அவள் ஜீன்ஸ் பேண்ட்டும் சட்டையும் அணிந்திருந்ததை கவனித்த சண்முக வடிவுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது என்றாலும் அவளோடு சரளமாக பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாள். பஸ்ஸின் காலைநேர நெரிசலுக்கும் கசகசப்புக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதைப் போல அவள் குளிர்ச்சியாக இருந்ததைப் பார்த்து வடிவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. மெல்ல மற்ற பெண்களைத் திரும்பிப் பார்த்தாள். எல்லோரும் வேலைக்குப் போகும் பெண்கள். குளித்த ஈரம் காயாத தலைகள் என்றாலும் வியர்வை அரும்பி நிற்கும் முகங்கள்.
வடிவு இன்னும் குளிக்கவில்லை. விடிகாலைக்கு முன்பே மார்க்கெட்டுக்கு கிளம்பி வந்துவிட்டாள். இனி போய் இந்த காய்கறிகளை தெருவில் அலைந்து திரிந்து விற்றுவிட்டு பிறகுதான் குளிக்க வேண்டும்.
அந்த ஜீன்ஸ் பேண்ட் பெண்ணிடம், உன் பேரென்ன என்று கேட்டாள். அவள் ஏதோ சொன்னாள். பஸ் இரைச்சலுக்கு நடுவே அது என்ன பேர் என்றே அவளுக்கு கேட்கவில்லை அல்லது புரியவில்லை. இரைச்சல் இல்லாமல் இருந்தால் கூட அது தனக்குப் புரியாத பெயராகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அந்தக் குழப்பமும் அவளைத் தயங்கச் செய்தாலும், வழக்கம் போலவே அதை உடைத்துவிட்டு, மெல்ல அந்தப் பெண்ணின் காதருகில் “எனக்கு ஒரு பையன் இருக்கான் அவன நீ கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டாள்.
அந்தப் பெண் கண்களில் விசித்திரம் பொங்க அவளைப் பார்த்தாள். அவள் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. அவள் உதடுகளும் ஈறுகளும் பற்களும் அந்த மெல்லிய சிரிப்பின் போது ஒளிர்ந்தன. அவள் தன் இடது கையால் வடிவை தோளோடு சேர்த்து ஒரு ஆதரவற்ற முதியவளைப் போல மெல்ல அணைத்துக் கொண்டாள்.
வடிவுக்கு அது நம்பிக்கை அளிப்பதாய் இருந்தது. “என்ன சொல்ற உங்க வீட்ல வந்து பேசட்டுமா?” என்றாள். இப்போது அவளுக்கு சட்டென ஒரு எரிச்சலும் கண்மூடித்தனமான கோபமும் வந்தது. வெறுப்பும் குரோதமும் வெளிப்படும் கண்களை மறைக்க நினைத்தவளாய் பார்வையை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள். அந்த முகம் மெல்ல மெல்ல இறுகிக் கொண்டே வந்தது.
வடிவு தன்னுடைய நிறுத்தம் வந்ததும் சொல்லாமல் கொல்லாமல் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டாள். தன் மேலேயே அவளுக்கு கோபமாய் வந்தது. ‘பாக்கற பிள்ளைங்க கிட்டயெல்லாம் கிறுக்கச்சி மாதிரி இப்படி கேக்கணும்னு எனக்கு ஏன்தான் தோணுதோ தெரியல’ என்று சலித்துக் கொண்டே கூடையை தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு நடந்தாள்.
மத்தியான வெய்யிலில் வீட்டுக்கு வந்தாள் வெப்பத்தில் அவள் கண்களும் உடலும் சுடேறியிருந்தன. அப்படியே போய் எங்காவது ஒரு கிணற்றில் விழுந்துவிட வேண்டும் போல இருந்தது.
வீடு திறந்திருந்தது. சதா வீட்டுக்கு வந்துவிட்டான் போல. இன்னைக்கி சம்பள நாளா என்ன? ஆனால் இன்று புதன் கிழமை வியாழக் கிழமைதான் சம்பள நாள். ஏன் வந்துவிட்டான்? சதா சதா என்று மெல்ல அழைத்தாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை. குடித்துவிட்டான் போல. ‘கல்யாணம் வரைக்குமாவது கொஞ்சம் இந்த கருமத்த குடிக்காம இருடான்னா கேக்கறானா எல்லா என் தலையெழுத்து’ என வெறுப்பாக முனகினாள்.
‘ஒவ்வொரு பசங்களாட்டம் எவளையாவது இழுத்துகிட்டு வந்து இவளத்தான் கட்டிக்குவேன்னு சொல்றதுக்கும் துப்பு இல்ல. இன்னும் எத்தன காலத்துக்குதான் இப்படி சின்னப்படறதோ தெரியல’ என புலம்பிக் கொண்டே சாப்பிடாமல் போய் படுத்துக் கொண்டாள்.
விடியற்காலையில் மார்க்கட்டுக்குப் போகும் போது கல்யாண புரோக்கர் சீனி அண்ணனும் பஸ்சுக்கு காத்திருந்தார். அவரைப் பார்த்ததும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். “பொண்ணு பாக்கறே பொண்ணு பாக்கறேன்னு இன்னும் எத்தனை நாளைக்குதான் சொல்லிகிட்டிருப்ப. காசு வேணும்னா அஞ்சோ பத்தோ சேத்து கூட வாங்கிக்க எனக்கு கொஞ்சம் சீக்கரமா ஏதாவது ஏற்பாடு பண்ணு இல்லைன்னா அவ்வளவுதான்” என்றாள்.
“கொஞ்சம் ஏழ பாழ குடும்பம்னா வேணாங்கற மூணு பவுனாவது போடணுன்னு பிடிவாதம் பிடிக்கற. இந்த காலத்தில அவனவன் பவுனு போட்டு கல்யாணம் பண்ணிகிட்டு போறான். பையனுக்கு படிப்பும் இல்ல ஒண்ணும் இல்ல. பவுனு போடறவன் எல்லாம் கவர்மெண்ட் மாப்பிள்ளையாத்தான் கேக்கறான் நான் என்ன பண்ணட்டுஞ் சொல்லு” என்றார்.
அன்று ஒரு ஜவுளிக் கடையில் துணி மடித்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து “என் மவனை கட்டிக்கிறியா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். அவளும் சிரித்துக் கொண்டே “அவனும் உன்ன மாதிரி கிறுக்கனாத்தானே இருப்பான்” என்றுவிட்டாள். இவளுக்கு சட்டென கோபம் வந்துவிட்டது. “என்னப் பாத்தா கிறுக்கி மாதிரி தெரியுதா?” என்று எகிறினாள். அந்தப் பெண் சளைக்காமல் “பின்ன ரோட்ல கடையில பாக்கற பிள்ளைய என்ன ஏதுன்னு இல்லாம எம் பையன கட்டிக்கிறியான்னு கேக்கறவள என்னன்னு சொல்றது?” என்றாள். வடிவு அப்படியே வாயடைத்துப் போய் விட்டாள். இவள்ளாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டா என நினைத்துக் கொண்டவளாய் வெடுக்கென கடையைவிட்டு வெளியேறினாள்.
“இந்தப் பையனுக்கு கல்யாணம்தான் ஆவுமா ஆவாதா? பாலம்பட்டிகிட்ட ஒரு பொம்பள சாமியாடி வாக்கு சொல்லுதாமே அவகிட்டயாவது போய் கேட்டுப் பாப்பமா?” என யோசித்துக் கொண்டே தெருவில் நடந்தாள்.
வீதி கூட்டும் அலமேலுதான் சொன்னாள். அவளைப் பார்த்துதான் விவரமாக கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் அலமேலுவிடம் கேட்டபோது, “என்னம்மா நீ இப்பிடி கேக்கற. நீயே சாமியாடி எத்தன பேருக்கு வாக்கு சொல்லியிருக்க. நீ போயி வேறவங்க கிட்ட வாக்கு கேக்கலாமா?” என்றாள்.
“நா இப்ப சாமியாடறதில்ல. நம்பளால முடியல. ஒடம்பெல்லாம் முறுக்கிப் போட்டாப்புல வலி பிச்சி எடுத்துடுது. ஒரு நல்லது கெட்டதுக்கு போ முடியல. எங்கியாவது கல்யாணம் காட்சி தெரட்டி வீட்ல ஒரு வாய் சோறு திங்க முடியல. இது நமக்கு வேண்டாண்டியம்மான்னு நாயக்கர்கிட்ட போய் கட்டுவார்த்தன கட்டிகிட்டேன்.”
“என்னம்மா சொல்ற. சாமிய கட்டுவாங்களா? இந்த மாதிரி எத்தன பேரு ஒடம்புல சாமி வந்து எறங்கும் சொல்லு? அதப் போயி கட்டுகட்டி இப்படி தெய்வத்தோட கோவத்துக்கு ஆளாயிட்டியே? அப்புறம் எப்படி உம் மவனுக்கு கல்யாணம் ஆவும்? இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன். இப்ப மட்டும் என்ன நீ எழவு வீட்ல, தெரட்டி வீட்ல தீட்டு சோறு திங்க முடியுமா?”
“அடி அதுக்கில்லடி அடிச்சி காய போட்டாப்புல ஒடம்பு வலி தாங்க முடியலடி..”
“அதெல்லாம் தாங்க முடியும். கொஞ்சங் கொஞ்சமா பழகிரும். நீ அந்த கட்டுவார்த்தனய எடுத்துப் போடு. உன் மேலயே சாமி வந்து உங்குடும்பத்துக்கு நல்ல வாக்கு சொல்லட்டும்” என்றாள்.
வடிவுக்கு அந்த உடம்பு வலியை நினைத்தால் தான் பெரும் கவலையாய் இருந்தது. சாமி மெரமனையின் போது கொஞ்ச ஆட்டமா கொரஞ்ச ஆட்டமா? அமாவாசை அன்னைக்கி ராத்திரி ஏழு மணிக்கு சாமி மெரமனைக்கு முன்னாடி ஆரம்பிச்சா ஊர் பூராவும் கொட்டுக்கு தக்க ஆடிகிட்டே போவேனே அப்புறம் ரெண்டு நாளைக்கி எந்திரிக்க முடியாதே.
அந்த மாத அமாவாசையின் போது, வடிவு கையில் கட்டியிருந்த கட்டுவார்த்தனை கயிறை கத்தரித்து எரிந்தாள். சாயந்திரம் கவுண்டர் காட்டு கிணற்றடிக்குப் போய் வாலி வாலியாய் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றிக் கொண்டு ஈரப் புடவையோடு அப்படியே கோவிலுக்குப் போனாள். தூரத்தில் சாமி கோபுரம் கண்ணில் பட்டதும் அவள் கண்கள் மேலே செருகிக் கொண்டன. தானே கூப்பிக் கொண்ட கைகள் நடுங்கின. தொண்டையில் இருந்து விநோதமான சத்தங்கள் கிளம்பின.
அம்மா கோவிலில் சாமியாடிக் கொண்டிருப்பதாக ஏழுமலை சொன்னதைக் கேட்டு சதாவும் கிளம்பி கோவிலுக்குப் போனான்.
அம்மாவின் ஆட்டத்தில் முன்பு போல ஆவேசம் இல்லை. ஏதேதோ கத்தினாள். கண்களை உருட்டிக் கொண்டு பூசாரியை அடிக்க அடிக்க போனாள். சாமி நானா கட்டு கட்டினேன். என அவர் கும்பிட்டபடி நின்று கொண்டிருந்தார்.
“வடிவோட பையனுக்கு பொண்ணு கொண்டு வர்றது என்னோட பொறுப்புடா. அவ இங்க தெக்குப் பக்கமா இருந்து வருவா. அவளும் என்னோட பக்ததான்டா. அவகிட்ட நக நட்டுன்னு எதுவும் கேட்கக் கூடாது. இன்னும் ஆறுமாசத்தில இந்த சம்பந்தம் உன் வீடு தேடி வரும் போடா. அப்படி வந்தா எங்கோயில்ல வந்து பொங்க வக்கிணும்.”
சதா கண்ணத்தில் போட்டுக் கொண்டான். “இது ஆவணி மாசம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாசத்துக்குள்ள கல்யாணம் கூடிடுச்சின்னா. சித்திரை மாசம் திருவிழாவுக்கு கெடா வெட்ட முடியலைன்னாலும் கோழி சாவ அறுத்து பொங்க வைக்கிறேன் தாயி” என மீண்டும் கண்ணத்தில் போட்டுக் கொண்டான். எவ்வளவுதான் திருநீறு போட்டாலும் மலையேற மறுக்கும் சண்முகவடிவு அன்று திருநீறு போடச் சொல்லி கேட்டு வாங்கிக் கொண்டு மலையேறினாள்.
ஒரு பெரிய கவலை விட்டது மாதிரி இருந்தது. கல்யாணம் முடிவாகிவிட்டதாகவே நினைத்துக் கொண்டாள் வடிவு. அண்ணன் காடு விற்று கொடுத்திருந்த அவளுடைய பங்குப் பணம் இரண்டு லட்சத்தை கல்யாணத்துக்காக இதுவரை கை தொடாமல் வைத்திருந்தாள். இப்போது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் என் பையன கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்கத் தோன்றவில்லை. கல்யாணத்தை எப்படி சிக்கனமாக செய்யலாம் என்ற கணக்குகளே அவள் மூளையை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தன.
நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. நம்பிக்கை இழப்பின் காலம் துவங்கிவிட்ட சமயத்தில் சீரங்கம்பாளையத்திலிருந்து மோகனா என்ற பெண்ணின் ஜாதகம் தேடிக் கொண்டு வந்தபோது, அவள் உள் மனம் இவள்தான் என்று சொல்லியது. எல்லாம் கனவு போல் நடந்தது. பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடந்தன. அவர்களிடம் இவள் நகை பற்றி எதுவும் மூச்சுவிடவில்லை என்றாலும் மூன்று பவுன் போடுவதாக சொன்னார்கள். தை மாதக் கடைசியிலேயே கல்யாணம் உறுதியாகிவிட்டது.
மோகனா அப்படி ஒரு அழகியாய் இருப்பாள் என வடிவு எதிர்பார்க்கவில்லை. கடவுள் கொடுத்த வரம் சாதாரணமாய் இருக்குமா? என அதைப் புரிந்து கொண்டாள். ஆனால் பெண் ஏன் பேசாமடந்தையாக இருக்கிறாள் என அவளுக்குப் புரியவில்லை. கடவுள் அருளால் எல்லாம் போகப் போக சரியாகப் போய்விடும் என்று நினைத்தாள். கல்யாணத்திற்குப் பிறகும் குடித்துவிட்டு வருவதும் படுத்துத் தூங்குவதும் என இருக்கும் சதாவைப் பார்க்க வடிவுக்கு எரிச்சலாய் இருந்தது. அவள்தான் மருமகளை அப்படித் தாங்கினாள்.
வாழ்க்கையில் அப்பியிருந்த வண்ணங்கள் மூன்று மாதங்களில் கரைந்துவிட்டன. மோகனா எப்போதும் போனில் பேசிக் கொண்டிருப்பது வடிவுக்குப் பிடிக்கவில்லை. அவ்வப்போது ஜாடைமாடையாக அதைப் பற்றிப் பேசிப் பார்த்தாள். ஆனால் மோகனா அதைக் கண்டுகொள்ளவில்லை. சரி போய்த் தொலையட்டும் என விடுவதற்குக் கூட வடிவு தயாராய் இருந்தாள். ஆனால், அந்தப் பேச்சுகளில் ஒரு சரசம் தென்பட்டதும் பதட்டமடைந்தாள். அந்த பேச்சுகளில் மற்றோர் ஆணின் வாடை வீசியது. அவள் அதைப் பற்றிக் கேட்க பலமுறை முயன்றபோது, மோகனா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதை நம்பி அப்படியே விட முடியவில்லை. ஒருமுறை அவள் முடியைப் பிடித்து உலுக்கிவிட்டாள். அதற்கும் அவள் அசரவில்லை. மகனிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தாள். அவன் “கூட படிச்சவங்க கூட சகஜமா பேசிகிட்டிருப்பா அதப் போயி…”{ என்றான். வடிவு தலையில் அடித்துக் கொண்டு “கூடப் படிச்சவன் கிட்ட பொழுதனைக்கும் என்னடா பேச்சி. அதுவும் அவ எப்படி பேசறான்னு எனக்கு தெரியாதா? அவ்வளவு முட்டாளா நான்?” என்றாள். அவன் மௌனமாக நகர்ந்துவிட்டான்.
இவனுக்கு என்னவாயிருக்கும் என வடிவுக்குப் புரியவில்லை. நாட்கள் போகப் போக அந்த விஷயம் ஊருக்கே வெளிச்சமாகிவிட்டது. ஆனால் தன் மகன் மட்டும் எப்படி எதுவுமே நடக்காதது மாதிரி அவளோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
அந்தவாரம் வெள்ளிக்கிழமை மோகனா தலைக்கு குளித்துவிட்டு, அழகாக தலைவாரி மல்லிகைச் சரத்தை சூடிக்கொண்டு சாயந்திரநேரம் கோவிலுக்குப் போனாள். சண்முகவடிவுக்கு அதென்னவோ சரியாகப் படவில்லை. அவளும் மளமளவென்று சேலையை மாற்றிக் கொண்டு கோவிலுக்கு வேகவேகமாகப் போனாள். அவள் நினைத்தது சரிதான் அங்கே மோகனா யாரோ ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருந்தாள். சண்முகவடிவுக்கு உடலே தீப்பற்றிக் கொண்டது மாதிரி இருந்தது. அதே நேரம் அவள் உடலில் அம்மனின் ஆவேசம் இறங்குவதை உணர்ந்தாள்.
ஏய் என்று கத்திக்கொண்டு நாக்கை மடித்து கடித்துக்கொண்டு கண்களை உருட்டினாள். கால்கள் ஆவேசமாக கோவிலை நோக்கி முன்னேறி வந்தன. அம்மனின் ஊஞ்சலுக்கு முன் நட்டுவைத்திருந்த சூலாயுதத்தைப் பிடுங்குபவள் போல ஆட்டினாள். பூசாரி வீபூதி தட்டத்துடன் ஓடி வந்தார். “அம்மா தாயே ஏன் இந்த ஆவேசம்? யார் மேல கோபம்? நாங்க உங்க பிள்ளைங்க இல்லையா? அறியாம நாங்க செய்யற பிழைகளை எல்லாம் பொறுத்து நீதாம்மா காத்து ரட்சிக்கணும்” என்று பணிவுடனும் பக்தியுடனும் பல ஆண்டுகாளாக அம்மனிடம் சாதுர்யமாகப் பேசும் திறன் விளங்கும்படியும் வாய் பொத்தி பேசினார்.
“டேய் என் அங்கமெல்லாம் எரியுதுடா”
“என்ன கோபம் தாயே..”
“டேய்…அக்கினி மழை பொழியப் போறேன்.”
“தாயே நாங்க என்ன தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிக்கணும். நீ இப்படி கோபப்பட்டா எங்களுக்கு கதி ஏது தாயே அம்மா”
கூடியிருந்தவர்கள் எல்லாம் ஸ்தம்பித்துப் போய் நின்றனர். “அம்மா உன் மனம் குளிர நாங்க என்ன பண்ணணும் தாயே?”
“என் மனசு குளிராதுடா அடேய்…”
மோகனா கண் கலங்க கூப்பிய கைகளுடன் தன் மாமியாரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மனை ஏதோ கேட்க வாயெடுத்தாள். அதற்குள் சண்முக வடிவு மயங்கி கீழே சாய்ந்தாள். ஒரு சில நிமிடங்கள் அப்படியே படுத்திருந்தாள். பிறகு நான் எங்கிருக்கிறேன் என கேட்கும் கண்களுடன் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.
மோகனா அவளை கைத்தாங்கலாக வீட்டுக்கு கூட்டிப் போனாள்.
மறுநாளில் இருந்து வெயில் சுட்டெரித்தது. சுற்றிலும் உள்ள ஊர்களில் எல்லாம் மழையும் மிதமான வெய்யிலும் காணப்பட்டாலும் இங்கே மட்டும் இப்படி வெய்யில் சுட்டெரிக்கும் அதிசயத்தை ஊர் ஜனங்கள் பேசிப் பேசி மாய்ந்தனர்.
அந்தவாரம் சம்பளநாளன்று சதா இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. உடன் வேலை செய்யும் மாணிக்கத்தின் வீட்டில் போய் கேட்டபோது அவன் சாராயக்கடைக்குப் போனதைப் பார்த்ததாக சொன்னான். வடிவும், மோகனாவும் அவனைத் தேடிக்கொண்டு போனபோது, சாராயக்கடைக்கு கொஞ்ச தூரம் முன்னால் சாலையோரத்தில் நினைவில்லாமல் கிடந்தான். இருவரும் அவனைக் கைத்தாங்கலாக தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர்.
மறுநாள் வடிவு மோகனாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சண்முகத்தை நாள் பூராவும் திட்டிக் கொண்டே இருந்தாள். அவளுடைய கூப்பாட்டை சகிக்க முடியாமல் அவன் மதியத்திற்குப் பின் எங்கேயோ கிளம்பிப் போய்விட்டான். மோகனா நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரவா என்று மாமியாரைக் கேட்டாள். சண்முகவடிவு ஏதேதோ பேச நினைத்ததை கட்டுப்படுத்திக் கொண்டு போயிட்டு வா என்று மட்டும் சொன்னாள்.
போனவள் ஒருவாரமாக வீட்டுக்கு வரவில்லை. வடிவும் அதைப் பற்றி எதுவும் நினைக்கவில்லை. மகனும் எங்கே போனாள் என்ன ஏதென்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
வடிவு வழக்கம்போல விடியற்காலையில் கூடையைத் தூக்கிக் கொண்டு மார்க்கட்டுக்குப் போனாள். காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்து வேகாத வெய்யிலில் அலைந்து திரிந்து விற்றுவிட்டு மாலையில் வீடு வந்து சேர்ந்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை மாலை கோவிலுக்குப் போனாள். சாமியாடினாள். கொஞ்சம் பேர் வாக்கு கேட்டு நின்றார்கள். ஆனால் அவள் அன்று வாயைத் திறக்கவில்லை. வெறுமனே முறுக்கி முறுக்கி ஆடிவிட்டு மலையேறிவிட்டாள். மறுநாள் அடித்துப் போட்டது போல வலி. மார்க்கெட்டுக்குப் போக முடியவில்லை.
பக்கத்து வீட்டு தேவகி அவளிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அன்று மோகனாவை கோவிலில் ஒருவனோடு இவள் பார்ப்பதற்கு முன், அவள் சாமியிடம் பூ வாக்கு கேட்டதாகவும், அதில் அவள் நினைத்த காரியத்தை அச்சமின்றி செய்யலாம் நல்லதே நடக்கும் என அறிவிக்கும் விதமாக வெள்ளைப் பூ வந்ததாகவும் சொன்னாள்.
வடிவு சுரத்தில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள். மோகனாவுடன் நின்றிருந்த அந்த ஆளின் முகம் அவள் மனதில் நிழலாடியது. யாரையும் எதையும் குற்றம் சொல்லத் தோன்றவில்லை.
நான்கு நாட்களுக்குப் பின், மோகனா அவள் ஏற்கனவே விரும்பியவனுடன் ஓடிப்போய்விட்டதாக செய்தி வந்தது. சண்முகவடிவுக்கு அந்த செய்தி எந்த பாதிப்பையும் தரவில்லை. அதற்குப் பின் அவளுக்கு கோவிலுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் எதுவும் உண்டாகவில்லை. எங்கேயாவது மேளச் சத்தம் கேட்டாலும் உடல் முறுக்கிக் கொண்டு சாமி வந்து இறங்குவதில்லை. இந்த முறை மழைக் காலத்தில வழக்கத்தை விட அதிகமாகவே மழை பெய்ததில் காய்கறி விலையெல்லாம் படு வீழ்ச்சியடைந்துவிட்டன.
000
குமாரநந்தன்
இரண்டாயிரத்திற்குப் பிற்கு எழுத வந்த புதிய தலைமுறை சிறுகதையாளர்களில்
கவனிக்கப்பட, அதிகம் பேசப்பட வேண்டியவர்களில் எழுத்தாளர் குமாரநந்தனும் ஒருவர்.
இதுவரை பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா
மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பகற்கனவுகளின் நடனம் என்னும் கவிதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரின் கதைகள் ஆரவாரமற்றவை. ஆனால் ஆழம்
நிரம்பியவை.