பிரான்ஸ் தேச கதை

வெகு வெகு காலத்துக்கு முன்னாலே பிரான்ஸ் தேசத்தில் ஓர் ஏழை இருந்தான். அவன் மாவரைக்கும் யந்திரம் வைத்துப் பிழைத்து வந்தான். அவனுக்கு மூன்று பிள்ளைகள், அவன் இறக்கும்போது தன் பிள்ளைகளுக்கு ஆஸ்தி ஏதும் வைக்கவில்லை. மாவரைக்கும் சாதனத்தை மூத்த மகனுக்கும், மூட்டை சுமக்கும் கழுதையை இரண்டாமவனுக்கும், தான் வளர்த்து வந்த பூனையை மூன்றாவது பிள்ளைக்கும் கொடுத்துவிட்டுக் கண்ணை மூடினான். பாவம், மூன்றாவது மகன்! ‘பூனைக் குட்டியை வைத்துக் கொண்டு நான் எப்படிப் பிழைப்பேன்? என் அண்ணன் மார்கள் எல்லாம் கழுதையையும் யந்திரத்தையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையைச் சந்தோஷமாகத் தொடங்கி விட்டார்கள். நான் இந்தப் பூனையைக் கொன்று இதன் தோலைக் கையுறை செய்வதற்கு விற்றால் கூட ஒரு நாள் சாப்பாட்டுக்குத்தான் வரும்’ என்று தனக்குத் தானே சொல்லி அலுத்துக் கொண்டான்.

அவன் அருகே இருந்த பூனை இதைக் கேட்டுக் கொண்டிருந்தது. “எஜமானரே ! என் தோலை விற்றுச் சாப்பிடுவதைவிட நல்ல காரியங்களைச் செய்யலாம். நான் சொல்கிறபடி கேட்பீர்களானால் உங்களைத் தேடி நல்வாழ்வு தானாக வரும்” என்றது.

பூனை பேசுவதைக் கேட்டு வியப்படைந்த வாலிபன் அது சொல்வது நியாயமாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருப்பதைக் கண்டு, “நீ எது சொன்னாலும் அதன்படி நான் கேட்கிறேன்” என்று உறுதியளித்தான்.

‘அப்படியானால் எனக்குக் கனமான ஒரு ஜதை உயர்ந்த பூட்ஸ்களையும் ஒரு சாக்குப் பையையும் தயார் செய்து கொடுங்கள். பிறகு நடப்பதைப் பாருங்கள்” என்றது பூனை.

மாவாலைக்காரனின் கடைசி மகன் ‘பூனை கேட்டபடியே காலணிகளையும், கோணிப் பையையும் தயார் செய்து கொடுத்தான். பூட்ஸ்களுக்குள் பூனை தன் கால்களை நுழைத்துக் கொண்டது. கோணிப் பையைத் தோள் மீது போட்டுக் கொண்டது. அடுத்திருந்த ஒரு கானகத்தை நோக்கிப் பூனை புறப்பட்டது.

அந்த ஊர் ராஜாவுக்கு முயல் மாமிசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இதை அறிந்திருந்தது பூனை. அந்தக் காட்டில் ஏராளமான முயல்கள் இருந்தன. ஆனால் அவைகளை யாராலும் பிடிக்க முடியவில்லை, ராஜாவின் ஆசையும் நிறைவேறவில்லை. ஓர் இடத்தில் பூனை தன் சாக்குப் பையைத் திறந்தபடி வைத்து அதன் அருகில் செத்துப் போனது போல் பாசாங்கு செய்தபடி படுத்துக் கொண்டது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நாலைந்து கொழுத்த முயல்கள் அந்தப் பக்கமாக வந்தன. சாக்குப் பையில் காரட், லெட்டூஸ், கோஸ் எல்லாம் இருந்தன. முயல்களுக்கு நாக்கில் நீர் ஊறியது. பூனையோ இறந்து கிடக்கிறது. பயப்பட வேண்டியதில்லை, என்று சாக்குப் பைக்குள் தாவிக்குதித்து உற்சாகமாகத் தின்ன ஆரம்பித்தன. இதற்காகவே காத்திருந்த பூனை குபீரென்று எழுந்து சாக்குப் பையின் நூலை ‘சர்’ என இழுத்து அதை முடி போட்டுக் கட்டியது. முயல்கள் மூட்டைக்குள் சிறைப்பட்டன. பூனை மூட்டையுடன் அரண்மனைக்கு வந்தது.

‘அரசரைப் பேட்டி காண வேண்டும். அவருக்கு அன்பளிப்பாக முயல்களுடன் வந்திருக்கிறேன்” என்றது. புட்ஸ் போட்ட பூனையையும், அது கம்பீரமாகப் பேசுவதையும் கண்ட காவல்காரன் ஓடோடிப் போய் அரசரிடம் விஷயத்தைக் கூறினான். அரசரும் அனுமதியளித்தார்.

மன்னரின் முன்னால் சிரம் தாழ்த்தி மரியாதை செலுத்திய பூனை. “மன்னர் அவர்களே. என் எஜமானர், காரபாஸ் நகரின் அதிபர், தங்களுக்கு இதைக் காணிக்கையாக அனுப்பி இருக்கிறார்” என்று முயல்களை அவருக்கு முன்னால் வைத்தது. மன்னருக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி. அவருக்கு பிடித்தமான உணவாயிற்றே!

”இனி இந்தப் பூனை எப்போது என்னைக் காண விரும்பினாலும் தடை சொல்லாமல் அரண்மனைக்குள் அனுப்பி வையுங்கள்” என்று தம் பணியாளர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.

பூனையும் மன்னர் அளித்த இந்தச் சலுகையைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொண்டது. அடிக்கடி காட்டுக்குப் போய் அவருக்குப் பிடித்தமான காடை, கவுதாரி, குயில், மயில் என்று பலவிதமான சுவை மிக்க உணவு வகைகளாகப் பிடித்துக் கொண்டு போய் அதைத் தன் எஜமானர் காரபாஸ் நகர் அதிபர் அளித்ததாகக் கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் பூனை மூன்றாவது மகனிடம் ஓடி வந்தது. “நான் சொல்கிறபடி கேள். உனக்கு நல்ல காலமும் அதிர்ஷ்டமும் வரப் போகிறது. நாளை ஊருக்கு வெளியிலுள்ள காட்டாற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிரு. மற்றதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அரசரும் அவருடைய ஒரே பெண்ணான அரச குமாரியும் அந்தப் பக்கமாகக் கோச்சு வண்டியில் வருவார்கள். அப்போது நீ ஆற்றில் குளித்தபடி இருக்க வேண்டும். அப்போது நான் என்ன செய்தாலும் நீ மறுக்கவோ, வியப்படையவோ செய்யாதே!” என்றது பூட்ஸ் போட்ட பூனை.

மறு நாள் அது சொன்னபடியே வாலிபன் காட்டாற்றுக்குப் போனான். தன்னுடைய கந்தல் ஆடையைக் கழற்றிக் கரையில் வைத்து விட்டு ஆற்றில் இறங்கிக் குளிக்கலானான். பூனை உடனே அந்த உடையை மறைத்து வைத்தது. பிறகு மன்னரின் கோச்சு வண்டி வருவதற்காக ஒரு புதர் மறைவில் காத்திருந்தது,

கோச் வண்டி வருவதைத் தூரத்தில் பார்த்ததும், ஆற்றங்கரையில் வந்து நின்றுகொண்டு, உதவி! உதவி! யாராவது காப்பாற்றுங்களேன். என் எஜமானர் காரபாஸ் நகர் அதிபர் காட்டாற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்” என்று அபயக் குரல் எழுப்பியது பூட்ஸ் அணிந்த பூனை. தனக்கு அடிக் கடி காணிக்கைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் பூனையைக் கண்ட அரசர் வண்டியை நிறுத்தச் செய்து ஆற்றங்கரைக்கு விரைந்தார்.

”ஐயோ! கொலைகாரப் பாவிகள்…! திருடர்கள் என் எஜமானரின் பொருள்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு அவரது உடைகளைக்கூட விட்டு வைக்காமல் – அவரை ஆற்றில் தள்ளிவிட்டு ஓடிவிட்டார்கள் அரசே!” என்று பரிதாபமாகப் பிரலாபித்தது. உடனே மன்னரோடு வந்த பணியாளர்கள் வாலிபனை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். ஒருவன் அரண்மனைக்கு ஓடினான், ராஜ உடைகளைக் கொண்டு வருவதற்காக.

”இவர்தான் என் எஜமானர், காரபாஸ் நகரின் அதிபர்” என்று பூனை மன்னருக்கு இளைஞனை அறிமுகப்படுத்தியது. இளைஞனின் கட்டான உடலிலும் கனிவான பார்வையிலும், களையான முகத்திலும் மகிழ்ச்சி கொண்ட மன்னர் அவனைத் தம்முடன் கோச்சில் தம் அருகில் வந்து அமர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

பூட்ஸ் அணிந்த பூனை இதற்குள் முன்னால் ஓடியது. கண்ணுக்கெட்டியவரை அங்கே கோதுமை பயிரிட்டு அறுவடை நடந்து கொண்டிருந்தது. அந்தக் குடியானவர்களிடம் போய்த் தனது மீசை துடிக்க உரத்த குரலில் அவர்களுக்குக் கட்டளை இட்டது. ‘‘நல்லவர்களே! நான் சொல்கிறபடி கேளுங்கள்! இந்தப் பக்கமாக மன்னர் வரப் போகிறார். நிச்சயமாக அவர் இந்தப் பரந்த நிலத்தின் அருகே தம் வண்டியை நிறுத்தி ““இந்தக் கோதுமை வயல்கள் யாருக்குச் சொந்தம்?” என்று கேட்பார். நீங்கள் ‘இது காரபாஸ் நகர அதிபருக்கு உரிமையானவை’ என்று சொல்ல வேண்டும். சொல்லா விட்டால் உங்கள் எல்லாரையும் கண்டதுண்டமாக வெட்டிப் போட்டுவிடுவேன்.”

பூனை சொன்னபடியே மன்னரின் கோச்சு வண்டி வந்தது. அவரும் பூனை சொன்னபடியே கேட்டார். குடியானவர்களும் அதன் கட்டளையிட்டபடியே கூறினார்கள். “எத்தனை பரந்த நிலம்? என்ன செழுமையான விளைச்சல்? அற்புதம்’ என்று தம் அருகே அரச உடையில் அமர்ந்திருந்த வாலிபனிடம் பாராட்டினார் அரசர். அவனும் புன்முறுவலுடன் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டான். இதற்குள் பூட்ஸ் அணிந்த பூனை மன்னருக்கு முன்னால் வேகமாகச் சென்றது, ஒரு பெரிய திராட்சைத் தோட்டத்திற்கு. ஏராளமான தொழிலாளர் அங்கு திராட்சைக் குலைகளைப் பறித்து சேகரித்துக் கொண்டிருந்தார்கள். பூனை தன் வாலைக் குழைத்துப் பின்னால் வளைவாக நிமிர்த்தியபடி அவர்களிடம் கூறியது. ’மன்னர் வந்துகொண்டு இருக்கிறார். இந்த திராட்சைத்தோட்டம் யாருடையது என்று கேட்டால் –’ கோதுமை வயலில் குடியானவர்களுக்கு ஆணையிட்டது போலவே இவர்களுக்கும் கட்டளை பிறப்பித்தது. பூனை கூறியபடியே அரசரின் கோச்சு வண்டி திராட்சை தோட்டத்தைக்கண்டதும் நின்றது. எல்லாமே சொல்லி வைத்தாற்போல முன்பு போலவே நடந்தன.

”எவ்வளவு உயர்ந்த திராட்சைகள்? இத்தனை பெரிய திராட்சைத் தோட்டத்து அதிபரான நீர் பாக்கியசாலி தான்” என்று பாராட்டினார் இளைஞனை மன்னர். அவனும் தன் பூனையின் திறமையை எண்ணி மகிழ்ந்து சிரித்துக் கொண்டான்.

இதற்குள் பூட்ஸ் கால் பூனை ஒரு பெரிய கோட்டைக்குள் புகுந்தது. அது ஒரு கொடிய பூதத்தின் கோட்டை. அந்த விளை நிலமெல்லாம் அந்தப் பூதத்தினுடையதுதான். அது ரொம்பக் கொடிய பூதம். அதனிடம் வேலை செய்கிறவர்களெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிய குற்றமானாலும் அவர்களை உடனே அது தன் உணவாகச் சாப்பிட்டுவிடும். அதனுடன் யாராலும் போராடி வெல்ல முடியாது. எந்த மிருகத்தின் உருவத்தையும் எடுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றது அந்தக் கொடிய பூதம். எத்தனை பலசாலியானாலும் வீராதி வீரனானாலும் கர்ஜனை புரியும் சிங்கத்துடனோ, கொடிய புலியுடனோ, கொல்ல வரும் மதம் கொண்ட யானையுடனோ போராடி முடியுமா ? கோட்டைக்குள் நுழைவது பூனைக்குப் பெரிய விஷயம் இல்லையே! புகுந்து விட்டது. உள்ளே பெரிய கூடத்தில் பூதம் உட்கார்ந்து கொண்டிருந்தது உணவருந்தியபடி.

”யார் நீ? என் கோட்டைக்குள் வர உனக்கு என்ன தைரியம்?” என்று கர்ஜித்தது பூதம்.

“பிரபுவே, தயாநிதியே ! நான் ஓர் எளிய பாதசாரி. ஊர் ஊராகப் போய் உலகின் அதிசயங்களையெல்லாம் கண்டு வருகிறேன். நான் சின்னக் குட்டியாக இருக்கும் போதே உங்கள் புகழ் பற்றிக் கேட்டிருக்கிறேன். இடைக்கும் நேரத்தில் நீங்கள் எந்த மிருகமாக வேண்டுமானாலும் உருமாறுவீர்களாமே? உண்மைதானா? என்னால் நம்பவே முடியவில்லை” என்றது.

”உண்மை தான். நம்பலாம். பார்க்கிறாயா? இதோ….” என்றது பூதம். அடுத்த வினாடி சிங்கத்தின் பயங்கரமான கர்ஜனை கேட்டது கூடத்தில். பீதியினால் பூனை கீச் மூச்சென்று பதறிப் பயந்து நடுங்கிக் கூடத்தின் மூலைக்கு ஓடியது பதுங்கிக்கொள்ள. பூதம் இருந்த இடத்தில் சிங்கம் தன் கோரமான வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தது. பூனையின் பதறலும் உதறலும் அதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பூட்ஸ் போட்ட பூனை நிஜமாகவே பயப்படுவதாக எண்ணிவிட்டது முட்டாள் பூதம்.

“மாண்புமிகு பூதமே! திறமையில் சந்தேகம் கொண்ட என்னை மன்னித்துவிடுங்கள். நான் எண்ணியதைவிட நீங்கள் மகத்தான பராக்கிரமம் மிக்கவர். ஆனாலும் இந்தச் சிறியேனுக்கு ஒரு சின்ன ஐயப்பாடு. உங்களைப் போன்ற வல்லமையும் சாகஸமும் மிக்கவர்கள் கம்பீரமான மிருக ராஜனான சிங்கமாகத்தான் மாறுவீர்கள். ஆனால் உங்களால் மிக மிகச் சிறிய, சாதாரணமான, மதிப்பற்ற, கேவலமான ஒரு ஐந்துவாக மாற முடியுமா? உதாரணத்துக்கு ஒரு சுண்டெலியாக. ஆனால் கௌரவம் மிக்க உங்களால் அது முடியாது என்றே நம்புகிறேன்” என்றது.

”முடியாதா?” கூச்சலிட்டது பூதம்.

“முடியாது என்பதே கிடையாது. என்னிடம், தெரியுமா? கேடுகெட்ட பூனையே இதோ பார்…” என்றதும் அத்தனை பெரிய கூடத்தின் குறுக்கே ஒரு சின்னச் சுண்டெலி கீச்கீச்சென்று ஓடியது! பூட்ஸ் போட்ட பூனை ஒரே தாவில் அதன் மீது பாய்ந்து அதைப் பிடித்து ஒரே வாயில் போட்டு விழுங்கி, “ஏவ்!” என்று ஓர் ஏப்பமும் விட்டது.

கோட்டையிலிருந்த பூதத்தின் பணியாளர்களையெல்லாம் பூனை கூட்டியது.

“உங்கள் எஜமானரை நான் கொன்று தின்றுவிட்டேன், புதிய எஜமானர் வருவார். உங்களை அன்போடு நடத்துவார். ஆனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா? இந்தக் கோட்டை காரபாஸ் அதிபருக்கு உரிமையானது என்று சொல்ல வேண்டும், புரிந்ததா?” என்று உத்தரவிட்டது. பூதத்திடமிருந்து விடுதலை பெற்றவர்கள் இதை மறுக்கவா செய்வார்கள்?

+++

தமிழில் – விகேயெம்

நன்றி – கோகுலம் -1974

கிளாசிக்

மற்ற பதிவுகள்

One thought on “பூட்ஸ்கால் பூனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *