நான்
உச்சரிக்கும் போது
நழுவும் சொற்களில்
தழும்புகள் தட்டுப்படுகிறதா
என
தடவிப் பார்க்கிறீர்கள்
நான்
செவிசாய்க்கும் போது
நுழையும் ஒலிகளில்
முரண்கள் இழைந்திருக்கிறதா
என
முகர்ந்துப் பார்க்கிறீர்கள்
நான்
எழுதும் போது
உருபெறும் வார்த்தைகளில்
பிழைகள் கண்சிமிட்டுகிறதா
என
பிரியத்தோடு பார்க்கிறீர்கள்
நான்
இமைகளை விரிக்கும் போது
எனது பார்வையின் திசைகளில்
குற்றம் முளைத்திருக்கிறதா
என
நுட்பமாக பார்க்கிறீர்கள்
நான்
நடந்து போகும் போது
எனது தடங்களில்
கறை படிந்திருக்கிறதா
என
துடைத்துப் பார்க்கிறீர்கள்
நான்
உரை நிகழ்த்தும் போது
எனது கருத்துக்களில்
களங்கம் ஒட்டியிருக்கிறதா
என
உரசிப் பார்க்கிறீர்கள்
நான்
உச்சரிக்கும் சொற்களும்
நான்
கேட்கும் ஒலிகளும்
நான்
எழுதும் வார்த்தைகளும்
நான்
பார்க்கும் திசைகளும்
நான்
நடக்கும் பாதைகளும்
நான்
நிகழ்த்தும் உரைகளும்
எனது வரம்புக்கு
உட்பட்டவை
எதையும்
நானே தீர்மானிப்பேன்
ஒன்றன் மீது ஒன்றாக
எனது பிழைகளை அடுக்கி
அதன் மீதேறி
உங்களின் உயரத்தை
உயர்த்த விரும்பும்
உங்களுக்காகப்
பரிதாபப்படுகிறேன்
உங்களின் காத்திருப்புகள்
கைகூடாதவை
நான் என்னை
நம்பும் வரை.
ஐ.தர்மசிங்
நாகர்கோவில் சொந்த ஊர். ’இலையளவு நிழல்’ என்னும் கவிதைத்தொகுதி முன்பாக வந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.