அனிடா அமீர்ரெஸ்வானி 1961 ஆம் ஆண்டு ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பிறந்தவர். பெற்றோரின் பிரிவுக்குப் பின் தாயால் சான்பாரான்சிகோ நகரில் வளர்க்கப்பட்டார். அவரது பதினான்காம் வயதில் ஈரானுக்கு சென்றவர் தந்தையுடன் இஸ்ஃபஹான் நகருக்குச் செல்கிறார் அதன் கலாச்சாரம், பண்பாட்டு கூறுகள்,கலை வெளிப்பாடுகள், கட்டிடக்கலை, Image of the World square எனப்படும் Nawsh-e-Jahan square போன்றவை அவரை பெரிதும் ஈர்க்கிறது. அதன் பயனாக 1978ல் மீண்டும் ஈரான் சென்றார். அப்போது நடந்த கலாச்சாரப் புரட்சி அவரை வெகுவாகப் பாதித்தது. அதன்பின் தன் இரு சகோதரர்களுடன் அமெரிக்கா திரும்பினார்.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் பயின்றார். தற்போது கலிபோர்னியா கலைக் கல்லூரியிலும், சோனோமா மாநில பல்கலைக்கழகத்திலும் கற்பிக்கிறார். இது அவரது முதல் நாவல். பூக்களின் குருதி (The blood of flowers) ஒன்பது ஆண்டு உழைப்பிற்குப் பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. பெரும் வரவேற்பைப் பெற்றது. 22 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் 2008 ஆம் ஆண்டிற்கான ஆரஞ்சு பரிசுக்கான பட்டியலில் (தற்போது Women’s prize for fiction என அழைக்கப்படுகிறது) இடம்பெற்றது.
தரைவிரிப்புக் கம்பளங்களை வடிவமைத்து நெய்பவளான ஒரு இளம்பெண் தன் வாழ்வை தகவமைத்துக் கொள்ள முயலும் போது அவள் சந்திக்கும் இடர்பாடுகளும் அதிலிருந்து அவள் மீண்டெழுவதையும் களமாக கொண்டது பூக்களின் குருதி நாவல்.
கதை தொடங்கும் போது அவள் பதின்பருவப் பெண். அவளுடைய தாயார் அவரை ஜூனம் என்றழைத்தாலும் அது அவளின் பெயரல்ல.
17-ஆம் நூற்றாண்டில் பெர்சியாவில் நடக்கும் கதை. பெர்சியாவின் ஒரு சிறிய கிராமத்தில் பெற்றோருடன் வசிக்கும் பதிமூன்று வயதான சிறு பெண் தான் கதைச் சொல்லி (ஜூனம்). அவள் தரைவிரிப்புக் கம்பளங்களை நெய்வதில் திறமையானவள். குறிப்பாக அதில் அவளிடும் முடிச்சுகள் தனித்துவமானவை. பதிமூன்றே வயதான அவளுக்கும் ஒரு வயதானவருக்கும் திருமணம் நிச்சயக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் இது ஒரு சாதாரணமான நடைமுறை.

திருமணம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன் வானில் ஓர் வால் நட்சத்திரம் அவர்களின் பகுதியைக் கடந்து செல்கிறது. அது ஓர் துர்சகுனம் என்பது அவர்களின் நம்பிக்கை. ஜூனம் தனது திருமணம் இதனால் தடைபடலாம் என எண்ணுகிறாள்.
கிராம மக்களின் நம்பிக்கையை உறுதியாக்குவது போல் ஜூனமின் தந்தை காலமாகிறார். இனி வரதட்சிணை பெற இயலாது என்பதால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விடுகின்றனர்.
ஆசிரியர் கூறுவது போல் “அவள் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். பெற்றோரின் அன்பிற்குரிய ஒரே மகள். ஆனால் அவளது தந்தை இறக்கும் போது அவளும் அவளது தாயாரும் பணமின்றி,ஆண் பாதுகாவலரின் பாதுகாப்பின்றி விடப்படுகிறார்கள். மீட்பு என்பது அவளது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரன் கோஸ்டஹாமின் அழைப்பின் வடிவில் வருகிறது.
இஸ்ஃபஹானில் அவருடன் தங்கும்படி நேர்கிறது. அவர்களின் பயணம் கதைச் சொல்லியை (ஜூனம்) அற்புதங்களின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது. நாம் அவரை பின் தொடர்கிறோம்.
கோஸ்டஹாம் அரசர் ஷாவின் தரைவிரிப்புக் கம்பளங்களை நெய்யும் நிறுவனத்தில் வண்ணங்களை உருவாக்குபவராக பணிபுரிபவர். நல்ல திறமையான கம்பள வடிவமைப்பாளர். வசதியானவர். ஆனால் பெண்களுக்கு வேலை கற்றுக் கொடுப்பதில் நம்பிக்கையற்றவர். எனினும் ஜூனமின் ஆர்வத்தை அறிந்து அவளுக்கு வண்ணங்களைத் தேந்தெடுப்பது, தரமான நூலினைக் கண்டறிவது, துல்லியமான முடிச்சுகளை உருவாக்குவது என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார். இதனை ஜூனமின் அத்தை விரும்புவதில்லை. இவர்களை வேலைக்காரர்களை விட மோசமாக நடத்துகிறார்.
சில நாட்களுக்குப் பின் ஜூனமை அவளது முதல் சொந்த தரைவிரிப்பை வடிவமைத்து நெய்ய தேவையான பொருட்களை கோஸ்டஹாம் அளிக்கிறார். தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஜூனம் அதை உருவாக்குகிறார். கோஸ்டஹாம் அதன் அழகை கண்டு பொறாமை கொள்கிறார். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதிலுள்ள குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுகிறார். தன் பணம் வீணாதாக குறைபட்டுக் கொள்கிறார்.
ஜூனம் கோபத்தில் தரைவிரிப்பை அதன் சட்டகத்திலிருந்து கிழித்து எறிகிறார். சினம் கொண்ட கோஸ்டஹாம் அவளையும், அவளது தாயாரையும் வீட்டைவிட்டு வெளியே விரட்டுகிறார். ஜூனமின் தாயார் தங்களின் பாதுகாப்பை பயணம் வைத்தற்காக அவளைக் கண்டிக்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறும் ஜூனமை ஃபெரிடூன் என்ற பணக்கார வியாபாரி அவளது அழகில் மயங்கி திருமணம் செய்துக் கொள்வதாக கூறுகிறான். இது முறையான திருமணம் அல்ல. ஒரு குறுகிய கால திருமண ஒப்பந்தம். பாலியல் தொழிலுக்குச் சற்று மேலே. நிறைய பணமும் வசதிகளும் கிடைக்கும். திருப்தியான உறவு எனில் ஒப்பந்தம் நீடிக்கவும் வாய்ப்புண்டு.
இவ்வகை திருமணம் பற்றி வெளியே தெரிந்தால் ஜூனமின் பிற்கால வாழ்க்கை நாசமாகிவிடும் என அவரது தாயார் இதை எதிர்க்கிறார். ஆனால் ஒப்பந்தம் மூலம் கிடைக்கும் பணம் கோஸ்டஹாமின் கடனை அடைக்க உதவும் என்பதாலும் வசதியாக வாழலாம் என்ற நம்பிக்கையிலும் ஜூனம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள்.
ஆனால் ஃபெரிடூன் அவளுடான பாலியல் உறவில் திருப்தி அடைவதில்லை. ரசிக்கத்தக்கதாக அமையவில்லை என அதிருப்தியடைகிறான்.
பொது ஹமாமில் (பெர்ஷியா, பாரசீகத்தில் அக்காலத்தில் குளியல் அறைகள் தனியாக பொதுவெளியில் அமைந்திருந்தன) குளிக்கச் செல்லும் போது அங்கே வரும் பெண்களின் வழியே ஆண்களை ஈர்க்கும் பாலியல் திறன்களை கற்றுக் கொள்கிறாள் ஜூனம்.

ஃபெரிடூன் இவளது புதிய காமக் கலைகளால் ஈர்க்கப்பட்டு மகிழ்ச்சி அடைகிறான். எனினும் ஒப்பந்தத்தை புதுபிப்பதில்லை. மாறாக வேரொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்கிறான். இவளை தன் இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்வதாக கூற இவள் மறுதலித்து வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதனால் ஃபெரிடூன் இவளின் தரைவிரிப்புகளை சந்தையில் பிறர் வாங்குவதை தடுத்து நிறுத்துகிறான். இதனால் மீண்டும் வறுமைக்குத் தள்ளப்படுகிறாள் ஜூனம். விஷயமறிந்த கோஸ்டஹாம் இவர்களை கடுமையாக ஏசுகிறான். இருந்தும் அவர்களின் வறிய நிலையறிந்து சிறிது பணம் கொடுத்து ஊருக்குத் திரும்பச் சொல்கிறான்.
தனக்கு கிடைத்த பணத்தைக் கொண்டு தரைவிரிப்புகளை தயாரிக்கும் மலேலக்காவை சந்திக்கிறாள் ஜூனம். மலேலக்கா இவளுக்கு உதவ முன் வருவதோடு அவர்கள் தங்க ஓர் வீடும் ஏற்பாடு செய்கிறான். இருவரும் வியாபாரத்தில் பங்காளி ஆகிறார்கள். ஜூனம் மெல்ல மெல்ல தன் வாழ்வை மீட்டெடுக்கிறாள்.
கதைச் சொல்லி கபுனித நூலின் போதனைகளைப் பின்பற்றினாலும், பொதுவெளியில் சத்தரால் (இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலையையும் , உடம்பையும் போர்த்தி மூடிக் கொள்ளும் வெள்ளைத் துணி) தலையை மூடினாலும், அபயாவை அணிந்தாலும், ஹிஜாப்பை அணிந்தாலும் சமூகத்தில் அவரைப் போன்றவர்களுக்கான எதிரான வெறுப்பை உணர்ந்தவளாக இருக்கிறாள். தன்னைப் போன்ற பெண்களை ஏற்றுக் கொள்ளாத சமூகத்தில் அவர்கள் அவர்களாக வாழ்வதற்கான உரிமைகளை அடைவதற்கான வழிகளை எப்படி அணுகுவது என்பதை புரிந்துக் கொள்கிறாள் என்பதும், அதை அடைய அவள் முயல்வதுமாக நாவல் அமைகிறது.
ஜூனம் தன் உணர்ச்சிகளுக்கும், மன கிளர்ச்சிகளுக்கும் முதலிடம் தருவதால் பல இன்னல்களைச் சந்திக்கிறாள். உணர்வுகளின் சூழலால் தன் கன்னித்தன்மையை இழக்கிறாள். ஆண்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறாள். வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து மீளும் வழியை கண்டடைகிறாள்.
நகரின் எந்தச் சந்தையிலிருந்து துரத்தியடிக்கப் படுகிறாளோ அதே சந்தையில் மீண்டும் கோலோச்சுகிறாள். எப்போதும் வாழ்தலுக்கான போரட்டங்களை எதிர்க் கொண்டேயிருக்கிறாள். ஆணாதிக்கம் கொண்ட தொழிலில் தனித்திறமை கொண்டவளாக விளங்குகிறாள்.
ஓரிடத்தில் “எங்கள் அழகு, உழைப்பு அனைத்தும் சேவை செய்யவே பயன்பட்டது. அதனால் சில சமயங்களில் கம்பளத்தின் ஒவ்வொரு நூலும் பூக்களின் குருதியால் தோய்க்கப்பட்டது போல் தோன்றியது என்கிறாள்”.
இதையும் பல பின்னடைவுகளுக்குப் பின், பல இழப்புகளைச் சந்தித்த பிறகு, மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த அறிந்த பின்பே உணர்கிறாள். இது ஒரு ஆணாதிக்கச் சமூகம் என்பதை காலம் உணர்த்துகிறது.
கதைச் சொல்லியின் வாழ்க்கையை மூன்று முக்கிய கால கட்டங்களாக பிரித்துப் பார்க்கலாம்.
தந்தை இறந்த பின் ஏற்படும் வறுமை. கோஸ்டஹாம் ஆதரவு தந்தாலும் அவளின்அத்தையால் நிகழ்த்தப்படும் கொடுமையை எதிர்கொள்ளும் காலம்.
ஃபெரிடூன் உடனான ஒப்பந்தத்திற்குப் பிறகான செல்வச் செழிப்பான வாழ்க்கை.
மூன்றாவதாக ஃபெரிடூனிடமிருந்து விலகியதும் மீண்டும் வறுமைக்கு தள்ளப்படுதல் எனப் பார்க்கலாம்.
அன்றைய பெர்சியாவில் பெண்கள் தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுவதையும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சூழலையும் கவனப்படுத்துகிறது நாவல். ஆண் குழந்தையை பெற்றுத் தரும் பெண்ணிற்கு கிடைக்கும் சில சலுகைகள் கூட பெண் குழந்தையைப் பெறுபவளுக்கு கிடைப்பதில்லை. இன்றும் அந்நிலையில் பெரிய மாறுதல் நிகழ்ந்திடவில்லை.
நாவல் பெண்களுக்கிடையேயான உறவுகளைப் பற்றியே அதிகம் பேசுகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உணர்வுச் சிக்கல்களை, பணம்படைத்த பெண்-ஏழை உறவுகளுக்கடையேயான உறவுச் சிக்கல்களை, நண்பர்களுக்கிடையேயான பொறாமைகளைப் பற்றிப் பேசுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இது கைவினைத் திறனாளிகளின் கதையும் கூட.
பெர்சியாவின் கலைப்படைப்புகளில் முதலிடம் வகிக்கும் தரைவிரிப்புகளின் உருவாக்கம், அதன் வண்ணச் சேர்க்கை, கடினமான பொறுமையுடன் போடப்படும் துல்லியமான முடிச்சுகள், விற்பனை பற்றியதும் கூட.

“இஸ்ஃபஹான்” ஷா அப்பாஸால் அழகிய முறையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம். நகரச் சந்தை வாசனைப் பொருட்களாலும், ஆடம்பர பொருட்களாலும் நிரம்பி வழிகிறது. அதன் தரைவிரிப்புக் கம்பளங்கள் தனித்துவமானவை. புகழ் பெற்றவை.
அமீர்ரெஸ்வானி இஸ்ஃபஹானின் பிரமிக்க வைக்கும் அம்சங்களையும் அதன் மறுபக்கத்திலுள்ள மோசமான சமூக சூழலையும் சரியாக விவரிக்கிறார். கட்டிடக்கலை வடிவமைப்பு, அறைகளின் உட்புறங்கள், மக்களின் உடைகள், பானங்கள், உணவு வகைகள் பற்றிய விவரணைகள் ஆர்வமூட்டுபவையாக உள்ளது. வண்ணங்கள்-ஒலி -வாசனை இவற்றிற்கு இடையேயான உணர்ச்சிபூர்வமான பிணைப்பு பற்றிய விவரங்கள், நகரத்தின் மசூதிகள், ஹமாம்கள், சந்தைக் காட்சிகளை விரிவாக பதிவு செய்துள்ளார்.
உட்பொதிக்கப்பட்ட சிறுகதைகளை கதை சொல்வதற்கான உத்தியாக கையாண்டுள்ளார். ஏழுகதைகள் வழியாக நாவல் நகர்கிறது.
நாவல் ஒரு வரலாற்று புனைகதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. அது ஆசிரியர் அப்பெண்களின் பாலியல் அனுபவங்களை, வேட்கைகளை விவரிப்பதற்கு அதிக இடம் எடுத்துக் கொள்கிறார் என்பது. குறிப்பாக பொது ஹமாமில் நடக்கும் உரையாடல்கள். அங்கு நீராட உதவும் பெண்களின் செய்கைகள் பற்றிய குறிப்புகள். இதனால் நாவல் நீண்டுச் செல்கிறது. இறுதியில் ஜூனமின் பத்தொன்பதாம் வயதில் நாவல் நிறைவடைகிறது. இது ஒரு முக்கியமான குறைபாடு.
அமீர்ரெஸ்வானி தனது ஆசிரியர் குறிப்பில் கதைச் சொல்பவளின் பெயரை நாங்கள் ஒரு போதும் குறிப்பிட மாட்டோம் என்ற பிறகே இந்நாவல் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழலே இன்றும் ஈரானில் நிலவுகிறது.
இந்நாவலுக்காக ஜந்தாண்டுகள் தரவுகளை சேகரிக்கவும், அதன் உண்மைத் தன்மையை ஆராயவும் எடுத்துக் கொண்டுள்ளார். அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து நாவல் அதன் இன்றைய வடிவத்தைப் பெற்றுள்ளது.
17-ஆம் நூற்றாண்டின் பெர்சிய பெண்களின் மூடிய உலகத்தை திறந்து அதன் செழுமையான நுட்பமான உறவுகளை வெளிப்படுத்திய விதத்தில் இது முக்கியமான நாவல் எனலாம்.
ஆசிரியரின் பிற முக்கிய நூல்கள்
Equal of the sun (2012)
Termors:New fiction by Iranian American writers:edited by Anita Amirrezvani and Persis Karim (2013)
ஆசிரியர் பற்றிய குறிப்பு இணையத்தில் உள்ள அவரது நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு : தமிழில் இந்நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என அறிய ஆவல்)
00

அ.முனவர் கான்
முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர்.