“சிறகடிக்கும் சிறு’பிறவி”
கூட்டுக்கிளியாய்…
வீட்டிலிருக்கையில்…
கொல்லைப்புறத்து குருவிகள் …
கூவி அழைக்கும்…
அழகை வியக்கலாம்…
,
எச்சிலிலையுண்ட …
கருங்காகத்தின் கரையும்…
குரல்கேட்டு கூடும்…
காக்கைகூட்டத்தின்…
விருந்தோம்பலை வியக்கலாம்..
,
பாதியொடித்த…
பனங்கிழங்கின் சதைதின்று…
பசியாற்றி கொள்ளலாம்…
,
தின்றொழித்த பனங்காய் தந்த..
ரத உற்சவ ஊர்வலம்…
தெருதோரும் நடக்கலாம்…..
,
வேலிமுள் விளிம்புகளில்..
வீற்றிருக்கும் தட்டானின்…
வால்பிடிக்க விரல்நீட்டும் ..
லாவகங்கள் பயிலலாம்…
,
குறுக்கால் காலைவிட்டு…
குரங்கு பெடலிட்டு…
குறுக்கேயும், மறுக்கேயும்…
குதூகலமாய் போன முதல்…
மிதிவண்டி பயணங்கள்…
,
கையடக்க கரும்பலகையில்…
கரங்கிருக்க பழகிய கோடுகள்…
உயிரெழுத்தாய் உயிர்பெற…
விரல்கள் வியர்க்க வரைபழகிய…
தருணங்கள் வியக்கலாம்…
,
முதலெழுத்து பெற்ற. மதிப்பெண்கண்டு
முகமலர்ந்து ஏற்றுக்கொண்ட…
முதல் பாராட்டை…
முழுமனதாய்.பெற்றுக்கொண்ட..
நினைவுகள் நிழலாடுதே
,
குளத்தங்கரை குட்டிச்சுவரேறி…
குதூகலமாய் குதித்து…
குளித்து களித்திட்ட காலங்கள்…
குளிருதே நெஞ்சுக்குள் …
,
ஒற்றை முடிச்சிட்ட..
கயிற்றுப் பேருந்தில்…
ஓட்டுனராய் ஓட்டிய…
ஓட்டப் பயணங்களை…
ஓய்ந்த கால்கள் மறந்திடுமோ!…
,
இன்னுமொருமுறை …
சிறுவனாய் நான்மாற மாட்டேனா!
சிறுவானில் கூடுகட்டி..
சிட்டுக் குருவியாய் சிறகடிக்க …
,
ஏங்கியே!
என்னிதயம் இளைத்துப் போகிறதே!

காஷ்மீரத்து கானம்..
பனி படர்ந்த மலைமுழுதும்
புகை படரும் கருமேகங்கள் …
,
இடியாய் இறங்குகின்றன…
துப்பாக்கி சத்தங்கள்…
கூரை வேய்ந்த வீடுகளில் …
,
மழையாய் பொழிகின்றன…
தோட்டாக்கள் …
ரோஜா தோட்டங்களில்…
,
சிகை முழுதும்
காரிருள் சிக்கலில்
சிக்கித் தவிக்கிறாய்…
,
தேகம் இரு துண்டாகியும்…
இரு தேசங்களின் துப்பாக்கி …
ரவைகளின் ரணங்கள் துளைத்து…
துரும்பாகி நிற்கிறாய்…
,
சிவந்த மடல் போர்த்தி …
தினமும் பூக்கின்றன ../
காஷ்மீரத்து ஆப்பிளும், ரோஜாவும் …
இரத்தங்கள் உறிந்து…
வளர்வதாலோ…!///

இருதயங்களின் சிறுதேவதை
சிறுபிராயத்தில்…
செல்லமாய் சண்டையிடுகையில்..
சீறிப்பாய்வாள் அழகு…
,
உறங்கும் விழிகளை…
சிறுவிரல்கொண்டு விலக்கி…
விழிபார்த்து சிரிப்பாள்…
,
விழித்துப் பார்த்ததும்…
விழிவிரித்து வினவுவாள்..
விளையாட வருவாயா?
,
சினங்கொண்டு எழும்போதும்…
சிறிது சிரிப்பையுதிர்த்து..
சிறைசெய்வாள் இருதயத்தை …
,
உணவுப் பருக்கை சுமந்துவரும்…
அவள் ஒற்றை விரல் பிடித்து…
உண்ணும் உணவு அமிர்தம்.
,
அவளோடு நானிருக்க…
ஆகிடுவேன் அவளுக்கு நான்…
அன்புசூழ் உலகு….
,
திண்ணை மீதிருந்து தாவியேறி …
தோளைப் பற்றுகையில் …
இமயத்தில் ஏறிவிட்டதாய் ..
இறுமாப்பு கொள்வாள்.
,
மஞ்சனத்தி மரக்கிளையை …
மண்டியிடச் சொல்வாள் …
அதன் ஒற்றைப்பூ பறித்து…
இதழினில் ஒற்றிக்கொள்வாள்.
,
உயரம் பார்த்திருக்க…
உத்திரமது உதவிகோரி…
விட்டமது பார்த்து நிற்பாள் /
,
எட்டும் தூரத்தில் நான்…
வந்து நின்றதும்..
ஏக்கம் கலைந்ததென..
ஏறிக் கொள்வாள் இடைகளிலே…
,
பம்பரங்கள் பறித்துக்கொள்வாள்…
கோலிக் குண்டை ஒளித்துக்கொள்வாள்…
அவளோடு மட்டும் விளையாடச் சொல்வாள் ..
,
கூட்டைத் தேடிவந்த …
குருவியைப்போல் குதூகலிப்பாள்..
குளத்தங்கரை குளியலிலே…
,
அன்னையவள் கன்னச்சுவை…
இதழ்கொள்ளும் பொழுதில்…
முந்திக்கொள்வாள் என்னோடு…
,
பால்ய நினைவுகள் …
பாதியிலே…
விழித்துக் கொள்கிறேன் நான்…
,
விழி எதிரே வந்து நிற்பது…
அவளின் குலகொழுந்து எனை…
மாமனென விளித்து./
,
மீண்டுமொருமுறை …
பயணமாகிறேன்…
அவளின் நிழலோடு…
அவள் தந்த நிஜத்தோடும்…
,
பாசப் பயணங்கள்…
முடியாமல் முளைக்கின்றன…
முடியும் ஆயுள்வரை….
(இக்கவிதைக்குரிய என் அன்புத் தங்கையாள் இன்னும் சில வருடங்களில் இறையருளால் தம் பேரக்குழந்தைகளைப் பார்க்க இருப்பதால், இச்சிறுபருவ குறுங்கவிதையை என்போல் தந்தையை இழந்த சக உதரத்தில் பிறவா அன்புச் சகோதரி. ‘ஷபா பானு’ உள்ளிட்ட சிறகுகள் குடும்பத்தின் சிட்டுக் குருவிகள் சின்னஞ்சிறு தங்கைகளுக்கு சமர்ப்பணம்.)

“விடியலைத் தேடி விடியா பயணம்”
முடுக்கமில்லாமலும்…
முழுவேகத்தில்….
காலச் சக்கரத்தின்…
கால்கள் நகர்கின்றன …/
,
இரவும் பொழுதும்…
எவ்வித ஈவும் இல்லாது ….
தினம் இறந்து பிறக்கிறது…./
,
எண்ணப்படும்…
என்னாட்களின்…
எஞ்சிய தொகையை …
சொல்லாமல் சொல்லியது…/
,
எச்ச நாழிகைகள் ..
மிச்சமில்லாது மடிகின்றன…
சொச்ச பயணங்களின்…
சூடு குறைகின்றன…./
,
ஏதோ ஒன்று …
நிகழத்தான் போகிறது அது…
நிகழும் நினைவில் ..
நினைவுக்குள் வருவதில்லை…/
,
தேகம் முழுக்க…
தேடியே ஓய்கிறது…
பொழுதுகளில் படரும்…
பொலிவும் தேய்கிறது…/
,
விட்டு விலகிச் செல்ல…
வருங்கால வைப்பும் இல்லை…
தொட்டு தொடர்ந்து செல்ல …
மூப்பும் முன்வரவில்லை …
,
முல்லைப் பிரதேசத்தில்…
முகிலின் வெளிச்சம் தேடி..
முயலொன்று போவதைப் போல்…
முடிவுறாப் பயணம் ….
,
வானகர வெளிச்சத்தில்…
வெறுமை ஒன்றே…
இறுதி எல்லை…///
++

பாகை இறையடியான்
நிலத்தின் பல்வேறு சமூக கலப்புகளுக்குள் கலந்திருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாய், மானுட வம்சத்தின் பல்வேறு நிகழ் கலவைகளை ஒரு கலசத்திற்குள் கடைந்தெடுத்து அதில் என் மொழியாடலில் சொற்கூட்டி, சுவை கலந்து தங்கள் கண்ணுக்குள் பரிமாறி நெஞ்சுக்குள் செரிமானமின்றி நிறைந்து நிற்க படைப்புகளை பரிமாறுகிறேன்.
இயற்பெயர் அப்துல் ரஹ்மான் தந்தை பெயர் பஷீர் அஹமது (ஆசிரியர்) நாகை மாவட்டம் பாக்கம் கோட்டூர் எனும் சிற்றூரில் பிறந்தேன். தமிழ்மேலும், பிறந்த தலத்தின் மேலும் கொண்ட பிரியத்தினால் எனது பெயரை தமிழ்ப் படுத்தியும், எமது ஊரின் பெயரை சுருக்கியும் பாகை. இறையடியான் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களிலும், இதர மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
எனது சிறுகதைகள், குறுங்கதைகள், கட்டுரைகள் என விகடன் இணையத்தளம் சுமார் 50 க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரதிலிபி இணையத்தளம் எனது 100’க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளது. பிரபஞ்சம் முழுக்க பரவி நிற்கும் மானுட சமூகத்தின் படிநிலைகளுக்குள் கலந்து நிற்கும் உணர்வு நிலைகளையும், சங்கதிகளையும் சகல மனிதர்க்கும் கடத்துவதே எனது படைப்புகள்.
பாசாங்குகளற்ற இந்த தமிழ் பசும் நிலத்தின் பகடைகளான மானிட குலத்தில் உலவும் சங்கதிகளும், சங்கேதங்களும், சம்பவங்களென எனது படைப்பில் தழைத்து துளிர்த்து நின்று, இந்த பகடைகளும், அவர்தம் பகடிகளும், மகுடிகளாய் மாறி வாசக நெஞ்சை கட்டுறச் செய்வதோடு, வேரற்ற மற்றும் வேருற்று கிளை பரப்பி நின்றாடும் மானுட சமூக கூட்டுக்குள் அசைந்தாடும் பல்வேறு படிநிலைகளை பேனா முனைக்குள் கடத்த முயலும் சிறு முயற்சியே எனது படைப்புகள்.