ஆழ்கடலின் மௌனத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு அவ்வப்போது ஓசையிடும் சங்கினைப் போல் வாசகனைப் பாதிப்புக்குள்ளாக்கும் சிறுகதைகள் மனங்களின் ஆழத்தில் புதைந்து அவனைப் படுத்தியெடுக்கத் தொடங்கி விடுகின்றன. அவனைப் பெரும் மன அவஸ்தைக்கும் போராட்டத்திற்கும் இட்டுச் செல்லும் அக்கதைகளின் உள்ளடக்கம் அதுவரை சொல்ல முடியாத அல்லது சொல்லத் தயங்கிய பல்வேறு சுய அனுபவங்களை அவனுக்குள் விதையுறை கிழித்து முளைத்தெழும் விதைநெல்லைப் போல அரும்பி இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து இளைப்பாற்றிக் கொள்கிறது. ஒரு சிறந்த படைப்பின் வெற்றியாக இப்பண்பைக் குறிப்பிடலாம்.
எழுத்தாளர் மீனா சுந்தர் எழுதிய “மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன்“ என்ற சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் உள்ளன. பல கதைகள் மாநில அளவில் நடத்தப்பெற்ற சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளன.. 14 சிறுகதைகளும் அன்றாடம் நாம் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியல் வலிகளையே உரத்துப் பேசுகின்றன.
அறிவியல் வளர்ச்சி அடுத்த கிரகத்தில் கூடு கட்ட நம்மை அழைத்துச் செல்லும் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும், புரையோடிக் கிடக்கும் தீண்டாமைக் கொடுமைகளும், பெண் அடிமைத்தனமும், மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத ஆணவப் போக்கும், பெண்களுக்கு உரிமை வழங்க மனமில்லாத இழிபுத்தியும், அடுத்தவரின் சொத்தை அடித்துப் பிடுங்கும் ஈவிரக்கமற்ற பிறவிகளும், கையூட்டில் திளைக்கும் அதிகார விலங்குகளும், சுரண்டிப் பிழைக்கும் குள்ளநரிக் கூட்ட அரசியல்வாதிகளும் கதை நெடுகிலும் சிதறிக் கிடக்கிறார்கள். கதைகளை வாசிக்கும் நமக்கு இயல்பாய் அறச்சீற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அறிவியலின் வழியே மனிதன் புதிய புதிய வழிமுறைகளில் வாழப் பழகிவிடும் பேராசையை முதல் கதையின் வரிகளுக்குள் வாசிக்க முடியாமல் நிலைத்து விடுகிறோம்.. மனித உயிரைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து தேவைப்படுகையில் மீண்டுமதை உயிர்ப்பித்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் கதையில் சாத்தியமாவதைப் போல அசலில் சாத்தியமாகுமா என்ற பெரும் விவாதத்தை மனத்திற்குள் எழுப்பி நிற்கிறது “எவ்வழி அறியோம்?”” என்னும் தலைப்பிலமைந்த கதை. நிறைவில், இவ்உன்னதக் கண்டுபிடிப்பு தோற்றுப் போனாலும் பரவாயில்லை, சமூகத்தைச் சிரமைப்பதே தனது முதன்மைப்பணியென முடிவெடுக்கும் கதையின் நாயகர் பேராசிரியர் மஞ்சுநாத் மாடசாமியின் முடிவு எதிர்காலத் தலைமுறையின் மீதான அக்கறையெனச் சொல்லத் தோன்றுகிறது. இக்கதை இதுவரை எவரும் தொட்டுப் பார்க்காத ஒரு களம்.
பெருவெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஊருக்குள் புகுந்து காணும் உயிர்களை கபளீகரம் செய்தும், தென்படும் பொருட்களைத் தின்று செரித்தும் நகர்கையில் ஒதுங்கியிருக்கும் ஓலைக்குடிசை எம்மாத்திரம்? அங்கம்மாள் என்ற மக்கள் மனம் கவர்ந்த திருநங்ககை தேவதையை அள்ளிச் செல்லாத புயலுக்கு நன்றி சொல்வதா? இல்லை நீரளவே தன்னையும் உயர்த்தி நிற்கும் ஆம்பலின் ஒப்புயர்வான நேசத்தை ஒப்பிடும் அன்பை அள்ளிக் கொஞ்சுவதா? “நீராம்பல்” தலைப்பிலமைந்த கதை அப்படியானதோர் அன்பை நமக்குள் விதைத்துச் செல்கிறது. மனிதர்களைத் தாண்டிய உயிர்கள் மீதான பேரன்பை இக்கதை ஒப்பி நிற்கிறது.
மனசாட்சியைக் கொன்றொழித்து அறம் பிறழ்ந்து வாழ முற்படுபவர்களை இயற்கை வாழ விடுவதில்லை என்னும் ஒற்றைவரி நீதியைப் போதிக்கும் கதையாக “மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன்” கதை பாடம் சொல்கிறது. நெறிதவறி வாழ்ந்து கொண்டிருப்பவன் இக்கதையை வாசிக்க நேர்ந்தால். தனக்குள் அச்சம் கொண்டு உறக்கம் தொலைப்பதும், தாம் செய்வது சரியாவென அவனது இன்னொரு மனசாட்சி எழுப்பும் வினாவிற்கு விடையளிக்க இயலாமல் திணறுவதும் உறுதியென மொழியலாம்.
“அல்லிக்குளம்” தொகுப்பில் இடம் பெற்றுள்ள முக்கியமான கதை. இக்கதையில் மனிதமே யாவற்றையும் விட உச்சமானது என்பது நிறுவப்படுகிறது. சாதிப் பெருமையும், செல்வாக்கும் ஆபத்திற்கு உதவாது என்பதும், அந்நோக்கத்தில் நம்மை நெருங்கியிருக்கும் மனிதர்களைவிடச் சாதாரண எளிய மனிதர்கள் மனத்தின் ஆழத்தில் மாண்புள்ளவர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை கதையின் நாயகி நிறுவி நிற்கிறார். *ஆடு, மாடு, நாய்கள், நரிகள், குருவிகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லை. அவை நினைத்தது போல வாழலாம். எந்த குளத்திலும் குளிக்கலாம் நீர் அருந்தலாம் கீழத்தெரு மனிதர்கள் அவற்றைவிடும் கீழானவர்களாம்?! ஒரு காலத்தில் தொட்டால் தீட்டென்றார்கள். அந்த தீட்டையே நீரில் கழுவித்தான் போக்கினார்கள். நீரே தீட்டுப்பட்டு விட்டால் என்ன செய்வது? என்ற வரிகள் ஆதிக்க மனம் கொண்டோரை நோக்கிச் சொடுக்கிய சாட்டை. சாதிப் பெருமையைக் கடந்து அஞ்சலை என்ற எளிய மனுஷியைத் தன் தாயாக வரித்துக் கொண்டு நேசிக்குமளவிற்கு விசுவலிங்கம் பக்குவப்படுவது நேர்த்தியாக அமைந்து கதையை உயிர்ப்பு மிக்கதாக்குகிறது.
ஊரே வெள்ளக்காடாய் மாறிய போதும் எறும்புகள் அழிந்து விடவில்லை. மரத்தில் ஏறி தப்பித்து மறுபடியும் மண்ணில் புற்றெடுப்பது போல மனிதர்களில் சிலரும் இருக்கிறார்கள். பன்னீர் போன்ற மனிதர்களே வாழ்வின் சக்கரத்தை தடம் புரளாமல் உன்னதப் பாதையில் நகர்த்திச் செல்லும் மீட்சிக்கு தகுதியானவர்கள் என்பதை “‘மீட்சி”” சிறுகதை அறியத் தருகிறது.
குடியின் கோரமுகம் காட்டும் கதை அன்னலட்சுமி. அது குடித்தனத்தை எப்படிச் சீரழித்துச் சாக்கடைக்குள் தள்ளி விடுகிறது என்பதை சேகர் என்ற பாத்திரத்தின் வழியாக அசலாகப் பதிவு செய்திருக்கிறது.
படிக்கும் பிள்ளைகளை தன் பிள்ளைகளாகக் கருதி அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்து ஆளாக்கிவிடும் ஆசிரியரின் இறுதி காலத்தை அவர்கள் எப்படி மீட்டுக் கொடுத்தார்கள் என்பதை “அந்தணம்” கதை பாடம் நடத்துகிறது. பணத்தின் பின்னால் மனத்தை அலையவிடும் மனிதர்களே மனத்தின் பின்னால் மகிழ்ச்சியைக் கூட்டிக் கொள்ள பணம் மட்டுமே உதவுவதில்லை என்பதையும் இக்கதை உணர்த்தி விடுகிறது.
“அம்மா நிலத்தில் பருவத்திற்குத் தக்க காய்கறிகளை பயிரிட்டு வந்தாள். அது செழித்து வளரும் அழகில் தனது செழிப்பை உணர்ந்து கொண்டாள். வயிற்றுப்பாட்டிற்கு பல நேரங்களில் அதுதான் ஆதாரம். நாளும் பொழுதும் மண்புழுவைப் போல மண்ணில் புரள்வாள் அம்மா. மண்தான் அவளின் தாய். அணுக்கத் தோழி. அதனுடன் பேசுவார். அதன் முகத்தில் கண்ணீர் சிந்தி அழுவார். கதை சொல்லி சிரிப்பாள். சினத்துடன் கோபிப்பாள். மண்ணைக் கிளறி உள்ளங்கையில் அள்ளி அள்ளிக் கொஞ்சுவாள். முத்தமிடுவாள். அதனது அடிமடியைக் கிளறி விதை இடுவாள். அதன் குரல்வளையில் நீரூற்றி தாகம் தீர்ப்பாள். பதிலுக்கு மண்ணும் அவளுடன் வெவ்வேறு வடிவங்களில் பேசும். செடிகள் இலைகளின் செழிப்பிலும் தரிசனத்திலும் காலமெல்லாம் புன்னகைக்கும். அவள் அருகில் நடக்கையில் காற்றில் ஆடுவதாய் அவளை உரசி குதூகளிக்கும்.உரசும் நேரங்களில் செடிகள் மொத்தத்திலும் அம்மாவின் வாசனை மணக்கும்”
இப்படி அம்மாவை அறிமுகம் செய்து நகரும் “அநித்யம்” என்ற அழகான கதையில் முடிவை ஏற்றுக் கொள்ளவியலாமல் மனம் எழுத்தாளரை வசை பாடுகிறது. ஒரு நல்லவனுக்கு, அவன் சமுதாயத்திற்கு விட்டுச் செல்லும் நல்லறத்திற்காகவாவது வாழ வகைசெய்ய வேண்டும். இக்கதையில் மனம் கண்ணீர் மல்கி தத்தளித்து நிற்கிறது. அந்தத் தாய் நம்மனைவரின் தாயாக உருமாறி எழுந்து நிற்கிறாள்.
எல்லா கதையிலும் அறத்தை உயர்த்திப் பிடிக்கிறார் ஆசிரியர். தப்பித் தவறியும் அறம் பிறழ்ந்து விடாமல் தனது பாத்திரங்களைப் படைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். கடவுளின் பெயரைச் சொல்லி ஊரையே தனதாக்கிக் கொள்ளும் தொழிலதிபருக்குள்ளும் அந்தக் கடவுளின் பிம்பத்தைக் காட்டியே ஊரின் நிலவரத்தை விவரித்து விடும் “”நீர்ப்பிம்பம்”” கதையும் அறத்தையே பிரதான மொழியாக்கி உயர்ந்து நிற்கிறது.
*நீரின் போக்கு நெடுங்குழிப் போக்கு.,
*மௌன புத்தனாயிருந்த பச்சை இலைகளுக்கு சருகான பிறகு தானே கால்களும் இறக்கைகளும் முளைத்து விடுகின்றன.. நிலத்தில் கால் பாவாமல் காற்றைத் துரத்திக் கொண்டு என்னமாய் ஓட்டம் பிடிக்கின்றன.. வேர்போல மண்ணில் புதைந்து தவம் கிடக்கும் அவஸ்தை இலைகளுக்கில்லை. வேரே மரத்தின் ஆன்மா”,
*பழுத்த கனியில் நெளியும் புழுக்களென மனிதர்களுக்கு நினைவுப் புழுக்களின் அவஸ்தை”.
.*அந்தஸ்து பார்க்கும் மனிதர்கள் தனியே கவனிப்பாரற்றுக் கிடக்கும் போது தான் எளியவர்களைத் தேடுகிறார்கள். எளியவர்களின் பூடகமற்ற அன்பு ஒருபோதும் கணக்கு வழக்குப் பார்ப்பதில்லை,
*உடல் தளர்வில் தான் மனிதனின் கர்வமும் திமிரும் ஆணவமும் தானாய் உருகி ஓடுகின்றன”.
போன்ற தெறிப்புகள் கதைகளின் இடையை நம்மை நகர விடாமல் கட்டிப் போடுகின்றன. பாத்திரங்களுக்கு இவை கூடுதல் அழகையும் எடுத்துக் கொண்ட கருவிற்குக் கூடுதல் பலத்தையும் தருகின்றன.
மேல் தட்டு வர்க்கத்தினரின் பகட்டுகளையோ.., பளபளக்கும் நாகரீகச் சந்தைகளையோ.., சிந்தையில் கொள்ளாமல் வறுமைக் கோட்டினைப் பற்றிய புரிதல்கூட இல்லாமல் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் சராசரிக்கும் கீழான அசல் மனிதர்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பதிவு செய்வதோடு, புறநிலையில் ஒதுங்கி நிற்காமல் அகவெளிப் போராட்டங்களுக்கு ஆட்படுத்தி அறம் பேசுகின்றன கதைகள்.
…………………………………………………..
மஞ்சள் புரவிக்கு முத்தமிட்டவன் / மீனா சுந்தர் / சிறுகதைத்தொகுப்பு / முதல் பதிப்பு நவம்பர் 2024 / யாப்பு வெளியீடு / பக்கம் 196 / விலை ரூபாய் 200 / அலைபேசி 9080514506

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.