1)

கால்கள் சோர்ந்து நிற்பதைப்

பார்க்க மாட்டாமல்தான்

இந்தப் பாதை

கண்கள் பெருகி

வலி நிறைந்து

உண்டான வழி இது

தொப்புள்கொடி சுற்றி வந்த

சிசுவின்

பிறந்தநாள் கதை போல

பாதைக்கு

பல கதைகளுண்டு.

2)

மழைக்கால

ரயில்பூச்சிகள் தான்

இவ் உலகைத்

திறந்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

3)

எப்போதும்

என்னை ஒளித்து வைத்திருக்கும்

இடத்தில் வந்து

யாராவது

விசிலடித்துவிட்டுப் போய்விடுகிறார்கள்

நான்

ஓட வேண்டியிருக்கிறது

4)

தொலைவில் இல்லாமல்

பாதை கிடக்கிறது

அருகிலில்லாமல்

இருக்கிறேன்.

5)

சாதாரணமாக

பார்த்துக் கொண்டிருந்த

மலை தான்

இப்போது

அப்படி முடிவதில்லை.

6)

அக்கு வேறு

ஆணி வேறாக

எனது மவுனத்தைப்

பிரித்துப் பார்த்தேன்

ஏதேதோ குரல்கள்

எதுவொன்றும்

மவுனத்தில் இல்லை.

7)

உண்மையாகவே

ஒரு

பொய் சொல்லி விட்டேன்

பொய்தான் அது

என்றில்லாமல்

உண்மையாகவோ

பொய்யாகவோ

நம்பிக் கொண்டிருப்பது

உங்கள் விருப்பம்.

8)

தொலைதூர பயணத்தில்

பக்கத்து இருக்கை

காலியாகவே வருகிறது

ஒவ்வொரு ஊருக்கும்

சிலர் ஏறுகிறார்கள்

இறங்குகிறார்கள்

நான் இறங்க வேண்டும்

காலி இருக்கை

இன்னும் உட்கார்ந்திருக்கிறது.

9)

ஒவ்வொரு நாளும்

ஒரொரு லட்சியத்தை

தோளேற்றிக் கொள்வேன்

வாழ்வின் பாதை

ஒரு மர்மப் பொருளை

வைத்துக் கொண்டு

வாலாட்டச் செய்துவிடும்.

10)

பேச்சுக்கெல்லாம்

சொல்வதில்லை

“அடி என் கற்கண்டே

ஒழுங்காகத் தூங்கு” என்பேன்

“கற்கண்டெல்லாம்

ஸ்கொயர் மாதிரி இருக்கும்லப்பா”

எனச் சொல்லி

தன் விரலால்

பால் பற்களைத்

தட்டிக் கொண்டு சிரிப்பாள்

விரிப்புகளில்

கொட்டிக் கிடக்கும்

கற்கண்டுகளை எடுத்து

வெளியே  வீசத் தொடங்குவோம்

இரவு முழுதும்

மேலிருந்து

மின்னிக் கொண்டிருக்கும்.

நந்தன் கனகராஜ்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர்.

ஆயுள் காப்பீட்டு முகவராக பணி செய்து வருகிறார்.

“அகாலத்தில் கரையும் காக்கை”, “மேழி நகரும் தடம்” என்ற இரு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *