சித்திரைக்கொண்டாட்டம்.

____________________________

வண்ணப்பொடிகள்

தூவியும்

நீர் நிரப்பிய பலூன்களை

ஒருவர் மேல் ஒருவர்

வீசியடித்தும்

ஒரே குதூகலம்.

வெறுமையின்

சிறு இடைவெளி

அதில் நுழைந்து

நடக்கிறானவன்.

பறந்து வந்து

அவன் தோளிலும்

பட்டு உடைகிறது

பலூன்

அல்லது  ஒரு அகக்களிப்பு.

பேரானந்தத்தின் சுனை

எப்போதும்

ஒரு கனிவின் தீண்டலால்

பிறப்பெடுக்கக்

கூடியதுதான் போலும்.

  •

தன்னைத் தானே.

___________________

கனவுதான் என்றாலுமே

என்னை ஒருவர்

கிணற்றில் தள்ளி விடுவதாய்

உருவாக்கம்  பெற்றிருந்ததது.

கனவே

கனவே

நீந்தத்தெரியும்

அதனால் உன்மேல்

கோபம் இல்லை.

கனவில் நீந்தி

கரைக்கு வந்தேன்

பிடித்துத் தள் ளிய

கரமும் எனதே.

பதுங்கு குழி.

_____________

கொஞ்சம்

கடன் பட்டு விட்டேன்.

விரைவில்

திருப்பித்தரவும்

முனைகிறேன்.

கொடுத்தவர்

தேடிக்கொண்டிருக்கிறார்

வசைச் சொற்களோடு.

பதுங்கிக்கொள்ள

நல்ல

மறைவிடம் தேவை.

தற்போதைக்கு

மகள் வரைந்திருக்கும்

கோழியா முட்டையே

கதி.

S. R. சிப்ஸ்.

___________

உதிரிகளின்

கோபுரமாய்

கண்ணாடிச் சட்டகத்தில்

இருக்கும்

கிழங்குகளின்

சிறு சிறு வில்லைகளிலும்

அதன் நிறத்திலும்

ஒரு முகப்படுகிறது மனது.

கூடவே

இந்தத் திங்கட்கிழமை

ஏன் இப்படியாக ஆனது

என்ற கேள்வியும்.

ஹெட்போனில்

ஏதோவொரு பாடலுக்கு

தலையசைத்தபடியே

எனக்கான சிப்ஸை

கவரில் போடும்

எஸ்ஸார் நண்பா

மிளகாய்ப் பொடியை

சற்று அதிகமாகவே தூவு

தாங்கும்

திங்கள்.

பா. ராஜா

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் பிறந்தவர். (1981)

ஐந்து கவிதைத்தொகுப்புகளும், ஒரு சிறுகதைத்தொகுப்பும், வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *