அன்பு மகள் சடாகோ சசாகிக்கு…..

மகளே, யுத்தத்தின் எரிவு உனக்கு மட்டுமே தெரிந்திருக்கும். உலகுக்கும் சொல்லத்தான் நீ ஓரிகாமி கொக்குகள செய்து பறக்க விட்டாயா? அந்த கொக்குகள்தான் அன்று எங்களூர் அலையாத்திக் காட்டுக்குள் வந்தன. வந்தவைகள் சொன்னது “இன்னும் எங்கள் வாழ்வில் அமைதி திரும்பவில்லை” என்று. அவைகள் எங்களூரில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில் நடக்கும் கலவரத்தை நிறுத்தவும் அமைதியாக இருக்கச்சொல்லவுமே வந்தனவாம்.

எங்குமே அமைதியை நிலை நாட்டத்தான் மக்கள் அனைவருமே நினைக்கின்றனர் ஆனால் உலக நாடுகளில் யுத்த தளவாடங்களைத் தயாரிக்கும் நாடுகளோ அமைதிக்கான விருதையும் அறிவித்து அதே நாளில் பெரும் யுத்த பேரத்தையும் நடத்தி விடுகிறார்கள்.

அமைதிக்கான ஐக்கிய நாட்டு சபையை ஆரம்பித்து, அதில் நாட்டாண்மை செய்ய ‘வீட்டோ பவர்’ அதிகாரத்தையும் பெற்ற நாடுகளை பார்த்தால் யாரெல்லாம் யுத்த தளவாடங்களை அணு ஆயுதங்களை அதிகமாக தயாரித்து விற்பனை செய்கிறார்களோ அவர்களே நாட்டாண்மைகளாகவும், அவர்கள் தேர்வு செய்பவர்களே உலகின் அமைதி தூதுவர்களாகவும் இருப்பது என்ன வேடிக்கைப் பார்த்தாயா?. இது தான் மனித இனத்தின் மிகப்பெரிய முரண் நகை. ஆம் இங்கே துப்பாக்கி விற்ற பணத்தில்தான் அமைதிக்கான நோபல் பரிசுகள் கிடைக்கின்றன.

எங்களூரில் சொல்லுவார்கள் “பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையென”. உலக நாடுகளில் எல்லாமே பாதுகாப்பு உணர்வு கருதிதான் அதற்கான எல்லை பாதுகாப்பிற்காக ஆயுதங்களை வாங்கியும் தயாரித்தும் குவிக்கின்றனர். இதைத்தான் நான் முரண் நகை என சொல்லுகிறேன். அவர்கள்தான் சொல்லுகிறார்கள் நாங்கள் நாகரீகமடைந்து விட்டோமென. என்ன மாறியிருக்கிறோம் சொல் மகளே.

உருவத்தில் மாறுபட்டுள்ளோம் மற்றபடி மிருக குண பதிவுகளிலிருந்து கொஞ்சம் கூட மாறவே இல்லை. வேட்டையாடும் பொருட்கள்தான் மாறியுள்ளன ஆனால் வேட்டையின் வெறித்தனம் மாறவில்லை. மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் அவலம் இந்த மிகப்பெருமையுடைய மனித இனத்தில் மட்டுமேயுள்ளது பார்த்தாயா? எல்லோரும் ஒரே இனம், பிறப்பால் வேறுபட்டாலும் இனத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவருமே சகோதர சகோதரிகள் என நினைத்து விட்டால் ஏதும் இல்லை? ஏது சண்டை? அப்படியான மன நிலையை அடையத்தான் நீ கொக்குகள் செய்து பறக்கவிட்டாயா? எத்தனை எத்தனை கொக்குகள் இன்னும் பறந்து கொண்டேயுள்ளன. கொக்குகள் பறக்கும் வானம் மிக வெறுமையாகவே உள்ளன பார்த்தாயா? இன்னும் இன்னும் பல கொக்குகள் செய்து பறக்க விட்ட படியே நாங்கள் காத்திருக்கிறோம்.

மகளே அந்த அமைதியான, கருணையுடைய, பரிவான, அன்பான உலகைக் காணவே இல்லையே! ஒருவர் கூட கருணையான கொக்குகள் செய்ய ஆசைப்படவே இல்லை. பரிவு என்ற சொல்லின் பயன்பாடே கேள்விக்குள்ளாகி விட்டது. அன்பு கிலோ எவ்வளவு? என்றே கேட்கிறார்கள்.

உனது இரத்தப் புற்றுநோயின் வலியை நீ எவ்வளவு சங்கடத்துடனும் மனங் கசிந்தும் ஒரு கனவு உலகத்தை, பொன்னுலகத்தை கற்பனை செய்திருப்பாய். நாம் சாகப் போகிறோம் என தெரிந்த நிலையிலும் நீ மக்களைப் பற்றியே சிந்தித்துள்ளாய். உனது மனதையே அமைதிக்கான கொக்காக மாற்றியுள்ளாய்.

மகளே முன்பை விட இன்னும் இன்னும் பல ஆயிரம் முறை இந்த பூமியை அழிக்குமளவு இங்கே அணு குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதை நினைக்கும் போது பெருத்த வேதனையே மிஞ்சியுள்ளது. நீ செய்த கொக்குகள் எல்லாம் வெடிச் சத்தத்தில் திசைக்கொன்றாய் பறந்து விட்டனவோ? இங்கே அமைதிக்கான கொக்குகளையே பார்க்க முடியவில்லை முகமூடியணிந்த நரிகளையும், பசுந்தோல் போர்த்திய புலிகளையுமே காண்கிறேன்.

 நீ செய்த கொக்குகள் என்னவாகின என்ற வேதனையில்தான் உருகி நின்று இக்கடிதத்தினை, எனது மனக்குகையில் இருள் சூழ்ந்த நிலையிலும் கண்களில் இரத்தம் சொட்ட வடிக்கிறேன்.

ஹிரோசிமாவில் அணுக்குண்டு போட்டது பத்தாதென வியாட்னாமிலும் போட்டார்கள். இரண்டிலுமே எனது மகள்களின் ஆடைகள் எரிந்தும், உடலே எரிந்தும், பிஞ்சு ஆன்மாக்கள் எரிந்துமே, கருகின அமைதியின் கொக்குகள். யாருக்கென்ன, யார் கவலைப்பட்டார்கள். அந்த தோரியத்தின், யுரேனியத்தின் சூடு தாங்காத உடலின் எரிச்சலை எப்படித்தான் தாங்கினீர்களோ? மகளே சசாகி உன்னைப் போல்தான் பூக்கும் அணு குண்டு விழுந்ததால் வந்த கதிரியக்க நோய்களைப் பெற்றாள். நீங்கள் மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனை பெயர் தெரியாத மகள்கள்.

எதற்கான யுத்தங்கள் இவைகள், மதத்தின் பெயரால் யுத்தங்கள், கடவுளின் பெயரால் யுத்தங்கள், மொழியின் பெயரால் யுத்தங்கள், நிலத்தின் பெயரால் யுத்தங்கள், வளத்தின் பெயரால் யுத்தங்கள். எத்தனை எத்தனை யுத்தங்கள் எல்லாவற்றின் வேரும் மனிதகுல வெறுப்பிலிருந்தே உருவாகியுள்ளது எனலாம். ஏன் இந்த வெறுப்பு? இதுவும் மிருக இனத்தின் பதிவுகளிலிருந்து வரும் விதியா? கருத்தொடரான பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்து அதன் உடைமைகளை பறிப்பதென ஆரம்பித்த இந்த பாவப் பதிவின் வித்து இன்றும் நம்மிலேயே வெறுப்பாகி, யுத்தமாகி, அழிதொழிக்கும் வன்முறைச் செயலாகி பெரும் விளைவுகளை தந்து கொண்டேயுள்ளன. இவ்விதியை வெல்ல நம்மிடம் மதி போதவில்லையா?

யுத்தத்தில் ஈடுபட்ட எந்த வீரனாவது, அந்த வீரனின் குடும்பத்தில் யாராவது யுத்தம் எப்போதும் வேண்டுமென சொல்லியிருப்பார்களா? அல்லது சொல்லுவார்களா? அவர்களால் அப்படிச் சொல்லத்தான் முடியுமா? எவ்வளவு வலியை உணர்ந்திருப்பார்கள். ரணங்கள், புண்கள், சீழ் வடிந்த மண்டை காயங்கள், சிராய்ப்புகள், தலைத் துண்டிக்கப்பட்ட முண்டங்காள், பிஞ்சுக் கைகள், சதைத் துணுக்குகள், பிய்த்து வீசப்பட்ட தோல்கள். இன்னும் இன்னும் வெறி அடங்காத வேளையில் இன்னும் இன்னும் கருகல் வாசனை, அழுகிய துர் நாற்றங்கள் புதைக்குழியில் மூடப்படாத கைகள், இரத்தம் ஒழுகும் சிதைந்த முகங்கள். இன்னும் எத்தனையோ வேதனைக் காட்சிகள் பார்த்து நீ செய்த அன்றைய கொக்குகளின் மிரளும் கண்களை நான் இப்போதும் பார்த்து வருகிறேன்.

இந்த தேசப்பற்று என்ற ஒரு மாய்மாலத்தை வைத்துக் கொண்டு இவர்கள் இங்கே யுத்தத்தை விற்பனை செய்கிறார்கள். யுத்தங்கள் இவர்களின் மான பிரச்சனையாக பார்க்கப் படுகின்றன. எங்காவது பெரிய பணக்காரனோ? பெரும் முதலாளியோ? முதலாளி வீட்டு குழந்தைகளோ? யுத்தத்தில் பங்கெடுத்தாக செய்தி நம்மிடம் உண்டா? இருக்காது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக காப்பாற்றப் பட்டிருப்பார்கள் அதற்கு இந்த அரசாங்கமே உதவிடும். சாவதெல்லாம் யாரென பார்த்தால் நாட்டுப் பற்று அதிகமாகவுள்ள நடுத்தர ஆட்களும் ஏழைகளும்தான். வாழ வழியற்றவர்களே அதிகம் பலிகடா ஆக்கப் படுவார்கள் எல்லா யுத்தங்களின் டெம்ப்ளேட்டுகளும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

மூலதன விஷத்தாலேயே இங்கே இந்த யுத்தமெனும் முட்செடிகள் வளர்க்கப் படுகின்றன. இவை நாட்டுப்பற்று என்ற உரம் போட்டு வளர்க்கப்படுகின்றன. அதற்கு தீனியாக வெறுப்புணர்வும், வஞ்சமும், வன்முறையும் போட்டு வளர்க்கின்றனர். வளர்க்கப்படும் ஆடுகளே பலியாகின்றன வளர்த்தவன், விற்பவனும் தப்பித்துக் கொள்கிறான். இக்கால யுத்தத்தில் அமைதிக்கான கொக்குகளும் பலியாகி விட்டன.

அன்பு என்பதுதான் உலகை இயக்கும் அச்சாணியாக இருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு விடுவதில்லை. அந்த அச்சாணியை முறிக்கும் ஒரு சுத்தியலாகத்தான் பணம் என்பதை படைத்து, அதை வளங்களை வாங்கும் மூலதன பரிமாற்ற, பரிவர்த்தனை கூப்பனாக பயன் படுத்தியுள்ளார்கள்.

மகளே அமைதி என்ற வார்த்தைக்கு இருந்த வலிமையையும் அர்த்தப்பாட்டின் வளமையும் செழிப்பையும் குறைத்து விட்டார்கள். அதன் அழுத்தம் குறைந்து காற்றுப் போன பலூனாக போனது இன்று அமைதியைப் பற்றி பேச்சு. கருணை என்ற வார்த்தை அன்பை விட அதிக உணர்வு கொண்டவையென நாம் சொல்லித்தான் தெரிகிறது. உணர்வதற்கு ஆட்களே இல்லை இவைகள் எல்லாம் கசாப்புக் கடை வேதம் போலாகின.

நீ தேவதையாக கூட இந்த பூமிக்கு வந்து விடாதே.. வளங்களையெல்லாம் சுரண்ட மூலதன விச கத்தியைக் கொண்டு இந்த பூமியை வெட்டி துண்டு துண்டாக்கி விட்டார்கள். இங்கு எந்த செழுமையுமில்லை மகளே.

கண்டத்திற்கொரு நிலப்பிரச்சனையினால், பிரிவினைகளால் போரிட்டுக் கொண்டுதான் உள்ளார்கள். தற்போது மூலதன கழுகளின் கண்கள் ஆசியாவில் குடி கொண்டுள்ளன. அவைகள் குறிப்பாக தெற்காசிய பிராந்தியங்களில் பெரும் போரை நிகழ்த்த சூது செய்து கொண்டுள்ளன. அந்த பிணந்தின்னி கழுகுகளின் கண்கள் வட்டமிட்டுக் கொண்டேயுள்ளன.

வன்முறை நிறைந்த கொடுமையான மனம்தான் போர் வேண்டுமென ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும். அன்புணர்வு மேலிட்டிருக்கும் மனம் கருணையினாலும் அருளினாலும் நிறைந்து அங்கே வலியில்லா, துன்பமில்லா உலகைதான் கனவு கண்டு கொண்டிருக்கும்.

மகளே நாம்தான் கனவு கண்டுள்ளோம் ஆனால் அவர்களோ பிணத்தின் வாடைகளை நுரையீரலுக்குள் செலுத்த ஒரு வித சைக்கோத்தனமான ஆசையில் இருக்கின்றனர். அவர்களுக்கு நேச உணர்வின், நட்புணர்வின் அன்புணர்வின், பரிவுணர்வின் வாசத்தை நுகரத்தர வேண்டும். அப்போதுதாவது திருந்துவார்களா? தெரியவில்லை உனது கொக்குகளிடம் சொல்லி அவ்வாசனையை கடலிலிருந்து அள்ளி வரச்சொல். உனது கொக்குகளிடம் சொல்லி அவ்வாசனையை மலைகளின் பசுமை புற்களிலிருந்து எடுத்து வரச்சொல். இன்னும் அவ்வாசனைகள் நிறைய பரவவிடல் வேண்டும். நான் இங்கே வள்ளலாரிடமிருந்து பெற்றுத் தருகிறேன்.

பரிவு கருணை எல்லாம் விலை எவ்வளவு என்று வியாக்யானம் பேசுகிறார்கள். அவர்களின் மனத்தின் அடியில் இவ்வகையான சாக்கடைகள் பெரிய கடல் போன்று அலையடித்துக் கொண்டே உள்ளன. அதனால்தான் மகளே போரை நம்மால் அவ்வளவு எளிதில் நிறுத்தி விட முடியவில்லை.

யுத்த தளவாடங்களை வாங்கும் ஒரு நாட்டின் அரசாங்க பிரதிநிதிக்கு ‘கிக் பேக்’ என்று எட்டுலிருந்து பன்னிரெண்டு விழுக்காட்டு பணம் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். அந்த பணத்திற்கு ஆசைக் கொண்டே ஒரு அரசாங்க பாதுகாப்பு அமைச்சர்களாகட்டும் வேறு பிரதிநிதியாகட்டும் யுத்த தளவாடங்களை வாங்குகிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான பேர ஊழல் நிறைந்து இருக்கின்றன. மகளே போரை ஒழிப்பதற்கு முன் நாம் பணத்தை அழித்தாக வேண்டும்.

போரில்லா நல்லுலகம் விரைவில் அமைய வேண்டும். மகளே. நாம் நம் கொக்குகளை ஆயிரம் ஆயிரமாக்கி அன்புணர்வு வாசனையை பரவ விட்டு அவ்வுலகை அமைத்திடல் வேண்டும். இப்பூமிப் பந்தெங்கும் உனது கொக்குகள் பறக்கட்டும் மகளே. நானும் கொக்குகள் செய்து கொண்டே காத்திருக்கிறேன் சசாகி.

பூமி

சந்திரன் (post)

சூரியன் – (via)

சுத்தவெளி – 000000.

துவாரகா சாமிநாதன்

கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *