திருமணத்திற்கு முன்புவரை வித்யாவுக்குத் தன்னுடைய அழகைப் பற்றி எந்த சந்தேகமும் இருந்ததில்லை. “இந்த சுடிதார் அழகா இருக்கு உனக்கு” “இந்த ஹேர்ஸ்டைல் சூப்பர்” என்று கல்லூரியில் தோழிகள் சொல்லும்போது அந்த நாள் முழுக்க மனசு ஜிலுஜிலுவென்று இருக்கும். திருமணமான இந்த மூன்று வருடங்களில்தான் முன்பில்லாத வழக்கமாக அடிக்கடி கண்ணாடிமுன் நின்று பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

“வித்யா, சீக்கிரம். எனக்கு ஆபீசுக்கு நேரமாவுது”

அலுவலகத்துக்குத் தயாராகிப் புடவை கட்டி முடித்துக் கண்ணாடி முன் நின்று தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த வித்யா இந்தக் கூச்சல் காதில் விழுந்ததும் வேகமாகப் போய் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு பாஸ்கரின் பின்னால் வண்டியில் ஏறி உட்கார்ந்தாள்.

உடல் முழுக்க வெளிர் பச்சை நிறத்தில் ஆங்காங்கே மஞ்சள் பூ வேலைப்பாடுடன் கூடிய ஆர்கன்சா புடவையை மெல்ல நீவி விட்டுக்கொண்டாள். வண்டியின் பக்கவாட்டுக் கண்ணாடியில் பாஸ்கர் தன்னைப் பார்ப்பதைக் கவனித்தவள் இந்தப் புதுப் புடவையைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறான் என்று தன் முகத்தை அவன் முதுகருகே நெருக்கி வைத்தாள்.

“இன்னிக்கு நீ காய்கறி வாங்க வேண்டாம். சாயந்திரம் வரும்போது நானே வாங்கிட்டு வந்துடறேன். என்ன வாங்கட்டும்?”

“———-“

“என்ன பதிலே வரல? சரி. நானே பாத்து எதாவது வாங்கிட்டு வரேன்”

மொத்த உலகமும் தனக்கானது என்கிற எண்ணத்தோடு வாழ்கிற பணக்காரர்களாய் வழியை ஆக்கிரமிக்கிற தண்ணீர் லாரிகள், தெருவில் வாழை இலை போட்டு மற்ற வாகன ஓட்டிகள் சாவகாசமாகச் சாப்பிடுவது போலவும் தாங்கள் மட்டுமே அவசரமாக எங்கோ போகவேண்டும் என்பதுபோலவும் விடாது ஹார்ன் அடிக்கும் ஆட்டோக்கள், முகம் முழுவதையும் மூடிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டோ மொபைல் ஃபோனில் யாருடனாவது கதை பேசிக்கொண்டே ஸ்கூட்டியில் பயணிக்கிற யுவதிகள் என முப்பது நிமிடங்கள் பயணித்த பிறகு அவளுடைய ஆபீஸ் வாசலில் அவளை இறக்கிவிட்டான். கையசைத்துக் கிளம்பியவன், “ஏ வித்யா, ஒரு நிமிஷம்” என்றதும் ஒரு புன்னகை மலர வேகமாக இரண்டு அடிகள் வைத்து அவனருகே சென்றாள்.

“இன்னிக்கு சாயந்திரம் உஷாவும் அவ வீட்டுக்காரரும் நம்ம வீட்டுக்கு வராங்க. நினைவிருக்கா? டின்னருக்கு எதாவது ஸ்பெஷலா சமைச்சுடு”

‘அதானே. கல்யாணமாகி இந்தனை வருசத்துல சொல்லாதத இன்னிக்கா சொல்லிடப் போறாரு’

“ம். சரிங்க “

உஷா, பாஸ்கரின் ஒரே தங்கை. “உங்களுக்கு என்ன அண்ணி? ஜாலியா கைப் பையை மாட்டிக்கிட்டு வெளியே கெளம்பிடுவீங்க. என்னைப் பாருங்க. நாள் முழுக்க வீட்டிலயே உக்காந்திருக்கணும்” வித்யாவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இதைச் சொல்லாவிட்டால் அவளுக்கு வித்யா செய்துதரும் வகை வகையான பண்டங்கள் எதுவுமே செரிக்காது.

அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு நிமிர்ந்தவள் ரகு உள்ளே நுழைவதைப் பார்த்து ஒதுங்கி வழிவிட்டாள். புன்முறுவலுடன் அவளைப் பார்த்தவன், “குட் மார்னிங்.  நிசமாவே சொல்றேன். இந்த சாரி உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு” என்றபடி கையெழுத்துப் போட்டான்.

“லேடீசுக்கு இது ஒரு வரம் ல. உங்களுக்குமட்டும் அழகழகா ட்ரெஸ் வகைங்க கொட்டிக் கிடக்குது.  பாப்பாவுக்கு ட்ரெஸ் எடுக்க நேத்து கடைக்குப் போயிருந்தோம். ஏ அப்பா. எவ்ளோ வெரைட்டீஸ். ஆண்கள்தான் பாவம்” என்று சத்தமாகச் சிரித்தவன், “சரிங்க மேம். பாக்கலாம்” என்றபடி வெளியேறினான்.

அப்படியே ஓரிரு நிமிடங்கள் அவன் போவதைப் பார்த்தபடி நின்றிருந்தவள் பிறகு சுதாரித்துக் கொண்டு தன் செக்சனுக்குள் நுழைந்தாள். வழக்கமான “ஹாய்” “குட்மார்னிங்” “சாப்பிட்டீங்களா” என்ற நலம் விசாரிப்புகளுடன் தன்னுடைய இருக்கைக்கு வந்து அமர்ந்தாள். அவசரமாகப் பார்க்கவேண்டிய கோப்புகள், நேற்றே முடித்திருக்க வேண்டிய வேலைகள் என்று பரபரவென்று இயங்கத் தொடங்கினாள். “இந்த ரிப்போர்ட் நாளைக்கு சாயந்திரத்துக்குள்ள என் டேபிள் மேல் இருக்கணும்” என்று சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் தருவதாக நினைத்து கூடவே “என்ன மேடம், புரியுதா?” என்பார் மேனேஜர். இது அவருக்குப் பிடித்த அதிகாரமான சொல்.

“இதென்ன அத்தாம்பெரிய அல்காரிதமா புரியாமபோக? சீக்கிரம் முடிக்கணும். அதானே” என்று மனதுக்குள் எழும் கலகக் குரலை அடக்கியபடி ஆடுமாதிரி தலையாட்டுவாள் வித்யா. மற்ற வேலைகளில் அந்த ரிப்போர்ட்டை மறந்துவிட்டவள், “மேனேஜர் சொன்னதுக்கு ஏத்த மாதிரி நடக்குதே”  என்று பதறி மொத்த கவனத்தையும் செலுத்தி அதை முடித்தாள். காபி குடித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபடி அந்த ரிப்போர்ட்டை மறுமுறை சரி பார்த்தவளுக்கு யார்ட்லி வாசம் அடித்தது.

நிமிர்ந்து பார்க்காமலே தெரிந்தது

வரலட்சுமி பக்கத்தில் எங்கோ இருக்கிறாள் என்பது. “வரூ” “வரூ” என்று ஆபீஸ் முழுக்க ஒலிக்கும் செல்லப் பெயர். ஒவ்வொரு முறையும் ஆண்கள் அதைச் சொல்லிக் கூப்பிடும்போதும் அவர்கள் முகபாவனையை உற்றுப் பார்ப்பாள் வித்யா. காற்றில் அலைபாயும் முடிக்கற்றைகளை நாகரீகமாக ஒதுக்கியபடி கவனமாகத் தீற்றப்பட்ட உதட்டுச் சாயத்தின் வழியே தெரியும் தெற்றுப் பல் சிரிப்போடு “வருன்னு, வருன்னு” என்று அவள் செல்வதை ஓரக் கண்ணால் பார்ப்பாள் வித்யா.

தன்னைக் கடக்கும்போது அவள் “ஹாய் வித்” என்றதும், “குட் மார்னிங், வரலட்சுமி” என்பாள்.

மேனேஜர் அழைத்தால் அவருடைய அறைக்குள் செல்ல மொத்த அலுவலகமே பயந்தாலும், வரலட்சுமி, “அவர் என்ன புலியா சிங்கமா?” என்பாள். அவர் கூப்பிட்டாலும் அதே “வருன்னு”தான். சிரித்தபடி அறைக்குள்ளே சென்று அதே சிரிப்புடன் வெளியே வருபவள் அவள்மட்டுமே.  அவள்  மேனேஜர் அறைக்குள் நிற்பதையும், கைகளை விரித்துப் பேசுவதையும், மேனேஜர் ஏதோ சொன்னதற்குத் தலை சாய்த்துச் சிரிப்பதையும் கவனமாக எதையோ கேட்பதையும் பிறகு உடலைப் பாதி வளைத்து நாடக பாணியில் வணக்கம் வைத்துவிட்டுக் கதவைத் திறப்பதையும் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்த வித்யா வேகமாகத் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

வரலட்சுமி இந்த அலுவலகத்தில் சேர்ந்த இந்தக் குறுகிய காலத்துக்குள்ளாகவே அவள் எல்லோருக்கும் பிடித்தவளாக மாறியிருப்பதை வித்யா கவனித்தபடி இருந்தாள். சுந்தர், இஸ்மாயில், சரவணன், விநோத், செபாஸ்டியன் என்று அவள் யாரிடம் பேசினாலும் அவளுடைய சேலை பக்கவாட்டில் சரிந்திருக்கிறதா, தேவையின்றி மேஜைமீது சாய்ந்து பேசும்போது இடுப்பருகே புடவை நெகிழ்ந்து இடுப்பைக் காட்டுகிறதா என்று பார்ப்பதை ஒரு கடமையாகப் பல மாதங்களாகச் செய்து வருகிறாள் வித்யா.

ரகுவிடம் பேசும்போது இந்தக் கண்காணிப்பு வளையம் இன்னும் இறுகும். ரகுவின் முகபாவனை, வரலட்சுமியின் உடல்மொழி, அவளுடைய குரல் குழைகிறதா,  உதட்டைக் குவித்துப் பேசுகிறாளா என்று இருவரையும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பதுபோல் மாறி மாறிப் பார்ப்பாள். அவன் அந்த அலுவலகத்தில் வேறு யாரிடம் பேசினாலும் பொருட்படுத்தாதவள்  வரலட்சுமியிடம் பேசும்போதுமட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம் என்று யோசிப்பாள்.  அவன் வரலட்சுமியிடமும் வெகு இயல்பாகப் பேசுகிறான் என்பது தெரிந்ததும் ஒரு பெருமூச்சு வெளியேறும்.

‘நிசமாவே சொல்றேன். இந்த சாரி உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு’

ம்ம்ம் ….அடிக்கடி குனிந்து தன் புடவையைப் பார்த்தபடி இருந்தவள் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். தண்ணீர் கேன் வைத்திருந்த மேஜைக்குப் போகும்போது காலருகே தவழ்ந்த புடவை மடிப்புகளை மெல்ல நீவிக்கொண்டே நடந்தாள். அப்போது ரகுவும் அங்கு வருவதைப் பார்த்ததும் நடையின் வேகத்தைக் குறைத்தாள். அவனைக் கவனிக்காதவள் போல தண்ணீர் டம்ளரை எடுத்துக்கொண்டு சாவகாசமாக அவனைத் திரும்பிப் பார்த்து எதாவது பேசலாம் என்று நினைத்தபோது, உற்சாகத் துள்ளலுடன் ஒரு குரல் அவளுக்குப் பின்னால் இருந்து கேட்டது.

“ஹல்லோ, ரகு சார்! எப்படி இருக்கீங்க? பாக்கவே முடியல”

‘இது என்ன. ஓ! வரலட்சுமி! அடுத்து என்ன நடக்கப் போகிறது?’

“ஏன் வரூ அப்படி சொல்றீங்க? பாக்க முடியாத அளவுக்கு ஒன்னும் நான் மோசமா இல்லையே?”

“ஹா ஹா ஹா! ஹேய் செம்ம ரகு சார். அப்புறம் ஒரு விஷயம்……..”

“இல்ல வரூ மேம்……..”

“நான்கூட…….”

பக்கத்திலேயே நின்றிருந்தாலும் வித்யாவின் காதில் எதுவுமே விழவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. தன்னுடைய இடத்துக்கு வந்து நாற்காலியை அருகே இழுத்து உட்கார்ந்து மேஜைமீது முகத்தைச் சாய்த்துப் படுத்துக்கொண்டாள். தொண்டை இறுகி வலித்தது.  நாக்கு வறட்டியது. ‘இப்பதானே தண்ணீர் குடிக்கப் போனேன். தண்ணீர் குடிச்சனா இல்லியா? சரி. இப்ப அதுவா முக்கியம்!’ அப்படியே தன்னிலை மறந்து சிறிது நேரம் படுத்திருந்தவள் பிறகு சுரத்தே இல்லாமல் வேலை பார்த்தாள்.  உணவு இடைவேளை, மறுபடி கோப்புகள் என்று அந்த நாள் முடிந்தபோது களைப்பாக இருந்தது. வெகு நேரம் குனிந்தபடியே வேலை பார்த்ததில் கழுத்தும் முதுகும் சலித்தன. வீட்டுக்குப்போய் படுத்தால் போதும் என்றிருந்தது. இனி பேருந்துக்காகக் காத்திருந்து, நெரிசலில் நசுங்கி நினைத்தாலே கடுப்பாக இருந்தது.

பேருந்தில் இருந்து இறங்கியவள் வீட்டுக்குப் போகும் வழியில் இருக்கும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய கடையைக் கடந்தபோது முதன் முறையாக அதனுள் நுழைந்தாள்.

“எஸ் மேடம். என்ன வேண்டும்?”

சுற்றிலும் பார்த்தவள், “லிப்ஸ்டிக்” என்றாள்.

“மாட் வேண்டுமா, க்ளாசியா? இல்லை…..” அந்தப் பெண் ஏதேதோ கேட்கத் தொடங்க எதற்குமே பதில் தெரியாமல் விழித்தவள், “எல்லாமே  காண்பிங்க” என்றாள். கடைப் பெண் அதைக் கேட்டு கிண்டலாகச் சிரித்தது போல் தோன்றியது வித்யாவுக்கு. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியும் அற்றவளாக அந்தப் பெண் பல வித ஷேட்கள், ப்ராண்டுகளை விளக்கிப் பேசிக்கொண்டே இருந்தாள்.

“இதை ட்ரை பண்ணுங்க” என்று ஒவ்வொன்றாக எடுத்துவைத்து சொல்லிக்கொண்டே வந்தாள். இறுதியில் ஒன்றை எடுத்து லேசாக உதட்டில் தீற்றிக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த வித்யா அதிர்ச்சியானாள். ‘ச்சே. நல்லாவே இல்லை. கேவலமா இருக்கு’.

“நோ தாங்க்ஸ். நான் இன்னொரு நாள் வரேன்” என்று சொல்லிக்கொண்டே கடையைவிட்டு வேகமாக வெளியேறியபோது கடைப் பெண் அதே உணர்ச்சியற்ற முகபாவத்துடன் இருந்ததை வித்யா கவனிக்கத் தவறவில்லை.

‘என்ன இது இன்னும் வீடு வரல? இப்படிப் பராக்குப் பாத்துட்டே மெதுவா நடந்தா எப்படி வரும்?’

பூட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்ததும் நேரே கண்ணாடி எதிரே போய் நின்று விழி விரியத் தன்னைப் பார்த்தாள். முன்னும் பின்னுமாக ஒரு முறை நடந்தவள் பிறகு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு குளியல் அறைக்குள் சென்று முகம் கழுவினாள்.

காபி போட்டாள். தொலைக்காட்சியில் ‘வசீகரா என் நெஞ்சினிக்க’ பாட்டு ஓடிக்கொண்டிருக்க, பார்க்கப் பிடிக்காத ஆனால் கேட்கையில் இனிக்கும் டாப் டென் பாடல்களில் இது முதல் வரிசையில் வரும் என்று நினைத்தபடி பொறுமையாகப் பாட்டையும் காபியையும் ருசித்தவள் இரவு உணவுக்கு உஷா வருவது நினைவு வந்ததும் அவசரமாக சமையலறைக்குள் நுழைந்தாள்.

தங்கை வருவதால் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்ட பாஸ்கர், வழக்கம்போல ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தான்.  உஷாவுக்குப் பிடித்த ஸ்டஃப்ட் சப்பாத்தி, பாலக் பனீர், பாஸ்கருக்குப் பிடித்த காளான் க்ரேவி என்று வித்யா சமைத்துக் கொண்டிருக்கையில் உஷாவும் அவளுடைய கணவனும் உள்ளே நுழைந்தார்கள்.

அண்ணனும் தங்கையும் ஹாலில் உட்கார்ந்து ஏதேதோ கதை பேசிக்கொண்டிருக்க, உஷாவின் கணவன் யாரிடமோ அலைபேசியில் விவாதித்துக்கொண்டிருந்தான். காளான் க்ரேவி தயாராவதற்கு இடையே மூன்று பேருக்கும் ஏலக்காய் சேர்த்த தேநீர் போட்டுக்கொண்டு வந்து வைத்த வித்யா, “உஷா உனக்குப் பிடித்த ஏலக்காய் டீ” என்று அவளிடம் கோப்பையைத் தந்தாள்.

“ஓ. சூப்பர் அண்ணி” என்றவள்  மறுபடி அண்ணனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.

சமையலறையில் வியர்வை வழிய வேலை செய்த கசகசப்புப் போக முகத்தைக் கழுவித் துடைத்து ஸ்டிக்கர் பொட்டுமட்டும் வைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்த வித்யாவைப் பார்த்ததுமே உஷா, “ஆல்வேஸ் ஃப்ரெஷ். இதான் வொர்க்கிங்க் வுமனோட ஸ்பெஷாலிட்டியே. அதோடு க்ரேட் எஸ்கேப் வேற. என்னையெல்லாம் பாருங்க.  மாங்கு மாங்குனு வேலை செஞ்சி எண்ணை வழிஞ்சிக்கிட்டு. வாழ்ந்தா அப்படி வாழணும். சரிதானே அண்ணி” என்றாள்.

வித்யா மனதுக்குள் ஒன்று இரண்டு மூன்று என்று எண்ண ஆரம்பித்தாள். பத்து தாண்டிவிட்டால் பிரச்சினை இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே உஷா, “என்ன அண்ணி ஒன்னுமே சொல்லமாட்டேங்கறீங்க. ஆபீசில் மட்டும்தான் பேசுவீங்களா?” என்றாள்.

“போதும் உஷா! நீயும் படிச்சிருக்கதானே. வேணும்னா ஒரு வேலை தேடிக்கிட்டு என்னை மாதிரியே ஆபீஸ் போய்ட்டு வா. அப்ப புரியும் உனக்கு அவ அவ என்ன வதைபடுறானு. சும்மா வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு” வெடித்தவள் மேற்கொண்டு பேசமுடியாமல் சமையலறைக்குள் சென்றுவிட்டாள்.

மூவரும் ஒரு நிமிடம் என்ன ஆயிற்று எனப் புரியாமல் திகைத்துப் போனார்கள். வித்யாவின் இந்த உரத்த குரல் அவர்கள் அதுவரை கேட்டிராதது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அமைதியாக சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிப் போனார்கள்.  சுயவதையின் தாளமாட்டாத வெறுமையோடு சுவரை வெறித்தபடி கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் வித்யா.

உள்ளே வந்த பாஸ்கர்  அவள் படுத்துக்கிடக்கும் கோலத்தை ஒரு நொடி பார்த்தான். அவளருகே கட்டிலில் அமர்ந்து அவளுடைய தலையை வருடியபடி, “வித்து, என்ன பிரச்சினை? எப்பவும் நீ இப்படி பேசமாட்டியே? ஆபீசில் எதாவது நடந்ததா?” என்று கேட்டதும், சட்டென எழுந்து அவன்மீது சாய்ந்தபடி அழத் தொடங்கினாள்.


கயல்

இவரின் சொந்த முயற்சி. தொடர்ந்து எழுத என்றும் நம் நடுகல் ஆதரவைக்கொடுக்கும். வளர்த்தெடுப்பது என்பது நடுகல் இதழின் பணி. இது ஆசிரியர் குறிப்பு என்றாலும்.. நடுகல் உள்நுழைகிறது. இவரிடம் திறமை இருப்பதால்!

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *