விசித்திரமான கனவு அது!
அழகிய பூஞ்சோலை நடுவே தாமரைக்குளம்; பளிங்குத் தூய்மையான தண்ணீர்; ஆயிரம் இதழ்கொண்ட தாமரை அலர்ந்து மலர்ந்திருக்கிறது!
ஜோதிமயமான பொன்மலர் அது! சுடர்விட்டு ஒளிவீசும் அதன் எழில் பார்ப்பவர்கள் கண்ணைக் கூசச் செய்கிறது! யாராலும் அதனை அணுக முடியவில்லை.
அது மட்டுமா?
குளத்தின் படித்துறையில் நீண்ட கருநாகம் விழிப்புடன் காத்திருக்கிறது; சர்ப்பக்காவல்!
மானிடர்களால் எப்படி நெருங்க முடியும்? மலர் பறிக்கும் துணிவு யாருக்கு வரும்?
அதோ! வானவெளியிலிருந்து ஒரு அழகிய தேவகுமாரன் அந்த அழகுத் தாமரையைப் பறிக்க இறங்கி வருகிறான்! அதே நேரத்தில்-
ஆயிரம் தலை நாகம் ஒன்று எங்கிருந்தோ சீறிக்கொண்டு வருகிறது! அதன் மூச்சு, அனல் வீச்சாக இருக்கிறது.
தேவகுமாரனின் கூர்வாள் மின்னலாய்ச் சுழன்று அதன் மேல் பாய்கிறது!
இருவருக்கும் கடுமையான மோதல்!
கடல் கொந்தளித்தது; பூமி அதிர்ந்தது; ஆலகால விஷம் சிதறியது…!
தாக்குதலின் உச்சக்கட்டத்தில்-
திடுக்கிட்டு விழித்துக்கொண்டார் மகேந்திரபூபதி! ‘எவ்வளவு பயங்கரமான கனவு!’
மாதவபுரி மன்னரின் மன அமைதி குலைந்துபோயிற்று! பொழுது புலர்ந்தது.
ஆஸ்தான ஜோதிட நிபுணர்களை வரவழைத்தார் மகேந்திரபூபதி. அவர்களிடம், இரவில் தாம் கண்ட கனவினை கூறினார்.
அவர்கள் யோசித்து, “தங்கள் குடும்பத்திலே நடைபெற இருக்கும் சில முக்கிய சம்பவங்களின் மறு வடிவம்தான் அது! மறைமுகமாக சுட்டிக்காட்டப்படுகிறது. எதற்கும் தாங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என்று பொதுவான கருத்தை வெளியிட்டனர். ஆனால் கனவின் முடிவு எதை மறைபொருளாகக் குறிக்கிறது என்பதை ஒருவராலும் கூற முடியவில்லை.
“எல்லாம் கடவுள் செயல்!” என்று மன்னர் தம் கடமைகளில் மூழ்கிவிட்டார்.
ஊருக்கு வெளியே ஒரு பாழ் மண்டபம். ருத்ரம்மா என்ற ஒரு மந்திரக் கிழவி அதில் வசித்து வந்தாள். எதிர் காலத்தைப்பற்றி அருள் வந்து குறி சொல்வது அவள் வழக்கம்.
அபூர்வமாக அவள் ஊருக்குள் வருகிறாள் என்றால், விஷயமும் அவ்வளவு முக்கியம் என்பது ஊர் மக்களுக்குத் தெரியும்!
அப்படித்தான் அன்று-
ருத்ரம்மா அருள்மேலிட்ட நிலையில், விடுவிடென்று ஊருக்குள் நுழைந்தாள். ஊரார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில், நேராக அரண்மனைக் காவல்களையெல்லாம் கடந்து அரசன் எதிரே போய் நின்றாள்.
மகேந்திரபூபதி மந்திரக்கிழவியை வரவேற்றார்.
”மகனே!” என்று அழைத்த ருத்ரம்மா, “இந்த அரண்மனையிலே கருநாகம் ஒன்று குடியிருக்கிறது; ஜாக்கிரதை!” என்றாள்.
“கருநாகமா?” -திகைத்தான் மன்னன். ”ஆமாம்; அது மனிதக் கருநாகம்!”
“என்ன?’*
மந்தாகினி – மன்னரின் இளையதாரம் அப்போது அங்கு வந்தாள். -ருத்ரம்மா வினவினாள்.
“புரியவில்லை??
‘இல்லையே!”
“சரி, காலம் வரும்பொழுது புரியும்! துன்பங்களைக்கண்டு மட்டும் துவளாதே! நீ பெற்ற செல்வி- பேரழகுப் புதையல். ராஜவல்லியின் திருமண ஏற்பாடுகளைத் தைரியமாகச் செய்; மணமகன் விரைவில் வருவான்!” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
சிந்தனையில் ஆழ்ந்தார் மகேந்திரபூபதி. மன்னர் மகள் ராஜவல்லி!
மந்திரக்கிழவி ருத்ரம்மா கூறியதுபோல, பேரழகின் புதையல் தான்! வருணனைக்கு அடங்காத அவள் பேரெழிலைப் பாடாத கவிஞன் இல்லை; புகழாத மனிதன் இல்லை!
காரணம், அதீதமான அழகு அவளுக்கிருந்தது. அப்பேர்ப்பட்ட மட்டற்ற அழகியை மனைவியாக அடையத் தகுதி வேண்டாமா? ஆகையால் எண்ணற்ற இளவரசர்களும், கலைஞர்களும், பெருநிதிச் செல்வர்களும் அவளை மணமுடிக்க ஆசைப்பட்டு அவமானப்பட்டு பெருமூச்செறிந்து ராஜவல்லியை மணக்கும். ஆசையைக் கைவிட்டனர்!
அளவுக்கு மீறிய அழகே அவள் திருமணத்திற்குத் தடையாக இருந்ததைக்கண்டு பெருங்கவலை கொண்டார் மகேந்திரபூபதி.
தந்தையின் துயரம் கண்டு, தனிமையில் கண்ணீர் பெருக்கினாள் ராஜவல்லி. ‘கடவுளே! சுடர்மிகும் அழகுடன் என்னைப் படைத்துவிட்டு, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?’ என்று கலங்கி கடவுளை வணங்கினாள்.
இந்த நிலையில் தான் அரசரைத் தேடிவந்த ருத்ரம்மா, “உன் மகள் திருமணத்திற்கு ஆவன செய்; மணமகன் வருவான்” என்று கூறினாள்.
‘மணமகன் எந்தத் திசையில் இருக்கிறான்? எப்போது- எங்கிருந்து வரப்போகிறான்? அவன் யார்?’ என்ற விவரங்கள் புரியாத புதிராக இருந்தாலும், திருமண ஏற்பாடுகளை மகிழ்ச்சியுடன் துவக்கினார் மகேந்திரபூபதி.
ஆரம்பத்திலிருந்தே ராஜவல்லியின் அழகு, மந்தாகினியின் கண்ணை உறுத்தி வந்தது. அத்துடன், ருத்ரம்மா கூறிய செய்தியைக் கேட்டதும் அவளால் சகிக்க முடியவில்லை! தன்னைக் கருநாகம் என்று அக்கிழவி குறிப்பிட்டதை மன்னர் தெரிந்து புரிந்து கொண்டிருப்பாரோ? அதனை எப்படித் கொள்வது?
அன்று பௌர்ணமி –
மேல்மாட நிலவொளியில் மன்னரும் ராஜவல்லியும் நின்று கொண்டிருந்தார்கள். தற்செயலாக அங்கு வந்த மந்தாகினி, “தந்தையும் மகளும் ஏதோ ஆழ்ந்த ஆலோசனையிலே இருக்கிறீர்கள் போலிருக்கிறது! நான் வரலாமா?’ என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள்.
“வாருங்கள் அம்மா! இன்று முழுநிலவைப் பார்த்தீர்களா? எவ்வளவு மன ஆனந்தமாக இருக்கிறது?” என்றாள் ராஜவல்லி,
“ஆமாம்! பரமானந்தமாக இருக்கிறது! ஆனால் அந்த ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்கத்தான் முடியவில்லை!” என்றாள் பொய் வருத்தத்துடன்.
“ஏன்? உங்கள் உடம்புக்கு ஏதும்”
“என் உடம்புக்கு என்ன ராஜவல்லி?” என்று பெருமூச்செறிந்த மந்தாகினி, ”எல்லாம் உன்னைப்பற்றிய கவலை தான், உன் அப்பாவுக்கும் எனக்கும். பூமியிலே பிறந்த ஒருவன் கணவனாக உனக்கு வருவானா? எனக்குத் தோன்றவில்லை; ஆகாயத்திலிருந்துதான் வருவான் போலிருக்கிறது!” என்றாள் குறும்பாக,
“அதனாலே என்ன? ஆகாயத்திலிருந்து வரும் கணவன் ஒரு கந்தர்வனாகவே இருக்கட்டுமே! தேவகுமாரனைக் கணவனாக அடையும் தகுதி என் கண்மணி ராஜவல்லிக்கு இல்லையா என்ன?” என்றார் மகேந்திரபூபதி மட்டற்ற பெருமையுடன்,
“பேஷ்! அந்தப் பைத்தியக்காரக் கிழவி, கச்சிதமாக உன் அப்பாவுக்கு மந்திரம் போட்டிருக்கிறாள் பார்த்தாயா, ராஜவல்லி?”
இதோ பார் மந்தாகினி! ருத்ரம்மாவைப்பற்றி உனக்குத் தெரியாது! வாக்குப் பலிதம் உடைய அவள் சொல் பலித்தாலும் பலிக்கும்; விஷப்பரிட்சை எதற்கு? ” என்றார் மன்னர்,
“ஆமாம், நான் விஷப்பரிட்சை செய்கிறேன்! மாப்பிள்ளை வரவை,வழிமேல் விழிவைத்து நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்! பைத்தியங்களின் உளறல் கூடச் சில சமயங்களில் பலிக்கும்”! என்று கிண்டலாகச் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் மந்தாகினி.
அவள் நகைப்பதற்கு ஏற்ப நாட்கள் ஓடினவே தவிர, மணமகன் வரவில்லை!
ஆண்டுக்கொருமுறை மாதவபுரி காவல் தெய்வத்தின் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த ஆண்டும் வழக்கம் போல் எல்லைப்புறத்திலே பூஜை நடைபெற்றது. மகேந்திரபூபதி அதில் தம் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
பூஜை முடியும் தருவாயில் ருத்ராமா அங்கு வந்தாள். மந்தாகினிக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அதை வெளியே காண்பித்துக்கொள்ளாமல், “வரவேண்டும்! வரவேண்டும்! தாங்கள் வராதது ஒன்றுதான் பெருங்குறையாக இருந்தது. தங்கள் வருகையால் அந்தக் குறையும் நீங்கிவிட்டது!” என்று வஞ்சனையாகப் புகழ்ந்தாள் மந்தாகினி.
அதைப புரியாதவளா ருத்ரம்மா? “மெத்த மகிழ்ச்சி!” என்று வஞ்சனையாகவே அவளுக்கு நன்றி தெரிவித்து, ‘ஒரு முக்கிய விஷயத்தை மன்னரிடம் சொல்ல வந்தேன்!” என்றாள்.
”காத்திருக்கிறேன்! என்ன செய்யவேண்டும்?”” என்று கேட்டார் மகேந்திரபூபதி.
“நாளை முழுமதி நன்னாள்! அதிகாலையிலே, உன் பட்டத்து யானை கஜேந்திரனிடம் தாமரைப் பூமாலையைக்கொடுத்தனுப்பு. கஜேந்திரன் தேர்ந்தெடுத்து வரும் நபர், ராஜவல்லியின் மணாளனாகவும், உனக்குப்பின் மாதவபுரியை ஆளும் வாரிசாகவும் இருப்பான்!” என்று கூறினாள்.
மறுநாள் மன்னர் அதன்படி, பட்டத்து யானையை அலங்கரித்து தாமரை மாலையுடன் அனுப்பி வைத்தார். பிறகு, அரண்மனை முகப்பு வாயிலில் அதன் வருகையை எதிர் நோக்கி தம் பரிவாரங்களோடு பூர்ண கும்ப மரியாதையுடன் காத்திருந்தார்!
சூரியன் அஸ்தமிக்கும் நேரம்.
மணி ஓசை கேட்டது. கஜேந்திரன் வெகு உற்சாகமாய் வந்துகொண்டிருந்தது. மட்டற்ற மகிழ்ச்சியுடன் யானையையும், அதன்மீது அமர்ந்து வரும் எதிர்கால மாப்பிள்ளையையும் எதிர்கொண்டு வரவேற்கும் ஆவலுடன் முன்னே சென்றார். என்ன ஏமாற்றம்?
ஊரிலுள்ள சிறுவர்களெல்லாம் கேலியாகக் கைகொட்டிச் சிரித்தவண்ணம் பின் தொடர, மனிதக்குரங்கு ஒன்றுக்கு மாலையைச் சூட்டி உட்காரவைத்தபடி ராஜநடைபோட்டு வந்துகொண்டிருந்தது பட்டத்து யானை!
மன்னர் அதிர்ந்துவிட்டார்!
‘இந்த மனிதக் குரங்கா என் மருமகன்? இதுவா என் வாரிசு?’- ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் உள்ளம் துடிக்க, தலைகுனிந்து அரண்மனை திரும்பிவிட்டார் மகேந்திர பூபதி.
அந்த நிகழ்ச்சியினால், அரண்மனையே மீளாக் கவலையில் மூழ்கியபோது, வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்ந்த ஒரு ஜீவனும் அங்கிருந்தது; அவன்தான் மந்தாகினி!
“ராஜவல்லிக்கு எப்பேர்ப்பட்ட மன்மதன் கணவனாக வந்திருக்கிறான்! நான் அப்போதே சொன்னேன்; அந்தக் கிழவியின் பேச்சைக் கேட்டு ஏமாற வேண்டாம் என்று! அவள் வாக்குப் பலிதம் உடையவள் என்று என் வாயை அடக்கினீர்களே – இப்போது அந்த ருத்ரம்மா என்ன கூறிச் சமாளிக்கப் போகிறாள்?’’ மன்னரை மடக்கினாள் மந்தாகினி.
“அடி பேதைப் பெண்ணே! இது சிரிக்கும் விஷயமல்ல, சமாளிப்பதற்கு சிந்திக்கும் விஷயம்! பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே ருத்ரம்மா நின்றிருந்தாள்.
“சிந்திக்கும் வயிற்றெரிச்சல்!” திருத்தினாள் மந்தாகினி.
“உளறாதே! “
“வேதனையை வேறு எப்படிச் சொல்வது?” என்று குறுக்கிட்டார் மகேந்திரபூபதி. “உங்கள் ஆலோசனையைக் கேட்டு, பட்டத்து யானையிடம் மாலை கொடுத்தனுப்பினால் ஒரு மனிதக் குரங்கு வந்து சேர்ந்திருக்கிறது! என் கண்மணியை அந்தக் குரங்கிற்கு மணமுடிக்கச் சொல்கிறீர்களா?”
”மகனே! யானையின் தேர்வை-தெய்வ கட்டளையாக ஏற்பதுதான் இதன் விதிமுறையும் நோக்கமும் ஆகும் மீறுவது உனக்கு நன்மை தருவதாக இராது. என் கடமையைச் சொன்னேன்,’ என்று புறப்பட்டாள் ருத்ரம்மா.
“அரசரைப் பைத்தியக்காரனாக்கப் பார்க்கிறாள் கிழவி!’ என்றாள் மந்தாகினி, குரோதத்துடன்.
மந்தாகினியைத் தோள்வழியே திரும்பிப் பார்த்தாள் ருத்ரம்மா. “முட்டாள்! அதற்கு நான் என்ன ஆயிரம் தலை அரக்கனா? அவனுடைய கைக்கூலியா? அல்லது உன்னைப் போல் அசட்டுப் பெண்ணா? எது எதை எப்படிச் செய்வது- யார் யாரை எந்தவிதமாகக் கணிப்பது-எல்லாம் அறிந்தவள் நான்!… மகனே, மகேந்திரா! என்னை நம்பித் துணிந்து ராஜ வல்லிக்கும் மனிதக் குரங்கிற்கும், அடுத்த பௌர்ணமி அன்று திருமண ஏற்பாடு செய்! அதற்குள் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுகிறேன்! அனைத்தும் நலமாகவே முடியும்.” உத்தரவாதம் அளித்தாள் ருத்ரம்மா.
மகேந்திரபூபதிக்கு இனம் விளங்காத குழப்பம். செய் வகை புரியாத கலக்கம். ‘ருத்ரம்மாவை நம்பலாமா? எல்லாம் நல்லபடியாக முடியுமா? ஏதோ ஆயிரம் தலை அரக்கன் என்று கூறினாளே? மந்தாகினியிடம் அதைக் கூறுவானேன்?’ என்று பலவிதமாக யோசிக்கத் தொடங்கினார். அவரால் ருத்ரம்மாவை நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் சொற்படி பௌர்ணமிக்கு வேண்டிய திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கினார்.
அன்றிரவு மகேந்திரபூபதிக்கு உறக்கம் வரவில்லை. முன் நிலா மங்கலாய் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எழுந்து பூஞ்சோலைப் பக்கமாய் உலாவப் புறப்பட்டார். மல்லிகைப் புதருக்கருகே இரு மெல்லிய குரல்கள் கேட்டன. ஒன்று மந்தாகினியின் குரல்!
“இந்த ருத்ரம்மா ஒரு சனியன்! காரியத்தையே கெடுத்து விடுவாள் போலிருக்கிறது. ராஜவல்லியின் திருமணத்துக்கு மன்னர் ஏற்பாடு செய்து வருகிறார். -நீ தேடி வருகிறாயே மனிதக்குரங்கின் வடிவிலுள்ள அந்த மணிசேகரன்தான் மாப்பிள்ளை! அவனால் உனக்கு அழிவு நெருங்கிவிட்டது! அதற்கு ருத்ரம்மாவே வழி வகுத்துவிடுவாள்! இனி உன்பாடு; அவர்கள் பாடு! என்னை விட்டுவிடு, ரணபைரவா!’
“வெண்ணை திரண்டு வரும் தருணத்தில் தாழியை உடைக்கிறாயே மந்தாகினி! மந்தாரமலை பகவதிக்கு நூறு பேரழகுக் கன்னியர்களைப் பலி கொடுப்பதாக எடுத்துக் கொண்டுள்ள என் சங்கல்பம் என்ன ஆவது? இதனால் நான் அடையப்போகும் அற்புதப் பேராற்றல் மட்டுமா? என் வெற்றிக்கனியில் பெரும்பங்கு உனக்குத்தானே! ஆகையால் மனசை தளரவிட்டுவிடாதே. ராஜவல்லியின் தலை இந்தப் பௌர்ணமியன்று பகவதியின் பாதங்களில் உருளவேண்டும்! இந்த இறுதிக் கட்டத்தில் நீ மட்டும் என் வலக்கரமாக இருந்தால் மற்றவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன்*
“சரி, பார்ப்போம்! யாரோ வருகிறார்கள்” என்று நகர்ந்தாள் மந்தாகினி.
மந்தாகினியின் சுயரூபத்தை அடையாளம் கண்டு கொண்ட மன்னர். மறுநாள் அவளைக் கைது செய்து பாதாளச் சிறையில் அடைத்துவிட்டார்.
இந்த நேரத்தில் அரண்மனைச் சோலையில் மலர் கொய்து கொண்டிருந்த ராஜவல்லி எங்கோ மறைந்துவிட்டாள். மன்னர் முன்னிலும் அதிகமான கவலைக்கு உள்ளானார். பிறகு ஆலோசனை கேட்க, ருத்ரம்மாவைத் தேடிச்சென்றார்.
இரவு, மந்தாகினி–ரணபைரவனுக்கிடையே நடந்த உரையாடல் விவரத்தைக் கேட்ட ருத்ரம்மா, “இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்” அந்த ரணபைரவன்தான் ஆயிரம் தலை நாகம்; பாதாள வேதாளம் என அழைக்கப்படுபவன். கூடுவிட்டுக் கூடுபாயும் மாயாவி, அவனுடைய பேராசையே அவனை அழிக்கப்போகிறது! அதற்குக் கருவியாக இருப்பான் மணிசேகரன்’ என்றாள் ருத்ரம்மா.
”ஆமாம்! யார் இந்த மணிசேகரன்?” என்று புரியாமல் வினவினார் மகேந்திரபூபதி
”அவன் வேறு யாருமல்ல; மாளவநாட்டு இளவரசன்- தினகரசிம்மனின் மகன்! மணிசேகரனின் தங்கையை இந்த பாதாள வேதாளம் இதேபோல் கவர்ந்துசென்றபோது, சகோதரியை மீட்டுவரச் சென்ற இளவரசனைக் குரங்காக்கித் துரத்திவிட்டான்!. தங்கையை பகவதிக்குப் பலிகொடுத்த பாதாள வேதாளத்தை பழிவாங்கத் தருணம் எதிர்நோக்கிக் காக்கிருக்கிறான் மணிசேகரன். உன் வருங்கால மாப்பிள்ளை மணிசேகரனைக்கொண்டு ராஜவல்லியை பாதாள வேதாளத்திடமிருந்து காப்பாற்றுவது மட்டும் என் நோக்கமில்லை; அந்தக் கொடியவனின் அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உலகிற்கு நான் செய்யும் ஒரு நன்மையாகக் கருதுகிறேன்!’ என்று விளக்கமாகக் கூறினாள் ருத்ரம்மா.
மகேந்திரவர்மனின் கண்கள் நன்றியால் பெருகின.
பௌர்ணமிக்கு இன்னும் மூன்றே நாட்கள் இருக்கும் போது, ருத்ரம்மா மணிசேகரனை அழைத்துப் பேசினாள். “குழந்தாய் மணிசேகரா! உருவத்தில் குரங்காக இருந்தாலும் உணர்ச்சிகளை நான் அறிவேன். தங்கையைப் பறி கொடுத்த சோகம் ஒருபுறம்; பெற்றோர்களிடம் தன்னை இன்னார் எனப் பரிய வைக்க முயன்று பார்த்து முடியாமல்போய் விட்ட மனத்துயரம் ஒருபுறம்! இதற்கெல்லாம் காரணமாக அந்த பாதாள வேதாளத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற தீவிர வேகம் உன்னுள் கொழுந்துவிட்டு எரிவதை நான் அறியாதவளல்ல! உன் மானசீகக் கனவுகள் ஈடேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பு நிச்சயமாக உனக்குண்டு” என்றாள்,
மனிதக்குரங்கின் வடிவிலிருந்த மணிசேகரன், இதைக் கேட்டதும் ஒரு முறை துள்ளிக் குதித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து ருத்ரர்மாவின் கால்களில் விழுந்தெழுந்து நின்றான்! அதன்பின் ருத்ரம்மா அவன் வாயில் மந்திரக்குளிகை ஒன்றைப் போட்டாள். என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மணிசேகரனின் குரங்கு உருவம் நீங்கி, அழகிய கம்பீரமான இளைஞனின் வடிவம் அடைந்தான்.
“தாயே! நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?’ என்று கண் பனிக்க, கரம் குவித்து நின்றான் மணிசேகரன்.
“முதலில் அந்த பாதாள வேதாளத்திடமிருந்து ராஜவல்லியைக் காப்பாற்று! அதுதான் எனக்கு நீ செய்யும் கைம்மாறு”.
“புறப்படுகிறேன் தாயே! இம்முறை அவனை உயிரோடு விட்டு நான் திரும்புவதில்லை இது உறுதி!” என்றான் மணிசேகரன் உணர்ச்சியுடன்.
“மகிழ்ச்சி! …… இதோ இந்த மந்திரக் குளிகையையும் கையில் வைத்துக்கொள். தேவைப்படும் பொழுது இதை நீ உட்கொண்டால், கூடுவிட்டுக் கூடுபாயும் ஆற்றல் உனக்குச் சில தினங்கள் வரை தொடர்ந்திருக்கும்! கபட மாயாவியான அந்தக் கொடியவனை வெற்றிக்கொள்ள இது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று ஆசி கூறி அனுப்பனார் ருத்ரம்மா.
மணிசேகரன் புறப்பட்டான்.
அடர்ந்த, மிகப்பெரிய — பயங்கரமான — கானகத்தின் இடையில் இருந்தது பாதாள வேதாளத்தின் அந்த பாதாளக் குகை. ஏற்கெனவே ஒரு முறை, மிகத் துன்பங்களெல்லாம் பட்டு தடம் கண்டு கொண்டிருந்த மணிசேகரன், இந்தமுறை பாதாளக் குகையை விரைவில் சமீபித்து விட்டான். குகைக்கு அருகில் மிகப்பெரிய ஒரு கிழட்டு ஆலமரம் விழுதுகள் பரப்பி நின்றது. அதனை அணுகிச் சற்று இளைப்பாற நினைத்தான் மணிசேகரன்.
திடீரெனக் காட்டுத் தீ நாலாபுறங்களிலும் அவனைச் சூழ்ந்துகொண்டது. அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. தீ நாக்குகள் திகுதிகுவென்று நீண்டு அவனைத் தீண்ட வருவது போல் வேகமாய்ப் பரவிற்று. அவனுக்கு செய்வகை புரியவில்லை.
ஒருகணம் நிதானித்தவனுக்கு அருகிலிருந்த தாமரைக் குளம் தென்பட்டது. ஓடிச்சென்று அதில் குதித்தான். ஆனால் என்ன விந்தை! நீரின் மேல்பரப்பும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இப்போதுதான் மணி சேகரனுக்குப் புரிந்தது. இது பாதாள வேதாளத்தின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தவன் நீரினுள் மூழ்கினான்! ஆனால் எவ்வளவு நேரம்தான் மூச்சடக்கி இருக்க முடியும்? காட்டுத்தீ அணையும் வழியாகத் தெரியவில்லை.
மணிசேகரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ருத்ரம்மா கொடுத்த மந்திரக் குளிகையை வாயில் போட்டு விழுகினான். நீரினுள் இறந்து கிடந்த மீன்குஞ்சொன்று கண்ணில் பட்டது. தன் உடலைத் தாமரைக் கொடிகளுக்கிடையே சிக்கவைத்து விட்டு, மீன் குஞ்சின் உடலுக்குள் உயிர் மாறினான்! அவன் உயிரற்ற உடல் தாமரைக் கொடிகளுக்கிடையே மறைந்து கிடந்தது.
ஆனாலும், ஆபத்து அவனை விட்டு நீங்கியபாடில்லை. பெரிய தவளையொன்று அவனைத் தொடர்ந்து விரட்டியது. மரண பயத்தால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நீரில் மேலும் கீழுமாக நழுவி ஓடியபோது. தற்செயலாக உயிரற்ற பாம்பு ஒன்று அவன் கண்ணில் புலப்பட்டது. உடனே மணிசேகரன் மீன் குஞ்சிலிருந்து பாம்புக்குத்தாவி, பின்னால் விரட்டிவந்த தவளையை விழுங்கித் தீர்த்தான் !
சற்று நேரம்வரை, பாம்பு உருவத்துடனேயே தண்ணீரில் இருந்துவிட்டு, வெளியே கரையோரம் வந்து பார்த்தபோது காட்டுத் தீயைக் காணோம்! நல்லவேளை, இனி சற்றும் தாமதிக்காமல் பாதாளக் குகையினுள் சென்றுவிட வேண்டும் என்று அவன் நினைத்தபோது எங்கிருந்தோ வந்த கழுகு ஒன்று சிறிதும் எதிர்பாராத விதத்தில் ஜிவ்வெனப் பறந்து மணிசேகரனைக் கொத்திக் கொண்டு போய்விட்டது! கழுகின் கூறிய அலகிற்கும் பாம்பின் உடலிலிருந்த மணிசேகரனுக்கும் வானத்தில் கடும் போர்!
கழுகின் கால்களுக்கு இடையே போரிட்டவண்ணம் வானில் மிதந்து சென்றுகொண்டிருந்த மணிசேகரனின் பார்வையில், தற்செயலாக கீழே மயான பூமியில் ஒரு சவம் சிதையின் மேல் கிடத்தப்பட்டு, மனிதர்கள் சூழ்ந்திருந்ததைக் கண்டான். அவர்களில் ஒருவன் சிதைக்குத் தீ மூட்டும் தருணம் –
மணிசேகரன் ஒரு நொடியும் தாமதிக்காமல், கூடுபாய்ந்தான். மறுகணமே, இறந்தவன் எழுந்து உட்கார்ந்து கொண்டான். சூழ்ந்து நின்றவர்கள், கல் விழுந்த காக்கைக் கூட்டம் போல் அலறிக்கொண்டு ஊருக்குள் சிதறி ஓடத் தொடங்கினர்!
மணிசேகரன், தான் உயிர்மாறிய உடலைப் பார்த்துக் கொண்டான். இளமை கட்டுக்குலையாமல் திடகாத்திரமாக இருந்த ஒரு இளைஞனின் தேகம் அது. எந்தவித நோய் நொடி. விபத்துக்களால் இறந்ததாகத் தெரியவில்லை. “பின் அவன் எப்படி மரணமுற்றிருப்பான்?’ யோசித்தபடி மீண்டும் நடக்கத் தொடங்கினான்.
நிலவொளி பட்டம் பகல்போல் காய்ந்தது. எதிரே யாரோ வருவது தென்பட்டது. வந்தவன் தன்னை சமீபித்ததும், இருவரும் ஒருவினாடி ஒருவரையொருவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டு திடுக்கிட்டனர். வந்தவன், மணிசேகரனின் உருவத்திலிருந்தான்! ‘அப்படியென்றால், இப்போதுள்ள தன் உடல் அவனுடையதா? அப்போது கூடுபாயும் கலை அவனுக்கும் தெரிந்திருக்குமா? அப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்று நினைத்த மணிசேகரன், ‘உனக்கு என்னுடைய இந்த உடல் எப்படிக் கிடைத்தது?” என்று சுற்றிவளைக்காமல் கேட்டான்.
உடல்
நான் வடநாட்டைச் சேர்ந்தவன், இங்கே வந்து ஒரு குருவினிடத்தில் இம்மாதிரி வித்தைகளைக் கற்க விரும்பினேன். எனக்கொரு துறவி இந்த வித்தையைக் கற்றுக்கொடுத்தார். கானகத்திலிருந்த ஒரு தாமரைக் குளத்தில் நீராட மூழ்கிய போது இந்த உடல் தென்பட்டது. என் கூடுபாயும் ஆற்றலைப் பயன்படுத்தி – ஒரு பொழுதுபோக்காக -இந்த மேனிக்குள் புகுந்தேன். இதற்குள் கரடியொன்று வந்து என்னை விரட்டி விட்டு, என் சொந்த உடம்பை இழுத்துக்கொண்டு போய்விட்டது! அதைத் தேடியபடி வந்துகொண்டிருக்கையில்தான் உன்னைப் பார்த்தேன்” என்றான் அவன்.
மீண்டும் இருவரும், அவரவர் உடல்களைப் பழையபடி மாற்றிக்கொண்டனர்
அதன்பின், அந்த புதிய வாலிபன், “நானும் உன்கூட வருகிறேன். இன்று முதல் நாம் நண்பர்கள்” என்றான். தன பெயர் பரந்தாமன் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரும் புறப்பட்டனர்.
மீண்டும் அவர்கள் பாதாளக் குகையைச் சமீபித்து, ஆல மரத்தருகே வந்தனர். ஆலமரத்தடியில் காவி உடையணிந்த- முதிர்ந்து பழுத்த – ஒரு வயோதக சந்யாசி அமர்ந்திருப்பதைக்கண்டனர்.
சந்யாசி அவர்களை அன்புடன் அழைத்து, அவர்கள் மிக வாட்ட முற்றிருப்பதைக் கண்டு, பழங்களும் தேனும் கொடுத்துபசரித்து. அவர்கள் இருவரையும் பற்றி விசாரித்தறிந்து கொண்டு, தன்னைப் பற்றிக் கூறலானார்.
“நானொரு ஞானத்துறவி. உங்களைப்போல் நானும் சில அற்புத ஆற்றல்களைப் பெற்றவன். முற்பிறவியிலே நீங்கள் யார் என்பதைக் கூறும் பேராற்றல் எனக்குண்டு” என்றான்.
பரந்தாமன், தன்னுடைய முற்பிறவியைப் பற்றி அறியத் துடித்தான். உடனே அந்த சந்யாசி தன்னிடமிருந்த ஒரு வேரை எடுத்து இருவாது கைகளிலும் கட்டினான்.
“நான் உங்கள் இருவரது பூர்வஜென்மத்தைச் கூறுவேன். நீங்கள் உங்கள் கைகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருங்கள். உள்ளங்கையிலே உங்கள் முற்பிறவியின் உருவம் காணப்படும்!” என்று கூறிய சந்யாசி, அவர்களுடைய முற்பிறவி வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
முன் பிறவியிலே, நீங்கள் இருவரும் ஒரு குருவினிடம் சிஷ்யர்களாக இருந்தீர்கள். ஒருவன் மகா மேதாவி; துணிச்சல்காரன். இன்னொருவன் மந்த மதியுடையவன்; கோழை! உங்கள் குரு மாபெரும் தவவலிமை கொண்டவர். அந்திமக்காலம் நெருங்கியதும், அவர் உங்கள் இருவருடைய பணிவையும் பக்தியையும் மெச்சி, அருகில் அழைத்து “தென்புறத்திலே பாதாளக் குகைக்குள் சென்று, அங்குள்ள அமுதச்சுனை நீரில் கொஞ்சம் எடுத்து வருவோருக்கு, என் தவ வலிமையில் சிறிதைத் தருகிறேன்” என்று கூறினார்.
அதைக் கேட்டு நீங்கள் இருவரும் உற்சாகத்துடன் சென்றீர்கள். மேதாவியும் துணிச்சல்காரனுமானவன், உள்ளே போய் அமுதச்சுனை நீருடன் வெளியே வந்தபோது, உள்ளே போகாமல் வெளியிலேயே நின்றிருந்த மந்தமதி படைத்த கோழை அவன் தலையைப் பிளந்து கொன்று அமுக நீரை அபகரித்து, அதனை எடுத்துச்சென்று குருவினிடம் தந்து, கோழை சிஷ்யன் தவவலிமையைப் பெற்றான். அவர்களில் மேதாவி மணிசேகரன்; மந்தமதிக்காரன் பரந்தாமன்” என்று கூறினார் முதிய துறவி. அவர் அப்படி விவரித்துக்கொண்டே வந்தபோது இருவர் உள்ளங் கைகளில் அவையெல்லாம் தெளிவாகத் தெரிந்தது.
அதை ழுழுவதும் கேட்டு முடித்த மணிசேகரன், முற்பிறவியில் பரந்தாமன் தனக்கு இழைத்த வஞ்சகத்தையெண்ணிக் கொதிப்புற்று, பாய்ந்து ஆவேசத்துடன் பரந்தாமன்மேல் அவனைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டான்.
மணிசேகரன் பரந்தாமனைக்கொன்றுவிட்டதைக் கண்டதும் அட்டகாசமான ராட்ஸச் சிரிப்பொன்று எழுந்தது அந்தக் கபடச் சாமியாரிடமிருந்து!
அந்தப் பயங்கரச் சிரிப்பைத் தொடர்ந்து, கபட சன்னியாசி மறைய, அந்த இடத்தில் ஒரு பயங்கர உருவம் நின்றது. கருத்த மலைக்குன்றுபோல அறுவெறுப்பாக காட்சி அளித்த அந்த உருவத்தைப் பார்த்ததும் மணிசேகரனுக்கு எல்லாம் புரிந்து விட்டது.
ஆம்! அவன தான் பாதாள வேதாளம்!
இனி இவனிடமிருந்து தப்பிக்க என்ன செய்யவேண்டும் என்று மணிசேகரன் யோசிப்பதற்குள்-
அண்டத்தையே குலுக்கும் இடியோசை கேட்டது. மணிசேகரனும் பாதாள வேதாளமும் நின்றிருந்த இடத்தில் பூமி பிளந்தது.
அடுத்த கணம்……
மணிசேகரன் அதலபாதாளத்தில் விழுந்துகொண்டிருந்தான்.
திடீரென்று தரையில் ‘பொத்’தென்று விழுந்துவிட்ட அதிர்ச்சியால் மணிசேகன் நினைவு தெளிந்து எழுந்தபோது- இப்போது தான் குகைக்குள் இருப்பதை உணர்ந்தான். சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விட்டான்.
எங்கு பார்த்தாலும் மனித எலும்புகளாக சிதறிக் கிடந்தன. புலியை வேட்டையாட வந்து, அதன் குகையிலே எக்கச்சக்கமாக புலியிடம் சிக்கக்கொண்டுவிட்டதை உணர்ந்த மணிசேகரன் திகைத்தான்.
அப்போது அட்டகாசமான ராக்ஷஸ சிரிப்பொன்று எழுந்தது.
திடீரென்று தோன்றிய ஒரு ராட்சஸ ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பாதாள வேதாளம்தான் அப்படி சிரித்தது.
“மணிசேகரா! அட அற்ப நாயே! இப்போது வசமாக என்னிடம் வந்து மாட்டிக்கொண்டாயா? ருத்ரம்மாவின் சூழ்ச்சிகள் என்னிடம் பலிக்காது. நீ உன் ராஜவல்லியை மீட்டுச் செல்லவும் இனி முடியாது. என்னிடமிருந்து நீ உயிரோடு திரும்புவது பகற்கனவு! உனக்குத் துணை வந்தானே, அவனிடமிருந்து பிரிக்கத்தான் இந்த குயுக்தி நாடகம் ஆடினேன். நாளை தான் பூரண பௌர்ணமி. உனக்கும் ராஜவல்லிக்கும் ருத்ரம்மாவினால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்! அந்த முகூர்த்த வேளையிலேயே என் தாய் பகவதியின் காலடியில் உன் கனவுலக தர்மபத்தினி ராஜவல்லியின் தலை உருளப்போகிறது. அந்த அரிய காட்சியை நீயும் பார்! அதன்பின் உனக்கு விமோசனம் தருகிறேன்’’ பாதாள வேதாளம் ரத்த வெறியுடன் கர்ஜித்தது.
அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.
”அடேய்! ரணபைரவா!” என்ற குரல் ஒன்று இடிமுழக்கம்போல் கேட்டது. இருவருமே அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரணபைரவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட குரல் அது! கேட்டவுடன் சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கிப்போய் நின்றான் அவன். அந்தக் குரல்…
இறந்துபோன பரந்தாமனுடைய குரலாக ஒலித்தது. ஆனால் அங்கே தோன்றிய உருவம் பரந்தாமனுடையதல்ல! பார்க்கும்பொழுதே பயபக்தியை ஊட்டும் ஒரு ஆஜானுபாகுவான வடிவம். தேசு பொலிகின்ற முகம்; அதில் தவக்கனல் சுடர்வீசும் கண்கள். முதுமையிலும் தெய்வீகமான காம்பீர்யம் அவரைச் சூழ்ந்து நின்றது!
பாதாள வேதாளம் அவரைப் பார்த்ததும் கரம்கூப்பி, குறுகிப்போய் நின்றான்.
“நீ இப்படி ஒரு கேவலமான புழுவைப்போல் மாறிவிடுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வப்பொழுது உன்னைப்பற்றிய விவரங்களை கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன், ருத்ரம்மாவின் மூலம்!… முதலில் என்னாலே நம்ப முடியவில்லை; இப்போது உன் வாய்மொழி மூலமாகவே நீ எவ்வளவு கொடியவனாக மாறிவிட்டாய் என்பதை அறிகிறேன். உனக்கும் ருத்ரம்மாவுக்கும் ஒரே சமயத்திலே என் தவவலிமையால் அமானுஷ்ய வித்தைகளில் சிலவற்றைக் கற்றுக்கொடுத்தேன். சொல்லப்போனால் ருத்ரம்மாவைக் காட்டிலும் அதிக ஆற்றல்களை உனக்குத் தந்து, உலக நலன்களுக்காக ஆக்க ரீதியில் அவற்றைப் பயன்படுத்துமாறு நான் கூறியிருந்த கட்டளையை மீறி, அந்த ஆற்றல்களை துஷ்பிரயோகம் செய்யத் துவங்கிவிட்டாய்! ஒன்றுமறியாப் பாமர மக்களை ஆயிரம் தலை நாகமாய் உருவெடுத்துப் பயமுறுத்துவதிலிருந்து கன்னிப்பலி கொடுக்கும் கயவனாகும் அளவுக்கு உன் அக்கிரமம் மிதமிஞ்சி விட்டது! உன்னைவிட ருத்ரம்மா பலமடங்கு உயர்ந்தவள்; நீ உலுத்தன்!… இந்த வினாடியிலிருந்து உன் ஆற்றல்கள் அனைத்தும் அழிவதாக! இனி ஒரு சராசரி மனிதனாக இருப்பாய்!…” என்று சபித்தார் அவர்.
வெடவெடவென பயத்தால் நடுங்கிய பாதாள வேதாளம் விஷப்பற்களைப் பிடுங்கிய நாகம்போல் துவண்டு விழுந்தான்.
ஏதோ கனவில் நடப்பவைபோல் இவற்றையெல்லாம் வியப்பு மேலிட்டவனாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் மணிசேகரன். அப்படியானால் பரந்தாமனைப்போன்று வந்தவர் இந்த பாதாள வேதாளத்தின் ஆசானா? அவனுடைய சூழ்ச்சிகளை முறியடித்து, நண்பனைப்போல் நல்ல சமயத்தில் வந்து உதவிய உத்தமரையா நான் கொல்லத் துணிந்தேன்?… என்று துடித்துப் போனான்.
”ஐயா! என் அறியாமையை மன்னியுங்கள். தக்க சமயத்தில் நீங்கள் மட்டும் கடவுளைப்போல் வந்து என்னைக் காத்திராவிட்டால்…” மணிசேகரன் குரல் தழுதழுத்தது. கண்களில் நன்றி உவர்த்தாரையாக வழிந்தோடியது.
”குழந்தாய்! மணிசேகரா! ரணபைரவன் சூழ்ச்சிக்கு நீ என்ன செய்வாய்?–இதில் உன் தவறு எதுவுமில்லை! பாதிக்கப்பட்டவனுடைய மன நிலையில் அது சகஜம்!… இனிமேல் நடக்க வேண்டிய நல்ல காரியங்களில் நீ பயமின்றி ஈடுபடலாம்! நானும் துணை இருப்பேன்…” என்று கூறினார்.
அதற்குப்பின் காரியங்கள் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தன! ரணபைரவனால் பாதாளக் குகையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ராஜவல்லியும் மணிசேகரன் மாதவபுரி திரும்பிய மறுநாள்-
நிர்ணயிக்கப்பட்ட பௌர்ணமியன்று, மாதவபுரியும் மாளவநாடும் ஒரே சமயத்தில் விழாக்கோலம் கொண்டு விளங்கிற்று!
ராஜவல்லி – மணிசேகரன் திருமண வைபவம்தான் அதற்குக் காரணம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
000
அணில் அண்ணா (புவிவேந்தன்)
தமிழில் வெளிவந்த அணில், அணில் மாமா, அணில் காமிக்ஸ் இதழ்களின் நிறுவனர், ஆசிரியர். அணில் அண்ணா என்ற பெயரில் அணில் இதழில் கதைகள் எழுதினார். குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.
அணில் அண்ணா என்ற பெயரில் எழுதிய புவிவேந்தன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் விநாயகம். ஜோக்கர் மணி என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். இளமையில் கதைகள் எழுதத் தொடங்கினார். மளிகைக் கடை நடத்திக்கொண்டிருந்தவர் சினிமாவுக்கு கதை எழுதவேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்குச் சென்றார். அங்கே பத்திரிகைகளில் பணியாற்றிக் கொண்டே சிறுகதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அணில் பத்திரிகையை 1968-ல் தொடங்கினார். 1985 வரை சென்னையிலேயே அச்சிட்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரிக்கு வந்து அணில் அச்சகம் என்ற ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கி அதில் அணிலை அச்சிட்டு 1992 வரை நடத்தினார்.
அணில் அண்ணாவின் புகழ்பெற்ற சாகசக் கதாபாத்திரம் வீரப்பிரதாபன். அந்தத்தொடரில் 60 கதைகளுக்கு மேல் வெளிவந்துள்ளன. வீரப்பிரதாபன் யார் கண்ணுக்கும் தெரியாத மின்னல் அம்பு (மழை பெய்தால் மட்டும் தெரியும்), பறக்கும் அரக்கியின் ரத்தம் அடங்கிய சிமிழ், மாய மாணிக்க கல் ஆகியவற்றை ஆயுதமாகக் கொண்டவர். கட்டைவிரல் அளவு உள்ள மாயாஜாலக் குள்ளன் அவருடன் இருப்பார். ஒரு காலத்தில் வீரப்பிரதாபன் கதைகள் மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேல் விற்பனை ஆகின.
அணில்
அணில் மாமா
அணில் காமிக்ஸ்
மறைவு : அணில் அண்ணா புவிவேந்தன் ஜனவரி 14, 2009-ல் புதுச்சேரியில் காலமானார்.