கன்னட நாட்டுப்புறக் கதை

ஒரு பட்டணம். அதில் ராஜா, மந்திரி இரண்டு பேர். அதே பட்டணத்தில் பிராமணப் பெண் ஒருத்தி, போயர்1 பெண் ஒருத்தி, வேசி மகள் ஒருத்தி ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்கள் பிறந்ததிலிருந்தே மிக நெருக்கம். ஒரு நாள், அந்தப் பெண்கள் மூன்று பேரும் தண்ணீர் எடுத்து வருவதற்காகக் கிணற்றின் பக்கம் போகிறார்கள். அந்த ராஜாவும் மந்திரியும் ஓர் அரசமரத்தடி மேடையில் போய் உட்கார்வது வாடிக்கை. அவர்கள் கிணற்றின் பக்கம் போகும்போது, ராஜாவும் மந்திரியும் வழக்கம்போல அங்கே உட்கார்ந்துகொள்கிறார்கள்.

அந்தப் பெண்கள் மூன்று பேரும் குடங்களை எடுத்துக்கொண்டு நல்ல தண்ணீருக்காக வந்து, அவற்றை விளக்கிக்கொண்டே ஒருவருக்கொருவர், ‘அக்காக்கா உனக்கு எது ரொம்ப நல்லதுன்னு தோனுது?’ எனக் கேட்டுக்கொள்கிறார்கள்.

‘எனக்குக் கறியவிட ருசியானது  வேறொன்னும் இல்லடி’ என்று அந்தப் பிராமணப் பெண் சொல்கிறாள். 

அதற்கு அந்தப் போயர் பெண், ‘கறியவிட ருசியானது இல்லங்கற நீ. கள்ளைப் போல ருசியானது வேறெதுவும் இல்ல’ என்கிறாள்.

அந்த வேசி மகள் சொல்கிறாள் ‘யக்கா எனக்குத் தெரிஞ்சளவுல பொய்யப் போல ருசியானது வேறெதுவும் இல்ல.’ அவர்கள் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்க, மரத்தடியில் உட்கார்ந்திருந்த ராஜா, மந்திரி இவற்றைக் கேட்டுத் திகைக்கிறார்கள். ‘இதென்னப்பா இப்படிச் சொல்றாங்களே’ எனத் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பும்போது அவர்களைப் பார்த்து, ‘என்னம்மா நீங்கள்லாம் யார் வீட்டுப் பொண்ணுங்க?’ என ராஜாவும் மந்திரியும் விசாரிக்கிறார்கள்.

‘கறியைவிட ருசியானது இல்லை’ என்றாளல்லவா அந்தப் பெண் ‘நான் பிராமணப் பொண்ணு’ என்று தந்தை, தாய் பெயர்களைச் சொல்கிறாள். இன்னொரு பெண்ணையும் கேட்கிறார்கள். அவள் ‘நாங்க போயர்கள் சாமி’ எனச் சொல்கிறாள். இன்னொருத்தியைக் கேட்கும்போது ‘நான் வேசி மகள் சாமி’ என்கிறாள்.

ராஜாவும் மந்திரியும் அந்தப் போயர் பெண்ணைக் கேட்கிறார்கள், ‘என்னம்மா, கள்ளைவிட ருசியானது வேறெதுவும் இல்லன்னியல்ல. நீ எந்த ஆதாரத்துல சொன்ன?’

‘சாமி, எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே கள்ளுக்கடை இருக்குதுங்க. ஏன் நூத்துக்கணக்கான பேர் யார் யாரோ வந்துடறாங்க? எக்கச்சக்கமா கள்ளு குடிச்சிட்டு எந்த வரம்பும் இல்லாத மாதிரி பொண்டாட்டின்னு பாக்கறதுல்ல; அம்மான்னு பாக்கறதுல்ல. பொண்டாட்டியவே அம்மான்னு கட்டிப்பிடிச்சிக்கறாங்க. அம்மாவையே பொண்டாட்டின்னு அடிக்கிறாங்க. இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்றாங்க. இந்தத் தேசத்துல இல்லாத ராகத்தையெல்லாம் பாடுறது என்ன! கள்ளு அவ்வளவு மயங்கவைக்கணுன்னா அதுல எவ்வளவு ருசி இருக்கனுன்னு நெனச்சிக்கறேன். அப்பா சாமி!’ என்று அந்தப் போயர் பெண் சொல்கிறாள்.

அந்த வேசி மகளிடம், ‘பொய்யைவிட ருசியானது இல்லை என்கிறாயேம்மா, நீ எந்த ஆதாரத்துல சொல்ற’ எனக் கேட்கிறார்கள்.

அதற்கு அவள், ‘சாமி என்னால அவ்வளவு சுலபத்துல சொல்ல முடியல. எனக்கு ஒரு வாரம் அவகாசம் குடுத்தா அதை நான் நிரூபிக்கிறேன்’ என்கிறாள்.

‘ஆகட்டும்மா. நீ சொல்றதை நிரூபிக்கறியா?’

‘சாமி நாளை திங்கட்கிழமை அன்னிக்கி இந்த ஊருல இருக்கற வீரபத்திர  சாமி கோயில் முன்னாடி ஒரு பெரிய மேடை கட்டிருங்க. இந்த ஊரெல்லாம் தண்டோரா போட்டுறுங்க. அங்கே சரியா நாளக்கி ஒம்பதரை மணிக்கு வீரபத்திர சாமி அந்தத் தேவலோகத்து வாத்தியங்களோட வந்து நடனமாடுவாரு. அதை எல்லாரும் பாக்கலாம்¢. அன்னக்கி நான் சொன்னதை நிரூபிக்கிறேன்.’

 ‘என்னம்மா கோயில் முன்னாடி வீரபத்திர சாமியே வந்து நடனமாடுவாரா? என்ன இப்புடிச் சொல்ற?’

‘சாமி நாளக்கி வீரபத்திர சாமி வந்து அங்க ஆடுவாரு. எனக்குத் தெரியும். நீங்க இதுக்கு வேண்டிய வசதிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.’

ராஜாவுக்கும் மந்திரிக்கும் ஆச்சரியமாயிருந்தது. ‘இதென்னப்பா இது? கடவுளே வந்து தேவலோகத்தோட வாத்தியங்களோட இங்க நடனமாடுறதுன்னா நாங்க என்ன சொல்றது. இது ஆச்சரியமான செய்தி!’

அவர்கள் அந்தப் பட்டணமெல்லாம் தண்டோரா போடவைக்கிறார்கள்.  

மறுநாள் ஆளுக்கு ஆள் முந்திக்கொண்டு சரியாக ஒன்பது மணிக்கு வீரபத்திர சாமி கோயில் முன்னால் ஜனங்கள் காத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் சேர்ந்துவிடுகிறார்கள். ராஜா, மந்திரியும் அங்கே வந்து உட்கார்ந்துகொள்கிறார்கள். அந்தப் பெண் வரவில்லை. மணி ஒன்பதே கால் ஆயிற்று. ஒன்பதரை ஆயிற்று. ஒன்பதே முக்கால் ஆயிற்று.

‘என்னப்பா, ஒம்பதரை மணிக்கு இங்க வீரபத்திர சாமியோட நடனம் இருக்குதுன்னு சொன்னாங்க. ஒம்பதே முக்கால் ஆனாலும் வரல்ல’ என்று ஜனங்கள் கண் கண்விட்டுப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

 அந்தப் பெண் என்ன செய்கிறாள்? நன்கு சிங்காரித்துக்கொண்டு சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு வருகிறாள்.

‘சாமி, நான் வர்றதுக்குத் தாமதமாயிருச்சி. நான் சொன்னபடி ஒம்பதரை மணிக்குத் தேவலோகத்தோட எப்படிப்பட்ட நடனம்! என்ன வாத்தியம்! ஆகா!’ என ஆனந்தப்பட்டுக்கொண்டே வருகிறாள்.

கூடி இருந்தவர்களெல்லாம் பார்க்கிறார்கள். அங்கே மேடை கட்டியிருக்கிறார்களல்லவா? அது வெறுமையாயிருக்கிறது. அங்கே எதுவும் இல்லை.

அந்தப் பெண் மட்டும் சொல்கிறாள் ‘ஐயோ என்ன கானம்? என்ன நடனம்?’ எனச் சொல்லிக் கை, வாயால் அபிநயிக்கிறாள்.

அங்கே இருந்தவர்கள் ‘ஏம்மா நீ எதுக்கு ஆனந்தப்படறே? நாங்க உன்னோட நடனத்தைத்தான் பாத்தா மாதிரி ஆச்சி. அதைத் தவிர வேற எதுவும் இல்லம்மா’ என்கிறார்கள்.

அதற்கு அந்தப் பெண், ‘மகா பதிவிரதையோட வயித்துல யாரு பொறந்திருக்காங்களோ அவங்களுக்கு மட்டுந்தான் தெரியும். எல்லாருக்கும் தெரியாது சாமி’ என்று சொல்கிறாள்.

அங்கே யாரோ என்னைப் போல2 ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அவன் ‘இந்தப் பொண்ணு “பதிவிரதையோட வயித்துல பொறந்தவர்களுக்கு மாத்திரமே தெரியும்”ன்னு சொல்லியிருக்குறா. எனக்குத் தெரியலேங்கறப்ப எங்கம்மா பாதகத்தியாக இருக்கலாமோ? எங்கம்மா பதிவிரதையாகறதே நல்லது. வீரபத்திர சாமியோட நடனம் தெரியட்டும் தெரியாமல் போகட்டும். எனக்குத் தெரியுதுன்னு சொல்றதே நல்லது’ என்று அவன் எழுந்து, ‘ஆஹா! நான் பாத்துட்டிருக்கறேன். என்ன ஆனந்தமான வாத்தியம், நடனம்!’ எனத் தொடங்கிவிடுகிறான்.

பக்கத்திலிருக்கிறவர்கள் ஒவ்வொருவராக ‘அப்படின்னா இவங்கம்மா பதிவிரதையாயிட்டா. எங்கம்மா மட்டும் பாதகத்தியா இருக்கலாமா? அப்படியாகக் கூடாது. எனக்குத் தெரியட்டும் தெரியாமப் போகட்டும். தெரியுதுன்னு சொல்றதுதான் நல்லது’ என்று ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு எல்லோரும் குதியாட்டம் போடுகிறார்கள். ‘ஆஹா! அற்புதமான நடனம்! எப்படிப்பட்ட நடனம் இது! எப்படிப்பட்ட சங்கீதம் இது! தேவலோகத்து வாத்தியமே இங்கே கேட்குதல்லப்பா!’ எனச் சொல்லி எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். எல்லாம் வெறும் பொய்யே! ஜனங்களே குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜா பார்த்தான். ‘இவங்க எல்லாருடைய அம்மாக்களும் பதிவிரதைங்க. எங்கம்மா மட்டும் பாதகத்தியா இருக்கலாமா? வீரபத்திர சாமி நடனம் தெரியுதுன்னு நானும் சொல்றதுதான் நல்லது’ என நினைத்து ‘நானும் பாத்துட்டிருக்கறேன். எனக்கும் தெரியுது’ என அறிவித்துவிடுகிறான். கூடவே மந்திரியும் அப்படியே சொல்லிவிடுகிறான்.

அவர்களெல்லாம் நடனமாடிக்கொண்டிருக்க, அந்த வேசியின் பெண் பகபகவெனச் சிரித்துவிடுகிறாள். ‘என்ன சாமி? பொய்யைவிட ருசியானது வேற என்ன இருக்குதுங்க?’ என்று அப்போது ராஜா முன்னால் போய்ப் பகபகவெனச் சிரிக்கிறாள்.

ராஜா ‘என்னம்மா இது? நீ சிரிக்கிறதுக்குக் காரணம் என்னா? மொதல்லயிருந்தே நீ செய்யறதெல்லாம் விசித்திரமாவே இருக்குதுல்ல?’ என்று கேட்கிறான்.

‘என்ன சாமி, தேவலோகன்னா என்ன? சாட்சாத் வீரபத்திர சாமின்னா என்ன? கடவுள் வந்து இங்க நடனமாடுறதுன்னா, அது இந்தப் பூலோகத்துல சாத்தியமா சாமி? நர மனுசர்கள் கண்ணுக்கு அது தெரியுமா? எல்லாமே பொய் சாமி. இப்படிப்பட்ட ருசி வேறேதாவது இருக்கா? பொய்யைப் போல ருசி வேறெதுவும் இல்ல சாமி’ என்று அவள் தான் சொன்னதை நிரூபிக்கிறாள்.

 அந்தப் பெண்ணின் சாமார்த்தியத்தைக் கண்டு ராஜா, மந்திரி எல்லோரும் ஆச்சரியப்பட்டு, மெச்சி அவளுக்கு வேண்டியளவு பரிசுகள் வழங்குகிறார்கள். அவ்வளவே.

[இக்கதை பெங்களூர் மாவட்டத்தின் தொட்டபள்ளாபூர் தாலுக்காவின் ஹனபெ கிராமத்தைச் சேர்ந்த ஹெச். சி. முனியப்பா என்னும் ஒருவரே சொன்ன இருபத்தியிரண்டு நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பிலிருந்து தேர்ந்து தமிழாக்கப்பட்டுள்ளது. அவர் வாய்மொழியாகச் சொன்னவற்றை ஒலிநாடாவில் பதிந்து, அப்படியே எழுதிப் பதிப்பித்துவிட்டார்கள். தொகுத்தவர் பெங்களூர்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கன்னடப் பேராசிரியர் வீரண்ணா. பதிப்பு: பெங்களூர்ப் பல்கலைக்கழகம். முதல் பதிப்பு:  1974.

வாய்மொழியாகக் கூறிய கதையை வார்த்தைக்கு வார்த்தை அல்லது வரிக்கு வரி அப்படியே தமிழாக்கிப் பார்த்தேன். படிக்கவே முடியவில்லை. எனவே, கதையின் அமைப்பு மாறாமலும் வாக்கியங்களை விட்டுவிடாமலும் தேவையற்ற சொற்களை நீக்கியும் வேண்டிய இடங்களில் சிற்சில வார்த்தைகளைச் சேர்த்தும் தமிழ் வாசகர்களுக்கு வழங்குகிறேன்.]

குறிப்புகள்

1. போயர்: கல்லுடைக்கும் தொழில் செய்யும் இனத்தவர்.

2. என்னைப் போல: கதையை வாய்மொழியாகச் சொன்னவரைப் போல.

*  *  *  *  *

மொழிபெயர்பாளர் குறிப்பு

இந்த நாட்டுப்புறக் கதையில் வருவது போன்றே தமிழ்த் திரைப்படம் ஒன்றிலும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சித் தொடர் இடம்பெற்றிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். நானும் யூ ட்யூபில் தேடி அதைப் பார்த்தேன்.

வடிவேலு திறமையான நடிகர். அந்த நகைச்சுவைக் காட்சித் தொடரும் திரைப்படம் என்ற அளவில் சிறப்பாகவே வந்திருக்கிறது. திரைப்படங்களில் –  அதுவும் தமிழ்த் திரைப்படங்களில் – பழைய நாடகங்கள், நாட்டார் கதைகளிலிருந்து காட்சிகளை அல்லது சம்பவங்களைத் தக்கவாறு சிறு சிறு மாற்றங்களுடன் பயன்படுத்திக்கொள்வது புதிதல்ல. கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெறும் மிகப் புகழ்வாய்ந்த வாழைப்பழ நகைச்சுவைக் காட்சி காரைக்காலம்மையார் நாடகத்தில் இடம்பெற்றதுதான். நாடகத்தில் மாம்பழம்; திரைப்படத்தில் வாழைப்பழம். இப்படித் திரைப்படத்துக்கேற்பப் பழைய நாடகக் காட்சிகளையோ நாட்டார் கதைகளையோ எடுத்தாளுவதை ‘அப்பட்டமான காப்பி’ என நான் கொச்சைப்படுத்தவில்லை. வாழைப்பழக் காமெடியில் கவுண்டமணியும் செந்திலும் தூள் கிளப்பிவிட்டார்கள். அதை எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.

சரி, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சித் தொடருக்கு வருவோம். ஊரில் உள்ளவர்களிடம் – அதிலும் குறிப்பாகத் திருமணமானவர்களிடம் – கடவுளைக் காட்டுவதாகச் சொல்லித் தலைக்கு நூறு ரூபாய் வசூலிக்கிறார். கடவுளைக் காட்ட முடியாவிட்டால் இருநூறு ரூபாயாகத் திருப்பித் தருவதாகவும் வாக்களிக்கிறார். குறிப்பிட்ட நாள், நேரத்தில் பணம் கொடுத்தவர்கள் அவர் சொன்ன இடத்தில் கூடுகிறார்கள். அவர்கள் யார் கண்ணுக்கும் கடவுள் தெரிவதில்லை. ஆனால்,. தனக்குக் கடவுள் தெரிவாக வடிவேலு அடித்துச் சொல்லுகிறார். அவர் எப்படி உதார்விடுவார் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. தங்களுக்குக் கடவுள் தெரியவில்லையே என மற்றவர்கள் கேட்கும்போது, பெண்டாட்டி பத்தினியாயிருப்பவர்கள் கண்களுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என வடிவேலு ஒரேபோடாகப் போடுகிறார். பணம் தந்து கூடியிருப்பவர்களும் தத்தம் மனைவிமார்களைப் பத்தினித்தனத்திலிருந்து விட்டு¢த்தர மனமில்லாமலும் வேறு வழியில்லாமலும், தங்கள் கண்களுக்கும் கடவுள் தெரிவதாக ஒப்புக்கொள்கிறார்கள். வடிவேலுவும் தப்பித்துக்கொள்கிறார்.

இப்படிப்பட்ட. நகைச்சுவைக் காட்சி பரவலாக அறியப்பட்ட (நான்தான் அறிந்திருக்கவில்லை!) சூழலில். எதற்காக இந்தக் கன்னட நாட்டுப்புறக்கதையை மெனக்கெட்டுத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்னும் கேள்வி எழுவது நியாயந¢தான். இதற்கு என்னளவில் தக்க விளக்கத்தைத்த தர விரும்புகிறேன்

தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக் காட்சிக்கும் இந்தக் கதைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

1) தமிழ்த் திரைப்படத்தில் ‘பொண்டாட்டி பத்தினியாயிருக்கறவங்க கண்ணுக்கும் மட்டும்தான் கடவுள் தெரிவார்’ என்பது வெறுமனே நகைச்சுவையை மட்டும் நோக்கமாகக் கொண்டு எடுத்தாளப்பட்டுள்ளது. நாட்டுப்புறக்கதையில் இடம்பெறும் காட்சி சற்றும் நகைச்சுவையை மனத்தில் கொண்டு சொல்லப்பட்டதல்ல. மாறாக, மனித இயல்பின் உளவியலை வெளிக்காட்டும் நோக்கில் அமைந்துள்ளது,

2) தமிழ்த் திரைப்படக்காட்சியில் வடிவேலுவின் நிபந்தனைக்குள் மணமானவர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆனால், மனிதர்கள் எல்லோரும் பெண்ணின் வயிற்றில் பிறப்பதால், நாட்டுப்புறக்கதையில் வரும் ‘பதிவிரதையின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு மட்டுமே வீரபத்திர சாமி தெரிவார்’ என்பது சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என எல்லோருக்கும் பொருந்தும்.

3) வீரபத்திர சாமி கண்ணுக்குத் தெரிவதைத் தாண்டியும் நாட்டுப்புறக்கதை விரிகிறது. பிராமணப் பெண் கறிச் சுவையே சிறந்தது எனச் சொல்லவதை ராஜாவும் மந்திரியும் மேற்கொண்டு அலசுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. இதில் பண்பாட்டுக் கருத்தாடல் புதைந்துள்ளது.

கள்ளே சுவையானது எனப் போயர் பெண் சொன்னதற்கான ஆதாரத்தை ராஜாவும் மந்திரியும் அவளிடம் கேட்டு அறிகிறார்கள்.

வேசியின் மகள் பொய்யே மிகவும் சுவையானது எனச் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் அறிய விரும்பும்போது கதை அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. தான் வேசியின் மகள் என அந்தப் பெண் முன்னமே ராஜா, மந்திரியிடம் கூறிவிடுகிறாள். ஆனாலும், பின்னர் வீரபத்திர சாமியின் நடனம் தன் கண்ணுக்குத் தெரிவதாகவும் அவரது இசை தனக்குக் கேட்பதாகவும் சொல்கிறாள். அதோடு சாமியின் நடனம் பதிவிரதையின் வயிற்றில் பிறந்தவர்களுக்கு மட்டும் தெரியும் எனவும் அறிவிக்கிறாள். அப்போது, அவள் பதிவிரதையின் வயிற்றில் பிறந்தவளல்ல; மாறாக வேசியின் மகள் என்பதை ராஜாவும் மந்திரியும் மறந்துவிடுகிறார்கள். இதற்கான காரணத்தைக் கதை சொல்லி பதிவுசெய்வதில்லை. இப்படி இன்னும் சில முக்கியமான வேறுபாடுகளைத் திரைப்படக் காட்சித் தொடருக்கும் நாட்டுப்புறக்கதைக்கும் இடையே சுட்டிக்காட்ட முடியும்.

சுருங்கச் சொன்னால், தமிழ்த் திரைப்படக் காட்சித் தொடர் ‘காமெடி’ என்னும் ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே கருதத்¢தக்கது, அதுவே அதன் இயல்பான வரம்பும்கூட. ஆனால், நாட்டுப்புறக் கதை இலக்கியப் பிரதியாகப் பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. எனவே, இந்தக் கன்னட நாட்டுப்புறக் கதையை மெனக்கெட்டுத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவது ஒன்றும் வீணல்ல.

இது போன்ற நாட்டார் கதைகள் ஒவ்வொரு மொழியிலும் நிச்சயம் இருக்கும். தமிழ்த் திரைப்படங்களில் நாட்டார் கதைக்கூறுகளின் தகவமைப்பு குறித்து உருப்படியான முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளலாம். இது தொடர்பாகக் கல்வித் துறை ஆய்வு நெறியாளர்களும் மாணவர்களும் சற்று யோசிக்கலாம்.

* * * * *

தமிழில்: நஞ்சுண்டன் (நடுகல் -5)

நஞ்சுண்டன்

தமிழ் இலக்கிய உலகில் எடிட்டிங் என்பது அறவே இல்லை. ஆனால், அது அவசியம்’ என நஞ்சுண்டன் கருதினார். ஒரு படைப்பை இன்னும் மேம்படுத்தவே எடிட்டிங் உதவும் என்பது அவர் எண்ணம். சிலருக்கு இதில் மாறுபட்ட எண்ணமிருந்தாலும், தனது எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு அவர் தயங்கியதில்லை. `செம்மை’ எனும் அமைப்பின் வழியே `சிறுகதைகள் செம்மையாக்கம்’ பட்டறைகளை நடத்தினார்.

கன்னடத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் யு.எஸ்.அனந்தமூர்த்தியின் `அவஸ்தை’ மற்றும் `பிறப்பு’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். பிரபல கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை ‘அக்கா’ எனும் தலைப்பில் இவர் மொழிபெயர்த்தற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. (இவை காலச்சுவடு வெளியீடு) இப்படி அவரின் மொழிபெயர்ப்புகள் தமிழுக்கு ஆகச் சிறந்த கொடைகளாக விளங்குகின்றன.

பெங்களூர் பல்கலைக்கழகத்தில் புள்ளியல் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அவரின் மனைவி பிள்ளைகள் சென்னையில் வசிக்கிறார்கள். எப்போதும் இளைஞர்களிடம் உரையாடுவதன் மூலம் தான் கற்றறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதில் எப்போதுமே ஆர்வம் காட்டியவர். அவரின் மரணம், தமிழ் வாசகர்களுக்கு பெரும் இழப்பு.

இந்தச்சிறுகதை நடுகல் இதழ் எண் 5-ல் வெளியானது.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *