‘அம்மாவை நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு, கொஞ்சம் பயமாவும் இருக்கு’

“அப்போ என் கதி என்ன? என்னை விட்டுடுவியா?”

“ஏய், நீ சாதாரணப் பெண்களோட மனநிலைல உன்னை வெச்சுப் பேசாதே! எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அம்மாவும். அவளுக்கு என்னைத் தவிர வேற யாரும் இல்லை. என்னைத் தான் நம்பி இருக்கா”

“தெரியும். ஆனா உன் அம்மாவின் பிரச்சனை, வழக்கமான அம்மா, பிள்ளை பிரச்சனை இல்ல. நீ உன்னை மாத்திக்கணும். அம்மாவுக்கு நீ பிள்ளையா இரு; ஆனா முழுக்க முழுக்க நீ அவங்க மேல சாயாதே, அவங்களையும் உன் மேல சாய விடாதே.  இல்லைன்னா  அம்மாவுக்குத் தான் அது கஷ்டம் “

கவிதா ஒரு சைக்காலஜிஸ்ட். பிரசன்னாவின் கார்ப்பரேட் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை, முக்கியமாக உளவியல் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மானேஜ்மென்ட் அவளை அழைத்துள்ளது.

கவிதா, பிரசன்னாவை அவன் அலுவலகத்தில்தான் முதன் முதலாகச் சந்தித்தாள். ஆறடி உயரம், சுருள் முடி, கண்களில் எப்போதும் ஒரு சிரிப்பு, மீண்டும் பார்க்கத் தோன்றும் வசீகரம்! கவிதாவின் தென்றல் போன்ற நடையும், நேர்த்தியான உடையும், அறிவார்ந்த உரையாடலும் பிரசன்னாவிற்கு மிகவும் பிடித்துப் போனது. 

அவள் முதலில் பிரசன்னாவைப் பார்த்தபோது ‘அவன் அம்மாவின் பிள்ளை’,யாக, வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் பெருமையையே பேசிக்கொண்டிருந்தான். அதுவேதான் அவனுடைய பிரச்சினை என்பதை வெகு விரைவில் கவிதா புரிந்துகொண்டாள். அம்மாவின் அன்புப் பிடியில், பிணைக் கைதியாகப் பிரசன்னாவை அவள் பார்த்தாள்! அவனது இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டாள். அவனுக்காகப் பரிதாபப் பட்டவள், அவனது நேர்மையையும், வெள்ளை உள்ளத்தையும் புரிந்துகொண்டாள். கரிசனம், காதலாக மாறியது!

பிரசன்னாவின் அம்மா உமாவுக்குத் திருமணம் ஆகும்போது அவளுக்கு வயது இருபத்தி மூன்றுதான். படிப்பு முடிக்கும் தருவாயில் திருமணம். சங்கர் ஒரு தனியார் கம்பெனியில் உயர் அதிகாரி. பெரியவர்களாகப் பார்த்து நிச்சயித்தத் திருமணம்தான். உமா திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்வதில் சங்கருக்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனாலும் படிப்பு முடிந்த பிறகு, வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லாத வாழ்க்கை, உமாவை வீட்டுடன் கட்டிப்போட்டது. சங்கரின் பெற்றோரும், உமாவின் பெற்றோரும் அந்தக் கால மனிதர்கள். உமா வேலைக்குப் போகவேண்டிய அவசியமில்லை என்று கருதினர்.

சங்கர் நல்ல உயரம். சிரித்த முகத்துடன் அழகாக பேசும் சங்கரை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. உமாவும் சுருள் முடி, வரைந்தாற்போன்ற கண்கள், உயிர்ப்புடன் உதடுகள் என அழகி தான். திருமணமான ஒரு வருடத்தில் பிரசன்னா பிறந்தான். ஆனாலும், பலவீனமான கர்பப்பை, இரண்டாவது குழந்தைக்கு வழியில்லை என்றது!

“நம்ம குழந்தையை நல்லா படிக்க வைக்கணும். அவன் விருப்பப்படி படிப்பு, திருமணம் எல்லாம் செய்யணும்”. பெற்றோர் எல்லோருக்கும் இருக்கும் எல்லா ஆசைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் பிரசன்னாவை வளர்த்தனர், உமா சங்கர் தம்பதியினர்.

நாம் நினைக்கிற படியெல்லாம் நம் வாழ்க்கை சென்று விட்டால், அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று இறைவன் நினைப்பான் போல…. குழந்தை பிரசன்னா பள்ளி முடித்து, கல்லூரியில் சேரும் சமயம் அந்த விபத்து நடந்தது.

வேலை விஷயமாகக் காரில் புதுச்சேரி சென்ற சங்கர், சாலை விபத்தில் இறந்து போனான். அந்த இளம் வயதிலேயே உமாவின் வாழ்க்கையில் ஒரு வெறுமை தோன்றியது. சங்கர் இல்லை என்றாலும் வாழ்க்கையின் பிடிப்பே தன் மகன் பிரசன்னா தான் என்று ஆகிவிட்டது உமாவுக்கு. ஒரே குழந்தை என்பதால் அவளுக்கு அளவு கடந்த பாசமும் அவனைத் தன் கையுடனே வைத்துக் கொள்ளும் ஆர்வமும் வேகமும் இருந்தது. 

குழந்தை பிரசன்னாவின் தலைமுடியை இரண்டு கைகளாலும் பிரித்து நடுவகிடு போலச் செய்து, பெண் குழந்தை ஆசையை மனதில் ஒரு சிறு வலியுடன் நினைத்துக் கொள்வாள். மூன்று வயது வரை பிரசன்னாவுக்கு தாய்ப்பால் கொடுத்தாள் உமா. யார் சொல்லியும் நிறுத்தவில்லை. குழந்தை அழுத போதெல்லாம் எடுத்து விட்டாள்.. குழந்தைக்கு இல்லாததா?

ஏழு வயது வரை அவளருகிலேயே தூங்குவான் பிரசன்னா. அவன் காலைத் தன்மீது போட்டுக் கொண்டு அவன் தூங்குவதை தடை செய்ய மாட்டாள். குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தலைவாரி அழகு பார்ப்பாள். அவன் வீட்டை விட்டு கிளம்பியதும் வெறுமையாக உணர்வாள். மதிய உணவு சாப்பிட்டு இருப்பானா? மாலை விளையாடி இருப்பானா? கீழே விழுந்து அடி ஏதேனும் பட்டிருக்குமோ? பசிக்குமோ? என்றபடி பிரசன்னாவையே நினைத்துக் கொண்டிருப்பாள். மாலையில் அவனைப் பார்த்தவுடன் மனம் மகிழ்ச்சியில் நிரம்பும். கட்டி அணைத்து, தலைகோதி வீட்டுக்குள் அழைத்துச் செல்வாள்.

சங்கரின் மறைவுக்குப் பிறகு உமாவின் கவனம் முழுவதும் பிரசன்னாவின் மேல் தான்.

பிரசன்னா வளர்ந்து கல்லூரியில் சேர்ந்த போது அதே உயரம், சுருள் முடி, சிரிக்கும் கண்கள் என சங்கரின் அச்சாக வளர்ந்திருந்தான். சங்கரைப் போலவே வளர்ந்திருந்த பிரசன்னாவை பார்க்கும் போதெல்லாம் உமாவின் மனது  குதூகலித்தது. அவசரத்தில் பேசும் போது, ’அப்படி இல்ல.. சங்கர்’ என்று, அவளை அறியாமல் அவள் மனது வெளியாகியதும் நேர்ந்திருக்கிறது. கோபத்தில் எப்போதாவது பிரசன்னா குரலை உயர்த்தும்போது, உமாவுக்கு சங்கரிடம் ஏற்பட்ட அதே பயம் வந்தது அவளுக்கு விசித்திரமாக இருந்தது.

அம்மாதான் என்றாலும், தோளுக்கு உயர்ந்த பிரசன்னா சில சந்தர்ப்பங்களில் உமாவின் செய்கைகளில் கூச்சத்தினால்  நெளிவான்.  சில நேரங்களில் அம்மாவின் அன்பு அவனுக்கு ஒரு பாச விலங்காக மாறுகிறதோ என நினைப்பான்.  சில சமயங்களில் சில உறவுகளுக்கு இடையே இருக்கும் மிக மெல்லிய, தெளிவில்லாத, விளக்க முடியாத, சமூகத்தால் ஏற்க முடியாத ஈர்ப்பு, சொல்லிலோ செயலிலோ தெரியாது. உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டி இருக்கும்.  பிரசன்னா குழம்பினான்.

‘ஏன் லேட்? எங்க போயிட்டு வர?’

‘ யார் போன் பண்ணினா?’

‘ அந்த பொண்ணோட என்ன பேச்சு?’

‘ நீ ஏன் அவங்களோட எல்லாம் கேன்டினுக்கு போறே?’

‘ பிக்னிக், டூருக்கு எல்லாம் போக வேண்டாம்’

போன்ற கட்டுப்பாடுகள் பிரசன்னாவை வயதுக்கு ஏற்ற அனுபவங்களையும் மகிழ்ச்சியையும்  பெறுவதற்குத் தடையாக இருந்தன. ஆனாலும் தன்னையே நம்பி இருக்கும் அம்மாவுக்காக, அவள் மகிழ்ச்சிக்காக எல்லாவற்றுக்கும் ‘சரி’ என்றான்.

பிரசன்னா நல்ல வேலையில் சேர்ந்த பிறகும் அம்மாவின் அன்புப் பிணைப்பில் திக்கு முக்காடிப் போனான். யாருடனும் பேசுவதற்கே தயங்கினான். வீடு, அலுவலகம், வேலை, அம்மா என்று ஒரு சுழலுக்குள் மாட்டிக்கொண்டான். அப்போதுதான் அலுவலக ஊழியர்களுக்கான கவுன்சிலிங் செஷனுக்கு வந்த கவிதாவை சந்தித்தான்.

அவனுடைய அம்மாவின் அன்பையும் கட்டுப்பாட்டையும்  கவிதாவிடம் சொன்னான்.  இந்த பிணைப்பிற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா, அல்லது, இது ஏதேனும் ஒருவகை மனோ வியாதியா என்று கவிதாவிடம் கேட்டான்.

பிரசன்னாவை பார்த்த கவிதாவிற்கு, அவன் உடல் மொழி, தயங்கி தயங்கி பேசும் குணம் எல்லாம் அவனது கல்லூரி, அலுவலக சாதனைகள், புத்திசாலித்தனம் எல்லாவற்றுக்கும் எதிராக இருந்தது மிகவும் முரணாகப்பட்டது. அவனே அறியாமல், உமாவின் வாழ்க்கை பிரசன்னாவை மையமாகக் கொண்டு இயங்குவது புரிந்தது.  உமாவுக்கு இருக்கும் பிணைப்பு, பிரசன்னாவின் உயர்வுக்கு முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதாக நினைத்தாள் கவிதா.

“அம்மா, ஒரு  டவல் கொடேன்,  மறந்து போயிட்டேன்”  குளித்த பிறகு குளியலறையில் இருந்து குரல் கொடுத்தான் பிரசன்னா. கதவைச் சற்றே திறந்து, கையை வெளியே நீட்டினான். அம்மாவின் கைகள் அவனது ஈரக் கைகளை தடவின. ஈரத்தில் ஒட்டி இருந்த முடிகளைக் கலைத்தன. ‘சங்கர்…’  அலைபாயும் அம்மாவின் மனதைப் பிரசன்னாவால் அவன் கைகளில் உணர முடிந்தது. ‘சீக்கிரம்  டவலைக் குடும்மா’  பிரசன்னாவின் குரல் அவள் நினைவுகளைக் கலைக்க, துண்டு கை மாறியது.  பிரசன்னாவுக்குக் குளித்த பிறகும் வியர்த்தது. அம்மாவை நினைத்து கோபப்படுவதா? பரிதாபப்படுவதா? என்று புரியாது கலங்கினான் பிரசன்னா. 

அன்று இரவு கையில் பாலைக் கொடுத்துவிட்டு, பிரசன்னாவின் தலையைக் கலைத்து விட்டாள் உமா! அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்த பிரசன்னா, “என்னம்மா இது, குழந்தை மாதிரி விளையாடிக்கிட்டு..” என்றான். அதற்கு உமா சன்னமான குரலில், ‘எவ மாட்டப் போறாளோ, உன் கோபத்துக்கு’ என்று முணுமுணுத்த படி சிரித்தாள்.

இரவு பாதித் தூக்கத்தில் ஏதோ சத்தம் கேட்க, திடுக்கிட்டு எழுந்தான் பிரசன்னா. அருகில் இருந்த விளக்கை போட, அம்மா அங்கே எதிரிலிருந்த மேஜையில் ஏதோ தேடுவதைப் போல நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா வேணும்?”

“சாரிடா, தூக்கத்தைக் கலைச்சிட்டேனா?  மூக்கடைக்குது,  விக்ஸ் இருக்குமான்னு பார்க்க வந்தேன்..”  தயங்கியபடி கூறினாள் உமா. 

மேஜை டிராயரைத் திறந்து, பிரசன்னா எடுத்துக் கொடுத்த விக்சை வாங்கிக் கொண்டு வாசல் வரை சென்ற உமா,  ஒரு கணம் நிதானித்து பிரசன்னாவை திரும்பிப் பார்த்தாள். பைஜாமாவில் வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்த அவனைப் பார்த்த போது அங்கே சங்கர் நிற்பதாக ஒரு கணம் தோன்ற, ஒரு பெருமூச்சுடன் சடார் என்று திரும்பி வெளியே சென்றாள்.  பிரசன்னாவுக்கு இப்போது அச்சமாக இருந்தது. ‘அம்மா என்ன செய்து கொண்டிருந்தாள் என் அறையில்? அவளுக்கு அப்பா உபயோகிக்கும் போதே, விக்சின் நெடி ஆகாதே.’ பிரசன்னாவுக்குப் புரியவில்லை.

அன்று அலுவலகத்தில் ஒரு பெரிய கான்ஃபரன்ஸ். பிரசன்னாவிற்கு முக்கியமான வேலை இருந்தது. அதனால் ‘டை’ கட்டி, கோட், சூட்டுடன் கிளம்பினான். குனிந்து ஷூவை போட்டுக் கொண்டு நிமிர்ந்தவனின் மிக அருகில் உமா.  தலை நிமிர்ந்து அவன் கிராப்பை சரி செய்து, எதிர்பாராத ஒரு கணத்தில் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். சற்றே அதிர்ந்த பிரசன்னா

“அம்மா…. என்னம்மா நீ..” என்றபடி கன்னத்தைத் துடைத்துக் கொண்டான்.  அவன் பார்த்த பார்வையில் ஒரு வினாடி நடுங்கி தான் போனாள் உமா.  பின்னர் தெளிந்து, ”என் புள்ள அழகுடா, அவன் அப்பா மாதிரியே”  என்றவள் சிரித்தாள், ஆனாலும் கண்களில் ஈரம். 

அலுவலகத்தில் கான்ஃபரன்ஸ் முடிந்த பிறகு, காலையில் நடந்த நிகழ்ச்சிகள் பிரசன்னா மனதில் குறும்படமாய் ஓடின. ‘அம்மாவுக்கு என்ன ஆயிற்று?’ என்று அவனுக்குப் புரியவில்லை. அம்மா, தன்னை ஒரு மகனாக நினைப்பதை விட ஒரு நண்பனாக நினைப்பதாகத் தோன்றியது. ஆனாலும், இதற்கு காரணம் தானாக இருக்க கூடுமோ என்று தன்னையே கேட்டுக் கொண்டான் பிரசன்னா. இளம் வயதிலேயே அப்பாவை இழந்ததால் வந்த துயரம், வெற்றிடம், அம்மாவைத் தன்னுடன் அதிக நெருக்கமாக இருக்க வைக்கிறதோ? அவளது தனிமை, பாதுகாப்பில்லாத தன்மை, வயது எல்லாமே காரணமாக இருக்கக் கூடும். அதற்காகவே நீண்ட நேர பூஜைகள், புத்தகங்களில் மூழ்கிப்போவது, வீட்டைப் பெருக்கி, சுத்தம் செய்வது என மாற்றி மாற்றி எதைச் செய்தாலும் அதையெல்லாம் தாண்டி மேலே வந்து அவளைச் சித்திரவதை செய்வது என்ன என்பது பிரசன்னாவுக்கு புரியவில்லை. ‘அம்மா,  எனக்கு நீ ஒரு பெரிய புதிராக இருக்கிறாய்.  நான் என்ன செய்யட்டும்?’ 

தான் எதைச் செய்தாலும் அது அம்மாவுக்கு பிடிக்குமா? அம்மா என்ன சொல்வாள்?  அம்மாவை கேட்டுக் கொண்டு செய்யலாமா என்று ஆயிரம் கேள்விகள்.  இப்படி அம்மாவுக்கென்றே வாழ்ந்து, தன்னுடைய தனிப்பட்ட அடையாளத்தை இழந்து வருவதை பிரசன்னா உணர்ந்தான். தனக்கு வேண்டியவைகளை, தன் கனவுகளை, தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அம்மாவின் பிணைப்பு ஒரு தடையாகத் தன் முன் நிற்பதை உணர்ந்த போது, அவள் மீது கொஞ்சம் கோபமும், தன் மீது கழிவிரக்கமும் வந்தது.

அம்மாவுடன் ஒரு திருமணத்திற்குச் செல்ல, இளம் வயது உறவுக்காரப் பெண்கள் அவனுடன் வந்து பேச,  அவர்களுக்கு எதிரில் அவன் கையைப் பிடித்துக் கொண்டு தலைநிமிர்த்தி முகத்தில் பெருமிதத்துடன்  நடந்து வந்த அம்மாவை நினைத்துப் பார்த்தான்.  அவள் பார்வையும் உடல் மொழியும் ‘அவர்களுக்குக்கிட்டாத, மிக நெருங்கிய நண்பனுடன், தான் வந்திருப்பது போலக் காட்டிக் கொண்டன! 

தன்னுடைய மிக அந்தரங்கமான சில தகவல்களைக் கூட, தன்னுடன் எந்தவித தடையும் இன்றி பகிர்ந்து கொள்ளும் உமாவை ஒரு கரிசனத்துடன் பார்த்தான் பிரசன்னா. “ரொம்ப பீரியட் கொட்டுறதுடா; லேடி டாக்டர்கிட்ட போகணும், பயமா இருக்கு. கேன்சர் கீன்சர்ன்னு ஏதாவது இருக்குமோன்னு…”  உமாவை உடனே நல்ல மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்தான் பிரசன்னா. ஆனாலும் ‘உலகில் எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைகளிடம் இப்படி இருப்பார்களா?’ என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருந்தது. 

கவிதாவிற்குப் பிரசன்னாவின் நிலைமை புரிந்தது. ‘பிணைப்பு’ உறவுகளுக்கிடையே ஏற்படுத்தும் தடைகளையும், குழப்பங்களையும் பிரசன்னாவிடம் எடுத்துச் சொன்னாள் கவிதா.

“பிரசன்னா, இது இரண்டு பேருக்குமே நல்லதில்லே. நீ உன் அம்மாவை விட்டு விலகி இருந்தால்தான், இந்தப் பிணைப்பு வலுவிழக்கும்”

“என்னை என்ன செய்யச் சொல்றே கவி? என்னால என் அம்மாவை விட்டுப் பிரிய முடியாது. அது அவள் உயிருக்கே ஆபத்தாயிடுமோன்னு கவலையா இருக்கு”

“யார் பிரியச்சொன்னாங்க? கொஞ்சம் விலகி இருக்கச் சொல்றேன், தட்ஸ் ஆல். அது அவங்களுக்குள்ளே நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தும்”

“முயற்சி பண்றேன் கவி”

அன்று காலை கையில் காப்பியைக் கொடுத்த உமாவிடம், பிரசன்னா, ”ஆபீஸ்ல டெபுட்டேஷனுக்கு ரெண்டு வருஷம் யூ எஸ் போகச் சொல்றாங்க. போகலாம்னு இருக்கேன்.  நீ என்ன சொல்ற?”

இதைக் கேட்டவுடன் உமா பதறினாள். கண்ணில் நீருடன் “ஏன் பிரசன்னா, இங்கே என்னோடு இருக்க பிடிக்கலையா?’

“அம்மா, என்ன இது…  உன்னைப் பிடிக்காமல் எப்படி ம்மா? வேலைன்னு வந்தா போகத்தானம்மா வேணும்?”

“என்ன விட்டுட்டு போயிடுவியா?”  குரலில் கெஞ்சல்.

“…………………… “

“அங்க போய் ஒரு வெள்ளைக்காரிய கல்யாணம் செய்துகிட்டு, என்ன மறந்துடுவியா?”

“அம்மா.. அம்மா”  என்றபடி உமாவின் அருகில் வந்து அணைத்துக் கொண்டான் பிரசன்னா. ”ஐயோ அம்மா, ஏம்மா ஏதாவது நீயா கற்பனை பண்ணிக்கிறே? எனக்கு யு.எஸ் போகணும்னு ஆசையா இருக்கு. அங்க போனா, வேலையிலும், சம்பளத்திலேயும் உயர்வு;  நானும் நாலு பேர் பார்க்கிற மாதிரி மேல வர வேண்டாமாம்மா?”

“அம்மாவை அப்படியே தனியா விட்டுட்டுப் போயிடுவியா? உனக்கு என் மேல ஆசையே இல்லையா?”

உமாவின் இந்தப் பிணைப்பு, பிரசன்னாவுக்கு கொஞ்சம் எரிச்சலைத் தந்தது. “எந்த அம்மாவுக்கும் தன்னுடைய பிள்ளை முன்னேறி, மேல வருவதில் தான் ஆசை இருக்கும். உனக்கும் அப்படித்தானே?  யூ.எஸ் போய் ஒரு ஆறு மாசத்துல செட்டில் ஆன உடனே உன்ன அழைச்சிக்கிறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா தான்  நீ இருக்கணும்”

உமாவின் விசும்பல் பிரசன்னாவின் சட்டையை நினைத்தது. காரணம் இல்லாமல் அவள் அணைப்பு இறுகுவதைப் போல இருந்தது. மெதுவாக தன்னை விலக்கிக் கொண்டு பிரசன்னா குளிக்கப் போனான்.  

அம்மாவிடம், கவிதாவின் காதலைச் சொல்லவில்லை பிரசன்னா. அதனால் அம்மாவிற்கு ஏதேனும் பிரச்சனை வருமோ என அஞ்சினான். மிக விரைவாக, யூ.எஸ். செல்லத் தயாரானான். அங்கு சென்ற பிறகு கவிதாவை அழைத்துக்கொள்ளத் திட்டம்.

எல்லா வசதிகளுடனும் உள்ள மிகச் சிறந்த முதியோர் இல்லம் ஒன்றில் உமாவைச் சேர்த்தான் பிரசன்னா. குறிப்பிட்ட நாளில், அமெரிக்காவுக்குப் பறந்தான். அம்மாவை நினைத்து மனம் வருந்தினான். தனக்காக வாசலில் காத்திருக்கும் அம்மாவின் முகம் அவனை மிகவும் வருத்தப்பட வைத்தது. ‘அம்மா என்னை மன்னிச்சுடும்மா; இதைத் தவிர வேற வழி தெரியலைம்மா எனக்கு’

வானில் பறக்கும் விமானங்களைப் பார்த்து, ‘பிரசன்னா வந்துவிடுவான்’ எனக் காத்திருந்தாள் உமா.

‘தினமும் பேசுவது’ என்பது ‘வாரம் ஒருமுறை’ என்றானது. பின்னர் ‘மாதம் ஒருமுறை’ என்றானது, பிரசன்னாவின் வாட்ஸ் ஆப் தொடர்பு!

இப்போதெலாம் வானில் பறக்கும் விமானங்களைப் பார்ப்பதில்லை உமா!

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *