கண்ணன்
இக்கதையில் வரும் நான் என்பது, எனது நண்பன். அவனது பெயரைக் குறிப்பிட விரும்பாததால், இக்கதையைத் தன்மையில் சொல்கிறேன். ஆனால், இன்றைய சூழலில், கணினித் துறையில், இது உங்களுக்கும் நடக்க அத்தனை சாத்தியங்களும் உண்டு.
நான் வேலை செய்த புராஜக்ட் ஐந்து வருடங்கள் முடிய, மூன்று மாதங்களுக்கு முன்பே, புதுப்பித்தலுக்கான வேலைகள் தொடங்கி விட்டன.
ஆனால் இந்த முறை, நிச்சயமாக ஐந்து வருடங்கள் கிடைக்காது என்று அனைத்து மேலதிகாரிகளுக்கும் தெரிந்து விட்டது. மூன்று வருடங்களுக்காவது புதுப்பிக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு அதிகாரப்பூர்வமற்ற கட்டளை மேலிடத்திலிருந்து வந்திருந்தது.
ஆனால் வாடிக்கையாளர் பக்கத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இதற்காகவே ஒரு புதிய மேலாளரை நியமித்திருந்தனர்.
நாற்பது வயதுக்குள், மிகவும் ஒல்லியான, தடித்த பிரேம் கொண்ட கண்ணாடி அணிந்த ஒரு பெண் மேலாளர் அவர். இத்தகைய பேச்சு வார்த்தைகளில் விற்பன்னராக இருந்தார்.
எப்போதும் இல்லாத நடைமுறையாக, மற்ற போட்டியாளர்களுக்கும் இந்த முறை டெண்டர் திறந்து விடப்பட்டது. ஒருவரிடம் டெண்டர் கொட்டேஷன் வாங்கிய பிறகு, அதை வைத்துக் கொண்டு அடுத்தவரிடம் பேரம் பேசுதல், விலையைக் குறைக்க உதவும் மிகச் சிறந்த ஒரு நடைமுறை.
மற்றொரு இடி என்னவென்றால், நானூறு பேர் இருந்த புராஜக்ட்டில், நூற்றியம்பது பேர்களாகக் குறைக்க வேண்டும் என்று வாடிக்கையாளரிடமிருந்து, நேரிடையாகவே, தெளிவான முறையில் சொல்லப் பட்டுவிட்டது.
புதிய ஒப்பந்த முறையில், திட்டத்தை செயல்படுத்தும் முறை, சாதாரணமான முறையிலிருந்து, அஜைல் எனப்படும் துரித முறைக்கு மாற்றப் படுமென்றும், அதற்கு எல்லோரும் தயாராக வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
எனது திட்டத்தை இந்தப் புதிய முறைக்கு மாற்றுவது, மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. எனது அணியினர் மிகவும் குழப்பமான நிலையில் இருந்தனர். அவர்களின் செயலூக்கம் குறைந்திருந்தது. ஏற்கனவே அவர்கள் குறைவான சம்பளம் மற்றும் நீண்ட காலமாக சம்பள உயர்வே இல்லாமல், வேலையில் ஒன்றாமல் இருந்தனர். அவர்களிடம் வேலை வாங்குவதே, பெரிய சவாலாக இருந்தது.
தினமும் புதிய முறையில் திட்டத்தை செயல்படுத்தும் பயிற்சி தரப்பட்டது. ஏற்கனவே செய்து வந்ததை, புதிய முறையில் செயல்படுத்த நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இதை நடைமுறைப்படுத்தும் திட்டத்தைத் தயாரிக்கும் பணியில் எனக்கு உதவ, ஐரோப்பாவிலிருந்து ஒரு ஆர்க்கிடெக்ட் நியமிக்கப்பட்டார். அவருடன் தினமும் கலந்தாய்வு இருந்தது.
பலமுறை கலந்தாய்வில் கலந்து கொண்டு, இறுதியில், புதிய முறையில் திட்டத்தை செயல்படுத்தும் வழிகளைக் கண்டறிந்த பின், வாடிக்கையாளரிடம் பகிர்ந்து கொண்டோம். எனது ரோலும் திட்ட மேலாளரிலிருந்து, மாறியது. அங்கு தான் சிக்கல் வந்தது. அந்த ரோலுக்கு, எனது அனுபவம் அதிகமாக இருந்தது என்று எனது மேனேஜர்கள் முடிவு செய்தனர்.
இதே வாடிக்கையாளரிடம் ஐந்து வருடங்கள் வேலை செய்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் சிறந்த தரவரிசை கிடைத்தது. எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் அத்தனையையும் சமாளித்து இருக்கிறேன். வாடிக்கையாளர்களின் மேலாளர் பக்கமிருந்து, எனக்கு மிகவும் நல்ல பெயர் இருந்ததால், என்னை இழக்க முதலில் அவர் சம்மதிக்கவில்லை. இதை ஒரு ரிஸ்க்காக காட்டியிருந்தார். ஆனால் நமது மேலாளர்கள் மிகவும் ஸ்மார்ட் அல்லவா. இதே வாடிக்கையாளரிடம் தொடர்ந்தால் எனது முன்னேற்றம் பாதிக்கும் என்று ஒரு கதையைச் சொல்லி சமாளித்து விட்டனர். இப்படியாக இந்த திட்டத்திலிருந்து வெளியேற, ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதே சமயத்தில், புதிய திட்டத்தை அமல்படுத்த வாடிக்கையாளர் பக்கமிருந்து, இருவர் இந்தியாவுக்கு வருகை தந்தனர். திட்டம் புதிப்பக்கப்படும் நேரம் ஆதலால், அவர்களின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. புதிய திட்டத்திற்கு மாறுவதில் இருந்த சவால்கள் மற்றும் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் ஆகியவை பற்றிய கேள்விகளை மூடி மறைத்து, எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்னும் ஒரு இமேஜை, அவர்களின் மனதில் விதைக்க எனது மேலாளர்கள் மிகவும் முயன்றனர். நானும் மற்றும் ஒரு சீனியர் திட்ட மேலாளரும், நேரடியாகக் கேள்வி கேட்பவர்களாக இருந்தோம். முதலில் எங்கள் இருவரையும் இக்கூட்டத்திற்கு வரவழைத்தனர்.
இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. வேறு ஒரு மேலாளர், புதிய அக்கௌன்ட் தலைவருக்கு நெருக்கமானவர், பெயர் ஏஞ்சல். நாங்கள் இருவரும், கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு, காபி அருந்த, பிரேக் அவுட் இடத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். ஏஞ்சல் எங்களிடம் வந்து, “நீங்களிருவரும் இந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளத் தேவையில்லை. உங்கள் இருக்கைக்குச் செல்லலாம்” என்றார். ஏன் என்று கேட்கத் தோணவில்லை. அதிர்ச்சியை விட, அவமானம் பிடுங்கித் தின்றது. இந்தக் கம்பெனிக்காக இரவு பகலாக, பதினைந்து வருடங்கள் உழைத்திருக்கிறேன். ஆனாலும் மரியாதை இல்லை. கிடைப்பது வெறும் ஒற்றை இலக்க சம்பள உயர்வு. அதுவும் வருடம் ஒரு முறை. அதுவும் நிலைமை சரியில்லை என்றால், நிறுத்தி விடுவார்கள். பிரமோஷனைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க இயலாது. அதற்கு வேறு பல தனித் திறமைகள், அரசாங்க வேலையைப் போல, தேவைப்பட்டன.
நாங்கள் இருவரும் காபியைக் குடிக்காமல், அங்கிருந்து வெளியேறி எங்கள் இருக்கைக்கு வந்தோம்.
என்னை விட, என்னுடன் வந்த மேலாளர் ரமேஷ் மிகவும் வருத்தப் பட்டார். “இன்னும் மூன்று வருடங்கள் தான், ஓய்வுக்கு. வேறு ஒரு நீண்ட திட்டம் கிடைத்தால், வண்டியை ஓட்டி விடலாம்.” என்றார் ஆங்கிலத்தில். “இனி இந்த திட்டத்தில் நமக்கு மரியாதை இல்லை. சீக்கிரம் ரிலீஸ் கிடைத்தால் பரவாயில்லை” என்றேன்.
அறிவுப் பரிமாற்றம் செய்வதற்கு ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆன் சைட்டில், அதாவது, லண்டனில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இந்தப் புதிய முறையில் விருப்பமேயில்லை. நாங்கள் அனைவரும், வேறு வேறு குழுக்களில், இணைய நிர்ப்பந்தம் செய்யப்பட்டோம். வேறு குழுக்களை மேலாண்மை செய்ய நியமிக்கப்பட்டவர்களுக்கு, அந்தளவுக்கு மனித மேலாண்மை தெரியவில்லை. மிகவும் சிரமப்பட்டனர். எனது குழுவிலிருந்து சென்று, அங்கு வேலை செய்யும் ஆன்சைட் பணியாளர்கள் பற்றி, புகார்கள் வந்து கொண்டேயிருந்தது.
நாட்கள் வேகமாக நகர்ந்தன. இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் நாளும் வந்தது. இடையில் ஒரு இரண்டு வாரங்களுக்கு, பில்லிங் நீட்டிப்பு கிடைத்தது. பில்லிங் என்பது, உங்கள் மூலமாகக் கம்பெனிக்கு வருமானம் வருகிறது என்பதற்கான ஒரு முக்கியமான அடையாளம். வருமானம் இல்லையெனில் நீங்கள் ரிஸ்க்கில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
உணவு இடைவேளையில் எனது டீமில் வேலை செய்த, ஹரி ஒரு கேக் ஆர்டர் செய்திருந்தார். பெங்களூரில் எங்கள் டீமில் வேலை செய்தவர்கள் வந்திருந்தனர். கேக்கில் நன்றி என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. முதல் முறையாக, கேக் கட் செய்தேன். முதல் துண்டை, ஹரிக்கு ஊட்டினேன். அனைவரும் கேக்கும், பப்ஸும் உண்டோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, சந்தோஷமாக இருந்தது. கஷ்டப்பட்டதற்கு இதுதான் பலன். இது மட்டுமே பலன். கம்பெனி சேரிட்டிக்கு அள்ளிக் கொடுக்கும். ஆனால் கடினமான உழைப்பவர்களுக்கு எதுவும் தராது. இதுதான் எல்லாக் கம்பெனிகளிலுமுள்ள நடைமுறை. யாருக்கும் இதயமில்லை.
அன்றிரவு தூக்கம் வரவில்லை. வருட இறுதியில், புதிய திட்டங்கள் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். ஒவ்வொரு கம்பெனியிலும், ஒரு திட்டத்திற்கும், புதிய திட்டத்திற்குமான இந்த இடைவெளி மாறும். எங்கள் கம்பனியில் நாற்பத்தைந்து நாட்கள். எந்த திட்டத்திலும் இல்லாததால் , என்னால் கம்பெனிக்கு வருமானம் ஏதுமில்லை. பெஞ்ச்சில் இருப்பது நல்லதல்ல. எவ்வளவு சீக்கிரம் அடுத்த திட்டத்தில் நுழைகிறோமோ, அவ்வளவு நல்லது.
நாட்கள் ஓடியதே தெரியவில்லை. அதற்குள் இரண்டு வாரங்கள் ஓடி விட்டது. புதிய அக்கௌன்ட்டுகளின் மேலாளர்கள், புதிதாக பொசிஷன் இல்லையென்றாலும், ரிசர்வ் செய்தார்கள். போன் செய்தால், எடுப்பதில்லை. மெசஞ்சரில் சொல்லவே வேண்டாம். பதிலே இருக்காது. நமது முக்கியமான ஸ்கில்லை, விட்டு விட்டு, நமது ரெஸ்யூமிலிருக்கும் ஏதோ ஒரு ஸ்கில்லுக்காக, நம்மை ரிசர்வ் செய்வார்கள். ஒவ்வொரு முறையும் மூன்று நாட்கள் இதனாலேயே ஓடி விடும். இடையில் கஸ்டமர் நேர்காணல் எதுவும் அரேஞ்ச் செய்ய மாட்டார்கள். சில சமயங்களில், இரண்டு முறை, ரிசர்வேஷன் நடக்கும் கொடுமையும் உண்டு.
இடையில் சில மாதங்களுக்கு, வேறு ஒரு பேங்கிங் கிளையண்ட் கிடைத்தது. அந்த பொசிஷன் என்னுடைய புரபைலுக்கு மேட்ச் ஆகவில்லையெனினும், வேறு வழியின்றி ஒப்புக் கொண்டேன். முதல் நாளிலிருந்தே கொடுமை ஆரம்பித்து விட்டது. அந்த திட்ட மேலாளர் ஒரு மலையாளி. நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண். தடித்த கண்ணாடியுடன், எதிரே பேசுபவர்களிடம், கேள்விகளாகக் கேட்டுக் கொண்டேயிருந்தார்.
கஸ்டமர் பில்லிங்கும் இல்லை. ஆள் சேர்ப்பதே முக்கியமான வேலை. புராஜக்ட் மேலாண்மை அடுத்ததே. வாடிக்கையாளர் கொடுக்கும் பொசிஷன்களுக்கு கம்பெனி உள்ளே யாரும் இல்லை.வெளியேயிருந்து தான் எடுக்க வேண்டும். ஆனால் கடைசி நேரத்தில், எவரும் எங்கள் கம்பனியில் இணைய விரும்பவில்லை. சம்பளக் குறைவே காரணம். பெரும்பாலும் இவர்கள் விண்டோ ஷாப்பிங் செய்பவர்களாக இருந்தனர். ஒரு கம்பெனியில் ஆஃபர் கடிதத்தை வாங்கிக் கொண்டு, அதை வைத்து மற்றொரு கம்பெனியில் அதிக சம்பளம் கோருபவர்களாக இருந்தனர். எனவே ஒவ்வொரு வாரமும், ஆட்சேர்ப்பு மிகவும் சவாலாக இருந்தது. மேலாளர்களிடமிருந்து எந்த உதவியும் இல்லை. ஆனால் பழியெல்லாம், நாம் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம். மூன்று மாதங்கள் நரகமாகக் கழிந்தது. கம்பெனியில் சேர்ந்து ஒரு வருடம் கூட ஆகாதவர்களெல்லாம், தகுதிக்கு மீறிப் பேசினார்கள். அந்த நாளும் வந்தது.
மாதாந்திர டீம் மீட்டிங் என்னும் சம்பிரதாய சந்திப்பு வந்தது. பலரில் ஒருவனாக கடைசியாக நின்றிருந்தேன். கேக்கும் சமோசாவும் தாரளமாக பரிமாறப்பட்டது.
அப்போது பேசும் போது, எனது மேலாளர்,”தங்களிடம் தனியாகப் பேச வேண்டும். இன்று மாலை, டீம்ஸ் என்னும் டூல் வழியாக ஆன்லைனில், ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்கிறேன்” என்றார். எனக்குப் புரிந்து விட்டது.
கணித்தபடியே, அவரின் பேச்சும் அமைந்தது.”எவ்வளவோ முயன்றும் தங்களை இந்த திட்டத்தில் என்னால், தக்க வைக்க இயலவில்லை. லோயர் பேண்ட் டீமை வைத்து, இந்த வேலை முடிக்கச் சொல்லி, எனது மேலாளரிடம் இருந்து மிகுந்த அழுத்தம். தங்களின் புரபைலை அனுப்புங்கள். எனக்குத் தெரிந்தவர்களிடம் அனுப்பி வைக்கிறேன்” என்றார். “மிக்க நன்றி” என்றேன். எதிர்பார்த்த ஒன்று என்பதால், பெரிய ஏமாற்றம் ஏதுமில்லை. ஆனால் டைமிங் தவறு. பெரும்பாலும் ஆண்டு இறுதியில், புதிய திட்டங்கள் ஏதும் வராது.
கம்பெனியில் வெப் சைட்டில் புரபைலை பதிவேற்றம் செய்து மூன்று வாரங்களாகியும், ஒரு கிளையண்ட் அழைப்பும் வரவில்லை. இப்படியாக ஒரு மாதம் ஓடி விட்டது.
கம்பெனி உள்ளே தெரிந்த அனைவருக்கும் புரபைல் அனுப்பி விட்டு, தினமும் ஒரு ஞாபகமூட்டலும் செய்து வந்தேன்.
வந்த புராஜக்ட்கள் அனைத்தும் பெங்களூருக்கு, வெளியே இருந்தன. ஒவ்வொரு பணியாளருக்கும் அடுத்த திட்டம் கிடைப்பதில் உதவி செய்ய, ஒருவர் இருப்பார். அவரிடம் மெயில் அனுப்பிக் கேட்டதில், புனேவில் ஒரு பொசிஷன் இருப்பதாகக் கூறினார். உடல்நலம் காரணமாக செல்ல இயலாது என்றதற்கு, கம்பெனி பாலிஸியை மீறுகிறீர்கள் என்று பதில் வந்தது. இதே பதிலை, புதிதாகச் சேர்ந்த ஒரு பெண்ணும், சற்றே மிரட்டல் தொனியில் சொன்னாள். இதற்கும் அந்தப் பெண்ணிடமிருந்து ஒரு கிளையண்ட் அழைப்பும் வரவில்லை. எனது நிலைமையை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது.
நண்பருடன் வேலை செய்த வேறு ஒரு மேலாளர், ஒரு புதிய திட்டம் குறித்த தகவல்களை அனுப்பினார். ஆனால் அந்த திட்டத்தில், இரவு நேரத்தில் வேலை செய்ய வேண்டும். ஏற்கனவே தூக்கமின்மை வியாதி இருப்பதால், இதனை ஏற்க இயலாது என்று பதிலளித்து விட்டேன். இதற்காக, அவருக்கு என் மீது வருத்தம். இது போலவே வரும் வாய்ப்புகளனைத்தும் இரவு நேரப் பணிகளாகவோ அல்லது பெங்களூருக்கு வெளியே இருந்தன.
மற்றுமொரு மேலாளர், உணவு இடைவேளையில் பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு, இந்த வேலைக்கு, உங்கள் புரபைல் மிகவும் சரியான ஒன்று. எனது மேலாளர் லண்டனில் இருந்து இந்தியா வருகிறார். புதன் கிழமை அன்று அவரிடமிருந்து அழைப்பை எதிர்பார்க்கலாம் என்றார். அந்த புதன்கிழமையும் சென்றது. அவரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். தற்போதைக்கு அந்த வேலை நிறுத்தப் பட்டதாகத் தெரிவித்தார். மீண்டும் ஒரு ஏமாற்றம். இவர் ஏற்கனவே வேறு ஒரு வாய்ப்பு குறித்துப் பேசியவர். பிறகு புரொபஷனல் சர்வீசஸிலிருந்து வேறு ஒருவரை எடுத்து விட்டதாகச் சொன்னவர்.
இடையில் என்னுடன் பெஞ்ச்சிலிருந்த, சக்திவேல் என்னும் நண்பர் நிறைய பேருக்கு எனது புரபைலை அனுப்பி வைத்தார். அடிக்கடி பேசுவார். பரஸ்பரம் நம்பிக்கை அளித்துக் கொண்டோம்.
புராஜக்ட் மேனேஜர் மற்றும் ரெக்ரூட்மெண்டில் இருக்கும் பலரின் தொடர்புகளையும் பகிர்ந்து கொண்டார்.
பெஞ்ச்சில் மூன்றாவது வாரத்தில் வேறு ஒரு மேலாளர் வழியாக, அமெரிக்க வாடிக்கையாளரின் மேலாளர் ஒருவரின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் எனது புரபைலை அனுப்பி விட்டு, அவரைச் சந்திக்க நேரம் கேட்டதில், புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு அவரிடம் பேசுவதற்கு நேரம் கிடைத்தது.
இது மிகவும் நம்பிக்கை அளித்தது. புதன்கிழமையன்று சற்று முன்னதாகவே மதிய உணவை முடித்துக் கொண்டு, அவரைச் சந்திக்கச் சென்றேன். அவருடைய தளத்தை அடைந்ததும், போன் செய்தேன். வெளியே வந்து பார்த்தவர், அவருடைய கார்டை ஸ்வைப் செய்து, என்னை அந்த ஓடிசியில் அனுமதித்தார். ஓடிசி என்பது இந்தியாவிலிருந்து வாடிக்கையாளருக்காக வேலை செய்வதற்கு, பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஒரு பகுதி. வாடிக்கையாளர் அனுமதியின்றி உள்ளே நுழைய இயலாது.
உள்ளே நுழைந்ததும், வலதுபுறம் மூலையில் ஒரு ரெஜிஸ்டர் இருந்தது. அது விசிட்டர் ரிஜிஸ்டர் என்று அறிந்து கொண்டேன். அதில் எனது விவரங்களைப் பதிவிட்டு, கையெழுத்திட்டேன். பிறகு அவருடைய இருக்கைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே அமர்ந்திருந்த வேறு ஒரு மேலாளரை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் பேசியிருந்தேன். அவரது இருக்கைக்கு, எதிரே அமர்ந்ததும், தனது கணினியைப் பார்த்தபடியே, எனது அனுபவங்களைக் கேட்டறிந்தார். அவர் நான் சொல்வதைத் கேட்கிறாரா என்று சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அவரது கவனம் முழுவதும் கணினியில் இருந்தது.
பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு, இப்போது தனது போர்ட்போலியோவில், எந்த புதிய பொசிஷனும் இல்லையென்றும், எனது புரபைலுக்குத் தகுந்த டேட்டா சம்பந்தப்பட்ட மேலார்களிடம் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். இதற்காக எதற்கு இவ்வளவு தூரம் வரச் சொன்னார் என்று புரியவில்லை. நன்றி சொல்லிய பிறகு, மீண்டும் விசிட்டர் ரிஜிஸ்டரில் வெளியே செல்லும் நேரத்தைப் பதிவிட்டேன். அவர் பார்த்து விட்டு, “இது தவறான பக்கம். முந்தைய பக்கத்தில் கையெழுத்து இட்டிருக்க வேண்டும்” வேறு பக்கத்தைக் காண்பிக்க, மீண்டும் வேறு வழியின்றி அனைத்தையும் எழுதி, கையெழுத்திட வேண்டியிருந்தது. வேடிக்கை என்னவென்றால், சில நிமிடங்களுக்கு முன்பு தான், செயற்கை நுண்ணறிவில் எனது அனுபவம் குறைவு என்று சொல்லியிருந்தார். ஆனால் அவரது ஓடிசியில், இன்னும் கையால் எழுதும் நோட்டுப் புத்தகம் இருக்கிறது. உள்ளூர சிரித்துக் கொண்டேன்.
லேப்டாப் பேக்கை தோளில் மாட்டியபடி, குனிந்து எழுதுவது மிகவும் சிரமமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி விட்டு, வெளியே வந்தேன். இது ஒரு கண் துடைப்பு என்று தெளிவாகத் தெரிந்தது. மனநிலை மிகவும் கவலையாக இருந்தது. இடையில் மனித வளத் துறையிலிருந்து இமெயில் வந்து கொண்டே இருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் ஏதேனும் புதிய திட்டம் கிடைக்கவில்லையெனில், கம்பெனியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுமென்பதே இமெயிலின் சாரம்.
அடுத்ததாக, அமெரிக்காவிலிருந்து செயல்படும் ஒரு வங்கி சேவை தரும் வாடிக்கையாளரிடமிருந்து, ஒரு ரவுண்ட் நேர்காணல் முடித்திருந்தேன். அந்த அக்கௌன்ட்டின் மேலாளர் மிகவும் நேர்மறையாகப் பேசினார். நான் நேர்காணல் நன்றாகச் செய்ததாகவும், நிச்சயம் இந்த பொசிஷன் கிடைத்து விடும் என்றார். எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
ஆனால் அவர்கள் மேலும் ஒரு ரவுண்ட் நேர்காணல் வேண்டுமெனக் கேட்டனர். அடுத்த நாளே அதையும் அட்டென்ட் செய்தேன். மேலாளிடமிருந்து, அதே டயலாக். நான் பேசியது நல்ல வைப்ரேஷன் என்றும், நிச்சயமாக பொசிஷன் கிடைத்து விடும் என்றார். இடையில் வேறெதுவும் கிடைக்காததால் இதையே நம்ப வேண்டியிருந்தது. ஆனால் மேலும் ஒரு ரவுண்ட் நேர்காணல். இது மூன்றாவது ரவுண்ட். நடைமுறையில் இரண்டு ரவுண்டுக்கு மேல் செல்லாது. இது சற்றே அயர்ச்சியைத் தந்தது. நம்பிக்கையுடன் பேசினேன். மூன்று நாட்கள் இழுத்தடித்து பின்னர், நான் அந்த பொசிஷனுக்கு சரி வரமாட்டேன் என்று வாடிக்கையாளரிடம் இருந்து பதில் வந்தது. மனதளவில் அப்படியே நொறுங்கிப் போய் விட்டேன். ஏனெனில் பல பேரிடம் பேசி, நிறைய உழைப்பையும் தயாரிப்பையும் செய்திருந்தேன். மிகவும் ஏமாற்றமாக இருந்தது. எல்லோர் மீதும் கோபமாக வந்தது.
நாற்பது நாட்கள் முடிந்தது. மனித வளத்துறையிலிருந்து, ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அது ஒரு ஆன்லைன் சந்திப்பு. வீடியோவில் வந்ததும், கம்பெனி பாலிஸியின்படி, சம்பளமில்லாத தொண்ணூறு நாட்கள் தொடங்குவதாகவும், எனது கணக்கிலிருக்கும் விடுமுறையை சம்பளமாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், நான் எதுவும் செய்யத் தேவையில்லை, டூலே அப்டேட் செய்துவிடும் என்றார். தொண்ணூறு நாட்களுக்குப் பிறகும் எந்த புதிய திட்டமும் கிடைக்கவில்லையெனில், கம்பெனியிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்றார். பத்து நிமிடத்தில் மீட்டிங் முடிந்தது. அவருக்கு சொல்லப் பட்டதை, கிளிப்பிள்ளை போல, ஒப்பித்தார்.
மனைவியிடம் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மாதமும், கட்டவேண்டிய தொகைகளிலிருந்தன. மூன்றாம் வருடம் பொறியியல் படிக்கும் மகனுக்கு அடுத்த செமஸ்டர் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
மகனிடமும் நிலையை விளக்கினேன். ஆனால் அவன் இன்னும் குழந்தையாகவே இருந்தான். செல்லமாக எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் வளர்ந்து விட்டான்.
ஆனால் நான் தினமும் வணங்கும், கைலாசநாதர் கைவிட மாட்டார் என்று நம்பிக்கை இருந்தது. அது ஒன்றுதான் மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அடிக்கடி கடுமையான தலைவலி வந்தது. வாரம் மூன்று நாட்கள் கட்டாயம் பெங்களூர் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.
கடைசி நம்பிக்கையாக, வேறு ஒரு ஐரோப்பிய கிளையண்ட்டில், ஒரு பொசிஷன் இருந்தது. எனது மேனாள் மேலாளர், தனது மேலாளரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் பேசியதில் சற்று நம்பிக்கை வந்தது. உடனே அவரின் டீமில் வேலை செய்யும் வேறு ஒரு மேலாளரை அழைத்து, உடனே கிளையண்ட் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இந்த பொசிஷன் ஏற்கெனவே வந்ததுதான். நேரில் சென்று சந்தித்தும், கிளையண்ட்டைச் சந்திக்க விடவில்லை. இன்னும் சற்று வேகமாக இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் என்னிடம் வந்திருக்கிறது. பலரிடமும் பேசி, நன்றாக தயார் செய்திருந்தேன். நேர்காணல் நாளும் வந்தது. இதுவும் ஆன்லைன் நேர்காணல். வீடியோ கேமராவை ஆன் செய்ததில் இருந்து, மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினேன். வாடிக்கையாளருக்கு என்னை பிடித்து விட்டது. நேர்காணல் முடிவை ஒரு நாளில், எனது மேலாளரிடம் தெரிவிப்பதாகச் சொன்னார்.
அடுத்த நாள் காலையில், நேரம் பதிவு செய்யும் டூலில் இருபது நாட்களுக்குத் தானாகவே, விடுமுறை அப்ளை செய்யப் பட்டிருந்தது. அடுத்த அதிர்ச்சி, சம்பளமில்லாத தொண்ணூறு நாட்கள் ஆரம்பித்து விட்டது.
நேர்காணல் முடிவை மிகவும் எதிர்பார்த்திருந்தேன். எதிர்பாராத சந்தோஷமாக, அந்தப் பொசிஷனுக்கு, தேர்ந்தெடுக்கப் பட்டேன். அந்த அக்கௌன்ட் மேலாளர் ஆன்லைனில் கால் செய்தார்.”இது மிகவும் கடினமான வாடிக்கையாளர். இரவிலும் நேரம் செலவு செய்ய வேண்டுமென்றார்.” எனக்கு வேறு வழி இல்லை. இருப்பது இது ஒன்றுதான். சம்மதம் தெரிவித்தேன்.
தினமும் இரவு பதினோரு மணி வரையிலும் வேலையிருக்கிறது. பணிச்சுமை அதிகம். டீமும் முழுமையாக செட் ஆகவில்லை. இத்தனைக்கும் மத்தியில், ஒரு விடுமுறையோடு, எனது பெஞ்ச் பீரியட் முடிவுக்கு வந்தது. எனது எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது. 2026-ல் ‘தாழ்வரை’ நாவல் வெளிவந்துள்ளது.

