ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்

            “குற்றாலம் குற்றாலம்” என்று சத்தமிட்டபடியே பேருந்து வாசலில் நின்று கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஆட்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து வண்டியில் ஏறினர். தென்காசி பேரூந்து நிலையத்தில் இருந்து வண்டி மெதுவாக இயக்கத்தொடங்கியது.

             கைகளை படுக்கை வாட்டில் நீட்டியவாரு வண்டியை நிறுத்தக்கோரியபடி ஓடிவந்தாள் அவள். ஓட்டுனரும் வண்டியை நிறுத்த பேரூந்தில் இருந்த அத்தனைக் கண்களும் வாசலையே கண்டது.

         நேர்த்தியாக உடுத்தப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணப் புடவை, ஒற்றை பின்னல் ஜடை, பாங்கான முகத்தில் அளவான ஒப்பனை, சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் முகம் மலர்ந்த புன்னகையுடன் பேரூந்தில் ஏறினாள் அவள். அத்தனைக் கண்களும் அவளை மொய்த்திட வாசல் அருகில் இருந்த முதல் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.

பேரூந்து கிளம்பத் தொடங்கியது. அடுத்தடுத்த நிறுத்தத்தில் ஆட்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். ஆனால் ஒருவரும் அவள் அருகில் அமரவில்லை. அவளின் அருகே இருக்கை காலியாகவே இருந்தது. நடத்துனரும் டிக்கெட்டுகளை வழங்கியபடியே அவளையும் மற்றவர்களையும் பார்த்தபடியே சென்றார்.

     தாரளமாக உட்காரும் வண்ணம் இருக்கையில் இடம் விட்டு அமர்ந்திருந்தாள். காலியான இருக்கை அவளை சர்பம் போல தீண்டுவதாய் தோன்றியது. பேசாம எந்திருச்சிட்டா என்ன ?என்று யோசித்தபடியே அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். அதுவரை அவளை பார்த்தவர்கள் அவள் பார்த்ததும் பார்வைகளை வேறு வேறு திசைக்கு மாற்றினார்கள்.

      பேரூந்து நன்னகரம் நிறுத்தத்தில் நின்றது. வயதான பெண்மணி ஒருவர் ஏறினார். இவர் எப்படியும் அருகில் அமர்ந்துவிடுவார் என்று எண்ணியவள். தாரளாமாக அமர இடம் கொடுத்தவாரு ஜன்னலை ஒட்டியாரு அமர்ந்தாள். அந்த வயதான பெண்மணியோ அவளை சட்டைசெய்யாமல் இரண்டு இருக்கைகள் தள்ளி நின்றாள்.

   ஏமாற்றம் எதிர்ப்பார்த்த ஒன்று தான் இருந்ததும் மனம் லேசாக வலிக்கத்தான் செய்தது அவளுக்கு. முகூர்த்த நேரம் என்பதால் பேruந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் அந்த இருக்கையில் அமரமட்டும் யாரும் தயாராக இல்லை. தொடர்ந்த பேரூந்து ஸ்டேட் பேங்காலனியில் நிற்கவும் இரு குழந்தைகளோடு பெண் ஒருத்தி ஏறினாள். ஏறியதுமே காலியான இருக்கையை கண்ட குழந்தை குஷியாக அமர சென்றது. குழந்தையின் கையை பிடித்து இழுத்தவள் “அறிவு இருக்கா இல்லையா உன்னால கொஞ்ச நேரம் நிக்க முடியாதாக்கும் ஏறுனதும் உடனே உட்காந்துடனுமோ. கொஞ்சம் பொறு வேற சீட்டுல உட்காந்துக்கலாம்” என்றவளின் வார்த்தை குழந்தைக்கு புரிந்ததோ இல்லையோ அவளுக்கு நல்லா புரிந்தது. மனம் வெதும்பியவள் தன்னை நொந்தபடியே சன்னலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

      நாட்கள் பின்னோக்கி நகர்ந்தது. “அம்மா உங்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றபடியே வந்தான் முருகன்

“என்னடா சொல்லப்போற பீடிகையெல்லாம் பலமா இருக்கு” என்றபடியே பூரிக்கு மாவை பிசைந்து கொண்டிருந்தாள் சரஸ்வதி.

“அம்மா இப்பலாம் எனக்கு இந்த டவுசர்சட்ட போட புடிக்கலமா”

“என்னடா பேன்ட் வேணுமா, அப்பாக்கிட்ட சொல்லி அடுத்த மாசம் சம்பளம் போட்டதும் வாங்கி தரச்சொல்லுறேன் சரியா”

“அது இல்லம்மா…”

“அப்பறம் என்னடா சீக்கிரம் சொல்லு எனக்கு வேலை கிடக்கு”

“எனக்கு செல்வி அக்காவ மாதிரி பாவாடை சட்டை போடனும்னு ஆசையா இருக்கு மா”.

சரஸ்வதி மாவு பிசைவதை நிறுத்தியவள். முருகனிடம் வந்தாள். “என்னடா சொல்லுற புரியிற மாதிரி சொல்லு டா “

“அம்மா எனக்கு இப்படி இருக்க பிடிக்கலமா பெம்மள பிள்ளையா இருக்கனும்னு ஆசையா இருக்குமா. பசங்க கூட விளையாடவோ, பழகவோ பிடிக்கலமா”.

சரஸ்வதி அதிர்ந்துவிட்டார். சரஸ்வதி வாக்கப்பட்டதோ கூட்டுக்குடும்பம் அண்ணன் தம்பி ஐந்துபேரில் சரஸ்வதி வெங்கடேசன் தம்பதிக்கு மட்டும் தான் ஆண் மகன் பிறந்தான் மொத்தக் குடும்பத்திற்கும் இவனே ஒற்றை மகனாய் வலம் வந்து கொண்டிருந்தான். அப்படி இருக்கையில் இவனின் இந்த மாற்றத்தை எப்படி கையாள்வது என்ற பெரும் அச்சம் எழுந்தது சரஸ்வதிக்குள். 

இரவு உணவுக்கு பின் சரஸ்வதி முருகனின் மாற்றத்தை வெங்கட்டிடம் கூறினாள். அவனிடம் எந்த பதிலும் வரவில்லை பெரும் மௌனம் அந்த அறையை சூழ்ந்திருந்தது. குடும்பத்தை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்திலேயே இரவு தூக்கம் தொலைந்தது இருவருக்கும். விடிந்ததும் அனைவரின் முன்னிலையிலும் முருகன் நிறுத்தப்பட்டான். 

“ஏலேய் வெங்கட்டு அவன்தான் சின்னப்பயன் ஏதோ ஒளறுறான். நீ அவனுக்கு சொல்லி புரிய வைப்பிய அத விட்டுட்டு இப்படி வந்து நிக்க”. என்றார் வெங்கட்டின் மூத்த அண்ணன் .

“இல்லைணே பய தெளிவாத்தான் சொல்லுறான். நானும் இராத்தியே நல்லா கேட்டுட்டேன் எத்தன தடவ கேட்டாலும் இதத்தான் சொல்லாதான். பேசாமா அவன் போக்குலேயே அவன விட்டுட்டுலாம்னு தோணுது ணே” என்றான் வெங்கட்.

    “அட எவம்லே கிறுக்கு பயலாட்டம் ,பேசுறவன். இப்ப அவனுக்கு புத்தி சொல்லவா இல்ல உனக்கு புத்தி சொல்லவா” என்று கோவமாக கூறினார் வெங்கட்டின் மூன்றாவது அண்ணன்.

       “இங்க பாருங்க இதெல்லாம் ஆரம்பத்திலேயே சரிபண்ணிடனும். இப்படியே வளரவிட்டா பின்னாடி நமக்கு தான் அசிங்கம். அப்பறம் நாள பின்ன நம்ம வீட்டுக்கு பொண்ணு கேட்டு ஒரு பயலும் வரமாட்டானுங்க” என்ற முருகனின் பெரியம்மாவுக்கோ அத்தனை ஆத்திரம் அவனை பிறந்ததில் இருந்து கீழே இறக்கிவிடாமல் தூக்கி வளர்த்தவர் இன்று அவனை தூக்கி எறியும் அளவுக்கு போனது. முருகன் கண்கள் அவனின் பெரியம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தது.

“அக்கா அவன் மேல எந்த தப்பும் இல்லை நம்ம புள்ளைய நாமே வெறுக்க கூடாது. பாவம் புள்ள எங்க போவான்” என்ற சரஸ்வதியின் வாதம் அங்கு எடுபடாமல் போனது. அவர்களின் சலசலப்பு வீடெங்கும் எதிரொலித்தது .

“எனக்கான்டி யாரும் சண்டை போட வேண்டாம் நீங்க எல்லாரும் ஒன்ன இருங்க. என்னால உங்களுக்கு எந்த அசிங்கமும் வர வேண்டாம். நா எங்கையாது போயிடுறேன்” என்ற படி அனைவரின்முன் வந்து நின்றான் முருகன்.

      “உங்களால அவனோட இந்த மாற்றத்தை ஏத்துக்க முடியலேனா நாங்களும் அவனோட இந்த வீட்ட விட்டு போயிடுறோம். ஆனா எங்களால அவன தனியா விடமுடியாது” என வெங்கடேசனும்,சரஸ்வதியும் கூறினர்.

      அம்மா என்னால நீங்க யாரும் கஷ்டப்பட வேண்டாம். நான் இந்த வீட்ட விட்டு போயிடுறேன்” என்ற முருகனின் வார்த்தை அனைவரையும் அசைத்து பார்த்தது.

        வேறு வழியே இன்றி குடும்பத்தாரும் ஏற்றுக்கொள்ள . முருகனின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. அவனின் பாலின மாற்றத்தை மெல்ல மெல்ல குடும்பம் ஏற்றுக்கொண்டாலும் சுற்றமும்,மற்றவர்களும் ஏற்றுக்கொள்வதற்குள் மிகுந்த சிரமங்களையும் அவமானங்களையும் சந்திக்க நேர்ந்தது.

          கடைத்தெருவுக்கு சென்றுவீடு திரும்பிய சரஸ்வதியின் கண்களில் பக்கத்து வீட்டு பெண் தன் குழந்தை அடிப்பது பட்டது “என்ன மலரு புள்ளைய போட்டு இப்படி அடிக்க”

     “பின்ன என்னக்கா ஸ்கூலுக்கு போடானா போகமாட்டேனு அடம்பிடிக்கிறான் கழுதைக்கு இந்த வயசுல எம்புட்டு பிடிவாதங்கிய”

“அடியேய் புள்ளைக்கு போக புடிக்கலேனு சொன்னா என்ன காரணம்னு கேட்டு அத சரி பண்ணுவியா அதவுட்டுபுட்டு பச்ச புள்ளையப்போட்டி இந்தா அடி அடிக்கிறவ”

“ஆமா இவனுக்கு என்ன காரணம் இருக்க போகுது எல்லாம் கொழுப்பேரிப்போயி திறியிரக்கழுதை. இன்னும் நாளு சாத்து சாத்துனா வழிக்கு வந்துடும் க்கா”

“அடிச்சா எல்லாம் சரியாகிடுமா டி. அதுக போக்குல விட்டு புடிப்பியா அத விட்டுட்டு கைய நீட்டுறவ”

“எக்கா விட்டுபுடிக்கிறேனு அதுக பேச்சுக்கு நாம ஆட ஆரம்பிச்சா கடைசில உங்க வீட்டுல வந்து நின்ன மாதிரி எங்க புள்ளைங்களும் வந்து நின்ன என்ன பண்ணுறது . எல்லாத்தையும் முளையிலயே கிள்ளிடனும் இல்லாட்டி உன்னாட்டம் ஆம்பள புள்ளைக்கு வளையலும், ஜிமிக்கியும் வாங்குற நிலமை வந்துடும்” .

          சரஸ்வதிக்கு இது பழகிய ஒன்று தான். முருகன் எப்போது பெண்ணாக மாற விரும்புவதை வீட்டில் தெரிவித்தானோ அப்போதிருந்தே குடும்பம் மற்றும் ஊர்காரர்களின் கேளிபேச்சுக்களுக்கும், வசைச்சொற்களுக்கும் கொஞ்சநஞ்சம் அல்ல.

வெங்கட் வேலை முடிந்து வீடு திரும்பும் போது சலீம்பாய் டீக்கடையில் அமர்ந்து பேசிவிட்டு வருவது வழக்கம். அன்றும் அப்படி தான் வழக்கம் போல நண்பர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டவன் அவர்களோடு அமர்ந்தான். வெங்கட் அமரவுமே அந்த இடத்தை விட்டு எழுந்து செல்ல முயன்றான் சபரி.

“என்னடே நானும் பாத்துட்டே இருக்கேன் கொஞ்ச நாள என்னைய கண்ட ஆவாதவனக் கண்டமாரி தூரமா போற” என்று போறேன் வழிமறித்து நின்ற கேட்டான் வெங்கட்.

“உங்கட்டலாம் நான் பேச முடியுமாடே நீங்களாலாம் புரட்சிகாரங்களாடே “

” சபரி உன் பேச்சுக்கால் சரியில்லடே “.

“நீ பண்ணுறதும் தான் சரியில்ல நாங்க சொன்ன நீ கேக்கவா போற”.

“அப்படி என்னத்தடே சரியில்லாதத கண்ட எங்கிட்ட “

“உங்கிட்ட என்னத்த கண்டாக உம் அரும மவன்கிட்ட இல்ல இல்ல மவக்கிட்ட தான் கண்டேன்”

“தேவையில்லாமா புள்ளைய இதுல இழுக்காத டே”

      “அப்படி தான் இழுப்பேன் என்னலே செய்வ. அவன ரெண்டு தட்டு தட்டி ஒழுக்கமா வழக்க துப்பில்லை வந்துட்டான் எங்கிட்ட மல்லுகட்ட”

   “ஏய் சபரி நீ தேவையில்லாத வேலை பாக்கடே. அது அவன் பாடு அவன் புள்ள பாடு உனக்கு என்னடே வந்தது ” என்று டீக்கடை சலீம் பாய் சபரியை அடக்க முயன்றார். அவரின் முயற்சிகள் தோல்வியை தழுவியது. சபரி மீண்டும் கத்த தொடங்கினான். “சரியான பொட்ட பய அதான் அவன் புள்ளையும் ஒரு பொட்டையா போயிட்டான்” என்று சபரி கூறிமுடிக்கையில் வெங்கட்டின் கைவிரல்கள் சபரியின் கண்ணத்தில் பதிந்திருந்தது.

          “செரிக்கிமவனே பேசிட்டு இருக்கும் போதே கையவா நீட்டுற” என்ற ஆத்திரத்தில் டீக்கடை விறகில் இருந்து ஒரு கட்டையை எடுத்து வெங்கட்டை அடிக்க பாய்ந்தான். அதற்குள் கூடியிருந்த அனைவரும் அவனை தடுத்து அவனின் கையில் இருந்த கட்டையை பிடிங்கி எறிந்தனர். 

             “ஏலேய் சும்ம கெடக்கமாட்டாமா இப்ப எதுக்குலே இந்த வரத்து வார. அவன் புள்ள எப்படியோ போறான் உனக்கு என்னல வந்தது” என்றார் சலீம் பாய்

      “என்ன பாய் சொன்னீய உனக்கு என்னனா கேக்கிய எம் மவன் எங்கிட்ட கேக்கான் நானும் முருகன மாதிரி மாறுன நீயும் வெங்கடேஷ் மாமாவாட்டம் எனக்கு வளையலு பாவடை சட்டைலாம் வாங்கித்தருவியானு. இந்த பாவி பய மவனுவலால இந்த ஊரே நாசமா போக போது . அதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன் இவனுங்கள ஊர விட்டு வெரட்டுங்கனு யாராச்சும் கேட்டியலா. இப்ப பாருங்க பன்னி கூட சேந்து பசுவும் பீத்திண்ணக் கதையா இவன் புள்ளைய பாத்து மத்த புள்ளைங்களும் கெட்டுப்போக போகுதுங்க.”

     “சபரி சொல்லுறதும் நியாயம் தானப்பா. அவனுக்கு அவன் புள்ளைய எப்படி வளக்கனுமோ அப்படியே வளக்கட்டும் ஆனா அத கண்கானாத இடத்துல போயி வளக்கட்டுங்கேன். இப்படி ஊருக்குள்ள இருந்த மத்த புள்ளைங்களும் இவன் புள்ளைய பாத்து மாறிடாதுங்களா” கூட்டத்தில் இருந்த மூக்காண்டி குரல் எழுப்பினான். 

    “இப்ப என்னயா எம்புள்ளையால தான் உங்கபுள்ளைங்க கெட்டு போகுதுனா நாங்க வேணா எங்கயாச்சும் போயிடுறோம் யா” என்றபடி அங்கிருந்து தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார் வெங்கடேஷ்.

                  ****************

பிறந்த வளர்ந்த, வாழ்ந்த ஊரையும் பழகிய மக்களையும் விட்டு பிரியும் முடிவில் வீடுவந்து சேர்ந்தவரின் கண்களில் எந்தக்கவலையும் இன்றி வீட்டு முற்றத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த முருகன் பட்டான் ஆத்திரமும் ஆற்றாமையும் ஒருசேர நிரம்பி வழிந்தது ஓங்கி அவன் முதுகில் ஒரு அடி வைத்தார் .

“அம்மம்மா……., ” என்ற அலறல் சத்தத்துடனே ஊஞ்சலில் இருந்தது கீழே விழுந்தான் முருகன்.

மகனின் அலறல் சத்தத்தைக்கேட்டு ஓடிவந்த சரஸ்வதி கீழே கிடந்த மகனை மடியில் கிடத்தியபடியே “என்ன மனுசன்யா நீ .உனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு புள்ளைய போட்டி இப்படி அடிக்கிற” என்றபடி அவனின் முதுகை வருடிவிட்டார்.

“ஆமாடி கிறுக்குத்தான் புடிச்சிருக்கு. ஆனா எனக்கு இல்ல உம்மவனுக்கு. அதான் இந்த கிறுக்கு பயலால நான் எல்லார்க்கிட்டையும் அசிங்கப்படுறேன்”

“எவனோ எதோ சொன்னானு புள்ளைய போட்டு அடிக்கியே நீ வெளங்குவியா”

“எவனோ இல்லடி நேத்துவர எங்கூட திரிஞ்ச பயலுக கூட இப்ப எங்கூட சகவாசம் வைக்க யோசிக்கானுங்க எல்லாம் உம் மவனால . இது போதாதுனு இப்ப ஊரையே விட்டு போக்சசொல்லுறானுங்க .நான் எங்கடி போவேன் பாட்டன் பூட்டன் தாத்தன் அப்பன்னு தலைமுறை தலைமுறையா வாழ்ந்த ஊரவிட்டுட்டு. இந்த தறுதலைக்காக போகனுமாம் சொல்லுறானுங்க”

“அவனுக சொன்ன நாம போகனுமா. இது என்ன அவனுக அப்பன் ஊரா. இது நமக்கும் சொந்த ஊரு தான்யா அப்படிலாம் போக முடியாதுனு சொல்லு அத விட்டுட்டு பச்ச புள்ளக்கிட்ட வந்து உன் வீரத்தக்காட்டுற”.

         வெங்கட் எதுவும் பேசாமல் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்தான். “முடியலடி தினம்தினம் வெளில போயிட்டு வர்ரதுக்குள்ள பேசிப்பேசியே கொல்லுறானுங்கடி. என்ன என்னபண்ண சொல்லுற .முடியல சரஸ்சு எங்கயாச்சும் போயிடலாம். வாடி நீ நான் நம்ம புள்ளைனு நிம்மதியா வாழனும்டி இங்க இருந்தா அது முடியாதுடி என்று கையெடுத்து கும்பிட்டபடி அழத்தொடங்கினான்”

” என்னைய்யா இப்படி அழுகுற” என பதறியபடி வெங்கட்டிடம் வந்தாள். அவளின் மடியில் தலைவைத்த படி “எங்கயாச்சும் போயிடலாம் வாடி” என்று பினாத்த ஆரம்பித்தான். “சரிங்க போயிடலாம் நீங்க மொதல்ல அழுகைய நிப்பாட்டுங்க” என்று அவனின் கண்களை துடைத்துவிட்டாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த முருகனுக்கோ தன்னால் தான் இத்தனை துயரம் இவர்களுக்கு என்ற குற்ற உணர்வு மேல் எழும்ப அவர்களின் அருகில் வந்தவன் “அம்மா நா வேனா……..,” அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவனின் வாயை பொத்தியவள் இங்க பாரு முருகா குடும்பம் னா என்ன நடந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் துணையா நிக்கனும். எங்கையும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. இப்ப என்ன இங்க இருக்க முடியலைணா வேற எங்கையாது போயி இருப்போம் அம்புட்டுதான் அத விட்டுட்டு நா போறேன் நீ போறேன் என்ற பேச்சுக்கே இடமில்ல பாத்துக்கோ என்றாள் தீர்க்கமாக. அன்றிரவே முருகனின் குடும்பம் அந்த ஊரைவிட்டு கிளம்பியிருந்தது.

         தென்காசியில் வந்து குடியேறினர். புதிய ஊரில் புதிய வாழ்க்கை முருகனுக்கு தொடங்கியது. முருகனாக இருந்தவன் ஆசிரியை லெட்சுமியாக மாறினாள். அருகில் இருந்த ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தாள். செல்லும் இடமெங்கும் முதலில் கேளிகிண்டல்களும், பிறகு அவளின் திறமையை கண்டு மரியாதையும் கிடைத்தது. இகழ்ச்சியில் துவளவும் இல்லை புகழ்ச்சியில் மயங்கவும் இல்லை. அவள் அவளாக இருந்தாள் . ஆனால் என்ன செய்ய தினமும் வேலைக்காக அவள் மேற்கொள்ளும் இந்த பேரூந்து பயணத்தில் யாரேனும் ஒருவர் துணையாக அருகில் அமர்ந்துவிட மாட்டார்களா என்பது அவளின் பேராசையாக இருந்தது.

        “இங்க உட்காரலாமா” என்ற குரல் கேட்டு அவள் தன் பார்வையை ஜன்னலில் இருந்து திருப்பினாள் அவள் வயதொத்த யுவதி அவளின் அருகில் அமர அனுமதி வேண்டி நின்றாள் . தலையை அசைத்து அனுமதி வழங்கிட அருகினில் அமர்ந்தாள்.

“நீங்க எங்க இறங்கனும் “

“குற்றாலம்”. 

“அப்படியா நானும் குற்றாலம் ஊருக்கு புதுசுங்க. குற்றாலம் ஸ்டாப்புல இருந்து அருவி ரொம்ப தூரமாங்க” .

       “இல்லைங்க நடந்து போற தூரம் தான்”.

      “சரிங்க. ஆமா நீங்க வொர்க் பண்ணுறீங்களா ?”.

“ஆமாங்க . ஒரு ஆரம்ப பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்கேன்”.

    “சூப்பர்ங்க”.

இப்படி வழிநெடுக அவளோடு பேசிக்கொண்டே வந்தாள் அந்தப்பெண். வெம்மையை கக்கும் கோடை காலத்தில் சட்டென்று வானிலை மாறி மழைத்தூவதத் தொடங்கினாள் எப்படி இருக்கும் . அப்படி இருந்தது லெட்சுமிக்கு. இதயம் அதிவேகமாக அடித்துக்கொண்டது. அவள் கேட்கும் கேள்விகள் ஓவ்வொன்றுக்கும் தேர்வறையில் தேர்வெழுதும் மாணவனின் சிரத்தையோடு எந்தக் கேள்விகளையும் தவறவிடாது பதில் அளித்துக்கொண்டு இருந்தாள்.

சாரல் திருவிழாவுக்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன் என்ற பதாகையோடு வரவேற்றது குற்றாலம் .

“குற்றாலம் இறங்குறவங்க இறங்குங்க” என்றபடி நடத்துனர் குரல் கொடுக்க இருவரும் சிரித்தபடியே இறங்கினர்.

“அதோ தெரியுதுல அந்த பக்கமா போனீங்கனா மெயின் அருவி வந்துடும் “

“ரொம்ப நன்றி அக்கா”

“பரவால்லப்பா… எனக்கு லேட் ஆகிட்டு நான் வாறேன்” என்றபடி லெட்சுமிகிளம்பினாள்.

“அக்கா ஒரு நிமிஷம் உங்க பேர செல்லவே இல்லையே “

“லெட்சுமி..,”

“பேருக்கு ஏத்தமாதிரி லெட்சுமியாட்டம் தான் இருக்கிங்க பாத்துபோங்க” என்றபடி அருவியை நோக்கி சென்றாள்.

சாரல் மழையில் நனைந்த பரவசத்தோடு பள்ளிக்குள் நுழைந்தாள் லெட்சுமி.

00

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *