நாள்தோறும் சரியாக காலை ஆறு மணிக்கெல்லாம் யாத்ரனின் தொலைபேசி சினுக்கிவிடும். எடுத்து பார்த்தால் விதவிதமான பூக்கள்,குழந்தைகள் படங்களுடன் அன்றைய நாள் ,கிழமை,ராசிபலன் கூடிய இனிய காலைவணக்கம் என்ற குறுஞ்செய்தி வந்து சேர்ந்திருக்கும். அதுவும் விசேஷ தினம் என்றால் அதற்கான சிறப்பு வாழ்த்துகளோடு வரும் குறுஞ்செய்தி. இப்படி அவனின் கேலரியை நிறைத்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்த்து செய்திகளால் பிடித்த தாத்தா கூட இப்போது பிடிக்காத தாத்தாவாகிவிட்டார் .

         “அம்மா உங்க கிட்ட எத்தன தடவ சொல்லுறது கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்களேன் மா.”

      “என்னை என்னடா பண்ண சொல்லுற? அவரு ஏதோ வயசான காலத்துல நேரம் போகாமா அனுப்பிட்டு இருக்காரு, உனக்கு விரும்பம் இருந்தா பதில் மெசேஜ் அனுப்பு இல்லையா அத டெலிட் பண்ணு! அத விட்டுட்டு மெசேஜ் அனுப்பாதீங்கனு எப்படி டா மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல முடியும்” என்று தனது மகனை சமரசம் செய்தாள் மங்கை

           “அட போங்கம்மா தினமும் காலைல போன எடுத்தாலே இந்த மெசேஜ் தான். இதுல தீபாவளி, பொங்கல் வந்துடக்கூடாது அதுக்குனு வேற விதவிதமா படம் போட்ட மெசேஜ். காலேஜ்ல பசங்க போன பாத்துட்டு என்ன கிண்டல் பண்ணுறாங்க மா” என்று புலம்பிக்கொண்டிருந்தான் யாத்ரன்.

              “சரி டா நா அவருகிட்ட பேசுறேன் போதுமா இப்ப வா சாப்பிட” என்றபடியே தட்டில் தோசையை வைத்தாள் மங்கை.

           ” அம்மா உங்களுக்கு ரெண்டு நாள் டைம் அதுக்குள்ள தாத்தாக்கிட்ட பேசி மெசேஜ் அனுப்புறத நிப்பாட்ட சொல்லுங்க இல்லைனா நான் அவரு நம்பரையே பிளாக் பண்ணிருவேன் பாத்துக்கோங்க. இப்படி டெய்லி மெசேஜ் டெலிட் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா? அதுக்கு பேசாமா அவரு நம்பரையே டெலிட் பண்ணிடுறேன்”.

“டேய் ரொம்ப பண்ணாத டா அவரு உம்மேல உள்ள பாசத்துல அனுப்புனா நீ ரொம்ப ஓவராத்தான் பேசுற போடா போயி படிக்கிற வழிய பாரு”.

   “ஆமா உங்கப்பாவ சொன்னா உனக்கு உடனே கோவம் வந்துடுமோ” என்றபடியே கல்லூரிக்கு கிளம்பினான் யாத்ரன்.

       செல்வராஜின் ஒரு மகள் மங்கை. திருமணத்துக்கு பின்னும் மகள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தவர் உள்ளூரிலேயே வரன் பார்த்து மணம் முடித்து வைத்தார். ஆனால் வேலை காரணமாக மங்கையின் கணவர் ரஜேஷ் பெங்களூருக்கு வர வேண்டியதாகிவிட குடும்பத்துடன் இங்கேயே செட்டில் ஆகிவிட்டனர் .செல்வராஜின் மனைவி இருந்தவரை ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தனர் ஆனால் அவர் இறந்ததற்கு பின் இந்த இரண்டுவருடங்களாக தனிமையில் தவிக்கும் செல்வராஜ்கு இந்த ஆன்ட்ராய்டு போனும் அதில் அனுப்பும் குறுஞ்செய்தி மட்டுமே ஒரே பொழுது போக்கு தான் பார்த்த ரசித்த வீடியோக்களையும், செய்திகளையும் மகளுக்கும், பேரனுக்கும் அனுப்பி வைத்துவிட்டு பதிலுக்காக காத்திருப்பார். ஆனால் ஏமாற்றமே மிஞ்சும் ஆரம்பத்தில் விருப்பக்குறியிடிட்டார்கள். அதன் பிறகு எதும் கிடையாது. செய்தியை அனுப்பிவிட்டு நீல நிற டிக்குகளுக்காக காத்திருப்பார் டிக்குகள் மட்டுமே வரும் ஆனால் பதில் வராது. வயது மூப்பின் மாபெரும் தண்டனையே தனிமைபடுத்தப்படுதல் தான். அரவணைக்கவும், ஆற்றுப்படுத்தவும் ஆளின்றி தவிப்பது போன்ற கொடுமை சொல்லிமாளாது. வயது மூப்பிலும் துணையோடு வாழ்வது ஒரு வரம் அந்த வரம் கிடைக்காதவர்கள் எல்லாம் சாபத்தில் சாயலில் வாழ்பவர்கள்.

         கல்லூரி முடிந்து வந்த யாத்ரன் உணவு மேஜையில் அமர்ந்திருந்த மங்கையிடம் “அம்மா எனக்கு ஒரு டீ வேணும் நல்ல தலைவலி” என்ற படியே தனது அறைக்குள் சென்றான். அவன் உடைமாற்றிவிட்டு மீண்டும் ஹாலுக்குள் வந்தபோது மங்கை இன்னும் உணவு மேஜையிலிருந்து எழாமல் எதையோ சிந்தித்தபடியே இருப்பதைக்கண்டான்.

      “அம்மா…, அம்மா…..,”என்று அவளின் தோளைத்தொட்டு உலுக்கினான்

     “யாத்ரா நீ எப்படா வந்த ..”

      “அதுசரி நான் வந்ததையே கவனிக்கலையா சுத்தம். சுத்தி என்ன நடக்குனு கூட கவணிக்காம அப்படி என்ன யோசனை மா உனக்கு”

        “அது ஒன்னுமில்லட நீ காலைல தாத்தாவ மெசேஜ் அனுப்ப வேண்டானு சொல்லசொன்னியே.. அத சொல்லலாம்னு வேலைய முடிச்சிட்டு போன் போட்டேன் ஆனா அவரு போனே எடுக்கல டா எனக்கு என்னமோ பயமா இருக்கு அதான் அதே சிந்தனைல இருந்தேன் நீ வந்தத கவனிக்கல டா”

         “ம் இவ்வளவு தானா நானும் வேற ஏதோ பிரச்சனைனு நினச்சேன். உனக்கு எப்போதும் உங்க அப்பா நினப்பு தாம்மா. நீ ஏன்மா ஊருக்கு போயி தாத்தாக்கூட கொஞ்சநாள் இருந்துட்டு வரக்கூடாது”

        “போயி இருக்கலாம் தான், ஆனா இங்க உங்கள யாரு பாக்குறது”

        “எங்கள பத்தி கவலபடாம நீ போயிட்டு வா மா தாத்தாவும் அங்க தனியா தான இருக்காரு” என்றான் யாத்தரன் .

      “சரி பாக்கலாம்” என்ற படியே இருவரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்கினர்.

         சிறிது நேரத்திலேயே மங்கையின் கைபேசி அழைத்தது . தொடுதிரையில் புதிய எண் வந்தது அழைப்பை ஏற்றவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.

          மறுமுனையில்

       “ஹலோ மங்கையா”

      “ஆமா நீங்க”

      “நாங்க லேகநாதன் மருத்துவமணையிலிருந்து பேசுறோம் செல்வராஜ் உங்க அப்பா தானா “

  “ஆமா அவருக்கு என்னாச்சு” என்று பதட்டத்துடன் கேட்டாள் மங்கை

“மேம் கொஞ்சம் நாங்க சொல்லுறத கொஞ்சம் நிதானமா கேளுங்க உங்க அப்பாக்கு காலைலயே சுகர் ரொம்ப லோவாகி மயங்கி விழுந்திருக்காரு அவருகூட யாரும் இல்லாததுனால உடனே பாக்க முடியல இப்பதான் அரைமணி நேரத்துக்கு முன்னாடி பக்கத்து வீட்டுகாரங்க பாத்து இங்க கூட்டு வந்தாங்க உங்க அப்பா இறந்து நாலு மணிநேரம் ஆகிடுச்சு நீங்க உடனே கிளம்பி வாங்க” என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது.

               “அப்பா …, அப்பா…, என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

            “அம்மா என்னாச்சுமா…,ஏம்மா அழுகுற..,அம்மா சொல்லுமா “

     “தாத்தா ..,தா…,” அழுகையின் கூடாக வார்த்தைகளை மென்று துப்ப

     “அழாம சொல்லுமா என்னாச்சுமா தாத்தாக்கு என்னமா”.

    “தாத்தா நம்மள விட்டு போயிட்டாராம் டா” என்று கதறி அழத்தொடங்கினாள் மங்கை

     இடிந்து போனான் யாத்ரன். தங்களின் ஊரை நோக்கி பயணம் தொடங்கியது வழி நெடுக காருக்குள் அமைதியே குடியிருந்தது. இரவே கிளம்பினார்கள் யாரும் எதுவும் உட்கொள்ளவில்லை ஒரு தேநீர் கடையில் வண்டியை நிப்பாட்டினான் யாத்ரன் மங்கைக்கு சுகர் பிரச்சனை இருப்பதால் சாப்பிடாமல் நீண்ட நேரம் இருப்பது நல்லதல்ல என்று அவளை கட்டாய படுத்தி தேநீர் மட்டுமாது குடிக்க சம்மதிக்க வைத்தான் யாத்ரன்.

      கடையில் மூன்று தேநீர் என்று கூறிவிட்டு காரின் அருகில் நின்றிருந்தான் யாத்ரன் அவன் அருகில் வந்த பெரியவர் “மணி என்ன தம்பி” என்றார் .

        கை கடிகாரத்தை பார்த்தவாறு “ஆறுமணி” என்றவனின் கண்கள் தானாக கலங்கிட காரில் சாய்ந்தவாரு தரையில் விழுந்து அழத்தொடங்கினான். அதுவரை மங்கைக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தவனை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் மங்கையும் அவளின் கணவரும் தவித்தனர்.

            யாத்ரனின் வாழ்வில் இனி ஆறுமணி குறுஞ்செய்திகள் வரப்போவது இல்லை. இருக்கும் வரை தொல்லையாக தெரிந்த காலை வணக்கத்திற்கு இப்போது ஏங்கிதவித்தது யாத்ரனின் மனம்.

000

நீலனின் பொங்குமாங்கடல் -சிறார் நாவல் 2025 டிசம்பரில் வெளிவந்துள்ளது. நடுகல் இணைய இதழில் தொடராக வெளிவந்த ‘குரங்கு குப்பன்’ குறுநாவலின் விரிவாக்கம் இந்த நாவல்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *