ஒரு சொல் இருக்கிறதென்றால், அச்சொல்லின் முன்னிருக்கும் நிகழ்வுகளை ஆராயாமல், பின்னாளிருக்கும் வரலாறுகளைக் கிளறுவதே சரியான முறை. ஏனென்றால், பல உண்மைக் கிடங்குகள் அங்கேதான் படிந்து கொண்டிருக்கும். இதைக் குறிப்பிடுவதற்கும் காரணம் உண்டு. கதைக்குள் வரக்கூடிய ஒரு கதாபாத்திரம் – அதன் வழியாக வாழ்க்கை என விரிகிறபோது, அவையெல்லாம் கடந்தகாலப் பதிவிற்குள் அடைக்கலமாகி விடும். அவ்வுலகத்தில் காட்சிகளெல்லாம் பெரும் வெளிகளாகத் தோன்றி, இன்பம் தரக்கூடிய நினைவுகளை விடவும், துன்பத்தை மடித்துக் கொடுக்கும் பெட்டகமாக இருப்பதினால், மனதிலிருந்து விரட்டி அடிப்பதென்பது கடினமாக மாறிப் போய்விடும். அம்மாற்றத்தின் ஒற்றை அடையாளமாகப் புலன் கடவுள் சிறுகதைத் தொகுப்பை எதிர் நோக்கலாம். பிரெஞ்சு, இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் மொழிப் பெயர்ப்பாகி இருக்கிறது. 13 சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில், ஒவ் வொன்றும் மரத்தின் பல கிளைகள் வெவ்வேறு திசைகளில் பயணிப்பதுபோல, தனித்துவமானத் தன்மைகளில் தனித்தனியாக நிரம்பித் திளைக்கிறது. அதனால் அனைத்தையும் இங்கு அறிமுகம் செய்யாமல், வேறொரு பிரிவில் அவற்றை வெளிப் படுத்தலாம் என்னும் அடிப்படையில், சில கதைகளை மட்டுமே அவற்றிற்குள்ளிருக்கும் வீரியத்தை உடைத்து பேசலாம். அந்த வகையில், செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை, மிதவை, பெருகும் வாதையின் துயர நிழல், சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று, உயிர்வேலி, தீய்மெய் என இக்கதைப் போக்குகளின் நிசப்தம், உள் வாங்கும் விதத்தை ஆராய விழைகிறது.
தன்னியல்பின் சாபம்
அறிவு, அழகு திறம்பட இருந்தாலும், மனதைப் பக்குவப்படுத்தக்கூடிய நபர்கள் இல்லாத போது, வாழ்க்கைத் தரிக்கெட்டுப் போய்விடும். அம்மாவின் சொற்கூச்சலில் செவி சாய்க்காதவளுக்கு, இறப்புதான் அதுவும் தற்கொலைதான் தலை சாய்த்து இருக்கிறது. அவமானமே அதற்குத் தீனியும் போட்டிருப்பதுதான் பெருந்துயரம். நேர்மறையான தன் அப்பாவின் செயல் நேர்த்திக்கு எதிராக மாறிப்போகிறாள். அலுவலகத்தில் சேர்க்கைச் சரியில்லை. ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி முடியக் கூடாதோ அப்படி முடிந்திருக்கிறது.
தொடக்கமே துன்பவியலோடுதான் தொடங்குகிறது. மனப்பிறழ்வில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாள். நண்பர்களைக் காண வெறுக்கிறாள். இச்சுழிக்குள் சுழன்று கொண்டிருப்பவள் யார்? ஏன்? என அவளின் கடந்தகால வரலாற்றை ஆய்விற்கு உட்படுத்துகிறது, செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றையெனும் கதை. ஆண் பிள்ளைகள் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் திறம்பட செய்கிறாள். சுறுசுறுப்பான எதிலும் ஆர்வம், அக்கறை உள்ளவளாக வலம் வரும் பவுனரசி, கல்வியிலும் உயர்நிலைக்கு வருகிறாள். ஒரு கட்டத்தில் அப்பா இறக்க, அவ்வரசு வேலை இவளுக்குக் கிடைக்கிறது. தந்தையின் நேர்மையைப் பின்பற்றக் கூடியவளாக இருந்தாலும், அவ்வலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தடம் மாற்றப் படுகிறாள். அதாவது, நம்முடைய வாழ்க்கையில் எல்லா நேரமும் சாதகமாக அமைவதில்லை. சோதிக்கும் காலநிலைகளை ஆழமாகக் கொடுத்துவிடும்.
அதிலிருந்து மீண்டு வருவது சாதாரண விசயமல்ல. பலர் அதன் கடுமையான காய்ச்சலில் சிக்கி, மருந்தைத் தேடியே காலங்கள் ஓடிவிடும். ஆனால், இங்கே பவுனுவுக்கும், இதே காய்ச்சல் தொற்றுகிறது. தக்க மாற்று மருந்தைத் தேடாமல், அக்காய்ச்சலுக்குள், தன்னைப் புதைக்குழிக்குள் ஆழ்படுத்திக் கொள்கிறாள். கையூட்டுப் பெறுவதில் முனைப்புடன் செயல்படுகிறாள். அம்முனைப்பை அலுவலக நண்பர்களே அழகான ஓவியமாக அவளைச் செதுக்கி வருகிறார்கள். அதில் அவள் மிளிர்கிறாள். மிளிர்தல் என்றாவது ஒருநாள் மங்குமல்லவா?. வாழ்க்கையின் திருப்புமுனை அங்கு தான் வருகிறது.
மதுக்கடைப் பாரை எடுத்து நடத்திவரும் கார்த்திகேயன் என்பவரோடு காதல் – பின் திருமணம் என வாழ்க்கை மாறுகிறது. பெற்றவள் மற்றும் நெருங்கியவர்களின் எதிர்ப்பையும் மீறி, தன் முடிவு சரியானதென நினைத்தவளுக்கு, ஆறு மாதத்திற்குள்ளே பெரும் சாபத்தில் விழுந்து விட்டோமென அவதிக்குள் தள்ளாடுகிறாள். தாம்பத்திய உறவில் நிம்மதி வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. மதுவையே உயிர்மூச்சாக கொண்டவன். அதுமட்டுமில்லாமல், சிறு வயதிலிருந்தே வயது முதிர்ந்த பெண்களோடு தொடர்ப்பு இருப்பது தெரிந்து, நரகத்திற்குள் அகப்பட்டுக் கொண்டாள். “பவுனரசிக்குத் தாம்பத்ய சுகமென்றால் என்னவென்றெ தெரியாமல் போனது. அவள் என்னதான் மனத் திடம் கொண்டவளாக இருந்தாலும், இந்த விசயத்தில் முழுவதும் ஏமாந்து விட்டோ மென்று பல இரவுகள் கண்ணீரோடு கொட்டக்கொட்ட விழித்துக்கிடந்திருக்கிறாள்”பக்14.
காலங்கள் இப்படியாக கழிய, ஒருநாள் கார்த்திகேயனின் இறப்பு செய்தி, பெற்றவளின் சொற்தகிப்பை உணர முடிகிறது. அன்று இரவு முழுவதும் வராமல், மதுக்கடையில் குடித்துவிட்டதால், விபரீதம். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அம்மாவோடு சில காலம் சென்று தங்கினாலும், திரும்பவும் அலுவலகப் பணிக்குத் வருகிறாள். இங்கே வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வு உருபெறுகிறது. மிளர்தல் இப்போது உடல் வனப்போடு, மினுக்கான உடையணிந்து பளிச்சென்று மாறுகிறாள். தொடக்கக் காலத்தில் மகேந்திரன் தன்னைச் சுற்றி வரும்போது, திட்டி விரட்டியவள், அடுத்தவள் கணவன் என்று தெரிந்தும், மனம் தடுமாறாமல், உறவாடுகிறாள். தன்னுடல் சிந்தனைகளைக் கடந்து வென்று விடுகிறது.
கார்த்திகேயன், மகேந்திரன், அடுத்து சவிதா எனும் கதாபாத்திரம் தான் அவளுக்கான வாழ்வு முடிவை எழுதி வைத்திருக்கிறது. சவிதாவின் பரிதவிப்பைக் கூறுகிறது. அவளை அறிமுகம் செய்யும்போது, வறுமையே சூழ்ந்து நிற்கிறது. விபத்தில் இறந்த கணவனுக்கு, அலுவலகத்தில் இறப்புப்பண தேவைக்காக வந்தவளுக்கு மதிப்பில்லை. உயர் அதிகாரிகளைப் பார்க்க விடாமல், தலைக்கணத்தால் ஆடுகிறாள். மூன்றாவது முறையாக பவுனுவால் அலைக்கலைக்கப் படுகிறாள். வயது வித்தியாசம் பார்க்காமல் அலச்சியத்தோடு நடத்துகிறாள். “ஏம்மா இந்த ஃபைலு மேலிடம் வரை சென்று வரவேண்டியிருக்கு. செலவு செய்யாம எதுவும் ஆகாது. வெறுங்கை முழம் போடாது. சும்மா தேவையில்லாம கெடந்து அலையாதே ஆமா. என்று மனசாட்சியைக் கொன்றுவிட்டுப் பேசினாள். வர்றவங்க பூரா இப்படியே புலம்பிக்கிட்டிருந்தா நாங்க என்னதான் பண்றது?. விரலைச் சூப்ப வேண்டியதுதான். என்றாள். பிறகு அவளே அதற்கொரு தீர்வையும் சொன்னாள். இன்னிக்கு உன் வேலை ஆகாது. நீ போயிட்டு நாளைக்குக் காலையிலயே ஐயாயிரம் ரூபா எங்கயோ புரட்டிக்கிட்டு வந்திடு”.பக்20.
பொட்டலம் – இச்சொல் இக்கதையில் மிக முக்கியமான நகர்வு. ஏனென்றால், இப்பொட்டலத்திற்குப் பின்னிருப்பது ஓர் ஆசை, விருப்பம், புதிரும் கூட. கையூட்டு வாங்கி, வாங்கிப் பழக்கப்பட்டவள், யாரோ ஒருவர் மதியச் சாப்பாட்டிற்கு பிரியாணியை அதுவும், இஸ்மாயில் கடை பிரியாணி என்றால், தனி விருப்பம் உள்ளவளாக மாறிப் போகிறாள். இந்த ருசி பவுனுவின் நாவில் ஊற, பலரையும், ஏன் சவிதாவையும் வாங்கி வர உத்தரவிடுகிறாள். “இரண்டு நிமிடங்கள் ஓடியிருக்கும். அறைக்குள்ளிருந்து பவுனரசியின் அலறல் சத்தம் கேட்டது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. லீலாவதியும், சந்திராவும் எழுந்து ஓடினார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்றார்கள். பொட்டலம் பிரித்தபடி மேசையில் இருந்தது. உள்ளே வாழையிலையில் படித்தபடி பிரியாணி அளவிற்கு மஞ்சள் நிறத்தில் மலம் மடித்து வைக்கப்பட்டிருந்து. நாற்றம் குடலைப் புடுங்கியது. பிரியாணி அவசரத்தில் பவுனரசி எங்கயோ பார்த்துக் கொண்டு ஒரு கை மலத்தை அள்ளி கையில் வைத்திருந்தாள். அதில் சில துளிகள் புடவையில் சிதறியிருந்தன. அவளால் அவமானம் தங்கிக்கொள்ள முடியவில்லை”பக்20.
தான் என்ன செய்தாலும், தற்சார்பு நிலை இருக்கலாம். தப்பில்லை. அதற்காக, கீழான நிலைக்குத் தன் செயல்பாடுளைப் பொருத்துவதென்பது மிக மிக தீங்கானது. கர்மா யாரையும் விடுதில்லை. பவுனுவுக்கும் அப்படித்தான். இந்நேரத்தில் சவிதாவின் மனக் கவலையை எண்ண வைக்கிறது. அவளின் பாதிப்பே மலமாக, அவமனங்களாக, தற்கொலைச் செய்யும் மனநிலைக்கு உந்தித் தள்ளியிருக்கிறது. மனிதம் மற்றும் பெண்மையின் உணர்வுகளைப் பெண்ணறியாமல் போனதின் வீழ்ச்சியே விசும்பி இருக்கிறது.
அடக்குமுறையும் தியாகமும்
மிதவை – தான் இறந்தாலும், அது நியாயத்திற்காக, இந்த ஊர் மீண்டெழும் என்று வருகிறபோது, அவர் செய்த செயல் வாசிப்பவரைக் கவலையில் ஆழ்த்துகிறது. பண்ணையாராக வலம் வரும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிராமத்தின் கதை. தாங்கள் மட்டுமே வசதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்னும் நினைப்பை எப்படி அணுகிக் கொள்வது.
பெருமாளய்யா, பொன்னம்மாள், கருணாகரன் இம்மூன்று கதாபாத்திரங்களே, முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. சோலையத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் பேச்சுக்குளம் தான் கதையின் மையம். இந்த மையத்தைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவர நினைக்கும் கருணாகரன் என்பவர், அங்கே ஆதிக்கச் சக்திப் படைத்த குடும்பத்தின் மூத்த மகன்.
விவசாயத்திலிருந்து, எல்லாத் தேவைகளுக்கும் பரிபூரணத்தைக் கொடுக்கக் கூடிய பேச்சிக்குளம், இறுதியில் சாக்கடையாக மாறிப் போகிறது. இதனால், மக்கள் அவதிப் படுகிறார்கள். விவசாயத்திற்கும், குளிப்பதற்கும், மற்ற காரியங்களுக்கும் தூரத்திலிருக்கும் போர் வசதியை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்லும் போதுதான் பொன்னம்மாளின் மகளான வெண்ணிலாவை வெறிநாய் கடித்து மருத்துவமனையில் கிடக்கிறாள். தன் மகளின் நிலையறிந்து வேதனை அடைகிறாள்.
இந்தக் கதையில் முரண்பாடாக, தான் – தன் நலம் மட்டுமே எதிர்நோக்கிச் சொல்லும் அவரின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாக அமைகிறது. அவரை எதிர்த்துக் கேள்விக்கேட்க அவ்வூர்காரர்களுக்கு பதட்டமே குடிகொள்கிறது. ஊரின் சிலரைத் தன் கட்டுப்பாட்டிற்குள், மதுவைக் கொடுத்து அடிமையாக்கி வைத்திருக்கிறான். இங்கே இரண்டு விதமான மனநிலையின் தகிப்பை எடுத்தாள முயற்ச்சிக்கலாம். ஒன்று பொன்னம்மாளின் நிலையாக, “பாவியளா… இந்தத் தெருவுல ஆம்பளங்களே இல்லையா?. கால் கழுவுறதுலர்ந்து குளிக்கற வரைக்கும் எல்லாமுமா இருந்திச்சே பேச்சிக்குளம். அந்தத் தீர்த்தக்கொளத்த நாசம் பண்ணீட்டாங்களே. ஒரு குடும்பத்துக்கு மட்டும் அப்படியென்ன ராச்சியம் வேண்டிக் கெடக்கு? கேக்குறதில்லையா?.அவங்க மீன் வளர்த்துன் கொள்ளையடிக்க அன்னாடந் தெவக்கி நாங்க அல்லாடனுமா?”பக்37. இரண்டாவதாக, “ஊர்க்காரர்களில் சிலரை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு வேண்டிய மட்டும் மது விருந்து நடத்தித் தயார் செய்வார்கள்”பக்39. மேற்கொண்டு தன் சுயலாபத்திற்கு கட்டுக்குள் வைக்க நினைக்கும் அவர்களின் எண்ணமெல்லாம் அந்தப் பேச்சுக்குளம் தான். ஊர் ரெண்டடிப்பட்டு போகும்போது, தன்னுடைய ராஜ்ஜியம் விதிமுறைக்கு உட்படுத்தும் என்பது அதிகார வர்க்கத்தின் தொனி. அதை நடைமுறைப்படுத்தும் விதமாக, குளத்தில் மீன் குஞ்சுகளை விட்டு, இலாபம் பார்க்க நினைக்கிறான். அதன் முதல் பலி ஆடாக, வெங்கடாசலத்தின் மனதை மாற்றுகிறான். ஊர் கோவிலைப் புதுப்பிக்க பணம் தருகிறேன், குத்தகைப் பணமென ஏமாற்றிப் பின், தன் நினைத்ததை நிறைவேற்றியும் விடும் சூழ்ச்சமத்தில் வெற்றிப் பெறுகிறான்.
காலப்போக்கில் அவரும் இறக்க, எனக்குத்தான் இனி குளத்திற்கான உரிமை இருக்கிறது. கேள்விக்கேட்க வந்த மக்களை அடித்துத் துரத்தும் போக்கைக் கையாள்கிறான். அடித்தும் விரட்டுகிறான். தனக்குத் தெரிந்த உறவு நபர்களோடு. ஆரம்பத்தில் குளத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என விதிமுறைக்கு உட்பட்டாலும், நாளடைவில் அதற்குத் தடை போடுகிறான். மீன் குஞ்சுகளுக்குப் பல தரப்பட்ட உணவுகள் அதாவது, “பல்வேறு தீனிகளைப் போட்டான். கோழி, பன்றியின் கழிவுகளைச் சேகரித்து அள்ளி வந்தான். மீன் நன்கு வளர வேண்டுமென்னும் யோசனையில் அழுகிய இறைச்சிக் கழிவுகளை வண்டி வண்டியாய்க் கொண்டு வந்து கொட்டினான். கேட்க நாதியில்லாமல் போயிற்று. அவன் கொடி உயரப் பறந்தது”பக்42.
இதனால் குளம் அசுத்தமாகி, நாற்றமெடுக்கத் தொடங்கின. நாற்றத்தைப் பற்றி யெல்லாம் கவலைக் கொள்ளாதவனுக்கு, இலாபத்தின் மீதே கண் பதிகிறது. இதுவும் ஒருவகையான தற்சார்பு நிலையைப் பேசுகிறது. தன் சுகங்களே போதும் என்கிற மனப்பாண்பு அது பிறருக்கு ஆபத்துதான். இறுதியில் பொன்னம்மாள் நீதி கேட்கிறாள். ஆனால் கருணாகரனிடம் எடுபடவில்லை. ஊர்காரர்கள் பெண்ணின் வாயைத்தான் அடைக்கிறார்களே தவிர அதிகாரத்தின் மீது எந்தச் சலனமும் திசைத்திருப்பவில்லை. பெருமாளய்யா கதாபாத்திரமே எதிர்த்துக் கேள்விக்கேட்டு சண்டை செய்கிறது. அதிகார வர்க்கம் மிதித்துத் தள்ளுகிறது, குளத்தின் படிக்கட்டுகளில். தான் சிறுவயதிலிருந்து பார்த்த இக்குளம், அழகு – ஓடிவிளையாடியத் தருணம் இப்போது நஞ்சுண்டு, முகம் சுழிக்கும் வகையில் மாறிப்போனதை நினைத்து, வருத்தப்படுகிறார். கடைசிக் காலக் கட்டத்தில் இருப்பதைவிடவும், இந்த ஊருக்காக இறப்பதே மேல் என்று குளத்தில் விழுந்து இறக்கும் செய்தியே, துன்பத்தின் மறுவுருவமாக மிதக்கிறது.
மனிதர்களின் இருநிலை வேறுபாடுகள்
பெருகும் வாதையின் துயர நிழல் – ஓர் ஆணின் மனத்தகிப்பை எழுதும் கலை என்றே குறிப்பிடலாம். வாசகர்களுக்குக் கடிதம் எழுதுவது போல், துல்லியமாக அமைக்கப் பட்டிருக்கிறது. பல கிளைகளோடு காற்றில் ஆடிய மரமொன்று சூரா வளியால் சிக்குண்டு, அதிலும் குஞ்சுப் பொறிக்கக்கூடிய பறவைக் கூடொன்று சரிந்து நொருங்கினால், நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இங்கேயும் ஒரு தகப்பன் மகனை வைத்துக்கொண்டு மன நெருக்கடிக்குள் பந்தாடப் படுகிறார்.
முகுந்தன் பன்னிரண்டு வயது சிறுவன். தன்னுடைய இழப்பைச் சரிசெய்யும் உத்தியைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறான். அந்தளவிற்கு மனப்பக்குவம் அச்சிறுவயதில் வருவது கடினமே. வந்தால் அபூர்வம் தான். கதையில் அப்படியல்ல. மனிதர்களின் பாவனைகள் பல நிலை. அதாவது உணர்வுத் தன்மைகள் காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்கிறது என்பதை அப்பட்டமாகப் பதிவு செய்கிறது.
ஒரு குடும்பம் திடீரென்று மகிழ்ச்சியான, நிம்மதியான பாதையிலிருந்து விலகும் போது, அத்தடுமாற்றத்தை யாராலும் உள்வாங்கிக்கொள்ள முடியாது. மனைவி, குழந்தையை ஒரு விபத்தில் தொலைத்தவருக்கு ஏற்படும் மன உளைச்சல், பரிதவிப்பை மிகவும் ஆழமாக பேசியிருக்கிறது. சிவப்புநிற வண்டியில் தான் தன் அம்மாவும், சகோதரியும் இறந்தார்கள் என்று, முகுந்தன் சிவப்பு நிறத்திலிருக்கும் அனைத்தையுமே வெறுக்கும் முடிவுக்கு வருகிறான். இரண்டு விதமான குறிப்புகளைக் கதைக்குள் சுட்டிக் காட்டலாம்.
ஒன்று பரணிக்காவினுடைய சிவப்புநிற வண்டியைக் கொழுத்தி விடுகிறான். அதன் கரணமாக பொதுவெளியில், அச்சிறுவனைக் கடுமையாகச் சாடுகிறாள். “இங்கப் பாருய்யா. நீ வாங்கித் தரலைன்னா யாரு விடுவா. புள்ளையா பெத்து வெச்சிருக்க?. பேயி… சண்டாளி… அது மூஞ்சியையும் முகரையையும் பாரேன். என்றாள் பரணிகா”பக்30. இச்சம்பவம் நடந்த பிறகு பரணிகாவின் மனநிலை இப்படியாகத் தகிக்கிறது. பாசம் அற்று இருக்கிறது. அருகில் வசிப்பவராக இருந்தாலும், அத்தை என்னும் உரிமை எங்கே ஓடி ஒழிந்தது. இதற்கு முன் இப்பாத்திரத்தின் செயல்பாடு வேறுவிதமாகவும் அமைந்திருப்பது தான் வியப்பு. அதை விளக்கும் வகையில், “எப்படியெல்லாம் பழகியவள். தவமணியிருந்த போது எப்படியெல்லாம் உறவு கொண்டாடினாள். அவள் இருந்திருந்தால் இப்படி பேசியிருப்பாளா?. அண்ணன் என்று வார்த்தைக்கு வார்த்தை மருகியவள் வாய்யா, போய்யா என்று பேச எப்படி மனம் வந்தது? செய்த தவறை ஒப்புக்கொண்டாகிவிட்டது. பதிலியாக புது வண்டியை வாங்கித் தருவதாகவும் உறுதியும் கொடுத்தாகி விட்டது”பக்30. ஒரு தகப்பன் என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாகச் செய்திருக்கிறார்.
இம்மாதியான இருவேடமிடும் மனிதர்களிடத்து, முகுந்தனைக் காப்பாற்ற வேண்டும். மனக்கவலையிலிருக்கும் அவனுக்கு சரியான பக்குவத்திற்குக் கொண்டுவர வேண்டுமென, அங்கிருந்து வேறொரு ஊருக்கு இடம்மாற முடிவு எடுக்கிறார். அதற்கு முன் பரணிக்காவிற்கு அன்றைய நாள் மாலையிலேயே, அவள் விருப்பப்படி அதே நிறத்தில் வண்டியை வாங்கிக்கொடுத்தப்பின், மறுபடியும் அவளின் மனம் புதிய மதிப்பான வார்த்தைகளுக்குள் போவதைப் பார்த்து ஆச்சர்யம் தான் கூடிவருகிறது.
சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று – இக்கதை இரண்டு நாட்களில் நடக்கும் கதை. செருப்புத் தைக்கும் தொழிலாளியின் வாழ்வில் ஏற்பட்ட துரோகத்தின் சிதறல்களே விம்மியிருக்கிறது. மானம் என்பது இமயமலையையும் தாண்டிய பெருஞ் சுவர். எவ்வளவு பெரிய சுனாமியே வந்தாலும், தகர்த்தெரிய முடியாது. இங்கே பரந்தாமன் எனும் பாத்திரமே முரணாக வருகிறது. நம்பிக்கை உடைத்தெரியப் பட்டிருக்கிறது. வீராச்சாமி மற்றும் பரந்தாமன் குடும்பம் செருப்புத் தைக்கும் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாளில் பேருந்து மோதி பரந்தாமனின் தந்தை சம்பவ இடத்திலேயே மரணமடைகிறார். அக்காலக்கட்டத்தில் தன் தம்பியாகவே பார்த்து, நினைத்து பல உதவிகளைச் செய்கிறார். ஆனால், காலம் அனைத்தையும் மாற்றி விடுகிறது.
பணம் மனிதனின் அனைத்து விதமான, மனதையும் மாற்றும் பெரும் சக்தி அதற்குள் இருக்கிறது. பரந்தாமன் உதவிகளைப் பெற்று, படித்து வாழ்வில் முன்னேறுகிறான். சென்னையில் பணவாருவாய் மிகுந்த பணியில் சேர்கிறான். திருமணம் – இரண்டு குழந்தைகள் என்று அவரின் வளர்ச்சியைப் பற்றி, வீராச் சாமியிடம் கூறிப் பெருமைப்பட வைப்பார் – வைக்கிறது. தன்னுடைய இரண்டு மகன் களுக்கும் அவனின் புராணங்களைச் சொல்லிக் கல்வியின் மகத்துவத்தை எடுத்துரைப்பார். நன்றாகப் படித்தால், தன் பிள்ளைகளுக்கும் பரந்தாமனைப் போல், கஷ்டப்படாமல் வாழ்வார்கள். இந்தத் தொழில் நம்மளோடே போகட்டும் என்கிற நினைப்பு, இறுதியில் தகர்த்தெரியப் பட்டிருக்கிறது. இரவில் தன் அப்பா தூங்காமல் தவிப்பதைப் பார்த்து வருத்தப்படும் மகனின் மூலியமாகவே, அப்புதிரின் விடையை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். “ஏங்கண்ணு உனக்கு இந்தக் கந்தவேலுப்பய சித்தப்பன் இல்லை. சென்னையில இருக்கற என் தம்பி எல்லாத்தையும் பாத்துக்கிடும்”பக்65. “உச்ச போதையில் சிகரெட் பற்ற வைத்து வெளியே வந்தார் பரந்தாமன். வீராச்சாமி எழுந்து ஓடினார். இவரைக் கண்டதும் காணாதது போல முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றார் பரந்தாமன். உள்ளே சென்று சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாய் பணம் எடுத்து வந்து வேண்டா வெறுப்பாக வச்சிக்க என்றார்”பக்68. “நீ பழைய பரந்தாமனாய் இருப்பாய் என்றுதான் பாசத்தில் பார்க்க வந்தேன். நீ நினைப்பதுபோல நூறு கொடுப்பாய் என வரவில்லை. நீ வந்து என் பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லுவாய். உன்னைக் கண்டால் என் பிள்ளைகளுக்கு உந்துதலாய் இருக்குமென்று தான் அழைத்தேன் தவிர வேறொன்றுமில்லை”பக்69. இந்தக் கதையில் குறிப்பிடப்பட வேண்டிய விசயங்கள் நிறையவே இருக்கிறது.
தன்னுடைய கடந்த காலத்தில் உதவி செய்தவரை நினைத்துப் பார்க்காமல், வசதி வாய்ப்புகள் வந்ததும், அதை மறந்தது. மற்றொன்று செருப்புத் தைக்கும் தொழிலிருந்து விடுபட்டு, உடன் பிறந்த இரத்தமான கந்தவேலை எவ்வளவோ படி படி என்று போராடினாலும், வீராச்சாமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பரந்தாமனை முன் உதாரணமாக வைத்து, தன் குழந்தைகளையாவது கல்வியில் முன்னேற்றி விட வேண்டும் என்னும் சாதாரண மனிதன் படும் மனஅவஸ்தை எண்ணிடலங்காது. இதை நிருபிக்கும் விதமாக அந்த ஓட்டலில் நடக்கும் காட்சிகளே சரியானது. இதுவும் ஒரு வகையான துரோகத்தின், நன்றியை மறந்த வெளிப்பாடுகள்தான்.
தவிப்புகளை உணர்த்துதல்
உயிர்வேலி – அஞ்சலையின் வாழ்வினை நேர்த்தியான முறையில், தொடக்கத் திலிருந்து முடிவு வரை, ஒரு பதற்றமான சூழலை ஆசிரியர் உருவாக்கிக்கொண்டே காட்சிகளைக் கடத்துகிறார். ஆழ்துளைக் கிணறென்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கும் குறும்படமாக காண்பிக்கப் பட்டிருக்கிறது. கணவனை இழந்த துக்கமே அவளைக் கொல்லக்கூடிய காலங்களில், இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, வாழ்வின் கடினமான பாதைகளைத் தாய்மையின் உணர்வோடு போராடும் மனதை, வாசிக்கும்போதே கண்ணீர் விட வைக்கிறது.
திருத்துறைப்பூண்டிக் காய்கறிச் சந்தையில் காய்கறி வாங்கி, தன் வீட்டில் வைத்து வியாபாரம் செய்து பிழைக்கிறாள். அப்படியொருநாள் வாங்கும் போதுதான், ஒரு சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த விட்ட செய்தியைப் பார்த்து பதறுகிறாள். தன் வீட்டருகிலும் ஒரு ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் கிடக்கிறது. ஒருவேளை நம்பிள்ளைகள் அங்கு சென்று விடுமோ, கர்பிணியான பவுனம்மாள் சரியாக பார்த்திருப்பாளா? என உள்ளத் தகிப்போடு பேருந்து நிலையத்தில் காத்துக்கிடந்து வீட்டிற்கு ஓடோடிப் போகிறாள். நிகழ்காலம் – கடந்தகாலம் – நிகழ்காலமென கால வரையறைக்குள், அதிலும் கடந்த காலத்தில் தன் கணவனின் வாழ்வுநிலை – அவரின் இறப்பு எப்படி நடந்தது போன்ற தகவல்கள் கிடைக்கிறது.
இக்கதையிலும் ஒரு முரணான பாத்திரம் வலம் வருகிறது. வந்தியதேவன் வயலில்தான் மூடப்படாத அக்கிணறு இருக்கிறது. “சிறு குழந்தைகள் தெரு முழுவதும் இருக்கின்றன. விவரமறியாத பிள்ளைகள். விளையாட்டுத் தனமாய் அங்கே வந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டால் என்ன செய்வது?. அதை பேசக்கூடாதா?. என்றுதான் கேட்டாள். அதற்கு வயல் சொந்தக்காரன் வந்தியதேவன் திட்டிய திட்டு கொஞ்ச நஞ்சமில்லை. அவன் உபயோகித்த கெட்ட வார்த்தைகள் அகராதியில் இல்லாதவை. சொல்ல முடியாது. அத்தோடு விட்டாள் அஞ்சலை.”பக்88. அக்கறை இல்லாத மனிதர்கள் இருக்கும் வரை, பிரச்சனைக்கு முடிவு வராது. அதன் வினைதான் அஞ்சலையை இன்றும் பதற்றமடைய வைக்கிறது. இதற்கு முழுக்காரணமும் அந்த வயல்காரனைத்தான் சாரும். முடிவில் மகிழ்ச்சியான காட்சிகளை அவளுக்குக் கொடுத்திருக்கிறதை நினைக்கும் போது, நமக்கு எச்சரிக்கைத் தன்மையில் மனதை நிரப்புகிறது.
தீய்மெய் – கணவன், மனைவி இருவருக்குமான புரிதல் இல்லாதபோது, வாழ்வில் எரிமலைப் பிளவே ஏற்படும். கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாம். வார்த்தைகளைத் தடம்மாறிச் சிதறிவிட்டதால், அந்த பழி பாவத்திற்கு ஆழ்த்தி விட்டார்கள் என்று நொந்தே தன்னைத் தீக்கு ஒப்புக்கொடுத்து விட்டாள். இக்கதையில் சம்புலிங்கம் – சங்கரன் – கோகிலா – கொத்தனார் என இப்பாத்திரங்களைச் சுற்றிதான் கதைமையம் அமைந்திருக்கிறது.
சிறுவயதிலேயே அம்மாவை இழந்த சங்கரன், தன் கட்டுப்பாட்டில் எந்தக் குறையுமில்லாமல் வளர்க்கப் படுகிறான். ஆனால் அன்பு மட்டுமே குறையாக இருக்கிறது. அதற்கு ஈடுசெய்யவே, கோகிலாவைத் திருமணம் செய்து வைக்கிறார், தந்தையான சம்புலிங்கம். அவள் வந்தப்பின்புதான் வீடு வீடாக இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளோடு வாழ்வு நிம்மதியாக செல்கிறது. கதையின் திருப்புமுனை என்று வருகிறபோது, கொத்தனார் கதாபாத்திரமே பிள்ளையார் சுழிப் போட்டிருக்கிறது. தொடக்கக் காலத்தில் அவளுக்குப் போன் வாங்க வேண்டுமென்ற விருப்பம் இருந்திருக்கிறது. அதைத் தன் கணவரான சங்கரனுடன் பகிர்ந்திருக்கிறாள்.
இன்று புதிய வீடு கட்டுவதற்காக, கொத்தனார் மற்றும் சித்தாள்கள் வந்திருக்கின்றனர். இதில் கோகிலா கொத்தனார் போனை வாங்கிப் பார்த்திருக்கிறாள். பார்த்ததும், அவரிடம் சொல்லிவிட்டுதான் சன்னலுக்கருகில் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாள். ஆனால், போன் காணவில்லை என்று அவள் மீது திருடிப் பட்டம் கட்டப்படுகிறது. அவளின் விளக்கத்தை யாரும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. “எல்லாம் அந்தச் செல் சனியானால் தானே நடந்தது. அது எவ்வளவு தொகையிருக்கும்?. கொத்தானர் சொன்னான் என்பதற்காக திருடியாய் ஆகி விடு வோமா? அதற்காகவா இப்படி ஒரு முடிவு எடுப்பது”பக்99. “எல்லோரும் சேர்ந்து கோகிலாதான் செல்லை எடுத்து மறைத்துவிட்டாள் என்று முடிவிற்குள் வந்தார்கள்”பக்101. “அவள் அவன் தலை மீது சத்தியம் செய்தாள். தன் பிள்ளைகள் மீது சத்தியம் செய்தாள். அவளுக்கு அழுகைப் பீறிட்டுக் கொண்டு வந்தது. நீ என்சட்டைப் பையிலிருந்தே அடிக்கடி காசைத் திருடுறவளாச்சே. ஏங்க உங்க பையிங்கறதால எடுப்பேங்க. இல்லங்கள. அது திருட்டா?. வீட்டுக்குத் தேவையானத வாங்கத் தான எடுத்திருக்கன்”.பக்101. சாதாரண விசயம்தான். வலி நிறைந்த சொற்கள், இளம் மொட்டான மனதில் கூர் கத்திமுனையால் குத்தும்போது, காயத்தின் வீரியத்திற்கு ஆற்றல் எல்லையில்லாதது.
தன் கணவனும் தன்னைத் திருடி என்ற பட்டம் சூட்டுவது யாருக்குத்தான் பிடிக்கும். இரவில் அனைவரும் கண்மூடியப்பின் உடலுக்குத் தீ வைத்தது, வேதனை. திருடிப் பட்டத்தோடு இவர்களின் முன் வாழ்வதென்பதை நினைத்துப் பார்த்திருப்பாள். அம்மா எனும் அன்பைப் பெறமுடியாமல், சங்கரன் வளர்ந்தான். தற்சமயம் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அப்படியாக அடுத்த வரிசையில் இருப்பதை நினைத்து சம்புலிங்கம் மனக்குமுறலில் திணருகிறார். முடிவில் காணாமல்போன போன் சிமெண்ட் கரைசலிலிருந்து கிடைக்கும் போது, சங்கரனின் மனநிலை என்னவாக இருந்திருக்கும். அதொரு ஆழமான தண்டனைதான்.
முடிவுரை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஓச்சேரி கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மீனாசுந்தர் அவர்கள் 20 க்கும் மேற்பட்ட நூற்களை வெளியிட்டிருக்கிறார். சமூக பிரச்சனைகளை அலசிக் கேள்வி எழுப்பும் கட்டுரைகளை, கதைகளைத் தற்சமயம் நீலம் பதிப்பகம் நடத்திய நாவல் போட்டியில் பரிசுபெற்ற தளவாய்த் தீட்டு வெகுசனப் பார்வையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவரெழுத்தின் சிறப்பு உருவகங்கள். கதாபாத்திரங்களின் அறிமுகம் ஒருபுறமென்றாலும், பலதரப்பட்ட மனிதர்களின் சுவடுகளைக் கண்டுகொள்வது மட்டுமல்லாமல், உணர்வுகளை – உணர்ச்சிகளைத் தொடக்கத்திலிருந்தே வெளிப்படுத்தக் கூடிய அவ்வுருவகத்திறன் என்பது அதீதமாக மேலிடுகிறது. அதுவே எழுத்திற்கான ஈர்ப்புவிசை எனலாம்.
கடந்த காலத்தில்தான் கதையின் மைய சரடுகளை உணர வைக்கிறது. சொல் முறை வடிவமைப்பில் காலநிலைகளை மாற்றி மாற்றி அமைத்தாலும், எவ்வித சலனத் தடுமாற்றத்திற்கு வாசிப்பில் இடம்கொடுக்கவில்லை. பெண்களே முக்கிய இடம் வகிக்கிறார்கள். தந்தை – மகனின் உறவு, கணவன் – மனைவி உறவு, உடல் ஏக்கம் – உடல் அழிப்பு, வாழ்வின் எண்ணற்ற மேடுபள்ளங்களின் தடத்தை அறிந்துகொள்ள போட்டிப் போடும் பதிலுக்கும் புதிருக்குமான விடையைக் கண்டடைய முடியாமல் தோற்றுப்போதல், இல்லைப் பக்குவப்படுத்துதல் எனக் கதைகள் நம்மை நெகிழ வைக்கிறது. (புலன் கடவுள் : ஆசிரியர் மீனா சுந்தர் ; டிஸ்கவரி பதிப்பகம்)

முத்தழகு கவியரசன்,
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் சொந்த ஊர். இயற்பெயர் மு.கவியரசன். (20,ஜீலை,1991) விவசாயக் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரி. மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம். தூய சவேரியார் கல்லூரியில், (பாளையங்கோட்டை) சுப்ரபாரதிமணியன் சிறுகதைகளில் முனைவர் பட்டம். இவரின் முதல் நாவலான “பரிதவிப்பு” 2021 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் தேர்வு இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. “காட்சிகள் சொன்ன காரணங்கள்” குறும்புதினம், சுப்பு லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் (மதுரை) பாடத்திட்டத்தில் மூன்று ஆண்டுகளாக இடம் பெற்றது. “மகிழ்ந்திருங்கள்” நாவலைப் பன்முக கலை இலக்கிய மேடை (தேனி) வெளியிட்டது.
வாசகசாலை, உங்கள் நண்பன், புதிய மனிதன், உயிர் எழுத்து, காணி நிலம், இலக்கியச்சுடர், இலண்டனிலிருந்து வெளியாகும் காற்றுவெளி போன்ற பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள், கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இவரின் முதல் சிறுகதையாக, திருப்பூரிலிருந்து வெளியாகும் கனவு இதழில் “பசியும் மற்ற பிறவும்” எனும் தலையில் பிரசுரமானது.