“அப்பா எனக்கு கண்டிப்பா வாட்ச் வேணும்பா”
“டேய் உனக்கு இதுவரைக்கும் அப்பா எத்தனை வாட்ச் வாங்கிக் கொடுத்திருக்கேன் ? “
“அப்பா மூனு வாட்ச் வாங்கிக் கொடுத்து இருக்கீங்க”
“சரி இப்போ நீ எத்தனை வாட்ச் வச்சிருக்க? “
“அப்பா எல்லா வாட்சும் உடைஞ்சு போச்சுப் பா “
“வாங்கி கொடுத்த ஒரு வாட்ச் கூட நீ இதுவரை பத்திரமா வைக்கவே இல்லை தானே ? “
“…..”
“பிறகு திரும்பத் திரும்ப ஏண்டா வாட்ச் கேக்குற?”
“அப்பா நீங்க இதுவரைக்கும் முப்பது ரூபாய் நாற்பது ரூபாய் வாட்ச் தான் வாங்கி கொடுத்து இருக்கீங்க. அது எல்லாமே கை கழுவும் போது தண்ணீர் பட்டு வேஸ்ட்டா போகுதுப்பா. ரிப்பேர் ஆகி திரும்ப ஓட மாட்டேங்குது அதனால என்ன பண்ணுங்க காஸ்ட்லியான வாட்ச் வாங்கி தாங்கப்பா”
“டேய் வாட்ச் எல்லாம் வாங்கி தர முடியாது அப்பாகிட்ட காசு இல்ல வேணா ஒன்னு பண்றேன் சம்பளம் போட்டப் பிறகு உனக்கு வாட்ச் வாங்கி தரேன்”
“அதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாது எனக்கு இன்னைக்கு வாட்ச் வாங்கி தரணும் அப்பா”
வீட்டிற்கு மளிகை சாமான் வேற வாங்க வேண்டியது இருந்துச்சு.
“கொஞ்சம் சுக்கு, சோப்பு எல்லாம் குடுங்க “
“ஒரு நல்ல பவுடர் வேணும்”
“என்னங்க கோகுல் சாண்டல் வாங்குங்க” என்றாள் மனைவி
“கோகுல் சாண்டல் எல்லாம் வேண்டாம்”
“பாண்ட்ஸ் பவுடர் கொடுங்களேன்”
“இல்ல இல்ல கொஞ்சம் எல்லா பவுடரையும் எடுத்துட்டு வாங்க”
பணியாளர் எல்லா பவுடரையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.
அவர்களது பூக்களின் கைகளில் பான்ஸ் இசட் கோகுல் சாண்டல் இன்னும் இதில் பலப் பவுடர்கள் மணக்கிறது. கடை முதலாளி பார்த்துவிட்டு இதுவும் நல்ல ஐடியா தான் என்கிறார்.
“சரின்ணா இந்த கோகுல் சாண்டல் வும் இசட் வும் இருக்கட்டும்”
“இசட் பவுடர் வேண்டாம் என கோகுல் சாண்டல் மட்டும் போதும்”
“அப்பா அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வேணும்பா”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் முட்டை பப்ஸ் வேண்டும் என்று கேட்ட”
“இல்லப்பா முட்ட பப்ஸ் வேண்டாம்பா”
“சாக்கோ பார் மட்டும் போதும்பா”
“இங்க பாரு சாகோபார் நாற்பது ரூபாய்,ஐம்பது ரூபாய் சொல்லுவாங்க
“அவ்வளவுக் காசு அப்பாட்ட இல்லைடா”
“அப்பா எனக்கு பத்து ரூபாய் ஐஸ் மட்டும் போதும்பா”
“….”
“ஆனா சாக்லேட் பிளவர் தான் வேணுப்பா”
“அப்போ உனக்கு வாட்ச் வேண்டாமா? “
“அப்பா எனக்கு வாட்ச் வேண்டாம் பா”
“எனக்கு ஐஸ்கிரீம் மட்டும் போதும்பா”
”வண்டி இங்கேயே நிக்கட்டும், நம்ம ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிட்டு வந்துரலாம்”,
”அண்ணே கப் ல சாக்லேட் ஐஸ்கிரீம் இருக்கா?”
”இல்லைங்க,வெண்ணிலா, ஸ்டாபெரி தான் இருக்கு”,
”டேய் கப் ல சாக்லேட் இல்லையாம், வெண்ணிலா வாங்கிலாமா?”
”சரிப்பா வெண்ணிலா வே வாங்கி தாங்கப்பா”
”சரிண்ணே வெண்ணிலா வே கொடுத்துருங்க”
இருபது ரூபாக் கொடுத்துட்டு வெளியே வரும் போது..
”அண்ணே முட்டை பப்ஸ் எவ்வளவு?”
”இருபது ரூபாய்”
”ரெண்டு முட்டை பப்ஸ் கொடுங்கன்னா”
வாங்கிட்டு வெளியே வந்ததும்,
”சரி வேற எதுவும் வாங்கனுமா?”
”ஆமாங்க முட்டை மட்டும் வாங்கனும்”
”சரி வாப் போகலாம்”
முட்டைக் கடையில் மொத்தமாக வாங்கினால் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் குறையும்.
அங்க முட்டை கடையில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார்கள்
“யப்பா முட்டை ஒரு அட்டை வாங்கட்டுமா ? “
“சரி வாங்கிக்கோ”
“காசு தாங்க”
இருநூறு ரூபாய் கை மாறுகிறது
திருப்ப மனைவி வந்து,
“ஏங்க அஞ்சு ரூபா இருந்தா கொடுங்க”
“இந்தா”
முட்டையை வாங்கியக் கையோடு நூற்றி அறுபது ரூபாய் கொண்டு வருகிறாள்
மனதில் கடவுள் நம் மேல் கரிசனையாய் இருக்கிறார், என மனதில் நினைக்கிறான். முட்டைக் கடையில் தெரியாமல் கூடுதலாகக் கொடுத்த அந்த நூறு ரூபாயை வீட்டுக்குக் கொண்டுப் போகலாம் என்று நினைக்கையில்,
“ஏங்க நாம கவனிக்காம அவங்கக் கொடுத்தப் பணத்தை வாங்கியிருந்தாக் கூடப் தப்பில்லைங்க, ஆனா இப்ப நமக்கே தெரியுது, இந்த நூறு ரூபாயை நாம வாங்கிட்டுப் போய் நமக்கு ஆயிரம் ரூபாய்க்கு தேவையில்லாம தெண்டச் செலவு வரும்”
”அதலாம் ஒன்னுமில்லை, அந்த ரூபாயைக் கொடு”
“வேண்டாங்க அவங்ககிட்டையேக் கொடுத்திடலாம்”
அவன் அரை மனசுடன் “உன் இஷ்டம் “
திருப்பி அந்த நூறு ரூபாயை முட்டைக் கடையில் கொடுக்கும் போது கடையில் இருந்த இரண்டு பேரும் சிரித்துக் கொண்டே வாங்குகிறார்கள்,
“ஏங்க அவங்க (முட்டைக் கடையில்) ஆதார் அட்டை, பான் கார்டு எல்லாம் தொலைச்ச்சிடாங்கலாம், அதைஎப்படி திருப்ப வாங்குவது என பேசிக் கொண்டே அந்த நூறு ரூபாயை கூடுதலாகக் கொடுத்திட்டாங்களாம்”
மனதில் இனி ஒவ்வொரு முட்டையும் சாப்பிடும் போது அந்த நூறு ரூபாய் நம்மளை ஒன்னும் பயமுறுத்தாது, சந்தோசமா சாப்பிடலாம் என்ற நினைப்பில் அந்த இரு சக்கர வாகனம் புதிய பாதையை நோக்கி ஸ்டார்ட் ஆனது,
000
இரா. மதிராஜ்
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத் தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .