சொல்வனம்
மனதைவிட்டகன்ற பின் மெதுவாய்
மசிவழி தாளிறங்கி
விழிகளை வேண்டி நிற்கும்
சொற்களும் இறந்து போகும்
வளியினில் மிதக்கும் சொற்கள்
அன்று முனிவர்கள் கண்டதுண்டு
காதலோ கவலையோ இன்று
கருவிகள் கவர்ந்து வரும்
பொருட்களின் கனத்தைத் தாங்கா
புகையெனக் கமழும் சொற்கள்
கூட்டமாய்ச் சேர்ந்து கொள்ளும்
மறையென மாயம் காட்டும்.
சொற்களின் பின்சென்று
காலத்தைத் தொலைத்த பின்னர்
ஜன்னல் வெளியே
தெருப்புனல் தேங்கும் மழையில்
தலையினை முங்கிச் சுகமாய்
சிறகினைச் சிலுப்பிடும்
சின்னக் குருவிகள் சொல்லித்தரும்
மௌனத்தின் ஞானப்பாடம்.
00
பாடம்
ஜன்னல் வெளியே வண்ணத்துப்பூச்சி
பூக்கள் தேடி அலையும் பாதை
சிந்தை வெளியில் சிலபல சொற்கள்
கதவை உடைத்து தாளில் குதிக்க
வரிசை மாற்றி அமர்த்தியபின்னர்
இடமில்லாமல் ஓரம் நின்று
முகத்தைக் கவிழ்க்கும் ஒன்றிரண்டு.
இடுக்கிக்கொண்டு உட்கார
முரண்டு பிடிக்கும் ஒன்றிரண்டை
தூக்கிப்போட மனமில்லாமல்
தயங்கி நிற்கும் விழியின்முன்
வெட்ட வெளியிலொரு வண்ணச்சிறகு
எழுதிச்செல்லும் வரிகள் ஏதும்
காட்டித் தருமோ
கவிதையின் தந்திரம்?
00