முந்தைய நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளும் புதிய கவிதைகளும் இடம் பெற்றுள்ள தொகுப்பு.

நூலாசிரியர் தத்தம்மைக்கு கொடுத்திருக்கும் அர்ப்பணமே நூலுக்குள் பிரவேசிக்கும்  கம்பளத்தை விரிக்கிறது.

கவிதை இதயத்தின் மொழி என்பார்கள். தனது துயரினால் காணும் எல்லாவற்றையும் துன்பமாகக் கவனிக்கும் இருதயத்தை,

“துக்கத்தின் போது பறவையைப் பார்த்தேன்

அதன் இறக்கைகள் காற்றை அசைக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தன

மேகங்கள் கெட்டிப்பட்டு

என் வேதனையின் முகங்களாய் மாறிப்போயிருந்தன

சூரியனின் புற ஊதாக் கதிர்கள் அலை வடிவங்கள் கலைந்து நேர்கோடாய் பூமியின் தலையில் இறங்கி வந்தது

வான்வழியெங்கும் மூச்சுத்திணறல் உண்டான போது

பிரபஞ்ச விதி பிசகி தான்தோன்றித்தனமாக இயங்கத் தொடங்கியது இவற்றை வேடிக்கைப் பார்ப்பதற்கு

அவ்வளவு கடினமாயிருந்தது உலகம் மகிழ்ச்சியை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுதேன்

பிறகு

என் துக்கத்தை

மகிழ்ச்சியான குளிகைக்கு கையளித்துவிட்டு

கால்களை காலத்தின்மீது நீட்டி படுத்துக்கொண்டேன்”

என்று கவிஞர் வெளிப்படுத்துகிறார்.  கவிதை,வேதனையில் இறுகிப் போயிருக்கும் மனவெளி பறவையின் சிறகசைத்தலிலிருந்து ஆதவனின் கதிர்கள் வரை ஊடுருவி தனி ஒரு நபரால் ஆகாததைக் காலத்தின் மீது ஏற்றி வைத்துவிட்டு,  தள்ளி நின்று பார்க்கும் தன்மை பெற்றதாயிருக்கிறது. 

“எல்லாவற்றிலிருந்தும் கைவிடப்பட்ட அறையில் கனவுகள் பற்றி எரிகின்றன துக்கங்கள் சாம்பலாகி காற்றில் பறப்பதுபோல்

அனாதை தன்மையில்

உடல் கர்ப்பத்தின் சூட்டைத்தேடி அலைகிறது

அங்கங்கே அசையும் நிழலை குழந்தைகளைப்போல் ஈக்கள் பிடித்து விளையாடுகின்றன உலகத்தின் சத்தம் துண்டிக்கப்பட்ட மௌனத்தின் பிரார்த்தனை

ஒரு தூக்கு கயிற்றைப்போல் ஒளிச்சம் விழுந்த சன்னலில் வந்திறங்கியது

கைகள் குவித்து வாங்கிப் பருகினேன்

சகலத்திடமிருந்தும் வெளியேறி இதுவரை யாரும் கண்டிடாத சூன்யத்தின் ஆழத்தில்

ஒரு கனவைப் போல் மிதந்துகொண்டிருந்தேன்”

பற்றி எரியும் கனவுகள் இறுதியில் மிதக்கவும் செய்கின்றன.

“காற்றின் கிளையேறி

திகுதிகுவெனப் பரவின

எரியும் பிரச்சனைகள்

நாடி ஒடுங்கிற்று

வார்த்தை பூதம்”

என்னும் தேவதச்சனின் சிறிய கவிதையைப் போன்று சொற்களற்றுப் போகும் சூன்ய நிலையினை விலாவரியாகச் சொல்கிறது.

“காதலுக்கு ஒரு அபூர்வமான காலம் இருந்தது

நான் அதை தொலைத்துவிட்டேன் எப்போதும் இனி திரும்பாத வயதிலிருந்து

நரைக்கக்கூடிய கனவில்

அவள் அதே இளமையோடு கண் சிமிட்டுகிறாள்

அவள் என் ஆத்ம பந்தம்

நான் மரணிக்கும்வரை அவளைப் பற்றி நினைவுகூறுவேன்

இதயம் கனக்கும் ஒருபாடு துக்கத்தோடு

தூக்கிச் சுமக்கும் ஒரு காலாவதியை

அவளைப்போல் இந்த பிரபஞ்சமும் அறியும்

நான் அதில் கடைசி சாதாரணக்காரனாய்

வழிநெடுக பயணித்துக் கொண்டிருக்கிறேன்

இந்த பூமி மண்ணில் அலைவுறும்

கோடிக்கோடி புழுதி படிந்த கால்களோடு

சினேகத்தின் சங்கிலிகொண்டு கண்ணுக்குப் புலப்படாத வளையத்தில்

பூட்டப்பட்ட என் ஒரு ஜோடி பாதங்கள்

அவள் தெருவை கடக்கும்போது என் நினைவில்

அவள் ஒரு தேங்காய் பூ போல் சிரித்துக் கிடந்தாள்”

அணுஅணுவாகக் காதலில் கலந்து மொழியும் இக்கவிதை

“அணு அணுவாய்ச் சாவதற்கு முடிவெடுத்த பிறகு காதல் சரியான வழிதான்” என்ற அறிவுமதி கவிதையை நினைவில் கொண்டு வருகிறது.

காதல் கொள்ளும் வயதில் வயிற்றுப் பாட்டோடு வீட்டுச் சூழலால் கட்டுண்டு போராடிக் கொண்டிருக்கும் மனித உயிரின் பிந்தைய வாழ்வியல் நிலை நினைவிலும் கனவிலுமாக இறந்த காலத்தை சிரிக்கக் செய்து கலங்கி சமாதானம் கொள்ள நினைக்கிறது.

“அது பொதுக்கழிப்பிடம்

மனிதக் கூட்டங்கள் சில்லறைக் கொடுத்து

வரிசையில் நிற்கிறார்கள்

இங்கு அறத்தை மீறுபவர்கள் கொடிய நரகத்திற்குள்

மலம் கழிக்க அலையப் போகிறார்கள்

நான் காத்திருக்கிறேன் அடிவயிற்றைப் பிடித்திழுக்கும் வலி

ஒருவன் கழிவறை கதவைத் திறந்து வெளியேறுகிறான்

நான் அவசரமாக அரைப்பகுதி திறந்த கதவை

உள்ளே தள்ளி நுழைய ஆவேசப்படுகிறேன்

அது என்னை வெளியே தள்ளியது

மீண்டும் கதவை உள்ளே தள்ளுகிறேன்

ஏதோவொன்று என்னை வெளியேற்றி உள்ளே தாழடைகின்றது

கோபம் தலைக்கேறியது…..

நான் வேகமாக திரும்ப முயற்சித்தேன்

அவன் என்னை முழுமையாய் ஒரு பார்வை பார்த்தான்.

நான் ஒரு வளர்ந்த ஆண்குறியென

உருமாறத்தொடங்கியிருந்தேன்”

நகர வாழ்வியலின் நெருக்கடியை சாமானியர் பார்வையில் மிக மிக விலாவரியாக எடுத்துரைக்கும் கவிதை. ஜனசந்தடியும் அசுத்தமும் நாற்றமும் கண் முன் நிழலாடுகிறது. கழிவறைச் செல்ல முடுக்கும் அவசர நிலையில் தடுக்கப்படும், காத்திருக்க வைக்கப்படும் ஆண் நிலையின் அதீதத்தை கவிதையின் இறுதிவரி கல் வரியெனப் பதிக்கிறது.

“காதுகளின் கால்கள் அடுக்களையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தது மூக்கின் கால்கள் வியர்த்து பால்கனிக்கு சென்று கொண்டிருந்தது

கைகால்களின் விரல்கள்கொண்டு

வாய்கால்நாவின் அன்னம் நனைந்து

கொப்பளித்தபோது மதுவின் வீச்சம்

அறையெங்கும் நாறிப்போனது பிறகு அடிவயிற்றின் கால்கள்வரை

குதிகால்கள் எம்பிக்குதித்து தும்பி நின்றது

வயது முதிர்ந்த கண்கால்களிலிருந்து

கண்ணீர் கசிய

தலைகால் தெறிக்க ஓடியது

என் காலென்பதாக நீங்கள் கற்பித்துக்கொண்டால்

அதற்கு நான் பொறுப்பல்ல”

இக் கவிதை வீட்டின் வரவேற்நறையில் அமர்ந்திருக்கும் ஒருவர் மேற்கண்ட செயல்ககளை கற்பனை செய்து இறுதியில் வெளியேறி ஓடுவதாக எண்ணத்தில் கொண்டு வருகிறது.‌ காது மூக்கு கண் வாய் வயிறு தலை என அனைத்து உறுப்புகளிலும் கால்ககளைப் பொறுத்தி தெறித்து ஓடச் செய்கையில் நம் கால்கள் பற்பலவாகிவிடும் போலிருக்கிறது.

ஆத்மா நாமின்

“நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் என்பது

தெரியாமலே இருக்கிறேன்.

நான் இருப்பதைத்

தெரிந்துகொண்டபோது

நானும்நானும் இருந்தோம்.

உண்மையான நானும்

உண்மை போன்ற நானும்

பேசிப்பேசி

உண்மை போன்ற நானாய்

நானாகிவிட்டேன்.

உண்மையான நான்

அவ்வப்போது ஆவேன்

உண்மை போன்ற நான்

மறைந்திருக்கையில்

உண்மை போன்ற நான்

இல்லவேயில்லை என்று

உண்மையான நான் சொல்லும்

சரி என்று

உண்மை போன்ற நான்

ஆமோதிக்கும்.

இதனைக் கவனித்த நான்

உண்மையான நானும் இல்லை

உண்மை போன்ற நானும் இல்லை.

நான் மட்டும் இருக்கிறேன்

என்றுணர்ந்தேன்.

நான் மட்டும் இருக்கையில்

அமைதியாய் இருந்தது.

அமைதியாய் இருப்பதை

உணர்ந்ததும்

நான் வேறு ஆகி விட்டேன்.

நானும் வேறான நானும் பொய்.

நான் இல்லை. “

என்னும் கவிதை கவிஞரின் பல உறுப்புகளிலும் முளைத்துலிட்ட கால்கள் கவிதையைப் போன்று ‘நானும் போய் நான் இல்லை’ என்று வந்தச் சொல்லே வந்து வேறு வேறு பொருளைத் தரும் தன்மையை ஒப்பிட வைக்கிறது.

“இந்த இலையுதிர்கால காற்றில் அரசமர தலைசிலிர்ப்பில்

சில இலட்சங்கிளையிலை உதிர்ந்து

அலையலையென நீந்தி

அதனதன் உரு நிழலில்

வீழ்ந்துகொண்டிருக்கிற கணத்தை

வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு

ஒரு சாக்லேட் முத்தம் ஒன்றையாவது கொடுத்திருக்கலாம்”

உதிரலும் துளிர்தலும் இயல்பெனவே ஆனாலும் மனித மனம் அதனதன் போக்கில் உணர்வுகளில் ஆட்கொண்டு நிகழ் வாழ்வைக் கழிக்கிறது. குளிர் காலத்திற்கு முந்தைய இலையுதிர் கால நிலையை மனிதர்கள் தம் வாழ்விலும் இயற்கையின் மாற்றத்திலும் விரைவாகக் கடந்துவர நினைப்பர். அகண்டு நீண்டு பருத்திருக்கும் அரச மரத்தின் இலையுதிர்வையும் ரசிக்கும் பால்யத்தின் வெள்ளை மனதிற்கு இனிப்பு கொடுக்காமல் வந்து விட்ட கவிஞ மனது முத்திடலாவது அளித்திருக்கலாம் என்று ஏங்குகிறது.

“மண்டைக்குள் மூளை நரம்புகள் வெதுவெதுப்பான திரவத்தில் வழுவழுப்போடு மிதந்து நெளிகிறது

புழுப்போல் ஊறி நகருவது சாம்பல்நிற மடிப்பசு அறைகளுக்குள்ளிருந்து

கசகச கணத்திற்குள் சாவடி அடிக்கின்றன

பால்யத்தின் பசியத்தெருக்களில் சுருண்டு படுத்திருக்கிறேன். குடலுக்குள்ளும் நிறையநிறைய பெருந்தீனிப் பசி

இந்த மதியத்தை அறவே வெறுக்கிறேன்”

உயிர்களை ஆட்டுவிக்கும் பசி உணர்வை பாடாத கவிஞர்கள் வெகு குறைவு. பசியை நினைக்கையில் பாரதியின் பிரசித்தி பெற்ற “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்

இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” வரிகள் நினைவில் வராமல் போகாது  கவிஞர் பசியில் தன் உடலைத் தானே தின்பது போல் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை எல்லாம் கூர்ந்து கவனித்து வெளிப்படுத்துவதை அறிய முடிகிறது.

இத்தொகுப்பில்

1. விளிம்பு நிலை மனிதர்களின் பிரதி ஒருவர் நடமாடுகிறார் .

2. காதலின் மயக்கத்தை நறுமணத்தை வாஞ்சையை விரும்பும் அன்பு மனிதர் வருகிறார்.

3. துயர் மிகையில் தனித்து எல்லாவற்றிலும் இருந்து தள்ளிப் போய் அகோரி போல் ஆடும் கெளபீன மனிதன் ஒருவன் இருக்கிறான்.

துயர் மிக்க தொகுப்பினுள் ஒரு மகிழ் உணர்வு கவிதையுமே இல்லை அல்லது எனக்கு எந்தக் கவிதையும் ஆனந்தமானதாகத் தோன்றவில்லை. தொல்காப்பியம் அவலச்சுவையை

 ‘‘இழிவே, இழவே அசைவே வறுமையென’

என நான்காகக் கூறுகிறது. இந்நான்குமே இத்தொகுப்பில் கையாளப்பட்டுள்ளது.

பிறழ்தலும் பிசகுதலும் அதிகம் நடக்கிறது.

 ஒளிச்சம் போன்ற தொடர்‌ புழக்கமில்லாதச் சொற்கள் ஒன்றிரண்டு இடத்தில் வருகிறது. இரண்டு பக்கங்களுக்கு நீளும் கவிதைகள்  அயர்ச்சியூட்டுகின்றன. உணர்வுகளைச் சாறெடுத்து நயமுடன் சமயங்களில் பசும் மாமிசம் போல் ஊன் நாற்றத்தைச் சொற்களாக்கும் கவிஞர்

இன்னும் அதிகமதிகம் கவிதைகள் புனைந்து நூல்கள் வெளிக்கொண்டு வர வேண்டும். வாழ்த்துகள்.

*

பெயர்   :  ததா கதா

வகைமை: கவிதை

ஆசிரியர் : அனாமிகா

வெளியீடு: சால்ட் பதிப்பகம் 2025

அகராதி

இயற்பெயர் கவிதா. அகராதி என்னும் பெயரில் படைப்புகள் எழுதி வருகிறார். ஊர் திருச்சி. தற்காலிக வசிப்பிடம் சென்னை.

இரண்டு சிறுகதைத் தொகுப்பு ஒரு கவிதை நூல் ஒரு குறுநாவல் தொகுப்பு வெளி வந்திருக்கின்றன. தொடர்ந்து இவரது படைப்புகள் இலக்கிய இதழ்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *