“இந்தா மறுபடியும் வந்திட்டீங்களா உங்களுக்கு கொஞ்சம் ௯ட பயமே இல்லையா?”
வீட்டுத் தாழ்வாரத்தில் வந்து அமர்ந்த ஆணும் பெண்ணுமாய் சின்னான் குருவி இரண்டையும் பார்த்து துரை அவனாகப் பேசினான்.அதன் சிறு கொண்டையும் கருப்பும், சாம்பல் நிறமும் கலந்து, அடி வயிற்றில் காயாதப் பச்சை இரத்தம் சிதறியது போல் சிவப்பு வண்ணமும் அவனுக்கு அந்த குருவிகளைப் பார்க்க ரொம்பப் பிடித்து இருந்தது.கண் இமைக்காமல் அவைகளையேப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு இப்போது பத்து வயதாகிறது. முன்பு அவன் இருந்த வரிசை வீட்டில் வானம் பார்த்த வாசல் இருந்தது.பள்ளிக் ௯டம் இல்லாத நாளில் சிட்டுக் குருவியைப் பிடிக்க வீட்டுக்குள் மறைந்து நின்று
நெல்லும் அரிசியும் தூவி,சாய்வாக முறத்தை நிற்க வைத்து அதற்கு ஒரு குச்சியை அணைக் கொடுத்து பிடிக்க நினைத்து தோற்று இருக்கிறான்.அந்த மாதிரி அவன் பல தடவை முயற்சி செய்தும் பலன் இல்லை.ஒரு முறை அவன் அப்பா,
“நீ முறத்தைச் சாய்க்கும் முறை சரி இல்லடா”
என்று சொல்லி அவர் நாலுக் குருவிகள் முறத்திற்கு கீழ் வந்த போது முறத்தை வேகமாக சாய்த்து இரண்டு குருவிகளைப் பிடித்துக் அவன் கையில் கொடுத்து அழகு பார்த்து பின் பறக்க விட்டார்.கனமே இல்லாத அக் குருவிகளைக் கையில் வாங்கிய போது அக் குருவிகள் “அகப் பட்டு விட்டோமே!’ என்று பயத்தில் நடுங்க,எங்கே கொத்தி விடுமோ என்று அவன் உடம்பும் அப்போது நடுங்கியது.
குருவிகளின் வாழ்வை நினைத்தாலே அவனுக்கு ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. அதுகளைப் போலவே அவனும் அந்தரத்தில் பறக்க ஆசைப் பட்டு ஒரு நாள் வீட்டின் சுற்று சுவர் மீதேறி கீழே குதித்து கால் பிசகிப் பத்து நாள் நொண்டிக் கொண்டு இருந்தான்.அப்போது தொலைக்காட்சியில்” சக்திமான்” தொடர் பிரபலமாக இருந்தது. சக்தி மான் மட்டும் எப்படி குருவியாக,ஆபத்துபாந்தவனாக பறக்கிறார் அவன் மனசில் கேள்விகள் தொடர்ந்து எழுந்ததை அப்பாவிடம் சொல்லி அடி வாங்கினான்.எப்போதும் குருவிகள் எந்த அச்சமுமின்றி பெரிய பூரான்,பூச்சிகளை கடித்து துண்டாக்கி விடுகிறதைப் பார்த்து அவனுக்கு வியப்பாக இருக்கும்.அதுகள் இரையை உண்பது ௯ட கோழி மாதிரி குப்பையை இறைத்து உண்பதில்லை. கண்ணில் பட்டதை அப்படியே அவசரமாய் உண்ணும் அழகைப் பார்த்து ரசித்து இருக்கிறான்.
“குருவியெல்லாம் பார்,எப்படி பரப்பரபாகச் சாப்பிடுது”. என்று அவன் சாப்பிடும் போது நேரத்தைப் பொறுத்து அம்மாவிடம் கொட்டும் வாங்குவான்.
அவன் சாப்பிடக் உட்கார்ந்தால் சோற்றை மெதுவாக மென்று விழுங்கும் வழக்கத்தை அவனால் மாற்ற முடியவில்லை.பெரும்பாலும்,அவன் பள்ளிக்கு செல்லும் காலை வேளையில் இட்லி தான் இருக்கும்.அது பள்ளிக்குச் செல்லும் அவசரத்திற்கு கொஞ்சம் வேகமாக உள்ளே தள்ள அது அவனுக்கு வசதியாக இருந்தது.
“ஏன்டா…அடி வாங்கும் போது ஊருக்கேக் காது கேட்கற மாதிரி கத்தற.பேசும் போதும் நல்ல சத்தம் போட்டு தான் பேசற.அப்புறம் என்னடா சோத்த தின்கறதுக்கு மட்டும் உன் வாய் சின்னதாகுது” அவன் அம்மா பல தடவைக் கேட்டு இருக்கிறாள்.
“அப்படிதாம்மா என்னால சாப்பிட முடியுது” அழுத்துப் போனவனாக பதில் சொல்லி விட்டு சாப்பிடுவான்.
ஆனால்,ஒரு சோறு தட்டை விட்டு வெளியே விழுந்து இருக்காது. அதில் அவன் கவனமாக இருப்பான். சம்மங்கால் போட்டு சாப்பிடும் போது கால்களை மறைத்து துணி போட வேண்டும்.தனியாகச் சாப்பிடப் பழகியதிலிருந்தே இது அம்மாவின் கட்டளை.வாய்யிக்கு போகும் சோறு தவறி விழுந்தால் மீண்டும் எடுத்து சாப்பிட அந்த துணிப் பயனாக இருக்கும்.அதுக்கென்றே அம்மாச் சுத்தமானத் துணி தனியாக வைத்திருந்தாள். தூரத்துறவு முத்து ஒரு வகையில் அப்பாவுடைய நண்பர்.அவர் வீட்டுக்கு வந்து விட்டால் சாப்பிடாமல் போக மாட்டார். அதுக்காவே நிறையப் பேசி சாப்பிடும் நேரத்திற்கு பேச்சைக் கொண்டுப் போவார். அவர் சோறு சாப்பிடும் விதமே தனி. அதை அழகென்றும் சொல்ல முடியாது. அசிங்கமென சொல்லலாம் அல்லது ராட்சனென்று சொல்லலாம்.மரக் கொத்தி பறவையும்,குப்பைக் கிளரும் கோழிகளும் அவரிடம் தோற்றுப் போகும்.அம்மா, அவருக்காகவே வீட்டில் இருப்பதிலேயே பெரியத் தட்டு எடுத்து வைப்பாள். அது தாம்பூலத் தட்டு போல இருக்கும்.அந்த தட்டின் அகலத்தை மீறி அவர் சாப்பிடும் போது சோறு பாதி வெளியில் சிதறிப் போகும். .உள்ளங்கையையும்,பின்னங்கையையும் முழுவதும் உபயோகிப்பார்.பின்,கையை நக்குவது ஒரு கோமாளி செய்வது போல இருக்கும்..முகம் சுழிக்க வைக்கும் அவர் செய்கைகள் அவனுக்குப் பிடிப்பதே இல்லை. வெற்றிலை மெல்லும் போதும்.அதே கதை தான். சலவாய் ஒழுகும். அதையெல்லாம் பார்க்கப் பிடிக்காமல் அந்த இடத்தை விட்டு அவன் ச்சீ…ச்சீயினு நகரத்து விடுவான். அவரிடம் அவர் சாப்பிடும் விதம் குறித்து அம்மாவும்,அப்பாவும் நாசுக்காவும் நேரடியாகவும் சொல்லிப் பார்த்து விட்டார்கள்.
“நீங்க இதுக்கே இப்படி சொல்லறீங்க,ஹோட்டல்லப் போய் பாருங்க. அப்படி… அப்படியே சாப்பிட்டும் சாப்பாடம சோத்த வெச்சுட்டுப் போயிருவானுக. ஏதோ இலைப் பெரிசாப் போடறதுனால நா சாப்பிட மாதிரி சோறு வெளியே சிதறாம இருக்கு. இல்லையினா அங்க என்னைய விட மோசமா இருக்கும்”
தன் தவறை உணராமல்,அன்னத்தையும் மதிக்காமல் அடுத்தவன் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வார். ஒரு முறையாவது இந்த குருவிகள் சாப்பிடும் அழகை அவரிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.
தாழ்வாரத்தில் வந்தமர்ந்த சின்னான் கொண்டைக் குருவியை “போங்க” என்று தூரத்தி விட அவனுக்கு மனசில்லை. ஏற்கனவே,அந்த குருவிகள் போன பருவத்திற்கு அங்க வந்து தங்கி குஞ்சு பொரித்து இருந்தது.இப்பவும், அந்த பருவத்திற்கு வந்ததாக நினைத்தான். இரண்டு நாளாய் அம்மாவும் குருவி வந்து போவதைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
“மனுசங்க மாதிரி வருசத்திற்கு ஒரு முறை தான் அதுக்கு பருவம் போல”
அம்மா கேலியாகச் சொல்லி சிரித்தாள். அப்பாவும் குருவிகளின் பருவங்கள் பற்றி நிறைய விசியங்களை சொன்னதோடு, கண்ணதாசன் சொன்னதாக இந்த கோடை காலத்தில் மல்லிப்பூ வாசனையோடு பெண்களும் அதற்கு விரும்புவார்கள் என்ற ஒரு செய்தியையும் சொல்லி சிரித்தார். அம்மா அன்று தலை நிறைய பூ வைத்திருந்தாள். அவர்கள் பேசும் போது தொலைக் காட்சி மீது கவனம் செலுத்துவது போல கவனித்தான். அப்பா எப்போதும் எல்லா விசியங்களையும் இயல்பாகப் பேசுவார். அவர் பேச்சைக் கேட்பவர்களுக்கு ஒரு விதமாய் விரசம் ஏற்பட்டாலும் அவர் முகத்தில் எந்த மாற்றமும் இருக்காது.வழக்கமாய் வைத்துக் கொள்வார்.
இது கோடை காலம், அது தான் குருவிகள் பருவத்திற்கு வந்து விட்டதோ என்று நினைத்தான். குஞ்சுப் பொரிக்கும் என்று மட்டுமே அவன் மனசில் எண்ணமிருந்தது. வேற எதுவும் அவன் நினைக்கவில்லை.போன முறை ரெண்டு குஞ்சுப் பொரித்து ஒன்று வெளியேப் பறந்து போக ஒன்று மதில் தாண்ட முடியாமல் நீண்ட நேரம் தவித்தது. தாய் குருவி அதனை வெளியே அழைத்துச் செல்ல அப்படி இப்படியுமாய் பறந்து வழி காட்டிப் போராடியது. பக்கத்தில் யாரும் போனால் பெரிசாய் சத்தம் போடுவதும், தாக்க வருவதுமாக இருந்தது. அவன் குஞ்சுக் குருவியை வெளி எடுத்துப் போட்டு விடலாம் என்று நினைத்தான். மேலே பறக்க முடியாத அந்த குருவியை பூனையோ, பைரவனோ பிடித்து விடுமென நினைப்பு வர அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அதா முயன்று போகட்டுமென்று வீட்டின் உள் கதவருகிலேயே நின்று கொண்டு குஞ்சைக் கவனித்தான். தொடர்ந்து,தாய் குருவியின் சத்தத்தைப் பொறுக்க முடியாமல் வீட்டுக்குள்ளே இருந்து வெளி வந்த அவன் அப்பா சாதாரணமாகப் போய் குஞ்சுக் குருவிப் பிடித்து வந்தார். அதன் முகத்தில் பயம் தெரிந்தது.
“அப்பா…குருவிய விட்டுருங்க,போகட்டும்”
“அடப்போடா… ௯டையிலிருந்து விழுந்து ரொம்ப நேரமா கத்திட்டு இருக்கு. அடிக்கிற வெயிலுக்கு செத்தாலும் செத்துப் போயிரும்.கொஞ்சம் தண்ணீக் கொடுப்போம்”
“அப்பா… இந்த குஞ்சு சத்தம் கேட்டதிலிருந்து நா பத்து பதினைஞ்சு நாளா கவனிச்சேன்பா. அந்த பெரிய குருவி ஏதோ வாயில கவ்விட்டு வருது இதுக்கு ஊட்டுது. தண்ணீயெல்லாம் கொடுத்த மாதிரி தெரிலப்பா. நீங்க விட்டுருங்க போகட்டும்.பாவமா இருக்குப்பா”
“ஏன்டா… அன்னைக்கெல்லாம் கையிலக் குருவியக் கொடுத்தப்பச் சந்தோசமாக் குதிச்ச? இன்னைக்கு என்னமோ புத்தராட்டம் கனிஞ்சு பேசற?”
“அப்படி இல்லப்பா.எங்க வாத்தியார் சொன்னாரு. குருவிகள் எல்லாம் அழிஞ்சுட்டு வருதாம். அதனால,குருவிக் கண்ட அடிக்கறதோ தூரத்தரதோ எதுவும் செய்யக் ௯டாதுனு சொல்லி இருக்கார்ப்பா”
“சரி, நா இதைய என்ன செய்யப் போறேன்? கொஞ்சம் தண்ணீக் குடிக்க வெச்சுட்டு விட்டறேன், அதுக்கும் தாகம் அடிக்கும்ல”
அதுக்கு மேல் துரையிடம் பேசாமல் ஒரு டம்ளரில் தண்ணீ வைத்தார். ரொம்ப நேரமாய் அது தண்ணீயை மோந்து ௯டப் பார்க்கவில்லை. சிறு இறக்கையை அடித்துக் கொண்டு கீச்சுக் குரலில் கத்திக் கொண்டே இருந்தது. அதன் சத்தம் கேட்டு தாய் குருவி ரெண்டும் வீட்டுக்குள்ளேயே வந்து குஞ்சுக் குருவியை அழைப்பதை அவன் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்த குஞ்சுக் குருவி வெளியேப் போவதாகத் தெரியவில்லை. வெயிலுக்கு பயந்து நிழலில் நிற்பது போலவே இருந்தது.
“டேய் …அதுக்கு பசிக்கும் போல நாலு பருக்கைச் சோறுக் கொண்டு வந்து போடு”
நாலுப் பருக்கைச் சோற்றையும் அது கண்டு கொள்ளவில்லை. இன்னும் தானாக எடுத்துச் சாப்பிடும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ளவில்லையோ என்று நினைத்தான். அப்புறம் எதுக்கு அவசரப் பட்டு வெளியே வரனும்? குஞ்சு மேல் அவனுக்கு கோபம் வந்தது. அந்த சோற்றை எடுத்து ஒன்றாக சிறு உருண்டையாக்கி அப்பா அதன் வாயில் திணித்தார். உள்ளே விழுங்க முடியாமல் அது தவிப்பதை அவனால் பார்க்க முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டான். அப்பா அவர் வேலையை முடித்து விட்டு படுக்கப் போயி விட்டார். அவனுக்கும் காலையில் ஓடி விளையாண்டக் களைப்பு தாய் குருவிகளின் சத்தத்தை மீறி கண்ணைக் கட்டியது. அவன் தூங்கி எழுந்த போது வேலைக்கு போன அவன் அம்மா வந்திருந்தாள். குஞ்சுக் குருவி மேல் எறும்புகள் ஏறி இருந்தது.
“குஞ்சு செத்துப் போச்சுடா” அவன் அம்மா சொன்ன போது கலங்கிப் போனான். குருவிகளுக்கு வேர்வை வராது போல உள்ளே அழுதான்.
தாழ்வாரத்தில் வந்து அமர்ந்தக் குருவிகள் முன் அடை காத்த பொட்டிக் ௯டைக்குள் போவதும் வெளியே வருவதுமாக இருந்தது.
“இந்தா பாருங்க…உங்களுக்கு முட்டைப் போட்டு குஞ்சுப் பொரிக்க இந்த இடம் ஒத்து வராது. வேற இடம் போய் பாருங்க. அன்னைக்கு உங்க குஞ்சுக் குருவி ஏன் செத்துச்சு? ஏதுக்கு செத்துச்சுனுத் தெரியாம நாங்க பாவத்தச் சுமக்கறோம். அப்பா… அப்படித் தான் சொன்னார். இப்பவும் அந்த மாதிரி ஆகக் ௯டாது. கம்முனு வேற இடம் பாருங்க”
அவனாகக் குருவிகளைப் பார்த்துப் பேசினான்.
“இங்க தான் குஞ்சுப் பொரிக்கனும் நெனைச்சீங்கனா.பொறுமையா இருந்து உங்க அளவுக்கு பறக்க நிலையிலக் குஞ்சுகளைக் ௯ட்டிட்டுப் போங்க. பத்து,பதினைஞ்சு நாளுங்கறது இன்னும் அஞ்சு ஆறு நாள் சேர்த்தி இருந்தா ஒண்ணும் குறைஞ்சுப் போகாது. நீங்க அதுக்கு யானைப் படை மாதிரி நின்னு வழி நடத்த வேண்டி வேலை இருக்காது. பறக்கவும் சாப்பிடவும் சொல்லியும் தர வேண்டிய அவசியமும் இருக்காது. ஒரு செஸ் ஆட்ட மாதிரி ராஜாவாக, ராணியாகத் தனியாக நின்னு ஜெயிக்கும். கண்ணுக் தெரியாத காற்றுக் கணக்காப் பறக்கும். தேவை இல்லாம நீங்க வந்து கத்திக்கிட்டு குருடன ௯ப்பிட்டுப் போற மாதிரி வா…வானு ௯ப்பிடறது எதுவும் எனக்கு சரியாப் படல. பக்கத்துல யாரும் வந்துட்டாப் போதும் உங்க இரண்டும் பேருக்கும் பைத்தியம் புடிஞ்சுருது.வீட்ல இருக்க முடியாதளவுக்கு ௯ப்பாடுப் போடறீங்க. என் காதுக்குள்ள அன்னைக்கு நீங்கப் போட்ட சத்தம் ஒரு வாரம் வரைக்கும் கேட்டுட்டே இருந்துச்சு. அப்படியென்ன உங்களுககு தீங்கு செய்யப் போறோம்? உங்க புள்ளைகள நாங்க வறுத்து தின்னாப் போடப்போறோம்? இதுல திருட்டுப் பார்வை வேறப் பார்க்கறீங்க. அந்த அளவுக்கு நாங்க ஈவு ஈரக்கம் இல்லாத ஆளுக இல்ல. முதல்ல எங்கப்பாவச் சொல்லனும்? அம்மா வேணாம்னு சொல்லச்.. சொல்ல வீட்ல இருந்த பொட்டிக் ௯டையா எடுத்துத் தாழ்வாரத்துலக் கட்டி விட்டாரு. நீங்க தானா வந்து அட காத்து முட்டைப் போட்டு குஞ்சு பொரிச்சு வாழ்ந்துக் கிட்டு எங்கள ஒரு அந்நியனாப் பார்க்கறதும் சரியா?”
அவன் கை நீட்டிப் பேசுவதை ௯டை மேல் உட்கார்ந்துக் கொண்டு குருவிகள் பார்த்துக் கொண்டு இருந்தாலும், வினாடி மணித் துளிகளில் அதுகள் வெளியேப் போவதுமாக உள்ளே வருவதுமாக இருந்தது. இந்த முறை குஞ்சு பொரித்தால் எடுத்து வளர்த்தலாம அவனுக்குள் யோசனை ஓடியது.
“இது வளர்ப்பு குருவி இல்லை. வயக்காட்டுப் பக்கம் வாழ்ற ஜாதி.அதிசயமாய் உங்கள் வீட்டுக்கு வந்து இருக்கு” என்று பக்கத்து வீட்டுக்கார அண்ணன் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
பள்ளிக் ௯டத்தில் வாத்தியார் ௯ட அதை தான் சொன்னார்.
“மனிதன் காடுகளை அழிக்க அங்குள்ள பறவைகளும், விலங்குகளும் நகரம் நோக்கி வருகிறது. விளைவுகளை சந்திக்கிறது.விளைவுகளும் தருகிறது”
என்று பாடம் நடத்தியது அவன் நினைவுகளில் வந்து நின்றது.குருவிகள் ௯ட இப்போது அவன் பேசவில்லை. சத்தமில்லாமல் போய் ஒரு சின்னப் பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்து பொட்டிக் ௯டைக்கு கீழாக வைத்து விட்டு வீட்டுக்குள் போனான்.
முஸ்தபா
என் சொந்தவூர் திண்டுக்கல் மாவட்டம், ஜவ்வாது பட்டி புதூர் கிராமம். பிறந்து வளர்ந்தது, படித்ததெல்லாம் கோபியில். தற்சமயம் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஐதராபாத்தில் வசித்து வருகிறேன். 1989யில் முதல் சிறுகதை “பாக்யா”இதழில் வெளி வந்தது.1991யில்
தாராமதி, நண்பர் வட்டம் சிற்றிதழ்களில் 1995 வரை அவ்வப்போது எழுதினேன்.
1993 யில் தாஸ்னா விருதும்,1995 யில் புதியப் பார்வையில் குறுநாவல் பரிசும் பெற்று இருக்கிறேன்.
அதன் பின், இருபது வருடங்களுக்கு மேலாக எதும் எழுதவில்லை. கடந்த நான்கு வருடத்தில் மூன்று சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு உள்ளேன்.
என் இரண்டாம் நூலுக்கு விருது நகர் விருதை மலர் பரிசும், திருப்பூர் இலக்கியப் பாசறை விருதும், பறம்பு தமிழ் சங்கம் மற்றும் சுப்பைய்யா நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசும் பெற்று இருக்கிறேன்.