சந்துரு ஓர் ஓவியர், பக்க வடிவமைப்பாளர், பல இலக்கிய இதழ்களில், வார மாத இதழ்களிலும் நாளிதழ்களிலும் பணியாற்றியுள்ளார். இங்கு பலரின் புத்தகங்களுக்கு முகப்பை வடிவமைத்தும் ஓவியமாக வரைந்தும் கொடுப்பவர்.  எனக்கு எனது பன்னிரெண்டு பதிமூன்று வயதில் இருந்து சந்துருவைத் தெரியும். பழகுவதற்கு இனிமையானவர். எல்லோரிடத்திலும் கொஞ்சமாவது அன்பு இருக்கும் அதனை நாம் கொண்டாடினால் போதாதா என கேட்டுவிட்டு தனது அடுத்தடுத்த வேலைகளுக்குச் செல்லக்கூடிய மனம் கொண்டவர். இத்தனை ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் “டேய் தம்பீ… எப்படி இருக்க….?” என  உரிமையாய்க் கேட்கக்கூடியவர். அவரைப் பொருத்தவரை முதன்முதலில் அவரை நான் பார்க்கும் போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். அவரும் அப்படித்தான் முதல் சந்திப்பில் இருந்த புன்னகையை கொஞ்சமும் பாசாங்கின்றி இன்றும் வழங்கி கொண்டிருக்கிறார். இவர் கவிஞர் யோகியைத் திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு ஆண் குழந்தை இருக்கிறது.

ஓவியங்கள் என்றால் வண்ணங்கள் நிரம்பி வழிய வேண்டும் என்கிற எனது புரியாமைக்கு வெறும் கறுப்பு கோடுகளே கூட ஓர் ஓவியத்தை நாம் இரசிப்பதற்கும் அதனுள் நுழைவதற்கும் போதுமானது என்று புரிய வைத்தார். சில புத்தகங்களில் கவிதைகளுக்கு இவர் வரைந்து கொடுக்கும் ஓவியங்களே இன்னொரு கவிதையாக பரிணமிக்கவும் செய்கிறது. பல இடங்களுக்குச் சென்று பெரும்பாலும் அங்குள்ள மாணவர்களுக்கு அடிப்படை ஓவிய பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். ஓவிய கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார்.

‘மங்கிய நீலப் புள்ளி’ ஓவியர் சந்துருவின் முதல் புத்தகம். அவரது சொந்த பதிப்பகமான கூகை பதிப்பகத்தில் நேர்த்தியாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் தனக்குள் செர்த்து வைத்திருந்த அவ்வப்போது நெருங்கமானவர்களோடு மட்டுமே பகிர்ந்து வந்த கவிதைகளை தொகுத்திருக்கின்றார். தனது மொழிப்புலமையையோ நான் யார் தெரியுமா என்கிற கேள்விகளோ, நீயே தெரிந்து கொள் வாசகா, என்கிற தோரணையோ இக்கவிதைகளில் இருக்கவில்லை.

சந்துரு ஓர் கவிஞனாக இதுதான் நான் இப்படித்தான் நான். நான் நானாக இருப்பதால்தான் நான் நானாக இருக்கிறேன் என ரொம்பவும் இயல்பாக எந்த ஜோடிப்புகளும் இன்றி அவராகவே கவிதைகளில் வெளிப்படுகின்றார். அவரின் அந்த வெளிப்பாடு வாசகருள் நுழைந்து தனக்காக இருப்பை அடையாளம் கண்டு கொள்கிறது. இது கவிஞனின் வெற்றியா என யோசிக்க விடாமல் வாசகனின் வெற்றி என கொண்டாட வைக்கிறது.

நிகழட்டும் என்றார் கடவுள்

எல்லாமும் நிகழ்ந்தது (.15)

இப்படியாக முதல் கவிதையைக் கொடுத்திருக்கிறார் கவிஞர். மனிதன் தன் ஆணவத்தின் மீது வைக்ககூடிய பெரிய கேள்விக்குறையாய் இக்கவிதை உயர்ந்து நிற்கிறது. இதனை திரும்பத் திரும்ப சொல்லிப்பார்க்கிறேன். கடவுள் நிகழட்டும் என சொல்லிவிட்டார் அதனால் எல்லாம் நிகழ்ந்துவிட்டதா என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இக்கவிதையின் சூட்சமம் நம்மை கடவுளிடம் நெருங்கவும் வைக்கிறது அதே கடவுளிடம் இருந்து விலகிச்செல்லவும் வைக்கிறது.

மனமும் அறிவும் வெவ்வேறு என தத்துவங்கள் சொல்கின்றன. மனம் சொல்வது சில சமயமும் அறிவு சொல்வது சில சமயமும் நமக்கு நல்லதாக அமைந்துவிடுகிறது. சில சமயங்களில் சிக்கல்களையும் ஏற்படுத்திவிடுகிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றும் மனமா அறிவா என்கிற விவாதங்கள்: நடந்தேறிவருகின்றன. ஆனால் கவிஞரோ இன்னொன்றையும் இணைக்க சொல்கிறார். வயதையும் மனதையும் இந்த வரிசையில் இரண்டாக பிரித்து காட்டுகிறார்.

என் நெற்றியளவு உயரத்தில்

பறந்துகொன்டிருக்கும்

தட்டான்பூச்சியை

விரட்டி விளையாடியது வயது

எதையோ உள்வாங்கி

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மனசு

இதோ இந்தக கவிதை பிறப்பிற்காக… (.19)

                நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை வேறு யாரோ முடிவு செய்கிறார்கள். நம் வெற்றியையும் அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நமக்கு எது வெற்றி என்பதையும் அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதற்குள் நம்மை தள்ளியும் விடுகின்றார்கள். நமக்கு நமது வாழ்வே போதுமென்ற மனதை அவர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடியாது. நமது நிம்மதியை அவர்களால் கொஞ்சமும் உணர்ந்து கொள்ள முடியாது. தானாக வாழ நினைத்து அப்படியே வாழவும் செய்யும் மனநிலையில்  கவிஞர் இப்படியொரு கவிதையை எழுதியிருக்கிறார். கவிதையின் முடிவு போல அவர்கள் யாருக்கும் நம் பதில்கள் பிடிப்பதேயில்லை.

“20 வருடங்களுக்கு முன்

எங்கிருந்தாய்?” என்றனர்

இங்குதான் இருந்தேன்என்றேன்

“20 வருடங்களுக்குப் பிறகு

எங்கிருப்பாய்?” என்றனர்

இங்குதான் இருப்பேன் என்றேன்

என் பதில் அவர்களுக்கு பிடிக்கவில்லை (.28)

               இயல்பாகவே கவிஞர்களிடம் குறும்புகள் இருக்கும். கவிஞர் சந்துருவிடனும் அது இருக்கவே செய்கிறது. இன்று சில கவிஞர்களின் கவிதைகளில் கவிதைகளே இல்லை என்பது வேறு விசயம். தன்னை கவிஞர்கள் எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்பதை கவிஞர்களே ஏதோ ஒரு கவிதை வெளிபடுத்துகிறார்கள். இந்தக் கவிஞரும் அப்படித்தான் எழுதியிருக்கின்றார். மனிதனால் முடியவே முடியாத ஒன்றை கடவுளால் முடியுமா என முழுதுமாய்த் தெரியாத ஒன்றை கவிஞர் சாதித்துக்காட்டுகின்றார்.

தலைகீழாய்

நிற்பவனிடம்

என்ன செய்கிறாய்?”  என்றேன்

பூமியைத் தூக்கிப் பிடித்திருக்கிறேன்

என்றான் அவன் (.38)

இக்கவிதையில் கேள்வியைக் கேட்டது கவிஞரின் குரலாய் இருந்தாலும் அந்தப் பதில் சொல்லும் மனிதனே வாசகர் மனதில் கவிஞராக இருக்கின்றார். இதென்ன பைத்தியக்காரத்தனம் என கேட்க தோன்றுகிறதுதானே. அதுகூட இல்லாமல் ஏன் ஒருவன் கவிதை எழுதுகிறான்.

எல்லோருக்கும் வாழ்க்கை அவரவர் விருப்பப்படி அமைந்துவிடுவதில்லை. ஏதோ ஒரு நிறையில் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. அதே போல ஏதோ ஒரு குறையில் ஏதோ ஒரு நிறை இருந்துவிடுகிறது. எல்லாவற்றையும் தாண்டிதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. வலு இருக்கின்றவர்கள் எல்லாவற்றையும் தாண்டி வாழ்கிறார்கள். வலுவற்றவர்கள் என்ன  செய்வார்கள். அவர்களும் வாழ வேண்டாமா? அவர்களுக்கு அது சாத்தியம்தானா..? கவிஞர் கவிதை இப்படி வழி சொல்கிறது.

என் வாழ்வுக்குத்

தடையாக நிற்கும்

அத்தனைக்குள்ளும்

வாழவேண்டியுள்ளது. (.43)

ஆம் நண்பர்களே, முடிந்தவர்கள் தடைகளை தாண்டி வாழ்கிறார்கள். முடியாதவர்கள் தடைகளுக்குள்ளேயே வாழ்ந்து பழகுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் தடைக்குள்ளே வாழ்பவர்கள்தான் மனபலம் கொண்டவர்களாகத் தெரிவார்கள்.

குழந்தைகளைப் பாடாத கவிஞர்கள் இருக்கிறார்களா?  குழந்தைகள் குறித்து கவிதை எழுதுகையில் நாமே அந்தக் குழந்தையாக மீண்டும் பரிணமிக்கின்றோம். பின்னர் அந்தக் கவிதையை வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவர் குழந்தைமையை உணர்ந்து வாழ்வின் இரைச்சலில் இருந்து சற்றே தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

அவளுக்கு

உணவு ஊட்டிவிடும்போது

என் பசி

அடங்கிப்போகிறது (.50)

என்ற கவிதையை வாசிக்கும் போது அவள் வரும் இடத்தில் அவனையும் வைக்கலாம் குழந்தையையும் வைக்கலாம். யாரோ ஒருவரின் பசியாற்றும் போது நம் பசி கொஞ்சம் பொறுமை காக்கும்தானே.

இன்னொரு கவிதை, ஒவ்வொரு பெற்றோருக்கும் நடக்கும் உன்னத தருணம். எப்போதும் நம் கையைப் பற்றியிருக்கும் குழந்தை முதன் முதலாக நடக்கப் பழகியப்பின் தானாய் நடக்கும் போது நம் கைப்பிடி தளர்கிற தருணம் இன்பமா துன்பமா என இனம் காண முடியாத உணர்வை தன் கவிதைக்குள் இப்படிச் சொல்கிறார் கவிஞர்.

அவளுக்குச்

சிறகு

முளைக்கத் தொடங்கியிருக்கிறது

அவள் கையைப் பிடித்திருக்கும்

என் கையைத் தளர்த்துவிடுகிறேன்

மிகுந்த வலியோடு

அது நிகழ்கிறது. (.51)

தன் கைப்பிடியை விட்டு தானாய் நடந்த குழந்தை வளர்ந்து நிற்கிறது. ஏதோ ஒரு  காரணத்துக்காக தயங்கி தயங்கி அப்பாவிடம் வந்து நிற்க அவளை எதுவும் கேட்காது      அப்பாவே பேசுகின்றார் இப்படி;

அப்பா..” என்றாள்

என்னஎன்றேன்

ஒன்னுமில்லைஎன்றாள்

அப்பா எங்கும் போக மாட்டேன்

இங்கேயேதான் இருப்பேன்

என்றேன். (.54).

ஒவ்வொரு கலைஞனுக்கும் தான் இறந்த பின் என்னவாக அறியப்படுகிறேன் என்பதில் விருப்பமும் நம்பிக்கையும் இருக்கும். ஒருசிலர் தன் வாழ்நாள் துயரத்தை அந்த எண்ணம் கொண்டுதான் ஒவ்வொரு நாளையும் கடந்து கொண்டிருப்பார்கள். ஆனால் இக்கவிஞரோ எந்தவொரு எதிர்ப்பாப்பும் இல்லாமல் அவர் ஒவ்வொரு நாளையுமே இரசித்து வாழ்த்துகொண்டிருக்கின்றார். அதனால்தான் என்னவோ கவிஞரால் இப்படி எழுத முடிகிறது. ஏனெனில் இந்தக் கவிஞரிடம் பாசாங்கு இல்லை.

என்னைத் தேடும்போது

உங்களுக்கு என்ன கிடைக்கின்றதோ

அதுதான் நான். (.57)

இக்கவிதையின் இன்னொரு பரிணாமமாக கவிஞரே மேலும் ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். கவிஞரை தேடுகின்றவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் தான் என ஒப்புக்கொண்டவர். அவர்களுக்கு தான் என்னவாக கிடைக்க போகிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்தக் கவிதை அடுத்து:

சந்துருவின்

ஓவியங்களை

சந்துருதானே

வரைய வேண்டும்? (.58)

பென்ணின் மனதைப் புரிந்து கொள்ளத்தான் இங்கு எத்தனையெத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன. இன்றும் அந்த மர்மம் அப்படியேத்தான் இருக்கிறது. ஒருபோதும் முழுதும் அறிந்து கொள்ள முடியாத பேராற்றல்தான் இந்தப் பெண்களோ.

பேரிரைச்சலோடு

திரிந்து கொண்டிருக்கிறது

அவளின் மௌனம். (.33)

கடைசியில் இந்தப் பெண்களிடம் மண்டியிட்டு அன்பை க் காட்டுவதை தவிர வேறெப்படி அவர்களை நம்மால் புரிந்து கொள்ளமுடியும். அதுசரி ஏன் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு என்னதான் நம்மால் செய்துவிட முடியும் என இரு கைகளையும் விரித்துவிட்டாரோ கவிஞர்;

வாழ்வுக்கு

வண்ணங்கள் பூசிக்கொண்டிருக்கிறாள்

அருகில் நின்று

அதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

வண்ணங்கள் என் மீதும் ஒட்டிக்கொள்கிறது

அவளுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கு நான் யார்.? (.31)

இயற்கையிடத்திலும் இறைவனிடத்திலும் மனிதர்கள் என்னவாக இருக்க வேண்டும் எஅ கவிஞருக்கு ஒரு பார்வை இருக்கிறது.

விரும்பி பார்க்காதவரை

எதையும் காண்பிப்பதில்லை

இயற்கை. (ப.23)

அடுத்த கவிதையோ;

நமக்கான எதையும்

வாயைத்திறந்து கேட்கும்வரை

காத்திருப்பார் கடவுள். (ப.25)

கடவுளோ இயற்கையோ எதுவாக இருந்தாலும் மனிதன் இங்கு தயாராய் இருக்கவேண்டும். அவனுக்கு அவன் தான் முதலில் உதவிட வேண்டும்.

இந்தக் கட்டுரையில் இத்தொகுப்பில் வெளிவந்த குறுங்கவிதைகள் சிலவற்றை என் வாசிப்பில் இருந்து நான் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்துள்ளேன்.

இப்படி பல கவிதைகளைக் கவிஞர் பாசாங்கு இன்றி எழுதியிருக்கின்றார். அதுவே வாசிக்கும் வாசகர்களுக்கு இக்கவிதைகளை நெருக்கமாக்குகின்றது. கவிதை என்பது நான்கு அடுக்குகளில் என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். கைக்காசுகளைப் போட்டு அழகழகாய்ப் புத்தகங்களை அச்சடித்துக்கொள்ளலாம். பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் அழைத்து வந்து மேடையேற்றி புத்தகங்களை வெளியீடு செய்யலாம் என்கிற இலக்கிய சிற்றின்பம் தலை தூக்கியிருக்கும் இந்தச் சூழலில் தான் எதுவாக இருக்கிறேனோ அதுவாகவேதான் எழுதுகிறேன் என சொல்லும் கவிஞர் நம் கவனத்தை ஈர்க்கின்றார்.

இன்று கவிதைத் தொகுப்புகள் போடுகின்றவர்கள் புத்தக அட்டைக்கும் முகப்பிற்கும் காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் புத்தகத்தின் உள்ளடக்கத்தில் காட்டினால் நம்மை போன்ற ஏதோ ஒரு வாசகன் அதனை வாசித்து தன் மனதில் அக்கவிதைக்கு ஓரிடத்தைக் கொடுத்துவிடுவான். அந்தப் பேரின்பத்தை இலக்கியத்தில் அடைவதற்கு கொஞ்சமேனும் வாசிப்பும் அதையொட்டிய தீவிர உரையாடலும் அவசியம். மீண்டும் அடுத்த மாதம் ஒரு மலேசிய புத்தகம் அங்கத்தில் சந்திப்போம்.

தயாஜி

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *