1.
துர்ந்து போன காலங்கள் சிதறிக்கிடக்கின்றன
ஒவ்வொன்றும் பொற்காலங்களின் அழிபாட்டுச் சின்னம்
குப்பை கூளங்களென மூட்டை கட்டி
வீட்டினுள்ளிருந்து அகற்றப்பட்டன.
துருப்பிடித்த உலகம்
மூலையில் கிடக்கிறது
பழைய இரும்புக்கடையில்
பழைய யானையென பிளிறாமல் மூலையில் கிடக்கிறது
உபயோகமற்ற தையல் மெஷின்.
2.
ஊர் குளத்தில்
எருமைகளுக்கு
மகிழ்ச்சியான குளியல்
நேரம் போவதே தெரியவில்லை.
சத்தமெழுப்பியபடி
ஒன்றுடன் ஒன்று பேசிக் கொள்கின்றன.
அந்திப் பொழுது சாய்கையில்
எருமைகள் அனைத்தும்
தாமே வெளியேறின
அதிலொன்றின் அசைவு யானையைப் போல இருந்தது.
எருமைகள்
ஒன்றன் பின் ஒன்றாய்
கொட்டகையில்
தம்மிடத்தில் போய் நின்று கொண்டன
எருமை மேய்ப்பபவருக்கு
இன்னும் கோபம் தீர்ந்தபாடில்லை
சனியன்களென
வெளுக்கிறார்
அதிலொன்று அசராமல் புணர்ச்சிக்குத் தாவியது
பக்கத்தில் இருந்த எருமை மீது.
3.
மிருகத்தின் வாடை
உடலெங்கும்.
சம்போகிக்கத் துணையற்று தவிக்கிறது
இரவு.
தனித்திருக்கும் நாட்களில்
கனவுகளில் பன்றிகள் வருகின்றன
வேட்டையாடியின் ஈட்டி
வாயில் முளைத்த கொம்பை உடைக்கிறது.
இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.