– லூயிஸ் க்ளக்

தமிழில் – இல. சுபத்ரா

000

அம்மாவின் வாழ்க்கை முழுவதும், அப்பா

அவளைக் கட்டுப்படுத்தியபடியே இருந்தார்

என்றே தோன்றுகிறது.

கணுக்காலில் பிணைக்கப்பட்ட ஈயம் போல.

அவள்

உற்சாகம் பொங்கும் இயல்புடையவளாய் இருந்தாள்;

பயணிக்க விரும்பினாள்,

அரங்குகளுக்கு, அருங்காட்சியகங்களுக்கு.

அவரோ

முகத்தை டைம்ஸால்(Times) மூடியபடி

மெத்தையில் படுத்திருக்கவே விரும்பினார்,

மரணம் வரும்போது

பெரிய மாறுதல் ஒன்றும் தோன்றாதபடி.

இதுபோன்ற இணையரில்

இணைந்து செயலாற்ற வேண்டிய

ஒப்பந்ததாரர்களில்,

உற்சாகம் மிக்கவர்தான்

பணிகிறார், விட்டுக்கொடுக்கிறார்.

கண்களையே திறக்காத ஒருவருடன்

அருங்காட்சியகத்திற்குச் செல்லமுடியாதில்லையா.

அப்பாவின் மரணம் அம்மாவிற்குச் சுதந்திரமளிக்குமென

நினைத்தேன்.

ஒரு வகையில் அது நிகழ்ந்ததுதான்:

அவள் பயணிக்கிறாள், மகத்தான கலைகளைக்

காணுகிறாள். ஆனால் அவள் மிதக்கிறாள்.

பிடியை விடுத்த அடுத்த நிமிடத்தில்

காணாமலாகிவிடுகிற ஒரு குழந்தையின் பலூனைப் போல.

அல்லது, விண்கலத்திலிருந்து தவறி

வானில் மிதக்கிற ஒரு வானியலாளன் போல

எவ்வளவு காலமாயினும் வாழ்வில் எஞ்சியிருப்பது

இது ஒன்றே என அறிந்திருக்கிறாள்:

அந்த வகையில் அவள்

சுதந்திரமானவள்தான்.

புவியுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி.

000

இல. சுபத்ரா

அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவல் மொழிபெயர்ப்பு, ‘அது உனது ரகசியம் மட்டுமல்ல’ சிறுகதைகள் தொகுப்பு மொழிபெயர்ப்பு மற்றும் அனா பர்னஸ்ஸின் ‘ஆயன்’ நாவல் மொழிபெயர்ப்பு என மூன்று நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. . பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “புதிய உலகம்

  1. மிகவும் அருமையான கவிதை மொழிபெயர்ப்பு , வாழ்த்துகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *