”ஹய்யா! ஹய்யா!” எனக் கூவிக் கொண்டே துள்ளிக் குதித்தான் ப்ரேம்.
“என்னடா! என்ன நியூஸ்?” என்று கேட்ட அண்ணன் செல்வத்தின் குரல் அவன் காதில் விழவே இல்லை.
ப்ரேம் கையில் இருந்த கைபேசியைப் பிடுங்கி, என்ன தகவல் வந்திருக்கிறது எனப் பார்த்தான் செல்வம்.
ப்ரேம் அவனைத் தடுத்தான்.
கைபேசி கீழே விழுந்திருக்கும், அம்மா தாரிணி அதை கையில் பிடிக்கவில்லை என்றால்!
செல்வமும் “ஹய்யா” என்றுக் கத்திக் கொண்டு குதிக்க…
வந்திருந்த குறுஞ்செய்தி என்னவென்றால், பொங்கல் விடுமுறை நாட்கள் அதிகமாக்கப்பட்டுள்ளது என்பது தான்.
”அப்போ இன்னிக்கே வீட்டை சுத்தப்படுத்த ஆரம்பிக்கலாமா?”என்றார் அப்பா கணேசன். “நாளைக்கி, பசங்க பள்ளிக்குப் போன பிறகு க்ளீனிங் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்ன! இப்ப ஸ்கூல் லீவு விட்டாச்சு! இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம்”
“இவனுங்க அதகளம் பண்ணுவானுகளே! எப்படி வேலை செய்யறது?” தாரிணி.
“பசங்கள வேலையில இறக்கி விட வேண்டியது தான்!“ கணேசன்.
பொங்கலுக்கு வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் குடும்பமே களம் இறங்கியது.
அம்மாவின் வெங்காய பஜ்ஜி, ‘கிஷோர் பையா’ கடை கச்சோடி, கூடுதலாக ஒரு மணி நேரம் வீடியோ கேம்ஸ் விளையாட அனுமதி… இன்னபிற சலுகைகளுடன் ப்ரேம், செல்வம் இருவரும் பம்பரமாகச் செயல்பட்டனர்.
முதலில் சமையலறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பது தாரிணியின் கட்டளை.
“தூசியை நல்லாத் தட்டிவிட்டு, துடைச்சுட்டு, அப்புறம் இந்த லிக்விட் போட்டுத் துடை” எனச் சொல்லி ப்ரேமிடம் ப்ளேட் ஸ்டாண்டு, மிக்சி போன்றவற்றைக் கொடுத்தார் கணேசன்.
வழக்கம் போல எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், ”சரிப்பா” என்றான் ப்ரேம்.
செல்வம் பாத்ரூமில், ப்ரிட்ஜ் ட்ரே, மற்றும் கழுவக்கூடிய பாகங்களைக் கழுவிக் கொண்டு இருந்தான்.
அவனுக்குப் பக்கத்திலேயே போய் ப்ரேம் நின்று அவனை நெருக்கித் தள்ளினான்.
“நவுருடா, அப்பா என்னையும் க்ளீன் பண்ணச் சொன்னாரு”
“டேய்! உன்னைத் தூசியைத் தட்டச் சொன்னாங்கடா! போடா! அம்மா! அம்மா!” என செல்வம் கூப்பிட்டான்.
டக்கென, ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து, மிக்சி மீது ஊற்றினான் ப்ரேம்.
“ப்ரேம், நீ ஏன் இங்க வந்த? உன்ன ஹாலில தூசி தட்டி துடைக்கத் தான சொன்னேன்.” கணேசன்.
“அச்சச்சோ! என்னங்க இது மிக்சியை குளிச்சு விட்டு இருக்கான்”
இதற்குள் ப்ரேம் செல்வத்தைத் தள்ளியதால், செல்வம் அவனைத் தலையில் கொட்டினான். சற்று பலமான கொட்டு தான்!
ப்ரேம் வலி தாங்காமல் அழுதான்.
“நா ஜஸ்ட் மண்டையில லேசாத் தான் குட்டினேன் அப்பா! அவன் சும்மா ட்ராமா பண்ணிகிட்டு இருக்கான்.” செல்வம்.
”இருந்தாலும் தலையில அடிக்கக் கூடாதுப்பா, செல்வம்” என்று சொல்லியபடியே, இருவரையும் நனைந்திருந்த துணிகளை மாற்றச் சொல்லி ஆசுவாசப்படுத்தினார் கணேசன்.
அழகான ஜார் ஒன்றை உடைத்தது, பலசரக்கு சாமான்களை கொட்டியது, தண்ணீரை இங்கும் அங்கும் கொட்டி சகதியாக்கியது என இருவரும் பல குழப்பங்களை ஏற்படுத்தினாலும், திறமையான ரிங் மாஸ்டர் போல், கணேசனும் சமையலறை சுத்தம் செய்வதை அவர்கள் இருவரையும் வைத்து முடித்து விட்டார்.
கிஷோர் ‘பையா’ கடை கச்சோடி மற்றும் எலுமிச்சை ஜூஸ் மனதை லேசாக்கியது.
அடுத்த சுற்று க்ளீனிங் ஆரம்பமானது.
அறைகளைச் சுத்தம் செய்யும் வேலை ஆரம்பம் ஆயிற்று. எல்லா மூலை முடுக்குகளையும் தட்டி ஒட்டடை அடித்தார்கள். மின்விசிறிகளைத் துடைத்தார்கள்.
வேண்டாத உபயோகமில்லாத பொருட்களை ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் போட்டு, பரணில் வைத்திருந்தார்கள். அதைக் காலி செய்ய வேண்டும்.
செல்வம் அந்த அட்டைப் பெட்டியைத் தலைகீழாகக் கவிழ்த்தான்.
ப்ரேம் காணாமல் தொலைத்த சின்னஞ்சிறு பந்துகள் ஓடின.
“டேய்! என்னோட பந்து! தாடா!” என ப்ரேம் கேட்டான்.
“ம்ம்… என்ன டேய்! மரியாதையா கேட்டாத் தான் தருவேன்”
“அண்ணா! அண்ணா! ப்ளீஸ் அண்ணா!”
இவ்வளவு மரியாதையை செல்வமே எதிர்பார்க்கவில்லை.
அப்போது ப்ரேம் கண்ணில் அந்த ரூபிக் க்யூப் பட்டது. செல்வத்தின் செல்லக்குட்டி அது.
மெல்ல நகர்ந்து அந்த க்யூபை தான் எடுத்துக் கொண்டான் ப்ரேம்.
“அண்ணா! அண்ணாங்க! டேய் பாருங்க அண்ணா டேய்!” என நக்கலாகச் சிரித்தபடி ருபிக் க்யூபைக் காட்டினான் ப்ரேம்.
“செல்லக் குட்டி! நா தான் உன்னோட பந்தையெல்லாம் எடுத்து தரேன் இல்ல! நீ எனக்கு என் க்யூப் கொடு!“
பந்துகளும், ருபிக் க்யூபும் கை மாறின.
“இந்தா, உனக்கு என்னுடைய பொங்கல் பரிசு” என்று சொல்லி, தன் பாக்கெட்டில் இருந்து ஒரு பழைய கீ செயினை எடுத்தான் செல்வம்.
“ஹே! அண்ணா! செல்வம் அண்ணா! தேங்ஸ் தேங்ஸ்!” என அதை வாங்கிக் கொண்டு ப்ரேம் செல்வத்தைக் கட்டிக் கொண்டான்.
அந்த சாவிக்கொத்து செயின் பழையது தான். ஆனாலும் விசேஷமானது. அதன் இருபுறமும் தாரிணி மற்றும் கணேசனின் புகைப்படங்கள் இருக்கும்.
“கஸ்டமைஸைடு” பரிசாக அப்பா வாங்கி, அம்மாவுக்குத் தந்தது.
ப்ரேமுக்கு ரொம்பப் பிடிக்கும். செல்வத்துக்கும் தான்.
அதை யார் வைத்துக் கொள்வது என்பது பற்றி இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். திடீரென ஒரு நாள் அது காணாமல் போய்விட்டது.
செல்வம் தான் அதை ஓளித்து வைத்துவிட்டான் என ப்ரேம் அழுது, சில நாட்கள் செல்வத்துடன் பேசாமல் கூட இருந்தான்.
“ப்ரேம்! நா ஒளிச்சு வைக்கலடா தம்பி! ஆனா, கண்டுபிடிச்சுக் குடுத்துட்டேன்” என்றான் செல்வம்.
“ரொம்பத் தேங்ஸ் அண்ணா!”
இருவரும், கமுக்கமாக, அந்த அட்டைப் பெட்டியில் இருந்த தங்களின் பொருட்களை எடுத்து ஒரு பையில் வைத்தனர்.
“என்ன! வேண்டாத பொருட்களைத் தூக்கி எறிங்கடான்னு சொன்னா, நீக்க வேற பைக்கு ஷிப்ட் பண்ணுறீங்க” என்றபடி வந்தார். கணேசன்.
“செல்லக்குட்டி, அண்ணா… இப்படி நீங்க பேசறதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு. உங்க சண்டை அதிகமானா, நானும் அப்பாவும் தான், சில பொருட்களை எடுத்து இதுல போடுவோம்” என்றாள் தாரிணி.
வீட்டைச் சுத்தம் செய்ய உதவியதற்காகவும், சண்டை போடுவதை நிறுத்தி, சமாதானப் புறாக்களாக ஆனதாலும், ப்ரேம் செல்வம் இருவருக்கும், அப்பாவும் அம்மாவும் பரிசு மழை பொழிந்தனர்.
“இனிமே எதுக்கெடுத்தாலும் சண்டை போடக் கூடாது” என்று அம்மா சொல்ல,
“கொஞ்சம் அப்பப்ப போட்டுகிறோம்” என செல்வம் சொல்ல…. வீடே சிரிப்பில் அதிர்ந்தது.
00
கமலா முரளி
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை ,கமலா முரளியின் படைப்புகள் தினசரி.காம், மஞ்சரி, கலைமகள், குவிகம் மின்னிதழ், நடுகல் இணைய இதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் ,இந்து தமிழ்திசையின் மாயாபஜார், சிறுவர் வனம், சொல்வனம் , தினமலர் பட்டம் போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” எனும் மொழிபெயர்ப்பு நூலும் “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.