(நைஜீரிய நாட்டுப்புறக் கதை)
எஃபியோங் ஏடம்மின் மகள் அஃபியோங், பேரழகி. அவளை மணந்துகொள்ளச் செல்வந்தர்கள் பலரும் போட்டியிட்டு, எஃபியோங்கிடம் பெண் கேட்டு வந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் எஃபியோங்கின் நண்பர்களும்கூட. ஆனால், அவர்கள் வயோதிகர்கள்; அவலட்சணமானவர்கள். எனவே, அஃபியோங் அவர்களைப் புறக்கணித்துவிட்டாள்.
அவளைப் பெண் கேட்டு வந்த உள்ளூர் இளைஞர்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை. தனக்குக் கணவனாக வரப் போகிறவன், இளைஞனாக மட்டுமன்றி, அழகானவனாகவும், உறுதியானவனாகவும் இருக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தாள்.
அஃபியோங்கின் பேரழகின் புகழ், நாடு முழுதும் பரவியதோடு, ஆவிகளின் நிலத்திற்கும் பரவியது. அங்கிருந்த மண்டையோடு அதைக் கேள்விப்பட்டு, அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டது.
அதனால் அது தன் நண்பர்களிடம் சென்று, அவர்களின் அழகான உடல் பாகங்களை இரவல் கேட்டது. ஒருவரிடம் தலை, இன்னொருவரிடம் உடல், வேறொருவரிடம் கைகள், மற்றொருவரிடம் கால்கள் என அவரவரின் அழகான பாகங்களை மண்டையோடு இரவலாகப் பெற்றுக்கொண்டது. அவற்றைப் பொறுத்திக்கொண்டதும் மண்டையோடு இப்போது, தனித் தனியான அத்தனை அழகுகளும் மொத்தமாகச் சேர்ந்து, பேரழகனாக ஆகிவிட்டது.
அது, ஆவிகளின் நிலத்திலிருந்து வெளியேறி, மனிதர்களின் நாட்டிற்குள் வந்து, அஃபியோங்கின் ஊரை அடைந்தது. சந்தையில் அவளைக் கண்டு, அவளது பேரழகில் மயங்கியது. ஆனால், அவள் அப்போது மண்டையோட்டைக் கவனித்திருக்கவில்லை.
அந்நிய நாட்டு ஆடவனான மண்டையோட்டின் பேரழகு, சந்தையில் கவனிப்புக்குள்ளானது. செய்தி பரவி, அஃபியோங்கின் காதுக்கும் வந்து சேர்ந்தது. அவளும் அந்தப் பேரழகனைக் காண ஆவலோடு விரைந்து வந்தாள்.
இரவல் அழகோடு இருக்கும் மண்டையோட்டைக் கண்டதுமே, அதன் அழகில் மயங்கி, அதனிடம் காதல் வயப்பட்டாள். மண்டையோட்டிடம் சென்று தன் காதலைத் தெரிவித்து, தன் வீட்டுக்கு வந்து தன்னைப் பெண் கேட்குமாறு சொன்னாள்.
மண்டையோடு எல்லையற்ற மகிழ்ச்சியோடு அவளுடன் அவளது வீட்டிற்கு வந்தது.
“நான் உங்கள் மகளை விரும்புகிறேன்; அவளும் என்னை விரும்புகிறாள். எங்களுக்கு மணம் செய்து வையுங்கள்.” மண்டையோடு கேட்டுக்கொண்டது.
எஃபியோங்கும், அவரது மனைவியும் அதை முதலில் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தொலைதூரத்தில் இருக்கும் அந்நிய நாட்டவருக்குத் தங்களுடைய மகளைக் கொடுப்பதில்லை எனக் கூறினர்.
ஆனால் அஃபியோங், மண்டையோட்டை மணந்துகொள்வதில் உறுதியாக இருந்ததாள். வேறு வழியின்றி, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
மண்டையோடு இரண்டு தினங்கள் மணமகள் வீட்டில் தங்கியிருந்தது. அதற்கு அடுத்த நாள், தனது நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று சொன்னது.
அஃபியோங் அதனுடன் செல்ல சம்மதித்தாள். ஆனால், எஃபியோங் அதை மறுத்து, நீ போக வேண்டாம் எனத் தடுத்தார். அவள் அதைக் கேட்கவே இல்லை. பெற்றோரை மீறி, புதுக் கணவனுடன் புகுந்த வீடு நோக்கிச் சென்றாள்.
*******
மனிதர்களின் தேச எல்லையைக் கடந்து, ஆவிகளின் நிலத்திற்குள் சென்றதுமே, மண்டையோட்டுக்கு இரவல் கொடுத்தவர்கள் ஒவ்வொருவராக வந்து, தாங்கள் இரவல் கொடுத்ததைத் திரும்பக் கேட்டு, வாங்கிச் சென்றனர்.
முதலாவதாகத் தலை, அடுத்ததாகக் கைகள், பிறகு கால்கள், இறுதியாக உடம்பு என ஒவ்வொன்றும் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
மிச்சமிருந்த மண்டையோட்டைப் பார்த்து அஃபியோங் பயந்தாள். அது தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்து, தனது ஊருக்குத் திரும்பிச் செல்ல விரும்பினாள். ஆனால் மண்டையோடு அவளை மிரட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது.
அங்கே மண்டையோட்டின் தொண்டு கிழமான தாயார் ஆவி இருந்தது. அந்த ஆவியால் வேலை எதுவும் செய்ய இயலாது. அஃபியோங்தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, ஆவிக் கிழவிக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தாள். அதனால் அந்தக் கிழட்டு ஆவிக்கு அஃபியோங்கிடம் நன்றி உணர்ச்சியும், அன்பும், இரக்கமும் ஏற்பட்டன.
“இங்குள்ள பிசாசுகள், நர மாமிசம் தின்னக் கூடியவை. இங்கே நீ இருப்பது தெரிந்தால், அவை உன்னைக் கொன்று தின்றுவிடும். எனவே, எவ்வளவு சீக்கிரம் உனது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியுமோ, சென்றுவிடு! நான் உனக்கு உதவுகிறேன்” என்றது.
மண்டையோடு வீட்டில் இல்லாதபோது அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஆவிக் கிழவி, சிலந்தியை வரச் செய்து, அஃபியோங்கிற்குப் புதிய நாகரிகத்தில் கூந்தல் பின்னிவிடச் செய்தது. பட்டாம்பூச்சியை வரவழைத்து, அழகிய ஆடைகளை அணிவித்துவிடச் செய்தது.
பிறகு, காற்றை அழைத்தது. முதலில் வந்த காற்று, இடி – மின்னல் – மழையுடன் கூடிய சூறாவளி. எனவே, அதை வேண்டாம் என்று திருப்பி அனுப்பிவிட்டது, அந்த ஆவி.
அடுத்ததாக வந்தது, இதமான தென்றல்.
அதனிடம் அஃபியோங்கை ஒப்படைத்து, “இவளை இவளது பிறந்த வீட்டுக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிடு” என்று கூறி, அஃபியோங்கிற்குப் பிரியாவிடை கொடுத்து, வழியனுப்பி வைத்தது.
தென்றலும் அவளைத் தூக்கிச் சுமந்து, பத்திரமாகக் கொண்டு வந்து அவளது வீட்டில் இறக்கிவிட்டது.
*******
மகள் உயிர் தப்பித் திரும்பி வந்த சம்பவத்தால், பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அஃபியோங்கின் தோழிகளையும், தங்களின் உறவினர்களையும், உள்ளூர் பிரமுகர்களையும் அழைத்து, எட்டு நாட்களுக்கு விருந்து நடத்தி, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். ஆடலும் பாடலும், வாண வேடிக்கைகளுமாக ஊரே அமர்க்களப்பட்டது.
எஃபியோங் மன்னரைச் சந்தித்து, ஒரு கோரிக்கையை வைத்தார். அதன்படி மன்னரும் ஒரு ஆணை பிறப்பித்தார். இனிமேல் மக்கள் யாரும் தெரியாத தூர தேசத்தில் இருப்பவர்களுக்குத் தங்களுடைய மகளை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது என்பது சட்டம் ஆயிற்று.
அதன் பிறகு எஃபியோங் தனது நண்பர் ஒருவரை மணந்துகொள்ளும்படி மகளிடம் சொன்னார். அவளும் சம்மதித்து அவரை மணந்துகொண்டாள். அவர்கள் இருவருக்கும் நிறையக் குழந்தைகள் பிறந்து, நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர்.
000

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.