அந்த செய்தியை ஏதோ சினிமா சம்பந்தப்பட்ட வாட்ஸ்ப் குழுவில்தான் முதன்முதலாக பார்த்தேன். சிலநொடிகளில் ஏதோ ஓரு பரவசம் எனக்குள் ஏற்ப்பட்டது.அதாவது தண்ணீர் பற்றி குறும்படம்  எடுக்கச் சொல்லி எங்க மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்று விட்டிருந்தார். அதோடு சேர்த்து பரிசுத்தொகை அறிவிப்பை பார்த்ததும் எனக்கு திக்குமுக்காகிப்போனது. பரிசுத்தொகை ஒரு லட்சம்… !

சினிமாவில் உதவி இயக்குனராய் சேருவதற்கு சென்னையில் அலைந்து திரிந்து வாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் ஊருக்கே வந்த எனக்கு, இந்த அறிவிப்பு ஒருவித ஆசிர்வாதமாய் இருந்தது.

உடனடியாக தண்ணீர் பற்றி ஓரு கதையை உருவாக்க வேண்டும் என்று மூளையைப்போட்டு கசக்கினேன். கதை வந்தபாடில்லை. கதை வராததால் எனக்கே என்மேல் வெறுப்பு.

எப்போதுமே எனக்கு கதை அதிகமாக தோன்றுவது, பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்துகொண்டு பயணம் செய்யும்போதுதான்.

எப்போதாவதுதான் வீட்டில் இருக்கும்போது கதை தோன்றும். நான் கதை தோன்றியவுடனே எழுதுபவனல்ல, ஆற அமரப்போட்டு கதையை மனதுக்குள்ள ஓட்டிப் பார்ப்பேன். கதை திருப்தியானதும் எழுத ஆரம்பிப்பேன். கதையை எழுதிமுடிப்பதற்குள் ஒரே அவஸ்தைதான் .

கதை தோன்றாததால், வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஒருவித இறுக்கம் குறைந்து மனம் சுதந்திரமாக இருந்தது. அந்த நொடியே கதை எப்படியாவது, வந்துவிடும் என்ற தன்னம்பிக்கை மனதுக்குள் வந்தது.

தண்ணீரைப் பற்றி கதை என்றவுடனே முதலில் எனக்கு ஞாபகம் வந்தது ஊருக்குள்ளேயிருக்கிற ஊத்துக்கிணறுதான். அந்தத் தண்ணீர் அவ்வளவு நல்ல தண்ணீர்-ஆனாலும் துணி துவைக்க, பெண்கள் குளிக்க, ஆடுமாடுகளுக்கு தண்ணீர் எடுக்க, பிறந்த குழந்தைகளின் பீத்துணி அலசத்தான் பயன்படுத்துப்பட்டது ஊர் ஜீவன்களால். எவ்வளவு கோடையிலும் அந்தக் கிணற்றின் ஊத்து ஊறிக் கொண்டேயிருக்கும். அதனால் அது ஊத்துக்கிணறு என்று  பெயர் அதற்கு.

ஞாயிற்றுக்கிழமையென்றால் போதும் அந்தக் கிணற்றில் திருவிழாபோல பெண்கள்கூட்டம் ஜேஜேனு இருக்கும். அங்கு பெண்களுக்கு மட்டும்தான் அனுமதியென்றாலும்-அவர்கள்கூட சிறு வயது ஆண்பிள்ளைகளை குளிப்பதற்கு அழைத்துச் செல்வார்கள்-அது அவர்களுக்கு தம்பியாக இருக்கலாம், மகன்களாக இருக்கலாம்.

வயது வந்த ஆண்கள் ஊத்துக்கிணறுக்கு வருகிறார்கள் என்றால், பெண்கள் யாராவது தண்ணீர் இறைக்குக்கும்போது தனது இரும்பு வாளியை கிணற்றுக்குள் கயிறு அறுந்தோ, கைதவறியோ போட்டிருக்கும்போதுதான். கிணற்றில் குதித்து, மூழ்கி வாளியை எடுத்துவருபவனின் புகழ் பெண்கள் மத்தியில் குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஓடும்.

அதனாலேயே கிணற்றுக்குள் எப்படா பெண்கள் இறைக்கிற வாளியைப் போடுவார்கள் என்று ஊத்துக்கிணறை ஒட்டியுள்ள தெப்பத்துச் சுவரில் உட்கார்ந்து காத்துக்கிடக்கும் இளவட்டங்கள் ஏகப்பேர்கள் உண்டு.

அந்த ஊத்துக் கிணற்றின் தண்ணீரில் குளிப்பது அப்படி சுகமாக இருக்கும். சீயக்காய் தேய்த்து குளிக்கும்போது அழுக்கு அப்படிப் போகும். கிணற்றைவிட்டு வீட்டுக்குப் போகவே மனசு வராது. கண்களெல்லாம் சிவந்து, கைகளெல்லாம் குளிரில் கொறக்கவலிக்கும்வரைக்கும் குளித்துக்கொண்டேயிருக்கலாம்.

தீப்பெட்டி ஆபிஸில் வேலை பார்க்கும் அக்காமார்களுக்கு ஞாயிறு விடுமுறை. அன்று காலையிலேயே அக்காமார்கள் ஆட்டுரலில் சிகைக்காய், வெந்தயம் போட்டு கடகடவென்று ஆட்டி கிண்ணத்தில் எடுத்து, வாளி நிறைய ஒரு சுமை துணியை அமுக்கிக்கொண்டு,குளிக்க வரமாட்டேன் என்கிற என்னையும் அடித்து இழுத்துக்கொண்டு போவார்கள். கிணற்றுக்குள் போனால் விலக இடமிருக்காது. அவ்வளவு கூட்டமாகயிருக்கும். வந்த அத்தனைபேருக்கும் தண்ணீரை வாரி வழங்கிக்கொண்டிருக்கும் ஊத்துக்கிணறு. குளித்து வீட்டுக்குவர ஞாயிறு பாதி முடிந்துவிடும்.

பகலில் மட்டுமில்லாமல் இரவிலும் குளிப்பவர்களும் உண்டு.     

இருபது வருடத்திற்கு முன் தண்ணியை அப்படி வாரி வாரி வழங்கிய கிணறு இன்று காய்ந்து வறண்டு போய்  கிடக்கிறது. எல்லாம் காலமாற்றத்தினால்தான்.

அவ்வளவு நல்ல தண்ணீர், வாயில் வைக்க முடியாதபடி  சவர்த்தண்ணியாய் மாறி கடைசியாய் சாக்கடையாய் மாறி பிளாஸ்டிக் குப்பை மேடேறிக் கிடக்கிறது

இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன..? இதை வைத்து ஒரு கதை ரெடி பண்ணலாமா… ? என்று நினைப்பு ஒடியது எனக்குள்.

கொஞ்ச நேரத்தில்  ஊருக்கு வடக்குப்புறத்தில் உள்ள புளியந்தோப்பு  -அதனை ஒட்டியுள்ள குடிதண்ணீர் கிணறு ஞாபகம் வந்தது.

ஊருக்குள் குடிதண்ணீர் குழாய் வருவதற்கு முன்னே, அந்தக் கிணற்றிலிருந்துதான் எல்லோர் வீட்டுக்கும் குடிதண்ணீர். நல்ல தண்ணீர் என்ற பெயர் அதற்கு அவ்வளவு பொருந்தும். தேங்காத் தண்ணீர் தோத்துப் போகும் அதன் ருசியில்.

இப்போதுபோல் அப்போது தண்ணீரெடுக்க பிளாஸ்டிக் குடம் அல்ல; ஒன்று சில்வர் பானை அல்லது துட்டுப்பானை. இரண்டும் அவ்வளவு கனக்கும். அதோடு சேர்ந்து தண்ணீரையும் சேர்ந்து சுமந்து வருவது லேசுப்பட்ட காரியமில்லை.

மழைக்காலங்களில் தண்ணீரை வாரிவாரி வழங்கும் அதே கிணறு, கோடைக்காலங்களில் ஊறவே ஊறாது. அதனால் என்னவோ கோடை காலங்களில் அதிகாலை மூன்று மணிக்கே தண்ணீர் எடுக்க இருட்டுக்குள்ளே புறப்பட்டுவிடும் ஜனங்கள்.

என்னதான் முன்கூட்டியே போனாலும், வாளியால் இறைக்கிற தண்ணியை துண்டினால் வடிகட்டிதான் பானையில் ஊற்றவேண்டி இருக்கும்.

இந்தக் கிணற்றில் மேல் சாதிதான் தண்ணீர் எடுக்கவேண்டும். கீழ்சாதி எடுக்கக்கூடாது. அப்படியே கீழ்சாதிக்காரர்கள் தண்ணீர் எடுக்க வந்தாலும் மேல்சாதிக்காரர்கள்தான் வாளியால் தண்ணீரை இறைத்து, கீழ்சாதிக்காரர்களின் பானையில் ஊற்ற வேண்டும்.

இந்த தண்ணீர் -சாதி அடக்கமுறை வைத்து கதை பண்ணலாமா? என்ற நினைப்போடியது மனதுக்குள். பிறகு இந்தக் கதை பண்ணலாமா..

அந்தக் கதை பண்ணலாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது , இருகைகளையும் கொண்டு முகத்தில் வைத்து அழுத்தி துடைத்துக்கொண்டே  வானத்தைப் பார்த்தேன். புறாக்கூட்டம் ஒன்று படபடவெனு பறந்து போனது.

புறாவைப் பார்த்ததும் என் மனமெங்கும் மகிழ்ச்சி. கதை வந்துவிட்டது கதை வந்துவிட்டது, எனக்குள் ஒரே கொண்டாட்டம்.

புறாவைப் பார்த்ததுமே எனக்கு தனுஷ்கோடி அண்ணன்தான் ஞாபகம் வந்தார். அவர்தான் ஊரிலே புறா வளர்ப்பவர்.

ஊரில் அதிகமான நெஞ்சுச்சளி உள்ளவர்கள், அவரிடம்தான் புறாக்குஞ்சு கேட்டு செல்வார்கள். புறாக்குஞ்சு நெஞ்சுச் சளிக்கு நல்லதல்லவா… நானே எங்க அம்மா நெஞ்சு சளிக்கு அவரிடம் புறாக்குஞ்சு வாங்க சென்றிருக்கிறேன். புறாக்குஞ்சுதான் அவரின் வாழ்க்கைக்கு உறுதுணை.

புறாக்குஞ்சை அடித்து கழுத்தைத் துருகி, தீயில் வாட்டி, மஞ்சள் தடவி, துண்டு துண்டாக தனுஷ்கோடி அண்ணன் வெட்டித் தரும்போதே எச்சி ஊறும்.

தனுஷ்கோடி அண்ணனுக்கு போலியோவால் பாதிக்கப்பட்ட சூம்பிப்போன கால்கள் -ஆனாலும் அவருக்கு தோட்டம், தொறவு, சொத்து ,பத்து அதிகம்.

போலியோ கால்கள் என்றாலும் கிணற்றில் நீச்சலடிப்பார். தென்னமரத்தில் விறுவிறுவென்று வேகமா ஏறுவார். அதைப்பார்த்து பார்ப்பவர்களுக்கே திகைப்பா இருக்கும்.

தனுஷ்கோடி அண்ணனுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவை கட்டிக்கொண்டவரே, சொத்துக்கு ஆசைப்பட்டு இரண்டாவது அக்காவையும் கட்டிக்கொண்டார். இரண்டாவது அக்காவை கட்டிக் கொடுப்பதற்கு தனுஷ்கோடி அண்ணனுக்கு முழு விருப்பமில்லை.

வீட்டில் யாரும் இவரின் பேச்சுக்கு தலை சாய்க்கவில்லை அப்போது வெளிவந்தவர்தான் தனுஷ்கோடி அண்ணன். அதற்குப் பிறகு வீட்டுக்கு போகவில்லை. வயித்துப் பொழப்புக்கு புறா வளர்க்க ஆரம்பித்தார். பிறகு அதுவே அவருக்கு அடையாளம் ஆகிப்போனது.

அன்று சனிக்கிழமை என்பதால் புளியந்தோப்பில் வழக்கம்போல கிரிக்கெட் விளையாண்டுட்டு ஊருக்குள் நுழைவாயிலில் உள்ள டீக்கடைக்கு வடை திங்க போய்க்கொண்டிருந்தேன் நண்பர்களோடு.

எங்களின் எதிர்த்திசையில் மூன்று சக்கர வாகனத்தில் வந்த தனுஷ்கோடி அண்ணன் திடீரென்று, வண்டியிலிருந்து வந்திறங்கி வடக்குப்புறம்  நோக்கிப்போயி சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருந்த குடிதண்ணீர்க்குழாயை இறுக்கி சரியாக மூடினார். சொட்டு நின்றது. 

இதுவரை எத்தனயோ பேர் இந்தப் பாதையில் போயிருந்தாலும் யாருக்கும் அந்தக் குழாயை மூட மனமில்லை போலும். 

“ஏண்ணே, இந்த சொட்டுத் தண்ணிய நிப்பாட்டவா வண்டியிலிருந்து எறங்கி வந்திங்க” என்றேன், அவரைப் பார்த்து கேலியாக.

“ஓரு சொட்டுனு சாதாரணமா விட்றக்கூடாதுல்லா” என்று சொல்லிக்கிட்டே வண்டியில் தக்கிமுக்கி ஏறினார், சூம்பிப்போனா தன் போலியோ கால்காளால் -அந்த சூம்பிப்போன கால்கள் என்னை என்னவோ செய்தது.

அப்போதுதான் அவர் சொன்ன ஒரு சொட்டின் மதிப்பு எனக்குத் தெரிந்தது.

இப்போது புறாவைப் பார்த்ததுமே, அந்த ஒரு சொட்டு ஞாபகம் வந்து என் மனதுள் கதையாக திரண்டு வந்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சி .இதைவிட தண்ணீருக்கு சிறந்த கதை எதுவும் இருக்காது என்ற நினைப்போடியது எனக்குள்.

அந்த அண்ணனின் மூலம் சமூகத்துக்கு கதை கிடைத்திருப்பது சந்தோஷமாகயிருந்தது. கதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது “ஒரு சொட்டு”என்று முடிவு செய்தது மனது.

யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது மனதுக்குள் படபடவென்று புறாக்களின் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது.

***

க. செல்லப்பாண்டி

செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *