டி பையோட நிக்கா! வீட்டுல பயங்கரமான பிரச்சனை ஆயிடிச்சாம். எங்காச்சிம் கூட்டிட்டு போங்கன்னு நிக்கா. நான் வேற கட்டுன வேட்டி சட்டையோட கையில டீக் குடிக்கக்கூடக் காசு இல்லாம நிக்கேன். என்னம்மா பண்றது திடீர்னு? அப்படின்னேன், நூத்தி முப்பத்தி அஞ்சு ரூவா வெச்சிருக்கேன்ங்றா.’
“டேய் ரவி, உன் கையில காசு இல்ல? நூத்திமுப்பத்தி அஞ்சுதான் அது வெச்சுருக்குது?”
“சத்தீமா தலைவரே. கொமராபாளையத்துல என் நண்பன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறப்ப மணி ஒன்பது ஆயிடிச்சு. அவனும் ‘வாடா வாடா’ன்னு வீட்டுக்குள்ளார கூட்டிட்டுப் போனான். அவனோட அம்மாதான் கொஞ்சம் பயந்து போச்சு. சரின்னு அவன்தான், இனி இவங்களை எங்க தாட்டி உடறது? யாரையும் தெரியாது. எதா இருந்தாலும் காலையில பேசிக்கிடலாம்னு சொல்லிட்டான்.”
“நைட்டு தனியா படுத்தீங்ளா? ஒட்டுக்காவா?”
“தனியாத்தான் தலைவரே. எல்லாருக்கும் பர்ஸ்ட்நைட்டு அப்படின்னா எங்களுக்கு பர்ஸ்ட் பகலு. அடுத்த நாள் காலையில அவங்க வீட்டுல இருக்குற சாமி படத்து முன்னால மஞ்சள் கவுத்தைக் கட்டீட்டேன். பையன், அம்மா அப்பா எல்லாம் எங்களை வீட்டுல விட்டுட்டு வேலைக்குப் போயிட்டாங்க. நாங்க ஆரம்பிச்சுட்டோம்.’’
“ஏன்டா அப்புடி என்ன பரப்பு? நெதானமா செட்டில் ஆயி ஆரம்பிக்கலாம்ல!”
“என்ன தலைவரே பேசறீங்க? அதான் பொண்டாட்டி ஆயிட்டாள்லா அப்புறமென்ன.? அப்புறம் கொமராபாளைத்துல தனியா காட்டுக்குள்ளார ஒதுங்கிக்கெடந்த கிராமத்துல ஒரு குடோன்ல மூனு வருசம் தறி ஓட்டினேன். அங்கயே தோட்டத்துல வீடு. இன்னமும் அந்த ஓனரு ஊர்த் திருவிழாக்கு வந்துடு ரவின்னு சொல்லுவாப்ல. கும்பாபிசேகத்துக்கு ரெண்டாயிரம் குடுத்தேன். கல்வெட்டுல என் பேரைக் கோயில்ல போட்டிருக்காங்க.”
“நீ ரொம்ப தைரியமான ஆளு பப்ஸ் ரவி. நூத்தி முப்பத்தி அஞ்சு ரூவாய நம்பிக் கிளம்பி ஜோடியும் சேர்த்துக்கிட்டே! அப்புறம் எப்டி இங்க செட்டில் ஆனிங்க?’
“திருவிழாவுக்கு நண்பனைக் கூப்பிடலான்னு வந்தேன். விஜயமங்கலத்துல அவன் வீட்டுக்குப் போனா, பக்கத்து வீடுதான் என் மாமியா வீடாம். அப்பவே பழைய வீட்டைக் காலி பண்ணீட்டு இங்க வந்துட்டாங்களாம். மச்சினன் வேற ‘வாங்க மாமா’ன்னுட்டான். சரியின்னு ஒரு நைட்டு தங்கீட்டு அவங்களையும் திருவிழாவுக்கு வரச்சொல்லிட்டுப் போனேன். எல்லோருமே வந்தாங்க. அப்புறம்தான் இங்க வந்து செட்டில் ஆயிட்டது! அப்புறம் தறி ஓட்டிட்டு இருந்தா சுத்தாப்படாதுன்னு பப்ஸ் போட்டேன். முதல் ஏவாரம் பல்லகவுண்டம்பாளையம் சந்தை. எண்ணெய்ச் செலவு, பொருள் வாங்குன செலவு போக கூடமாடப் பொண்டாட்டியும் ஹெல்ப்பு பண்டுவா. முன்னூறு ரூவா நின்னுச்சு. அப்புறம் விஜயமங்கலம் சந்தை. இப்புடியே ஓடிட்டு இருக்குது தலைவரே!”
“ரொம்ப சாமாத்தியசாலி ரவி நீ. சரி நட துளி ஊத்துவோம். நான் சப்ளை பண்றேன்.”
“ஐயோ தலைவரே அது மட்டும் கிடையாது. சரி வரட்டுமா தலைவரே. நாளைக்குப் பார்ப்போம்” என்றவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
00