எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன். நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி என்னும் ஊரில் குடிகொண்டுள்ளாள்.

இது குலதெய்வம் பற்றிய கதையில்லை. அதோடு தொடர்புடைய கதை.

இப்போது சிமெண்ட்டால் செய்யப்பட்ட உருவம் உள்ளது. முன்பெல்லாம் மண்ணால் செய்யப்பட்ட உருவம்தானாம். மேற்கூரை ஏதுமில்லாததால், மழை வந்தால் கரைந்து விடுமாம். ஒவ்வொரு பூஜைக்கும் மேல் மலையனூர் சென்று, பதி என்று சொல்லக்கூடிய மண் எடுத்து வந்து, அம்மனின் உருவம் செய்வார்களாம்.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு குலதெய்வம் உண்டு. பெரியாண்டிச்சி அம்மன் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அதிகமாக வழிபாடு செய்யப்படுகிறது.

இப்போது முதலியார், கவுண்டர், செட்டியார் என அனைவரும் வணங்குகின்றனர்.

முன்னொரு முறை, பிரம்மனுக்கு கர்வம் மிகுந்ததாம். தனக்கும் ஐந்து தலைகள். எனவே தானே உயர்ந்தவன் என்று கர்வப்பட்டானாம். இதனால் கோபமடைந்த சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது தலையை தனது நகக் கண்ணால் கிள்ளி எறிந்து விட்டார். ஆனால் அத்தலையோ அவரின் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு, கபால பிச்சைப் பாத்திரமாக, சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

தனதே கணவரைக் காப்பாற்ற எண்ணிய சக்தி தேவி, தண்டகாருண்யத்தில் தவமிருந்தாள். அங்கு வந்த சிவபெருமானுக்கு மிகுந்த சுவையான உணவை பிச்சையிட, அவர் கையிலிருந்த கபாலம் உடனே விழுங்கியது. மூன்றாம் கவளத்தை கீழே இறைக்க, சிவபெருமான் கைவிட்டுக் கீழிறங்கிய கபாலத்தை, விஸ்வரூபம் எடுத்து தனது வலது காலால் பூமியில் வைத்து நசுக்கி வதம் செய்தாள். ஆனால் அக்கோபம் அடங்காத அம்மனைக் கண்டு அனைவரும் பயப்பட, விஷ்ணு உதவி செய்ய, நூறாவது கல்லை மேல் நோக்கி எறிந்து, அவையெல்லாம் மலைகளாக, நூறாவது கல்லில் மல்லாக்க படுத்து, கோபம் தணிந்து அனைவருக்கும் அருள் பாலிக்கிறார் அன்னை.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு குடும்பம் அம்மனுக்குப் பூஜை செய்கிறது.

மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தெவம் எனப்படும் முப்பூசை நடைபெறுகிறது. அனைத்து பங்காளிகளும் கலந்து கொண்டு, ஆடு, கோழி, பன்றி ஆகியவைகளை வெட்டி, முப்பூசை நடைபெறுகிறது.

முதல் நாள், சாமி வீட்டிலிருந்து பூசைக்கூடையுடன் ஒவ்வொரு குடும்பத்தினரும் புறப்பட்டு, முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து, சாமி வீட்டுக்கு வந்து, புடவை சாற்றி வழிபடுவர்.

அடுத்த நாள் மாலையில் ஆரம்பித்து விடிய விடிய நடக்கும் பூஜை, அதிகாலை வேளையில் தான் முடியும். ஆடுகளை வெட்டுவதற்கென்றே ஒரு பங்காளி இருப்பார். பூஜையின் முடிவில், எல்லோரையும் போகச்சொல்லி விட்டு, படையல் வானம் நோக்கி மேலெறியப்படும். படையல் கீழே வராதாம். எங்களுக்கெல்லோருக்கும் உடல் நடுங்கும்.

பூஜை முடிந்தவுடன், ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் கறி பிரித்து வழங்கப்படும்.

தூக்கமில்லாமல் பொது வேனிலோ அல்லது முதல் பஸ்ஸிலோ வீடு வந்து சேர்வோம்.

இந்தப் பூஜை சமயத்தில் அம்மாவுக்குச் சாமி வருவது எங்களுக்குப் பழகி விட்டது. அப்போது அம்மா வேறு மாதிரி இருப்பாள். எங்கே நாக்கைக் கடித்துக் கொள்வாரோ என எப்போதும் பயப்படுவோம். கைவசம் எப்போதும் எலுமிச்சை இருக்கும்.

‘எனக்கு எல்லா சவரட்டனையும் செய்யனுன்டா. இல்ல, ஒங்க வம்சத்தையே அழிச்சிடுவ’ என்பாள். பூசாரி வந்து, ‘எந்தக் கொறயும் வராதும்மா. நீங்க தாம்மா எங்க புள்ளி குட்டிகளப் பாத்துக்கணும்’ எனச்சொல்லி, தீர்த்தம் தெளித்து, எலுமிச்சை திங்கக் கொடுப்பார். எலுமிச்சையைக் கடித்து உறிஞ்சியவுடன், சாமி மலையேறும். அம்மாவை காற்றோட்டமாக எங்காவது படுக்க வைத்து, தண்ணீர் கொடுப்போம்.

அம்மா சொன்ன கதை:

இப்படித்தான் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, முப்பூசை நடந்திருக்கிறது. அப்போது அண்ணன் குமார் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். நானும் தம்பியும், ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எங்களுடன், பெரிய அத்தை, சின்ன அத்தை, சின்ன அத்தை வீட்டு மாமா எல்லோரும் இருந்தார்கள்.

அக்காலத்தில் சீராப்பள்ளியில், தாத்தாவின் பங்காளிகள் நல்ல வசதியாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் தான் குடுமி தாத்தா. அவருக்கு குடுமி இருந்ததா என்று ஞாபகம் இல்லை.

அவர் அவ்வூரில் மாடி வீட்டில் குடியிருந்தார். நிறைய தறிகள் மற்றும் நூல் வியாபாரம். கந்து வட்டி தொழிலும் செய்து வந்தார்.

அவர் வீட்டிற்கு எல்லோரும் சென்றார்களாம். மாடியில் அவ்வீட்டின் குடும்பம் காலையில் தோசை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, இவர்கள் மாடிக்குச் சென்றார்களாம்.

இவர்களைப் பார்த்த தெவானைப் பாட்டி, ‘இங்க எங்க வந்தீங்க. கோவில் மண்டபத்தில பொதுச் சாப்பாடு போடறாங்க. சீக்கிரம் போங்க,தீர்ந்துடப் போகுது’ என விரட்டாத குறையாக திருப்பி அனுப்பி இருக்கிறார்.

அம்மா இக்கதையைச் சொல்லும் போதெல்லாம் ஏறக்குறைய அழுதிருக்கிறார். அவமானத்தின் கசப்பு அவள் எச்சில் விழுங்குகையில் தெரியும். கண்களில் நீர் கோர்த்து வழியத் தயாராகும்.

அம்மா ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அண்ணன்களின் செல்லமான தங்கையாக இருந்திருக்கிறார். மாமாக்கள் இருவரும் தையல் தொழில் செய்து வந்தனர்.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, விடுமுறைக்கு மாமா வீட்டிற்குச் செல்வோம். சின்ன மாமா வீட்டில் முயல் வளர்த்ததும், நாங்கள் கேரட் ஊட்டியதும் மறக்க முடியாத நினைவுகள்.

அப்பா கிராம நிர்வாக அலுவலராக இருந்தவர். சண்டை வரும் போதெல்லாம், ‘பிச்சக்காரன் வீடு’ என அம்மாவைத் திட்டுவார்.

ஒரு முறை, மாமா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த அப்பா கோபத்தில் தட்டை சுவற்றில் வீசி அடித்தாராம். அம்மாவால் எப்போதும் மறக்க முடியாத நிகழ்வாகிப் போனது இதுவும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு:

மனைவியின் விருப்பப்படி, முப்பூசைக்கு ஒரு வாரம் முன்பு, ஒரு ஆடு வாங்கினோம். நல்ல அடர்த்தியான கருப்பு நிறம். ஓரளவுக்கு வளர்ந்த கொம்புகள். குழந்தைகள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போனது. அடிக்கடி ஆட்டைப் பார்ப்பது, இலை தழைகளைப் போடுவது, அசை போடுவதைப் பார்ப்பது என இரண்டு நாட்களில் நன்றாக பழகி விட்டனர்.

சாமி வீடு ஏறக்குறைய இடிபடும் நிலை. பூசைக்கூடை எடுக்கையில், கிணற்றில் தண்ணீர் இல்லாமல், டேங்கர் லாரியில் தண்ணீர் பிடித்து பங்காளிகள் சமாளித்தனர். வீட்டிற்கு வந்து, சற்று நேரம் தூங்கி விட்டு, அடுத்த நாள் சென்றோம். சுமோவிலேயே ஆட்டையும் கூட்டிச் சென்றோம்.

குழந்தைகளுக்கு ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்து அழ ஆரம்பித்தனர். எப்படியோ சமாதானம் செய்தோம். வேறு ஆடு வாங்குவதும் அதில் ஒன்று.

பூஜை விடிய விடிய நடந்தது. குழந்தைகள் வண்டியிலேயே தூங்கி விட்டனர்.

அதிகாலையில் கறி பிரித்துக் கொடுக்கப்பட்டது.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நேற்று தெவானைப் பாட்டியைப் பார்த்தோம். குடுமித் தாத்தா இறந்து விட, பாட்டிக்கு எந்த மருமகள்களுடனும் ஒத்து வரவில்லை. வீடு விற்ற பாகத்தையும் யாரோ ஒரு மகன் பிடுங்கிக் கொள்ள, பாட்டியைக் கைவிட்டார்களாம். பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கச் செல்லும் வழியில், தனியாக ஒரு சிறிய அறையில், வாடகைக்கு வசித்து வந்தது.

அண்ணன் வந்து காதில் ஓத, பர்ஸிலிருந்து நூறு ரூபாய் எடுத்துப் பாட்டியிடம் கொடுத்தேன்.

அடுத்த வருடமே, பாட்டி இறந்த செய்தி வந்தது.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *