அப்போதுதான் சிவனை கும்பிட்டுக் கொண்டிருந்தோம். அது ஒரு சிறிய கோவில். காலையில் சற்று நேரமாகவே எழுந்து விட்டோம். பெங்களூர் முன்பு போல் குளிராக இல்லாமலிருப்பினும், சற்று குளிர்தான். அதுவுமின்றி நீண்ட நாட்கள் வராமல் இருந்ததால், புதிய இடமாகவே இருந்தது. அது மனைவியின் தங்கை இருக்கும் ஸ்மார்ட் சிட்டி அபார்ட்மென்ட்டிற்கு அருகிலிருந்த கோவில். இப்போது எலக்ட்ரானிக் சிட்டி மிகவும் விரிவடைந்து விட்டது.

நான்தான் போனை எடுத்தேன். நண்பன் பழனிச்சாமியின் மனைவி சுபா பேசினார். குரலில் மிகுந்த பதற்றம். ‘அண்ணா’ என ஆரம்பித்து அழ ஆரம்பித்தாள். ‘என்னம்மா ஆச்சு, பதட்டப்படாத சொல்லும்மா’ என்றேன். ‘அண்ணா, விடிகாலம் வாக்கிங் போனவருக்குத் தலையில் அடிபட்டு, இப்ப ஓமலூர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில இருக்கறம். அந்த வழியாப் போன ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருத்தர் தான் பார்த்திட்டு இங்க சேத்திருக்கிறார். பேச்சே இல்லை. ரொம்ப பயமாயிருக்கு’ என்றாள்.

‘தைரியமா இரு. பக்கத்துல நர்ஸ், டாக்டர் யாருமிருந்தா, குடு’ என்றேன். ‘சார், சீக்கிரம் மூணு ரோடு நரம்பு ஆஸ்பத்திரியில சேத்துடுங்க’ என்றார் நர்ஸ். ‘ரொம்ப நன்றிங்க, டிஸ்சார்ஜ்க்குக் கொஞ்சம் உதவி பண்ணுங்க. அந்தப் பொண்ணுக்கிட்டக் குடுங்க’ என்றேன்.

‘சீக்கிரம் மூணு ரோடு நரம்பு ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிடுங்க. என்னோட ஒய்ஃப் தங்கச்சி ஹஸ்பெண்டுக்குத் தெரிஞ்ச டாக்டர் அங்க இருக்கிறாரு. நாங்க உடனே கெளம்பி வந்தர்றம். தைரியமா இரு’ என்றேன்.

உடனே தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் கார்த்தியை எழுப்பி ‘இன்னும் கால்மணி நேரத்துல சேலம் கெளம்புனும், அர்ஜண்ட் கார்த்தி, ரெடியா இருங்க’ என்றேன்.

மனைவியின் தங்கை மேகலாவும் ரெடியாகி எங்களுடனே வந்தார்.

ஓசூர் வரும் வரையில் ஹெவி டிராஃபிக். ஊர்ந்து கொண்டே வந்தோம். இடையில் போன் செய்து, சுபாவிடம விசாரித்ததில், பழனிச்சாமியை மூணு ரோடு நரம்பு ஆஸ்பத்திரியில சேர்த்து விட்டதாக அழுதுகொண்டே கூறினாள்.

இப்போது தான் ஓமலூரில், பழனிச்சாமி வீல் அலைன்மெண்ட் கடை திறந்தது போலிருக்கிறது, ஐந்து வருடங்கள் ஓடி விட்டன.

எனது கல்லூரி நண்பன் ராமன் மூலமாக அவன் சித்தப்பாவை கடை திறக்க அழைக்கப் சென்றிருந்தோம். அவர் முன்னாள் கவுன்சிலர். ஓமலூர் பேருந்து நிலையம் அருகில்தான் வீடு. கேட் சாத்தப்பட்டிருந்தது. அவரின் கைபேசியை அழைத்து விவரம் சொன்னதும், கைவைத்த பனியன் லுங்கியுடன் வெளியே வந்து கேட்டைத் திறந்து விட்டு, ‘உள்ள வாங்க’ என்றார். சோஃபாவில் அமர்ந்ததும்,’வீட்டுல வெளியே போயிருக்காங்க. காபி கூட குடுக்க முடியல’ என்றார். ‘சார், பரவாயில்லிங்க. இப்பதான் காபி சாப்பிட்டு கெளம்பினோம். நான் ராமனோட கல்லூரி நண்பன் சார். இவரு என்னோட நண்பர் பழனிச்சாமி. சேலம் பெங்களூர் ஹைவேயில வீல் அலைன்மெண்ட் கடை போட்டிருக்கிறாருங்க. நாளைக்கு ஞாயித்துக்கெழம காலையில அஞ்சி அஞ்சரைக்கு நேரம் நல்லா இருக்குங்க. நீங்க திறந்து வைச்சா நல்லாருக்கும்’ என்றேன். சுவாரஸ்யமே இல்லாத முகத்துடன்,’நாளக்கு முக்கியமான ஒரு வேலை இருக்குது. முயற்சி பண்றேன்’ என்றபடியே அழைப்பிதழை வாங்கிக் கொண்டார்.

அடுத்த நாள் காலை நேரமாக எழுந்து குளித்து ரெடியாகி கடைக்குச் சென்று விட்டோம். தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். கதர் வேட்டி சட்டையணிந்த நடுத்தர வயதுடைய ஒருவர் அமர்ந்திருந்தார்.  அவருடன் அதே உடையுடன் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். பழனிச்சாமி திடீரென ஒரு டவலைக் கொடுத்து, ’இவர்தான் இப்போதைய கவுன்சிலர். நீதான் மாலை போட வேண்டும்’ என்றான். இப்படி செய்து பழக்கம் இல்லாததால் சற்றே தடுமாறி பிறகு துண்டை அணிவித்தேன். பழனிச்சாமி போட்டோ எடுத்தான். பிறகு அவனொரு சால்வையை அணிவித்தான். அவர் தனது கரகரத்த குரலில் ‘நல்லா பண்ணுங்க தம்பி. நல்லா வருவீங்க’ என்று ஆசிர்வாதம் செய்து விட்டுக் கிளம்பினார்.

அனைவரும் பக்கத்து ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த காலை உணவு சாப்பிட்டோம். எனது சுமோவையே முதல் வண்டியாக வீல் அலைன்மெண்ட் பார்த்தான்.

காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது.

வண்டி இப்போது தொப்பூரை நெருங்கிக் கொண்டிருந்தது. வாகனங்கள் இன்ச் இன்ச்சாக ஊர்ந்தன. பலரும் இறங்கிப் பார்த்தார்கள். கார்த்தியும் இறங்கி சிறிது தூரம் சென்று பார்த்தார். திரும்பி வந்து,’டர்னிங்ல ஏதோ ஆக்சிடென்ட் போல இருக்குது. டிராஃபிக் போலீஸு ரெண்டு பேரு கிளியர் பண்ணிட்டிருக்காங்க. இன்னும் அரை மணி நேரம் ஆகுமென நினைக்கிறேன்’ என்றார். உச்சி வெயில் கொளுத்தி எடுத்தது. வியர்வை மழையில் நனைந்து கொண்டே கர்ச்சீப்பால் துடைத்தபடியே விசிறிக் கொண்டிருந்தோம்.

நேற்று காலையில் தான் பெங்களூர் கிளம்பினோம். பழனியின் கடைக்கு அருகில் வரும்போது கியர் சரியாக விழவில்லை. கார்த்தி சாமர்த்தியமாக வண்டியை ஓரம் கட்டினார். அழைத்த உடனே பழனிச்சாமி ஓடி வந்து விட்டான். சாவியை வாங்கி வண்டியை ஸ்டார்ட் செய்து செக் செய்தபின், டக்கென்று வண்டிக்கடியில் படுத்தான். சிறிது நேரம் கழித்து எழுந்தவன், ‘பிரேக் ஆயில் லீக் ஆவுது. பக்கத்து கடையில வாங்கி ஊத்திடலாம். அப்பப்ப செக் பண்ணிக்கங்க’ என்றான் என்னையும் கார்த்தியையும் பார்த்தபடியே. உடனை அருகிலுள்ள கடைக்குச் சென்று, பிரேக் ஆயில் வாங்கி வந்தேன். பழனியே வாங்கி ஊற்றி விட்டு, வண்டியை எடுத்து ஒரு ரவுண்டு ஓட்டி வந்தான். ‘ஒண்ணுல்ல, தைரியமாப் போலாம்’ என்றான்.

இன்று இப்படி ஒரு செய்தி.

வண்டி சற்றே வேகமாகச் செல்ல ஆரம்பித்தது. அவ்வப்போது போனில் விசாரித்தபடியே இருந்தேன். வழியிலுள்ள ஒரு பேக்கரியில் நிறுத்தி, பசங்களுக்கு தீனி வாங்கிக் கொண்டு, எல்லோரும் காபியும் குடித்து விட்டுக் கிளம்பினோம். யாரும் உணவு உண்ணும் மனநிலையில் இல்லை.

ஒரு வழியாக ஐந்து மணிக்கு மருத்துவமனையை அடைந்தோம்.

ரிசப்ஷனில் சொன்னதும், முதல் மாடி ஐசியு வார்டு என்றார்கள்.

படி ஏறி ஓடினோம். சுபா எங்களைப் பார்த்ததும், ஓவென்று அழ ஆரம்பித்தாள். எனது மனைவியைப் பார்த்து,’அண்ணி, பேச்சே இல்லை. கைகால் அசைய மாட்டேங்கறாரு. எனக்கு ஒரே பயமாயிருக்குது’ என்றாள்.’ஒண்ணு ஆகாது, மேகலாவோட ஹஸ்பெண்ட்டுக்கு சீப் டாக்டர் தெரிஞ்சவராம். அவரு ஏற்கனவே பேசிட்டார். நல்லா கவனிச்சிப்பாங்க. தைரியமா இரு. பழனிச்சாமி தைரியமான ஆளு. பத்து நாள்ள எழுந்திரிச்சி வந்துருவான் பாரு’ என்றேன் என் நடுக்கத்தை மறைத்தபடி.

அருகிலிருந்த காவலரை அணுகி, ‘பழனிச்சாமியப் பாக்கணும்’ என்றேன். ‘விசிட்டிங் டைம் முடிஞ்சு போச்சு சார். நீங்க, பெங்களூரில இருந்து வந்ததாச் சொல்றீங்க. டாக்டர் கிட்டக் கேட்கச் சொல்றேன்: என்றார். சிறிது நேரம் கழித்து, ‘ரெண்டு பேரு மட்டும் போய் பார்த்துட்டு வாங்க’ என்றார். நானும் மனைவியும் மட்டும் உள்ளே சென்றோம். தனியாக மாஸ்க் மற்றும் நெகிழிப் பையாலான செருப்பு அணிந்தபடியேத் தேடினோம். கடைசி பெட்டில் ஒரு காய்கறி போல படுத்திருந்தான் பழனிச்சாமி. ஏகப்பட்ட டியூப்கள். ஏதோ இறக்கிக் கொண்டு இருந்தார்கள். ஆடாமல் அசையாமல் படுத்திருந்தான். காலடியில் ஒரு சார்ட் ஒட்டப் பட்டிருந்தது.

அருகிலிருந்த நர்ஸைக் கேட்டோம்.’தலயில அடிபட்டிருக்கு. ரத்தம் உறைஞ்சிக்கலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்திட்டு தான் சொல்ல முடியும். இப்பத்திக்கி அவருக்கு சுயநினைவு இல்ல. மருந்து குடுத்துட்டு இருக்கிறம். இப்ப எதுவும் சொல்ல முடியாது’ என்றார்.

‘டாக்டர் எப்ப வருவாரு. எப்ப ஸ்கேன்?’ என்றேன். ‘டாக்டர் கெளம்பற நேரம். எப்படியும் பாத்திட்டு தான் போவாரு. வெயிட் பண்ணுங்க’ என்றார்.

அடுத்த அரை மணி நேரம் நரகத்தில் இருப்பது போலிருந்தது. காவலர் வந்து,’பழனிச்சாமி கூடவா வந்தீங்க. டாக்டர் பேசனும்னு சொன்னாரு’ என்று என்னை மட்டும் உள்ளே அனுமதித்தார். அதே மாஸ்க், அதே நெகிழிப் பையாலான செருப்பு. உள்ளே சென்றதும், எனக்கு அழுகையும், வாந்தியும் வருவது போலிருந்தது. அடக்கியபடியே, டாக்டரிடம் பேசினேன்.’கொஞ்சம் கிரிட்டிகல் ஸ்டேஜ் தான். ஆனா கோமாவுல இருந்த பேஷண்ட்டெல்லாம் காப்பாத்தி இருக்கறம். கொஞ்ச நேரத்துல ஸ்கேன் எடுக்கச் சொல்லி இருக்கிறேன். தைரியமா இருங்க. நீங்க யாரு, அவரோட பிரெண்டா?’ என்றார்.’ஆமாம் சார். எப்படியாவது காப்பாத்திருங்க சார்’ என்றேன். ஏன் இப்படிக் கெஞ்சுகிறேன் என்று எனக்கே புரியவில்லை.

வெளியே வந்ததும், அனைவருக்கும் தைரியம் சொல்லி விட்டு,’நீங்க பசங்களக் கூட்டிட்டுக் கெளம்புங்க. நானும் பழனிச்சாமி மாமாவும் இங்க இருக்கறம். சுபா, தைரியமா இரு’ என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு, அங்கிருந்த வராண்டாவில், ஒரு நாற்காலியில் நானும், பழனியின் மாமாவும் அமர்ந்தோம்.

சிறிது நேரம் கழித்து,’பழனிச்சாமி, வாங்க’ எனக் காவலரின் குரல் கேட்டது. வேறு யாரையோக் கூப்பிடுகிறார் என நினைத்து அமைதியாய் இருந்தோம். இரண்டு முறை அழைத்து விட்டு, எங்களைக் தேடி வந்து விட்டார். ‘ஏங்க, இப்படி கத்தறன் காதுல உழுல. பேஷண்ட் பழனிச்சாமி கூடதான வந்திங்க? ஸ்கேனுக்கு வேற புளோருக்குக் கூட்டிக்கிட்டுப் போறாங்க. கூட போயிட்டு வரலாம்’ என்றார். அப்போது தான் எங்களுக்கு உறைத்தது.

உடனே ஓடி, கூடவே சென்றேன். ஸ்கேன் முடிந்ததும் லிஃப்ட்டிலேயே முதல் மாடிக்கு வந்தோம். பழனிச்சாமி அசைவின்றிப் படுத்திருந்தான்.

நான்காவது மாடியிலிருந்த கேண்டீனில் டிபன் சாப்பிட்டு விட்டு கீழே வந்தோம். சேரிலேயே படுக்க ஆயத்தமானோம். காவலர் வந்து எங்களை எல்லாம் விரட்டி விட்டார். ரிசப்ஷனுக்கு முன்னிருந்த நாற்காலிகளில் படுத்துக் கொண்டோம். பழனிச்சாமியின் மாமனார் வாடகை வண்டி ஓட்டுநர் என்பதால் காலை நான்கு மணிக்கே எழுந்து சென்று விட்டார். கொசுக்கடியால் ஒரு பொட்டுத் தூக்கம் வரவில்லை. ஆறு மணியளவில் கீழே சென்று டீக்கடையில் காபி குடித்து மேலே வந்தேன். காவலர் வந்து,’பழனிச்சாமி, வாங்க’ என்றார். சென்றதும், சீட்டைக் கொடுத்து,’இந்த மாத்திரைகள வாங்கிட்டு வாங்க’ என்றார். மூன்றாவது மாடியில் இருந்த பார்மசியில், பதினைந்து நிமிடங்கள் காத்திருந்து மாத்திரைகளை வாங்கி வந்து காவலரிடம் கொடுத்தேன். ஒன்பது மணியளவில் மனைவியும் சுபாவும் வந்தார்கள். அவர்களைப் புதுக்காவலரிடம் அறிமுகம் செய்து விட்டுக் கிளம்பினேன். தூக்கமின்மையால் வீட்டுக்கு வந்ததும் தூங்கி விட்டேன். எழுவதற்கு பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவசர அவசரமாகக் குளித்து விட்டு, தோசை ஊற்றிச் சாப்பிட்டு விட்டு, பணியை ஆரம்பித்தேன். வீட்டில் இருந்து வேலை செய்வதால் தப்பித்தேன். இரவு மீட்டிங் எல்லாவற்றையும் முடித்து விட்டு, தோசை ஊற்றிச் சாப்பிட்டு விட்டு, ஒன்பது மணியளவில் மருத்துவமனையை அடைந்தேன். மனைவியையும் சுபாவையும் காரில் அனுப்பி விட்டு, காவலரிடம் தகவல் தெரிவித்தேன். பத்து நிமிடத்தில், நர்ஸ் வெளியே வந்து,’பழனிச்சாமி, வாங்க’ என அழைத்து, ‘இந்த மருந்துகள வாங்கிட்டு வாங்க’ என்றார். இப்போது எனக்கு பெயர் பழகியிருந்தது. மருந்துகளை வாங்கிக் கொடுத்த பிறகு, கெஞ்சிக் கூத்தாடி, பழனிச்சாமியைப் பார்த்து விட்டு வந்தேன். அழுகையை அடக்க முடியாமல், வெளியே வந்து அழுதேன்.  ரிசப்ஷன் இருந்தவர்,’ரொம்ப குறட்டை விடறீங்க. இங்க படுக்க வேண்டாம் சார்’ என்றார். வேறு ஒரு நாற்காலியைப் பார்த்து படுத்துக் கொண்டோம்.

காலையில் காபி குடித்து விட்டு, மனைவியிடம் பேசிய பிறகு, காவலர் அழைத்தார்,’பழனிச்சாமி, வாங்க’ ,’இந்த மருந்துகள வாங்கிட்டு வாங்க’ என்றார். பழைய பேண்டேஜ்களைக் கொடுத்து விட்டு, புதிய மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வந்தேன். இப்போது காலையில் நானாகவும், இரவில் பழனிச்சாமி என்ற பெயருடனும் பழகி விட்டேன்.

பதினைந்து நாட்கள் கழித்து, நார்மல் வார்டுக்கு இரண்டாம் மாடிக்கு மாற்றினார்கள். பழனிச்சாமி கைகால்களை அசைக்க ஆரம்பித்தான். கண் திறந்து பார்க்க ஆரம்பித்தான். என்னைப் பார்த்து,’யார் இந்த அண்ணன்?’ என்றான்.

மீண்டும் பதினைந்து நாட்கள். நல்ல முன்னேற்றம். நடக்க ஆரம்பித்தான். இரண்டு நாட்கள் கழித்து, டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு வந்து விட்டோம். பழனிச்சாமியின் நண்பர் சபரி தினமும் வீட்டுக்கே வந்து, பிஸியோ செய்தபடியிருந்தார். இடையில் இரண்டு முறை, சோடியம் குறைவிற்காகவும், செக்கப்பிற்கும் மருத்துவமனை சென்றோம்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு, பழனிச்சாமி கடைக்குப் போக ஆரம்பித்தான். உதவிக்கு ஒரு நல்ல தொழில் தெரிந்த பையன் இருந்ததால் சமாளிக்க முடிகிறது.

இடையில் நான் இரண்டு முறை பெங்களூரிலுள்ள அலுவலகம் சென்று வந்தேன்.

இப்போதும் யாராவது பழனிச்சாமி என்றால், எனக்கு அனிச்சையாக தலை திரும்புகிறது.

++

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *