கடந்த சில மாதங்களாக புகழேந்தியின் இரவுகளைப் பாம்புக் கனவுகள் வேட்டையாடிக்கொண்டிருந்தன. முதலில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள். பிறகு மூன்று – நான்கு நாட்கள். இப்போது வார விடுமுறை போல ஏதேனும் ஓரிரு நாட்கள் மட்டும் வராது; மற்ற ஐந்தாறு நாட்களும் தவறாது வந்து, அவரின் உறக்கத்தைப் பாழாக்கிவிடும்.

பாம்பென்றால் புகழேந்திக்கு மூத்திரமே முட்டிவிடும். பாம்புக் கனவுகளோ, நிஜப் பாம்புகளைவிட அதி பீதியை ஏற்படுத்தின.

வாரத்துக்கு ஓரிரு நாள் வந்துகொண்டிருந்தபோதே அது குறித்த கவனம் கொண்டிருந்தார். ஒரு நாள் காலைக் காஃபி குடித்துக்கொண்டிருக்கையில் வீட்டில் அதைத் தெரிவிக்கவும் செய்தார். 

“பாம்புக் கனவு வந்தா நல்லதுன்னு சொல்லுவாங்க” என்றாள் மாதரசி, மகிழ்ச்சியோடு.

இவரின் அம்மா திருத்தினாள். “எல்லாப் பாம்புக் கெனாவும் நல்லதில்ல. ஒத்தை நாக பாம்பு வந்தா விரோதிக தொல்லை. ரெட்டைப் பாம்பு வந்தா விக்கினம் வெலகும். பாம்பைக் கொல்றாப்புடிக் கெனாக் கண்டா விரோதிக தொல்லை ஒளியும். வெசம் தொட்டாப்புடி (பாம்பு கடித்ததாக) கெனாக் கண்டா தன லாபம். படமெடுத்து மூணு வாட்டி நெலத்துல அடிச்சுதுன்னா, புடிச்சிருந்த பூடை, திருஷ்டி, தோசம் எல்லாம் நீங்கி, ஐஸ்வர்யம் சேரும். தலைக்கு மேல நாகம் கொடை புடிக்கற மாற வந்தா அதிகாரம், பதவி, ப்ரமோசன்…”

புகழேந்திக்கு இரட்டை ஆச்சரியம். முதலாவது, பாம்புக் கனவுகளில் இத்தனை வகையறா உண்டா என்பது. அடுத்தது, அம்மாவுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்பது. அதை அவளிடமே கேட்கவும், “புஸ்தகத்துல போட்டிருந்தான்” என்றாள்.

அம்மாவுக்கு 83 வயது. சுதந்திர இந்தியாவின் துவக்க ஆண்டுகளில் திண்ணைப் பள்ளிக் கல்வி – அதுவும், மூன்றோ நான்கோ ஆண்டுகள் மட்டுமே – பயின்றவள். மருமகளை மேய்த்தல், வீட்டு ராஜாங்கம், கொல்லைப்புற விவசாயம், வீட்டு வேலைகளில் மல்லுக்கட்டுவது, தொ.கா. தொடர் பார்த்து ரத்தம் கொதிப்பது, மூட்டு வலியோடு போராடுவது என எப்போதும் பிஸியாக இருப்பாள். இவற்றுக்கிடையே கிடைக்கிற ஓய்வு நேரங்களில், சாளேஸ்வரக் கண்ணாடி அணிந்து, நாளிதழ்களோடு இலவச இணைப்பாக வருகிற வாரமலர், குடும்ப மலர் ஆகியவற்றில் துணுக்குகள், வீட்டு உபயோகக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள் ஆகியவற்றை மனனம் செய்துவிடுவாள். அந்த அறிவு பாணங்களைத் தக்க நேரங்களில் பிரயோகிக்கவும் செய்வாள்.

மாதரசி முதுகலை பயின்றவள். அவளுக்கும் அறிவுக்கும் 6.5 கி.மீ. தூரம். ஆனால், காரியத்தில் நாலு கண்ணாள்.

மாமியார் ஒப்பித்த பட்டியலைக் கேட்டதும் அவளது கண்களில் ஆசைக் கனவுகள் மிதந்தன. “உங்குளுக்கு எப்படிக் கனவுங்க வந்துச்சு? பாம்பு கடிக்கற மாதிரியா; கொடை புடிக்கற மாதிரியா??”

முந்தையதுக்கு செல்வம் கிடைக்கும், முந்தையதுக்குப் பதவி உயர்வு வரும் என்ற நப்பாசையில் அவள் கேட்பது புரிந்தது. செல்வமும், பதவி உயர்வும் நல்லவைதான்; இவரும் விரும்பக் கூடியவைதான். ஆனால், அதற்காகத் தன்னைப் பாம்பு கடிப்பது, தலைக்கு மேல் படக்குடை விரிப்பது உள்ளிட்ட எத்தகைய பாம்புக் கனவையும் காண அவர் தயாரில்லை. தவிர, அவருக்கு வரும் கனவுகள், பாம்பு கடிப்பதைக் காட்டிலும் அச்சுறுத்தக் கூடியவையாகவும், மரண பீதியை ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருந்தன. முந்தைய இரவு, ஒரு பெரிய மலைப் பாம்பு அவரின் எலும்பு நொறுங்கும்படி சுற்றி வளைத்து, கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவது போன்ற கனவு கண்டிருந்தார்.

பொதுவாக நாம் தினமும் காண்கிற சாதாரணமான கனவுகள், விழித்து எழுந்ததுமேவோ, அல்லது சில மணி நேரங்களிலோ மறந்துவிடும். சில துர்க்கனவுகளும், அசாதாரணமான கனவுகளும் பல்லாண்டுகளாயினும் நினைவில் ஆழப் பதிந்திருக்கும். புகழேந்திக்கு வரும் துர்க்கனவுகள், அவற்றின் வீரியத்தைப் பொறுத்து, சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை மண்டைக்கு வெளியே சுற்றிக்கொண்டிருக்கும். இந்தப் பாம்புக் கனவுகளோ மண்டையை விட்டு வெளியேறாமல், மூளைக்கு அடியில் மெடுல்லா ஆப்லங்கட்டா மீது வறத் தவக்காயாட்டம் உட்கார்ந்து, கொறட் கொறட் என புன்னாகவராளி பாடிக்கொண்டிருந்தன. அதிலும் நேற்றிரவு மலைப் பாம்பு சுற்றி வளைத்து விழுங்கிய கொடூரக் கனவு, இன்னமும் கண்களுக்குள்ளேயே இருந்தது.

அதைச் சொல்லவே, “மலைப் பாம்பு முளுங்கற கனவுக்கு என்ன பலனுங்கத்தே…?” எனக் கேட்டாள் மாதரசி.

மாமியார் தாடையில் கை வைத்து, “அது தெரியலியே…!” என அங்கலாய்த்தாள்.

கனவுகளுக்குப் பலன் சொல்லப்படுவது புகழேந்திக்கும் தெரியும். அதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஜோதிடம், ஆருடம், வழிபாடு, பரிகாரம், தான – தர்மம் ஆகியவற்றின் பலன்களில் அவருக்கு கனத்த நம்பிக்கை. அவரைப் பொறுத்தவரை அவை ஆதாரபூர்வமானவை. இந்த வகையறாக்கள் யாவற்றுக்கும் அவரது சொந்த வாழ்விலிருந்தும், குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரின் வாழ்விலிருந்தும் ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால், கனவுக்கு பலன் என்பதில் இது வரை எந்த ஆதாரங்களும் இல்லை. மொத்தம் 20 – 30 சீட்டுகளை வைத்துக்கொண்டு உலகம் முழுமைக்கும் பலன் சொல்கிற கிளி ஜோதிடம் போலத்தான், கனவுகளுக்கு பலன் என்பதும் சாஸ்த்திர ஆதாரங்களோ, அனுபவ ஆதாரங்களோ அற்றது என்பது அவரது முடிபு.

“மலைப் பாம்பு முளுங்குனது நேத்தைக்கு. மத்தபடி, ஒவ்வொரு நாளு ஒவ்வொரு பாம்பு, ஒவ்வொரு மாதிரிக் கனவா வரும். காலுக்கடில கெடக்கற மாதிரி, காலைச் சுத்துன மாதிரி, தொரத்தற மாதிரி, படுத்துத் தூங்கீட்டிருக்கும்போது மேல ஏறி நெஞ்சுக்கு மேல படமெடுத்துட்டிருக்கற மாதிரி…”

“இந்த அளவுக்கு வெறைட்டி வெறைட்டியா வருதா…? இதுக்கெல்லாம் என்ன பலன்னு தெரியலியே…! வேற யாருகிட்டயாச்சுக் கேட்டுப் பாத்தாலோ, கனவுப் பலன் புஸ்தகம் வாங்கிப் படிச்சாலோதான் தெரியும்.”

அவருக்கு மீண்டும் எரிச்சல் புகைந்தது.

“இங்க அவனவன் துர்சொப்பனம் கண்டு அல்லாடீட்டிருக்கறான்; நீ என்னடான்னா, அதுக்குப் பலன் என்னன்னு யோசிச்சுட்டிருக்கற! பாம்புக் கனாக் கண்டு பயம்தான் ஆகுது. மறு நாள் முளுக்க அந்தக் கனவோட பாதிப்புல மனசுக்கும் சரியாகறதில்ல; ஒடம்பும் சோந்து போயிருது. அதுதான் கண்கூடாக் கண்ட பலன். கனவுகளுக்குப் பலன் சொல்றதெல்லாம் ஏமாத்து வேலை.”

“உங்குளுக்கு எதுலயுமே நம்பிக்கை இருக்காது. மூட நம்பிக்கை, ஏமாத்து வேலைம்பீங்க.”

“அவன் எப்பூமே இப்புடித்தான்! ஆத்திகனா, நாத்திகனாங்கறதே தெரியாது. சாமி இருக்குதும்பான்; ஆனா, சாமியாடறதை நம்ப மாட்டான். ஆன்மா இருக்குது; ஆனா, பேய் – பிசாசு இல்ல; பேயாட்டம் பொய்யி; அது நரம்புக் கோளாறும்பான்…”

மாமியாரும் மருமகளும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தாக்கினர். எவ்வளவு விளக்கினாலும் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்குமான வித்தியாசம் அவர்களுக்குப் புரியப் போவதில்லை. அதற்கு அவர்கள் தயாராவதும் இல்லை. அவர்களிடம் மோதிப் பலனில்லை என்று புறமுதுகிட்டுவிட்டார்.

*******

உலக அளவிலும் இந்தியாவிலும் விஷமற்ற பாம்புகள்தான் அதிகம் என்பது அவருக்கு நன்கு தெரியும். எனினும், பாம்பு என்றதுமே விஷ ஞாபகமும், மரண அச்சமும்தான் மனதில் எழுகின்றன. ஆகவேதான் கனவிலும் பாம்பைக் காண பயம். கனவு என்றாலும், அதைக் காணும் சமயங்களில் அது நிஜமாகத்தானே உணரப்படும்! அக் கனவிலிருந்து விடுபடுகிற வரை மரண பயம் ஆட்கொண்டிருக்கும். கனவு பயத்திலோ, தானாகவோ உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டாலும், அக் கனவின் பயம் நீடிக்கும். மீண்டும் சரிவர உறக்கம் வராமல் அவதிப்படுவார். அப்போது மனம் தளரவும், துயருறவும், உளைச்சல்களுக்கு ஆளாகவும் செய்யும். காலையில் தூங்கி எழுந்ததும் புத்துணர்வு ஏற்படுவதற்கு மாறாக மனமும் உடலும் சோம்பிவிடும்.

முன்பும் சில பல வருடங்களுக்கோ, மாதங்களுக்கோ ஓரிரு முறை பாம்புக் கனவுகள் வந்ததுண்டு. ஏதோ ஒரு நாள் என்பதால் அப்போது அது பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், இப்போது தொடர்ந்து மாதக் கணக்கில், வாரத்துக்கு மூன்று – நான்கு முறை வருவது பெரும் தொல்லை.

நாள்பட பாம்புக் கனவுகள் வரும் நாட்கள் அதிகரித்தன.

“மயிலிறகைத் தலைமாட்டுல வெச்சுட்டுப் படுத்தா பாம்புக் கனவு வராதுன்னு சரசக்கா சொல்லுச்சு” என்றாள் மாதரசி.

மயிலும் கழுகும் பாம்புகளின் ஜென்ம விரோதிகள்; பாம்புகளைக் கண்டால் கொன்று தின்னக் கூடியவை. அந்த அடிப்படையில்தான் மயிலிறகு பாம்புக் கனவைத் தடுக்கும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கக் கூடும். அவருக்கு அதில் துளி கூட நம்பிக்கை இல்லை.

“ஒரு பறவையோட இறகு, எப்படி மனுசங்களுக்கு வர்ற கனவைத் தடுக்கும்? கொஞ்சமாச்சும் அறிவோடவும், லாஜிக்கோடவும் சிந்திச்சுப் பாரு” என்றார்.

“கொளந்தைகளுக்குக் காத்துக் கருப்பு அண்டாம இருக்கறக்கு தொட்டிலுக்கு அடில சீமாறு, இரும்புத் துண்டு, செருப்பு போட்டு வெக்கறதில்லையா? பெரியவங்களும் தாயத்து கட்டறதில்லையா? சாமின்னு செலையையும், படத்தையும், கல்லையும் கும்பறதில்லையா? சாமி படம், ஓம் டாலர், சிலுவை டாலர், செவன் எய்ட் சிக்ஸ் – இதையெல்லாம் பாத்தாலே பேய், பிசாசு நெருங்கறதில்லையே! அந்த மாதிரித்தான் இதுவும்.”

யோசித்துப் பார்த்தால் அவள் சொல்வதிலும் தர்க்க நியாயம் இருப்பது மாதிரித்தான் தோன்றியது. அதனால் மேற்கொண்டு வாதிடவில்லை.

மாதரசி சில பீலிகளை பூஜைப் பகுதி சாமி படங்களிடம் வைத்திருந்தாள். இப்போது அவற்றைக் கொண்டுவந்து இவரது கட்டிலின் தலைமாட்டுப் பக்கம் ஸ்டூல் மீது பூச் சாடியில் செருகி வைத்தாள்.

ஆனாலும் பாம்புக் கனவுகள் வரவே செய்தன.

“நம்பிக்கையோட இருந்தாத்தான் கடவுள்களே அருள் பாலிப்பாங்க.  நீங்க நம்பாததுனாலதான் மயிலிறகு வேலை செய்யல” என்றாள் மாதரசி.

ஒருவேளை, அப்படியும் இருக்கலாமோ என்கிற எண்ணம் இவருக்கும் ஏற்பட்டது.

அம்மா வேறொரு உபாயம் கொண்டு வந்தாள். “மூணாவது வீட்டு கோமதியம்மா சொன்னாங்க. ஆகாச கருடன் கெளங்கை வீட்டுல கட்டித் தொங்கவிட்டா, நாக தோசம், ராகு – கேது தோசம் எல்லாம் நீங்குமாமா. பாம்புக் கெனாவையும் தடுக்குமோ என்னுமோ. எதுக்கும் கட்டிப் பாருங்கன்னு, அவங்க வீட்டுல இருந்த கெளங்குல கொஞ்சம் பிச்சுக் குடுத்தாங்க.”

மண்ணோ, தண்ணீரோ தேவையின்றி, காற்றில் உள்ள ஈரப் பதத்தையே உறிஞ்சி உணவாக்கிக்கொண்டு, அந்தரத்திலும் வளரக் கூடிய அபூர்வ வகைக் கிழங்கு அது. கருடன் என்கிற அதன் பெயரின் காரணமாக, கருடன் பாம்பைக் கொன்று தின்னக் கூடிய வன்பறவை என்கிற விதத்தில் இந்தக் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதைச் சொல்லவும் செய்தார். 

“எதைச் சொன்னாலும் விதண்டாவாதம் பேசீட்டே இருந்தா எப்பட்றா? சாமிங்கறதே நம்பிக்கைதான். நேர்ல யாராச்சு எந்த சாமியையாச்சும் பாத்ததுண்டா? இந்தக் கெளங்கைக் கட்டித் தொங்கவிடு. நடந்தா நடக்கட்டும்; நடக்குலீன்னா ஒரு பைசா நட்டமில்ல. ஆனா ஒண்ணு; மாதரசி சொன்னப்புடி, நம்புலீன்னாக் கடவுள்னாலயே காப்பாத்த முடியாது.”

அம்மாவின் வாதம் அவருக்கே வியப்பளித்தது. பாமரி என்றாலும், அவள் சொல்வதில் சில உண்மைகள் இருப்பதாக உணர்ந்தார். தூணிலும் துரும்பிலும் இருக்கக் கூடிய கடவுள், ஆகாச கருடன் கிழங்கிலும், மயிற்பீலியிலும் இருக்க மாட்டாரா என்கிற சுயஞானமும் கிளர்ந்தது. கடவுள்தான் நம்பிக்கை; நம்பிக்கைதான் கடவுள் என்று தனக்குள் வீறாவேசமாகச் சொல்லிக்கொண்டு, ஆகாச கருடனைத் தமது படுக்கை அறையிலேயே கட்டித் தொங்கவிட்டார்.

மயிற்பீலிகளையும், கருடக் கிழங்கையும் கைகூப்பி வணங்கிவிட்டு நம்பிக்கையோடு படுத்தார்.

படுத்த பத்தாவது நிமிடம், பறக்கும் பாம்புகள் வந்து மயிற்பீலிகளையும் கருடக் கிழங்குகளையும் விழுங்கிவிட்டு, அவருக்குக் கொக்காணி காட்டின.

*******

அடுத்தடுத்த நாட்களில் பல விதமான பாம்புகள். அவற்றின் மூர்க்கமும் கூடியிருந்தது. நேரிலும், சாமி ஓவியப் படங்களிலும், சிற்பங்களிலும், திரைப்படங்களிலும் அவர் பார்த்திருக்கக் கூடியவை. மூன்று தலை செந்நாகம், ஐந்து தலை நீல நாகம், ஏழு தலை அனகோண்டா, ஆயிரம் தலைக் கட்டுவிரியன், கொள்ளிவாய் ராட்சஸ ட்ராகன், கண்ணில் விஷம் துப்பும் கருப்பு மாம்பா…

மரண பயம், மன உளைச்சல், உறக்கமின்மை, உடல் சோர்வு, மனத் தளர்ச்சி ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

“ஏனுங்த்தே! வாளத் தோட்டத்து ஐய்யன் கோவிலுக்குப் போயி வேண்டிட்டு, புத்து மண்ணு எடுத்துட்டு வந்து, தண்ணில கலந்து வீட்டைச் சுத்தியும் தொளிச்சா செரியாகுமா?” மாதரசி கேட்டாள்.

“அது பாம்பு, மத்த வெச கடிக தொந்தரவு இல்லாம இருக்கறக்குத்தான். மத்தபடி கெனாவுல வந்து தொந்தரவு பண்றக்கு அது எடுபடாதுன்னு நெனைக்கறன். சூரியனையும் நெலாவையும் முளுங்கற ராகு – கேதுவையே அண்ட உடாமத் தடுக்கறது ஆகாச கருடன் கெளங்கு. அதுனாலயே இவனுக்கு வர்ற பாம்புக் கெனாவைத் தடுத்து நிறுத்த முடியிலயே! எதுக்கும் கோயல் பூசாரிகிட்டக் கேட்டுப் பாத்தா விகரம் தெரியும்.”

இவரை உள்ளூர் கோவிலுக்குக் கூட்டிச் சென்றனர்.

பூசாரி இன்ஸ்டன்ட்டாக சாமியாடி, தூத்தம் தொளிச்சு, பத்தினி(வேப்பிலை)க் கொத்தால் செறகடித்து (மந்திரித்து), “உஸ்ஸ்ஸ்சு புஸ்ஸ் புஸ்ஸ்….! உஸ்ஸ்ஸ்சு புஸ்ஸ் புஸ்ஸ்…! உஸ்ஸ்ஸ்சு புஸ்ஸ் புஸ்ஸ்….!” என மூன்று முறை பாம்பாட்டம் ஊதி, துன்னூரு பூசிவிட்டார்.

“அடிக்கடி சர்ப்பம் கெனாவுல வந்தா, நாகர் கோயலுக்குப் போயி சேவலறுத்துப் பொங்க வெக்கோணும். கொல தெய்வ வளிபாட்டுல கொறை இருந்தாலும், சர்ப்ப ரூவத்துல வந்து நாவகப்படுத்தும். நீங்க ரொம்ப காலமா கொல தெய்வ பூசை பண்ணியிருக்க மாட்டீங்க. அதனாலதான் அப்புடி உக்கரமான சர்ப்பங்கல்லாம் வந்திருக்குது. உடனடியா நாகருக்கும் கொல தெய்வத்துக்குக் கோளியறுத்துப் பொங்கல் வெச்சு சமாதானப்படுத்துங்க. இல்லீன்னா இன்னும் உக்கரமாயிரும்.”

“அப்புடியே செஞ்சர்றோம் ஆத்தா.”

அம்மா மீதும் மாதரசி மீதும் துன்னூரு வீசி ஆசீர்வதித்துவிட்டு, “ம்ம்ம்…. ம்ம்ம்…!” என அடித் தொண்டையில் கறுவிக்கொண்டு ஆத்தா மலையேறிவிட்டது.

*******

அடுத்த வெள்ளியன்று கிராமத்து மரத்தடி மேடைக் கோவிலில் நாகனுக்கு சேவப் பொங்கல் வழிபாடு. அதற்கடுத்த வெள்ளியன்று வனாந்திரத்தில் பாழடைந்த குலதெய்வக் கோவிலில் சிறப்பு வழிபாடு.

தொடர்ந்து பத்து நாட்கள் பாம்புக் கனவுகளே வரவில்லை.

“இதுதான் நாகரு சக்தி, குல தெய்வத்தோட மகிமை” என்றாள் அம்மா. 

புகழேந்தி குலதெய்வக் கோவிலில் எடுத்த செல்ஃபியை முகநூல் ப்ரொஃபைலில் வைத்துக்கொண்டார். நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே பாடலை காலர் ட்யூனாக வைக்கிற அளவுக்குத் துணிச்சலும் வந்துவிட்டது.  

     பதினோராம் நாளிலிருந்து பாம்புக் கனவுகள் மீண்டும் சரமாரியாகப் படையெடுக்கலாயின. அவை வராத நாட்களே இல்லை என்றாகிவிட்டது. 

மேஜை இழுப்பறையைத் திறந்தால் அதற்குள் மணியன் பாம்பு கண் சிமிட்டும். கை கழுவ குழாயைத் திறந்தால் அதிலிருந்து கடல் பாம்பு வெளிப்பட்டு வாய் பிளக்கும். சாப்பிட்டுக்கொண்டிருக்கிற நூடுல்ஸ், சிறுபாம்புகளாகிவிடும். கால்சராய் ஜேப்பியிலிருந்து கைக்குட்டை எடுக்கக் கைவிட்டால் அங்கே சுருண்டிருக்கிற கட்டுவிரியன் சுரீரென்று கடித்தது. கடலோரப் பகுதிகளைப் பூர்வீகமாக கொண்ட நாய்த் தலையன் பாம்பு, வள் வள்ளெனக் குரைத்தபடி தரையிலிருந்து தாவிப் பாய்ந்து குரல்வளையைக் கவ்வியது. தமிழகத்தில் இல்லாததும், வேற்று மாநிலத்திலிருந்து வந்ததுமான ஓடுகாலிப் பாம்பு, தூங்கும்போது காதுக்குள் நுழைந்து மூளையைக் குடைந்தது. 

பாம்புகள் அவரைப் பல விதங்களில் படுத்தியெடுக்கவும், துன்புறுத்தவும், துரத்திக் கொத்திக் கொல்லவும், கொத்திக் குதறிக் கடித்துத் தின்னவும் செய்தன.

அவர் கண்டிராத வகைகளிலான பல ரகப் பாம்புகள். கேள்விப்பட்டிராததும், கற்பனை செய்து பார்த்திராததுமான விசித்திர வகையறாக்கள். அவை அவரைக் கொடூரமாக அச்சுறுத்தின.

கனவிலிருந்து விடுபட்டு விழித்த பின் இரவு முழுக்க உறங்க இயலாமல் விழித்திருக்கவும் நேரிட்டது. மறு நாளும், பிந்தைய நாட்களிலும் கூட பகல் இரவாக அந்தக் கோர விஷக் கனவுகளின் நினைவுகள் அழியாமல் துரத்திக்கொண்டே இருந்தன. அவற்றிடமிருந்து அவரால் தப்பிக்கவே இயலவில்லை.

தூங்குவதற்கே பயமாயிற்று. எந்த விதமான பாம்புக் கனவு வந்து, எப்படியெல்லாம் வதைப்படுத்துமோ என்கிற பயம். சில இரவுகளில் தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருக்கலானார். அதனால் மறு தினம் பகலில் தூக்கக் கலக்கமாக இருந்ததோடு, அலுவலகப் பணி செய்வதும் சிரமமாகி, மதியத்துக்கு மேல் விடுப்பெடுத்து வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

எவ்வளவு நாள் தூங்காமல் இருக்க முடியும்? இரண்டாம் ஜாமம் வரை கண் விழித்து, தானே தூக்கம் சொக்கியதும் கட்டிலில் விழுந்து அயர்வார். கண் அசந்த மறு நிமிடம் பாம்புக் கனவுகள் விஷப் பல்லிளித்துக்கொண்டு அகக் கண்களுக்குள் ஊடுருவிவிடும்.

     சாகவும் இல்லாமல், பிழைக்கவும் இல்லாமல் குற்றுயிராகத் துடித்துக்கொண்டிருக்கும் நிலை.

“நாகருக்கும், குலதெய்வத்துக்கும் கோளியறுத்துப் பொங்க வெச்சுக் கூட செரியாகுலயே! வேற ஏதாச்சுப் பெரிய தோசமா இருக்குமோ என்னுமோ! எதுக்கும் சோசியருகிட்டப் போயிப் பாக்கலாம்” என்றாள் அம்மா.

*******

ஜோதிடர் காவி வேட்டி, வெள்ளைக் கதர் சட்டை, காவித் துண்டு, பஞ்சமுக ருத்ராட்சம், ஒருமுக ருத்ராட்சம், விபூதி – சந்தன – குங்குமத்தோடு தெய்வீகமாக விளங்கினார். இவரது ஜாதகத்தை ஆராய்ந்து, கட்டங்களுக்குள் கிரகங்களை அடைத்து, அலைபேசிக் கால்குலேட்டரில் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் செய்து குறித்துக்கொண்டார். அஞ்சாம் வீடு, ஏழாம் வீடு, அவயோகி, கரணநாதன், பித்ருகாரகன், மாதுர்காரகன், புத்திரகாரகன், காரகத்துவம், கால சர்ப்ப தோசம் உள்ளிட்ட தொழில்சார் சொற்கள் மந்திரங்கள் போல் தெறித்து வீழ்ந்தன. அந்த சொற்களைக் கேட்டே இவர்களுக்கு மிரட்சியாகிவிட்டது.

     “நாக தோசம், குல தெய்வக் குறையெல்லாம் வேற. அதுக்கு நீங்க கோளியறுத்துப் பொங்கல் வெச்சது சரிதான். ஆனா, பிரச்சனை அது மட்டுமில்ல. ராகு – கேது திசை நடக்கும்போது கனவுல பாம்பு வரும். ஜாதகருக்கு ராகு திசை – ராகு புத்தி! எல்லாருமே பயந்து நடுங்கற திசை, ராகு திசை. அதுல கோடீஸ்வரன் ஆனாலும் ஆகலாம்; கோடித் துணி போட வேண்டிய நெலை வந்தாலும் வரலாம். வெசத்தால கண்டம்.”

     மூவருக்கும் ஈரக்குலை நடுங்கியது.

     “இது எவ்வளவு காலத்துக்கு இருக்குங் சோசியகார்ரே?’ அம்மா கேட்டாள்.

     “மொத்தம் ரெண்டு வருசம், எட்டு மாசம், பன்னெண்டு நாள். இப்ப மூணு மாசம், அஞ்சு நாள் முடிஞ்சிருக்குது.”

     “பரிகாரம் ஏதாச்சும்….?” மாதரசி கேட்டாள். 

     ஜோதிடர் இவரது ஜாதக நோட்டை மடித்து மேஜை மீது போட்டார். அதுவே திக்கென்றது. பண்ணையத்துப் படல் சாத்தியாகிவிட்டது என்று சூசகமாகச் சொல்கிறாரா?

“பரீட்சித் மகராசன் கதை தெரியுமா? தவத்துல இருந்த முனிவரை பரீட்சித்து அவமானப்படுத்துனதுனால, அவன் தட்சகன்ங்கற பாம்பு கடிச்சு சாவான்னு சாபமாயிருச்சு. அதுலருந்து தப்பிக்கறக்கு, ஒசரமான தூண் எளுப்பி, அது மேல ஏளு மாளிகை கட்டி, ஏளாவது மாளிகைல, கடுங்காவலுக்கு மத்தியில குடியிருந்தான். அப்படியிருந்தும், அதே தட்சகனாலதான் கடிபட்டு செத்தான்.”

     “ஐயோ,… அப்புடின்னா என் மகன்…” அம்மா சேலைத் தலைப்பால் வாய் பொத்திக் கலங்கினாள்.

     “அட-டட-டடா…! அதுக்குள்ள ஏனுங்மா அவசரப்படறீங்க? நான் இன்னும் சொல்லி முடிக்குல. பரீட்சித்து பண்ணுன மாற ஏளடுக்கு மாளிகை, எட்டடுக்குக் காவல் எல்லாம் போட்டாலும், சாபமோ தோசமோ நீங்காது. அதுக்கு என்ன பரிகாரம் பண்ணோனுமோ, அதையப் பண்ணோனும்னு சொல்ல வந்தேன்…”

     அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டாள். தம்பதி ஆசுவாசப் பெருமூச்சுவிட்டது.  

     “அடிக்கடி சிவன் கோயிலுக்குப் போங்க. டெய்லியும் ராகு காலத்துல மெளன விரதம் இருங்க. வாரா வாரம் செவ்வாக்கெளமை ராகு காலத்துல வன துர்க்கை வளிபாடு செய்யறது நல்லது. வன துர்க்கை பக்கத்துல இல்லீன்னா, ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்குப் போயி, தீபம் ஏத்தி வளிபடலாம். நாயத்துக்கெளமை ராகு காலத்துல – அதாவது, சாயங்காலம் நால்ரைலருந்து ஆறு மணிக்குள்ள – கருப்பு உளுந்து தானம் குடுக்கோணும். ஆகாச கருடன் கெளங்கை மாட்டி வெச்சிருக்கறதுனால பிரச்சனை கொறையும். இது எல்லாத்தைவிட முக்கியமா, சுயம்புவா புத்துக்கண்ணு உருவான கோயலுக்குப் போயி, நாகனுக்கு பால், முட்டை ஊத்தி வளிபட்டா, கெடுதல் பண்ற ராகுவும் கேதுவும் மனசு குளுந்து, நல்லது பண்ணுவாங்க. தனலாபம், சுகபோகம் எல்லாம் கெடைக்கும். பாம்புக் கனவு, பொடனில கால் பட ஓடிரும்.”

     மூவர் முகங்களிலும் இருநூறு வாட்ஸ் ஒளிர்ந்தது.

     புகழேந்தி எழுந்து நின்று ஐநூறு ரூபாய் நோட்டைக் காணிக்கை போல பவ்யமாக இரு கைகளாலும் நீட்டினார்.

*******

     ஜோதிடர் கூறிய பரிகாரங்கள் யாவும் செவ்வனே செய்யப்பட்டன. பாம்புக் கனவுகளும் கூடுதல் வீரியத்தோடு தொடர்ந்தன.

இரட்டைத் தலைப் பச்சைப் பாம்பு சரேலெனப் பாய்ந்து இரு கண்களையும் பிடுங்கிப் போட்டது. கண்கள் இருந்த இடம் ரத்தக் குழிகளாயின. ரத்தத் தாரைகள் ஒழுக, கைகளால் வெற்றுவெளியை நிரடியபடி அவர் சுவிட்சர்லாந்து தெருக்களில் அலைந்துகொண்டிருந்தார். சுவிட்சர்லாந்துக்கு ஏன், எப்படிப் போனார் என்று அவருக்கே தெரியவில்லை.

தரைக்கு மேலே செல்லாமல், அடியே மேற்பரப்பை ஒட்டியவாறு சுரங்கம் பறித்து நகரும் முள்ளிவாலிப் பாம்புகள் மறு நாள் ஆளுக்கொரு நாசித் துவாரங்கள் வழியே புகுந்து, பின் மண்டைக்குள் குடைந்து, பிடரியைத் துளைத்து வெளியேறின. ஒரு பாம்பின் வாயில் தவக்களையும், அதன் ஸ்டெப் ப்ரதர் வாயில் வெள்ளெலியும் இருந்தன.

மத்தியதரை நாட்டுப் பாம்புகளின் விஷத் தீண்டலால் வினோதமானதும், கோரமானதுமான பாதிப்புகளும் ஏற்பட்டது. தோல் கருத்துச் சுருங்கி, உடலெங்கும் பெரிய பெரிய கொப்புங்கள் உருவாகி வெடித்து, சீழ் ஒழுகி… தசைகள் அழுகி… துர்நாற்றம் தனக்கே தாளாமல்… ஜாம்பியாகி குரூப உருவம் பெற்று…

இல்லை – இல்லை…

பாம்புக் கனவுகளால் இப்படி தினம் தினம் செத்துப் பிழைத்து அவஸ்தைப்படுவதைவிட, நிஜப் பாம்புகளிடம் அகப்பட்டு ஒரேயடியாக, நிஜமாகவே செத்துப் போய்விடலாம் என்று பட்டது.

முன்பு போலவே உறக்கமின்மை, மன உளைச்சல், உடல் சோர்வு, வேலை செய்ய இயலாமை, நிம்மதியின்மை, மரண பயம் ஆகியவற்றோடு இப்போது வரும் கனவுகளின் கோரம், குரூபம், அருவருப்பு, குமட்டல் ஆகியவற்றால் சாப்பிடவும் இயலாத கொடுமை.

“பூசாரி சொன்ன மாதிரியே கோளியறுத்துப் பொங்கல் வெச்சோம். ஜோசியர் சொன்ன பிரகாரம் எல்லாப் பரிகாரமும் தவறாம செஞ்சாச்சு. நாகரு, ராகு, கேது எல்லாரும் நாம குடுக்கற பாலையும் முட்டையையும் வகுறு முட்டக் குடிச்சுட்டு வஞ்சகம் பண்றாங்களே,… உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றாப்புடி…” புகழேந்தி புலம்பினார்.

     அனுதின விரதம், வாராந்திர பூஜைகள், பால் – முட்டை வார்ப்பு ஆகியவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்தது. பருத்த உடல் வாகு, இளம் தொப்பை சகிதம் இருந்த புகழேந்தி ஒல்லியானது தவிர புதிதாக வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை.

     பாம்புக்குப் பால் வார்த்துக்கொண்டிருந்த அவரது ஒட்டிய வயிற்றில் பால் வார்க்கும்படியான சேதி ஒன்றை மாதரசி தெரிவித்தாள்.

திண்டுக்கல் அருகே சகல சர்ப்பச் சித்தர் என்று ஒருவர் எழுந்தருளியிருக்கிறாராம். விஷப் பல் பிடுங்கப்படாத செந்நாகம், கருநாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டைவிரியன், செவிட்டுவிரியன், கொம்பேறிமூக்கன் ஆகிய ஏழு கொடிய விஷப் பாம்புகளைக் கழுத்தில் போட்டுக்கொண்டு அருள் பாலிக்கக் கூடியவர். பொது தரிசனத்துக்குக் கட்டணம் இல்லை. அருகே சென்று ஆசி பெற ஆயிரத்து ஒன்று காணிக்கை. அவரிடம் பரிகாரம் செய்தால் ஏழு ஜென்ம சகல சர்ப்ப தோஷங்களும், ராகு – கேது, திசை – புத்தி தோஷங்களும் நீங்கிவிடுமாம். தோஷ நிவர்த்திக்குக் காணிக்கை குறைந்தபட்சம் பத்தாயிரத்து ஒரு ரூபாய். அதிகபட்சத்துக்கு வரம்பு இல்லை.

“பயங்கரமான கூட்டமாமா. தோஷ நிவர்த்திக்கு முன்கூட்டியே டோக்கன் புக் பண்ணனுமாமா” என்றாள்.

     முன்பாக இருந்தால் பத்தாயிரம் ரூபாயா என யோசித்திருப்பார். இப்போது பட்ட, பட்டுக்கொண்டிருக்கிற பாட்டுக்கு, பத்து லட்சம் என்றாலும் செலவழிக்கத் தயார் – எப்படியாவது அந்தக் கொடூரக் கனவுகளிலிருந்து தப்பித்தால் போதும்.

நிம்மதியாக உறங்கி எத்தனை மாதங்களாகிவிட்டது!

சகல சர்ப்பச் சித்தர் மட்டும் தன்னைக் காப்பாற்றிவிட்டால், அவருக்கு ஒரு கோவில் கட்டவும் இவர் தயார். 

*******

     குறித்த நாளில், மூன்று மணி நேரம் முன்னதாக ஃபாஸ்ட் ட்ராக் வாடகைக் காரில் குடும்பம் கிளம்பியது.

     உள்ளார்ந்த கிராமத்தில், ஒடக்காய் கூட மொட்டு வைக்காத வறக் காட்டில், ஐம்பது ஏக்கர் வளைத்துப் போடப்பட்டு, பூஜ்யஸ்ரீ சகல சர்ப்பச் சித்தர்ஜி சர்வ விஷ, சகல தோஷ நிவாரண ஆஸ்ரமம் அமைக்கப்பட்டிருந்தது. ஏழு தலை நாகம் குடை பிடிக்க தியானக் கோலத்தில் அமர்ந்துள்ளபடியும், ஏழு விஷப் பாம்புகளைக் கழுத்தில் மாலையாக அணிந்தபடியுமான ப்ரம்மாண்ட கட்டௌட்டுகள், ப்ளக்ஸ் பேனர்கள் நுழைவாயிலில் வரவேற்றன. பல்லாயிரக் கணக்கான தோஷகோடிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர். தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஸா ஆகிய மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள பேருந்துகள், வேன்கள், பல வகைக் கார்கள் சித்தர் புகழுக்கு அணி செய்து நின்றன. 

     பெருங்கூட்டத்திடையே அங்குலம் அங்குலமாக நகர்ந்து போகவேண்டியதாயிற்று. ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரங்கள் கழித்தே சித்தரிடம் செல்ல வாய்த்தது. கொடும் விஷப் பாம்புகளை மாலையாகப் போட்டிருக்கும் சித்தரைக் காண அவருக்கு பிரமிப்பு தாளவில்லை.

தலா ஆயிரத்தியொன்று காணிக்கை செலுத்தி அம்மாவும் மாதரசியும் சித்தரின் திருவடிகளைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர். என்ன இருந்தாலும், பாம்புகளைக் கண்டு அவர்களுக்கு உள்ளூர பயம்தான்.

     புகழேந்தியைப் படாத பாடுபடுத்தி, உடலை உருக்குலைத்து, மனம் பேதலிக்கிற அளவுக்கு ஆக்கிவிட்ட பாம்புக் கனவுகள் பற்றியும், நாகர் – குலதெய்வ வழிபாடுகளாலோ, பரிகாரங்களாலோ அவை விலகாதது பற்றியும் சித்தர் திருச்செவிகளில் முறையிடப்பட்டது. கழுத்தில் இருந்த ஏழு விஷப் பாம்புகளும் வளைந்தும், நெளிந்தும், பிளவுண்ட இரட்டை நுனி நாக்கை நீட்டியும் அமைதி காத்துக்கொண்டிருந்தன. சித்தர் அவற்றின் தலைகளை வருடிக் கொடுத்தபடி இவர்களின் மன்றாடல்களைச் செவிமடுத்துக்கொண்டிருந்தார்.

     பிறகு அபய முத்திரை காட்டியபடி சாந்தமாகவும், பொறுமையாகவும் சொன்னார். “இங்க வந்துட்டீங்க இல்லையா? இனிமே நாக தோஷமோ, ராகு – கேது தோஷமோ, சகல விஷ ஜந்துக்களோட தோஷமோ இருக்காது.”

அவர்கள் பக்தியோடு தொழுது நின்றனர்.

பரிகாரச் சடங்கு தொடங்கியது. தேங்காய், பழம், பால், முட்டை, கற்பூரம், ஊதுபத்தி முதலான பூஜை சாதனங்கள் கொண்ட தட்டக் கூடையை சிஷ்யஜி ஒருவர் வாங்கி சித்தர்ஜி முன்பாக வைத்தார். அரிவாளில் தேங்காய் உடைத்து தீர்த்தம் பிடித்துக்கொண்டு, கற்பூரம், ஊதுபத்தி கொளுத்தி, சர்ப்பங்களோடு சேர்த்து சித்தருக்கு ஆராதனை செய்யப்பட்டது. ஆரத்தியை குடும்பத்தாரும் புகழேந்தியும் வணங்கினர்.   

பிறகு சித்தர் பெருமான் சிம்மாசன இருக்கையிலிருந்து எழுந்து முன்னால் வந்து நின்றுகொண்டார்.

“மகனே,… இந்த ஏளு சர்ப்பங்கள்ல, உன்னோட கனவுல அதிகமா வரக் கூடியது எது? உனக்கு ரொம்ப பயமானது எது?”

“ரெண்டுமே ஒண்ணுதானுங் சாமி. கண்ணாடி விரியன்!”  

மஞ்சள் கலந்த பழுப்பு நிறம், தடித்த உடல், முக்கோண வடிவத் தலை ஆகிய சாமுத்ரிகா லட்சணங்களும், அதிக நச்சும் கொண்ட கண்ணாடி விரியனைப் பார்த்தபடி சொன்னார்.

அந்தப் பாம்பு கடித்தால், சரியான முதலுதவியும் சிகிச்சையும் செய்யாத பட்சத்திலோ, சிகிச்சை பலனளிக்காத பட்சத்திலோ ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும். நாகம், கட்டுவிரியன், சுருட்டைவிரியன் ஆகியவையும் கடு விஷம் கொண்டவையே. ஆனால், அவற்றின் உடலோ, உருவமோ, வரைகலையோ இவருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. சொல்லப்போனால், நாகனும் கட்டுவிரியனும் அழகானவை என்பது அவரது ரசனை. மலம்பாம்புக் குட்டி போன்ற கண்ணாடி விரியனின் தடித்த உடலும், வரைகலையும்தான் பீதியை உண்டாக்கும்.

“சரி. நீ கைகூப்பிக் கும்புட்டுட்டே என்னைச் சுத்தி ஏளு வாட்டி வலமா சுத்தி வரணும். ஒவ்வொரு சுத்து முடிஞ்சதும், எனக்கு முன்னாடி நேராப் பாத்து நில்லு. வரிசையா ஒவ்வொரு சர்ப்பத்தை எடுத்து உன் முகத்துக்கு முன்னாடி காட்டுவேன். பயப்பட வேண்டாம். தள்ளித்தான் புடிச்சிருப்பேன். அப்படி சர்ப்பத்தைக் காட்டும்போது, தைரியமா அதோட முகத்தையே நேருக்கு நேராப் பாத்து, சர்ப்பமாட்ட மூணு வாட்டி நாக்கை நல்லா நீட்டணும். சர்ப்பம் ஊதற மாற ஊதவும் செய்யணும்.”

குலதெய்வம், நாகர், ராகு – கேது ஆகியோரை மனதுள் வேண்டி, கைகூப்பித் தொழுதபடி சித்தரை வலம் வந்தார். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் அவருக்கு எதிராக நின்றார். சித்தர் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு பாம்பைக் கையால் எடுத்து, புகழேந்தியின் முகத்துக்கு முன்னே காட்டினார். கொடு விஷப் பாம்புகளை அனாயாசமாகக் கழுத்தில் போட்டுக்கொண்டிருக்கிற சித்தரின் மகிமையில் புகழேந்திக்கு அபரிமிதமான நம்பிக்கை. ஆயினும் முகத்துக்கு முன்பு பாம்புகளின் முகத்தைக் காண ஈரல், கணையம், கிட்னி யாவும் நடுங்கின. செத்த பாம்பைக் கண்டாலே பத்தடி தள்ளி நிற்கிறவர் அவர். முகத்துக்கு முன்னே பாம்பைக் காட்டினால் எப்படி இருக்கும்?

சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு, தைரியப்படுத்திய மனதோடு, விஷப் பாம்புகளை நோக்கி மூன்று முறை நாக்கை நன்றாக நீட்டவும், ஸ்ஸ்… ஸ்ஸ்ஸ்… என பாம்பிரைச்சல் போல ஊதவும் செய்தார்.

ஆறு சுற்று முடிந்து ஏழாவது சுற்று. அவர் மிக அஞ்சுகிற கண்ணாடி விரியன் அவருக்கு முன்னே முக்கோணத் தலை காட்டி, பிளவுண்ட நாக்கை நீட்டியது. அவரும் நாக்கை நீட்டி ஊதினார்.

கண்ணாடி விரியன் படாரென்று முன்னே பாய்ந்து அவரது நாவிலேயே கொத்திவிட்டது.

புகழேந்தி துள்ளி விலகினார். அம்மாவும் மனைவியும் ஓலமிட்டபடி அவரிடம் ஓடிவந்தனர். கூட்டத்தில் பரபரப்பும் கூச்சல் குழப்பங்களும் உண்டாயிற்று.

சித்தர் அமைதியாக நின்றுகொண்டிருந்தார்.

சுறுசுறுவென்ற கடுகடுப்பு நாவில் ஏறுவதைப் புகழேந்தியால் உணர முடிந்தது. தாமதித்தால் விஷம் துரிதமாக உடலுக்குள் ஏறிவிடும் என்பதும் தெரிந்தது. சட்டென்று தேங்காய் பழக் கூடையில் இருந்த அரிவாளை எடுத்து, தன் நாவை இழுத்துப் பிடித்து வெட்டிக்கொண்டார்.

என்ன ஏதென யாரும் பார்த்துப் புரிந்துகொள்வதற்குள் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. வெட்டுண்ட நாவிலிருந்து குருதி பீறிட வலி தாளாமல் அலறியபடி புகழேந்தி மயங்கி வீழ்ந்தார்.

அம்மா தன் நெஞ்சிலும், மனைவி தன் தலையிலும் அடித்துக்கொண்டு கதறினார்கள்.

“என்னோட சித்தியால வெஷத்தை எறக்கியிருப்பனே! அதுக்குள்ள ஏப்பா இப்புடிப் பண்ணுன…?” சித்தரும் பரிதவித்தார்.

சிஷ்யகோடிகள் விரைந்து முதலுதவிகள் செய்தனர்.  அந்தரங்க சிஷ்யைஜி அவசரமாகவும் பதற்றத்தோடும் அலைபேசி செய்ய, சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. அதில் புகழேந்தியும் குடும்பத்தாரும் ஏற்றப்பட்டனர்.

ஆம்புலன்ஸ் சென்று மறைந்த பின் கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது. வளாகம் முழுதுமே மயான அமைதி போல் கனத்த மௌனம்.

     “நாமளே வெஷப் பல்லுப் புடுங்குன பாம்புகளை வெச்சு ஊரை ஏமாத்திட்டிருக்கறம். அது தெரியாம, சாதாப் பல்லுக் கடிக்கு பயந்து அநியாயமா இப்படிப் பண்ணிட்டானே…!” அந்தரங்க சிஷ்யைஜியிடம் மெல்லிய குரலில் அங்கலாய்த்துக்கொண்டிருந்தார் சித்தர்.

     துண்டுபட்ட நாவின் நுனி, மண்ணில் மிதிபட்டுச் சிதைந்து, யாரும் கவனிக்கப்படாமல் கிடந்தது. 

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *