டாக்டரிடமிருந்து அந்த சொல்லை கேட்டப் பிறகுதான்  இராஜேஸ்வரிக்கு உயிரே வந்தது. அதுவரை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை ஒருவித நடுக்கம் பரவியிருந்தது. வானத்துக்கும்,பூமிக்கும் குதிக்கணும்போல இருந்தது இராஜேஸ்வரிக்கு. ஒருவேளை எதிரே டாக்டர், செவிலியர் இல்லையென்றால் கண்டிப்பாக குதித்திருப்பாள். தனது ஏழுவருஷ கனவு நனவாகியிருப்பதை நினைத்து மனதெங்கும் பரவசம் படரத்தொடங்கியது.

              ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தவுடனே கணவன், மாமியார், நாத்தனார், அம்மா, அப்பா ,அக்கா ..இன்னும் தன் போனில் பதிந்த நம்பர்களில் யாராருக்கோ போன் பண்ணி இந்த விஷயத்தை சொல்லி, சொல்லி நாக்கு தேய்ந்துவிட்டது. இப்ப மட்டும் அவரு பக்கத்தில இருந்தாருனா..என்னை  தலையில தூக்கிவச்சு கொண்டாடிருப்பாரு.. என நினைத்துக்கொண்டே போனை எடுத்தாள்.

                  தான் தாய்மையடைந்த விஷயத்தை கணவனுக்கு போனில் சொன்னவுடனே , கணவன் தன்னை அன்போடு கொஞ்சியதை நினைத்து அவள் லேசாக சிரித்துக்கொண்டாள். பிறகு சாலையில் செல்வோர் யாராவது ,என்ன இந்தப்பொண்ணு தனியாக சிரித்துக்கொண்டு போகுது என்று நினைத்துவிடுவார்களோ, என்று எண்ணி கைக்குட்டையால் தன் முகத்தை துடைப்பது மாதிரி பொத்திக்கொண்டாள். ஆனாலும் கணவன் போனில் கொஞ்சியது. ‘உம், உம் ‘மென்று முத்தம் கொடுத்தது என எல்லாமே அவள் மனதை குளிரச் செய்தது. கணவன் நினைவில் தன் வயிற்றுக்குள் முளைவிட்டிருக்கும் குழந்தையை தடவிப்பார்த்தாள். இனம்புரியாத சந்தோஷம் மனதெங்கும் படரத் தொடங்கியது.

                  இந்த  விஷயத்தைக்கேட்டு தன் கணவனுக்குப்பிறகு அதிக சந்தோஷப்பட்டிருப்பது தன் அப்பா, அம்மாவாகதான் இருக்க முடியும். மற்றவர்கள் ஏனோதானோ என ஒரு செய்தியாகதான் கேட்டிருப்பார்கள். சிலபேரு “இவ தாயாகிட்டா இனி என்ன கொற சொல்லி இவள திட்ட முடியும்” எனக்கூட நினைத்திருப்பார்கள் என ஏதோதோ நினைப்பு இராஜேஸ்வரியின் நினைவில் ஓடியது. குழந்தை இல்லாமல் தான் ஏழுவருடம் பட்ட அவஸ்தை, அந்தக்குறையை தன்னுடன் பழகியவர்கள் சொல் செயல் மூலம் வெளிப்படுத்திய விதம்,அதன்மூலம் ஒவ்வொருவரின் குணத்தைப்பற்றி அவள் ஆராய்ந்து பார்த்தது,என எல்லாமே அவள் மனதினுள் சிலநொடி பளிச்சிட்டது. அந்த நொடியில் மனிதப்பிறவிகள் என்றாலே பிழையானதுதான் நினைத்துக்கொண்டாள்.

       அவள் மனம் சொல்வது உண்மைதான். மனிதப்பிறவிகள் எப்போதும் பிழையுடன்தான் இருக்கும். அந்தப்பிழைகள் அற்பமான சொல், செயல் மூலம் வெளிப்படும். மனிதப்பிறவிகள் தான் செய்யும் பிழைக்கு பிரயாசித்தம் தேடுவதற்குதான் மதம், கடவுள்வழிபாடு என ஏதேதோ ஏற்படுத்தி…. மனிதப்பிறவிகளில் ஏற்ப்படும் பிழை எல்லாத்திற்கும் வேர், மனம்தான். மனம் இருக்கும் வரை மனிதம் முழுமையடைவதில்லை.

            ஏதேதோ நினைப்பில் முன், பின் வரும் பைக், கார், பஸ் இன்னும் என்னென்னமோ அவள் கண்ணில் படவில்லை. அவளின் பெயரைச் சொல்லி யார் அழைத்தாலும் திரும்பிப்பார்த்திருக்கமாட்டாள். சுயநினைவை இழந்து மகிழ்ச்சியில் நீந்தியே நடந்து வந்தாள். தன்னிலைக்கு வந்தபோது , அவள் வணங்கவேண்டிய முருகன் கோவிலை கடந்து வந்திருப்பதை புரிந்து கண்டாள். ‘ச்சீ, ஏதோ நினைப்புல முருகன் கோவில கடந்து வந்துட்டமே,திரும்பி கோவிலுக்கு போவமா, இல்ல இன்னொரு நாளைக்கு போவமா … என்ற யோசனையில் நின்றவள், சட்டென்று திரும்பி கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். “முருகா, ஆண்பிள்ளையோ, பெண்பிள்ளையோ எதுவேணாலும் கொடு ஏத்துக்கிறேன் .உன்னால சொகப்பிரவசமா பெத்துக்கிறணும் முருகா..” என அவள் உதடு முனுமுனுத்துக்கொண்டே இருந்தது. கோவில் அருகே சென்றதும், கோபுரத்தைப் பார்த்து அவள் கண்ணில் கண்ணீர் சொட்டத் தொடங்கியது.

             கோவிலில் இருந்து வெளியே வந்த அவள் , அப்சரா தியேட்டரை கடந்து தெற்கு நோக்கி நீளும் சாலையில் நடக்கத் தொடங்கினாள். பலதடவை செக்கப்க்காக ஆஸ்பத்திரிக்கு வந்து , டாக்டரிடமிருந்து எதிர்மறையான செய்தியை கேட்டுவிட்டு மனம்நொந்து , பிறகு கணவனின் ஆறுதலுடன் இந்த சாலையில் எத்தனையோ தடவை நடந்து வந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. “நமக்கென்ன குழந்தை பெறக்காமலா போயிரும்..? நீயெதுக்கு அழுகிற..! என்று அடிக்கடி கணவன் சொன்ன வார்த்தை இன்று நிஜமானதை நினைத்து கண்கலங்கினாள். நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள். இப்படிப்பட்ட கணவன் யாருக்குதான் அமையும். என ஒவ்வொன்றாய் நினைக்க, நினைக்க அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

இத்தனை அடர்த்தியான நினைவுக்குள்ளும்,அவளின் கண்கள் சாலையின் ஓரம் பொம்மைக்கடைகள் எங்கேயாவது இருக்கிறாவென்று துலாவிக்கொண்டே வந்தது. வீட்டில் இதற்குமுன் தனக்குப்பிறக்கப்போகும் குழந்தைக்கு எத்தனையோ பொம்மைகள் வாங்கி வைத்திருந்தாலும், இன்று ஏதாவது பொம்மை வாங்க வேண்டுமென்று அவள் மனது துடித்தது. அதனால் பொம்மைக்கு கடையை கவனித்துக்கொண்டே வந்தாள்.

சிவந்தி டெக்ஸ்டைல்ஸ் பக்கத்தில் உள்ள பொம்மைக்கடையில் தனக்கு விரும்பிய பொம்மையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். பிறர் பார்க்கும்படி பொம்மையை கையில் ஏந்திக்கொண்டு வருவது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம். நம் குல தெய்வத்தின் பெயர் நிறைபாண்டி, அப்ப  ‘நி’ லதான் பெயர் ஆரம்பிக்கவேண்டும். ‘ம்ம்ம்’ ஆம்பளப்புள்ள பொறந்தா நிலவரசன்..! பெண்பிள்ள பொறந்தா நிலவரசி..! ம்ஹீம் இதைவிட நல்ல பெயர்.. என அவள் சிந்தனை நீண்டது. மீண்டும் ஏதாவது பெயரை நினைக்க, அதைவிட வேற ஏதாவது நல்ல பேரு கிடைக்குமா என யோசிக்க, என அவளின் யோசனை நீண்டது சில நொடிகள். சட்டென்று கேட்ட ஏதோ வாகன அலாரத்தில் அவளின் யோசனை அறுந்தது. செல்வம் பேக்கரி கடை அருகே வந்துவிட்டோம் என்பதை அப்போதுதான் அவள் மனம் உணர்ந்தது. பேக்கரியை சிறிதுநேரம் கவனித்தவள், வழக்கம்போல வாங்கித்திண்ணும் புட்டிங் கேக்கை வாங்கித்திண்ணலாமா என்று யோசித்தவள், உருவாகியிருக்கும் சிசுவை தடவிப்பார்த்துவிட்டு, வேண்டாமென பழக்கடையை நோக்கி ஆரம்பித்தாள்.

பழக்கடையிலிருந்து தேவையானதை வாங்கிக்கொண்டு ,வெளியே வந்த நொடியில் கணவனுக்கு போன் பண்ண நினைத்தவள், பிறகு என்ன நினைத்தாளோ, பஸ்ஸில் ஏறிய பிறகு போன் பண்ணிக்கிருவோம் என்று நினைத்து போனை பர்ஸினுள் வைத்தாள்.

   வாங்கிய பொருள்களை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக்கொண்டு, பேருந்து வெளியேறும் வாசலின் வழியாக பேருந்து நிலையத்தினுள் நுழைந்தாள். பேருந்துகள் சத்தம், பயணிகளின் சத்தம், திருநங்கைகள் கைதட்டல் சத்தம், வெள்ளரி, நிலக்கடலை விற்பவர்கள் சத்தம்,மண்டவலி தைலம் விற்பவர்கள் சத்தம், இன்னும் ஏதேதோ விற்பவர்கள் சத்தம், இவளைப்போன்று ஏதோதோ காரணத்திற்காக வந்தவர்களின் சத்தம் என பேருந்து நிலையமே பரபரப்பாக இருந்தது. காலேஜ் தோழர்கள், அவங்கவங்க தோழிகளுடன் ஆங்காங்கே தென்பட்டார்கள். சில போலீஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் ரவுண்டஸ் வந்து கொண்டிருந்தார்கள். சில கடைகளிலிருந்து வெளிப்பட்ட சினிமாப்பாடல்கள் சிலரை முனுமுனுக்க வைத்தது.

தன் ஊரின் பஸ், பேருந்து நிலையத்தின் தெற்கு பக்கம் நிற்பதை பார்த்த இராஜேஸ்வரி  பஸ்ஸை நோக்கி நகர ஆரம்பித்தாள். தன் ஊருக்காரர்கள், தனக்கு தெரிந்தவர்கள் என எல்லோரையும் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, சில வார்த்தை பேசிவிட்டு ஜன்னலோர சீட்டைத்தேடிபோய் அமர்ந்து, முகத்தில் வடிந்த வியர்வையை சேலையின் முந்தானையால் துடைக்க ஆரம்பித்தாள். அப்போது மனமெங்கும் பல நினைவுகள் ஓடியது.

 “நேத்தா கல்யாணம் பண்ணி வந்தா, இவளுக்கு பின்னால கல்யாணம் பண்ணி வந்ததெல்லாம் ரெண்டு, மூனு பெத்திருச்சு. இது இன்னும் இப்படியே இருக்கு. பேசாம இவள அத்துவிட்டு வேறொருத்திய கட்டிக்கோ. நாங்களும் பேரன் பேத்திய பார்க்காம எத்தன நாளைக்குதான் இருக்கிறது.” என்று அத்தை அடிக்கடி சொல்வது அவளுக்கு ஞாபகம் வந்தது.

கலங்கிய கண்ணை துடைத்துக்கொண்டே , பஸ்ஸினுள் யாராவது கவனிக்கிறார்களா என்று பட்டும் படாமல் பார்த்துக்கொண்டே தூங்குவது மாதிரி கண்ணை மூடினாள்.

“இத்தன நாள் குழந்தை இல்லாத ஒரே காரணத்திற்காக அத்தை ஏன் இப்படி நடந்துக்கிட்டாங்க. அத்தை மட்டுமா அப்படி நடந்துக்கிட்டாங்க எல்லாமேதான்…! இவங்க எல்லாம் மத்த உயிர்களின் வலியை புரிந்துகொள்ளாத  பிறவிகள் ” என்று ஏதைதோ நினைப்பில் இருந்தவளை , யாரோ தட்டுவது மாதிரி இருந்தது. டக்கென்று விழித்துப்பார்த்தாள்.

எதிரே ஒரு திருநங்கை நின்றிருந்தாள். இராஜேஸ்வரிக்கு திடீரென்று ஆச்சரியம் திக்குமுக்காடச்செய்தது. இத்தனை நாள் எந்த திருநங்கை வந்தாலும் காசு கொடுத்துவிட்டு ஆசிர்வாதம் பெறும் இராஜேஸ்வரி. இன்று காசு கொடுக்காமல் அந்த திருநங்கையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். திருநங்கையும் அதே ஆச்சரியத்துடன்தான் இராஜேஸ்வரியை பார்த்தாள். “நீ, நீ “என்று இருவரின் குரலும் ஒரேமாதிரியான சொல்லைதான் உதிர்த்து.

  “நீ இராஜேஸ்வரிதான என்று திருநங்கை கேட்டு முடிப்பதற்குள். நீ முருகேசன்தான என்று இராஜேஸ்வரி கேட்ட கேள்விக்கு.. ஆமா என்று தலையாட்டினான் திருநங்கை முருகேசன். சிறிதுநேரம் ஆச்சரியம் கலந்த மௌனம் நிலவியது இருவருக்குள்ளும். பஸ்ஸினுள் இருப்பவர்கள் அனைவரும் இவர்களையே வேடிக்கை பார்த்தார்கள். இராஜேஸ்வரியின் கண்ணிலும், திருநங்கையான முருகேசன் கண்ணிலும் கண்ணீர் கசிந்தது.

பள்ளிக்கூடம் படிக்கும்போது இராஜேஸ்வரி முருகேசனை காதலித்தது, அவனோடு விளையாடியது, ஆண்டுவிழா மாறுவேட போட்டியில் முருகேசன் திருநங்கை வேசம் போட்டது என ஒவ்வொன்றாய் அவள் ஞாபகத்தில் வந்துபோனது. முருகேசன் பள்ளி நாட்களில் போட்ட திருநங்கை வேடம் அவனின் உண்மையான உள்ளுணர்வு என்று இராஜேஸ்வரிக்கு இப்போதுதான் புரிய ஆரம்பித்தது.

திருநங்கையான முருகேசனும் பள்ளி நாட்களில் பழகிய இராஜேஸ்வரியை நினைவு படுத்திக்கொண்டாள்.

முருகேசன் திருநங்கையாக மாறி வந்து எதிரே நின்றாலும், இராஜேஸ்வரியின் கண்களுக்கு பள்ளியில் பழகிய முருகேசனாகதான் தெரிந்தான். அதைத் தவிர்த்து வேறோரு வடிவமாக அவனை அவளின் மனது ஏற்க மறுத்தது. இராஜேஸ்வரியின் முதல்காதலன் முருகேசன் என்பதனால்கூட இருக்கலாம். இப்போது தன் கையை பிடித்து பேசுவது திருநங்கை என்பதையும் மறந்து , பள்ளிக்கூட முருகேசன் என்பதனால் கூச்சமும், நாணமும் இராஜேஸ்வரியை புல்லரிக்கச் செய்தது. கையைப்பிடித்திருந்த திருநங்கையான முருகேசனைப் பார்த்து “நல்லாயிருக்கயா” என்றாள் இராஜேஸ்வரி. “நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க?” என்றான் திருநங்கை முருகேசன். “நான் நல்லாயிருக்கேன் ” என்றாள். இருவருக்குள்ளும் சிறிது நேரம் மௌனம் நிலவியது.

இராஜேஸ்வரி தன் பொருட்களை எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கினாள். “ஏய் இந்த பஸ்ல ஊருக்கு போகலயா?” என்றாள் திருநங்கை முருகேசன். “போகல “என்றாள் இராஜேஸ்வரி. பஸ்ஸினுள் இருந்த அனைவரும், இவர்களையே வேடிக்கை ஆச்சரியமாக பார்த்தார்கள். பின்னாடியே இறங்கினான் திருநங்கை முருகேசன்.

இராஜேஸ்வரி தன்னுடன் பள்ளியில் படித்த பலபேரை கால இடைவெளியில் சந்தித்து இருந்தாலும், இந்தமாதிரி திடீரென்று ஆச்சரிம் தந்தது யாருமில்லை. இராஜேஸ்வரி பேருந்து நிலையத்தினுள் எங்கே பெஞ்ச் காலியாக இருக்கிறது என்று கவனித்துக்கொண்டே நடந்தாள். அவள் பின்னாடியே திருநங்கை முருகேசன் போனாள். பேருந்து நிலையத்தினுள் இருப்பவர்கள் எல்லோரும் இவர்களையே வேடிக்கை பார்த்தார்கள். அந்த நொடியில் கொஞ்சம் கூச்சமாக இருந்தது இராஜேஸ்வரிக்கு. பிறகு இதனால என்ன என்று கூச்சத்தை உதறினாள்.

இருவரும் பக்கத்து பக்கத்து பெஞ்சில் அமர்ந்தபிறகு கொஞ்ச நேரம் கூச்சம் நிலவியது. அங்கிட்டும் இங்கிட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே “ஒன்ன பார்ப்பேனு எதிரே பார்க்கல. ” என்றாள் திருநங்கை முருகேசன். அதற்கு இராஜேஸ்வரி சிரித்துக்கொண்டாள். “என்னை  என் உறவுக்காருங்க யாரு பார்த்தாலும் , ஓடிப்போய் ஒழிஞ்சிக்கிருவாங்க, இல்லேனா என்னை ஏதோ மனிதப்பிறவியே இல்லாத மாதிரி பார்ப்பாங்க- அப்ப எனக்கு அழுகையா வரும்” என்று திருநங்கை சொல்லி முடிப்பதற்குள் அழுதுவிட்டான். முருகேசன் அழுகையை பார்ப்பதற்கு இராஜேஸ்வரிக்கு என்னவோ போலிருந்தது. “சரி, சரி அழுகாத எல்லோரும் நம்மளயே பார்க்கிறாங்க” என்று  சொல்லிக்கொண்டே முருகேசன் கண்ணீரைத் துடைத்தாள் இராஜேஸ்வரி. கண்ணீரோடு முகத்தில் பூசிய மஞ்சள், பவுடர் என எல்லாமே கரைந்து வந்தது.

 “நான் திருநங்கைனு உணர்ந்ததுமே , என்னால வீட்ல முழுசா மறைக்க முடியல .இப்படிப்பட்ட புள்ளைய பெத்ததனால ஊருக்குள்ள தலை நிமிர்ந்து நடக்க முடியலன்னு என் வீட்டுக்குள்ளேயே பேசுனாங்க. ஊருக்குள்ளயும் என்ன ரெம்ப பேரு கேலி பண்ண ஆரம்பிச்சாங்க. கொஞ்சநாள்ல வீட்ல என்னை ஏதோ பிழையான பிறவிமாதிரி பார்க்க ஆரம்பிச்சாங்க. ஒருகட்டத்தில் எங்க அப்பாவே என்ன தரக்குறவா பேச ஆரம்பிச்சாட்டாரு. நான் அதை தாங்க முடியாம வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். இப்ப பெத்தவங்க ,சொந்தம், பந்தம் எல்லோரும் இருந்தும் நான் அனாதைதான் ” என்றாள் திருநங்கை முருகேசன். அப்போது முருகேசன் குரல் தளதளத்தது. அப்போது இராஜேஸ்வரிக்கு என்னவோ போலிருந்தது.

“எங்க அப்பா, அம்மாகிட்ட ஏதோ குறை இருக்கிறதனாலதானா நான் இப்படி திருநங்கையா பெறந்திருக்கிறேன். என்னைப்பெத்தது அசிங்கம்னு சொல்றாங்க என் அப்பா, அம்மா. என் பிறப்பு வெறும் கிளைனா, என் அப்பா, அம்மாதானா என் பிறப்புக்கு வேர். அப்ப வேர்லதான ஏதோ பிரச்சனை. என் அப்பா, அம்மா என்னை எதுக்கு அசிங்கம்னு சொல்லணும்.அவங்க எனக்கு அப்பா,அம்மாவா வாய்ச்சதுக்கு நான்தான் அசிங்கப்படணும் ” என்று திருநங்கை முருகேசன் சொல்லிமுடிக்கும்போது  ,நியாயமாய் பட்டது இராஜேஸ்வரிக்கு.

       வேடிக்கை பார்த்த சிலர்  திருநங்கை முருகேசன் பேச்சை கேட்டு பெரிய இவமாதிரி பேசுறா ரெண்டாகெட்டான் பிறவி என நினைத்துக்கொண்டார்கள்.

         “சரி, உன்னைப்பத்தி சொல்லவே இல்லையே” என்று கண்ணைத் துடைத்துக்கொண்டே இராஜேஸ்வரியைப் பார்த்து கேட்டாள் திருநங்கை முருகேசன். அவள் கேட்ட மறுநொடியே பள்ளிக்கூட படிப்பை ஏன் பாதியில் நிறுத்தினேன் என்பதில் ஆரம்பித்து, கல்யாணம் முடிந்து, குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டது , நீண்ட நாளுக்குப்பிறகு  தாய்மையடைந்து இப்போது ஆஸ்பத்திரிக்கு செக்கப்புக்காக வந்ததுவரை  என ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் இராஜேஸ்வரி.  

   சில நொடிகளுக்குப் பிறகு “உன் வீட்டுக்காரர் வரலயா ஆஸ்பத்திரிக்கு” என்றாள் திருநங்கை முருகேசன்.

 “அவர் வரல”

“ஏன்”

“வேலைக்கு போயிட்டார்.அவருக்கு சர்ப்பிரைஸ்ஸா இருக்குனும்தான் நானா வந்தேன் “

“அவருக்குபோன் பண்ணி சொல்லிட்டயா..”

“ம்”

 கொஞ்சம் நேர அமைதிக்குப்பின்  திடீரென்று  “சரி சாமிகிட்ட என்ன புள்ள வேணும்னு வேண்டிக்கிவ” என்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டாள் திருநங்கை முருகேசன்.

“எந்தபுள்ள பிறந்தாளும், புள்ள, புள்ளதான” என்றாள் இராஜேஸ்வரி .

“சும்மா சொல்லு எந்தபுள்ள வேண்டுவ “என்றாள் திருநங்கை.

“பெரும்பாலும் ஆம்பளப்புள்ள வேணும்னு வேண்டுவேன். சில நேரம் பொம்பளப்புள்ள வேணும்னு வேண்டுவேன் ” என்றாள் இராஜேஸ்வரி.

திடீரென்று இராஜேஸ்வரியைப்பார்த்து “நீ என்னைக்காவது என்னைப்போல, அதாவது திருநங்கைபோல புள்ள வேணும்னு வேண்டிருக்கியா…. இல்ல இனி வேண்டுவயா..?” என்றாள் திருநங்கை முருகேசன். பலபேர் முன்னாடி இப்படி கேட்பது இராஜேஸ்வரிக்கு கோபத்தை உண்டாக்கியது. மறுநொடியே அவன் கேட்பதில் என்ன தவறு இருக்கு. திருநங்கைகளும் ஒரு பிறப்புதானே என சமாதானம் செய்துகொண்டாள் இராஜேஸ்வரி -ஆனால் அது உண்மையான சமாதானமா என உறுதியாக சொல்ல முடியாது.

“ஏய்.. நான் சும்மா விளையாட்டுக்காக அப்படிக் கேட்டேன்..நீ தப்பா நினைச்சக்காத” என்றாள் திருநங்கை முருகேசன். அதற்கு “சரி இருக்கட்டும் இதனால என்னயிருக்கு ..” என இராஜேஸ்வரி லேசாக சிரித்தாள் -ஆனால் அச்சிரிப்பு கூமுட்டையாய் இருந்தது

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *