‘’வா சாமி! தாரு கண்ணாயா புள்ளெ ரெச்சுமி தான நீயி! இந்தப்பேரெழவு புடிச்ச கண்ணு பொட்டக்கண்ணாப்போச்சு சாமி! எம்பட ஊட்டுக்குள்ளார தாரு வர்றாங்க.. தாரு போறாங்கன்னு ஒன்னும் நெகா சிக்கறதில்லயாயா! அப்புறம் உங்கோயா நல்லாயிருக்காள்ளோ? அவ ஊட்டுக்காரம் பொன்னுச்சாமி தான் பாவம் உங்களையெல்லாம் பொழைக்க வைக்க அம்புட்டு பாடு பட்டானாக்கும்! பீடியக் குடிக்காதடான்னு ஊரே சொல்லுச்சு! லொக்கு லொக்குனு விடியக்காத்தால மூனு மணிக்கி இரும ஆரம்பிச்சான்னா விடிஞ்சி மணி ஏழானாலும் இருமீட்டே ஊட்டுத்திண்ணையில உக்காந்திருப்பான். அப்பயும் பீடிக்குடியை உட்டானா அவன்? விடியறதுக்குள்ள பத்துப்பாஞ்சி பீடிகளை பத்தவெச்சு ஊதித்தள்ளிடுவான். ஆனா உங்கொப்பன் நல்ல பாட்டுக்காரனாயா! காத்தாலயும் பொழுதோடயும் பனெமரம் ஏறி தெளுவு எறக்கி கொண்டாருவான். அவனே பாவுகாச்சி, அவனே அச்சுல ஊத்தி கருப்பட்டி எடுப்பான். நாலு மரத்துல அவன் குடிக்கிறதுக்கு கள்ளு போட்டுக்குவான். ஆளு கரும்பூதமாட்டல்ல இருந்தான் அப்பொ! ஆனா இருமி இருமி ரத்தம் கக்கீட்டு செத்தான் சிவாசி கணேசன் எதோ சினிமாப்படத்துல கக்குனாப்புல! தே ரெச்சுமி.. உங்கோயா இப்ப நல்லாத்தான இருக்கா? தே ஒன்னும் பேசமாட்டீங்கறே?”
“ஏனாயா அழுவுறே? உங்கோயா கண்ணாயா செத்துப்போன விசயமே நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது பாத்துக்குவே! நாந்தான் இந்த ஊட்டோடயே கெடக்குறேனே வருசக்கணக்கா! எத்தன வருசமாச்சுன்னே தெரியில! எம்புள்ளெ சீதாரெச்சுமியத்தான் காங்கேயத்துக்கு கட்டிக்குடுத்துட்டம்ல! உனக்குத்தெரியுமா தெரியாதா? ஆமாம் பாரு.. நீங்க ரெண்டுபேருந்தான புதூரு பள்ளிக்கோடத்துக்கு ஒட்டுக்கா சோடி போட்டுட்டு போயி அஞ்சாப்பு வரெக்கிம் படிச்சீங்க! என்னாயா பண்ணுறது.. வயசாவ வயசாவ ஒன்னும் நெனப்புல இருக்குறதேயில்ல!”
“எம்பட ஊட்டுக்காரரு தான் என்னேரமும் சொல்லீட்டே இருப்பாப்ல! ரெச்சுமியும் நம்ம புள்ள மாதிரித்தான்னு! உன்னைய எந்தூருக்கு உங்கோயா கட்டிக்குடுத்தா? தென்னமோ பாளையம்னு வருமேடி! சொல்லு! ஆங்.. செந்தாம்பாளையம். செந்தாம்பாளையத்துல எனக்கொரு சக்காளத்தி இருந்தா தெரியுமா? அந்தக்கதெ உனக்குத்தெரியாதே! எம்பட ஊட்டுக்காரரு தான் ஆட்டு ஏவாரியாச்சே! செந்தாம்பாளையத்துல பெரியூட்டுக்காரரு ஆடுக ஏவாரத்துக்கு வருதுன்னு போனவரு.. ஏவாரத்தை முடிச்சிக்குடுத்துட்டு பொட்டாட்ட வரனுமுல்ல! அங்க அந்த பெரிய ஊட்டுக்காரரு சம்சாரத்தோட என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது இந்த மனுசனுக்கு? அவ அதையும் இதையும் சொல்லி இந்த மனுசனுக்கு சிரிப்பாணியை கூட்டியிருக்கா! அப்புறம் சோறும் போட்டிருக்கா அவ! சோறுன்னா இந்தாளு எவத்திக்கி வேணாலும் சம்மணம் போட்டுருவாரு! அவ பேரு என்னமோ ஆயா.. எல்லாம் சடக்குனு நெனப்புல வருதா ஒன்னா! சோத்துல வசிய மருந்தை வச்சுட்டா அவ. அப்புறம் பாரேன்.. என்னேரமும் இந்த மனுசனுக்கு அவ நெனப்புத்தான். தொட்டதுக்கெல்லாம் ’செந்தாம்பாளையம் போறேன்.. செந்தாம்பாளையம் போறேன்’னு இந்த மனுசன் வெள்ளையுஞ் சொள்ளையுமா கிளம்பங்காட்டித்தான் ஆளு வெச்சு இந்தாளு வண்டவாளத்தை கண்டு புடிச்சனாக்கும்! அப்புறம் நெடச்சிலாபாளையம் மந்திரிக்கிறவரு ஊட்டுக்கு இந்த மனுசனை இழுத்துட்டு போயி தண்ணி மருந்து ஊத்தியுட்ட பின்னாடி தான செந்தாம்பாளையத்தையே மறந்து தொலைச்சாரு! அப்பேருப்பட்ட பூலவாக்குக்காரனாயா எம்பட ஊட்டுக்காரன்!”
“ஆமா உன்னையத்தான் கட்டிக்குடுத்தாச்சுல்லொ! அப்புறமும் ஏன் நீயி நம்மூருக்குள்ளயே சுத்தீட்டு இருக்குறே? குடும்பமுன்னு இருந்தா சண்டெ சச்சரவு வராமயா இருக்குமாயா? நாம தான் உட்டுக்குடுத்து காலத்தை ஓட்டோனும் பாத்துக்க! உங்கோயா உசுரோட இருந்திருந்தாலாச்சிம் உனக்கு நாலு புத்திமதி சொல்லி தாட்டி உடுவா! ஆமா உங்கோயா ஆஸ்பத்திரி போயா செத்தா? நீயி என்ன சொல்றேன்னு எம்பட காதுல உழுவலயாயா! செரி உடு எப்பிடியோ நேரம் வந்து போயிச்சேர்ந்துட்டா! இப்ப என்னையப்பாரு..நாலு சனம் வந்து பாக்கக்கூட நாதியில்லாம நடு ஊட்டுல கெடக்கேன்.
சுந்தராம் பொண்டாட்டி மயிலாத்தா இருக்காள்ல.. அவ தான் எனக்கு காத்தால போசீல கஞ்சி கொண்டாந்து குடுக்குறா! பொழுதோடவும் கஞ்சிதான். மகராசி.. எதோ ஊட்டுக்கும் பக்கத்துல இப்பிடி சாவ மாட்டாம ஒரு கெழவி கெடக்காளேன்னு துளி கஞ்சி ஊத்துறா! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறா ஆக்குனீங்க? முன்னெல்லாம் எம்பட ஊட்டுக்காரரு ஞாயித்துக்கிழமெயாச்சுன்னா ஓடிப்போயி வெள்ளாட்டுக்கறி எடுத்தாந்து குடுத்துடுவாப்ல! அதைய ஆக்கி குண்டால போட்டுக் குடுக்கறதுக்குள்ள பறவா பறப்பாரு! ’ஆச்சா? ஆச்சா?’ன்னு குட்டி போட்ட பூனையாட்டம் ஆசாரத்துக்கும், சோறாக்குற ஊட்டுக்கும் நடையா நடப்பாரு. ஆனாலும் புள்ளைய சாப்புடறப்ப கூப்புடுவாரு! ‘சீத்தாரெச்சுமி! வா சாமி சோறு உங்கலாம்! கையை வாசல்ல இருக்குற முட்டித்தண்ணியில கழுவீட்டு ஓடியா சாமி!’ அப்பிடின்னு கூப்புட்டு புள்ளைய பக்கத்துல சம்மணங்காலு போட வச்சி உக்காத்தி வச்சிக்குவாரு. கறியில ஈரலு இருந்துச்சுன்னா எடுத்து அவுளுக்கு ஊட்டி உடுவாரு! ஆமா உங்கூட்டுல இன்னிக்கி கறிச்சாறாரி? இருந்தா கிண்ணத்துல ஒருதுளி கொண்டாந்து குடு. உள்ளார கறித்துண்டு போட்டு எடுத்துட்டு வந்துறாதேடி.. அதைய எவொ சப்பீட்டே கெடக்குறது! வெறுங்கொழம்பு மட்டும் ஊத்தியா!”
“இப்பத்தான ஆயா வந்தே! அதுக்குள்ள போறேன் போறேங்குறியே! இந்தப்பொக்கவாயி கெழவிகூட என்ன நாயம் வேண்டிக்கெடக்குதுன்னு நினைச்சுட்டியாடி? சேரி நீ போ. போயி நேரங்காலமா சோறாக்கி புள்ளைங்களுக்கு குடு. ஆடுக வெச்சிருக்கிறியா? எத்தன உருப்படிக நிக்குது ஊட்டுல? போயிட்டியாடி.. கெரகம் இந்தக்கண்ணு நொள்ளக்கண்ணெ வெச்சுட்டு ஒரே சீரழிவு எனக்கு. பேழ மோள ஊட்டுக்கும் பொறவுக்கு போவக்கூட நெதானத்துல போவேண்டீதா இருக்குது. சீக்கிரமா போயித்தொலஞ்சா நல்லாயிருக்கும். ஆராயா? இப்பத்தான் ரெச்சுமி எம்பட வாசலைத்தாண்டிப்போயிருப்பா.. அதுக்குள்ள நீயி வந்திருக்கே! ஆமா என்ன கெழவி போயிட்டாளான்னு உங்கோயா பாத்துட்டு வரச்சொன்னாளா? அட என்னோட கட்டித்தங்கமே! எத்தனாப்பு சாமி படிக்கிறே நீயி? டவுனுக்கு போயி நீயெல்லாம் இங்கிலிபீச்சுல படிப்பே.. அட தே ஓடுறே? பாத்து மெதுவாப்போ சாமி! வாசல்ல கல்லுங்க கெடக்கும். எம்பட வாசலைக்கூட்டி எத்தனை வருசமாச்சுன்னே நெனப்பில்ல!”
“வரிசியா ஊருக்காரிங்க தெனமும் பவல்ல வந்துட்டே இருப்பாளுங்க.. இன்னிக்கி ஏனோ எவளையுங் காணோம். எல்லாரும் எங்க தெறிச்சுட்டாளுங்களோ.. நானும் வெகு நேரமா எவளாச்சிம் இந்த பொன்னாயா கெழவிகிட்ட சித்தநேரம் குக்கி நாலு பழமெ பேசீட்டு போவ எவளாச்சிம் வருவாளான்னு பாக்கேன்.. எல்லாருக்கும் சோலி இருக்குமாட்ட இருக்குது. உள்ளூருல மாரியம்மன் கோயல் விஷேசமோ என்னமோ தெரியிலயே! அப்பிடின்னா நம்ம புள்ள சீத்தா வந்திருப்பாளே! ஆமா அவளுக்கு என்னாச்சுன்னே தெரியில. அவளையும் இந்த ரெண்டு வருசமா ஊட்டுப்பக்கமே காணமே! சரி.. எப்பிடியோ புள்ளெ நல்லா இருந்தாச்செரி. நாலு சனம் ஊட்டுக்கு வந்தா உக்காத்தி வெச்சு ஆக்கிப்போட நமக்கு கையாலாகாமப் போயிருச்சு! யாரு வருவாங்க எம்பட ஊட்டுக்கு?”
”பொழுதாயிப்போச்சாட்ட இருக்குது! ஊட்டுல இருந்த கரெண்டயும் அத்து உட்டுட்டு போயிட்டானுங்க! வெளக்கு பத்தவெக்க கூட ஆளில்லெ! சுந்தராம் பொண்டாட்டி மயிலா வந்தாள்னா பொழுதோட சித்தங்கூரியம் வெளாக்காச்சிம் பத்தவச்சு உடுன்னு சொல்லோணும்! தாரோ வாறாங்களாட்ட அசம்பல் ஆகுது! யாரா இருந்தாலும் பேரைச்சொல்லுங்க சாமி! கொஞ்சம் சத்தமாச் சொல்லுங்க! ஒரு காலத்துல டம்ளரு உழுந்தாக்கூட அண்டா உழுந்தாப்புல கேட்டுத்தொலச்சிது! எம்பட வலதுபக்க காது சுத்தமாப்போச்சாட்ட இருக்குது. எடதுபக்க காது கொஞ்சமா கேக்குது. கேக்குற வரைக்கிம் கேக்கட்டும். இதுக்கெல்லாம் மிசினு இருக்குதாமா! குழிக்கு போற காலத்துல மிஷினு மாட்டீட்டு என்ன பண்ணுறது? அவ்வளவுதான். பொறந்து, வளர்ந்து, வாழ்க்கப்பட்டு இந்தூருக்கு வந்து, புள்ளையொன்னு பெத்து, புருசனை மண்ணுக்கு தின்னக்குடுத்துட்டு நாளை எண்ணீட்டு குக்கீட்டு இருக்கேன். யாரு..? சுந்தரானா? இப்பிடி எம் பக்கத்துல வந்து உக்கோருடா கட்டீத்தின்னி! ஏண்டா தெனமும் குடி என்னடா குடி உனக்கு? ரெண்டு புள்ளெக்காரன்னு நெனப்பு இருக்குதா? ஏண்டா சம்பாதிக்கிற காசைக்கொண்டி இந்த மல்லைக்குடிக்க செலவு பண்டீட்டா மயிலா ஒருத்தி என்னடா பண்டுவா? குடிச்சாப்போச்சாது.. மயிலாவை ஏண்டா அந்த மொத்து மொத்துறே? ஊருக்குள்ள நீயே பாரு.. குடிகாரன் இருந்த ஊடெல்லாம் இன்னிக்கி எந்த நெலமையில இருக்குதுன்னு! என்னது? நீயி சுந்தரானில்லியா! அதான பாத்தேன்.. அந்த கட்டியத்தின்னி எங்கடா அதிசீமா என்னைப் பாக்க வந்திருக்கானேன்னு. நானு உசுரோட இருக்கப்ப அவங்கீது என்னை பாக்க எம்பட ஊட்டுக்குள்ளார வந்துட்டான்னா அன்னிக்கே வெடிய வெடிய மழெ பெஞ்சு இந்த ஊரே வெள்ளத்துல அடிச்சுட்டுப் போயிடாது!”
“அட நீயி சின்னக்குண்டண்ணன் சம்சாரம் மணியாளா? நாங்கூட ஆம்புளையாக்கும்னு நெனச்சிட்டேன் போ! உம்பட பையனை எப்பிடியோ ஊருக்குள்ளயே கட்டிக்குடுத்துட்டே! இப்ப பேத்திக்கும் கலியாணம் பண்டி அவுளும் புள்ளை பெத்துட்டாளாமே! பாரு.. நீ கூட ஊருக்குள்ள கவ்வக்கோலு ஊனீட்டு நடமாட்டம் போடுறே! எனக்கு அதுக்கும் கையாலாகுல! மனுசன்னா உம்பட ஊட்டுக்காரந்தாண்டியேய்! ஊருல ஒரு ஊடு பாக்கியில்லாம பொழுதுக்கும் தண்ணி சொமந்து கொண்டி ஊத்தீட்டே இருந்தாப்புல! எம்பட ஊட்டுக்கும் வெளியில கெடக்குற ரெண்டு பெரிய தாழிகளையும் ரொப்பிடுவாப்ல! எந்த நேரத்துல வந்து ஊத்தி ரொப்பீட்டு போறாப்லைன்னே தெரியாது. அப்பத்தான் நாமெல்லாம் காட்டு வேலைக்கி மையம் பறந்துட்டு ஓடுனமே! கொத்து வேலையின்னா இங்கிருந்து நாலு மைலு தொட்டிபாளையம் வரைக்கிம் நடந்தே போயிட்டு வந்தோம். இன்னிக்கி அவ்ளோதூரம் யாரு நடக்குறாங்க? தொட்டதுக்கெல்லாம் புட்டுர் பைக்கில போயிடறாங்க! அப்பெல்லாம் சின்னக்குண்டண்ணன் ஊட்டுக்கு வாரத்துக்கு ஒருக்கா ரெண்டு ரூவா வாங்குவாப்ல! ஒரு பீடிக்குடியோ, வெத்தலபாக்கு மெல்லுறதோ, பொயிலக்குச்சி அதக்குறதோ.. ஒரு பழக்கமும் அண்ணனுக்கு இல்ல! அண்ணன் இருந்தப்ப அப்பிடி தப்பாம மழெ பெஞ்சுது! நல்ல மனுசங்க அல்லாரும் போனாப்புல புடிச்சு மே மாசம் கூட பேயுது. ஆனா வெதைக்கிற காலத்துல மழை இல்ல! எல்லாம் தலைகிழுதா மாறிப்போச்சு போ! ஆமா.. சோறு உனக்கு உம்பட மருமக ஊத்தீடறாளா? ஊத்தலீன்னா நீயி உடவா போறே? நேரா சோத்துச்சட்டியை போயி ஒதச்சே போடுவியே! சின்னப்பொன்னாம் பொண்டாட்டிய சண்டையப்ப கல்லெடுத்து வீசி மண்டையை ஒடச்சவதானே நீயி அந்தக்காலத்துலயே! இதென்னுது? கையில என்னத்தையோ திணிக்கிறியே..இரு மோந்து பாக்குறேன்.. தூக்கருமம்! பொயிலக்குச்சியவா திணிச்சே? இந்தக்கெரகத்தை எவொ வாயில போட்டு அதக்குறது? சித்தங்கூரியத்துல தலை சுத்தி மல்லாந்துருவேன் நானு! நீயே புடி.. எங்கிட்ட பொயிலக்குச்சியை நீட்டுறா இவொ! நாங்கூட முட்டாயி கிட்டாயி குடுக்கறாள்னு நெனச்சிட்டேன். முட்டாயா இருந்தா சித்த நேரம் சப்பீட்டு இருப்பேன். ஆமா சின்னக்குண்டண்ணன் தூக்கு மாட்டீட்டு தான செத்தாரு?
என்னளே கேட்டுப்போட்டேன் நானு.. வர்ரு வர்ருன்னு கத்துறே? சீக்குப்படுத்து போனாரா? தெரியாமத்தான கேக்கேன். ஏளே.. செத்துச்சுண்ணாம்பாப்போன மனுசனை எப்பிடிப் போனான்னு கேக்கேன்.. பேசுறாளான்னு பாரு! எம்பட கூட சண்டெக்கட்டுறதுக்கு ஏறீட்டு வந்தியாளே நீயி! உங்கூட சண்டெக்கட்டுற நெலமையிலயா நாங்கிடக்கேன்? நீயே பாக்குறீல்லொ.. இங்க வந்து கத்தட்டம் போடாதேயாமா! போயி உங்கூட்டுல உக்கோந்துட்டு ஊரே கேக்குறமாதிரி கத்து! சித்த எந்திரிச்சு போ ஆயா நீயி! அப்புறம் இப்பச்சொல்றேன் கேட்டுக்கோ.. இங்கெங்காச்சிம் பொன்னாயா போயிட்டாள்னு சேதிகேட்டு குச்சி ஊனீட்டு வந்து எம்பட வாசல்ல வந்து எழவு காங்குறேன்னு நின்னுக்காதே! இத்தோட செரி.. போ இங்கிருந்து! ளேய்! இந்த கவ்வக்கோலை எடுத்துட்டு போயிருளே.. ரோசத்துக்கு ஒன்னுங்கொறச்சலே இல்ல போ உனக்கு! கவ்வக்கோலை இங்க போட்டுட்டு போறா திமுரு!”
“உசுரெ இன்னும் வெச்சிட்டிருக்கேன்னு கெழவி என்னேரமும் தன்னை யாரோ பாக்க வந்தாப்புல ’லொட லொட’ன்னு பேசீட்டே ஊட்டுக்குள்ளார கெடக்குமேடி மயிலா.. இன்னிக்கி காத்தால இருந்து கெழவி சத்தத்தவே காணமே.. ஒரெட்டு கெழவி போயிருச்சான்னு போயிப்பாரு.. இன்னிக்கி செவ்வாச்சந்தைக்கி வேற போவணும்.. ஊட்டுல ஒரு சாமானில்லே.. இது போயிருச்சுன்னா எங்கீம் போமுடியாதேடி!” என்று எதிர்வீட்டு செண்பகம் மயிலாத்தாள் வீட்டைப்பார்த்து பேசினாள்.
“அதெல்லாம் ஒம்போது மணிக்கி கஞ்சி கொண்டோயி குடுக்கலாம்னு போனப்பவே போயிடுச்சு கெழவி.. சாமத்துலயே போயிருச்சாட்ட.. சோறு உண்டுட்டு இருக்கேன்.. இனிமேத்தான் ஊருக்குள்ள போயிச்சொல்லோணும்டியேய்!” என்றாள் மயிலாத்தாள் வீட்டினுள்ளிருந்தபடி.
000
