நீ வேணா போ
பொய்ச் சரம் ஒன்றைக் கட்டி விளையாட்டாய் வீசுகிறவளை
வெளிறிய முகத்துடன் வெறிக்கிறது
குட்டிப் பாப்பா.
மறுபடி
நீ வேணா போ
உடைகிறது நம்பிக்கைக் குமிழ் ஒன்று.
,
மா
ம்மா
ஏம்மா
குழைந்து இறைஞ்சுகிறது.
கொலுசுக் கால்களை அகல விரித்தபடி தத்தி ஓடிவருகிறது
அள்ளியெடுத்தவளின் மார்பில்
அடைக்கலமாகி
அமைதியாய்த் துயில்கிறது.
,
எதற்கோ மொக்கு இதழ் விரித்துச்
சிரித்த சிறிது நேரத்திலேயே
வீறிட்டு அலறி
மா
ம்மா என்று அழுகிறது.
பதறி எழுந்தவள்
ஒண்ணுமில்ல
ஒண்ணுமில்ல
பாப்புவின் நெஞ்சைப் பஞ்சுப் பூக்களைத் தொடுவதாக
மெல்ல நீவுகிறாள்.
கனவு.
,
வலியில் அரற்றும்போது
ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை
என்றபடி என்னை நோக்கி நீள்கிற
அன்பின் விரலைப் பற்றிக்கொண்டு
மேலெழ அண்ணாந்து பார்க்கிறேன் பல முறை.
,
ஆனால்…
அந்தக் கை..
மேற்பரப்பிலிருந்து வேகமாக மண்ணைத் தள்ளுகிற
அந்தக் கைகளில்
நான் முத்தமிட்டிருக்கிறேனே
ஓ
அந்தக் கைகள் யாருடையன?
,
என் கண்களை மறைக்கத் தொடங்குகிறது
வெறுப்பின் மணம்
அடர் களிமண்ணாக.
விழிளைத் திறந்து பார்த்துவிட முயற்சிக்கும் நொடியில்
உள்ளுக்குள் கேட்கிறது
மா
ம்மா
ஏம்மா.
,
கண்களை மூடிக்கொள்கிறேன்
அந்தக் கைகள் யாருடையவை
என்று தெரியவே வேண்டாம்.
,
அமைதியாகத் துயிலத் தொடங்குகையில்
கொலுசின் கம்மிய குரல்
தணிந்து அடங்குகிறது.
,
இனி
ஒழுங்கா மாத்திரை சாப்பிடு
என்றபடி மனைவியைத் தாங்கிப்பிடிக்கிற
இந்தக் கைகளின் சாயலைப்
பார்த்திருக்கிறேனே
தூக்கம் சொக்குகிறது
தலை துவள்கிறது
கடைசியாக அண்ணாந்து பார்க்கிறேன்
எனக்கான அன்பின் விரலை.
++
கயல் எஸ்
வேலூர், முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் கயல், வணிகவியல், இதழியல், வணிக மேலாண்மையியல் ஆகிய மூன்று துறைகளில் முதுகலைப் படிப்பும், வணிகவியலில் எம்.ஃபில் பட்டமும், வணிகவியல், வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தொழிலாளர் சட்டங்கள் குறித்த பட்டயப் படிப்பும், தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப் படிப்பும் பயின்றுள்ளார்.
கல்லூஞ்சல் (2015) மழைக் குருவி (2016) ஆரண்யம் (2018) ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) ஆகிய ஐந்து கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன.
‘பழைய கடவுளரும் புதிய துர்தேவதைகளும்: சமகாலத் திபெத்தியச் சிறுகதைகள்’, ‘கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள்’ ஆகிய இரண்டு மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் 2022 ஆம் வருடம் வெளிவந்துள்ளன.