நிலமெங்கும் பச்சையம் பூத்து பசப்படிந்து கிடக்கும் ஒரு வட்டாரத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பு என்பது முதன்மையாக பிரகடனப் படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலப் பரப்பில் வீசும் மேகாற்று முகத்தை ஆரத்தழுவி பளிச் பளிச்சென்ற ஈரமுத்தங்களை அள்ளித் தரும் போது எவ்வளவு பெரிய கொடிய மனதும் ஒரு சிறு கனத்தில் சில்லென்று ஆசுவாசப் படுகின்றன. இயற்கையின் பிடியில் அச்சுப்பிசுராமல் இன்னுமிருக்கும் ஓர் நிலப்பரப்பு என்றால் தேனி என்பது மிகையாது.

இலக்கியத்தில் இளைப்பாறுவதென்பது தனிச்சுகமே. தான் பெற்ற அனுபவத்தையும் ரசனையையும் கற்பனையையும் எளிய மொழிநடையோடு குலைத்து படைப்புச் சோறாய் தமிழ் உலகின் கரங்களுக்கு ஆக்கித் தந்திருக்கிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். அப்படிப்பட்ட படைப்புச் சோற்றை அகப்பையில் சோமாரி நாவில் வைத்து சுவைத்து சுவைத்து உண்டு இலக்கியப் பசியாற்றுமளவிற்கு இருக்கின்றன. 

சின்னமனூர் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் தங்கேசுவரனின் கவிதைச் சொல்லாடல்கள் பீரங்கிகளாய் வெடிக்கும் என்பதை நான் அறிவேன். கவிதைப் பயணத்தை விட்டு விட்டு தடம் மாறி சிறுகதைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். தன் கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களும் மனக்குமறல்களும் நூலாசிரியரைத் தூங்கவிடாமல் துரத்தி துரத்தி வந்திருப்பதைக் கதைகளில் காணமுடிகிறது. பள்ளிக்கூடங்களில் சமகாலங்களில் நடக்கும் நிகழ்வுகளும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே இருக்கும் உறவினைப் பற்றியும் விவரிக்கின்றன கதைகள். பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு பள்ளிக்கூடச் சம்பவங்கள், ஆசிரியர்கள் மாணவர்களைச் சார்ந்தே இடம்பெற்றிருப்பதைக் காணலாம். 

இத்தொகுப்பில் முதல் கதையாக “மரகதப்புறா” என்ற தலைப்பில் ஆரம்பமாகிறது. மரத்திலிருந்து கீழே விழுந்த மரகதப்புறாவை மேல்நிலை வகுப்பில் படிக்கும் சசி என்ற மாணவன் பள்ளிக்கு எடுத்துவருவதையும், ஆசிரியர்களுக்களுமான உரையாடலைச் செம்மைப்படுத்திப் பேசுகிறது. மாணவர்களின் பெருங்குரலால் தன் சருகுகளை பலப்படுத்தி தூவானத்தில் மெல்ல மெல்ல பறக்கும் மரகதப்புறாவை தன் கைகளில் ஏந்திய படி நின்ற சசி கலங்கிக் கொள்ளும் போது நம் கண்களும் கலங்குகின்றன. இந்தக் கதை எனது பள்ளி காலத்து நினைவுகளைச் சுமந்து செல்கின்றன. அடமழை பெய்து கொண்டிருக்கும் காலம் எங்கள் ஊரைச் சுற்றி உழவும் நடவும் நடந்து கொண்டிருந்தன.  சுடுகாட்டைத்தாண்டி நடந்து கொண்டிருக்கையில் வாவரக்காச்சி மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த செம்போத்துக் குஞ்சுவை விட்டுவிட்டுப் போக மனமில்லை. செம்போத்துக்குஞ்சுவை மஞ்சப்பைக்குள் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்டேன். ஏழாப்பு டீச்சர் ராசம்மா வந்து கண்டு பிடித்து விட்டார். பதினோரு மணி இடைவேளையில் ஒட்டு மொத்த பள்ளிக் கூடமும் திரண்டு நின்றது. பிரிசிட்டம்மாள் சிஸ்டர் வந்து செம்போத்தை எடுத்துக் கொண்டு கான்வென்ட்டுக்கு சென்றது இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன நினைவுகளின் வெளியில். 

“இளநீர்” என்கிற கதையில் கண்களை இழந்து யாசகம் பெறும் கணவன் மனைவியின் பாடுகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார் கவிஞர் தங்கேஸ்வரன். கருவுற்றிருந்த தன் மனைவிக்கு ஒரு இளநீர் கேட்டு யாசகம் செய்யும் ஒருவனின் வேதனையைப் பேசுகிறது. 

“காடை”இந்தக் கதை முழுக்க முழுக்க ஒரு சம்சாரிக் குடும்பத்தைப் பற்றி விவரிக்கிறது. “களம் குடுத்து வளரத்தாலும் காடை காட்டுலதேன்”என்ற பழமொழியை அடிக்கடி மேற்கோள் காட்டி,கைவிட்டுப் போன புஞ்சையை மீட்டெடுக்கும் சம்சாரி யின் வாழ்வைப் புலப்படுத்துகின்றன. செல்வச் செழிப்போடு இருந்தவன் பெண்களுக்காக சொத்தை இழந்தானோ, மீண்டும் ஒரு பெண்ணால் அந்த புஞ்சை திரும்பக் கிடைப்பதைக் கதைகளில் பார்க்க முடிகிறது. 

கைவிட்டுப் போன காணிகள் மீண்டும் ஒருசிலருக்கு கிடைத்துவிடும். பலருக்கு கிடைக்காது. எங்களின் காணி கைவிட்டுப் போன போது இருந்த வலி இன்னும் வலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தாத்தா ஈடான்குடும்பன் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பது காலக்கட்டத்தில் வெள்ளையர்களின் மில்லில் வேலைபார்த்து உழைத்துச் சம்பாதித்த வாங்கிய காணி இன்று எங்களிடமில்லை. 

மதுரை விமான நிலைய விரிவாக்கத்தால் ஒரு கிராமமே களவு போனதையும் நம் கண்முன்னே பார்க்க முடிகிறது. புஞ்சைகளும் காணிகளும் காடுகளும் வயல்களும் தோட்டங்களும் கைவிட்டுப் போகும்போது நிலமே வாழ்வென கிடந்த சம்சாரிகளின் வலிகளுக்கு மருந்துகள் ஏதும் உண்டா என்ற வினாக்கள் எழுப்பத் தோன்றுகின்றன. 

கொரனாவில் பாதிக்கப்பட்டு உலகமே தத்தளித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை “உயிர்ப்பு” என்ற தலைப்பில் கதையாக்கிறார் எழுத்தாளர் தங்கேசுவரன். ஆதரவற்ற இல்லத்தில் இருந்து ஒரு அட்டையை வைத்துக் கொண்டு உதவி கேட்டு வரும் பெண்ணை வீதியில் விரட்டிவிடும் சம்பவம். பொதுவாக சிலர் உதவி கேட்பதாக வந்து வீடுகளை நோட்டம் பார்த்துவிட்டு வீடுகளில் ஆள்கள் இல்லாத நேரம் களவு செய்வதை பத்திரிக்கை செய்திகளிலும் நேரடியாகவும் காண முடிகிறது.  இவள் அப்படியாக கூட இருக்கலாம் என்று விரட்டிவிடுகிறார்கள் வீட்டார்கள். 

இந்தத் தொகுப்பிலே மிகச் சிறந்த கதை “பயல்”. பிள்ளைப்பேறு பெற்ற கணித ஆசிரியரை, தனியார் பள்ளியில் வேலைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடும் கணவரின் இரக்கமற்ற செயலையும். தாய் சேய் உறவை ஆழமாகப் பேசுகிறது. 

அனைத்து பள்ளிகளிலும் நடக்கும் நிகழ்வாக இருந்தாலும் இந்த பள்ளியில் நடப்பது கொஞ்சம் வித்தியாசமாகவும் ரசனையாகவும் உள்ளது “பாடம்” என்ற தலைப்பில் அமையப் பெற்ற கதை. பள்ளிப் பாடவேளையில் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் பாட்டுத் தாத்தா பல திறன் கொண்ட வித்தகர். தலைமையாசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மெமிக்கிரி, மேஜிக்,பாட்டுப்பாடி அசத்துகிறார். நடிகர் விஜய் அவர்களின் ரஞ்சிதமே பாடலைப் பாடி அசத்திய தாத்தாவால் பள்ளி முழுவதும் விசில் அடித்து அதிர்ந்தது. பாட்டுத்தாத்தாவுக்காக மாணவர்கள் கொடுத்த பரிசு ஆயிரத்து ஐநூற்றி எண்பது . தலைமையாசிரியர் கொடுத்த பரிசு ஐநூறு. தலைமையாசிரியருக்கு திருக்குறள் புத்தகத்தை அன்பளிப்பாக கொடுத்த தாத்தா, உதவியாளர் குமாரை அழைத்து டீக்கடைக்கு வரச்சொல்லி ஐம்பது ரூபாயை பேண்ட் பாக்கெட்டுக்குள் திணித்து விடும் காட்சி நெஞ்சைப் பிசைக்கிறது. 

சமூகத்தின் அவலநிலையை “அடக்கம்”என்கிற கதையின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் தங்கேசுவரன். ஆக்கிரமிப்புகளால் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடமில்லாமல் தவித்தலையும், இறப்பு வீடுகளில் நடக்கும் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களையும் விவரிக்கிறது இக்கதை. 

“ஏழையாக கூட பொறந்திரலாம் எளிய சாதியா பொறக்கக் கூடாது” என்று உரக்கப் பேசுகிறார் இந்நூலாசிரியர். ஆதிக்கவாதிகளின் அதிகார ஆணவச் செருக்கால் இங்கே எளியவாதிகளை வம்புக்கு இழுத்து சாதிப் பெயரைச் சொல்லி போராட்ட களமாக்கும் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.  சுடுகாட்டுக்கு இடவசதி கேட்டு நூறாண்டுகளாக போராடியும்,அலைக்கழிக்கும் திராவிடக் கட்சிகளின் மெத்தனப்போக்கையும் அதிகார சாதிய அரசியலையும் தோலுரித்து காண்பித்திருப்பதைக் கதைகளில் மலை முகடுகளாகத் தெரிகின்றன.  இறந்த பின்னும் நிம்மதியாகப் போய் அடங்குவதற்குக் கூட  சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாமலும் பாதை இல்லாமலும் தமிழ்நாடு தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். சமீபத்தில் திரையில் வெளியான நந்தன் திரைப்படமும், அனைத்துப் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியான, கடலூர் மாவட்டத்தில் இறந்தவரின் உடலை ஆற்றுக்குள் மூழ்கி இழுத்துச் செல்லும் காட்சியும் இந்தக் கதையில் அடங்கும். 

எழுத்தாளர் தங்கேசுவரனுக்கு கதை நன்றாக பிடிபட்டு விட்டது. முதல் சிறுகதைத் தொகுப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு கதைகள் நூலைச் செம்மைப்படுத்துகின்றன. வாழ்த்துகள் எழுத்தாளர் தங்கேசுவரன் அவர்களுக்கு.

கதையும் எழுதுக !

கவிதையும் எழுதுக!

நூல்: மரகதப்புறா 

வெளியீடு:பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள்:160

விலை:ரூ160

அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்

எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *