நிகழ்காலம் – பொற்காலம் – இருண்ட காலம் – எதிர்காலம் ஆகிய நான்கு பிரிவுகள், இருபத்தியொரு அத்தியாயங்களில் திருமண உறவு முறை மீறலால் உருவாகும் அகச் சிக்கலை: தாய் – மகன் – பேரன் – உறவுகள் நிலைநின்று வெளிப்படுத்திக் காட்டுவதும்; கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் நிலைகுலைந்த, மத நல்லிணக்கச் சீர்கேட்டு பிரிவினை என்ற புறச்சிக்கலை சமூக நிலைநின்று மீட்டுருவாக்குவதும் “மாதீஸ்வரி” நாவல் தரும் அனுபவம்.
ஏழு தலைமுறைகளாக ஊர்த் தலைவர் பொறுப்பு வகிக்கும் குடும்பம். ஊர்த் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி, கால் நூற்றாண்டு கடந்த பிறகும் ஊர் மாதீஸ்வரியைக் கொண்டாடுகிறது. வேறொருவரை ஊர்த் தலைவராக ஏற்கவும் மறுக்கிறது. கதையின் மையம் மாதீஸ்வரி. அவள் மரணத் தருவாயில் இருந்து நாவல் தொடங்குகிறது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஆதர்ஷ நாயகனாகக் கொண்ட சென்ராயன். காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட மாதீஸ்வரி. இந்திய தேசியப் படையில் இணைந்து தேச விடுதலைக்குப் போராடும் உத்வேகத்தோடு இருக்கும் சென்றாயனுக்கு பதினெட்டு வயதாவதற்குள் தேசம் சுதந்திரம் அடைகிறது. தேசம் விடுதலை அடைந்ததே ஒழிய, இந்த மண்ணின் மக்கள் இன்னும் விடுதலை அடையவில்லை என்பதை மாதீஸ்வரி உணர்கிறாள். இருவரும் ஜமீன், மிராசு வாரிசுகள்.
வீரத்துக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்பெற்ற சென்ராயன், ஊர்த் தலைவர் பதவிக்கு வருகிறான். தனித்துவமான சட்ட திட்டங்களால் துலுக்குவார்பட்டியை இராணுவ ஒழுங்கு போன்ற கட்டுப்பாட்டுக்குள் நிர்வகிக்கிறான். விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து சமஸ்தான ஒழிப்பு, ஜமீன் ஒழிப்பு, மிராசுதார் முறை ஒழிப்பு நடவடிக்கைகள் நாட்டில் உருவாகின்றன.
ஜமீன் குடும்பத்தின் வளமை, ஆடம்பரம், அதிகாரம் யாவும் ஏழைகளை சுரண்டி அடைந்தவை என்று மாதீஸ்வரி உணரத் தொடங்குகிறாள். அவளுடைய சமூகச் சிந்தனை காரணமாக, ‘சிந்திக்கின்ற பெண் வீட்டுக்கு ஆகாது’ என்ற ஆதிக்க மனோநிலையால் துலுக்குவார்பட்டி கிராமத்தின் இளம் ஊர்த் தலைவர் சென்ராயனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுகிறாள்.
தம்பதிக்கு வெள்ளிங்கிரி – உத்தமன் – ஜெயலட்சுமி – புஷ்பா – பட்டிமுத்து என ஐந்து குழந்தைகள். இருவரும் ஆலோசித்து, வினோபாபா இயக்கத்திற்கு பதினாறு ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுக்கின்றனர். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் சுரண்டப்படுவதை மாதீஸ்வரி வெறுக்கிறாள். அது தொடர்பான புகாரை கணவரிடம் தெரிவித்தும் பலன் ஏதுமில்லை. சென்ராயன் மாரடைப்பால் காலமாகிறான். ஊர்த் தலைவர் பதவியை மாதீஸ்வரி ஏற்கிறாள்.
நில உச்சவரம்பு சட்டத்திற்கு எதிராக செயல்பாடுகளை எதிர்ப்பது – கொத்தடிமை முறையை எதிர்ப்பது – பஞ்சமி நில மீட்பு நடவடிக்கைகளில் தன்னார்வலராக செயல்படுவது – சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிப்பது – காரியம் நடக்காதபோது ஊரைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது – பேருந்து மறியல் செய்வது. இப்படியெல்லாம் போராடி ஊருக்குத் தெருவிளக்கு, கப்பிக் கல் சாலை, அடி பம்ப் ஆகிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்துகிறாள். வளவுக்கு மின்சாரம், அரசு உதவியால் குடிசைகள் மாறி ஓட்டு வீடுகளாகின்றன.
தாழ்த்தப்பட்டோரின் கல்வியறிவின்மையே அவர்கள் அடிமைபடுவதற்கு காரணம். அவர்களுக்கு கிடைக்கும் அரசாங்க சலுகைகள், இட ஒதுக்கீடு, உதவித் தொகை போன்றவற்றை எடுத்துக்கூறி அடுத்த தலைமுறையினரை படிக்க ஆயத்தப்படுத்துகிறாள். அறிவொளி இயக்கத்தை கிராமத்தில் செயல்படுத்துகிறாள். இவற்றை தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. ஊர் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்போடு செயலாற்றும் மாதீஸ்வரி மீது அன்பும் மதிப்பும் ஊர் மக்கள் மத்தியில் உயர்கிறது. ஊருக்கே தாயாகிறாள் மாதீஸ்வரி.
ஆறு நாட்களில் நடக்கும் கதைதான் நாவல். கதைசொல்லி மற்றும் கதாப்பாத்திரங்கள் இறந்தகால நினைவுகளை நிகழ்காலத்தில் வெளிப்படுத்துவதன் மூலம், 19ஆம் நூற்றாண்டு முதல் பெருந்தொற்று காலம்வரை சித்தரிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் பகுதி தனியாக இல்லாத ஊர். ஊரில் பாதி வீடுகள் முஸ்லீம்களுடையது. இந்து – முஸ்லீம்களிடையே இருக்கும் தாயாதி, பங்காளி உறவு. இந்து – முஸ்லீம் பண்டிகைகளை இரு மதத்தினரும் இணைந்து நடத்தி, வழிபட்டு கொண்டாடுவது ஊரில் வழக்கம். கெடா வெட்டு விருந்துகளில், முஸ்லீம்களுக்கென்று இஸ்லாமிய முறைப்படி அறுத்து அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்படும். பள்ளிவாசல் ரம்ஜான், பக்ரீத் விருந்துக்கு அனைத்து வீடுகளுக்கும் அழைப்பு இருக்கும். இந்துக்கள் வீட்டுக்கு ஒருவராவது தவறாமல் கலந்துகொள்வார்கள். அல்லாவும் ப்ளேக் மாரியம்மனும் அண்ணன் தங்கை என்பது அவ்வூர் ஐதீகம்.
இந்த மத நல்லிணக்கம் கொரோனா காலத்தில் சிதைவுக்குள்ளாகிறது. கொரோனா ஜிகாத் வதந்தியால் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுக்கூர் குடும்பத்தை போலீசார் அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர். வேனில் குடும்பத்தை ஏற்றிச் சென்ற காணொளி இந்து மதவாதிகளால் யூ ட்யூப், முகநூலில் பரவுகிறது. அவமானம் தாளாமல், சுக்கூரின் மகன் தற்கொலை செய்துகொள்கிறான். அது நடந்த மூன்றாவது நாளில் முஜிபுர் ரஹ்மானின் மகன் ஸைனுதீன் எச்சில் மூலம் கோவிட் வைரஸ் பரப்புகிறான் என்ற தவறான புரிதலால் இந்துப் பொதுமக்கள், இந்து மதவாதிகள் தாக்கியதில் உயிரிழக்கிறான்.
பாத்திர வார்ப்பும் அவர்களது செயல்பாடுகளும், சம்பவங்களும் நாவலுக்குள் பொருந்திப் போகாத இடங்களே இல்லை. கிராம வாழ்க்கை இயக்கத்தில் எதிர்ப்படும் மனிதர்கள் குசலம் விசாரிப்பது முதல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக வாழ்வது சிலர் விதிவிலக்காக விலகி நிற்பது வரை தொகுப்பாக பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாவலின் இறுதி அத்தியாயங்களில் வரும் முத்தரசி, கோபால்சாமி, அவர் மனைவி, நஞ்சப்பன், மாகாளி போன்ற சிறு கதாபாத்திரங்கள்கூட வாசகர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
ஒன்றுவிட்ட சகோதரியுடனான பாலுறவு, அவளையே திருமணம் செய்து வாழ நேர்வதால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் பட்டிமுத்துவின் மனநிலை தமிழ் நாவல் பரப்பில் காணவியலாத பாத்திர வார்ப்பு. மாதீஸ்வரி ஊர்த் தலைவர் பதவியில் இருந்து விலக, இந்த பாவம் செயலே காரணமாகிறது.
‘பெண் ஒரு மாயப் பிசாசு’ என்ற பழைய கண்ணோட்டம் ரசவாத சித்தர் உரையாடலில் இருப்பது மட்டுமல்லாது, நாவலிலும் ஊடிழையாகவும் வெளிப்படுகிறது. இந்த ஊடிழை கண்ணோட்டம் ஆசிரியருக்கு நேரடியாக தெரிந்த நாவலின் மையக்கரு சார்ந்த குடும்பத்தில் இருந்து கிடைத்திருக்கூடும்.
நாவலின் கதையமைப்பு ஒவ்வொரு அத்தியாயத்திலும் இறந்தகாலம் + நிகழ்காலம் = எதிர்காலம் என பின்னிக் கிடக்கிறது. உலக அளவிலான திருமண உறவு முறை – தகாத பாலியல் உறவுகள் குறித்த நடப்பியல் சான்றுகள் – கெட்ட வார்த்தைகள் குறித்த அனுமானங்கள் கதையோட்டத்தில் விவாதப் பொருள்களாகின்றன.
இறந்த காலத்தை நாவல் கதாப்பாத்திரங்கள் நிகழ்காலத்தில் வெளிப்படுத்துகிறார்கள். இதுவே நாவலின் கதையாடல் உத்தி. நிகழ்கால பிசகு மனநிலையில் அல்லல்படும் கதாப்பாத்திரங்களை இறந்தகால நினைவுகளின் வழியாக மீட்டெடுப்பதற்கும், அந்தந்த மனோநிலைகளில் இருந்து அவர்களை திசை திருப்புவதற்கும் இந்த உத்தியை கையாள்கிறார் ஆசிரியர்.
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிசகுகளை மன்னிக்கும் மனமே மனித மாண்பு என்பதை நாவல் வலியுறுத்த முற்பட்டாலும் ஓர் ஒழுக்கக்காப்பாளராக (Moralist) மாதீஸ்வரி நிறுவப்படுவதன் வழியாக ஆண் கருத்தியல் சார்ப்புதான் நாவலில் மேலோங்கி நிற்கிறது.
உலகளாவிய வளர்ச்சி நிலைகள் நகர வாழ்க்கைக்கு வாய்த்துவிட்டதைப்போல, அவை தொட்டுவிடாத தூரத்தில் இன்னும் குக்கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியான ஒரு கிராமத்தின் யதார்த்த தன்மையின் வெளிப்பாட்டு வடிவம்தான் “மாதீஸ்வரி”. அந்த வாழ்வியல் யதார்த்தத்தில் தன் புனைவைக் கலக்கவிடாத செய்நேர்த்திக்கு ஆசிரியரைப் பாராட்டியாக வேண்டும். நிகழ்த்திக் காட்டவேண்டிய சம்பவங்கள் கதைசொல்லி வாயிலாக விளக்கப்பட்டு நகரும் இடங்களில் இன்னும் கவனம் தேவை.
இந்து மத திருமண உறவு முறை மீறல்தான் நாவல் முன்வைக்கும் சமூகச் சிக்கல். இதுவே மாதீஸ்வரி பதவி விலகக் காரணமாகின்றது. ஊர்த் தலைவர் குடும்பம் சிதையவும் இதுவே காரணம். ஊர் கட்டுக்கோப்பு குலைந்து மத நல்லிணக்கம் பாழ்படவும் இதுவே மறைமுக காரணமாகின்றது.
எல்லா சமூகங்களிலும் அதனதன் பண்பாட்டுக்கேற்ப, ஏட்டில் எழுதப்படாத நடைமுறை சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகின்றன. திருமண உறவு முறை சார்ந்த ஒழுங்கமைவுகள் அவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன. திருமண உறவு கொள்ள கூடியவர்கள் யார் யார் என்ற விதிகள் அரண்களாக நின்று பண்பாட்டைக் காக்கின்றன. இந்த எழுதப்படாத விதிகள் நெடுங்காலப் புழக்கத்தில் நிலைத்து நீடித்துவிட்ட ஒன்று. சாதி – மதம் – இனம் சார்ந்து இவற்றுள் வேறுபாடுகள் காணப்படலாம். என்றாலும், இவற்றின் அடிப்படை நோக்கத்தில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. சாதி – மத – இனத் தூய்மையைப் பேணுவது; அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது; பொருளாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒழுங்கமைவுகள்தான் அவை. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.
பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள சில கிராமங்கள் துலுக்குவார்பட்டி என்கிற புனைவு கிராமம், ஒசூர், கோவை தொண்டாமுத்தூர், ஆந்திரா, கர்நாடகா இவையே நாவல் நிகழ்விடங்கள். மாதீஸ்வரி – மகன் பட்டிமுத்து – பேரன் ப்ரகதீஸ் என மூன்று தலைமுறை; மாதீஸ்வரியின் குடும்பம்; நடுப்புணிக்காரர் திருமண உறவு முறை சிக்கல் பின்புலத்தில் நாவலுக்குள் இயங்குகிறார்கள்.
திருமணம் முடிந்த மூத்த மகன் வெள்ளிங்கிரிக்கு பண்ணையத்தாள் நூர்ஜஹான் மீது தோன்றும் காதல். வெள்ளிங்கிரியின் தற்கொலை. ஊர்த் தலைவர் குடும்பத்திற்கு ஏற்படும் முதல் இழுக்கு. இரண்டாவது இழுக்கு பட்டிமுத்து – சித்ராங்கி ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது. அந்த அவமானம் தாளாமல் மாதீஸ்வரி தன்னைத்தானே தனிமை சிறைபடுத்திக் கொள்கிறாள்.
குழந்தைகளுடன் பட்டிமுத்து தம்பதி ஊர் திரும்புதல்; உறவினர் – ஊராரின் ஏச்சு பேச்சுகளால் பெற்றோரின் உறவு முறையை குழந்தைகள் தெரிந்து கொள்வது; அதனால் குந்தைகளுக்குள் ஏற்படும் இழிவுணர்ச்சி; மகள் ப்ரபல்யா சித்ராங்கியை வெறுப்பது; குற்றவுணர்ச்சியால் அவதிப்படும் பட்டிமுத்து மீதான பரிதாபம்; தேடலும் விவாதமுமாக முன்னெடுக்கப்படும் திருமணம் பற்றிய உரையாடல்கள்; பெண்கேட்டு செல்லும் இடங்களில் பெற்றோரின் முறை தவறிய உறவில் பிறந்தவன் என்பதால் ப்ரகதீஸ் நிராகரிக்கப்படுதல்; ப்ரபல்யா திருமணத்தையே வெறுப்பது; நடுப்புணிக்காரர் பட்டிமுத்துக்காக மாதீஸ்வரியிடம் பேசுவது; சுக்கூர் தன் நண்பனை அரவணைத்துப் பிடிப்பது; கொரோனா தொற்று குறித்த அச்சம் இல்லாத கிராமத்தினரின் உதாசீன போக்கு; பெருந்தொற்று காலத்தில் ஏற்படும் பொருளாதார இழப்புகளும்: வாய்ப்புகளும்; மாஸ்க், சானிடைஷர் விற்பனை; இழி பிறப்பு உணர்வை போக்கிக் கொள்ள மாதீஸ்வரிக்கு எதிராக ப்ரகதீஸ் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டம்; போராட்டத்திற்கு இடையே ஏற்படும் கொரோனா பாதிப்பு மரணம்; அந்த சடலத்தை அடக்கம் செய்ய ஊரில் யாரும் முன்வராத நிலை; தோள்கொடுக்க கைவிடப்படும் லட்சியப் போராட்டம்; தொற்று பரவல் அச்சத்தைக் கடந்து துளிர்க்கும் மனிதம்.
கிராமமே மாதீஸ்வரியின் மரணத்தை எதிர்நோக்கி இருப்பதில் தொடங்கும் நாவல், வளர்ச்சிப் போக்கில் கொரோனா பரவல் பின்னணியில் இவற்றை எல்லாம் நிலைக்களன்களாகக் கொண்டு விரிவடைகிறது.
‘பெத்தவங்க செய்ற பாவத்தை புள்ளைக சுமப்பாங்க’ என்ற சொல் வழக்கின் எதிர் திசையில் புனையப்பட்டுள்ளது நாவல். தனது மகன் செய்த மாபாவச் செயலுக்கு வாழ்நாள் முழுவதும் சிலுவை சுமக்கிறாள் தாய். நாலு கட்டு வீட்டில் இருபத்தியெட்டு ஆண்டுகள் யாரையும் சந்திக்காமல் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்கிறாள்.
பெண் தமிழ் நாவலின் முக்கிய கதைப் பொருளானதற்கு அடிப்படையான சமூகவியல் காரணங்கள் பல உண்டு. அதில், பெண்ணின் உடல், சிந்தனை, செயல் ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டே இயக்குகிறது. இதனை மறுக்க முடியாது. ஆண் அதிகாரம் சிபாரிசு செய்கின்ற ‘சுதந்திர’ அளவில் நிற்பது பெண்ணின் கடமை. அதனை மீறும் பெண்களே இலக்கியப் படைப்புகளில் மூலப்பொருள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் பெண் முதன்மைப் பாத்திரங்கள் கையாளப்பட்ட முறையினை கவனித்துள்ளோருக்கு இந்த உண்மை புலப்படும்.
சான்றாக, தமிழின் மிக முக்கிய நாவலாசிரியர்களான ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், இமையம் ஆகிய மூவர் உருவாக்கிய தங்கம் (உன்னைப்போல் ஒருவன் -1964); அலங்காரம் (அம்மா வந்தாள் -1968); தனபாக்கியம் (ஆறுமுகம் -1999) ஆகியோர் இடம்பெறும்: “நாவல்களின் சாதாரண வாசிப்பில் வெளிப்படுவது ஆசிரியர்களின் பெண் சார்புநிலை என்பது தான். பெண்களை மதிக்கவும் அவர்களின் அகத்தை உணர்த்தவும் இம்மூன்று நாவல்களுமே முயன்றுள்ளன என்பதும்கூட ஓரளவு உண்மை தான். ஆனால் இந்த சார்புநிலையும் அனுதாபமும் ‘ஆண்நோக்கு’ (Male Gaze) சார்ந்த சார்பும் அனுதாபமும் என்பதை கவனிக்க வேண்டும்” என்கிறார் அ.ராமசாமி (குற்றம் – தண்டனை : ஆண்நோக்கு எழுத்து).
பாலியல் மீறல்களால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் பெண். மன்னிக்கும் அல்லது தண்டிக்கும் பொறுப்பில் ஆண் சித்தரிப்புகள் நிலை கொண்டுள்ள தமிழ்ப் புனைவுலகில், மன்னிப்பு வேண்டி நிற்கும் ஆணாக பட்டிமுத்துவும் குற்றவுணர்வு கொள்ளாத பெண்ணாக சித்ராங்கியும்; மன்னிக்கும் அல்லது தண்டிக்கும் பொறுப்பில் மாதீஸ்வரியும் இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
“ஆண்களால் இயற்றப்பட்ட சட்டங்களைக் கொண்டதும், ஆண்கள் கண்ணோட்டத்தைக் கொண்டே பெண் நடத்தையை மதிப்பிடும் நீதி முறைமையைக் கொண்டதுமான, முற்றிலும் ஆண் முதன்மையான சமுதாயத்தில் ஒரு பெண் ஆத்ம தனித்துவமுள்ளவளாக வாழ முடியாது”
என்கிறார் நவீன நாடக இலக்கியத்தின் தந்தை ஹென்றிக் இப்சன்.
தான் பிறந்து வளர்ந்த மிராசு குடும்பச் சூழல், வாக்கப்பட்டு வந்த ராஜவம்சத்தின் தொடர்ச்சியான ஊர்த்தலைவர் குடும்பம். இவை இரண்டின் ஆணாதிக்க மனோபாவம், மாதீஸ்வரி குண அமைப்பில் வெளிப்படுவதை காணமுடிகிறது. வாழ்க்கையில் ஆணாதிக்க சார்பு கருத்தியல்களோடு வாழநேரும் பெண்களின் யதார்த்த வெளிப்பாடுதான் மாதீஸ்வரி. சமூக வாழ்வியலில் நிலைகொண்டுள்ள பெண்களின் இந்த இயல்பு அம்சம் நாவலில் அப்படியே பளிச்சிடுகிறது.
ஆண் – பெண் என்ற இருபாலினர் குறிப்பிட்ட பருவத்தில் எதிர் பாலின ஈர்ப்பு கொள்வது இயல்பான ஒன்று. இந்த இயல்பான ஒன்றை வரையறைகளுக்கு உட்படுத்துவது சமூக ஒழுங்கமைவின் தேவை. அந்த ஒழுங்கமைவுகளையே பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றோம். இவற்றை பேணுவதற்கான கட்டுப்பாட்டு விதிகளை, அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக உருவாக்கியுள்ளனர் என்ற புரிதல் நவீன சிந்தனையின் வெளிப்பாடு. மேலும், சமூக ஒழுங்கமைவுகளை உருவாக்கிய இடத்தில் ‘ஆண்கள்’ மட்டுமே அதிகாரம் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்ற தெளிவும் இதில் உண்டு. இந்த அதிகாரத்திற்கு உட்பட்டு பெண்கள், ஆண் சார்ந்த கருத்தியல்களோடே வாழ்கிறார்கள் என்ற யதார்த்தத்தை இந்த நாவல் சுட்டிக் காட்டுகிறது.
பண்பாட்டு பொறுப்புச் சுமைகளை பெண்கள் மீது மட்டுமே இறக்கி வைத்துள்ளது தந்தைவழி சமூகம். உண்மையில் பண்பாட்டு விதிமுறைகளுக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளிதான் படைப்பு துளிர்ப்பதற்கான தூண்டுதல் புள்ளி. விரிசல் விழுந்த கட்டிடத்தில் மரம் வேர் பிடிப்பது இயல்புதானே?
பண்பாட்டு ஒழுங்கமைவுகளால் நாளுக்கு நாள் குழந்தை தன்னுடைய இயல்பான பாலியல்சார் உணர்வுகளைத் தனக்குள் மறைக்கின்றது. அதனால் தனக்குள் உருவாகும் எண்ணங்களுக்குக் குழந்தையால் செயல் வடிவம் கொடுக்க முடியாமல் குழந்தையின் இயல்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவையாவும் நனவிலி மனம் என்ற ஆழ் மனத்தில் பதிகின்றன. குழந்தையின் புற வடிவம் எவ்வாறு படிநிலை வளர்ச்சிகளை உடையதோ அதேபோன்றே அகம் சார்ந்த மனதிற்கும் படிநிலை வளர்ச்சி உண்டு என்கிறது பிராய்டியம். மனிதச் செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணமாக அமைவது குழந்தைப் பருவப் பாலியல்சார் எதிர்வினைகள்தான் என்பது ‘பாலியல் உளவியல் கொள்கை’யின் அடிப்படை.
இதனை கொஞ்சம் மாற்றி இப்படி சொல்லலாம்: மனிதச் செயல்பாடுகள் அனைத்திற்கும் காரணமாக அமைவது குழந்தைப் பருவப் பண்பாடு சார்ந்த ஒழுங்கமைவுகளின் எதிர்வினைகள் தான். அதாவது, பண்பாட்டு ஒழுங்கமைவில் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற விதி உள்ளது. அதே பண்பாட்டு சூழலில் பரத்தமை ஒழுங்கம் நடைமுறை வாழ்க்கையில் சாட்சியமாக உள்ளது. ஏன் பரத்தமை ஒழுக்கம் உள்ளது? என்ற குழந்தையின் கேள்வி இங்கே எதிர்வினையாகிறது.
பாலியல் கொள்கையின் நேர் துருவத்தை பட்டிமுத்து – சித்ராங்கி பாத்திரங்களும்; எதிர் துருவத்தை ப்ரகதீஸ் – ப்ரபல்யா பாத்திரங்களும் வாழ்வியல் வழியாக விளக்குகின்றன. பாலியல் ஈர்ப்பின் நேர்க்கோட்டுக் களங்களாக முன் இருவர் மனோநிலையும்; பாலியல் பாதிப்புகளை உணர்ந்து தெளிந்த எதிர்கோட்டுக் களங்களாக பின் இருவர் மனோநிலையும் அவரவர் குழந்தைப் பருவப் பாலியல்சார் / பண்பாடு சார்ந்த எதிர்வினைகளாக நாவலுத்குள் இயக்கம் கொள்கின்றன.
வெள்ளிங்கிரியின் மனைவி, பிள்ளைகள் வீட்டைவிட்டு போய்விட, தனக்கு ஆறுதலாக உடன் வந்து இருக்குமாறு தன்னுடன் பிறந்த சகோதரி மகள் சித்ராங்கியை அழைத்து வருகிறாள் மாதீஸ்வரி.
முஸ்லீம் சமுதாய வழக்கத்தில் ஒன்றுவிட்ட சகோதர – சகோதரி திருமணம் செய்துகொள்வது அவர்களுக்குத் திருமண உறவு முறை என்பது பதின் பருவத்தில் சித்ராங்கி மனதில் ஆழமாகப் பதிகிறது. தோட்ட வேலைநேர பொழுதுபோக்கு பேச்சுகளில் முகிழ்ந்திருக்கும் பாலியல் மீறல்கள் அதற்கான நடப்பியல் சான்றுகள் சித்ராங்கிக்கு ஆர்வமூட்டுகின்றன. வெட்டி ஆபீசர் பேரவையின் முக்கிய உறுப்பினர் பட்டிமுத்து, சித்ராங்கியால் பண்ணையம் பார்க்கத் தோட்டத்துக்கு வரத் தொடங்குகிறான். பட்டிமுத்துவின் விடலைப் பருவ பாலியல் பேச்சுகள், சரோஜாதேவி வகையறாப் புத்தகங்கள், பி க்ரேட் மலையாளப் படங்கள் எல்லாம் சேர்ந்து அவனுக்குள் உருவாக்கி இருந்த பாலியல் கிளர்ச்சி, சித்ராங்கியின்பால் இனக் கவர்ச்சியைத் தூண்டுகிறது. இந்த எதிர் பாலின ஈர்ப்பு, பாலுறவில் தொடங்கி திருமணத்தில் முடிகிறது.
ஒன்றுவிட்ட சகோதரன் – சகோதரி ஓடிப்போய் திருமணம் செய்வது என்ற அசாதாரண புனைவு வாசகர்களை ‘உள்ளிருந்து உடற்றக்’ கூடும்.
தங்கள் காதலை(?) அவர்களின் குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள் என்பதாலேயே இவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும், இவ்வளவு காலம் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் குழந்தைகளை நம்ப வைக்கப்படுகிறார்கள்.
ஒருகட்டத்தில் தன் பெற்றோர் அண்ணன் – தங்கை என்பது தெரியவருகிறது, விபச்சாரியின் மகன், அப்பா பெயர் தெரியாதவன் என்பதைவிட ஆயிரம் மடங்கு இழி பிறப்பாக, உலகின் மிக சபிக்கப்பட்ட பிறவியாக தன்னை உணர்கிறான் ப்ரகதீஸ். அந்த நினைவுகள் இடையறாது அவனை துரத்துகின்றன. அதனால் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளாமல், தனிமையைத் தனக்கு துணையாக்கி கொள்கிறான்.
ப்ரபல்யா தன் தாய் சித்ராங்கியை உள்ளூர வெறுக்கிறாள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குத்திக் காட்டி அம்மாவை மட்டம் தட்டுவதில் ஒருவித குரூர திருப்தி கொள்கிறாள். என்றாலும் நட்பு, வெளி பழக்கம் தவிர்த்து தன்னுள் சுருங்கியவளாகவே வளர்கிறாள்.
இருவருக்கும் இருபத்தி எட்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் வாழும் மாதீஸ்வரி மீது ஆயிரம் மடங்கு மரியாதை. குற்றவுணர்வில் தவிக்கும் பட்டிமுத்து மீது ப்ரபல்யாவுக்கு பரிதாபம். ப்ரகதீஸ் இன்னும் ஒருபடி மேலேறி, அப்பாவுக்காகவும் தனக்காகவும் உண்ணாவிரதம் மேற்கொள்கிறான். இந்த நிலைபாடுகளை அவர்கள் அடைய காரணமாக இருப்பது எது? பாலியல்சார் / பண்பாடுசார் எதிர்வினைதான் என்பதை கவனிக்க வேண்டும்.
இழி பிறப்பு உணர்ச்சியில் இருந்து சற்றேனும் ஆறுதல் அடைய மாதீஸ்வரியின் மன்னிப்பையும் ஏற்பையும் பெறவேண்டும். அதற்காக அத்துமீறி, நாலு கட்டு வீட்டிற்குள் மாதீஸ்வரியைக் காண இருவரும் நுழைகிறார்கள்.
“உங்கய்யனாத்த பண்ணுனது, ஈரேழு லோகத்துக்கும் அடுக்காத ஏழேழு ஜென்மத்துக்கும் தீராத பாவம். அந்தப் பாவத்தோட வித்துகதான் நீங்க. உங்களை எப்படி சேத்திக்க முடியும்?”
என்கிறாள் மாதீஸ்வரி. அதே மாதீஸ்வரி, வெள்ளிங்கிரி விவகாரத்தில், “ஏதோ தொடுப்பு, வெப்பாட்டியாகக் கீது வெச்சுட்டிருக்கறேன்னாலும் போச்சாது; பெரிய எடத்துல அது சகஜம்பாங்க” என்கிறாள். இங்கு சகஜம் ஆனது எப்படி? வாசகர் சிந்திக்க வேண்டிய இடம் இது.
வேளாண்மை படிப்பை முடித்து, இயற்கை விவசாயம் செய்யும் ப்ரகதீஸ் மாதீஸ்வரியின் ஏற்பைப் பெற அடுத்த முயற்சியாக, அவளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கிறான்.
“கொள்ளைல போற பெருங்கொள்ளைனால, ஊரு உலகமே சீரளிஞ்சு சின்னாபின்னப்பட்டுப் போச்சே..! ….. …….. ……… எங்காச்சு ஒரு எடத்துக்குப் போக – வர முடியுதா? அரை அடைப்பு, முழு அடைப்புன்னு மாத்தி மாத்தி அடைச்சர்றாங்களே! இதுதான் இப்புடின்னா, மனுசனுக்கு மனுசன் இல்லாமப் போயிட்டானே! அக்கம் பக்கம், சொந்த பந்தம் பேச்சு உண்டா, பளக்கம் உண்டா? நல்லது கெட்டதுக்குக் கூட அளப்பும் இல்ல; வரவும் இல்ல. கல்யாணம், காதுகுத்துன்னாலுஞ் செரி; எளவுன்னாலுஞ் செரி; ஆளுக வந்தாக் கொள்ளை வந்துரும்னு ஆரும் போறதும்மில்ல. உசுரோட இருக்கீலயே அப்புடி. செத்துட்டாச் சொல்லவே வேண்டாம். எடுத்துப் போட ஆளிருக்காது…”
கோபால்சாமியின் சடலத்தை எடுத்துப்போட ஆள் இல்லாத சூழலில் நாவல் முடிவை நோக்கி நகர்கிறது.
நாவலில் இரண்டு தற்கொலைகள், ஒரு கொலை, கொரோனா பாதிப்பால் ஒரு மரணம் இடம்பெறுகின்றன. மாதீஸ்வரி மரணத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறாள்.
உண்ணாவிரதப் போராட்டத்தின் மூன்றாவது நாள். ஊர்த் தலைவர் வீட்டில் வேலைசெய்யும் சிறுமி முத்தரசியின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. தொற்று பரவல் அச்சத்தால் முத்தரசி குடும்பம் கிராமத்துக்கு வெளியே இந்து மதவாதிகளால் விரட்டியடிக்கப்படுகிறது.
கொரோனா ஜிகாத் சந்தேகத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஸைனுதீனின் தந்தை முஜிபுர் ரஹ்மான் தனக்கு சொந்தமான காட்டுச் சாளையை அவர்கள் தங்குவதற்கு தருகிறார். அதே வதந்திக்கு தன் மகனை பலிகொடுத்த சுக்கூர், ரம்ஜான் பண்டிகை விருந்துணவை அந்தக் குடும்பத்திற்கு கொடுத்து அனுப்புகிறார். போராட்டத்தின் ஐந்தாவது நாள் அதாவது ரம்ஜான் முடிந்த மறுநாள், முத்தரசியின் தந்தை கோபால்சாமி காலமாகிறார்.
முத்தரசியின் அக்கா, தன் அப்பாவை இறுதியாகப் பார்ப்பதற்குகூட வருவதில்லை. கணவனும் மாமனார் மாமியாரும் அவளை வர அனுமதிக்கவில்லை. பெற்ற மகளே வரவில்லை என்றால், ஊருக்கு வெளியே விரட்டியடித்த மக்களில் யார் வருவார்? குழி, பாடைக்கு வளவு ஆட்கள் தயாராக இருந்தனர். கொரோனாப் பிணத்தைத் தூக்க எவரும் முன்வரவில்லை. அந்தச் சிறுமி மற்றும் அவளது தாயின் அவலநிலையை உணர்ந்து ப்ரகதீஸ் தன் லட்சியப் போராட்டத்தை கைவிடுகிறான்.
“அப்பத்தா எங்க அப்பா அம்மாவை மன்னிக்காட்டியும், என்னையும் என் தங்கச்சியையும் பேரன் பேத்தின்னு ஏத்துக்காட்டியும் பரவால்லீங் மாமா! எடுத்துப் போட ஆளில்லாமக் கெடக்கற பொணத்தை வெச்சுட்டு, அந்த அபலைத் தாயும் மகளும் என்ன பண்ணுவாங்க? அவுங்களோட கொடுமையவிடவா என்னோட போராட்டம் பெருசு? இப்ப நான் அவுங்களுக்குத் தோள் குடுத்தாகணும்…”
என்று புறப்படுகிறான்.
“நீ எங்கிருந்தோ எதுக்கோ வந்து, உன்னோட லட்சியத்தையும் குடும்ப நலத்தையும் விட்டுட்டு, உசுருக்கு பயப்படாம அவுங்களுக்கு உதவப் போற. இத்தனையும் தெரிஞ்சுட்டு, நான் வேடிக்கை பாத்துட்டிருக்கறதா? நீ ரெண்டு ஆள் செமைய செமக்க வேண்டாம், மாப்ள. நாலாவது ஆளா நான் இருக்கறேன்”
என்றபடி சுக்கூர் உடன் செல்கிறார். இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் கிடைத்த பொருள்களை கொண்டு, இயன்ற வரையிலான கிருமித் தடுப்பு முயற்சியோடு சடலத்தை கட்டுகிறார்கள்.
“…. … செத்தவரோட சம்சாரமும், இத்துனூண்டு மகளும் பாடை தூக்கறதுன்னா கொடுமைலயும் கொடுமைங்க. அவுங்களைத் தூக்க விட்டுட்டு, நாங்க ஆம்பளைக வேடிக்கை பாத்துட்டிருந்தா, நம்மூர்ல மள பேயுங்களா? பத்தாததுக்கு சின்னப் பண்ணாடி அவுரோட போராட்டத்தையே உட்டுட்டு இதுக்கு வந்திருக்கறாரு. இப்புடிப்பட்ட நெலைல நாங்க உதவி, ஒத்தாசை பண்ணுலீன்னா, அப்பறம் மனுசன்னு எப்புடிங் வெளிய சொல்லிக்க முடியும்?
என்றபடி பாடை கட்ட வந்த நஞ்சான், மாகாளி இருவரும் சேர்ந்து சடலத்தைத் தூக்குகின்றனர. அடக்கம் செய்யப்படுகிறது. நடுப்புணிக்காரர் மூலம் தன்னை மாதீஸ்வரி அழைத்துவரச் சொன்ன செய்தியும் வந்து சேர்கிறது.
“என் வீட்டு முன்னாடியே உக்காந்து, எனக்கெதிரா உண்ணாவிரதம் இருந்தயே..! இப்ப என்னாச்சு?
என்று கேட்பதற்காக இருக்கும் என்று நினைத்தபடி மாதீஸ்வரியைக் காண ப்ரகதீஸ் நடுப்புணிக்காரருடன் செல்கிறான். அங்கே என்ன நடந்தது என்பதுதான் நாவலின் முடிவு.
சமூக இயங்கியல் நடைமுறைகள் மீது கலை தன்மையோடு முன்னெடுக்கப்படும் விவாதம்தான் படைப்பு செயல்பாடு. அப்படிப்பட்ட படைப்புகள் சமூகத்தோடு தர்க்கப்பூர்வமான ஓர் உரையாடலை முன்னெடுக்கின்றன. அந்த உரையாடல்களின் தேவையின் வீரியத் தன்மையைப் பொறுத்து, அந்த உரையாடலை முன்னெடுத்த படைப்புகள் காலத்தில் வேரூன்றி நிற்கும். அந்த வீரியத்தோடான உரையாடலை “மாதீஸ்வரி” முன்னெடுக்கிறது.
*****
நூல்: மாதீஸ்வரி
வகைமை: நாவல்
ஆசிரியர்: ஷாராஜ்
வெளியீடு: எழுத்து பிரசுரம் (ஸீரோ டிகிரி பப்ளிஷர்ஸ்),
No.55(7), 2nd Floor,
R Block, 6th Avenue, Anna Nagar-600040
பக்கங்கள்: 244
விலை: ரூ.290/-

ம.வீ.இரமேஷ்குமார்
பாலக்காடு மாவட்டம், சித்தூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை & ஆய்வு மையத்தில் முனைவர்பட்ட ஆய்வாளர்.
தொல்காப்பி உரைகள் குறித்தை ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
கோவை ‘தினமலர்’ நாளிதழில் இரண்டு ஆண்டுகள் பிழைதிருத்தம் பிரிவில் பணியாற்றியுள்ளார்.
நவீன இலக்கியம், கோட்பாடுகளில் ஆர்வமுள்ளவர். இலக்கியத் திறனாய்வை களமாகக் கொண்டு இயங்கி வருகிறார்.
இவருடைய திறனாய்வுக் கட்டுரைகள் ‘கணையாழி’, ‘இனிய உதயம்’, ‘பொற்றாமரை’, ‘வெட்சி’ இதழ்களில் வெளியாகியுள்ளன.
சித்தூர் – தத்தமங்கலத்தில் தனது ஆசிரியர் கவிதாமணாளன் ஒருங்கணைப்பில் செயல்பாடும் “விதை” இலக்கிய அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
தமிழ் – மலையாள இருமொழி கலை இலக்கிய மின் ஆய்விதழான “பொற்றாமரை” இதழ் இணையாசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார்.