ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் தடுமாறாமல் நிலைமாறாமல் ஓய்வின்றி அந்தரத்தில் சூழலும் பூமிப்பந்தைப் போல் தன் வாழ்வில் எந்தப் பிடிப்பும் இன்றி சுழன்று கொண்டிருக்கிறாள் பூங்கொடி.
திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை. ஏறாத மருத்துவமனைகளும் இல்லை. போகாத கோவில்களும் இல்லை. வாங்காத ஏச்சுக்களும் இல்லை. பேசாத பேச்சுக்களும் இல்லை. இத்தனை வசவுகளையும் வாங்கிக்கொண்டும், தாங்கிக் கொண்டும் கண்ணீர்க் கூட காய்ந்து போன விழிகளில் அவள் சற்று ஆறுதலாயும, தேறுதலாயும் இருக்கின்றாள் என்றால் அதற்குக் காரணம் ரகுபதியின் முகம் கோணாத காதல், அன்பு, பாசம், ஸ்பரிசம் எல்லாமும் தான்.
மப்பும், மந்தாரமுமான மதிய வேளை. சாப்பிட்டுக் கொஞ்சம் கண் அயர்ந்தாள். வெளியில் குழந்தைகளின் சத்தம். தூக்கத்தைக் கெடுத்தது.
ஜன்னல் வழியாக வெளியேப் பார்த்தாள். சற்று தூரத்தில் குழந்தைகள் சத்தம் போட்டபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
எல்லோருக்கும் பத்து வயதுக்குள் இருக்கும். விளையாட்டினிடையே அவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது. மொத்தம் நான்கு பேர். மூன்று சிறுவர்கள் ஒரு சிறுமி அந்த சிறுமியிடம் தான் அந்த மூன்று சிறுவர்களும் எகிறிக் கொண்டிருந்தார்கள். சத்தம் பலமாகவேக் கேட்டது பூங்கொடிக்கு.
“போடி, நீ நல்லாவே வெளாட மாட்ற. நாங்களே வெளாண்டுக்குறோம்” கத்தினான் ஒருவன்.
அவள் அழும் சத்தம் கேட்டது.
தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள்களே இருந்ததால் ஆங்காங்கே பட்டாசு வெடிக்கும் சத்தமும் கேட்டது. வெளியே வந்து அவர்களைப் பார்த்தாள். அந்தச் சிறுமியை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு மூன்று சிறுவர்களும் தங்களது விளையாட்டைத் தொடர்ந்தனர்.
“ஏன் அந்தச் சிறுமியை மட்டும் அவர்கள் ஒதுக்குகிறார்கள்.?” புரியாமல் அவர்கள் அருகில் சென்றாள்.
அந்த சிறுமி அழுதுவடியும் கண்களோடு ஒரு மரத்தடியில் நின்று கொண்டு ஏக்கமாய் அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்ற பூங்கொடி அவள் தலையில் ஆதரவாய்க் கைகளை வைத்துத் தடவினாள். பலமாக அழுதுகொண்டே அவளது கால்களைக் கட்டிக்கொண்டாள்.
அவள் அப்படி செய்தது பூங்கொடிக்கு என்னவோ போலாகிவிட்டது. அந்த சிறுமிக்கு ஆறு வயதாகிறது. சற்று தள்ளி இருக்கும் வீட்டில் குடியிருக்கும் கணேசனின் மகள் செல்வி.
கணேசன் ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை செய்கிறார். சிறுவர்களும் அக்கம் பக்கத்து வீட்டுப்பிள்ளைகள்தான்.
“ஏன்டா, என் செல்விய சேர்த்துக்க மாட்டிக்குறிங்க”. என்று கேட்டபடி அவள் அணைத்து இருந்த கைகளை மெதுவாக எடுத்துவிட்டு அவள் அருகே அவள் உயரத்திற்கு சமமாய் உட்கார்ந்தபடியே அவள் கண்களைத் துடைத்துவிட்டாள்.
அவள் வார்த்தை வராமல் தேம்பியபடியே, “அவங்க என்னைய சேர்த்துக்க மாட்டிக்கிறாங்க” என்றாள்.
“டேய், செல்விய விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்கடா” சற்றுத் தள்ளி டயர் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவர்களை நோக்கிக் கத்தினாள்.
“அவ சரியா விளையாட மாட்டேங்குறா “என்றான். வெள்ளை சட்டையும், புளு டரவுசரும் அணிந்திருந்த பத்திர எழுத்தர் மாணிக்கத்தின் மகன்.
“பெண்கள் என்றால் குழந்தைகளிடத்தில் கூட பாகுபாடு பார்ப்பார்களோ?” என்று நினைத்தவள், “போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும் “என்று கத்திவிட்டு, ” நீ வாடாச் செல்லம் நான் உன் கூட விளையாடுறேன். நம்ம வீட்ல போய் விளையாடலாம்” என்று ஆதரவோடு அவள் தோளில் கைப்போட்டு அழைத்துச் சென்றாள்.
தனியாக இருக்கும் பூங்கொடிக்கு இந்த செல்வி தான் துணை. அடிக்கடி வந்து விளையாடுவாள். இவளிடம் தான் வீட்டுப்பாடங்களைப் படிப்பாள்.
ரகுபதியும் எதுவும் சொல்வதில்லை. குழந்தை இல்லாத குறையை செல்விதான் இப்போது தீர்த்து வைக்கிறாள் என்று எண்ணியவன் செல்விக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுத்தான்.
பூங்கொடியை ‘அம்மா ‘என்றே செல்வி அழைக்க ஆரம்பித்துவிட்டாள்.
செல்வியின் பெற்றோரும் எதுவும் தடை சொல்வதில்லை.
இதெல்லாம் முன்பு இப்போது கொஞ்ச நாட்களாக நிலைமையே வேறு.
செல்வியை வீட்டுக்குள் அழைத்து வந்து அவளுக்கு முதலில் சாப்பிட பிஸ்கட்டும் பாலும் கொடுத்தாள்.
சோபாவில் அவள் அருகே உட்கார்ந்து பொறுமையாக பிஸ்கட்டையும் பாலையும் அருந்திவிட்டு அவள் மகிழ்ச்சியான முகத்துடன் சிரித்தாள்.
“இப்பதான் உன் முகம் சந்திரனைப் போல அழகா இருக்கு.” என்று கன்னம் தடவி முத்தம் கொடுத்தாள்.
“நான் போறேன்” என்றாள் சட்டென.
“ஏன்?”
“அம்மா திட்டுவாங்க. உங்கக் கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அப்படி பேசுனா சூடு வச்சிடுவேன்னு சொல்லியிருக்காங்க. நான் போறேன்மா ” என்றாள் கண்களில் ஒருவித பயம் கலந்து.
பூங்கொடியின் முகம் மாறியது.
“சரி, போ” என்று சொல்லிவிட்டாள். வடியத் தயாராக இருந்த கண்ணீரை மறைத்துக் கொண்டே மீதம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை அவளிடம் கொடுத்தபடி, “போயிட்டு வா, பை பை ..”என்று டாட்டா காட்டினாள்.
“வேண்டாம்” என்று அந்த பிஸ்கட் பாக்கெட்டை டீ பாயின் மேல் வைத்துவிட்டு கொலுசு சத்தம் ஒலிக்க ஓடிவிட்டாள் அந்த சிறுமி.
இப்போது பூங்கொடியின் கண்ணீர் சுதந்திரமாக கன்னங்களில் வழிந்தது. சோபாவில் உட்கார்ந்து அந்த அனாதையாகிப்போன பிஸ்கட் பாக்கெட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாசலில் நிழலாடியது. அவள் கணவன் ரகுபதி உள்ளே வந்தான். இவள் அவசரமாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டே,
“வாங்க” என்றபடி அவன் முன்னால் சென்று அவன் தோளில் மாட்டியிருந்த பையை வாங்கிக் கொண்டாள்
“காபி போடவா?”என்றாள்.
சிரித்தபடி அவள் கன்னத்தைத் தட்டிவிட்டு சோபாவில் உட்கார்ந்தான்.
சில நிமிடங்களில் காப்பியுடன் வந்தவளின் முகத்தைப் பார்த்தவன்,
“இன்னைக்கு ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
நகர்ந்தவளை அருகில் அமர வைத்தான். “இங்கப் பாரு பூங்கொடி, இந்த உலகத்துல யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசட்டும். நாம அதப்பத்திக் கவலப்பட வேண்டாம். சரியா?” என்று அவன் சொல்லச் சொல்ல அவன் தோளில் சாய்ந்தாள்.
குழந்தை பிறக்கும் என்று ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் இருந்தவர்கள் காலம் செல்லச் செல்ல நம்பிக்கை இழந்தவர்களாக வாழ்வை வெறுக்க ஆரம்பித்து விட்டனர்.
ஒரு வங்கியில் அதிகாரியாக இருக்கும் ரகுபதிக்கு வருமானத்திற்கு குறைவில்லை. பணத்தை கொட்டிப்பல மருத்துவமனைகளில் பலவிதமான பரிசோதனைகளை சலிக்காமல் செய்து கொண்டனர். முடிவு பூஜ்ஜியத்திலேயே வந்து நின்றது.
இருவருக்குமே குறையில்லை. ஆனாலும் பிள்ளை இல்லாத குறை நிறைவாய் இருந்தது இருவருக்கும். இந்த ஏழு வருடங்களில் எத்தனை எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்.
வழக்கம்போல் பெண்ணுக்கே பலவிதமான அடிகள் விழுந்தது. அதில் ஒன்று ரகுபதிக்கு இரண்டாவது திருமணம் செய்ய ரகுபதியின் அம்மாவும், அப்பாவும் ஏற்பாடும் செய்தனர். அதற்கு ஒத்துழைக்காத பூங்கொடிக்கு தினசரி நரக வேதனைதான்.
“எனக்கு ஒரே புள்ள ரகுபதி அவனுக்குப் புள்ள இல்லன்னா என் வம்சம் எப்படி விருத்தியாகும்?”
“ஒரு குழந்தைய தத்து எடுத்துக்கலாம்பா” என்றான் ரகுபதி.
“நீ தத்து எடுக்குற புள்ள எப்படிடா என் வம்சமாகும்?” கத்தினார்.
ஊமையாய் அழுது கொண்டிருந்தாள் பூங்கொடி.
“கடைசியாக நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வரலாம் அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்” இது ரகுபதியின் அம்மா.
குறித்த நாளில் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து படைத்து வேண்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென ஏதோ மின்னல் தாக்கியது போல் கத்த ஆரம்பித்துவிட்டாள் பூங்கொடி.
அங்கிருந்த பூஜை சாமான்களை, குத்து விளக்குகளை எல்லாம் தட்டி விட்டு அந்த இடத்தையே அலங்கோலமாக்கி பைத்தியம் பிடித்தவள் போல கத்திக்கொண்டிருந்தாள்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த போது அவள் மனதில்தான் பெரும் கவலை அழுத்தி அவளை இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது என்று மருத்துவர் சொல்ல, அதையேக் காரணம் காட்டி அவளை விவாகரத்து செய்துவிடலாம் என்று திட்டம் போட்டனர்.
ரகுபதி சற்று காட்டமாகவே எதிர்த்துப்பேசி பூங்கொடிக்கு ஆறுதலாக இருந்தான். வெறுப்படைந்த அவனது பெற்றோர் அவன் முகத்தில் விழிக்கப் பிடிக்காமல் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு அப்பா அம்மாவை இழந்து தன் ஒரே அண்ணனின் ஆதரவு மட்டும் இருந்த நிலையில் மன அழுத்தத்தோடு இருந்தவள் குழந்தை இல்லை என்கிற கவலையையும் கணவனுக்கு மறுமணம் செய்ய இருக்கும் சூழலும் அவளை இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது. ஆனால் தனக்காக அப்பா அம்மாவையே எதிர்த்துப் பேசிய ரகுபதியின் மேல் பூங்கொடிக்குக் காதல் கூடியது.
தனக்குக் குழந்தை இல்லை என்கிற குறையை ஒருநாளும் ரகுபதி குத்திக் காட்டியதில்லை. தன்னை பைத்தியம் என்று அக்கம்பக்கத்து விட்டார்கள் மறைமுகமாக பேசிக்கொள்வதும் தங்களது குழந்தைகளை அவளிடம் நெருங்க விடாமல் வைத்திருப்பதும் இவளுக்கு நரக வேதனையாக இருந்தாலும் அந்த வலிகளுக்கு தன் அன்பால் ஒத்தடம் கொடுத்தான் ரகுபதி.
தோளில் சாய்ந்தபடி இருந்தவள் சற்றுக் கண்ணயர்ந்துவிட்டாள். எழுந்து பார்த்தபோது ரகுபதி பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டு இரவு டிபன் தயார் செய்து கொண்டிருந்தான்.
இவள் அவனருகே சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
“என்ன பூங்கொடி டயர்டா இருக்குதா?” பாசமாகக் கேட்டான்.
“ஆமாங்க இந்த முறை பாசிட்டிவ் வரும்னு நினைக்கிறேன்”
“நீ என்ன சொல்ற?” ஆச்சரியமானவனிடம்,
“ஆமா தள்ளி போயிருக்கு” என்றாள்.
“நிஜமாவா?” என்று சந்தோசத்தில் குதித்தான். ஆனால் அவள் முகத்தில் பல தடவை தோல்விகளைக் கண்ட வலிகள்தான் தெரிந்தது.
“நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் இப்போ வந்துடறேன்” என்று வெளியே சென்றவன் சற்று நேரத்தில் கர்ப்பம் பரிசோதனை செய்யும் கருவியுடன் வந்தான்.
பூங்கொடி பாத்ரூம் சென்றுவிட்டு மகிழ்ச்சியாக வெளியே வந்தாள். ரகுபதியைக் கட்டி அணைத்துக்கொண்டு “பாஸிட்டிவ் “என்று காட்டினாள்.
ரகுபதிக்கு கால்கள் தரையில் இல்லை.
“காலையில் முதல் வேலையாக சித்ரா நர்சிங் ஹோம் போயி டாக்டர் சித்ராவை பார்த்துடணும்” என்றான். கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.
பூங்கொடிக்கும் மகிழ்ச்சிதான் ஆனாலும் இது போல் எத்தனை முறை அவர்கள் ஆசையாகச் சென்று பரிசோதித்து அது உறுதியும் படுத்தப்பட்டுப்பின் இரண்டொரு நாளில் கலைந்தும் போயிருக்கிறது. இம்முறை அப்படி நடக்காமல் இருக்கவேண்டும் என்று அவளது இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டாள்.
“இந்த வருஷ தீபாவளி நமக்கு ஸ்பெஷலான தீபாவளியாக இருக்கும் பூங்கொடி. உங்க அண்ணனுக்கு போன் போட்டு சொல்லிடலாமா? பாவம் அவரும்தான் உன்னப் பத்தி எவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு”
“வேண்டாங்க நாளைக்கு ஹாஸ்பிடல் போய் செக்கப் முடிஞ்சதுக்கு அப்புறம் அண்ணனுக்கு சொல்லிக்கலாம். இப்ப பசிக்குது வாங்க சாப்பிடலாம் என்ன டிபன் செஞ்சிருக்கீங்க?” என்றாள் சிரித்தபடி.
“உனக்கும் என்னுடைய குட்டி இளவரசிக்கும் பசிக்கும் இல்ல? வா வா சூடா இட்லி ஊத்தியிருக்கேன்.
“யாரு இளவரசி? நமக்குப் பொண்ணு எல்லாம் வேணாம்” அவள் சொல்லும் போதே கண்கள் கலங்கியது.
வலியை உணர்ந்தவனாய்,
“சரி சரி வா சூடா சாப்பிடலாம்” என்றான்.
மறுநாள்
செல்வி அப்பாவிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.
“எனக்குப் பட்டாசு வாங்கித் தாங்கப்பா.”
“தீபாவளிக்கு தான் வாங்கித் தருவேன். இப்ப அடம் பண்ணாத அடிதான் விழும். புரிஞ்சுக்கோ” என்று பதிலுக்குக் கத்தினான் கணேசன்.
“புள்ள கேக்குறால்ல வாங்கித் தந்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க?”என்று கணேஷின் மனைவி கற்பகம் கத்தினாள்.
“என் கஷ்டம் எனக்குத் தாண்டி தெரியும்”என்று புலம்பிக்கொண்டேத் தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
ஆஸ்பத்திரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர் ரகுபதியும், பூங்கொடியும். செல்வி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, “இங்க வாடாச் செல்லம் ஏன் அலற?” என்று கேட்டாள்.
“பட்டாசு கேட்டா திட்டுறாரு”
“சரி அழாதே, அம்மா வரும்போது வாங்கிட்டு வரேன் சரியா?” என்று செல்வியின் கண்களைத் துடைத்தாள்.
“ஏய் வாடி இங்க” என்று கற்பகம் செல்வியின் முதுகில் இரண்டு அடி போட்டு இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
கற்பகத்திற்கு ஏனோ பூங்கொடியைப் பிடிக்காமல் போய்விட்டது. மனம் பிறழ்ந்தவள் எங்கே தன் பிள்ளைக்கு ஏதேனும் ஆபத்தை உண்டு பண்ணிவிடுவாளோ என்கிற பயம்.
செல்வியை அவளிடம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டாள்.
அதே போல் தான் மற்ற வீட்டினரும்.
தன் மீது இருக்கும் வெறுப்பில் இப்படி குழந்தையை தண்டிக்கிறார்களே என்று மிகவும் வருந்தினாள்.
“ஏன்கா இப்படி நடந்துக்குறீங்க?” என்றாள்.
“ஊரே உன்னப்பத்தி எப்படி பேசுதுன்னு உனக்கேத் தெரியும். நான் வேற புதுசா சொல்லணுமா என்ன?” கொஞ்சமும் இரக்கமில்லாமல் பேசினாள் கற்பகம்.
“வாய மூடுங்க” என்று ஆவேசமாய்க் கத்திய ரகுபதியை அடக்கி எதுவும் பேசாமல் கிளம்பினாள் பூங்கொடி.
சித்ரா நர்சிங் ஹோம்
டாக்டர் சித்ரா சொல்லச் சொல்ல பூங்கொடியின் காதில் தேன் வந்து பாய்ந்தது.
“கொழந்த உண்டாயிருக்குறம்மா” இந்த வார்த்தை தனது இதயத்தில் நிரம்பிக்கிடந்த அத்தனை அவமானங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்தது.
“ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கோங்க.அதிகம் வெயிட் தூக்கக்கூடாது. கர்பப்பை வீக்கா இருக்கு. ஆனாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை. கவனமா பார்த்துக்கோங்க ” என்று ரகுபதியிடம் மிகவும் கட்டாயமாகக் கூறினார் டாக்டர் சித்ரா.
“உள்ளங்கையில் வச்சு தாங்குவேன் டாக்டர். ஏன்னா அவ்ளோ அவமானம் பட்டிருக்கோம் ரெண்டுபேரும் ” என்று கண்கள் கலங்க கூறிவிட்டு பூங்கொடியை அழைத்துக்கொண்டு வெளியே வந்தவன்,
“பூங்கொடி, நாம ரொம்ப கவனமா இருக்கணும். அதனால பைக்ல போக வேண்டாம். ஒரு ஆட்டோ பிடிச்சி போய்க்கலாம். நீ ஆட்டோல போ. நான் பின்னாடியே பைக்ல வந்துடுறேன். ”
“அதெல்லாம் வேண்டாங்க பக்கத்துல தானே? பைக்லயே போய்டலாம்”
“சரி வா, மெதுவா ஓட்டுறேன்”
“செல்வி குட்டிக்கு பட்டாசு வாங்கிட்டுப் போலாங்க”
“உன்ன நினச்சா ரொம்பப் பெருமையா இருக்கு பூங்கொடி”
சிரித்தாள்.
எவ்வளவு மெதுவாக வண்டியை ஓட்ட முடியுமோ அவ்வளவு மெதுவாக ஓட்டினான். சிறு பள்ளம் மேட்டிற்குக்கூட பின்னால் உட்கார்ந்து வரும் பூங்கொடி குலுங்கவில்லை.
வீட்டுக்கு அருகே திரும்பும் போதுதான் எதிரே வேகமாய் வந்த கணேஷின் ஸ்கூட்டரில் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இரண்டு வண்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி எழுப்பிய சத்தம் பூங்கொடியின் காதுக்குள் அமிலமாய் இறங்கியது. செல்வியின் முகம் ஒரு வினாடி வந்து போனது. இதயம் படபடக்க அப்படியே சரிந்தாள்.
உடனடியாக சித்ரா நர்சிங் ஹோமிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்து சேர்த்தும் இதயத்தில் இடிதான் விழுந்தது.
ஆமாம், கரு கலைந்துவிட்டது. கனவுகள் சிதைந்துவிட்டது. மீண்டும் அத்தனை அவமானங்களும் வேர்விடத் தொடங்கிவிட்டது.
ரகுபதிக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. விஷயம் தெரிந்து ஓடிவந்த பூங்கொடியின் அண்ணன் வினோத்துக்கும் தாங்க முடியாத பேரிடியானது.
கணேஷின் மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுத்து அவனை உள்ளே தள்ளுவது என்று முடிவெடுத்தனர். ரகுபதியும், வினோத்தும்.
மயக்கம் தெளிந்து, விஷயம் புரிந்ததும் பூங்கொடி வேதனையின் எல்லைக்கேப் போய்விட்டாள்.
ஆனாலும் அண்ணனும், ரகுபதியும் கணேஷின் மீது போலீஸில் புகார் அளிக்கப் போவதை அறிந்து தடுத்தாள்.
“ஏன் பூங்கொடி? அவங்க உன்ன எந்த அளவுக்கு அவமானப் படுத்தியிருப்பாங்க? நீ அவங்க மேல போய் இரக்கப்படுற? அந்த கணேஷால நமக்கு எவ்ளோ பெரிய இழப்பு ” என்று ரகுபதி கலங்கினான்.
“வேண்டாங்க சொன்னா கேளுங்க”
“அதான் ஏன்?”
“ஏன்னா, நாளைக்கு தீபாவளி, பாவம் அந்த செல்விகுட்டி. அவளும் நம்ம குழந்தை தானே? சந்தோசமா அவங்க அப்பாக்கூட சேர்ந்து தீபாவளி கொண்டாடட்டும் ” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
பூங்கொடி சொன்னதைக் கேட்டதும் கண்கள் கலங்கிய ரகுபதி திரும்பிப்பார்த்தான்.
வாசலில் கணேஷ் செல்வியுடன் நின்றிருந்தான். அவன் கண்கள் கலங்க கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருக்க,
பூங்கொடியை நோக்கி ஓடிவந்த செல்வி வேகமாய்க் கட்டிலின் மேலேறி “அம்மா “என்று அணைத்துக்கொண்டாள்.
000

எனது பெயர் செந்தில்குமார். அப்பாவின் பெயர் அமிர்தலிங்கம்
அம்மாவின் பெயர் பருவதம்.
நான் திருச்சி மாவட்டம் துறையூரில்
ஒரு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன்.
செந்தில்குமார் அமிர்தலிங்கம் எனும் பெயரில்
சிறுகதைகள் எழுதிவருகிறேன்.
வார இதழ்களில் எனது சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
திருச்சி வானொலியில் எனது கவிதைகள் தொடர்பான
அரைமணி நேர நிகழ்ச்சியை நானே தொகுத்து வழங்கியுள்ளேன்.
‘பசுந்தளிர் ‘, ‘அம்மாவுக்குப் பிடித்த பாடல் ‘, ‘வானவில் ‘
எனும் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்.