நீங்கள் அடிக்கும் ஆணிகள்
தரம் மிக்கவைகள் தான்.
மிக நேர்த்தியாக இறங்குகிறது.
அதுசரி..
இதுவரை
எத்தனைப் பேரை சிலுவையில் ஏற்றிருக்கிறீர்கள்.
***
உயிர் பிரியப்போகும்
அந்த ஒரு ஆணியை அடிப்பவருக்கு என்னுடைய
ஒட்டுமொத்த நன்றியையும்
அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏனென்றால்
அவரே என்மேல்
அதீத கருணை கொண்டவர்.
***
முள் முடி ஆணி
ஒரே விளாசலில்
தோல் உரிக்கும் சாட்டை
ஏந்தி வர பாரக் கட்டை என எல்லாமுடனும்
நானும் தயார்.
என்னிடம் இருந்து உங்களை நோக்கி
ஒரேயொரு வேண்டுகோள்தான்.
முந்திக்கொண்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்திவிடாதீர்கள்
****
உங்களின் கைகளை
கறைப்படுத்திக்கொள்ள வேண்டாம் தயவுசெய்து
அந்த சுத்தியலை என்னிடமே கொடுங்கள்
***
நீங்கள் திருப்தியடையாவிட்டால் கவலைப்படாதீர்கள்
நான் இறந்தப் பின்பும்
என் உடல் இங்கேதான் கிடத்தப்பட்டிருக்கும்
இன்னும் கொஞ்சம்
சிதைத்துப் பாருங்கள்
***
எல்லாம் முடிந்துவிட்டதென்று அவசரப்பட்டு
என் உடலைப் புதைத்து விடாதீர்கள்
பாவம் உங்களின் மாமிசம் உண்ணும்
செல்லப் பிராணிகள்
***
எறி கற்கள் தீர்ந்துவிட்டதே
என்று கவலைப்படாதீர்கள்
வந்த வழியில் என்னுடைய
பற்கள் சிதறிக் கிடக்கிறது
***
எனக்கு ஓர் உயிரும் தலையும் உடலும்
இரு கைகளும் கால்களும் மட்டுமே உள்ளது
பாவம் நீங்கள் துரதிஷ்டசாலிகள்
***
கைகள் வலிக்க சோர்வுற்று தொண்டை வறண்டால்
கவலை வேண்டாம் தண்ணீர் அருந்தி
சற்று இளைப்பாறுங்கள்
உங்களுக்காக இன்னும் கொஞ்ச நேரம்
என்னுயிரை இந்த உடலில்
பிடித்து வைத்துக்கொள்கிறேன்.
***
தயவு செய்து உங்களின் குழந்தைகளை
இந்த இடம்விட்டு அனுப்பிவிடுங்கள்
நாளை இதே வேடிக்கைக்கு
இல்லாமல் போகப்போகும் என்னைத் தேடுவார்கள்.
***
நீங்கள் எனக்கு எதிராக
எதையும் நிரூபிக்க அவசியமில்லை
ஏனென்றால்
நீங்கள் அடித்துக் கொல்லத்தான் என்னுடைய
இந்தப் பிறவி
000

ரிஸ்வான் ராஜா
சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.