பொன். குமார்
000
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுத்து உலகில் எவரும் எட்டாத உயரத்தை அடைய முடியாத வெற்றியைத் தொட்டவர் ஆவார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் எனவும் அவரின் படைப்புலகம் விரிந்து கொண்டே செல்கிறது. அவரின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒரு களம். களங்கள் சமுதாயத்திற்கு தேவையானதாகவும் சமூகப்பிரச்சனையை பேசுவதாகவும் இருக்கும். அவ்வகையில் ஒரு சமூகப்பிரச்சனையைப் பேசுவதாக வந்துள்ள அவரின் ஏழாம் நாவல் ‘ பூக்குழி.” நல்ல பாம்பு என்று சொல்வது போல் இலக்கணப்படி இது மங்கல வழக்கு” என்கிறார். இத்தொகுப்பின் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. பின் பல பதிப்புகளைக் கணடுள்ளது. மேலும் பல பதிப்புகள் காணும்.
தொகுப்பாக வருவதற்கு முன் தொடராக கல்கியில் வெளிவந்துள்ளது. தொடராக எழுதுவதின் சிரமத்தையும் கூறியுள்ளார். அநேகமாக பெருமாள் முருகன் ஒரு வார இதழில் எழுதிய ஒரு தொடர் ‘ பூக்குழி’ யாகவே இருக்கும். 14.04. 2013 முதல் 28. 07.2013 வரை பதினாறு வாரங்கள் வெளியாகியுள்ளது. பின்னர் சுதந்திரமாக எழுதிச் செம்மையாக்கி அதே ஆண்டு தொகுப்பாகியுள்ளது. 2013ஆம் ஆண்டு சாதி மற்றும் கலப்புத் திருமணம் தொடர்பான துயரச் சம்பவங்கள் நடந்ததும் இந்நாவல் உருவாக ஒரு காரணம் என்கிறார்.
தர்மபுரி இளவரசன் – திவ்யா காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட கொடும் நிகழ்வுகளே இத்தொடருக்குக் காரணம் என்பதுடன் ‘ தருமபுரி இளவரசனுக்கு’ இத்தொகுப்பையும் சமர்ப்பித்துள்ளார். ஆனால் பூக்குழியில் வரும் நாயகன் குமரேசன் இளவரசன் போல தாழ்த்தப்பட்டவன் அல்ல. திவ்யா போல சரோஜா உயர்சாதியல்ல. இருப்பினும் சாதி மறுத்து காதல் திருமணம் செய்து கொள்ளும் கணவன் மனைவியர் சமுதாயத்தில் குடும்பத்தில் உறவுகளில் ஊர்களில் என்னவென்ன சந்திக்க நேரிடும் என்பதையே இந்நாவல் விவரிக்கிறது. உண்மையில் இளவரசன் கொல்லப்பட்டது போல நாவலில் சரோஜாவைக் கொல்ல முயல்கிறார்கள்.
குமரேசன் சரோஜாவைத் திருமணம் செய்து கொண்டு ஊருக்குள் நுழையும் போதே பிரச்சனை தொடங்கி விடுகிறது. தாய்க்குத் தெரிந்தவுடன் தாயிடமிருந்து முதல் எதிர்ப்புக்குரல் ” இதுக்குத்தானா உன்னய ஊரு உட்டு ஊரு அனுப்புனது? எஞ்சாமி நாலு காசு சம்பாரிச்சுக்கிட்டு வந்து நாலு பேருக்கு நடுவுல தல நிமிந்து நிக்குமின்னு நெனச்சனே. நெருப்ப அள்ளித் தலயில போட்டுட்டானே. இதுக்கு அங்கயே ஒரு காருலகீது அடிச்சுச் செத்திருந்தா எந்தலவிதின்னு நெனச்சுத் தூக்கிப் போட்டுருப்பனே. எட்டு நாளைக்கு அழுது தொலச்சிருப்பனே. இப்பக் காலம் முழுக்க அழுவ வெச்சிட்டானே. எதுக்குடா இப்பிடிப் பண்ணுன. எதுக்குடா இப்பிடிப் பண்ணுன…’
அவன் சட்டையைக் கொத்தாகப் பற்றி இழுத்து நெஞ்சிலும் கன்னத்திலும் மாறிமாறி அறைந்தாள். சரோஜாவின் பக்கம் திரும்பி ‘என்னடி செஞ்சு எம்மவன மயக்குன? இப்பிடி எத்தன பேர மயக்கிருக்கற?’ என்று வெறி பிடித்தவளாய்க் கோபத்தைக் கொட்டுகிறாள். குமுறலை வெளிப்படுத்துகிறாள். நாவலின் இறுதி வரை தாயின் வெறுப்பு தொடர்கிறது. தாயுடன் பிறரும் ஏசுகின்றனர்.
தாயிடமிருந்து மட்டுமில்லை சுற்றமும் சூழலும் உற்றார் உறவினருமே சரோஜாவிற்கு எதிராகவே உள்ளனர். சரோஜா வலது காலை ஊரில் எடுத்து வைத்த கணம் முதல் ‘ சரோஜா என்ன சாதி?’ என்பதே கேள்விக்குறியாக உள்ளது. பேச்சாக பரவுகிறது. குமரேசன் ‘ நம்ம சாதிதான்’ என்று சொல்கிறான். ஆனாலும் விடாமுயற்சியுடன் சரோஜாவின் ஊரை அறிந்து அங்கேயே ஊர்க்காரர் ஒரு சிலர் சென்று துப்பு துலக்கி ‘ சரோஜா ஒரு பொழங்கக் கூடாதா சாதிக்காரி ‘ என்று கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் பெருமாள் முருகன் இருவர் சாதி குறித்தும் வெளிப்படையாக சொல்லவில்லை. வாசககர் ஊகத்துக்கே விட்டு விடுகிறார். நாவலின் முடிவும் அவ்வாறே உள்ளது. ஓரிடத்தில் ‘ குடியானச்சுவச்சி’ என்று வருகிறது. சரோஜா மீது சமூகம் கோபமாக நடந்து கொண்டாலும் வெறுப்பை உமிழ்ந்தாலும் குமரேசன் மட்டுமே அன்பாகவும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் நடந்து கொள்கிறான்.
பூக்குழி நாவல் குமரேசனின் தாய் பற்றிய கதையையும் கூறுகிறது. தாய்க்குத் திருமணமானது, குழந்தை பிறந்தது, இளம் வயதிலேயே விதவையானது, மகனை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பியது என தாயின் சிரமங்களைக் கூறுவதுடன் வாழ்வின் பின்னணியையும் கூறுகிறது. அதனால் குமரேசன் செய்தது தவறு என சமூகம் குற்றம் சாட்டுகிறது. தாய் சாதி விசயத்தைத் தவிர ஆடுகளிடம் காட்டும் நேசத்தையும் மற்ற ஆட்களிடம் கொண்டுள்ள பாசத்தையும் காட்டும் ஒரு சக மனுஷியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்நாவலில் முட்டை வியாபாரியாக ஒரு முஸ்லிம் முக்கிய பாத்திரமாக படைக்கப்பட்டுள்ளார்.
” பொழுது உச்சியிலிருந்த வெயில் வேளையில் சரோஜாவும் குமரேசனும் பேருந்திலிருந்து இறங்கினார்கள். சாலைப் புளியமரங்களைக் கடந்து விழுந்த பார்வையில் பொட்டல் காடுகள் பரந்து தெரிந்தன. எட்டிய தொலைவு வரைக்கும் வீடு எதுவும் கண்ணில் படவில்லை” என நாவலின் தொடக்கம் உரைநடையில் உள்ளது போல ஆசிரியர் நாவல் முழுக்க உரைநடையில் கொண்டு சென்றுள்ளார். உரையாடல் மட்டும் வழக்கில் பேசப்பட்டுள்ளது. படு எதார்த்தமான வழக்கு மொழி. வசவுக்கு வழக்கு நன்கு உதவியுள்ளது.
தாய் என்னும் நிலையில் சாதியை விட முடியாமல் தவிக்கும் மாராயி, காதல் திருமணம் செய்து கொண்டு மனைவியை விட்டுக் கொடுக்க முடியாமல் தாயையும் தள்ளி வைக்க முடியாமல் இடையில் சிக்கி உழலும் குமரேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ வந்த இடத்தில் வாய் திறந்து எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறும் சரோஜா… இம்மூவரிடையே ஏற்படும் பிரச்சனைகளே நாவலை நகர்த்திச் செல்கிறது.
விதவைத் தாய், சோடா கடையில் வேலை செய்யும் குமரேசன், குமரேசன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சரோஜா, மற்றும் பலர் எழுத்தாளர் பெருமாள் முருகன் கண்கூடாக கண்டவர்களாக நாவல் காட்டுகிறது. புனைவு என்பது பெயரளவிலேயே நாவலில் உள்ளது.
தாயே எதிர்த்தாலும் சமூகமே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ஊரே ஒதுக்கி வைத்தாலும் சாதி எதுவாயினும் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டால் கடைசி வரை கண்கலங்காமல், கை விடாமல் காப்பாற்ற வேண்டும் என்று கொள்கையுடனும், குணத்துடனும் வாழும் குமரேசன் பாராட்டுக்குரியவர். எழுத்தாளர் பெருமாள் முருகேசனும் பாராட்டப் பட வேண்டியவர்..
‘பூக்குழி’ நாவல் சாதி மறுத்து, சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டால் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக காதல் தம்பதியரில் எவர் தாழ்த்தப்பட்டவரோ அவருக்கே தாக்குதல் அதிகம். தருமபுரியில் இளவரசன். பூக்குழியில் சரோஜா. பெருமாள் முருகன் எடுத்துக் காட்டியது ஒரு சரோஜாதான். நாட்டில் பல சரோஜாக்கள், இளவரசன்கள் இருக்கவே செய்கிறார்கள். துன்பத்தை எதிர்கொள்கிறார்கள். துயரத்தைச் சந்திக்கிறார்கள். கொலையும் செய்யப்படுகிறார்கள். ஆனால் பெருமாள் முருகன் சராசரி மனிதர்களின் உணர்வுகளையே பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சாதியம் என்பது நகரங்களை விட கிராமங்களிலே மிகுதியாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது பூக்குழி. சாதியால் சமூகம் சீரழிந்துள்ளதையும், சீழ்பிடித்துள்ளதையும் காட்டுகிறது. மீற வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறது. உயர் சாதியினரிடமே சாதிய வன்மம், சாதிய குரூரம் என்னும் தாழ்ந்த குணம் இருந்து கொண்டுள்ளனர் என்பதும் ‘பூக்குழி’ யில் தெரிகிறது. பூக்குழியில் இருந்து மண் வாசமும் கலாச்சார பின்னணியும் ஊடாக உள்ளன என்பதும் மறுக்க முடியாது.
“காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர்கொண்டு போராடி வீழ்ந்தும் வாழ்ந்தும் சக்தியற்றுக் கரைந்தும் எத்தனையோ விதமாக இந்தச் சமூகத்திற்குள் புதையுண்டு கிடக்கிறார்கள். காதல், கலப்பு மணம் ஒன்றில் ஈடுபட்ட இளம் தம்பதியர் குறித்த நாவல் இது. பரவசமாகவும் ஆவேசமாகவும் குரலை உயர்த்தி முழக்கமிடாமல் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களோடு மன உணர்வுகளை இயைத்து அனுபவமாக்கியிருக்கிறது இந்நாவல். ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை ஆராய்வதே படைப்பு என்பது இதற்கு முற்றிலுமாகப் பொருந்தும் ” என நாவல் குறித்து கருத்துரைத்துள்ளது காலச்சுவடு.
‘ பூக்குழி’ என்னும் இந்நாவலை அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் ‘Pyre’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தற்போது இந்நாவல் சர்வதேச அளவிலான புக்கர் பரிசுக்கான 2023ஆம் ஆண்டுக்கான இறுதிப்பட்டியலில் உள்ளது என்னும் செய்தி வெளியானது. புக்கர் பரிசின் இறுதி பட்டியலுக்குச் செல்லும் தமிழை மூலமாகக் கொண்ட முதல் நாவல் என்பது பெருமைக்குரியது. ஏற்கனவே நாவலை வாசித்தாலும் இந்த அறிவிப்பிற்கு பிறகு மீண்டும் வாசிக்கத் தூண்டியது. அதன் விளைவே இந்த விமர்சனம்.
“I think the difficulty is because there is more direct speech involved in Pookkuzhi; the characters speak a lot and their streams of thought too bear the distinct mark of regional speech patterns. In the Tamil text, Kumaresan’s and Saroja’s people speak differently; their speech is marked by rural and semi-urban variations. It has been difficult to sustain that difference in translation. Perhaps this is an instance where specificity of language use resists translatability.” என்பது பூக்குழியை மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவன் அவர்களின் அனுபவ ரீதியான கருத்து. பூக்குழி போன்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது பெரும் சிரமமே. இருப்பினும் சர்வதேச அளவில் கொண்டு சென்றுள்ளார் அனிருத்தன் வாசுதேவன்.
000
பொன்.குமார்
சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். நீண்டகாலமாக தமிழில் புத்தக விமர்சகராக பெயர்பெற்றவர். கவிதை உலகில் நடைபயின்றவர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.