கௌதம் அருண் சபரி அபித்யா ஆசிரா அனைவரும் நண்பர்கள்.

ஒரே பள்ளி. ஒரே வகுப்பு. அருகருகில் வீடு. எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள்.

 அன்று அவர்கள் பள்ளியில் ஒரு அறிவிப்பு வந்தது. இந்த வருடம் வானவில் மன்றம் நடத்தும் போட்டியின் தலைப்பு பாலைவனம், கடல், காடு, இந்த மூன்று தலைப்புகள். இந்த மூன்றில் ஏதோ ஒரு தலைப்பில்  உங்களுடைய  செயல் திட்டத்தை வருகின்ற 25ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இது ஒரு குழு செயல்பாடு. இந்தக் குழு செயல்பாட்டில் ஐந்து முதல் ஏழு நபர்கள் வரை இருக்கலாம்.

இந்த அறிவிப்பு வந்தவுடன் பள்ளி முழுவதும் இது பற்றிய பேச்சாகவே இருந்தது. கௌதம் அருண் சபரி அபித்யா ஆசிரா எல்லோரும் ஒன்று சேர்ந்து எந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஆசிரா “பாலைவனம் எடுக்கலாம்” என்று கூறிய போது அனைவரும் சிரித்தார்கள். “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் ஆசிரா.

“பாலைவனத்தைப் பற்றி பேச என்ன இருக்கிறது? அதன் மூலம் என்ன நன்மை இருக்கிறது? நாம் ஒரு செயல் திட்டம் செய்தோம் என்றால் அது ஏராளமான நன்மைகளை கொடுக்க வேண்டும். அதைப்பற்றி பேச ஏராளமாக இருக்க வேண்டும்” என்று கூறினான் சபரி.

”நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள். ஆனால் நான் வேறு விதமாகப் பார்க்கிறேன். யாரும் செய்ய தயங்கும் ஒரு விஷயத்தை நாம் செய்ய வேண்டும். அதற்குள் இருக்கும் நன்மைகளை நாம் கண்டறிவோம்” என்றாள் ஆசிரா.

பெரும் வாக்குவாதம் நடந்தது.  இன்று சனிக்கிழமை தானே நாம் அரசினாமலை சென்று வைத்தியர் தாத்தாவிடம் இது பற்றி பேசிக் கொள்ளலாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பள்ளி விட்டதும் ஐவரும் வழக்கம் போல அரசினாமலைக்கு அடிவாரத்தில் இருக்கும் கருப்புசாமி மாமாவின் தோட்டத்தில் மிதிவண்டிகளை நிறுத்திவிட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

போகும் வழியில் அங்கிருந்த மரம் செடி கொடி இவற்றைப் பற்றி எல்லாம் பேசிக்கொண்டே சென்றார்கள். “இப்படி காடுகளைப் பற்றிப் பேச எத்தனை இருக்கிறது? இதை நம்முடைய செயல் திட்டமாக எடுத்துக் கொண்டால் நாம் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த வருடம் வெற்றி பெற்று வெளிநாடு சென்றே ஆக வேண்டும்” என்று கூறினான் அருண்.

“கூற ஏராளம் இருக்கிறது. ஆனால், புதிதாக என்ன இருக்கிறது? எல்லோரும் இதைப் பற்றி தான் கூறுவார்கள். ஆசிரா சொன்ன பிறகுதான் நானும் யோசித்தேன். பாலைவனம் பற்றியே நாம் ஒரு செயல் திட்டம் செய்வோம்” என்றாள் அபித்யா.

“சரி சரி மீண்டும் வாக்குவாதம் எதற்கு தாத்தாவிடமே கேட்டுக் கொள்ளலாம்” என்று கௌதம் கூறியவுடன் ஐவரும் மலை உச்சியை அடைந்திருந்தார்கள். தாத்தா குடிசையில் முன்பு இருந்த திண்ணையில் அமர்ந்து  சாவ்பாடி என்ற புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார். இவர்களைப் பார்த்ததும், அடடா! கண்மணிகளா! என்ன இத்தனை தூரம்? இவ்வளவு நாட்களாக ஏன் வரவில்லை?” என்று கேட்டார் தாத்தா. ”அரையாண்டு விடுமுறை  விட்டுட்டாங்க. அதனாலதான் நாங்க ஊருக்கு போயிட்டோம்” என்று கூறினான் கௌதம்.

“சரி சரி வாங்க நான் இப்பதான்   தேன்கூட்டில் இருந்து தேனை எடுத்து வச்சிருக்கேன்” என்று கூறி தேனை எடுத்துக் கொண்டு வந்து ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் ஊற்றினார். அனைவரும் அதை சாப்பிட்டு முடித்துவிட்டு தாத்தாவின் அருகில் அமர்ந்தார்கள்.

தாத்தா திண்ணையில் வைத்திருந்த புத்தகத்தை கையில் எடுத்து “இது என்ன புத்தகம் தாத்தா?” என்று கேட்டாள்.

“இது பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனைகள் மார்பகப் புற்றுநோய் இவற்றைப் பற்றி இரண்டு பெண்கள் எழுதிய புத்தகம். சமீபத்தில் தான் வெளிவந்தது. இப்பொழுதுதான் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். அடுத்த முறை வரும்பொழுது இது பற்றி உங்களுக்கு கூறுகிறேன்”

“சரி தாத்தா. எங்கள் பள்ளியில் வானவில் மன்றத்தின் போட்டி அறிவித்திருக்கிறார்கள். ஒரு செயல் திட்டம் ஒன்று உருவாக்க வேண்டும். அது காட்டைப் பற்றியோ கடலைப் பற்றியோ பாலைவனம் பற்றியோ இருக்கலாம். எதைப் பற்றி எடுத்துக் கொள்ளலாம் தாத்தா?” என்று கேட்டான் கௌதம். “மூன்றுமே அருமையான தலைப்பாயிற்றே. எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். நீங்கள் எதை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் தாத்தா.

“தாத்தா நான் காடு எடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் வேகவேகமாக சபரி.

“இல்லை தாத்தா நான் கடல் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் கௌதம்.

அபித்யாவும் ஆசிராவும் வேக வேகமாக “தாத்தா இதைப் பற்றி எல்லோருமே செய்வார்கள் தாத்தா. நாம் பாலைவனம் பற்றி தான் ஒரு செயல் திட்டம் உருவாக்க வேண்டும் தாத்தா” என்றார்கள்.

“அடடா இது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறதே! நல்ல யோசனை. கண்டிப்பாக பாலைவனம் பற்றிய எடுக்கலாம்”

 “பாலைவனம் பற்றி பேச என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. அதைப்பற்றி பேசி எப்படி நாம் வெற்றி பெற முடியும்?” என்று கேட்டான் கௌதம்.

“தாத்தா பாலைவனத்திலேயே இரண்டு வகை இருக்கிறது. ஒன்று பனிப் பாலைவனம் இன்னொன்று மணல் சார்ந்த பாலைவனம். பனிப் பாலைவனம் உருகுவதனால் தான் கடல் மட்டம் உயர்கிறது என்று நான் எங்கோ படித்திருக்கிறேன்” என்றாள் ஆசிரா.

“அடடா! அருமை! அருமை டா! சரி வேற என்ன படித்திருக்கிறாய்?”

“என்னது பனிப் பாலைவனமா? பாலைவனம் கிடையாது” என்றான் அருண்

“அது பாலைவனம்தான். நான் அப்படித்தான் படித்திருக்கிறேன். அது மட்டும் இல்லை. 70% எண்ணை கிணறுகள் பாலைவனத்தில் தான் இருக்கின்றன” என்றான் கௌதம்.

கௌதமை திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே “உண்மைதான் அருண் நானும் படித்திருக்கிறேன்” என்றாள் ஆசிரா.

“தாத்தா நீங்களே கூறுங்கள். இவை மட்டும் போதுமா? ஒரு செயல் திட்டம் செய்யும்பொழுது  அவை சார்ந்து ஏதாவது புதுமையாக இருக்க வேண்டும்.  நிறைய நன்மைகள் தருவது போல் இருக்க வேண்டும். கூறுவதற்கு ஏராளமான செய்திகள் இருக்க வேண்டும் தானே! அப்போது தானே அந்தச் செயல் திட்டத்தைப் பற்றி சுலபமாக விளக்கம் முடியும்” என்று கேட்டான் சபரி.

“சரியாக சொன்னாய் சபரி. விளக்குவதற்கு சுலபமாக ஏராளமான செய்திகள் இருந்தால் மட்டுமே போதாது. பெரும்பாலும் யாரும் அறியாத புதிய செய்தியாகவும் இருக்க வேண்டும்”

“பாலைவனத்தைப் பற்றி அப்படி ஏதேனும் செய்தி இருக்கிறதா தாத்தா?” என்று ஆர்வமாகக் கேட்டான் கௌதம்

“பாலைவனத்தினால் தான் அமேசான் காடுகள் உள்ளிட்ட பல காடுகள் செழித்து வளர்கின்றன. இந்த உண்மை சமீபத்தில் தான் ஆராய்ச்சியின் வழியாகக் சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.”

“என்னது! பாலைவனம் மூலம் காடுகள் செழிப்பாக வளர்கிறதா? இதெல்லாம் நம்புற மாதிரி இருக்குதா தாத்தா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் தாத்தா” என்றான் சபரி.

“உண்மைதான். முதலில் இதைக் கேட்பவர்களுக்கு சந்தேகம் வரும். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி இப்படித்தான் கூறுகிறது. அமேசான் உள்ளிட்ட காடுகளில் தொடர்ந்து மழை பெய்வதால் அந்த மழை நீரால் பாஸ்பரஸ் அடித்து செல்லப்படுகிறது. மரங்களின் வளர்ச்சிக்கு பாஸ்பரஸ் மிகவும் முக்கியம். இந்த பாஸ்பரஸ் பாலைவன மணலில் இருக்கிறது. பாஸ்பரஸ் மட்டும் இல்லை இரும்பு நைட்ரஜன் உள்ளிட்ட ஏராளமான தாதுக்கள் இருக்கின்றன. இவை அந்த மரங்கள் செடி கொடிகள் வளர்ச்சிக்கு உதவுகின்றன”

“தாத்தா பாலைவனம் எங்கோ இருக்கிறது. அமேசான்  மாதிரியான காடு எங்கோ இருக்கிறது. அங்கிருந்து எப்படி  அவ்ளோ தூரம் போக முடியும்?” என்று அழுத்தி கேட்டான் சபரி.

“அதானே எப்படி வர முடியும்?” என்று யோசனையோடு கேட்டாள் அபித்யா.

“வேறு எப்படி? பெரிய சுழல்  போல் காற்று வீசுகிறது அல்லவா!  இந்தக் காற்று தான்  அப்படியே காற்றோடு சேர்ந்து புழுதியாக  காட்டை அடைகிறது”

“வாவ் தாத்தா. இது ஒரு மேஜிக் மாதிரி இருக்குதே தாத்தா” என்றான் கௌதம்.

“மேஜிக்ன்னு கூட வச்சுக்கலாம்.  வரும் வழியில் கடல் இருக்கும் கடல் மீது படியும் புழுதி கூட கடலில் இருக்கும் உயிரினங்களுக்கு பயன்படுகின்றன”

“விட்டா நாம்  கூட இந்தப் புழுதியினால்தான் உயிர் வாழ்கிறோம்னு சொல்லுவீங்க போல இருக்கு தாத்தா” என்றான் நக்கலாக சிரித்தபடியே அருண்.

“அப்படிக் கூட சொல்லலாம். கடலில் சூரிய ஒளி செல்லும் மேல்மட்ட பகுதியில் ஒளிச்சேர்க்கை மூலம் உயிர் வாழும் பைட்டோபிளாங்டோன் என்கிற நுண்ணுயிர் கூட்டத்திற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. இந்த இரும்பு சத்தை தான் கடல் மட்டத்திற்கு மேலே படிந்திருக்கும் புழுதியில் இருந்து எடுத்துக் கொள்கிறது”

“சரி அப்படி கூட சொல்லலாம் என்று சொன்னீர்கள் இதன் மூலமாக நமக்கு என்ன தாத்தா பயன்?”

“இது ஒளிச்சேர்க்கையின் மூலம் வளிமண்டத்தில் இருக்கும் காரியமில வாய்வை உறிஞ்சி புவி வெப்பமடைதல் தடுக்கிறது. புவி வெப்பமடைந்தால் நமக்கு பிரச்சனை தானே?  அப்படி என்றால் இந்தப் புழுதி நமக்கும் தானே உதவுகிறது” என்று கேட்டார் தாத்தா

” அட்டகாசம் தாத்தா. இந்தப் புழுதி செயல்திட்டம் செய்தால் நம்ம தான் தாத்தா ஜெயிப்போம்” என்றான் சபரி.

“கண்டிப்பாக செயல்திட்டத்திற்கு பாலைவனத்தை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற புழுதி  கடல்  பாலைவனம்  காடு போன்று வடிவமைத்து விளக்கம் கொடுக்கலாம். அவர்கள் சொன்ன மூன்று தலைப்புகளும் உள்ளே வரும். ஆனால் நாம் பாலைவனம் பற்றி மட்டும் கூறுவோம். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும்” என்று கூறினாள் ஆசிரா.

“மிக அருமையான யோசனை. ரொம்ப மகிழ்ச்சி தாத்தா. தாத்தான்னா தாத்தாதான்” என்று தாத்தாவைக் கட்டிக் கொண்டான் கௌதம்.

“பொதுவாகவே இயற்கையின் படைப்பில் எதுவுமே  தேவையில்லை என்று கூறி விட முடியாது.  ஒவ்வொன்றும் படைத்ததற்கான அர்த்தம் இருக்கிறது” என்று கூறிய தாத்தா உள்ளிருந்து மயிலிறகுக் கொத்தை எடுத்து வந்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.

“தாத்தா மயிலே மயிலே என்றால்  இறக்கு போடாதன்னு சொல்லுவாங்க. நீங்க அந்த மயில்கிட்ட இருந்து இறகை பிச்சு எடுத்துட்டீங்களா?” என்று  சிரித்துக் கொண்டே கேட்டான் சபரி.

“இல்லடா கண்ணா,  இந்தப் பக்கம் நிறைய மயில் வரும். அங்கங்க அதோட இறகுகள் விழுந்து கிடக்கும். அதை எடுத்து வைத்திருந்தேன்” என்று கூறினார் தாத்தா.

“அந்த நேரம் மழை தூர ஆரம்பித்தது. மழை வழுவாக வருவதற்குள்  வீடு போய் சேருங்க” என்று தாத்தா கூற ஐவரும்  மெதுவாக மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தார்கள்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *