1

மகேஸ்வரி குளியலறைக்குள் நுழைந்தாள். எப்படியும் அரை மணி நேரம் தாண்டிவிடும். இதுவரை ஐந்து வீடுகளுக்கு மேல் மாற்றியாகிவிட்டது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் முதலில் குளியலறைக்குச் சென்று பார்த்துவிட்டுத்தான் அந்த வீட்டிற்குப் போகலாமா வேண்டாமா என்பதையே முடிவு செய்வாள். 

‘அந்த ரூம்புக்குள்ள பூந்து கிட்டு அப்படி என்னாதான் செய்வாளோ, உள்ள போய் தூங்கிருவாளா, உடம்ப தேச்சு தேச்சு சதெகிதெ கையோட வந்துரப்போகுது’ இப்படிப் பலவாறாக அனைவரும் ஏசும் ஏச்சுக்களை ஒருநாளும் அவள் பொருட்படுத்துவதே இல்லை. கழிப்பறையோடு சேர்ந்த குளியலறையை அவள் தேர்ந்தெடுப்பதில்லை. எப்போதும் தனிக்குளியலறையைத்தான் விரும்புவாள்.

மகேஸ்வரி தண்ணீர் குழாயைத் திறந்து விட்டாள். பெரிய அலுமினிய பேசின் நிறைய தண்ணீர் பிடித்து நிரப்பினாள். சொட்டுச்சொட்டாக நீர் பேசினில் விழுந்து வழியும் வரை விட்டுவிட்டு குழாயின் சில்வர் பீலியை நிறுத்தினாள். அருகில் சிவப்பு வண்ணக் குட்டி ஸ்டூலை எடுத்துப் போட்டுவிட்டு சோப்பு, மஞ்சள் கிழங்கை எடுத்து வைத்தாள். மஞ்சள் உரசும் கல், சோப்பு தேய்க்கும் நார் எல்லாவற்றையும் வரிசையாக அருகருகே எடுத்து வைத்துக் கொண்டாள். அலுமினிய பேசினுக்கு மேட்சாக அலுமினிய கோப்பையை பழைய பேப்பர் போடுபவரிடம் பேப்பர் போட்டு பேசினும் கோப்பையும் வாங்கியிருந்தாள்.

புது வீடு மாற்றுகையில் அல்லது பழைய வீடுகளிலும் இந்த பொருட்கள் எல்லாவற்றையும் செட்டாக அடிக்கடி மாற்றி புதிது போலவே வைத்திருப்பாள். எல்லா பொருட்களும் இந்த வீட்டின் புதுக் குளியலறையில் மாற்றி இருந்தது அவளுக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்திருந்தது. வீட்டில் எத்தனை பொருட்கள் பழைய நிலைக்கு போனாலும் கவலை கொள்ளாதவள் இவற்றை மட்டும் அடிக்கடி மாற்றுவதை என்னவொரு விசித்திரமான பழக்கம் ஏன் என்று வீட்டில் கேட்டுச்சலித்து ஓய்ந்து விட்டனர்.

மெல்ல தன் எல்லா துகிலையும் உரித்தவள் தன் உள்பாவாடை மட்டும் மீதமிருக்க குட்டி ஸ்டூலில் அமர்ந்து கொண்டு முதல் கோப்பை நீரை எடுத்து முகத்தில் நெற்றி மீது ஊற்றினாள். குளிர்ந்த நீரும் அவள் சூடான உடலும் கலந்து ஒரு புதுவித வெப்ப நிலையை அவ்விடத்தில் உருவாக்கின. கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலின் எல்லா பாகங்களிலும் நீர் பரவுவதை உணர்ந்தவள் அடுத்தடுத்து இரண்டு கோப்பை நீரை எடுத்து உடலை முழுவதுமாக நனைத்தாள். சோப்புப் பெட்டியில் இருந்த பியர்ஸ் சோப்பை எடுத்து முகர்ந்தவள் லேசாக பெருமூச்சு விட்டபடி ஒவ்வொரு அங்கங்களாக நீர் தெளித்துத்தெளித்து தேய்த்தவள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு, ‘போதும் போதும்’ என்றாள். பின்னர் குளியலறை சுவற்றில் சாய்ந்து கொண்டு ஒரு நிமிடம் அந்த சோப்பு வாசத்தை உடலில் நாசியில் ஊறவிட்டவள் கண்களைத் திறந்து மீண்டும் தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றிக் கொள்ளத் தொடங்கினாள்.

பிறகு மஞ்சள் உரைக்கும் கல்லில் மஞ்சளை உரைத்து எல்லா இடங்களிலும் பூசியவள் குளியலை முடித்துக் கொள்ளும் நேரத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்தாள். கடைசியாக மொண்டு ஊற்றிய நீரோடு தனது கண்களில் இருந்து சில சொட்டு நீர் கலந்து உடலில் இறங்கியதை உணர்ந்தவள் மூச்சின் உடலின் நினைவுகளின் அனைத்து உஷ்ணமும் குறையாது எல்லாவற்றையும் எடுத்து ஸ்டாண்டில் வைத்து விட்டு குளியலறையில் இருந்து வெளியேறினாள்.

நீர்த்திவலைகள் உடல் முழுவதும் படர்ந்திருக்க மென்மை கூடிய ஈரல் துண்டால் தனது உடலை துவட்டத் தொடங்கியவளுக்கு தனது நாசி வழியே பியர்ஸ் மணம் நிறைந்திருந்தது. எவ்வளவு மஞ்சள் பூசிக்குளித்த பிறகும் போகாத அந்த வாசத்தை நுகர்ந்த படியே இருந்தாள். மூச்சை இழுத்து இழுத்து தனது நாசி வழியே உடல் முழுவதும் அந்த வாசத்தை நிறைத்துக் கொண்டவளுக்குத் திடீரென குபுகுபுவென கண்ணீர் பொங்கியது. எத்தனை வருடங்கள் இந்தப்பிசாசு மணத்தை சுமக்க வேண்டும் என்று தோன்றியது. சற்று நேரத்திற்கு முன்பு தன்னை மகிழ்வித்த மணம் ஏன் இப்படி அழவைக்கிறது என்று யோசிக்க யோசிக்க தலை‌ முழுவதும் நுறாய் சிதறி வெடிப்பது போல இருந்தது. இதிலிருந்து வாழ்நாள் முழுவதும் தனக்கு விடுதலையே கிடையாதா என கண்ணீர்த் துளிகளை சுண்டி விட்டாள். ‘உண்மையில் நான் இந்த மணத்தை விரும்புகிறேனா வெறுக்கிறேனா’ என்பதையே அவளால் தனக்குள் எத்தனை முறை கேட்டும் கண்டறிய முடியவில்லை. இந்த மணம் ஏன் என்னை இப்படி துரத்துகிறது இந்த மணம் இல்லாமல் ஏன் என்னால் தினமும் வாழவே முடியவில்லை. வேறெதுவென்றாலும் பரவாயில்லை குளிக்காமல் எப்படி இருப்பது. இந்த மணம் வேண்டாம் என்று முடிவு செய்து ஒரு நாள் வேறொரு சோப்பை வாங்கி குளித்தபோது அனல் உடலில் பட்டதுபோல துள்ளியவாறு அதைச் சாக்கடை குழிக்குள் ஏன் போடத்தோன்றியது. சிறிது சிறிதாக பியர்ஸ் சோப்பின் மணம் தனது உடல் முழுவதும் பரவி இறுதியாக கழுத்தில் வந்து நின்று கொண்டு சிரித்தபடி தன் கழுத்தை நெரிப்பது போலிருந்தது. அது ஒரு சர்ப்பத்தின் இறுக்கம் போல வலுவாக இருந்தது.

குளிக்கும் போதுதான் என்றில்லை..பல நேரங்களில் குளிர்ந்த நீர் தன் உடலின் மீது எங்கே பட்டாலும் பட்டென்று கண்களை இறுக்க மூடிக்கொண்டு அப்படியே நின்றுவிடுவாள். சுயநினைவுக்கு வருவதற்கு சில நிமிடங்கள் பிடித்துவிடும். 

முன்பெல்லாம் ‘ஏல, வேல நேரத்துல சொப்பனங்கண்டு நிக்கறவளா’ என அம்மா டங்கென்று கைகளில் ஒரு இடி இடித்து உலுக்குவாள். ஆனால் குளிக்கும் போது இன்னும் நிலைமை மோசமாகிவிடும்.

‘மகேசு, இன்னிக்கு நாயித்துக்கெழம ஆட்டுக்கறி வாங்கவா கோழிக்கறியா எந்நாரத்துக்கு உள்ள போன.. இவ்வளவு நேரம் குளிப்பியா, இதே ரோதனையாப்போச்சு ஒங்கூட?’ படபடவென்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் மகேஸ்வரியின் கணவன் கணேசன்.

2

கிணற்றுக்குள் படிக்கட்டில் இருந்து விழுந்து துள்ளி எழுந்தவாறு நீர்த்திவலைகள் தன் மீது விழ தலையைச் சிலுப்பிக் கொண்டு கைகளால் நீரை விலக்கினாள் மகேஸ்வரி. 

திருமணத்திற்குப் பிறகு வருவதற்கு வாய்ப்பு குறைந்து போன சின்ன அம்மாயி வீட்டுக்கிணற்றைப் பார்க்க வந்தவளுக்கு கிணற்றுக் குளியல் மீது பழைய ஆசை பொங்கிவர இறங்கி விட்டாள். சின்னம்மாயி தனம் திடகாத்திரமானவள். இன்றளவும் தனியே யார் துணையும் இல்லாமல் ஆடு மாடுகள் கோழிகள் கொட்டம் என குட்டியாக வீடு கட்டிக் கொண்டு பராமரிப்பு செய்து கொண்டு தனியே வாழ்பவள்.

கிணற்றின் மேலிருந்து குரல் கேட்டது. துண்டும், மாத்துச்சீலையும், பாவாடையும் ராசக்காவுது வச்சிருக்கனாயா…சோப்பு இல்ல சாமி, இங்கே வந்தா ஒடம்பு கழுவனு  ஒம்மாமன் என்னமோ தண்ணியாட்டம் வாங்கி வச்சது வச்சிருக்கேன் எடுத்துக்காயா.. என்று சத்தமாகக்குரல் கொடுத்தாள்.

அவள் சொன்ன மற்ற விஷயங்களை விட கடைசியாக சொன்னது மட்டும் காதில் விழுந்துவிட்டது. நீர்த்திவலைகளை தட்டியவாறு படிகளில் பாவாடையை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டு எழுந்தாள். பழங்கால கிணறு என்பதால் குடைந்து வெட்டிய கல்படிகளே இன்னும் இருந்தன. பாசி பிடித்திருந்தபடியால் சுற்றுச்சுவரை பிடித்தபடி ஏறினாள்.

மேலே வந்து பார்த்தவுடன் சின்னம்மாயி சொன்ன பொருட்களோடு ஓரமாக ‘பியர்ஸ் பாடிவாஷ்’ ஒரு பெரிய டப்பாவில் பிரவுன் நிறத்தில் இருந்தது. அதை வேகவேகமாக எடுத்துக் கொண்டவள் தன் நாசியருகே கொண்டு சென்று மெல்ல அதனைத் திறந்து முகர்ந்தாள். 

அந்த டப்பாவில் இருந்து கிளம்பிய காற்றுக்குமிழ்கள் மேலே பறக்க பறக்க மகேஸ்வரி தண்ணீரை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தாள். 

‘பழனி மாமா பழனி மாமா’ என அவள் உதடுகள் தன்னையறியாது முணுமுணுத்தது. கிறக்கம் கூடியபடி முணுமுணுத்தவள் கிணறதிர சிரித்தாள். சிரிப்பின் முடிவில் தலையால் அடித்துக் கொண்டு இப்படி தனியா சீரழியத்தான் அப்படி பழகுனியா என கிணற்றுக்குள் கேட்கும் படி நாலாம் படிக்கட்டில் உட்கார்ந்து அழுதாள்.

அம்மா மாடோட்டிக் கொண்டு போனபிறகு அம்மாயி வீட்டுக் கிணற்றுக்கு வந்துவிடுவாள்.

சின்ன அம்மாயியின் மகனான பழனியும், அவளும் அதே கிணற்றுக்குள் மேலிருந்து குதித்து முங்கி எழுவார்கள். கிணற்றின் ஆழம் வரைக்கும் கைகளைப் பிரிக்காது போய் சரேலென தண்ணீரைக் கிழித்துக் கொண்டு மேலெழுவார்கள். மகேசுக்கு பழனி தான் கிணற்று நீச்சல் எப்படி அடிக்கவேண்டும் என்று பழக்கிவிட்டிருந்தான். ஆற்று நீச்சல் என்றால் கைகள் பக்கவாட்டிலும் கிணறென்றால் கைகள் பந்து அமுத்துவது போலவும் அடிக்க வேண்டும் என்றான். சுரைக்குடுக்கையைக் கட்டிக் கொண்டு பயந்து மிதந்தவளை நீச்சல் பழக்கி பழக்கி கிணற்றுத் தண்ணீரில் எதுவுமே இல்லாமல் மிதக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தாள். 

அன்றும் இருவரும் முங்கியெழுந்துவிட்டு அவள் மட்டும் தண்ணீர் தொடும் முதல் படிக்கட்டில் ஏறி அமரப்போனாள். அதில் பாசி அதிகம் இருந்ததால் வழுக்கி முதுகு லேசாக சிராய்த்துவிட்டது. தண்ணீருக்குள் விளையாடிய படி இருந்த பழனி அவள் கீச் குரலைக் கேட்டு ஓடி வந்தான். 

‘என்னாச்சு மகேசு?’ வேகவேகமாக அவளுக்கு மேலே இருக்கும் படியில் ஏறினான்.

‘இல்ல மாமா வழுக்கிருச்சு பாசி.’

‘பாசியா, பாசமாடி?’

கேள்வியின் அர்த்தம் புரிந்தவள்  ‘நான் வலிக்குதுனு கத்தறேன். விளையாட்டா உனக்கு?’ 

கைகளைக் குவித்து அவன் இருந்த இடத்தில் இருந்து குனிந்து தண்ணீரை அள்ளி அவள் சிராய்த்த முதுகில் விட்டுக் கழுவினான். 

தண்ணீர் பட்டவுடன் எரிச்சலில் கத்துவதற்கு வாயைத் திறந்தவள் முதுகில் முத்தம் பதியும் உணர்வு தோன்ற கண்களை அரைகுறையாக மூடியபடி உளற ஆரம்பித்தாள்.

மெல்ல அவளிடம் கண்களை மூடிக்கொண்டிரு என்று சொல்லிவிட்டு அவளுடைய பியர்ஸ் சோப்பை எடுத்து அவளுடைய உடலில் தேய்த்து விட்டான். 

‘ச்சீ, என்ன மாமா இதெல்லாம்?’

‘ஏண்டி, வேண்டாமா?’

‘அப்பிடிச்சொல்லல. கூச்சமாருக்கு’

‘இதுக்கே கூச்சப்படறவ. இன்னும் மீதிக்கெல்லாம் என்ன பண்ணுவ’

அவள் பாதங்களின் விரல்களை மென்மையாக சோப்பு தேய்த்தவாறு ‘மகேசு, நீ இனிமே எப்ப குளிச்சாலும் மாமன் நெனப்பு வந்துரும்டி?’ பாதங்களைக் கழுவி முத்தமிட்டபடி அவன் கூறிய போது அவள் முழுவதுமாக தன் வசத்தில் இல்லாமல் போயிருந்தாள்.

அப்படியே அவளை தூக்கிக்கொண்டு மெல்ல மேலேறி கிணற்றைச்சுற்றி மேலிருக்கும் புல்வெளிப் பரப்பில் ஓரத்தில் கிடத்தினான். முதுகில் புல்வெளியில் கிடந்த புற்களைப்பிடுங்கி இதமாக வருடி விட்டான். அவள் மலர்ந்து மலர்ந்து மணக்கத் தொடங்கியிருந்தாள். பியர்ஸ் மணமும் அவன் மணமும் இணைந்து புது மணத்தை அவள் நாசி முழுவதும் பரப்பத் தொடங்கியது. பிறகு வந்த நாட்களில் எல்லாம் அவள் முதுகின் சிராய்ப்பை முன்வைத்து சோப்புக் குளியலும் புல்வெளியில் மலர்தலுமெனக் கழிந்தன.

அவனோடு குளித்து விட்டு மேலேறியபோது ஒரு நாள் கிணற்றிலிருந்து நடந்து கொஞ்சதூரம் போனபிறகு வரும் பட்டுப்போன வேப்பமரம் கண்ணில் பட்டது. திடீரென அங்கு ஓடியவள் மரத்தின் கீழே கிடந்த ஒரு வெண்ணிற கல்லை எடுத்து வந்து வைத்தாள். அதற்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு நட்டுவிட்டாள்.

பழனி வேகவேகமாக பின்னால் ஓடிவந்தவன் ‘எலே, என்ன பண்ற,’ இதென்னா வெறும் கல்லுனு நெனச்சியா சாமி சமாச்சாரம்டி நீ பாட்டுக்கு ஒன் இஷ்டத்துக்கு நட்டு வைக்கிற’ என்று கத்தினான்.

‘தெரியல, தோணுச்சு வச்சேன். என்னிக்கு இருந்தாலும் இது நம்ம ரெண்டு பேருக்கும் தொணயா நிக்கும் மாமா’ என்றாள்.

அழுதபடியே குளித்து விட்டு மேலேறிய மகேசுக்கு பல வருடங்களாக பட்டுப் போயிருந்த வேம்பின் அருகில் இன்னும் இரண்டு கற்கள் நடப்பட்டிருப்பது கண்டு புரியாது வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

3

சோழபுரத்திற்கு மேற்கேயும் கிருஷ்ணாபுரத்திற்கு தென்மேற்கிலும் இருந்த சேங்காலி கிராமத்தில் தனத்து‌ வீட்டுக் கிணற்றின் அருகிருந்த அதே வேப்பமரத்தடியில் நின்றிருந்தார்கள் தனமும் அம்மாவும் மகேசும். 

மரத்தடியின் கீழே மூன்று வெண்ணிற கற்கள் இருந்தன. அந்தக் கற்களில் நெற்றிப் பகுதியில் சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது.

அருகில் இருந்த பிடிமண் எடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் புற்று ஒன்றும் இருந்தது. 

ஆனந்தா ப்ளூ நிற சேலையில் கொஞ்சமாய் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு லேசாக தோன்றத் தொடங்கியிருக்கும் இடுப்புக் கடும்புகளோடு மகேஸ்வரி நின்றபடி யோசனையில் இருந்தாள்.

‘மகேசு, கல் அடுப்பக்கூட்டி வையாயா. வெரசா வெய்ய வராங்காட்டி பொங்கல வச்சிருவம்’ என்றாள் சின்ன அம்மாயி தனம்.

மகேசுக்கு எதற்கு இங்கே வரவேண்டும் என்கிற காரணம் புரியாமலில்லை. கிணற்றில் அழுதுகொண்டே குளித்து விட்டு வீடு வந்த பிறகு அம்மாதான் கேட்டாள்.

‘இப்ப எதுக்கு குளிச்சிட்டு வந்ததுல இருந்து மொவர வீங்குனாப்ல கெடக்கு. குளிக்கிறதுக்குன்னாத்தேன் ஒனக்கு ஒரு மணி நேரம் போனாலும் தெரியாதே. ஏண்டி, அவரு நல்லாத்தான இருக்காப்புடி ஒங்கூட? அப்பறமென்ன எழவா உழுந்துருச்சு.’

‘சரி வா. சின்னாயி கறிச்சாறு வச்சிருக்கம்னுச்சு அங்கனயாவது காத்தாட போயிட்டு வரலாம். ஒம்மூஞ்சியையும் எம்மூஞ்சியையும் பாருன்னு இங்கனே கெடக்கறதுக்கு’ என்று அவளே பதிலேதும் எதிர்பாராமல் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கும் தனம் அம்மாயி வீட்டுக்கு அழைத்துப்போனாள்.

மகேஸ்வரி அங்கிருக்கும் கோழிகளுக்கு அரிசி போட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஏஞ்சின்னாயி, இந்த மகேசு புருசெங்கூட நல்லாருக்காப்லதேனிருக்கா. ஆனா தண்ணி ஒடம்புல பட்டா கண்ண மூடி இன்னும் நின்னுக்கறா. இன்னிக்கு கூட ஒங்க கெணத்துலதேம்போயி குளிக்கப்போனா மவராசி. வாரப்ப கண்ணு அப்படி செவந்துகெடக்கு தண்ணில ஊறி. கண்ணாலம் பண்ணா இந்த கண்றாவி எல்லாஞ்செரியாப்போயிரும்னு பாத்தா குளிக்கப்போனா அவ ஊட்லயும் ஒம்போது‌மணிநேரம் உள்ள பூந்துக்கறா.  காலைல கெணத்துல குளிச்சிட்டு வந்து எழவு உழுந்து கிறுக்கு புடிச்சாப்ல ஒக்காந்து கெடக்கா… ஒரு எழவும் புரில. என்னதேம்பண்றது.?’

‘அவளுக்கு கிறுக்குதேம்புடிச்சிருக்கு. ஆளப்பாரு ஆள புள்ள பெத்து பேரு வச்சி வளத்துப்புட்டா இவள்லாம். நீ அப்படி கூராப் பொழச்சிருந்தா ஏன் ஒம்பொழப்பு இப்படி கெடக்கு. ஒண்ணுமில்ல. கிறுக்காவது ஒண்ணாவது நம்ம வேப்பமர கருப்புக்கு பொங்க வச்சா எல்லாஞ்செரியாப்போயிரும்.’

அம்மாயியும் அம்மாவும் பேசியது அரசல் புரசலாக மகேசின் காதுகளில் விழாமலில்லை.

மகேஸ்வரி இடுப்பில் சேலையை செருகிக்கொண்டு கல் அடுப்புகளைக் கூட்டினாள். பக்கத்தில் இருந்த அடிபம்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து அடுப்பில் தேக்சாவை வைத்து உலையில் நீர் ஊற்றினாள்.

பக்கத்தில் கிடந்த பெரிய பெரிய கல் பலகையில் அம்மாயியும், அம்மாவும் உட்கார்ந்து வெல்லத்தை இடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘என்னான்னு தெரியல. திடீர்னு வந்து கெணத்துக்கிட்ட ஒரு வேம்பு இருந்து பட்டுப்போச்சில்லமா. அதுல பக்கவாட்டுல இருந்து ஒரு சின்ன கெள விடுதும்மா. கெணத்துக்கு அந்தாண்ட புத்த யாரோ கலைச்சுவிட்டு கேணிக்குள்ள ரெண்டு மூணு தடவ பாம்பு வருதுமா. புடி மண்ண எடுத்து வச்சி கும்பிடுவம்னான் பழனி. வந்து பாத்தா ஏற்கனவே ஒரு கல்லு இருக்குது. புள்ளையாரு, கருப்புனு ரெண்டு கல்லுங்களோட மூணாவதா ஏற்கனவே இருந்த இந்த கல்லும் சேந்துக்க உடாம வெளக்கேத்திட்டு வாரன்டியம்மா.’ என்றாள் அம்மாயி.

உலையை விட வேகமாக கொதிக்கத் தொடங்கிய மகேசின் மனதிற்குள் அழுகையும் ஆத்திரமும் பொங்க கண்ணீரை சுண்டி விட்டுக் கொண்டே அரிசியைப்போட்டாள்.

‘அதென்னமோ மாசமொருக்க பொங்கலும், வாரமொருக்க குளியலும் பண்ணி நீராட்டி இதுங்களுக்கு பூச பண்ணாட்டி பழனிக்கு ஒரு மாதிரி ஆயிரும். அவனே சூடங்காட்டி குளுர வச்சாத்தான் அவனுக்கு நிம்மதி’.

என்றாள் மேலும்.

‘ஏயா, மகேசு. இந்த வெல்லத்தை கொட்டி ஏலக்கா போட்டுக் கிண்டாயா வாசமாருக்கும். பழனிக்கு சொல்லி உட்டுருக்கேன். வந்துருவான்’ என்றாள் அம்மாயி.

அதைக் கேட்டவுடன் மகேஸ்வரி கைகள் நடுங்கின. அரிசியோடு வெல்லத்தைக் கலந்து விட்டாள். 

மனதிற்கு பழனியைப் பார்க்க வேண்டும் என்றும், இப்படி அந்தரத்தில் விட்டவனை ஏன் பார்க்கணும் என்றும் எரிச்சல் கிளம்பியது. இதுங்க ரெண்டு பேரும் நேரம் தெரியாமல் இங்கே வரவைத்து பொங்கல் வைக்க சொல்லி கழுத்தறுக்கிறார்கள் என்று கோபம் கிளம்பியது.

படிய வாரிய தலையோடும் வயதுக்குரிய முதிர்வோடும் நெற்றியில் சிறு குங்குமத்தீற்றலோடும் வந்திறங்கினான் பழனி. அவனைக் கண்கொண்டு பார்க்க முடியாது தவித்தாள் மகேஸ்வரி.

‘ஏங்க்கா, ஊட்டுக்கு விருந்தாளு வந்திருக்காப்போலருக்கு. ச்சொல்லவேல்ல’ என்று அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் பழனி.

‘ஏந்தம்பி, ஒனக்கு மகேச பாத்தா சின்னப்புள்ளேல புடிச்சு வம்புக்கு தான் இழுப்ப. ஏன் அவகிட்ட கேட்கலாமில்ல. கலியாணங் கட்டிப்போனவட்ட  பேசறதுக்கென்ன’ என்றாள் சளைக்காது அம்மாவும்.

‘அம்மாயி பொங்க வெச்சாச்சு. எடுத்து வச்சிடுங்க நீங்களும், அம்மாவும்’ என்றாள் மகேஸ்வரி.

‘ஏண்டியம்மா. வராதவ வந்துருக்க ஒங்கையால ஒரு மாசத்துக்கு படையல போடக்கூடாதா. நீயே எடுத்து வையி அம்மாயிக்கு என்னமோ இன்னிக்கு வெய்ய கெறக்கமாருக்கு’ என்றாள்.

பச்சைக் கலர் வேட்டி அணிந்து கொண்டு கழுத்தில் ஸ்படிக மாலை தொங்கியபடி சட்டையை அவிழ்த்து வண்டியில் மாட்டிவிட்டு கற்களைக் கழுவி குளிப்பாட்டி கொண்டிருந்தான் பழனி. 

கண்களில் நீர் திரளத்திரள பொங்கலை இறக்கி சூட்டோடு டொம்மென்று கொண்டு வந்து வைத்தாள்.

இலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்தான். அவன் மனைவி அவித்துத்தந்த சுண்டலையும் வைத்துவிட்டு மகேசு வைத்திருந்த பொங்கலை எடுத்து இலையில் வைத்தான். இருவர் முகங்களையும் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை.

‘ரெண்டு பேரையும் பேச்சு விடலயா.’ எந்திரிச்சு வாங்க’ என்றவாறு அம்மாவையும் அக்காவையும் அழைத்தவன் தேங்காயை உடைத்து சூடத்தைக் காண்பித்தான். 

அவர்களுக்கு தீபாராதனை காண்பிக்கையில் ‘ஏந்தம்பி, நம்ம கெணத்துல இருந்து சின்ன தோண்டில கொண்டாந்தீல்ல கல்லு கழுவ தண்ணி அதெங்க’ என்றாள் அம்மாயி.

‘ஏம்மா?’.

‘கொஞ்சூண்டு மஞ்சக்கலந்து அதா இருக்குல்ல வேப்பந்தளிருல ஒண்ணு பிச்சிப்போடு’

‘இங்க வாத்தா மகேசு’ என்று ஒதுங்கி நின்றவளை முன்னுக்கு இழுத்தாள்‌ அம்மாயி.

‘நம்ம மகேசு மூஞ்சில நல்ல அந்த தண்ணிய நீயே எறச்சி விடு மூணுவாட்டி. அல்லாத்தெய்வமும் தொண இருக்கோணும். புள்ள நோய் நொடி இல்லாம நல்லா பொழைக்கோணும் மனசுக்கு சொகத்தக் கொடுக்கோணும்னு வேண்டி பட்டீர்னு எறச்சு விடுடா தம்பி.’

வந்ததில் இருந்து அவனைப் பார்க்காமல் நின்றவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அம்மா இப்படிச் சொன்னபோது கைகள் நடுங்கியது பழனிக்கு. பிறகு ஆவேசம் வந்தவனைப்போல அவளைப் பார்த்துக் கொண்டே மூன்று முறை தண்ணீரை அவள் முகத்தில் வேகமாக இறைத்தான்.

அவன் இறைத்த தண்ணீரோடு அவள் கண்ணீரும் வழிந்தோடியது. ஜில்லிட்ட தண்ணீர் உடலில் பட்டபிறகும் கண்களை இறுக்க மூடிக்கொள்ளாமல் அமைதியாக  நின்றிருந்தாள் மகேஸ்வரி.

++


சுபி

கரூர் மாவட்டத்தின் ஆலமரத்துப்பட்டி என்கிற ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அப்பாவின் தொழிலின் பொருட்டு ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக  கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையின் கரையோர ஊர்களான பழையஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் தனது பள்ளிப் பிராயங்களைக் கழித்தவர். வரலாறு பிரிவில் எம்ஏ முடித்து விட்டு எம்ஃபில் படிக்கும் போது திருமணம் நிகழ்ந்தது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

காலடித் தடங்கள், தேம்பூங்கட்டி நோமென் நெஞ்சே, நானே செம்மறி நானே தேவன் என நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் மட்டுமின்றி சிறுகதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிறார். கவிதை, கதைப் புத்தகங்களின் விமர்சனங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். கவிதைகள் மட்டுமல்லாது எழுத்துலகின் அனைத்து வடிவங்களையும் தொட முயற்சிப்பவர் சுபி.

இனிய உதயம் இலக்கிய இதழ், உதிரிகள் இலக்கிய இதழ், கதிர்ஸ் மின்னிதழ், நுட்பம், மத்யமர், வாசகசாலை, படைப்பு, பட்டாம்பூச்சி, மக்கள் வெளிச்சம் நாளிதழ், பூபாளம், காற்றுவெளி‌ ஆகியவற்றில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.





மற்ற பதிவுகள்

One thought on “மணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *